ரங்கோன் ராதா

10

     லேடி டாக்டர் லாசரஸ் எனக்கு அடிக்கடி வைத்தியம் பார்ப்பவர். பேய் பிடித்துக்கொண்டது என்று சொன்னபோது கோபித்துக் கொண்டு, வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்ட லாசரஸ், பிறகு பலதடவை கூப்பிட்டு அனுப்பியும் வருவதில்லை. "ஓ! முதலியார் வீட்டு அம்மாவுக்கா! டாக்டர் எதுக்கு? மந்திரக்காரனை அழைக்கட்டும் போ!" என்று கோபமாகக் கூறி அனுப்பிவிடுவார்கள். அதே லாசரசை அழைத்துக் கொண்டு வரும்படியாக, வேலைக்காரிக்குக் கூறினேன். அவள் மேலும் ஆச்சரியப்பட்டாள். "ஏண்டி! ஆந்தைபோல விழிக்கிறாய். அம்மாவுடைய போக்கே மாறிவிட்டதே என்று ஆச்சரியப்படுகிறாயா? இப்போது மாறித்தான் போய்விட்டாள். பழைய அம்மா இல்லை" என்று நான் கூறிவிட்டுச் சிரித்தேன். "அம்மா எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது நீங்கள் அதிகாரம் செய்ய ஆரம்பித்தபோது. ஆனால், பிறகோ எனக்குப் பயமாகிவிட்டது" என்றாள் அந்தப் பேதை. "ஏண்டி, பயம்? ஓஹோ! பிசாசு பயமா?" என்று கேட்டேன். 'ஆமாம்' என்று தலையசைத்தாள். "பைத்தியக்காரி, பேயும் கிடையாது, பூதமும் கிடையாது. லாசரஸ் டாக்டர் சொல்லுகிறதுபோல, எல்லாம் நரம்புக் கோளாறு. மேலும், மனிதர்களின் சுபாவத்தைக் கெடுக்க, மனிதரே போதும்" என்று நான் சொன்னேன். அவள் புரிந்து கொள்ளவில்லை. "மாறிவிட்டேன் என்று கூறுகிறாயே, அதுகூட உண்மை அல்ல; நானாக மாறிவிடவில்லை. மாறுதலை உண்டாக்கி விட்டார்கள்" என்றேன்; அதுவும் அவளுக்குப் புரியவில்லை. "அடி! உனக்குப் புரிகிறபடி கூறுகிறேன் கேள். சாணி இருக்கிறதே அது எப்படி இருக்கிறது? ஈரமாக, 'கொள கொள' வென்று, பழுப்புக் கலரில் இருக்கிறதல்லவா? பிறகு, அதே சாணி 'வறட்டி' யாகி எரிக்கப்பட்ட பிறகு, எப்படி மாறிவிடுகிறது?" என்று கேட்டேன். "சாம்பலாயிடுது" என்றாள் வேலைக்காரி. "சாணி சாம்பலாவது யாரால்? நம்மால்தானே?" என்று கேட்டேன். "ஆமாம். நாம் அடுப்புக்கு உபயோகப்படுத்துகிறோம்; சாணி வறட்டியாகி, பிறகு சாம்பலாகிறது" என்று கூறினாள். "சாம்பல் வேண்டும் என்ற எண்ணத்துக்காகவா நாம் வறட்டியை எரிக்கிறோம்? இல்லையல்லவா? நாம், எதற்காகவோ ஒரு வஸ்துவை உபயோகிக்கிறோம். நம்முடைய உபயோகத்திற்குப் பிறகு, அந்த வஸ்து வேறு உருவம், வேறு குணம் கொண்ட வேறு வஸ்துவாகி விடுகிறது. இது, நம்மால் நேரிட்ட மாறுதல் என்பது பற்றிக்கூட நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. இப்படி மாறும் என்பது தெரிந்தும், நாம் காரியம் செய்வதில்லை. அதைப்போல, மனிதரை மனிதர் பயன்படுத்தி, மாற்றிவிடுகிறார்கள். இதையே தெரிந்து செய்வதும் உண்டு. பால் தயிராவது எப்படி? நாம்தானே 'புரை' தெளித்து, பாலைத் தயிராக்குகிறோம். அது போலவேதான் மனிதரால் மனிதரின் சுபாவம், உருவம்கூட மாற்றப்படுகிறது இந்தக் காரியம் உலகில் ஒவ்வோர் விநாடியும் நடைபெற்றபடி இருக்கிறது. இவ்விதமாக ஏற்பட்டதே என் மாறுதலும்! இதைப் பேயும் செய்யவில்லை, பூதமும் செய்ததல்ல! என் கணவரேதான் என் மாறுதலுக்குக் காரணம்" என்று நான் விரிவாக விளக்கினேன். அவள் பாவம்; சாணி சாம்பலாவது, பால் மோராவது இவைகளைப் புரிந்துகொண்ட அளவு, என் மாறுதலைப் புரிந்துகொண்டு வரவேண்டும் என்பதை மறுபடியும் அவளுக்குக் கூறிவிட்டு நான் வெளியே புறப்பட்டேன்.

     வாடகை வண்டியைக் கூப்பிடுவதற்கு எனக்குக் கூச்சமாக இருந்தது. வண்டிக்காரனின் கூச்சம் எனக்கு இருந்ததைவிட அதிகமாக இருந்தது.

     "முதலியார் வீட்டு அம்மாவா? ஏனுங்க? நம்ம வண்டி எங்கேங்க?"

     "கடைக்குப் போயிருக்கு."

     "போயிருந்தா என்னங்க. நான் போயி கூட்டிக்கொண்டு வருகிறேனுங்க."

     "ஏன்? உன் வண்டிக்கு என்ன?"

     "ஒண்ணுமில்லைங்க. ஆனா, நீங்க இதிலே வருகிறதுன்னா..."

     "ஏன், வேறே எங்காவது நீ போகணுமா?"

     "ராமா! ராமா! அதுக்குல்லீங்க. இது, 'வில்' வண்டிகூட இல்லை. ஒரே ஆட்டமா ஆடித் தொலைக்கும். அதுக்குத்தான் பார்க்கிறேன்."

     "பரவாயில்லை."

     இவ்வளவு பேச்சுக்குப் பிறகுதான் வண்டியில் இடம் கிடைத்தது. பெரிய பணக்கார வீட்டு மகள், வாடகை வண்டியிலே போவது கௌரவக் குறைச்சல் என்று அவன் கருதினான்! அந்த எண்ணத்தைப் போக்கவே நான் அவனிடம் அவ்வளவு பேசவேண்டி இருந்தது. என்னைத் தன் வண்டியிலே ஏற்றிக்கொண்டு போவதாலே அவன் ஒருவித 'கௌரவம்' அடைந்தான். வழக்கமாக, வழியிலே வருகிறவர் போகிறவர்களுடன், 'வம்பளப்பவன்' அவன் என்று தெரியவந்தது. ஏனெனில் வழியிலே பலபேர் அவனிடம் பேசினார்கள். பெரும்பாலான பேச்சு அவசியமற்றது. அவனோ ஒவ்வொருவரிடமும் பேச்சை வளர்த்தாதீர்கள் என்று ஜாடை காட்டினான். அவர்களும் வண்டியிலே நான் உட்கார்ந்து கொண்டிருப்பது கண்டு மரியாதையாகப் போயினர்! வண்டிகள் எதுவந்தாலும் இவன் வழி சரியாக விடவே இல்லை. "போப்பா ஓரமாகப் போ" என்று அதட்டிக் கொண்டே சென்றான். அதாவது வண்டியிலே நான் இருக்கும்போது, வழக்கமாகக் காட்டும் பணிவுகூடத் தேவை இல்லை என்று அவன் எண்ணிக்கொண்டான். "அம்மா கால் வைத்தது எனக்கு அதிர்ஷ்டம்தான்" என்றான். பாவனைக்கு அல்ல; உண்மையாகப் பூரித்துப் போய்ச் சொன்ன வார்த்தை அது. அவனும் அதுவரை வண்டியை எங்கே ஓட்டவேண்டும் என்று என்னைக் கேட்கவில்லை; நானும் சொன்னவளல்ல. வண்டி மட்டும் போய்க்கொண்டே இருந்தது. அவன் ஏதேதோ தன் குடும்பக் கதையைப் பேசிக்கொண்டே இருந்தான். கொஞ்ச நேரத்தில் வண்டியை நிறுத்திவிட்டான். அப்போதுதான் தெரிந்தது அவன் வண்டியை, என் அப்பா வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறான் என்பது. என்ன செய்வது! அவன், நான் போகக்கூடிய இடம் அதுதான் என்று எண்ணம் கொண்டு அவ்விதம் செய்தான். அவன் மீது தப்பு இல்லை.

     "வண்டியை அவிழ்த்துவிடட்டுங்களாம்மா" என்று கேட்டான். "வேண்டாம் இதோ வந்துவிடுகிறேன்" என்று கூறிவிட்டு, உள்ளே நுழைந்தேன்.

     வீட்டிற்குள் நுழைந்தேன், எதிர்பாராத சம்பவம்; ஆனால் ஆச்சரியப்படும்படி, தங்கம் ஓடோ டி வந்தாள். என்னைக் கண்டதும், "அக்கா! வா! நானே வரலாம் என்று இருந்தேன்" என்றாள். எனக்குத் திகைப்பு ஏற்பட்டது. நான் உட்காரப் பாய் விரித்தாள்; இரண்டு தலையணைகளும் போட்டாள். அப்பா வெளியே போயிருக்கிறார் என்று நான் கேளாமல் அவளே சொன்னாள். வண்டியை ஏன் அவிழ்த்து விடவில்லை என்று கேட்டுவிட்டு, வண்டிக்காரனைக் கூப்பிட்டு அவிழ்த்துவிடும்படி உத்தரவிட்டாள். வேலைக்காரியை ஓட்டலுக்கு அனுப்பினாள்!

     தங்கமா, துளசியா என்று நான் சந்தேகிக்கவேண்டி இருந்தது, அந்த உபசாரங்களைக் கண்டு. என் வாழ்க்கைக்கு ஒரு முள்ளான அவள், என் கணவரின் மனதை மாற்றிவிட்டவள், எனக்கு இழிவும் பழியும் ஏற்படும்படி செய்த தங்கம், இப்படி என்னை உபசரித்தால் எனக்கு எப்படி இருக்கும். என்னவோ கதை சொல்வார்களே, யாரோ ஒருவன் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான், பகல் வேளையில். வெயில் அவன் முகத்தில் பட்டது; அதைக் கண்டு ஒரு நாகப்பாம்பு படமெடுத்து, அவன் பக்கத்தில் இருந்துகொண்டு முகத்திலே வெயில் படாதபடி குடை பிடித்தது என்று சொல்வார்களே, அதைப் போல் இருந்தது தங்கம் எனக்கு உபசாரம் செய்தது. நான் எந்தவிதமாக நடந்து கொள்வது என்று தீர்மானத்துக்கு வரவே சிரமமாக இருந்தது. தங்கம் ஏன் தன்னுடைய போர்முறையை மாற்றிக் கொண்டாள் என்பதே விளங்கவில்லை. கேலி செய்கிறாளா? வெறும் பாவனையா? ஒருவேளை இப்படித்தான் நடக்கவேண்டும் என்று அப்பா கட்டளையிட்டாரோ? அல்லது என் கணவரே ஒரு சமயம், "என்ன இருந்தாலும் அவள் முதல், நீ இரண்டாவது தான். மேலும் அவள் உன் அக்கா; அவளிடம் நீ குரோதம் காட்டக்கூடாது" என்று யோசனை சொன்னாரோ என்று பலப் பல எண்ணங்கள் உண்டாயின.

     காலையில் வந்தேன் - பரவாயில்லை - இப்போது மயக்கம் கிடையாது - ஆமாம் மாதம் நாலு - என்று இப்படித் துண்டு துண்டாக என் சேதிகளைச் சொன்னேனேயொழிய, எனக்குக் கலந்து பேசவோ அவளைப் போலக் கொஞ்சிக் குலாவவோ முடியவில்லை. எப்படியோ அவள், அவ்வளவு சாமர்த்தியமாக நடித்தாள். அந்தச் சமயத்திலே யாரேனும் கண்டால், "தங்கம், தங்கமான பெண் - இந்த ரங்கம் ஒரு 'முசடு'; தங்கத்துக்கு அவள் அக்காளிடம் பிராணன்; ரங்கம் மகா கர்வம் பிடித்தவள்" என்று தான் சொல்வார்கள்.

     "தங்கம்! உண்மையைக் கூறிவிடு. ஏன் இன்று என்றுமில்லாத் திருக்கூத்தாக இருக்கிறது? என்னை, உன் ஜென்ம விரோதியாக எண்ணியவளாயிற்றே, எதற்காக இன்று என்னிடம் இவ்வளவு கெஞ்சுகிறாய்? இது என்ன தந்திரம்? என்ன விபரீதத்துக்காக இந்த முன் ஏற்பாடு?" என்று கேட்டுவிடலாமா என்று யோசித்தேன். கேட்கும் துணிவு வரவில்லை. தங்கம், எனக்குக் காப்பி தயாரிப்பதாகச் சொல்லிவிட்டு சமையற்கட்டுக்குச் சென்றாள். நான், யோசனையிலாழ்ந்தபடி படுத்துக் கொண்டிருந்தேன். வீட்டிலே யாரும் இல்லை. வேலைக்காரியும் வெளியே போயிருந்தாள். வண்டிக்காரன், மிக மரியாதையாக உள்ளே வந்து தனக்கு அவசர வேலை இருப்பதாகவும், வேறு வண்டி கொண்டு வந்து விட்டுவிட்டுப் போவதாகவும் சொன்னான். "நீ போ அப்பா, நான் வேறு வண்டி கூப்பிட்டுக் கொள்கிறேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டேன். தங்கம் சமையற்கட்டிலிருந்து வருவதற்குள் அவளிடம் சொல்லாமலேயே வெளியே போய்விடலாமா என்று தோன்றிற்று. மறுபடியும் சே! அவள் என்னை ஒரு பைத்தியக்காரி என்றல்லவா எண்ணிக் கொள்வாள் என்ற எண்ணம் உண்டாயிற்று. என்னால் என்ன செய்வது என்று தீர்மானிக்க முடியாமல் திண்டாடினேன். ஏன் இங்கே வந்து சிக்கிக் கொண்டோ ம்? 'மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்' என்ற பழமொழியையும் மறந்து இங்கே வந்தோமே. "வலிய வந்தவளை வாவென்று கூட உபசரிக்காமல் எப்படி இருப்பது? அவள் இலச்சை கெட்டு வந்தாள்; நான், வெட்கங் கெட்டவளே! போடி வெளியே என்று எப்படிக் கூறுவது? என்ன இருந்தாலும் கூடப்பிறந்த பிறப்பல்லவா?" என்றெல்லாம் பேசுவாளே இந்தத் தங்கம். இதற்கெல்லாம் நாம் இடம் கொடுப்பதா? என்ன பைத்தியக்காரத்தனமான வேலை செய்தோம்? வீட்டிற்குள் நுழைகிற போதே அப்பா இருக்கிறாரா? என்று கேட்டுவிட்டு, அவர் இல்லை என்று தெரிந்ததும், பிறகு வருகிறேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டிருக்கலாகாதா? ஏன் இப்படி விழிக்கவேண்டும் என்று எண்ணி என்னை நானே நொந்துகொண்டேன். எவ்வளவு சாமர்த்தியமாக நடிக்கிறாள் தங்கம்! விரோதத்தைத் துளியும் வெளியே தெரிய ஒட்டாதபடி தானே மூடி வைத்துக்கொண்டு பேசுகிறாள். நம்மால் முடியவில்லையே அதுபோல். 'என்னையே இவ்வளவு திறமையாக மயக்குகிறாளே, இவளிடம் என் புருஷர் எப்படி மயங்காமலிருக்க முடியும்?' என்று எண்ணி வெட்கமடைந்தேன்; பொறாமையும் கொண்டேன். அந்தத் திடீர்ச் சிரிப்பு. எனக்கு வரவில்லை! அவள் பேச்சுடன் கலந்துவரும் ஒருவகை 'நாதம்' என்னிடம் இல்லை. என் கூந்தல் நெற்றியில் புரள்வது எனக்குத் தெரிவதற்குமுன், அவளல்லவா அதைச் சரிப்படுத்துகிறாள்! எங்கிருந்து கற்றுக்கொண்டாள் இந்த வித்தையை! என்னோடு பிறந்தாள். என்னையே வெல்கிறாளே! என்று ஆச்சரியமடைந்தேன். என்னால் இவ்விதமாகவெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க முடிந்ததேயொழிய, ஒருவிதமான தீர்மானத்துக்கும் வரமுடியவில்லை.

     வேலைக்காரி பலகாரப் பொட்டலங்களுடன் வந்தாள். அவளை நிறுத்திக்கொண்டு, என் மனதிலிருந்த பாரத்தைப் போக்க அவளிடம் பேசலானேன்.

     "ஏண்டி! என்ன இது, உங்க தங்கம் என் மீது இவ்வளவு அன்பு காட்டுகிறாளே!"      "இல்லாமே போவுங்களா! கூடப் பிறந்த பொறப்பல்லவா? மேலும், தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்னு சொல்வாங்களே!"

     "அந்தக் கதை கிடக்கட்டும்டீ! இவ என்ன உண்மையாகவே தானா என்னை உபசரிக்கிறாள்?"

     "நான் என்னத்தைக் கண்டேனுங்க. நீங்க ரெண்டு பேரும் இப்படி அன்பா வாழணும், நான் என் கண்குளிரப் பார்க்கணும், அவ்வளவுதான் எனக்கு வேண்டியது."

     "அது கிடக்கட்டும்டீ! சதா சர்வாகலமும் என்னைத் திட்டிக் கொண்டிருப்பதுதானே தங்கத்தின் வேலை."

     "அதெல்லாம் ஏம்மா, இப்போ பேசணும். என்னமோ அது மனசு மாறியிருக்கும். இனிமேலாவது நீங்க ரெண்டு பேரும் சண்டை சச்சரவு இல்லாம இருங்களேன். நல்லதுதானே."

     "நல்லது கெட்டது இருக்கட்டும். திடீருன்னு இவளுடைய நடவடிக்கை மாறினது ஏன்? அப்பா ஏதாவது சொல்லி இருப்பாரா?"

     "இருக்கும்."

     "உனக்குத் தெரியாதா?"

     "தெரியாதுங்களே."

     இதற்குள் தங்கம் காப்பியுடன் வந்துவிட்டாள். சாப்பிட்டாலொழிய விடமுடியாதென்று பலவந்தம் செய்தாள். எனக்குத் திடீரென்று ஒரு பயம் தோன்றிவிட்டது. என்மீது தீராப் பகை கொண்ட இவள், ஒரு சமயம், தனியாக வந்து சிக்கிக் கொண்ட என்னை ஒழித்துவிடுவதற்கே, என்னிடம் தந்திரமாகச் சிரித்துப் பேசி பலகாரத்திலோ, காப்பியிலோ ஏதாவது விஷத்தை வைத்து விடுகிறாளோ என்ற பயம் பிறந்துவிட்டது. தந்திரக்காரத் தங்கம் அதையும் தெரிந்து கொண்டாள் போலிருக்கிறது. "சாப்பிடக்கா! இந்த அல்வா நன்றாக இருக்கும்" என்று கூறிக்கொண்டே, கொஞ்சம் அதிலே எடுத்துத் தின்றாள். அதுபோலவே ஒவ்வொரு பலகாரத்தையும் கொஞ்சம் கொஞ்சம் தின்றாள். எனக்கே வெட்கமாகிவிட்டது. நானும் தின்றேன். காப்பி சாப்பிடும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. உடனே அவள் காப்பியிலேயும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, "அக்கா! சர்க்கரை போதாது போலிருக்கே" என்று கேட்டாள். 'போதும்' என்று கூறிக்கொண்டே நான் அதையும் சாப்பிட்டுவிட்டேன். கை அலம்புவதற்குச் சமையற்கட்டுப் பக்கம் சென்றேன். தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். வெற்றிலைத் தட்டை இழுத்தேன்; அவள் சுண்ணாம்பு தடவி வெற்றிலை மடித்துக் கொடுத்தாள். குறிப்பறிந்து நடந்துகொண்டாள். என்னைக் கொல்வதற்குப் பதில் உபசாரத்துக்குமேல் உபசாரம் செய்தாள். என்ன காரணம்? என்ன சூழ்ச்சி இது? எனக்கொன்றும் புலப்படவே இல்லை. என்னைச் சந்தோஷப்படுத்தி என்ன காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் போகிறாள்! ஒரு வேளை அன்பாக நடந்து கொள்வதன் மூலம், என்னுடைய சம்மதத்தையே பெற்று, கலியாண ஏற்பாட்டை முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறாளா என்று எண்ணினேன். பலப்பல எண்ணினேனே யொழிய, வாய் திறந்து அவளை எதுவும் கேட்கத் தோன்றவில்லை. 'போய்விட்டு வருகிறேன்!' என்று பத்துத் தடவைக்கு மேல் சொல்லிப் பார்த்தேன். ஒவ்வொரு தடவையும், "இரு அக்கா! போகலாம் இரு" என்று உபசாரம் பேசிப் பேசி என்னைத் தடுத்துக்கொண்டே இருந்தாள். "நேரமாகிறது தங்கம்..." என்றேன். குழந்தை பாலுக்கு அழுமோ? இப்போது ஏதுக்கா! இன்னம் கொஞ்சம் நாள் கழித்துத்தானே!" என்று கேலியும் பேசினாள்.

     "அக்கா! நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் என்னை மன்னித்துவிடு" என்றாள் திடீரென்று. நான் மிரள மிரள விழித்தேன். அவள் கண்களிலே நீர் தளும்பிற்று.

     "என்னடி தங்கம்? உன் நடத்தையே இன்று பைத்தியக்காரச் சேஷ்டையாக இருக்கிறதே!" என்று நான் கேட்டேன்.

     "அக்கா! நான் தவறு செய்துவிட்டிருக்கிறேன் என்பது எனக்கே தெரியும். இந்த வாழ்க்கையைச் சதம் என்று நம்பி, உலகத்திலே எத்தனை பொய், சூது, வஞ்சனை நடக்கிறது. அதுபோல, நானும் ஏதேதோ மனக்கோட்டை கட்டி, உன் மீது வீணாக விரோதம் கொண்டு கெடுதிகள் செய்தேன்..." என்று கூறிக்கொண்டே விம்மினாள்.

     "தங்கம்! என்ன உனக்கு பைத்தியமா? ஏதோ என்னுடைய தலைவிதிக்கு ஏற்றபடி கஷ்டங்கள் நேரிட்டன. நீ என்ன செய்வாய் அதற்கு? உனக்கும் எனக்கும் பகை மூண்டது கூட என் பொல்லாத வேளைதான்" என்று நான் சொன்னேன். எனக்கும் கண்களிலே நீர் கசியலாயிற்று.

     "அக்கா! நான் எப்படி என் வாயால் சொல்லுவேன்..."

     "என்ன? எதை? இதென்னடி தங்கம் இப்படி விம்முகிறாயே."

     "அக்கா! நாம் பிறந்தது இருவர்..."

     "என்னடி உளறி...!"

     "அக்கா! நாம் இருவர் வாழக் கடவுளுக்கு விருப்பம் இல்லையே..."

     "என்னடி அசடே! என்ன சொல்லுகிறாய் இப்போது?"

     "அக்கா! நான் இன்னும் ஆறு மாதம்..."

     "என்ன ஆறு மாதம்..."

     "ஆறாம் மாதம்..."

     "யாருக்கு? என்னடி உளறிக்கொட்டுகிறாய்! ஆறாம் மாதமா? உனக்கா?"

     "அதல்ல அக்கா! இன்னும் ஆறு மாதத்தில் நான் செத்துவிடுவேனாம்..." என்று கூறிவிட்டுத் தங்கம் கோவென்று அழுதாள்.