உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ரங்கோன் ராதா 9 மகனே! தங்கத்தை அவர் கலியாணம் செய்து கொள்ளக் கூடாது, அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று முயன்றேன். அதன் பயன், பேய் பிடித்தவள் என்று ஊராரே கூறும்படியானதுதான். சரி! இனித் தடுத்துப் பயனில்லை. ஆண்களின் மனம் வானம் போன்றதுதான். அதிலே பல நட்சத்திரங்கள் இருந்தே தீரும். ஒளிவிடும் மதி இருந்தாலும், மின்மினியும் இருக்கும், கருமேகமும் இருக்கத்தான் செய்யும். ஆகவே, ரங்கம் இருக்கும்போது தங்கம் ஏன் என்று கேட்டுப் பயன் இல்லை. அவர் தாராளமாகத் தங்கத்தையும் கலியாணம் செய்துகொள்ளட்டும் என்று எண்ணி, என் மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். அதன் விளைவுதான் மின்னல்போல் தோன்றி மறைந்த, அவருடைய அன்பு! அந்த அன்பு, அன்று இரவு மட்டுமே நிலைத்திருக்க முடிந்தது. அந்த இன்ப இரவு, உன்னையும், உலகிலே எந்தப் பெண்ணும் கேட்டுச் சகித்துக் கொள்ள முடியாத பழியையும், எனக்குத் தந்தது. பாழ் மனமே! ஏன் நீ, அன்று அவரிடம் தஞ்சம் புகுந்தாய்? கெஞ்சி அவருடைய கொஞ்சு மொழியைப் பெற்றாய், களித்தாய்! இதோ தருகிறாரே நஞ்சு, அது உயிரைப் போக்கினாலும் பரவாயில்லையே, மானத்தை அல்லவா மாய்க்கிறது' என்று மெள்ளக் கூறிக் கொண்டே குமுறினேன். விசாரத்தை விநாடியில் துடைத்துவிடும் துளசியும், என் நிலையைக் கண்டு, அழுதுகொண்டே தன் முந்தானையால் என் கண்களைத் துடைக்க முடிந்ததே தவிர, எனக்குச் சமாதானம் கூற முடியவில்லை. எப்படி முடியும்? 'விபசாரி!' என்ற பழி சுமத்தப்பட்ட பிறகு, பெண் எப்படி உலகை ஏறிட்டுப் பார்க்க முடியும்? உலகிலே, எத்தனையோ விதமான அக்ரமத்தைச் செய்து வயிறு வளர்ப்பவன் கூட, ஒரு பெண் விபசாரி என்றாகிவிட்டால், கேவலப்படுத்துவான்; கண்டிப்பான். எவ்வளவு கொடூர சுபாவம் இருந்தால் அவர் அப்படிச் சொல்ல மனம் துணிவார் என்பதை நீ இப்போது எண்ணிப் பார். ஏதோ தாய் தன் மகனிடம் கூறுகிறாள் என்று எண்ணவேண்டாம். துர்ப்பாக்கியவதி ஒருத்தி கருணையும் நீதியும் தெரிந்த ஒரு உத்தமனிடம் முறையிடுகிறாள் என்று எண்ணிப் பதில் சொல்லு. வேண்டாமடா மகனே! நீ பேச வேண்டாம். உன் கண்ணீர் போதும், எனக்கு அந்தப் பாஷை தெரியும். இம்சைக்கு ஆளான எனக்கு கடைசிக் காலத்திலேனும், அந்தக் கண்ணீர் ஆதரவு தருகிறது என்று ஆறுதல் கிடைத்ததே அதுவே போதும். என் கலியாணம் நடந்த போது, இரவு காலட்சேபம் வைத்தார்கள். நான் பெண்களுடன் உட்கார்ந்து கொண்டு இருந்தேன். ஆனால் அவருடைய முகத்தையும் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தேன். காலட்சேபக்காரர், சீதா கலியாணக் கதையைக் கூறினார். அப்போது அவர் பெண்களைப் பற்றிப் பேசிய பெருமையை, நாளெல்லாம் கேட்கலாமா என்று தோன்றிற்று. அவ்வளவு விளக்கி விளக்கிப் பேசினார், விடிய விடிய. உன் அப்பாவோ அந்தக் காலட்சேபக்காரரின் பேச்சைக் கேட்டு அப்படியே சொக்கிவிட்டார். இராகத்தோடு காலட்சேபக்காரர், 'பெண்ணுக்கு வேண்டியது என்ன? பூஷணமா? போதாது, சம்பத்தா? போதாது. அழகான பங்களாவும் தோட்டமும் இருந்தால் போதுமா? போதாது. வைரமாலையும், பச்சை வளையலும், கல்லிழைத்த ஒட்டியாணமும் கிடைத்தால் போதுமா? போதாது! காசி கொரநாடு சேலை வாங்கிக் கொடுத்தால் போதுமா? போதாது! வேறே என்ன வேண்டும்? தொட்டுத் தாலிகட்டிய புருஷனின் மட்டற்ற அன்பு வேண்டும். அந்த அன்புதான் அவளுக்கு அஷ்ட ஐஸ்வரியத்தைவிட மேலானது" என்று கூறி முடித்தார். சபையிலே, மனைவியை அடிக்காவிட்டால் கை மரத்துப் போய்விடும் என்று எண்ணிக் கொண்டவர்கள்போல வாழ்ந்து வந்த புருஷர்கள் கூட, கரகோஷம் செய்தார்கள். காலட்சேபக்காரர் கூறியது நியாயமான பேச்சு என்பதை ஆமோதிப்பதற்காக உன் அப்பா கரகோஷம் செய்யவில்லை. அவருடைய கண்கள், என் கண்களைச் சந்தித்தன! அவருடைய புன்னகை காலட்சேபக்காரர் சொன்னது சரி என்று மட்டுமல்ல, "இதோ பார்! எந்த அன்பு தான் பெண்களுக்கு அஷ்ட ஐஸ்வரியத்தைவிட மேலானது என்று காலட்சேபக்காரர் கூறுகிறாரோ, அந்த அன்பை நான் இதோ தருகிறேன். ஆனந்தம் கொள்" என்று எனக்குக் கூறுவது போலிருந்தது. நான் வெட்கத்தால் தலை குனிந்து கொண்டேன். சபையிலே சிலர், "மாப்பிள்ளே! காலட்சேபத்தைக் கவனியும்" என்று கூட அவரைக் கேலி செய்தார்கள். பெண்களுக்குப் பரிந்து பேசிய காலட்சேபக்காரர், அழகழகாகக் குடும்ப வாழ்க்கையைச் சித்தரித்துக் காட்டினார். "மலராவது கசக்கினால்தான் கெட்டு விடும்; மங்கையின் மனமோ மணவாளனின் முகம் கொஞ்சம் கடுகடுத்தாலே போதும் நொந்து போகும்; அவ்வளவு மிருதுவானது பெண் மனம். பெண் மனத்தைப் புண்ணாக்கும் ஆண்களைப் பேய் இனத்தில்தான் சேர்க்கவேண்டும்" என்று காலட்சேபக்காரர் கூறினார். உன் அப்பா தனது பார்வையாலும் புன்னகையாலும் அவர் கூறினதையெல்லாம் ஆமோதித்துக் கொண்டு இருந்தார். வருஷம் பல ஆனபோதிலும், எனக்கு அன்று நடந்தவைகள் அவ்வளவும் நன்றாக நினைவிலே இருக்கிறது. நடுநிசிக்குமேல், எனக்குத் தூக்கம் வந்துவிட்டது. தூங்கினால் கேலி செய்வார்களே என்பதற்காக மிகச் சிரமப்பட்டுக் கண்களைத் திறந்தபடி இருந்தேன். இதனால் தூக்கம் அதிகப்பட்டதே தவிர, குறையவில்லை. என்னையுமறியாமல் கண்களை மூடினேன். பக்கத்திலே இருந்த ஒரு சிநேகிதி மீது சாய்ந்தேன். அவள் "கலியாண பெண்ணுக்கு மயக்கம் வந்துவிட்டது" என்று கூறினாள். ஆளாளுக்கும் கூவினார்கள். நான் கண்களைத் திறந்தேன். அவளோ என்னைத் தன் மீது சாய்த்துக் கொண்டு, "அசையாதே கண்ணு! ஒன்று மில்லை பயப்படாதே!" என்று உபசாரம் செய்தாள். காலட்சேபம் நின்றுவிட்டது. 'கொஞ்சம் பால் கொடுங்கள்' என்றார் ஒருவர். ஒருவர் 'விசிறுங்கள்' என்றார். இன்னொருவர் மெள்ள உள்ளே அழைத்துக் கொண்டு போகும்படி யோசனை சொன்னார். என் கணவர் சாதாரணமாக, கலியாணப் பிள்ளைகள் வெட்கப்படுவார்களே அதுபோலிராமல் "முகத்திலே கொஞ்சம் பன்னீர் தெளியுங்கள்!" என்று உரத்த குரலிலே சொன்னார். தூக்க மயக்கத்தைத் தெளிவிக்க என் முகத்திலே பன்னீர் தெளிக்கும்படி பரிவுடன் பேசிய என் கணவர், நான் கர்ப்பவதியாக இருக்கிறேன் என்ற செய்தி கேட்டு ஆனந்தமடைந்திருக்க வேண்டியது முறை. ஆனால், அவரோ என்னைத் தலைமுழுகிவிட்டதாகத் தெரிவித்தார். பெண்ணின் வாழ்க்கை இப்படி ஒரு ஆணின் ஆபாசத்துக்குக் கட்டுப்பட்டு இருக்கும் கொடுமையை யார் எண்ணிப் பார்க்கிறார்கள். மகனே! உன்னைப்போன்ற உத்தமகுணம் படைத்தவர்கள் உலகில் மிகமிகக் குறைவு. உன் மனம் என் அழுகுரல் கேட்டுப் பதைபதைத்தது. உள்ளே ஓடி வந்து, என்னை அடித்த முரடனிடம் சண்டைக்கும் நின்றாய். ஆனால் பொதுவாக ஆடவர்கள் இவ்விதம் செய்யமாட்டார்கள். அதனால், ஆண்கள் இரக்கக் குணமே அற்றவர்கள் என்று நான் கூறுவதாக எண்ணாதே. நாய், பூனை இவைகளிடம்கூட இரக்கம் காட்டும் ஆடவர்களை நான் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட கருணாகரர்கள் கூட, மனைவியை புருஷன் அடித்துத் துன்புறுத்தும்பொழுது குறுக்கிட்டுத் தடுக்கமாட்டார்கள். அவன் பெண்ஜாதியை அவன் அடிக்கிறான், நாம் எப்படி அவனைத் தடுக்க முடியும்? போடா உன் வேலையைப் பார்த்துக் கொண்டு என்று அவன் சொல்லிவிட்டால், நாம் முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக் கொள்வது என்று, இப்படி உப்புச்சப்பற்ற பேச்சைப் பேசிவிட்டுப் போவார்களேயொழிய, பெண்ணை இப்படி இம்சிக்கலாமா என்று கேட்க முன்வர மாட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையிலேதான் பெண்கள் வாழ்கிறார்கள்; என் நிலைமையும் அதுதான். உன் அப்பா, கலியாணமான சில காலம்வரை காட்டிய அன்பும் அக்கறையும், எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல, ஒரு புது நம்பிக்கையையும் கொடுத்தது. மற்றவர்களைப்போல் இவர் முரடரல்லர்; கண்ணியம் வாய்ந்தவர். நம்மிடம் அமோகமாக அன்பு வைத்திருக்கிறார். ஆகவே, இவர் நம்மை மிகவும் பிரியமாக நடத்துவார்; நம் வாழ்விலே துன்பம் இராது என்று நம்பினேன். மற்றக் குடும்பத்துப் பெண்களைப்போலக் கசங்கிய கண்களாக இராது என்று நினைத்தேன். அவருடைய சொல்லும் செயலும் எனக்கு அவ்விதமான நம்பிக்கையைத் தந்தது. தங்கம், என் வாழ்க்கையிலே குறுக்கிடும் வரையில், அவர் என்னை அன்புடன் தான் நடத்தி வந்தார். பாபம்! தங்கத்தை மட்டும் குறைகூறிப் பயன் என்ன? உன் அப்பா பேராசைக்கு ஆட்படும்வரை என்னை அன்பாகத்தான் நடத்திவந்தார். பேராசை பிடித்ததும் என்னைச் சித்திரவதை செய்யலானார். தலைமுழுகிவிட்டேன் என்று அவர் எழுதிய கடிதத்தைப் பற்றி, நானாக என் அப்பாவிடம் கூற முடியுமா? துளசிதான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். அப்பா, துடிதுடித்தார். 'மடையன், முட்டாள்' என்றெல்லாம் திட்டினார். என்னவோ உளறி இருக்கிறான். அவன் எழுதினதற்கு அர்த்தமே இல்லை என்றார். எனக்கு ஆறுதல் தருவதற்காக அவர் அவ்விதமெல்லாம் பேசினாரேயொழிய உண்மையிலேயே அவர் அந்தக் கடிதத்தால் அடைந்த வேதனையை அவருடைய முகம் தெளிவாகக் காட்டிற்று. முடிவில், 'நானே போய் அவனைக் கண்டித்துவிட்டு வருகிறேன்; இரண்டு நாள் நீ இங்கே தனியாக இரு; வந்துவிடுகிறேன்' என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். இந்த முறைதான் சரியானது என்று துளசி ஆமோதித்தாள். எனக்கு என்ன செய்வது, எது சிறந்த முறை என்று தெரிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியவில்லை. ஒரே திகைப்பு. இரண்டு நாள் கழித்து, அப்பா திரும்பி வந்தார். "என்னப்பா விஷயம்?" என்று நான் ஆவலுடன் கேட்டேன். 'ஒன்றுமில்லையம்மா! அவன் ஒரு மடையன். என்னவோ ஒரு விதமான பைத்தியக்காரச் சந்தேகம் கொண்டிருக்கிறான். இது என்னடா அசட்டுத்தனம் என்று கேட்டால், விழிக்கிறான். ஒரே குழப்பம். ஒழியட்டும். இப்படிப்பட்ட புத்தியற்றவர்கள் தாமாகத் திருந்தவேண்டுமேயொழிய, நாம் சொல்லித் திருத்த முடியாது என்று விட்டு விட்டேன். அவன் கிடக்கிறான்; உனக்கென்னமா கவலை? நீதானே அந்த வீட்டு எஜமானி. என்ன செய்துவிடுவான் அவன்; சும்மா விடுவேனா நான்" என்று என் அப்பா பேசினார். அவர் சொன்னது சமாதானமா, தீர்ப்பா, குற்றச்சாட்டா என்று தெரியவில்லை. உன் அப்பாவிடம் ஏதேதோ பேசிப் பார்த்திருக்கிறார். அவர் ஒரே பிடிவாதமாக இருந்திருக்கிறார். தன்னால் ஒன்றும் சாயாமல் போனதை மறைக்க, என் தகப்பனார் ஏதோ பேசித் தீர்க்கிறார் என்பது தெரிந்தது. என் மனதிலே இருந்த குழப்பத்திலிருந்து ஒரு புது உறுதி பிறந்தது. நேரே வீடு போவது, என்னை அவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். தைரியமிருந்தால், "என் மனைவி விபசாரி. அவளை நான் விலக்கி விட்டேன்" என்றும் சொல்லட்டும். என்னை ஊரார் தூற்றுவார்கள்; சகித்துக் கொள்கிறேன். ஆனால், அதேபோது, ஊருக்குப் பெரியவர், கௌரவமான குடும்பம். செல்வமும் செல்வாக்கும் படைத்தவர் என்று புகழப்படும் இவரையும், எதிரே இல்லாவிட்டாலும் தலை மறைவாக ஏளனம் செய்யும். அதனால் வரும் இழிவையும் அவமானத்தையும், என்னை இம்சித்ததற்குத் தண்டனையாக அவர் அடையட்டும் என்று எண்ணினேன். பூஜை, பூஜாரி, பேய், எதையும் பொருட்படுத்தவில்லை. துளசியின் அன்பு மொழிக்கு மட்டும், கொஞ்சம் சிரமத்துடன் சமாதானம் கூற வேண்டியதாயிற்று. அப்பாவை அழைத்துக் கொண்டு, வீடு வந்தேன். பேயோட்டிக் கொள்வதற்காகவென்று நான் வீட்டிலிருந்து கிராமத்துக்குப் புறப்பட்ட போது, சாதுவாகத்தான் சென்றேன். பிறகு எதற்கும் பயப்படாதவளாக, வீட்டுக்குள் நுழைந்தேன். அடக்கம் பெண்களுக்குப் பூஷணம் என்பார்கள்; நான் அதன் படிதான் நடந்து வந்தேன். கிராமத்தை விட்டு மறுபடியும் வீட்டுக்குள் நுழைந்தபோதோ அதிகாரி என்ற முறையிலே புகுந்தேன். இனி, அடக்க ஒடுக்கம், பரிவு, பாசம், இவைகளை நான் ஏன் கொள்ள வேண்டும்? புருஷனின் குரலைக் கேட்டாலே பயந்து, அவர் காலால் இடும் வேலையைத் தலையால் செய்து தீரவேண்டும் என்று நான் இருப்பானேன்? அடங்கி ஒடுங்கி இருந்து பார்த்தாகிவிட்டது. கொடுமைகளைத் தாங்கிக் கொண்டேன். இழிவைப் பொறுத்துக் கொண்டேன்; சித்திரவதை செய்தார், சகித்துக் கொண்டேன். இவ்வளவுக்கும் பிரதிபலன் என்ன பெற்றேன்? தலைமுழுகிவிட்டேன் என்று அவர் எழுதிய கடிதந்தானே? புருஷனிடம் இடிபட்டு அடிபட்டு, இம்சைகளைப் பெற்றுக் கொண்டு, பெண் எதைப் புகழாகப் பெறுகிறாள்? அவள் உத்தமி, பத்தினி, பதி சொல் கடவாத பாவை என்ற பட்டங்களைத்தானே! எனக்குத்தான் என் கணவர் விபசாரிப் பட்டம் கட்டிவிட்டாரே; இனி பத்தினி, உத்தமி என்ற பட்டம் கிட்டும் என்பதற்காக நான் ஏன் பாடுபடவேண்டும். கொஞ்சமும் இரக்கமின்றி என்னைத் 'தலைமுழுகிவிட' அவருக்கு மனம் இடந்தந்தான பிறகு, நான் ஏன் சாதுவாக இருக்க வேண்டும்? இருந்துதான் நான் என்ன சுகத்தைக் காணப் போகிறேன்? எனவே, ஓர் புதிய உறுதியுடன் வீட்டுக்குள் பிரவேசித்தேன். உலகறிய என்மீது குற்றம் சாட்டி, அதற்கு ருஜு காட்டி, என்னை வீதியிலே விரட்டட்டும். அதுவரையில், இந்த வீட்டில் நான் ஆட்சி செய்வேன். அவரை ஆட்டிப் படைப்பேன் என்று திட்டமிட்டேன். வீட்டுக்குள் நுழைந்ததுமே, புதிய முறையில் வேலை துவங்கினேன். நான் உள்ளே வந்த போது அவர் வீட்டிலே இல்லை. அப்பா, என்னைத் தனியாக விட்டுப் போக விரும்பவில்லை. நானாகவே அவரைப் போகச் சொன்னேன். வேலைக்காரியைக் கூப்பிட்டேன். "எங்கே அவர்? எத்தனை மணிக்கு வெளியே சென்றார்? யார் கூடச் சென்றார்?" என்று மளமளவென்று கேள்விகளை அதிகாரத் தோரணையில் பூட்டினேன். அவ்வளவு உரத்த குரலிலேயும் முடுக்காகவும் நான் அதுவரை பேசி அவள் கேட்டதில்லை. ஆகவே அவள் கொஞ்சம் ஆச்சரியப்பட்டாள். ஒரு வேளை "பேய்தான் பேசுகிறது" என்று தான் எண்ணிக்கொண்டிருப்பாள். "என்னடி சமையல் இன்று?" என்று கேட்டேன். அவள் சொன்ன பண்டங்கள் யாவும் அவருக்குப் பிரியமானவை. உடனே அவைகளை மாற்றினேன். அவருக்குப் பிடிக்காத வெண்டைக்காயைக் குழம்பு வைக்கச் சொன்னேன். அவருக்குக் கொத்தமல்லித் துவையல் பிரியம்; அதைச் செய்யவேண்டாம் என்று உத்தரவு போட்டேன். கீரைத் தண்டு ஒரு பதார்த்தத்திலே சேர்ந்ததா என்று சலித்துக் கொள்வார் அவர். அதைக் கூட்டுச் செய்யச் சொன்னேன். அவருக்கு 'இரசம்' இல்லாவிட்டால் சாப்பாடு பிடிக்காது. அன்று அது தேவையில்லை என்றேன். தயிருக்குப் பதில் மோர், தலைவாழை இலைக்குப் பதில் பொத்தல் ஆல இலை, நெய் வாடை அடிக்கும் 'ரகம்'. இப்படி சமையற்கட்டிலே என் போர் துவக்கப்பட்டது. சாப்பாடு தயாரானதும், வேலைக்காரியைப் பரிமாறச் சொல்லி சாப்பிட்டுவிட்டு, உள்ளே படுத்துக்கொண்டு, "நான் நாலுமணி நேரம் தூங்கி ஆகவேண்டும். இடையிலே எழுப்பாதே. தூங்கி எழுந்திருப்பதற்குள் காப்பி தயாராக இருக்கட்டும்" என்று உத்தரவு போட்டுவிட்டு, மெத்தை மீது வழக்கமாகப் போடுவதைவிட அதிகத் தலையணைகள் போட்டுக்கொண்டு, படுத்துக் கொண்டேன். பகல் ஒரு மணிக்குமேல் அவர் வந்தார். கூடத்திலே என் சாமான்கள் கிடந்தன. அதிலிருந்து தெரிந்து கொண்டிருப்பார், நான் வந்திருக்கிறேன் என்பதை. பைத்தியக்கார மனுஷர், நான் எந்தக் கோலத்திலே வந்திருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை. "எங்கே ரங்கம்?" என்று வேலைக்காரியைக் கேட்டார். எங்கே ரங்கம்? முன்பெல்லாம், எதிரே நிற்பாள். கையில் தண்ணீர்ச் செம்புடன், முகத்தில் சந்தோஷத்துடன்; சாப்பிட்டிருக்க மாட்டாள்! எங்கே ரங்கம்? வந்து பாரேன்; இதோ இருக்கிறாள் ரங்கம்; வெல்வெட்டுத் தலையணை தலைக்கும் காலுக்கும் போட்டுக்கொண்டு, ஒய்யாரமாகக் கண்களைப் பாதி அளவுக்கு மூடிக்கொண்டு வெற்றிப் புன்னகையுடன் கட்டிலின் மீது படுத்துக் கொண்டிருக்கிறாள்! தூக்கம் பூரணமாக வரவில்லை, வரச் செய்கிறாள். பதினோரு மணிக்குச் சாப்பிட்டாள். கொஞ்சநேரம் கதைப் புத்தகம் படித்தாள். படித்தபடி தூக்கம் வருவது போலிருந்தது. புத்தகத்தை கீழே வீசி எறிந்தாள். எவனோ கதாசிரியன், உத்தமிகளின் இலட்சண விளக்கத்தை எழுதி இருந்தான் அதிலே. இதோ, படுத்துக்கொண்டிருக்கிறாள். எங்கே இருப்பாள் ரங்கம் என்று கேட்கிறாயே. எங்கே இருப்பாள். ஒரு செல்வக் குடும்பத்திலே பிறந்து, செல்வவானுக்கு வாழ்க்கைப் பட்டவள்? பகல் ஒரு மணிக்குத் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பாளா, நெல் குத்திக் கொண்டிருப்பாளா, அடுப்பு ஊதிக் கொண்டிருப்பாளா? வேலைக்காரி சமைத்தாள்; வேளையோடு சாப்பிட்டாள்; ஓய்வாகப் படுத்துக் கொண்டிருக்கிறாள். நாலு மணிக்கு எழுந்திருப்பாள்; காப்பி சாப்பிடுவாள், ஒரு அரைமணி நேரம் தோட்டத்திலே உலவுவாள்; பிறகு கோயிலுக்கோ, கோமளம், கோகிலம், குந்தளம் போன்ற சிநேகிதி வீட்டுக்கோ போய் வருவாள், பொழுதுபோக்காக! இப்படி எல்லாம் நான் கூறினேன். என் எதிரே இருந்த பெரிய நிலைக் கண்ணாடியில் தெரிந்த என் உருவத்துக்கு. அவர் கூடத்திலே வேலைக்காரியைக் கேட்டார் "எங்கே ரங்கம்!" என்று. மகனே! முன்பு அவர் 'எங்கே வேலைக்காரி?' என்று என்னைக் கேட்பார். இப்போது வேலைக்காரியைக் கேட்டார், எங்கே ரங்கம் என்று. "அம்மா உள்ளே படுத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று சொன்னாள் வேலைக்காரி. பிறகு அவள் தான் சாதம் போட்டாள். சமையற்கட்டிலே நடந்த சம்வாதம் எனக்குச் சங்கீதமாக இருந்தது. "இதென்ன சனியன். வெண்டைக்காய் ஏன் செய்து தொலைத்தாய்?" "அம்மாதான்..." "என்னவாம் அம்மாவுக்கு? அம்மா! துவையல் எங்கே?" "செய்யவில்லை." "செய்யவில்லையா?" "ஆமாம். அம்மா வேண்டாம் என்றார்கள்." "இதென்ன பெரிய இழவு! இது என்ன வீடா, சுடுகாடா?" "பேஷ்; சபாஷ்! அற்புதம்!" என்று கூறலாமா என்று தோன்றிற்று எனக்கு, அவருடைய பதைப்பான பேச்சைக் கேட்டு, எதையோ தூக்கிக் கீழே வீசுகிற சத்தம் கேட்டது. "நான் என்னங்க செய்வது? அம்மா..." என்று அழுகுரலில் வேலைக்காரி பேசுகிற சப்தம் கேட்டது. பிறகு கூடத்திலே வந்து உலவிக் கொண்டே பேசலானார், உன் அப்பா. "இந்த வீட்டிலே மனுஷன் எப்படி வாசம் செய்ய முடியும்! பேயைப் பெண்டாகக் கொண்டால் இந்தக் கதிதான்" என்றார். சில விநாடிகள் பேச்சு இல்லை; காலடிச் சத்தம் மட்டும்தான் கேட்டது. "மங்களம்! இதோ பார், இனி இங்கே இதுபோல நடக்கக்கூடாது!" என்றார். மங்களம் என்ன செய்வாள்? எஜமானி போடும் உத்தரவின்படி நடக்கவேண்டியவள்தானே! "அம்மா சொன்னாள், அம்மா சொன்னாள் என்று வீட்டைக் குட்டிச் சுவராக்கக்கூடாது. அம்மாவுக்கு இங்கே யாரும் இந்த அதிகாரமெல்லாம் தரவில்லை. தெரிகிறதா? இந்த வீட்டிலே என் இஷ்டப்படிதான் சகலமும் நடக்க வேண்டும். ஜாக்ரதை, தோலை உரித்துவிடுவேன்" என்றார் மிரட்டலாக. தோலை உரித்து விடுவேன் என்றாரே தவிர, யாருடைய தோலை என்பதைக் கூறவில்லை. கூறத் தைரியமில்லை. வேலைக்காரி பதில் ஏதாவது பேசினாலாவது அவர் கோபத்தை வெளியே கக்கிவிட்டு நிம்மதி அடைந்திருப்பார். அவள் பேசாமல் இருக்கவே அவருடைய கோபம் வலிவு அதிகரித்தது. அந்தக் கோபத்தை நாற்காலிமேல் காட்டுகிறார், விசிறியின்மேல் காட்டுகிறார், தெருக் கதவின் மீது வீசுகிறார், கடைச் சிறுவன் மீது காட்டுகிறார், தோட்டக்காரன் மீது போடுகிறார். கோபத்தை எங்கெங்கோ பாய்ச்சுகிறாரே தவிர, ரங்கத்தின் மீது வீசத் தைரியமில்லை. ரங்கம் உள்ளேதான் சயனித்துக் கொண்டிருக்கிறாள்; கூடத்திலே குதிக்கிறார், கூவுகிறார்; உள்ளே நுழைந்து ஒரு வார்த்தை கேட்க முடியவில்லை. கேட்டிருந்தால் எரிமலை வெடித்திருக்கும். நெடுநேரம் இவருடைய 'திட்டு'களைக் கேட்டுக் கொண்டிருந்த வேலைக்காரி, "நான் யார் பேச்சைக் கேட்பது? அம்மா ஒரு விதமாகச் சொல்லுகிறார்கள், நீங்கள் அதற்கு நேர்மாறாகச் சொல்கிறீர்கள்; நான் யாருடைய அதிகாரத்துக்கென்று அடங்கி நடப்பது" என்று கெஞ்சும் குரலில் பேசினாள். ஐயோ பாவம், நம்மாலே அவளுக்குக் கஷ்டம் வருகிறதே என்று ஒரு விநாடி யோசித்தேன். பிறகு மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். சே! வேண்டுமானால், அவளுக்குத் தனியாகச் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அவள் கஷ்டப்படுகிறாள் என்பதற்காக நமது போர்முறையை மாற்றிக் கொள்ளக்கூடாது. இந்தப் போர் முறை வெற்றி தருகிறது. ஆகவே இதனைத் தொடர்ந்து நடத்த வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டேன். தன் கோபத்தை எங்கு காட்டுவது என்று தெரியாது திண்டாடிய என் கணவர், கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கடைக்குப் போய் விட்டார். முன்பெல்லாம் சாப்பிட்டானதும் மூன்று மணி வரையில் படுத்துத் தூங்குவார்; நான் காப்பி போட்டுக் கொடுத்தான பிறகுதான் போவார். சாப்பிட்டு அரைமணி நேரமாகவில்லை, ஓடினார் கடைக்கு; நான் ஒய்யாரமாகப் படுத்து உறங்கினேன். அவரும் நானும் பழைய நாட்களிலே ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தோமே, அப்போது எனக்கு இருந்த சந்தோஷம் ஒருவிதம். அவருடன் 'போரிடுவது' என்று திட்டமிட்டு, படை எடுப்பின் துவக்கத்திலேயே அவர் தோற்று ஓடினபோது நான் கொண்ட சந்தோஷம் வேறோர் விதமாக இருந்தது. எனக்கு இந்த இரு சந்தோஷங்களின் வகைகளை விளக்கச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இரண்டும் வேறு வேறு வகை என்பதில் மட்டும் சந்தேகமில்லை. இனிப்புப் பண்டங்களிலேயே, இனிப்பளிக்கும் முறையிலும், இனிப்பின் தன்மையிலும் வித்தியாசம் இல்லையா? அதுபோலவே, அந்த இருவகைச் சந்தோஷங்களிலேயும் வித்தியாசம் இருந்தது. காசி அல்வா தின்னும்போதும் இனிப்புதான்; கரும்பைத் கடித்துத் தின்னும்போதும் இனிப்புதான், என்றாலும் வித்தியாசம் இருக்கிறது பார் மகனே! அது போலிருந்தது. உத்தரவின்படி நாலு மணிக்கு வேலைக்காரி காப்பி கொடுத்தாள்; சாப்பிட்டேன்; குளித்தேன்; அதுவும் புது வழக்கம்! அலங்காரம் செய்து கொண்டேன். |