11

     விடுமுறை முழுவதும் பகலில் கண்காட்சி ‘ஸ்டாலும்’ இரவில் மட்டுமே விடுதியுமாகப் பொழுது செல்கிறது. அவள் யாருடனும் பேசுவதில்லை. கண்காட்சியில் அநுசுயாவோ, புவனாவோ பொறுப்பைப் பகிர்ந்துகொள்ள வரும் போது கூட தேவைக்கு அதிகமாக அவள் பேசுவதில்லை. இரவில் ராசம்மாளே அவளருகில் படுத்துக் கொள்கிறாள். இறுதியாண்டுத் தேர்வை எண்ணி அவள் அநேகமாக எப்போதும் படித்துக் கொண்டே இருக்கிறாள். வேறு எந்த நடவடிக்கையைக் குறித்தும் அவளுடைய பிரக்ஞை கூர்மையாகச் செயல்படவில்லை.

     எனவே, பெண்கள் தன்னைப் பற்றி என்ன பேசினார்கள், என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதையே அவள் அறியவில்லை.

     அடுத்து செயற்குழு மாடியில் கூடுமுன் சில உறுப்பினர்களிடம் அந்தப் பெண்கள் கூட்டமாகச் சென்று பேச்செழாமல் ஒதுங்கி நாணி நின்று சாகசம் செய்ததையும், பிறகு எழுத்து மூலமாக தங்கள் குறைகளைத் தெரிவித்ததையும் அவள் அறியாள்.

     அன்று மாலை அவள் பள்ளியிலிருந்து திரும்பும் நேரத்தில் அலுவலக அறையில் லோகாவும் டாக்டர் மித்ராவும் இருக்கக் காண்கிறாள்.

     டாக்டர் மித்ரா இந்த இல்லத்தின் மருத்துவர். குழந்தைகளைப் பார்க்க நாள்தோறும் வருவதுண்டு. வயது முதிர்ந்த அந்த அம்மாள் மிக அன்பாகப் பேசுவார். அவருடைய சிரிப்பே அமுதம் தோய்ந்தாற்போல் இருக்கும்.

     லோகா அவளைக் கண்டதும் அழைக்கிறாள். “ஸ்கூல் பஸ் இவ்வளவு சுருக்காக வருகிறதா என்ன?”

     “இல்லை மேடம், எனக்கு கிளாஸ் இல்லை. ஸ்டடி லீவுதான் இப்ப.”

     “நான் அங்கேயுள்ள ஹாஸ்டல் பெண்ணுடன் சேர்ந்து படிக்கப் போனேன். அதனால் வந்துவிட்டேன். இன்னிக்கு எனக்கு ராத்திரி கிச்சன் ட்யூட்டி...”

     “தனியாகவா வருகிறாய்?”

     “நான் நடந்ததுதான் வரேன் மேடம்.”

     லோகா அவளை ஏற இறங்கப் பார்க்கிறாள். “நீ தனியாக வருவதும் போவதும் சரியில்லை. காத்திருந்து பஸ் வரும் போது தான் திரும்ப வேணும். சரி, போய் டாக்டருக்கு லைம் ஜூஸ் கொண்டு வா!” என்று அனுப்புகிறாள்.

     லோகாவிடம் இந்தக் கடுமையை அவள் எதிர்பார்க்கவில்லை. அநுசுயாவும் புவனாவும் சுதந்திரமாக வெளியே பஸ்ஸில் செல்கின்றனரே ஒழிய, உண்மையில் அவள்தான் விடுதியின் மற்ற பெண்களைத் தவிர சுதந்திரமாகப் பள்ளிக்கு சென்று வருகிறாள். ரோஸியும் மீனாட்சியும் பஸ் வரவில்லை என்றால் பள்ளிக்கே செல்வதில்லை. “ஜெயில் புள்ளிகளைப் போல் போகணும் வரணும்...” என்று அநுசுயா கூறியது செவிகளில் ஒலிக்கிறது.

     சமையற் பகுதிக்குச் சென்று முத்தம்மாளிடம் எலுமிச்சம் பழமும் சர்க்கரையும் கேட்டு வாங்கிப் பிழிந்து கரைத்துக் கொண்டு மைத்ரேயி அலுவலக அறைக்குத் திரும்பி வருகிறாள்.

     அங்கு டாக்டரையும் காணவில்லை; லோகாவும் இல்லை.

     மல்லிகா மட்டுமே அவளை நோக்காமலே அலட்சியமாக “மேலே இருக்காங்க போலிருக்கு அங்கே கொண்டு போ” என்று பணிக்கிறாள்.

     மைத்ரேயிக்குப் படியேறும்போதுகூட அவர்கள் ஏன் மாடிக்குப் போனார்கள் என்று புரியவில்லை. அந்த முழு வட்டத்திலும் லோகா ஒருத்தியே சிறிதேனும் உண்மையான ஆர்வத்துடன் பொறுப்பை நிர்வகிப்பதாக அவள் கருதுகிறாள். அந்த வேஷக் கலப்பற்ற உண்மையினாலேயே லோகாவின் செயல் முறைகளும் நடப்பும் மற்றவர்களுக்குப் பிடிப்பதில்லை என்று மைத்ரேயி புரிந்து கொண்டிருக்கிறாள். லோகா இயல்பை மீறி யாரிடமும் குழைந்து பேசுவதில்லை. முறைகேடென்று தெரியவந்தால் அதை ஒளித்து வைக்காமல் அங்கேயே உடைத்துப் பரிகாரம் தேடுவது அவள் வழக்கம். அவள் தன் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்கு வருந்துகிறாள். அவள் மீது ஏற்கனவே மற்ற பெண்கள் பொறாமை கொண்டு நடக்கின்றனர். எனவே அவளிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றெண்ணியவளாக மாடிக்கு வருகிறாள். மாடி அறைக்கதவு சாத்தினாற் போலிருக்கிறது. அவள் மெதுவாகத் தட்டுகிறாள்.

     “எஸ்...” என்று டாக்டர் குரல் கொடுக்கிறாள். உள்ளே அவள் மட்டும்தான் நீண்ட மேசைக்கருகில் அமர்ந்து இருக்கிறாள்.

     அந்தப் பெரிய அறைக்கு மைத்ரேயி எப்போதோ சுத்தம் செய்வதற்காகத்தான் வந்திருக்கிறாள். பளிச்சென்ற வினோலியம் விரிப்பினால் புதுமை பெற்ற தரையில் கால் வைக்கவே கூசுகிறது. பக்கத்துக்கு எட்டாகப் பதினாறு நாற்காலிகளும் மெத்தை தைத்த வசதியான இருக்கைகள். அவ்வளவு நீளம் இல்லாது போனாலும் எட்டு பேர் அமர்ந்து உண்ணக்கூடிய மேசை, மெருகு குலையாமல் மின்னுகிறது. ஓரத்தில் ஒரு அலமாரி, சுவரில் வரிசையாகப் படங்கள் இருக்கின்றன.

     காந்தியடிகளின் படம் பெரியது. அடுத்து நேருவின் படம், அதை அடுத்து முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த பெண்மணியின் படம்.

     அவள் உள்ளே வந்ததும் டாக்டர் எழுந்து கதவைச் சாத்துகிறாள். பழச்சாற்றைக் கையில் வாங்கிக் கொண்டு டாக்டர் மித்ரா கனிவாகப் புன்னகை செய்து அவளுடைய கையை ஆதரவாகப் பற்றும் போது, மைத்ரேயிக்கு இனம் புரியாத அச்சமும் திகைப்பும் மேலிடுகின்றன. அவளுடைய மண்டையில் ஆயிரம் கேள்விகள் விஸ்வரூபம் எடுக்கின்றன. அந்த இல்லத்தில் நுழைந்தபோது, அவள் முறைப்படி ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்குள்ளானதுண்டு. டாக்டர் மித்ராதான் செய்தாள்.

     இப்போது...

     “என்ன டாக்டர்?... இப்ப மெடிக்கல் டெஸ்டா?”

     “இல்ல இல்ல, நீ உக்காரு, உன்னை ஒண்ணும் செய்யப் போறதில்ல. கொஞ்சம் பேசலாம்னு...”

     மறுபடியும் கனிவான நோக்கு; சிரிப்பு.

     ‘பேசுவதற்குக் கதவைச் சாத்துவானேன்?’ அவளுக்கு கேட்க நாவெழவில்லை. ஆனால்...

     “உனக்குக் கல்யாணம் ஆயிருக்குல்ல?”

     “அந்தத் துயரக் கதையை இப்போது எதற்குக் கேட்கிறீர்கள்” என்று வினவுகின்றன. அவள் விழிகள். குனிந்த படியே “ஆமாம்” என்று தலையாட்டுகிறாள்.

     “எத்தனை மாசம் இருந்தாய் அவனுடன்?”

     “நாலு மாசம்...”

     “சந்தோஷமாக இருந்திருப்பாய் இல்ல?”

     “சந்தோஷமாக இருந்திருந்தால் இங்கே வந்து அல்லல்படுவேனா...”

     “பாவம் நீ இரவெல்லாம் நினைச்சு நினைச்சு அழுகிறாயாமே ? நீ சரியாக இரவு தூங்குகிறதில்லையாமே?”

     “என்னது? நீங்க என்ன கேட்கறீங்க டாக்டர்? நான் மடத்தனமாக ஆளைப் புரிஞ்சுக்காமப் போய் பாதாளத்தில் விழுவது போல் விழுந்தேன். நல்ல வேளையாக அங்கே ஒரு அம்மாள், ‘உன் போன்ற நல்ல குலப் பெண்கள் வந்து நல்ல படியாக வாழ முடியாது. போய் எங்கேயானும் பிழைத்துக் கொள்ளுன்னு சொன்னபோது பயந்து ஓடிவந்தேன். வீட்டில் அக்காவின் கணவர் என்னை அடித்து விரட்டினார். பிறகு லோகாம்மாவிடம் வந்து அண்டினேன்...”

     அவள் முகம் சிவக்க, கண்கள் தளும்ப, மென்மையான உணர்வுகள் சிதையும் வேதனையில் விடுவிடென்று பேசும் போது டாக்டரின் முகம் மேலும் கணிகிறது.

     “தப்பாக எடுத்துக் கொள்ளாதே. இங்குள்ள பெண்கள் உன்மீது மிகவும் இழிவான வகையில் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்...”

     “என்ன குற்றம் சாற்றினார்கள் டாக்டர்? நான் வெளியே பள்ளிக்கூடம் போய் வரும் நேரத்தில் யாரையேனும் சந்திக்கிறேன்னு என்மீது அடாப்பழி சுமத்துகிறார்களா? கடவுளே, நான் ஏன் இங்கே வந்தேன்? நான் இங்கு உள்ளவர்களை அடிமனசிலிருந்து வெறுக்கிறேன். இவர்கள் விரசமாகப் பேசும் போதெல்லாம் கூசிப் போகிறேன். இவர்களுடைய போகம் செய்கைகளும் கேலிகளும் சாடைகளும், நான் அடியோடு வெறுக்கிறேன். உங்களிடம் என்ன பழி சுமத்தினார்கள், டாக்டர்? நான் கருவுற்றிருக்கிறேன் என்று கூறினார்களா? எனக்கு நோயிருக்கிறதென்று சொன்னார்களா? அவர்கள் உங்களிடம் என்ன பழி சுமத்தி என் மீது உங்களைச் சந்தேகப் படச் செய்திருக்கிறார்கள்...”

     நெஞ்சத்துக் குருதிக் களத்திலிருந்து செந்தீமலர்கள் போல் அவளுடைய கேள்விகள் டாக்டரின் செவிகளில் வந்து படிகின்றன.

     அவள் தன் அன்பான கைகொண்டு மேனி துடிக்க நிற்கும் அவள் கையை அழுந்தப் பிடிக்கிறாள். “ஷ்... ஒண்ணு மில்ல, ஒண்ணுமில்ல. நான் நம்பல. லோகாவும் நம்பலே. I am Sorry my dear - இதை மறந்துவிடு... நீ இங்கே இருக்க வேண்டியவள் அல்ல. உன்னை வேறு தகுதியான இடத்துக்கு நான் அனுப்பச் சொல்றேன்...”

     “ஒரு அப்பாவின்னா யார் வேணுமானாலும் என்ன வேணுமானாலும் சொல்லலாம் கேட்கலாம்னு நினைக்கிறாங்க...”

     தன் நடத்தைமீது அவர்கள் சந்தேகம் கொண்டார்கள் என்ற செய்தி உறுதியான பிறகு அவளுக்கு அடக்க இயலாமல் கண்ணிர் பெருகுகிறது.

     “ஷ்... நோ... நோ... மை சைல்ட். அழக்கூடாது. கம் ஆன் (come on) லெட் அஸ் ஷேர் (let us share)” என்று நீர்ப்பானையின் மீது கவிழ்த்திருந்த டம்ளரை எடுத்து பாதிப் பழச்சாறை அதில் ஊற்றுகிறாள்.

     “இந்தா நீ பாதி, நான் பாதி அருந்துவோம்.”

     “எனக்கு வேண்டாம், டாக்டர்...”

     “நான் சொன்னால் கேட்கவேணும். இவ்வளவு மென்மையான தோலை வச்சிட்டு இந்த உலகில் எப்படிப் பிழைக்கிறது.”

     அப்போது வெளிக்கதவு மெல்ல ஓசைப்படுகிறது.

     “எஸ். எஸ். வா, லோகா...”

     லோகாதான். அவள் எதுவுமே கேட்குமுன் டாக்டர் மித்ரா ஆங்கிலத்தில் சரமாரியாகப் பேசுகிறாள். கடுமையாக கோபிக்கிறாள்.

     “நான் ஒண்னு சொல்றேன் லோகா, இங்கே இருக்கும் சில கேர்ள்ஸ் ஆர் ராட்டன். நீ அதுங்களைத் தனியே பிரிச்சு வச்சாலும் கஷ்டம், சேர்த்தாலும் இப்படித்தான். தானே விழுந்து அடிபட்டுக்கிட்டா குழந்தைக்கு ரொம்ப நோவில்ல. ஆனா அரிவாளை எடுத்து வெட்டிட்டு நீ என்ன வைத்தியம் பண்ணாலும் மனசில் அந்த வடு பயங்கரமாய் விழுந்துடும். யாரானும் என்கம்ப்ரன்ஸ் இல்லாதவங்க அடாப்ட் பண்ணிக்கறப்பல இருந்தா இவளைப் பிரிச்சுவிடு” என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொள்ளாமலே படி இறங்கிப் போகிறாள்.

     சில விநாடிகள், கொல்லென்று அமைதித்திரை தொங்குகிறது. கண்ணிர்க் கறைபடிந்த முகத்தை நிமிர்த்தி மைத்ரேயி லோகாவை நேருக்கு நேராகப் பார்க்கிறாள். அடிபட்ட புலியின் சீற்றம் அவளுடைய விழிகளில் ஒளிர்கிறது.

     “நடந்ததை மறந்துவிடு. முகத்தைப் போய்க் கழுவிக் கொள். இம்மாதிரி இடத்தில் இதெல்லாம் தவிர்க்க முடியாது. நீ போகலாம்...”

     லோகா ஒரு கண நெகிழ்ச்சியை உலுக்கி உதறித் தள்ளிவிடுகிறாள். படியிறங்கி வரும் போது மைத்ரேயிக்குத் தலைசுற்றுவது போலிருக்கிறது. என்ன பழியைச் சுமத்த, டாக்டர் மித்ராவை அழைத்துப் பரிசீலனை செய்ய முயன்றார்கள்? அவள் கள்ளத் தொடர்பு கொண்டு சூலுற்றிருக்கிறாள் என்று கூறியிருப்பார்களோ? அதற்கான என்ன அறிகுறிகளை அவர்கள் அவளிடம் கண்டார்கள்? அவள் சில நாட்களில் பகாசுரப் பசியோடு புழுக்கட்டிய மாவின் கூழைக்கூட விழுங்குகிறாளே? சொல்லப் போனால் அந்தக் கூழைத்தான் அவர்கள் மிகுதியாக அவள் பங்குக்கு வைக்கிறார்கள்? அவள் ஒரு நாள் கூட வாந்தி எடுக்கவில்லை; தூங்கி வழியவில்லை.

     உலகத்துக் கவடுகள் ஒட்டியிராத மனசு பேதமை மிகுந்த தாய், எதையெல்லாமோ நினைத்து வேதனைப்படுகிறது. டாக்டர் மித்ரா கடுமையாக ஆங்கிலத்தில் பேசியபோது, ஒரு சொல் அவளுக்குப் புரியாததாக ஒலித்தது. அதன் பொருள் நன்றாக அவளுக்குப் புரியவில்லை எனினும், பாலுணர்வு சம்பந்தப்பட்ட சொல் அது என்று மட்டும் புரிந்து கொள்கிறாள். பாலுணர்வின் விகாரங்களில் சிக்கி, வெளியே கள்ளக் காதலனைத் தேடிச் செல்கிறாள் என்று கூறியிருப்பார்களோ? அதை டாக்டரைப் பக்குவமாக விசாரிக்கச் செய்த பின் தண்டனை கொடுக்கலாம், என்று லோகா நினைத்திருப்பாளோ?

     அவளைப் பார்த்தால் பிறர் அப்படி நினைக்கும் படியாகவா இருக்கிறாள்?

     எனினும் அவள் கேள்விப்பட்ட அந்தச் சொல்லுக்குப் பொருளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவளைக் குடைகிறது. அகராதியைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். அகராதி அவளிடம் இல்லை. சேவா நிலையப் பள்ளியின் மாணவர் விடுதியில் இருக்கும் அவளுடைய வகுப்புத்தோழி வத்சலாவிடம் கேட்க வேண்டும்.

     வத்சலாவுக்கு உடல்நிலை சரியாக இல்லாததால் அன்று வகுப்புக்கு வந்திருக்கவில்லை. அதுவும் நன்மையாகப் போகிறது. பகலுணவு முடித்ததும் மைத்ரேயி விடுதியறைக்குச் சென்று வயிற்றுக் கடுப்பினால் படுத்திருக்கும் வத்சலாவை நலம் விசாரிக்கிறாள். பிறகு புத்தக அலமாரியிலிருந்து அகராதியை எடுத்துப் பரபரப்பாகப் புரட்டுகிறாள்.

     “ஈ... ஜி... எச்... ஹோமோ செக்ஷூவல்...”

     பார்த்த கண்கள் பார்த்தபடியே நிலைக்க, தலைக்குமேல் கூரை விழுந்து நொறுங்கி விட்டாற்போல் தோன்றுகிறது. கன்னங்களில் முழுபலத்துடன் அறை விழுந்தாற் போல் செவிகளில் ஹொய்யென்ற ரீங்காரம் கேட்கிறது. இப்படியும் ஒரு... ஒரு கோளாறு... ஒரு பதம் இருக்கிறதென்றே அறிந்திராத அவளுக்கு நெஞ்சத்து ஈரம் திடீரென்று உலர்ந்து, அனற்புகை நிறைகிறது.

     “என்னப்பா? என்ன வார்த்தை பார்க்கிறே? ஏம்மா? என்னமோ மாதிரி ஏம்பா, கண்ணில தண்ணி வருது...”

     தரையில் அப்படியே உட்கார்ந்து மைத்ரேயி கண்ணீரை விழுங்கிக் கொள்ள முயலுகிறாள்.

     “எனக்கு... தண்ணி இருக்கா வத்சலா?...”

     வத்சலா உடனே பானையிலிருந்து நீர்மொண்டு வருகிறாள். மடக் மடக்கென்று அந்த நீர் முழுவதையும் குடித்த பின்னரும் அந்த வேதனைத் தீ குளிரவில்லை.

     மற்றவர்கள் எல்லாரும் கூடிக்கூடி அவளைப் பற்றிப் பூடகமாகப் பேசினாலோ, சிரித்தாலோ அவள் இத்தனை நாட்களாக பொருட்படுத்தியதில்லை.

     அவர்களைத் தன்னால் வெறுத்து ஒதுக்க முடியும் என்று அலட்சியமாக இருந்திருக்கிறாள். ஆனால் அவளுக்கு உரியதாக இந்த இழிவான பதத்தை அவர்கள் சூட்டியிருப்பதை நினைத்த மாத்திரத்தில் தானே ஆவியாகிப் போய் விடக் கூடாதா என்று ஏங்குகிறாள். பள்ளியிலிருந்து திரும்பி வழக்கம்போல் இயங்கினாலும் மனசு அந்த ஒரே சொல்லின் ஆணிமுனையில் தைத்துக்கொண்டு குருதி வழியத் துன்புறுகிறது. விடுபட இயலாமல் வேதனையுறுகிறது. படிக்க அமர்ந்தால் பொருந்தவில்லை. இரவு சிறிது கண்ணயரு முன்பே இடையே தன்னை யாரோ நெருக்கிப் பிடித்து முத்தமிட வருவது போலும், கழுத்தை நெரிப்பது போலும் பயங்கரக் கனவு கண்டு திடுக்கிட்டு விழிக்கிறாள்.

     ‘செக்ஸ்’ என்றாலே என்னவென்று தெரியாத அவளுக்கா... அவளுக்கா!

     இரண்டு சனிக்கிழமைகளாக ஞானம்மா இல்லத்துக்கு வரவில்லை. அன்று அவள் வருவாள் என்பதை கூறும்போது, மைத்ரேயி குன்றிப் போகிறாள். ஒருகால் அவளுக்கும் அவளைப் பற்றிய விவரங்களை அறிவித்திருப்பார்களோ? ஞானம்மா அவளிடம் அன்பு கொண்டு பழகுவதனாலும் அந்தப் பெண்கள் பொறாமையினால் புழுங்கவில்லையா? ஒருகால் ஞானம்மா அவளிடம் அநுதாபம் கொள்வதன் காரணமே அந்த விடுதிக்கு அவள் பொருந்தாதவள் என்பதனால்தானோ? ஒரு தொழுநோய் விடுதியிலோ, காசநோய் விடுதியிலோ அவள் இணைந்திருந்தால் கூட நோய்க் கிருமிகள் உடலை மட்டுமே உண்ணக்கூடும். இந்தப் பெண்களெல்லாரும் அதைவிடக் கடுமையான மனநோய்க்கு ஆளானவர்கள். அவர்கள் அவளுடைய படிப்பார்வத்தையும் வாழ்வில் அவள் வைத்த நம்பிக்கையையும் கூடத் தகர்க்கக் கூடிய குழப்பத்தைத் தோற்றுவித்திருக்கிறார்கள். டாக்டர் மித்ரா கூறியதுபோல் நடக்குமா? கடவுளருளில் இரண்டு சிறகுகள் முளைத்துப் பறந்து போனாள் என்று தேவதைக் கதைகளில் வருவது எங்கேனும் நிகழுமா?

     அன்று மாலையில் பிரார்த்தனைக் கூடத்தில் அவள் சிறு மேசையும் விரிப்பும் போட்டுப் பூங்கொத்தும் ஊதுவத்திகளும் வைத்து ஞானத்தை வரவேற்க நிற்கவில்லை. புத்தகத்தின் மேல் தலையைக் கவிந்துகொண்டு பிரமை பிடித்தாற் போல் தோன்றும் அவளை அதுசுயா வந்தழைக்கிறாள்.

     “என்ன மைத்தி? உடம்பு நலமில்லியா?”

     உடம்பு என்ற சொல் செவிகளில் விழும்போதே டாக்டர் மித்ராவின் நினைவு வருகிறது. அநுசுயாவை அவள் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

     “நான் வந்தா வரேன், வராட்டி போறேன். இவங்களோட உதவாத நீதிப் பேச்சைக் கேட்டவுடன் எனக்கு மோட்ச சாம்ராஜ்யம் கிடைக்கப் போகிறதா?...” என்று கேட்கிறாள்.

     “என்ன கோபம் மைத்தி? விளங்கும்படி சொல்லேன்?”

     “எனக்கு ஒருத்தரிடமும் கோபமில்லை. என்னைத் தொந்தரவு செய்யவேண்டான்னா போயேன்?”

     “என்னிடம் சொல்லேன்? என்ன விசேஷம் மைத்தி? பங்கஜா மறுபடி ஏதேனும் அசிங்கமா சண்டை போட்டளா?”

     “ஏதானும் என்ன சொல்வது? காக்கைக் கூட்டில் குயில் வளர்ந்தாலும், அத்தனை காக்கைகளுமாகச் சேர்ந்து சிறகு வளர்ந்திராத அதன் சிறு உடலைக் கொத்திக் கூடாக்கி விடும். இது அவர்களுக்குரிய இடம். நீ அன்னிக்கே சொன்னாய். ஆனால் எனக்கு வேறென்ன வழி இருந்தது? எனக்கு ஏதானும் நோவு வந்து சீக்கிரமாகச் செத்தொழிஞ்சால் நல்லாயிருக்கும்!”

     குரல் கரைந்து கண்ணீரில் சங்கமமாகிறது.

     “சே, என்ன பேச்சிது? லோகாம்மாவிடம் எதானும் புகார் இருந்தால் தைரியமாகச் சொல்லேன்?...”

     அப்போது சரசரவென்று செருப்பொலி கேட்கிறது. மைத்ரேயி துணுக்குற்றாற்போல் எழுந்து நிற்கிறாள்.

     ஞானம்... ஞானம்மா... மெல்லிய கீற்றிட்ட காவி வண்ணச் சேலை. ஆங்காங்கே வெண்மை இழைதெரியும் பசையற்ற கூந்தல்...

     “என்னம்மா மைத்ரேயி? காய்ச்சலா?...”

     விழிகள் அவளை ஆதுரத்துடன் ஊடுருவ நோக்குகின்றன.

     “இல்லை... மேடம்... த... தலைநோவு... வந்து...”

     “அப்படியானால் ஏன் படிக்கிறே? ஏதானும் மாத்திரை சாப்பிட்டுவிட்டுப் படுக்கக் கூடாது?”

     “ஓ... இல்ல... இத வந்திடறேன்...” என்று மைத்ரேயி தடுமாறுகிறாள்.

     “நான் உன்னை வரச்சொல்லிக் கட்டாயப்படுத்தவா வந்தேன்? அசடு இந்தா...”

     கைப்பையைத் திறந்து ஒரு மாத்திரை எடுத்துக் கொடுக்கிறாள் ஞானம்.

     “ராசம்மா, கொஞ்சம் சுடுதண்ணி கொண்டுவந்து குடு...”

     அவளை அங்கேயே மாத்திரையை விழுங்கச் செய்கிறாள் ஞானம்.

     மைத்ரேயிக்குத் தருமசங்கடமாக இருக்கிறது.

     “எனக்கு ஒண்ணுமில்லே மேடம், நான் வரேன்.”

     “அவசரமில்லை. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு முகம் அலம்பித் தலைவாரிக் கொண்டுவா! நான் பிறகுதான் தொடங்கப் போகிறேன்” என்று மொழிகிறாள் ஞானம்.

     மைத்ரேயியின் உள்ளம் விம்முகிறது.

     “நாங்க இத்தின பேர் இருக்கறோம், அவ ஒருத்தி வரலேன்னா கிளாஸ் எடுக்கறதில்ல நீங்க!” என்று மனத்தாங்கலுடன் கூறுகிறாள் மீனாட்சி.

     “ஆமாம். இவ்வளவு கஞ்சியில் ஒரு உப்பு இல்லையானால் உள்ளே இறங்குகிறதா? அப்படித்தான் அவள் எனக்கு!” என்று புன்னகை செய்கிறாள் ஞானம்.

     வள்ளி உடனே துடுக்காக, “அப்படீன்னா உப்பையே வச்சிட்டுத் திம்பீங்க போலிருக்கு!” என்று கூறுகிறாள்.

     “அதுவும் சரிதான். உண்ணாவிரதம் இருக்கிறவங்க உப்பை மட்டுமே தண்ணீரில் கரைத்துக் குடிப்பார்கள். நான் மைத்ரேயியை தத்து எடுத்துக் கொள்ளலான்னு இருக்கிறேன்.” என்று ஞானம் மெல்லச் சிரிக்கிறாள்.

     நெஞ்சு துடிக்கத் தவறி, பிறகு இன்னொருதரம் அச்சொல்லைக் கேட்க வேகமாகத் துடிக்கிறது.

     “ஆமாம். நான் மைத்ரேயியை தத்து எடுத்துக் கொள்வதாக முடிவு செய்திருக்கிறேன் ராசம்மா, பொய்யில்லை!”

     செவிகளில் அமுதம் பட்டு இதயம் நனைந்து குளிர, உடல் சிலிர்க்க மைத்ரேயி நிற்கிறாள்.