ரங்கோன் ராதா

8

     மனிதர்களிலே பலவகை இருப்பது போலவே பேய்களிலும் உண்டு என்றும், எந்தெந்தச் சுபாவமுள்ள பேய் பிடித்துக் கொள்கிறதோ, அதற்குத் தக்கபடி பேய்ப் பிடித்துக் கொண்டவர்கள் நடந்து கொள்வார்களென்றும், பூஜாரி சொன்னதுடன், நான் வாதாடவும், காரணம் கேட்கவும் தொடங்கியது கண்டு, என்னை ஒரு வக்கீல் பேய் பிடித்துக் கொண்டது என்று தீர்மானித்தது கண்டு, நான் சிரித்தேன். ஆனால், அந்தப் புரட்டனின் பேச்சை மெய்யென நம்பினவர்கள், அவன் சொன்னதிலே சூட்சமம் இருக்கிறதென்று கூறினார்கள். என்ன சூட்சமத்தைக் கண்டார்களோ நானறியேன். ஒவ்வொருவர் ஒவ்வொரு கதை கூறி, பூஜாரியின் பேச்சைப் பலப்படுத்தினர். இந்தப் புரட்டனின் பேச்சைத் தட்டிப் பேச முயல்வது வெட்டி வேலை என்று எனக்குத் திட்டமாகத் தெரிந்துவிட்டது. ஆகவே, நான் அவன் வார்த்தையை ஏற்றுக் கொண்டவளாகவே நடித்து வரலானேன். அதனாலே, எனக்கு நஷ்டமும் இல்லை; கஷ்டமும் கிடையாது.

     பேயோட்டும் பக்கிரி, பணக்காரன், ஏழை என்ற இரு வகையினருக்காக இரண்டு தனித்தனி முறை வைத்துக் கொண்டிருந்தான் என்று கூறினேனல்லவா? அது போலவே முரட்டுப் பேய்களை விரட்ட ஒரு முறையும், சாதுப் பேய்களை ஓட்ட மற்றோர் விதமும் கையாண்டு வந்தான். வக்கீல் பேய் பிடித்துக் கொண்டது என்று தீர்மானித்து விட்டதால் என்னை ஓட்டுவதற்குக் கையாண்ட முறை, அதிக உபத்திரவமற்றதாகவே இருந்தது. சூடிடுவது, நாளைக்குப் பத்து வேளை குளத்தில் மூழ்கச் செய்வது போன்ற கடுமையான முறைகள் கிடையாது. காலையிலே எலுமிச்சம் பழம் தேய்த்து ஸ்நானம்; கொஞ்ச நேரம் சூரிய நமஸ்காரம்; பிறகு, ஒரு மைல் அளவுக்கு வேப்ப மரங்கள் நிறைந்திருக்கும் சாலையிலே உலாவுவது; பகலில், யாராவது ஏதாவது கதை படிப்பது, நான் கேட்டுக் கொண்டிருப்பது, மாலையிலே பூஜையில் உட்காருவது, இரவு படுக்கப்போகும் முன்பு, அவன் தரும் 'மந்தரித்த' விபூதியைப் பூசிக் கொள்வது என்ற இந்த விதமாக அமைந்திருந்தது, பேயோட்டும் முறை. பெரிய இடம், ஏதோ குமுறல் நேரிட்டுவிட்டது, கொஞ்ச நாளைக்கு மன அமைதியுடன் இருந்து வந்தால், பழையபடி சுபாவமாக இருக்கும் என்று அவன் யூகித்துக் கொண்டான். அதனாலேதான், என் விஷயத்திலே, ஒரு நல்ல வைத்திய சிகிச்சை போன்ற பேயோட்டும் முறையைக் கைக்கொண்டான். என்னிடம் பணம் இருக்கவே, அவன் 'பேயின் முறையில் நடந்து கொள்ளாமல் மனிதத் தனத்துடன்' நடந்துகொண்டான். பாவி, சிலரை இம்சையே செய்துவிட்டான். ஏழைகளுக்கு இரும்புக் கோலால் சூடு, பணக்காரர்களுக்கு மெல்லிய மிருதுவான 'பிரம்பி'னால் தடவிக் கொடுப்பது. ஏழைகளைப் பிடித்திருக்கும் பிசாசு முரட்டுக்குணம் படைத்தது; பணக்காரர்களைப் பிடித்திருப்பதோ, நாசூக்கான சாதுவான பிசாசு! இப்படி அந்தப் புரட்டன் பிசாசுகளிலே கூட இரண்டு வர்க்கங்களைப் பிரித்து வைத்தான்.

     கிராம வாழ்க்கை, நல்ல காற்று, குளிர்ந்த நீரில் குளித்தல், காலை மாலை உலவுதல், பகலில் சந்தோஷமாகப் பொழுது போக்குவது ஆகியவற்றால் எனக்கு ஆரோக்கியம் அதிகரித்தது; அழகும் அதிகரித்தது. அப்பா பார்த்து பார்த்து ஆனந்தப்படுவார். "முகத்திலே இப்போதுதானே பழைய களை இருக்கிறது" என்பார். பேயோட்டியும் தன்னுடைய பூஜை வெற்றிபெற்று வருவதாகக் கூறினான். "ஆனால் முதலியார்! அம்மாவைவிட்டு அந்தப் பேய் அடியோடு போய்விடவில்லை. மறுபடியும் மறுபடியும் வருகிறது. அதனாலேதான், சந்தோஷமாக இருந்து கொண்டே வருகிறார்கள்; திடீரென்று என்றைக்கேனும் ஓர் நாளைக்கு முகத்தைச் சுளித்துக் கொண்டு, யாரிடமும் பேசாமல் இருக்கிறார்கள்" என்றான். அவன் அறியான் காரணத்தை! எனக்கு உன் அப்பாவின் தொல்லையின்றி, வேடிக்கையாகக் கிராமத்திலே வாழ்வது மன நிம்மதியைக் கொடுத்தது என்ற போதிலும், ஒவ்வோர் நாள், எனக்கு உன் அப்பாவும் தங்கமும் ஊரிலே... என்ற கவனம் வரும்; உடனே முகம் சுருங்கும், ஒருவரிடமும் பேசமாட்டேன்; சாப்பாடும் பிடிக்காது. தூக்கமும் வராது; படுக்கையில் புரள்வேன். இதைத்தான், சோகம், பேயின் சேஷ்டை என்று பேயோட்டி கூறுவது. அந்தச் சோகத்தை அவனுடைய பன்னீர் கலந்த விபூதி போக்கிவிடுவதாக அவன் எண்ணிக் கொள்வான். உண்மையில், என் மனக் கஷ்டத்தைப் போக்கியது அவன் தந்த விபூதியல்ல. துளசியின் தயவால் ஓரளவு என் துக்கம் குறையும்; துளசி அவனுடைய இரண்டம் தாரம். கொஞ்சம் படித்தவள், ஏழை வீட்டுப் பெண்; அவனிடம் பணம் இருக்கவே, வயது ஏறுமாறாக இருந்தும், வாழ்க்கைப்பட்டவள். அதனாலே, அவள் குறைபட்ட மனதுடன் இருப்பதாக யாருக்கும் காட்டிக் கொண்டதில்லை; என்னிடம் கூட! நான் உண்மையைக் கண்டுபிடிக்கவே பத்து நாளாயிற்று. மனதிலே இருந்த குறையை மறைத்துக் கொண்டு, முகத்தை மலரச் செய்து கொண்டு துளசி வாழ்ந்து வந்தாள். பெரும்பாலும் பகலிலே எனக்குக் கதை படிப்பவள் அவள் தான். அந்தக் கதைகளில் இடையிடையேதான் அவள் தன்னுடைய சுயசரித்திரத்தையும் எனக்குத் தெரிவித்தாள்; அழுது கொண்டல்ல, சிரித்துக் கொண்டே. அந்தச் சிரிப்பு சந்தோஷம் மேலிட்டு வந்ததல்ல; உலகிலே நடக்கும் அக்ரமங்களைக் கண்டு கேலி செய்யும் சிரிப்பு அது! துளசிதான் என் சோகத்தைப் போக்குவாள், பல கதைகள் கூறி.

     "அக்கா! உங்களுக்கெல்லாம் நூறு பேய் பிடித்துக் கொண்டாலும் பயமில்லை; என் புருஷர் ஓட்டிவிடுவார். ஆனால் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேயை ஓட்டவே முடியாது" என்பாள் துளசி. "அது என்னடி துளசி! அப்படிப்பட்ட பிரமாதமான பேய்? ஜெகம் புகழும் உன் புருஷனால் கூட ஓட்ட முடியாத பேயும் உண்டா?" என்று நான் கேட்பேன்.

     "அவர் எல்லாப் பேயையும் ஓட்டுவார் அக்கா! ஒரே ஒரு பேயை மட்டும் அவரால் ஓட்டமுடியாது" என்று துளசி பெருமூச்சுடன் கூறுவாள். "அது என்ன பேய்?" என்று நான் கேட்பேன். "அதுவா? இதோ பார் அக்கா! அந்தப் பேய் என்னைப் பிடித்துக் கொண்டதற்குச் சாட்சி" என்று கூறிக்கொண்டே தன் தாலியை எடுத்துக் காட்டிவிட்டுச் சிரிப்பாள். மிகக் கஷ்டமான நிலைமையை மிகச் சாமர்த்தியமாகத் துளசி சமாளித்துக் கொண்டு வந்தாள். மனதுக்குத் துளியும் பிடிக்காத கணவனிடம், ஒரு துளியும் அதிருப்தியை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் நடந்து கொள்வது சாமான்யமான காரியமா? துளசியின் துணை எனக்கு மிகுந்த நன்மை செய்தது. என் மனதிலே தோன்றும் எண்ணங்களை அவளிடம் கொட்டுவேன். அவள் தன் குறைகளை என்னிடம் கூறுவாள். பத்து நிமிஷம் படிப்பாள்; அரைமணி நேரம் அதை ஒட்டிப் பேசுவாள். இப்படி, ஒவ்வோர் தினமும் நிம்மதியாக இரண்டு மணி நேரம் இருப்போம். "அக்கா என் மூத்த மகள் வருகிறாள் வியாழக்கிழமை" என்று ஒரு சேதியுடன் வருவாள். "உன் மூத்த மகளா போடி போ! உன் வயிற்றிலேதான் இன்னமும் ஒரு பூச்சி புழுகூட..." என்று நான் கேலி செய்வேன். மகனே! நான் கொஞ்சம் பெருமையுடனும் கொஞ்சம் கர்வத்துடனும் அதைச் சொல்வேன். ஏன் தெரியுமா? அந்தச் சமயம்தானடா கண்ணே, நீ என் கருவில் உதித்தது! நான் 'தலை முழுகி' இரண்டு மாதமாகி விட்டது. இன்னும் எட்டே மாதம் இருக்கிறது கட்டித் தங்கத்தைப் பெற! அந்த சந்தோஷத்திலே நான் இருந்ததால், துளசியைக் கேலி செய்வேன். "உனக்கு ஏதடி குழந்தை?" என்று. துளசி சொல்வாள், "ஒன்றுக்கு மூன்று, நமக்கு ஒரு துளி உபத்திரவமும் இல்லாதபடிக்கு அந்த உத்தமி பெற்று வைத்துவிட்டுப் போய்விட்டாள்" என்பாள். அதாவது பேயோட்டும் பக்கிரியின் முதல் தாரத்துக்கு மூன்று பெண்கள். அதைக் குறிப்பிடுவாள் துளசி, வேடிக்கையாக.

     இரண்டு மாதம் நான் தலைமுழுகவில்லை! மகனே! அந்த வார்த்தையின் முழுப்பொருளும் அந்தப் பொருள் தரும் களிப்பும் ஆண்களுக்குத் தெரியாது. அவர்களால் அந்தப் பொருளை முழுதும் புரிந்துகொள்ளவோ ரசிக்கவோ முடியாது. அது பெண்களின் வாழ்க்கையில் மகத்தானதோர் வெற்றி! அந்த வெற்றிதான், அவர்கள் வாழ்க்கையோடு போராடிப் போராடிப் பெறுவது. வேறு எதைக் கண்டார்கள்? பல வெற்றிகள் இருந்தால் மகிழ்ச்சி பங்கிட்டுவிட வேண்டிவரும். அது ஆண்களுக்கு! ஒரு புதிய தோட்டம் வாங்கினோம், புது வீடு கட்டினோம், புது வியாபாரம் செய்தோம் என்று எத்தனையோ வகை வகையான வெற்றிகள் ஆண்களுக்குக் கிடைக்க வழி இருக்கிறது. பெண்களுக்கு அது இல்லை! அவர்கள் அடையக்கூடிய ஒரே வெற்றி, குழந்தை! தலை முழுகவில்லை என்றால், அந்த வெற்றிக்கு அருகதையாகிவிட்டார்கள் என்று பொருள். இன்ப வாழ்க்கையின் 'பலனைக்' காணப் போகிறார்கள்! பெண், மனைவியானாள்! மனைவி தாய் ஆனாள்! பூத்துக் காய்த்துக் கனி குலுங்கிற்று என்பதுபோல. அத்தகைய வெற்றி எனக்குக் கிடைக்க இருந்தது. மாதம் இரண்டு; வாயிலே லேசான கசப்பு! மாலை வேளைகளில் கொஞ்சம் தலைசுற்றும். கைகளிலே ஒருவிதமான ஓய்ச்சல்! ஆமாம்! துளசிக்கு அது தெரிந்துவிட்டது. ஆணா பெண்ணா என்று தர்க்கிப்பாள், என்னிடம். நான் பிடிவாதமாகப் பெண் என்பேன். அவள், வேடிக்கையாக என் வயிற்றண்டை தன் காதை வைத்துக்கொண்டிருந்துவிட்டு, "அக்கா! நிச்சயமாகப் பெண்ணல்ல! ஆண்" என்று கூறுவாள். "உன்னிடம் பேசினானா?" என்று நான் கேட்பேன். "ஆமாம்" என்பாள் துளசி. "எனக்கு ஒரு பெண் கொடு மாமி! என்று கேட்டிருப்பான்" என்று நான் அவளைக் கேலி செய்வேன். அவள் சளைக்கமாட்டாள். "அது போலத்தான் கேட்டான், ஆகட்டுமடா கண்ணா! நீ வளர்ந்து பெரியவனாகி, தாத்தாவாகிறபோது வந்து கேள், பெண் தருகிறேன் என்று நான் சொன்னேன்" என்பாள். அதாவது தன்னைக் கிழவனுக்கு மண முடித்தார்கள் என்பதைப்பற்றி வேடிக்கையாகக் குறிப்பிடுவாள். இப்படி நாங்கள் பொழுது போக்கி வந்தோம். அப்பாவுக்கோ இந்தச் சேதி மனக்குழப்பத்தை உண்டாக்கிவிட்டது; அந்தக் குழப்பத்தை பேயோட்டுபவன் அதிகப்படுத்தி விட்டான். பேய் பிடித்திருக்கும் சமயத்திலே, கருத்தரித்தால் நல்லதா கெட்டதா என்று அப்பா கேட்க, அவன் ஒரு விதத்திலே நல்லது, ஒரு விதத்திலே கெட்டது என்றான். எந்த விதத்திலே நல்லது, எந்த விதத்திலே கெட்டது என்று அப்பாவும் கேட்கவில்லை, அவனும் சொல்லவில்லை! "கெட்டதாக முடியாதபடி..." என்று பயந்து போய் அப்பா கூறினார். அவன் ஏதோ ஆண்டவனின் அபிப்பிராயத்தை நேரடியாகக் கண்டு அறிந்தவன்போல, "ஆண்டவன் ஒரு குறையும் செய்யமாட்டார்" என்று தைரியம் கூறிவிட்டு, "இருந்தாலும், எட்டாம் மாதம் வரையில் குழந்தை இங்கேயே இருக்கட்டும். அப்போதைக்கப்போது இருக்கும் நிலவரத்துக்குத் தக்கபடி பூஜைகள் செய்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டான். ஆகவே, நான் தங்கத்தின் எதிரே சென்று, "பைத்தியக்காரி! நான் தாயாகப் போகிறேன். என்னை இனிச் சாமான்யமாகக் கருதிவிடாதே! வாரிசு பிறக்கப்போகிறது, ஜாக்ரதை" என்று பேச்சினால் அல்ல, பார்வையாலேயே தெரிவித்துவிட வேண்டும் என்று ஆசை கொண்டதற்கு அணை போடப்பட்டுவிட்டது. இன்னும் ஆறு மாதங்களுக்கு இங்கே இருந்தாக வேண்டும்! துளசி இருக்கிறாள், பொழுதுபோக்குக்கு. ஆனால், தங்கம் அங்கே இருக்கிறாள் தலைகால் தெரியாமல் கர்வத்தோடு. நான் 'தலை முழுகாது' இருக்கிறேன் என்ற விஷயம் தெரிந்ததும், அவளுடைய 'கர்வம்' குலையும் அல்லவா? அதைப் பார்க்கவேண்டுமே என்ற ஆவல், என்னைத் தூண்டிற்று. "இருக்கட்டும், இருக்கட்டும், வருகிறேன் தங்கம்!" என்று துளசியைத் தங்கமாகக் கொண்டு பேசினேன்! அதிலே ஒரு சந்தோஷம் எனக்கு!

     "அவரிடமிருந்து கடிதம் வந்ததா?" இந்தக் கேள்வியை ஒவ்வோர் நாளும் கேட்பேன் அப்பாவிடம். ஏன் கேட்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே, அவர் "வந்தது - இல்லை" என்று இரண்டிலோர் பதில் கூறுவார். "நான் தலை முழுகாமல் இருப்பதுபற்றி அவருக்கு எழுதினீர்களா? அவர் என்ன பதில் எழுதினார்?" என்று நானாக அப்பாவை எப்படிக் கேட்பது. துளசிதான் இதற்கும் யோசனை சொன்னாள்.

     "அக்கா! நீயேதான் அவருக்குக் கடிதம் போடுவதுதானே" என்றாள்.

     "போடி, போ! எப்படி? வெட்கமாக இல்லையா எழுத?"

     "எழுத வெட்கப்பட்டுப் பலன்?"

     "நான் மாட்டேன் போடி, எப்படி இதை எழுதுவது?" இப்படி கொஞ்ச நேரம் வாதாடினேன் துளசியிடம். (என்னைத் தான் வக்கீல் பேய் பிடித்துக் கொண்டிருக்கிறதே!) பிறகு அவள் ஒரு யோசனை சொன்னாள். அதாவது "சாப்பாடு சரியாகப் பிடிக்கவில்லை, வாய் கசப்பாகவும் இருக்கிறது, யாராவது லேடி டாக்டரைக் கேட்டு, கர்ப்பவதிகளுக்கு வலிவு தரும் டானிக் வாங்கி அனுப்பி வைக்கவேண்டும் என்று ஒரு கடிதம் எழுதிப் போடு; அதிலிருந்து அவர் தெரிந்து கொள்கிறார்" என்றாள். சாமர்த்தியமல்லவா அவள் யோசனை. அதன்படியே கடிதம் போட்டேன். நாலாம் நாள் பதில் வந்தது. கவர்! நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். துளசி கவரைக் காட்டினாள். அவருடைய கையெழுத்துதான். என் முகம் மலர்ந்தது. பதில் கிடைத்துவிட்டது, நாலே நாளில். கடிதம் போட்டோ ம்; உடனே பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். என் மீது அவருக்கு கோபம் இல்லை; அன்பு ஏற்பட்டுவிட்டது. ஆமாம், தாய் ஆகப் போகிறேன். இனியுமா என்னிடம் வெறுப்பாக நடந்து கொள்வார். அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு வந்து கடிதத்தைப் படித்தாகவேண்டும் என்ற ஆவல். அவசரமாகச் சாப்பிட்டாலோ துளசி கேலி செய்வாள். ஆகவே, கடிதத்தைப் படிக்கவேண்டுமென்பதிலே அவசரம் கொள்ளாதவள் போல, மெள்ளச் சாப்பிடவேண்டியிருந்தது. சாப்பாடு முடிந்து கூடக் கொஞ்சம் காலதாமதம் செய்தேன்; இல்லையானால் அவள் கேலி பேசுவாள்.

     "துளசி! என்ன எழுதி இருக்கிறார் கடிதத்தில் என்று பார்க்கலாம், கொடு" என்று கேட்டேன்; கொடுத்தாள். கடிதமல்லடா கண்ணே! கடுவிஷம் இருந்தது அதிலே!

     "தலைமுழுகிவிட்டேன்." இவ்வளவே, அவர் அனுப்பிய கடிதத்தில் இருந்தது!

     மலர்க்கூடையை ஆவலாக எடுக்கும்போது, அதனுள்ளிருந்து கருநாகம் சீறிக் கிளம்புவதுபோல, உன் அப்பா அனுப்பிய கடிதத்தைப் பிரித்ததும் தலைமுழுகிவிட்டேன் என்ற வாசகம் தோன்றக் கண்டேன். அவசரமாகக் கடிதத்தைத் திருப்பி மறுபக்கம் பார்த்தேன். ஒரு எழுத்தும் இல்லை. மறுபடியும் ஒரு முறை கடிதத்திலே தீட்டப்பட்டிருந்த வாசகத்தைக் கண்டேன். மெள்ள அதனை உச்சரித்தேன். உள்ளம் வெந்தது. துளசி வெடுக்கெனக் கடிதத்தை எடுத்துக் கொஞ்சம் தெளிவாக படித்தாள், தலைமுழுகிவிட்டேன் என்ற வாசகத்தை. என் செவியிலே அந்தச் சொற்கள் விழுந்த உடனே கண்ணீர் கன்னத்திலே விழலாயிற்று. தலைமுழுகிவிட்டேன்! யாருடைய வார்த்தை அது? என் கணவரின் வார்த்தை. என்னைத் தலைமுழுகிவிட்டாராம் என் கணவர். இதைவிட வேறு வேதனை தரும் சொல் பெண்ணுக்கு ஏதடா மகனே! நான் தாயாகப் போகிறேன் என்பதைப் பெருமையுடன் அவருக்கு நான் தெரிவிக்க, அவர் என்னைத் தலைமுழுகி விட்டதாகக் கடிதம் எழுதுகிறார். நான் அனுப்பியது பழம்! அவர் எனக்கு விஷம் அனுப்பினார்! என்னைத் தலைமுழுகிவிட்டாராம்; நான் தலை முழுகாமலிருக்கிறேன் என்ற செய்தியைத் தெரிவித்ததும், எனக்குக் கிடைத்த பதில் இது மகனே! எதற்கும், எப்போதும் வேடிக்கையாகவே பேசிவிடும் துளசிகூடத் திடுக்கிட்டுப்போய் நின்றாள், அந்தக் கடிதத்தைக் கண்டு. "என்ன அக்கா இது?" என்று கேட்டுக்கொண்டே என்னை அணைத்துக் கொண்டாள். "துளசி! நான் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகிறேன். என் கணவன் என்னைக் கைவிட்டுவிடத் தீர்மானிக்கிறார். அலட்சியப்படுத்தினார், இம்சை செய்தார். இப்போது அடியோடு என்னைக் கைவிட்டுவிடத் தீர்மானித்து விட்டார். தலைமுழுகிவிட்டேன் என்றல்லவா எழுதி இருக்கிறார், துளசி! அது என் மானத்துக்கு மரண தண்டனையடி! நான் கர்ப்பவதியாக இருக்கிறேன். இது, நான் குற்றம் செய்தவள் என்பதற்கு அத்தாட்சி என்று கூறுகிறார். ஐயோ! துளசி! நான் என்ன செய்வேன். அவருடைய வாசகம் என்னைப் படுகுழியில் தள்ளும் பயங்கர ஏற்பாடு. நான் அவருக்குத் துரோகம் செய்துவிட்டேன், நான் ஓர் தூர்த்தை என்று தூற்றுகிறார். உன்னை நான் நேசிக்க முடியாது, குடும்பத்திலே உன்னோடு சேர்ந்து வாழமுடியாது, காப்பாற்றவும் முடியாது, நீ எக்கேடோ கெட்டுப் போ! என்று கூறுவது கொடுமை என்பார்கள் துளசி! அவர் கூறுவது அதனினும் கொடுமையானது. விபசாரி! என்று கூசாமல் பழி சுமத்தி என் மானத்தைப் பறித்து உலகம் என்னை இழிவாகப் பேசும் நிலையை உண்டாக்குகிறார்.

     "அவளை நான் மனைவியாக இனிக் கொள்ளமுடியாது. அவள் ஓர் விபசாரி" என்று என் கணவர் உலகுக்கு உரைக்கிறார்" என்று நான் கூறி விம்மி விம்மி அழுதேன். "அழாதே அக்கா! அழுது அழுது முகமும் சிவந்துவிட்டதே! இப்படி அழுதால் உடம்புக்கு நல்லதா? அத்தான் ஏதோ வெறியிலே வீணாக எதையோ எழுதிவிட்டார். அதற்காக நீ இப்படிப் பதைக்கலாமா? ஆண்களின் சுபாவம் இப்படித்தான். பெண்ணின் மனம் புண்ணாகுமே என்பது குறித்து எண்ணியும் பார்ப்பதில்லை. அத்தானுடைய அக்ரமமான வார்த்தைக்கு அர்த்தம் இருப்பதாக நினைத்துக் கொண்டு நீ வருத்தப்படாதே. உலகிலே, புத்தியுள்ளவர்களும் சில பேர் இருக்கிறார்கள். இப்படி வெறி பிடித்து, உளறுவதை உண்மை என்று எல்லோருமே ஏற்றுக் கொள்வார்களா?" என்று துளசி என்னென்னவோ சமாதானம் கூறிப் பார்த்தாள்; வழக்கமாக அவள் பேச்சிலே காணப்படும் விறுவிறுப்பு அன்று இல்லை. அவள் எனக்குச் சமாதானம் கூறினாளேயொழிய அவளாலேயே தலைமுழுகிவிட்டேன் என்ற வாசகத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை. 'பாவிகள்! பழிகாரர்கள்! கொலைகாரர்கள்! பெண்ணை மண்ணாக எண்ணிக் கொள்ளும் முட்டாள்கள்! இருதயமற்றவர்கள்' என்று பொதுவாக ஆண்களைத் திட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அவ்வளவும் என் கணவருக்காகவே வீசப்பட்டவை. எனக்கோ உலகமே இருள்மயமானது போலாகிவிட்டது. கடலிலே விழுந்து, அலைகளால் தாக்கப்பட்டு, கை கால்கள் சோர்ந்து போய் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை ஒருவாறு தெரிந்து கொள்ளக் கூடிய அளவு மட்டும் உயிர் இருக்கும் நிலைமை எனக்கு. நான் சின்னவளாக இருக்கும்போது, பல்லியிடம் சிக்கிக் கொண்ட பூச்சியைப் பார்த்திருக்கிறேன். உடலில் ஒரு பாகம் பல்லியின் வாயிலே சிக்கி விடும். பூச்சிக்கு அது தெரிந்துவிடும். மரணத்தின் பிடியிலே இருப்பதுதான் தெரியுமே தவிர அதிலிருந்து மீண்டு கொள்ளும் வலிவு இராது. அந்த நிலையிலே தன்னால் தப்பித்துக் கொள்ள முடியுமா, அதற்குத் தகுந்த சக்தி இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்க முடியுமா? எப்படியாவது சாவின் பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காகத் துடிக்கும், நெளியும், தலையைத் தூக்கும். பல்லியின் வாயிலிருந்து வெளிப்படுவதற்காகத் தன் பலத்தை முழுவதும் உபயோகித்துப் பார்க்கும். ஒவ்வொரு துடிப்பும் பூச்சியின் வலியை நாசமாக்கவும் உயிரைப் போக்கவும் பயன்படுமேயொழிய விடுதலைக்கு வழியாக முடியாது. பல்லிக்குப் பூச்சியைக் கொல்லும் வேலையும் மிச்சமாகும். தன் பிடியை இறுக்கிக் கொண்டு பல்லி அசைவற்று இருக்கவேண்டியதுதான். பூச்சி போராடுவதாகக் கருதிக் கொண்டு சுவரிலே மோதுண்டு, தானாகச் சாகும். பிறகு பல்லி அதனைத் தின்றுவிடும். அது போன்ற நிலையிலே நான் இருந்தேன். என் கணவரின் கிராதகம் என்ற பிடியிலே சிக்கிக் கொண்ட நான் என் நிலைமையைச் சரிப்படுத்திக் கொள்ள எடுத்துக் கொண்ட ஒவ்வொரு முயற்சியும் என் வேதனையை வளர்க்கப் பயன்பட்டதேயொழிய, என் துயர் நீக்கும் துணையாகவில்லை. நான் என்ன செய்வேன்! கணவனே விபசாரி என்று தூற்றத் துணிந்த பிறகு பேதைப் பெண்ணால் என்ன செய்ய முடியும்? ஆழமான கிணறு தேடுவதன்றி வேறு வேலைதான் என்ன இருக்கிறது?