உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
என்னுரை மானுடம் என்றதுமே, நமக்கு ஆண், பெண் என்ற இரட்டைப் பிறவிகளே நினைவுக்கு வருகிறது. 'இதோ, நாங்கள் மூன்றாவது பிறவியாக நடமாடுகிறோம்' என்று ஆண் உடம்பில் பெண் மனதையும், பெண் உடம்பில் ஆண் மனதையும் தாங்கி நிற்கும் மானுடப் பிறவிகள், நம் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதிவதில்லை... உடல் ஊனமுற்றோருக்கும் மற்ற பலவீன பிறவினருக்கும் பச்சாதாபப்படும் நாம், இந்த அப்பாவிகளைப் பார்த்ததுமே சிரிக்கிறோம்... இவர்களைப் பயங்கரப் பிறவிகள் என்று அனுமானித்து ஒதுங்கிக் கொள்கிறோம். எனது இளமைக் காலத்தில் டெல்லியில் உள்ள அலிகளை பிள்ளை பிடிப்பவர்களாகக் கருதி நானும் ஒதுங்கி இருக்கிறேன்... ஆனாலும், ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கடலூருக்கு அருகேயுள்ள மஞ்சக்குப்பம் என்ற கிராமத்தில் கூவாகத்தில் நடப்பது மாதிரியான அலிகளின் கூத்தாண்டவர் விழாவைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அப்போது தென்னாற்காடு மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிய திரு. சுபாஸ் அவர்களோடு, அங்கே சென்றதும், அலி தோழர்களிடம் அல்லது தோழியரிடம் உரையாடியது இன்னும் மனதில் ஆணி குத்தியது போலவே வலிக்கிறது. இந்த அப்பாவிகள் படும் பாட்டையும், அவர்கள் கேலிப் பொருட்களாய் உண்டு கொழுத்தோரின் நேரப் போக்குகளாய் ஆகிப் போனதையும், அவர்கள் மூலமே கேட்டு ஆடிப் போனேன்... இத்தகைய கூத்தாண்டவர் விழாக்களை இன்னும் நமது பத்திரிகைகள் 'ஜாலி செய்திகளாகவே' பிரசுரிக்கின்றன... இந்த அலி ஜீவன்களுக்கு நம்மைப் போலவே உணர்வுகள் இருப்பதையும், நம்மை விட அதிகமான குடும்ப பாசம் வைத்திருப்பதையும் நாம் ஏனோ அங்கீகரிப்பதில்லை. அலிகளைப் பார்த்த ஒரு வாரத்தில், ஒரு பத்திரிகைக்கு இவர்களின் பிரச்னையை கருப்பொருளாக்கி ஒரு சிறுகதை எழுதி அனுப்பினேன். எனது எல்லாக் கதைகளையும் பிரசுரிக்கும் அந்தப் பத்திரிகை, இந்தக் கதையை பிரசுரிக்கவில்லை... கேட்ட போது கதை தொலைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இன்னொரு நகலை அனுப்பலாமா என்று கேட்டால், மழுப்பலான பதிலே கிடைத்தது. எனக்கும் புரிந்து விட்டது... அலிகளின் செக்ஸ் வாழ்க்கையை சித்திரிக்காத அந்தக் கதையைப் பிரசுரிக்க அந்தப் பத்திரிகைக்கு மனம் இல்லை... ஒரு வேளை புனிதக் காதல்களில் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் வாசகர்கள் இந்தக் கதையை ரசிக்க மாட்டார்கள் என்ற பயமும் ஏற்பட்டிருக்கலாம். என்றாலும் அலிகளைப் பார்க்கும் போதெல்லாம் என் மனம் அலைக்கழிந்தது... இவர்களை வைத்து தனியாக ஒரு நாவல் எழுதி அப்படியே பிரசுரிக்க வேண்டுமென்று, ஓர் எண்ணம் ஏற்பட்டது. இதற்காக சென்னை துறைமுகத்திற்கு அருகே 'சேரிக்குள் சேரியான' சாக்கடை பகுதிக்குள் வாழும் அலிகளைச் சந்திக்கச் சென்றேன்... ஆரம்பத்தில் என்னை 'பகடி'... அதாவது 'கபடதாரி' என்று நினைத்து அவர்கள் பேச மறுத்தார்கள்... கால் மணி நேரத்தில், அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் ஆத்மார்த்தமான மனிதநேயத்தைப் புரிந்து கொண்டனர். ஒவ்வொரு அலியும், தத்தம் சோகக் கதையான சேலை உடுத்தல், சூடுபடல், குடும்பத்திலிருந்து பிரிதல், ஐம்பது ரூபாய்க்கு சோரம் போதல், போலீஸ் சித்ரவதை போன்றவற்றைக் கண்ணீரும் கம்பலையுமாகத் தெரிவித்தார்கள். இவர்களை மட்டும் அலிகளின் பிரதிநிதிகளாக எடுத்துக் கொள்ளாமல், வடசென்னையில் காய்கறி வியாபாரம் செய்யும் அலிகளையும் சந்தித்தேன்... வீட்டோடு லுங்கி கட்டி வாழும் அலிகளையும், பம்பாய், சென்னை நகரங்களில் இருந்து விடுமுறையாக வந்த அலிகளையும் கண்டேன். அவர்களின் கதைகளையும் கேட்டேன். நினைத்துப் பாருங்கள் - பதினாறு வயதில் - குடும்பத்தோடு ஒட்டி இருக்க வேண்டிய பருவத்தில், ஒரு மனிதப் பிறவியை சூடு போட்டு துரத்தினால் அந்தப் பாழும் மனம் என்ன பாடுபடும்?... இந்தப் பின்னணியில், இவர்களுக்கு இத்தகைய பிறவிப் பாவம் எப்படி ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய பல எம்.பி.பி.எஸ். டாக்டர்களிடம் கேட்டேன். அவர்களுக்கு 'ஹெர்மா புராடைட்' என்ற வார்த்தையைத் தான் சொல்லத் தெரிந்ததே தவிர சரியாக விளக்கத் தெரியவில்லை. இது குறித்து சரியான விஞ்ஞானப் புத்தகமும் நான் அறிந்தவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் நான் பின்வாங்காமல் எனது உறவினர்களான டாக்டர் ராஜ்குமார், டாக்டர் கலைவாணன் ஆகியோரை அணுகினேன். அவர்களும் மேற்கொண்டு பல புத்தகங்களைப் படித்து, அம்மாவின் கருவிலேயே அலிகள் உருவாகும் விதத்தை எடுத்துரைத்தார்கள்... வடசென்னையில் வாழும் என் நண்பர் பேராசிரியர் சுப்பிரமணியன், தாவரயியலில் நிபுணர். இயற்கை, அனைத்து உயிரினங்களையும் எப்படி குறைந்த சக்தியில் வைக்க முயற்சிக்கிறதென்றும், இந்த முயற்சியை முறியடிக்க உயிர் இனங்கள் எப்படி தனது சந்ததியை அவசர அவசரமாய் விருத்தி செய்கின்றன என்பதையும் விளக்கினார். இந்த 'கண்ணாம்பூச்சி' ஆட்டத்தில் அலிகள் அரவான்களாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். இந்தச் சமயத்தில் எனது உறவினர் திரு. வைகுண்டம் மேலும் பல வித்தியாசமான அலிகளோடு என்னைப் பேட்டி காணச் செய்தார்... தினமலரின் தலைமை செய்தியாளர் திரு. நூருல்லா, அலிகள் பற்றி தாம் எழுதிய ஒரு புத்தகத்தை எனக்குத் தந்து உதவினார். அதோடு அவர்களைப் பற்றி தனக்குத் தெரிந்த விவரங்களையும் எடுத்துரைத்தார். நான் டெல்லியில் பல ஆண்டுகள் வாழ்ந்தது இந்த நாவலுக்கு வலுவூட்டியிருக்கிறது. இவர்களை மனிதப் பிறவிகள் என்று முதன் முதலில் அங்கீகரித்த தலைவர் அன்னை இந்திராகாந்தி என்று டெல்லி அலிகள் மூலமாகவே கேள்விப்பட்டேன். இவர்களுக்குக் குடியிருப்புக்களைக் கட்டிக் கொடுத்தவரும் அன்னை இந்திராவே! இவர்கள் டெல்லியில் பல வீடுகளின் முன்னால் ஆடிப்பாடுவதை பல தடவை நான் பார்த்திருக்கிறேன். ஆகையால் அன்னை இந்திரா சுடப்பட்டபோது, நன்றி விசுவாசத்துக்கு முதலிடம் கொடுக்கும் இந்த அலிகள், கூட்டங்கூட்டமாகக் கூடி பாடி அழுததையும், அன்னை இந்திராவின் கொலையை அடுத்து டெல்லியில் நடைபெற்ற கொடூரமான கலவரங்களின் போது, இந்த அலிகள் பல மனித உயிர்களைக் காப்பாற்றிய முயற்சிகளையும் நேரில் பார்த்த எனது டெல்லி நண்பர்கள் மூலம் நான் கேள்விப்பட்டேன். அவர்களின் மனிதநேயத்திற்கு இந்த நிகழ்ச்சிகளை ஒரு உரைகல்லாக இந்நாவலில் சித்திரித்திருக்கிறேன். இந்தப் பின்னணியில் நாவலுக்கான நான்கு அத்தியாயங்களை எழுதி விட்டேன். திடீரென்று ஒரு எண்ணம் ஏற்பட்டது. இது வெறுமனே ஒரு நாவலாக வந்தால் ஆயிரக்கணக்கானவர்களை மட்டுமே சென்றடையும். அதோடு ஒரு மாமூல் போலீஸ்காரரிடமிருந்து எந்த வகையிலும் வித்தியாசப்படாத இன்றைய திறன் ஆயவாளர்களால், இந்த நாவல் வாசகச் சிந்தனையில் இருந்து அகற்றப்படலாம். இயற்கையைப் போல் குறைந்த சக்தி, நாவல்களையே பராமரிக்கும் நமது இலக்கியவாதிகளோடு ஒரு யுத்தம் நடத்த வேண்டுமானால், அது பிரபல பத்திரிகை மூலமாகவே முடியும் என்பதை உணர்ந்தேன். இப்படி நினைத்த போது என் மனதில் முதலாவதாகவும், முடிவாகவும் நின்றது 'ஆனந்த விகடன்' பத்திரிகை மட்டுமே. அதன் ஆசிரியர் திரு. எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களுக்கு கதைச் சுருக்கத்தோடு கடிதம் எழுதினேன். சிறிது கால இடைவெளியில் பச்சைக் கொடி காட்டினார்கள்! விகடனில் தொடர்கதையாக வந்த இந்த 'என்னுரை - வாடா மல்லி' வாசகர் மத்தியில் வெற்றி பெற்றதாக அறிகிறேன். இதற்கு அரும்பணி ஆற்றியதோடு இந்த நாவலுக்கு 'சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்' முன்னுரையை எழுதிக் கொடுத்த ஆசிரியர் திரு. பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இதே போல் ஒவ்வொரு அத்தியாயம் வெளியாகும் போதும் அதன் தாக்கம் குறித்து என்னிடம் தெரியப்படுத்திய விகடனின் பத்திரிகையாளர்களான தோழர்கள் சுந்தரம், வி.எஸ்.வி. ஆகியோருக்கு என் நன்றி உரித்தாகும். இந்தப் படைப்பிற்கு 'என்னுரை - வாடா மல்லி' என்று பெயர் வைத்த எனது அலுவலகத் தோழரும், இலக்கியவாதியுமான திரு. சந்தானத்தை இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். எத்தனையோ படைப்புக்கள் காத்திருந்த போதிலும் இதைப் பெரிய மனதோடு கேட்டு வாங்கிப் பிரசுரிக்கும் 'வானதி பதிப்பக' அதிபர் திரு. திருநாவுக்கரசு அவர்களுக்கும், அவரது புதல்வர் திரு. இராமநாதன் அவர்களுக்கும் நான் நன்றியுடையேன். அழகான முகப்பு ஓவியம் தீட்டிய அரஸ் அவர்களுக்கும் என் நன்றி! நாவல் வேறு... தொடர்கதை வேறு... விகடனில் வெளியான தொடர்கதையை எப்படி நாவல் ஆக்கலாம் என்று அரும்பெரும் கருத்துக்களை அள்ளித் தந்ததோடு, அருமையான ஆய்வுரையைத் தந்திருக்கும் பேராசிரியர், டாக்டர் ராம. குருநாதனுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். இதே போல் தொடர்கதையை நாவலாக்கும் பணியில் நான் சோம்பிக் கிடந்த போது என்னை உரிமையோடு தட்டியும், 'திட்டியும்' நாவலாக்க வைத்த எனது பால்யதோழர் தேசிய முழக்கம் தர்மலிங்கம் அவர்களுக்கு நான் நன்றிக் கடனை திருப்பிச் செலுத்துவது என்பது கடினம். விகடனில் வந்த 'என்னுரை - வாடா மல்லி' தொடர்கதையை நாவலாக்கி, கூடவே சில அத்தியாயங்களையும் இணைத்து உருவாக்கிய இந்த நாவல், வாசகர்களாகிய உங்களிடையே உலா வருகிறது... முதல் மூன்று அத்தியாயங்களை சமூகப் பொறுப்போடு படித்தால், இதர அத்தியாயங்கள் உங்களை ஈர்த்து விடும். ஏற்கனவே ஒரு சில வெளிநாட்டுப் பத்திரிகையாளரும், தொலைக்காட்சியினரும் என்னைப் பேட்டி கண்டு விட்டு சென்றிருக்கிறார்கள். இது, அலிகளைப் பற்றி மட்டும் எழுதிய நாவல் அல்ல! ஒரு அலியைப் பிறப்பித்த பெற்றோர் படும் பாட்டையும், அந்தக் குடும்பம் கெடும் கேட்டையும் சித்திரிக்கும் நாவல். இதைப் படித்து முடித்ததும் இந்த அப்பாவி ஜீவன்களுக்காக ஒரு நிமிடம் உங்களுக்கு வருந்தத் தோன்றினால் அது இந்த நாவலின் வெற்றி! இவர்களுக்கு ஏதாவது தொண்டாற்ற வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றினால் அது என் வெற்றி! வானதி பதிப்பகத்தின் வெற்றி! விகடனின் வெற்றி! எல்லாவற்றிற்கும் மேலாய் மனித நேயத்தின் வெற்றி!
சு. சமுத்திரம்
நெ. 9, 11-வது குறுக்குத் தெரு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், சென்னை - 600 041. வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|