ரங்கோன் ராதா

13

     கதவைத் தாளிடாமல் படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை; அவரும் உள்ளே வரவில்லை; கூடத்திலே படுத்துக் கொண்டார். குறட்டை விடும் சத்தம் கேட்டது. எனக்குப் பிரமாதமான கோபம்; என்ன செய்வது; உன் அப்பா என்ன காரணத்தாலோ, ஒரு வார்த்தை பேசவில்லை. வம்புக்குத் தயாராக நான் இருந்தது பயனில்லாமற் போய்விட்டது. என் மனதிலே இருந்த கொதிப்பைத் தணிக்கக் கூடவில்லை. அந்தச் சமயத்திலே, எனக்குத் துளசி மீது சென்றது நினைவெல்லாம். அவள் மட்டும் எனக்குத் துணையாக இருந்தால், எவ்வளவோ நிம்மதியாக இருக்குமே என்று எண்ணினேன். அந்தக் கிராமத்திலே, எனக்கு நாள் போவதே தெரியாமல், அவ்வளவு இனிமையாகப் பேசிக் கொண்டிருப்பாள். அவள் இப்போது இருந்தால் கோபம், சோகம் எல்லாவற்றையும் விரட்டி அடிப்பாள். ஏன்! என் புருஷருக்குக்கூடப் புத்தி புகட்டக் கூடியவள் துளசி. கேலியாகப் பேசியே சித்திரவதை செய்துவிடுவாள். அவளோ புரட்டனிடம் வாழ்க்கைப்பட்டுக் கிராமத்தில் இருந்தாள். நானோ, புதுமாப்பிள்ளையாக வேண்டுமென்று திட்டமிட்டு வேலை செய்யும் புருஷனோடு சச்சரவு செய்து கொள்ளக் கூடச் சௌகரியம் கிடைக்காமல் படுத்துப் புரண்டு கொண்டிருந்தேன்.

     ஒரு சமயம், கடையிலே அவருக்கு ஏதேனும் விசாரம் தரக்கூடிய சம்பவம் நடந்ததோ - அதனால்தான் வாய் திறவாமல் படுத்துக் கொண்டாரோ என்று யோசித்தேன். ஒரு வேளை, வேலை அதிகமோ, அலுப்பினால் அயர்ந்து தூங்குகிறாரோ என்றும் நினைத்தேன். சரி! எந்தக் காரணத்தாலே தூங்கினாலும் என்ன, தூக்கம் மேலிட்டிருக்கும்போது சந்தடி செய்தால் சாதுவுக்குக்கூட அல்லவா கோபம் பிரமாதமாக வரும். அவரோ அலுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய தூக்கத்தைக் கெடுத்துப் பார்ப்போம். கோபித்துச் சண்டைக்கு வருவார்; பதிலுக்குப் பதில் வட்டியும் சேர்த்துத் தருவது என்று எண்ணினேன். உடனே என்ன காரியம் செய்தால், அவருக்குத் தூக்கம் கெடும் என்ற யோசனை. துளசி இருந்திருந்தால் கதை சொல்லச் செய்யலாம்; எதையாவது புத்தகம் படிக்கச் சொல்லலாம். இடையிடையே, அவளுடன் உரத்த குரலிலே பேசிச் சிரிக்கலாம். அந்தச் சிரிப்பும் பேச்சும், அவருடைய தூக்கத்தைக் கெடுக்கும்! கோபம் பிறக்கும். துளசி இல்லையே! வேலைக்காரி இருந்தாள்! அவளிடம் நான் அதிகமாகக்கூடப் பேசுவது கிடையாது. அவள் கதை சொல்லத் தெரிந்தவளோ இல்லையோ என்று சந்தேகம். சரி! எதற்கும் அவளை எழுப்பிக் கதை சொல்லச் சொல்வது, தெரியாது என்றால், நான் சொல்கிறேன் கேளடி என்று நாமே கதை சொல்வது என்று தீர்மானித்தேன். அவள் கொஞ்சத்தில் எழுந்திருக்கவில்லை. எழுந்து மட்டும் என்ன பலன் - நான் நினைத்தபடிதான் இருந்தது. "கதையா, தெரியாது!" என்றாள்.

     "தூக்கம் வரவில்லையடி..."

     "மத்தியானம் தூங்கினீர்களே அதனால்..."

     "ஏன் தூக்கம் வரவில்லை என்றா உன்னைக் கேட்டேன்? தூக்கம் வரவில்லை, என்ன செய்வது இப்போது?"

     "படுத்துக்கொண்ட சும்மா கண்ணை மூடிக்கொண்டிருந்தா, தூக்கம் கொஞ்ச நேரத்திலே தன்னாலே வந்துவிடும்."

     "போடி மூதேவி! ஏதாவது ஒரு கதை சொல்லடி. கேட்டுக் கொண்டே இருந்தா தூக்கம் வந்துவிடும்."

     "எனக்கென்ன கதை தெரியுங்க? முன்னமேயே சொன்னேனுங்களே, கதை தெரியாதுன்னு."

     "போடி புளுகி, இவ்வளவு பெரிய பொம்பளைக்குக் கதையா தெரியாது."

     "நீங்க ஒரு வேடிக்கை. ஏதாவது கதை சொல்றதுதான் கேட்கறதுதான். அதெல்லாம் இப்போ கவனமா இருக்கும். இப்ப என் சமாசாரமே பெரிய கதை! நான் வாழ்ந்த கதையும் வதைகிற கதையும், அந்தப் பாவி என்னைத் தொட்டுத் தாலி கட்டின கதையும், மொந்தைக் குடியனாகி, என் கால் கொலுசு, கம்மல், அட்டிகை, காப்பு எல்லாவற்றையும் கடன்காரன்கிட்டே அழுத கதையும் இதுதான் இப்ப எனக்குத் தெரிஞ்ச கதை."

     "அழுமூஞ்சி! அழுமூஞ்சிடி நீ! போகட்டும், உன் கலியாணக் கதையைச் சொல்லு கேட்கலாம்."

     "நீங்க ஒரு வேடிக்கை. நான் என்ன தொரபதையா, சீதையா, என் கலியாணத்துக்கு ஒரு கதை இருக்க. பொறந்தேன், பொம்பளையா வளர்ந்தேன். வயசு வந்ததும் ஒருத்தன் கிட்ட பிடிச்சுக் கொடுத்தான் எங்க அப்பன். தாலி கட்டின அண்ணைக்கு மறுநாளே அவன் ஆரம்பிச்சிவிட்டான், அதிகாரம் பண்ண. நின்னா உதை, குனிஞ்சா குத்து, இவ்வளவுதான் கதையே பொம்பளை கதை இவ்வளவுதானேம்மா இருக்கும். அதிலேயும் ஏழை வீட்டுக்கதை ராஜா கதையாட்டமா இருக்கும்! எனக்கென்ன சொயவரம் நடந்துதா, கதை இருக்க."

     "போடி திருடி, கதையே தெரியாதுன்னு சொன்னயே, இப்ப நீ பேசறதே கதை சொல்றமாதிரியாகத்தான் இருக்கு, கிடக்கட்டும்! உன்னை உன் அப்பா, கலியாணம் செய்து கொடுக்கறப்போ, உன்னைக் கேட்டாரா?

     "என்னையா! என்னை ஏன் கேட்கவேணும்? இது என்ன வழக்கம்? அவரே பார்த்தாரு, எனக்கு வயசாயிடுச்சு. அவ்வளவுதானே. யாரையோ புடிச்சாரு, ஐயரை நாள் கேட்டாரு, கலியாணத்தை முடிச்சாரு; அவ்வளவுதான். வேற என்னை என்ன கேட்டாரு, எந்தப் பெண்ணைத்தான் அவங்க அப்பா கேட்டாரு? அப்பேர்ப்பட்ட சீதையைக்கூட நீ இராமரைக் கலியாணம் செய்துக்க இஷ்டந்தானான்னு அவங்க அப்பா கேக்கலியே! அந்தம்மா புண்யவதி, ஆகையாலே அவங்க குணத்துக்குத் தக்க மாதிரியாய்ப் புருஷன் வந்தாரு. பொம்பளைங்க விஷயம் தாயம் போடற மாதிரியாகத்தானேம்மா."

     இப்படி, நானாக அவளிடம், பேசிப் பேசிக் கிளறியும் பார்த்தேன்; பலன் இல்லை. அவளிடம் அந்தப் பேச்சு பேசும் போது கூட, உரக்கப் பேசியும் இடையிடையே பலமாகச் சிரித்தும் பார்த்தேன். அவருடைய தூக்கம் அதனால் கெடட்டும் என்பதற்காக. அதுவும் பயன் தரவில்லை. அவருடைய குறட்டைச் சத்தம் அதிகரித்தது, குறையவில்லை. நெடுநேரத்துக்குப் பிறகு, வேலைக்காரி தானாக, 'ஒரு கதை நீங்கதான் சொல்லுங்களேன்' என்றாள். எஜமானியைக் கதை சொல்லும்படி கேட்பது மரியாதை அல்ல என்று எண்ணிக்கொண்டிருந்தாள் போலிருக்கிறது. நான் வேண்டுமென்றே கதைகட்டிச் சொன்னேன்; பெண்ணைக் கொடுமை செய்யும் ஆணைப்பற்றி; அந்த ஆடவன் பிறகு பலமாதிரி கஷ்டங்களை அனுபவித்து பலரால் இம்சிக்கப்பட்டு, கடைசியில் எந்த மனைவியை இம்சித்தானோ அவளுடைய காலிலே விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் என்று என் ஆசையைக் கதையாக்கிச் சொன்னேன். நான் பெண்களை, ஆண்கள் கொடுமை செய்வதைப்பற்றிச் சொன்னபோதெல்லாம், சுவாரஸ்யமாக இருக்கும் வேலைக்காரியின் பேச்சு.

     "அவள் பாபம் சாது. வீண் ஜோலிக்குப் போகிறவளல்ல. தன் புருஷனே தெய்வம் என்று எண்ணிக்கொண்டு, அவனுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்துகொண்டிருந்தாள். அவள் அவ்வளவு அன்பாக இருந்தாள். அவள் புருஷனோ அவளுடைய அன்பை மதிக்கவில்லை; அவளைப் பிரியமாக நடத்துவதில்லை; எப்போதாவது கொஞ்சிக் குலாவுவான்; குச்சிநாய்க் குட்டியிடம் கோடீஸ்வரன் எப்போதாவது கொஞ்சமாட்டானா, அதுபோல. ஆனால் அவனுடைய மனமோ எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தது" என்று நான் சொல்வேன். உடனே சூதுவாது அறியாத வேலைக்காரி, "படுபாவி! கல்நெஞ்சுக்காரன்" என்று கதையிலே வரும் ஆணைச் சபிப்பாள், திட்டுவாள். உடனே நான் "அதோ கூடத்திலே இருக்கிறாரே, ரொம்ப யோக்யஸ்தரோ அவர்" என்று சொல்வேன். வேலைக்காரியோ பதில் பேச மாட்டாள். கதையைச் சொல்லும்படி தூண்டுவாள்.

     "இந்த மாதிரியான ஆண்களை வழிக்குக் கொண்டுவர முடியும். பெண்பிள்ளைகள் பைத்தியக்காரத்தனமாக இது வரையில் இருந்துவிட்டார்கள். ஆண் பிள்ளையின் விளையாட்டுப் பொம்மையாகிவிட்டார்கள். அவர்களுக்கும், மானம், மரியாதை, சூடு, சொரணை உண்டு என்று காட்டியிருக்க வேண்டும்" என்று நான் காரசாரமாகச் சொன்னபோது அவள் பயந்தே போனாள். பிசாசு பேசுகிறது என்று கூற எண்ணிக் கொண்டிருந்திருப்பாள். பெருமூச்சுடன், "என்னம்மா செய்வது? தொட்டுத் தாலிகட்டினவன் இட்ட வேலையைச் செய்வது தானே நம் விதி?" என்று அவள் கூறியபோது, நான், "போடி! பெண்களும் சரி, ஆண்பிள்ளைகளும் சரி, அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தாலி கட்டினால் என்னடி யம்மா! அது என்ன மாட்டுக்கு மூக்குக் கயிறு போடுவது போலவா! தாலி கட்டினான் என்றால், ஒரு வீட்டுப் பெண்ணை, சுகமாக, கௌரவமாகக் காத்து ரட்சித்து வருகிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்தது என்றுதானே அர்த்தம். நேர்மாறாகப் புருஷன் நடந்துகொண்டால், துரோகம் செய்தால், அவன் சண்டாளன் தானே?" என்று கோபமாகச் சொன்னேன். என்ன பதில் சொல்வது என்று தோன்றாமலே திகைத்தாள் வேலைக்காரி. பாவம்! அவள் புருஷனிடம் பட்ட அடியும் உதையும் எவ்வளவோ!

     "அடங்கி அடங்கிப் போனால் பயன் கிடையாதடி; அழுதாலும் பிரயோஜனம் இல்லை; அடங்காப்பிடாரி, வாயாடி, துஷ்டை என்று எவ்வளவு கெட்ட பெயர் வந்தாலும் சரி என்று துணிந்து, புருஷனின் போக்குக்கு எதிர்ப்புக் காட்டினால், ஒரு தடவை, இரண்டு தடவை அடித்துப் பார்ப்பான். உதைத்துப் பார்ப்பான், பிறகு பெட்டியிலிட்ட பாம்புதான்" என்று அவளிடம் போர்த் திட்டமே கூறினேன். அவள் மேலும் திகைத்துப் போனாள். "இதோ பாரடி; என் வீட்டுக்காரர்கூட என்னை என்னவோ வாய் செத்தவள், மிரட்டி உருட்டி அடக்கி விடலாம் என்று எண்ணிக்கொண்டு, நான் இருக்கும்போதே, வேறு ஒருத்தியைக் கலியாணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்கிறார். அந்தக் கலியாணம் நடக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். பார், நடக்கப் போகிற வேடிக்கையை. கலியாண மணையிலே மாப்பிள்ளைக் கோலத்தில் அவர் உட்காரட்டுமே, அப்போது தெரிகிறது, ரங்கம் எப்படிப்பட்டவள் என்று. ஆயிரம் பேர் கூடி இருக்கட்டும், அந்தக் கலியாண வாசலில். அப்படியே பாய்ந்து கலியாணத்துக்கு 'ஓமம்' வளர்த்துகிறார்கள் பார், அந்த நெருப்பை எடுத்து, அவர் கண்ணிலே கொட்டாவிட்டால், என் பெயர் ரங்கமல்லடி! பார் நடக்கப்போகிற கூத்தை!" என்று நான் ஆக்ரோஷத்துடன் சொன்னேன். நடுநிசி. எனக்கோ பிரமாதமான கோபம். அந்தச் சமயத்திலே என் பேச்சும், பார்வையும், பாவம் அந்த வேலைக்காரிக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை. "ஐயோ! காளியாயி" என்று ஒரே அலறல்! நான் வாயை மூடப்போனேன், கூச்சல் அதிகரித்தது; அவரும் எழுந்து ஓடிவந்தார்.

     அலறி ஓடிவந்த என் கணவர், நான், "அடி பைத்தியமே! அடிமுட்டாள்கள் பலபேர், பிசாசு பிடித்துக் கொண்டிருக்கிறது என்று எண்ணுகிறார்களே, அதுபோலத்தானா நீயும் எண்ணிக் கொண்டாய்?" என்று கூறக்கேட்டுத் தலையில் அடித்துக் கொண்டு, "கர்மம்! கர்மம்!" என்று அழுகுரலிற் கூவினார். மகனே! நான் ஆனந்தம் கொண்டேன், தலையில் அடித்துக்கொண்டது கண்டு. எத்தனை தடவை நான் அதுபோல் அடித்துக்கொண்டிருப்பேன். புருஷன் இருக்கும் நாட்களிலே தலை தலை என்று தலையில் அடித்துக் கொள்வது, அவன் இறந்தால் மார்பில் அடித்துக் கொண்டு அழுவது என்றபடிதானே பெரும்பாலான பேதைப் பெண்களின் வாழ்க்கை இருக்கிறது. கொடுமைக்கு ஆளாகும்போது, கட்டினவனால் கைவிடப்படும்பொழுது, காமுகரால் தாக்கப்படும்பொழுது, கஷ்டம் தாங்கமாட்டாத வேளைகளிலெல்லாம் பெண்களுக்குத் தலையில் அடித்துக் கொள்வது தவிர வேறென்ன வழி இருக்கிறது. எத்தனையோ பெண்களுக்கு இந்த நிலை. அவ்வளவுக்கும் பரிகாரம் போல எனக்குத் தோன்றிற்று, அவர் என் எதிரே, தலையில் அடித்துக் கொண்டு நின்றபோது. பெண்ணைக் கொடுமை செய்யும் போக்கினரின் பிரதிநிதி அவர். நான் பெண் குலத்தின் சார்பிலே நின்று பழி வாங்கும் அதிகாரி. இந்த நிலைதான் ஏற்பட்டதாக எனக்குத் தோன்றிற்று. அன்றிரவு அவர் அழுதுகூட இருப்பார். நான் கேட்கமுடியவில்லையே அந்தச் சங்கீதத்தை. அவர் தெருத்திண்ணைக்குப் போய்விட்டார்.

     இந்தப் போராட்டம் சில நாட்கள் நீடித்தது. போராட்டம் என்றுகூடச் சொல்வதற்கில்லை! அவர்தான் கோழையாகி விட்டாரே! என் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்தது சில நாட்கள். அவர் ஏதோ பெரிய திட்டமிடுகின்றார். மனத்திலே அதனால்தான் இப்படி அமைதியாக இருக்கிறார்; அஞ்சி இருப்பவர்போல் காணப்படுகிறார் என்று நான் யூகித்தேன். அவருடைய முகத்தில் கவலை படியத் தொடங்கிற்று. ஏன் இராது? அடங்காப்பிடாரி நான்! அவர் என்னைக் கொடுமைப் படுத்துவதன் மூலம், என் கோபத்தை மட்டுமல்ல, மனதிலே உள்ள ரோஷத்தைக் கிளப்பிவிட்டார். அதன் வேகத்தைத் தாங்கும் சக்தி அவருக்கு இல்லை! எங்கும் எதிலும் அதுதானே நிலைமை! கட்டுக்கு அடங்கும் என்று கருதி நாம் வளர்க்கும் மிருகம், சில நேரத்தில் அடக்குமுறை, அதனால் தாங்கமுடியாத அளவு ஆகிவிட்டால், கட்டு அறுத்துக்கொண்டு ஓடவும், திருப்பித் தாக்கவும் செய்யவில்லையா? அந்த நேரத்திலே அதற்குமுன் அதே மிருகத்தைக் கட்டுக்கு அடங்கி நடக்கும்படி செய்தவனே, கிலிகொண்டு ஓடுகிறானல்லவா! மனிதனிடம், மிருக குணம் அடியோடு மாய்ந்து போகவில்லையே! என் மனம் மட்டுமா? யாருக்கும்தான், அந்தக் குணம் இருக்கும். மகனே! நான் நினைக்கிறேன், உலகிலே எவ்வளவு உபதேசம் நடைபெற்றாலும், இந்த மிருக குணம் அடியோடு ஒழிந்துபோகும் என்று கூறமுடியாது. நல்ல முறைகளால் நட்பு நியாயத்தில் அந்த மிருக குணத்தைக் குறைக்கலாம், மறைக்கலாம், தூங்க வைக்கலாம்; அடியோடு மாய்த்துவிட முடியாது. நான் அடிக்கடி எண்ணிக் கொள்வதுண்டு, வெங்காயம் வெட்டும்போது, இது பார்வைக்குக் கெட்டியான பொருளாகத்தானே இருக்கிறது; தேங்காயையாவது எடுத்துக் குலுக்கிப் பார்த்தால், உள்ளே தண்ணீர் இருப்பது தெரிகிறது; இதனைப் பார்த்தால், அப்படித் தண்ணீர் இருப்பது தெரியக் காணோமே; அப்படி இருந்தும் இதை நறுக்கினால் ஈரம் இருக்கிறதே, எப்படி என்று. ஈரம் மட்டுமா இருக்கிறது தம்பி! நமது கண்களில் இருந்து நீரைக் கொண்டு வருகிற அளவு எரியும்சக்தி இருக்கிறதே அதனிடம். நெருப்புக்கு உள்ள சக்தியும், நீருக்கு உள்ள சக்தியும் கொண்டு, தனியாக இருக்கும்போது மணம் பயன்படாமலும், மற்றவற்றுடன் பதம்பார்த்துச் சேர்த்தால் சுவையும் மணமும் தருவதுமாக இருக்கிறது வெங்காயம். நான் பெண்களின் சக்தியை அப்படித்தான் இருக்கிறது என்று எண்ணிக்கொள்வதுண்டு. வெங்காயச் சாறு கண்ணில் பட்டால், விழியில் நீர் வழிவதுபோல பெண்களின் கோப உணர்ச்சியும் பழிவாங்கும் எண்ணமும் கிளப்பப்பட்டுவிட்டால், எந்த ஆணும் அழுதுகொண்டுதான் இருந்தாக வேண்டும்! அவர் அழுதுகொண்டிருந்ததிலே ஆச்சரியமில்லை. அவர் என்னுடைய எதிர்ப்பை மட்டும் சமாளிக்க வேண்டிய வேலையில் ஈடுபட்டிருந்தால், கொஞ்சம் சிரமப்பட்டாலும், வெற்றி திட்டமாகப் பெற்றுவிட முடியும். அவரோ, என் எதிர்ப்பைச் சமாளிப்பது மட்டுமல்ல, தன் ஆசையை - தங்கத்தைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்ற திட்டத்தையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டியவராக இருந்தார். நானோ அடங்க மறுத்துவிட்டேன். அத்துடன் நின்றுவிட மாட்டேன். ஊர் அறிந்தாலும் கவலை இல்லை. உரிமைக்காகப் போராடுவது, கொடுமைக்குச் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டவள் - என் ஆர்ப்பாட்டத்தின்மூலம் நான் அவருக்கு என் புதிய நிலையைத் தெரிவித்துவிட்டேன். ஆகவே, அவர் புதிய திட்டம் வகுத்தாக வேண்டியவரானார். தம் காரியத்தைச் சுலபத்திலே சாதித்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தார். நான் வெற்றிபெற்று வந்தேன் ஒவ்வொரு நாளும். நான் வெளியில் போய் வருவேன்; அவர் எங்கே போயிருந்தாய், ஏன் போய் வந்தாய் என்று எதுவும் கேட்கமாட்டார். எனக்கு இஷ்டமான பண்டம் சமைக்கப்படும். இஷ்டமான நேரத்தில் சாப்பிடுவேன். அவருடைய சௌகரியத்தைக் குறைப்பது, இப்படி ஒரு மனப் போக்கு இருந்தது எனக்கு. சிறுபிள்ளைகள் பொன்வண்டு விளையாடுகிறார்களே அதுபோல. ஒருநாள் ஒரு வேடிக்கை கேள். தெருத்திண்ணையிலே யாரோ உள்ளூர்ப் பெரிய மனுஷருடன் பேசிக் கொண்டிருந்தார். கலெக்டர் ஆபீசிலிருந்து ஆள் வந்தார்கள், உன் அப்பாவை அழைக்க. உடனே அவர், "இதோ பத்து நிமிஷத்திலே, குளித்துவிட்டு வந்துவிடுகிறேன்" என்று கூறினார். அந்தப் பேச்சு காதில் விழுந்தது; உடனே ஸ்நான அறைக்குப் போனேன். பத்துத் தடவை இருக்கும், அவர் "இன்னும் முடியவில்லையா ஸ்நானம்? நேரமாகிறதே, கலெக்டர் காத்துக் கொண்டிருப்பாரே" என்று கேட்டுக் கேட்டுப் பார்த்தார். என்னிடம் கேட்பாரா! வேலைக்காரியிடம். அவள் என்னிடம் எப்படிப் பேசுவாள்! "அம்மா! அம்மா!" என்று கூப்பிடுவாள். நான் தண்ணீர் ஊற்றிக் கொள்ளும் சத்தந்தான் அவளுக்குப் பதில்; கதவைத் தட்டுவாள்.

     "யாரது, முட்டாள்தனமாக ஸ்நான அறைக் கதவைத் தட்டுவது" என்று பதில்.

     "ஐயா..." என்று அவள் பேசத் தொடங்குவாள்.

     "என்னடி அக்கிரமம்! ஒரு பெண் குளித்துக் கொண்டிருக்கும்போது அவர் எப்படித் தட்டலாம்" என்று கேட்பேன்; எனக்குத் தெரியும் அவள்தான் தட்டினாள் என்று.

     "அம்மா! நான் தான் தட்டினேன், அவரல்ல; அவர் கலெக்டர் ஆபீஸ் போகவேணுமாம்" என்று அவள் கூற, "அதற்கு உத்தரவு கேட்கிறாரா என்னை" என்று நான் கேலி பேச, "இல்லையம்மா, குளித்துவிட்டுப் போக வேண்டுமாம்" என்று அவள் பேச, "சரிதாண்டி! பாதிக் குளியலோடு வந்துவிட முடியுமா" என்று நான் கோபிக்க, எங்கள் பேச்சைக் கேட்டு, அவர் திகைத்துவிட்டுக் கடைசியில், குளிக்காமலேயே அவசர அவசரமாக உடுத்திக்கொண்டு போய்விட்டார். வேலைக்காரி ஒரு 'ஐயோ பாவம்' சேர்த்துச் சேதியைச் சொன்னாள்; களித்தேன். குளித்தேன் என்று மட்டுமா கூறமுடியும் அந்த ஸ்நானத்தை!