உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ரங்கோன் ராதா 18 கொஞ்ச நேரம் நாங்கள் இருவரும் என்ன செய்வது, என்ன பேசுவது என்றே புரியாமல், திகைப்பூண்டு இருந்தோம். உன் அப்பாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வெளி வந்தது. நான் அழவில்லை. அதற்கும் கொஞ்சம் சக்தி வேண்டும். அந்தச் சக்தியற்றவளாகிவிட்டேன், அந்த நேரம். யோசித்தேன், கொஞ்சம் தெளிவு வந்ததும், யோசித்தேன், யோசித்தேன், நெடுநேரம்; ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வது என்று விளங்கவே இல்லை. உள்ளே பிணம்! வெளியே பிணத்துக்குச் சமமான நிலையில் புரட்டன்! இரண்டு கொலைக் குற்றங்கள்! கணவனும் மனைவியும் குற்றவாளிகள்! தம்பி! எங்கள் நிலை எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார், நீ. கண்ணே! அந்த நடுநிசியில், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறாய். "கிழவி பிணமான பிறகு, என்ன செய்வதாக யோசனை செய்திருந்தீர்கள்" என்று நான் கேட்டேன் அவரை, நெடு நேரத்திற்குப் பிறகு. "என்ன? என்ன கேட்கிறாய் ரங்கம்?" என்று குழப்பத்துடன் பேசினார் என் கணவர். "பாவிகளே அனாதையாக வந்த கிழவியை நரபலி கொடுத்தீர்களே; அவளைப் பிணமான பிறகு என்ன செய்வதாக இருந்தீர்கள்?" என்று கேட்டேன். "நான் என்ன காரியம் செய்துவிட்டேன், ரங்கம்! கொலைக்கும் உடன்பட்டேன். இந்தப் பாவியின் சொல்லால் கெட்டேன்" என்று கூறிக்கொண்டே அழலானார். அவருடைய அழுகுரல் என் மனதிலே துளியும் பச்சாத்தாபத்தைக் கிளப்பவில்லை. "முதலியாரே! பிறகு அழலாம்! ஆயுட்காலம் பூராவும் அழுதுகொண்டே இரும். இப்போது உங்கள் அக்ரம ஏற்பாட்டின்படி முழு விவரத்தையும் சொல்லும்" என்று நான் அவருடைய மனத்தைக் குத்துகிற விதமாகக் கேட்டேன். "அந்தப் பாவி, என்னென்னவோ சொன்னானே! நான் எதை என்று சொல்வேன். எதை நம்புவது. என்னைக் கொலைகாரனாக்கினான் - பிறகு, அவனே போலீஸாக வந்தான் - என்னென்ன செய்தான்..." என்று திணறித் திணறிப் பேசினார். "ஐயா, தரும சொரூபீ! உம்முடைய நல்ல குணத்தைத் திடீரென்று இந்தப் பாவி கெடுத்துவிட்ட கதையைப் பிறகு பேசலாம். கிழவியைக் கொலை செய்த பிறகு என்ன செய்ய எண்ணியிருந்தீர்கள்? பிணத்தைத் தின்றுவிட இருந்தீர்களா? பேசுமய்யா, பெரிய மனிதரே! பேசு!" என்று நான் கேட்டேன். ஆமாம் தம்பி! எனக்கு அவ்வளவு ஆத்திரம். மறுபடியும் என் காலிலே விழுந்தார். "நாலு பேர்! ஓடக்காரர்கள்! உப்பு மூட்டை!" என்று ஏதேதோ உளறினார். "என்ன சொல்லித் தொலைக்கிறீர்கள். சீக்கிரம் தெளிவாகச் சொல்லித் தொலையுமய்யா" என்று நான் நிர்பந்தப்படுத்தினேன். கிழவியைப் பலி கொடுத்த பிறகு, நாலு பேர் ஓடக்காரர்கள் வருவார்களென்றும், அவர்களிடம் பிணத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்றும், அவர்கள் என்னென்னவோ செய்து அந்தப் பிணத்தைத் துண்டுகளாக்கி, உப்பு மூட்டையிலே போட்டு, தொலை தூரத்தில் எதுவோ ஒரு காட்டு ஆறாம், அதிலே போட்டுவிடுவார்கள் என்றும் சொன்னான்" என்றார். "எப்போது வருவார்கள் என்றான், இந்தப் புரட்டன்" என்று கேட்டேன். "மூன்று மணிக்குள்" என்றார். கடிகாரத்தைப் பார்த்தேன். இரண்டரை மணி. ஒரு முடிவுக்கு வந்தேன். கிழவியின் முகத்தைப் பார்த்தேன் - கண்ணீர் எனக்கு பெருகிற்று - அவள் கால்களைத் தொட்டுக் கும்பிட்டேன். கைத்தடியை மீண்டும் எடுத்தேன் - குற்றுயிராகக் கிடந்த அந்தக் கொடியவன் மண்டையிலே மற்றுமோர் அடி கொடுத்தேன். மீண்டும் பேய் பிடித்துக் கொண்டதோ என்று பயந்திருப்பார் உன் அப்பா! "தீர்ந்துவிட்டிருக்கும்! சரி! கோணிப் பையில் போட்டு இந்தக் கொடியவனை, ஓடக்காரர்கள் வந்ததும், கொடுத்துவிடு" என்று உத்தரவிட்டேன். "வராவிட்டால்...?" என்று குழந்தைபோலக் கேட்டார். "மூட்டையைத் தூக்கிக் கொண்டு போய், மார்க்கட்டிலே விற்கவேண்டும்" என்று கேலியும் செய்தேன். "ரங்கம்! அந்தத் தடியாலே என்னையும் அடித்துக் கொன்றுவிடு. அது மேல், இந்த நிலைமையை விட" என்றார் கொஞ்சம் பரிதாபமாக இருந்தது. ஆனால், பரிதாபம் நீடிக்கவில்லை. வாயில் வந்தபடி, என் வயிற்றெரிச்சல் அடங்குமட்டும் திட்டித் தீர்த்தேன். புறக்கடைக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. "சரி! ஓடக்காரர்கள்! கட்டு, மூட்டை! தைரியமாகக் கொண்டு போய்க் கொடு" என்றேன். ஏதோ மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டவர்போல, நான் சொன்னபடி செய்துவிட்டு வந்தார். "சிந்தாமணி பூஜைக்காக வாங்கி வைத்த வாசனைச் சாமான்கள், சாம்பிராணி சகலமும் இருக்கிறதல்லவா? நாளைய தின முதல், நாலு நாளைக்கு, அது அவ்வளவும் நமது வீட்டிலே உபயோகமாக வேண்டும். வேறு ஒரு வழியும் இல்லை, உமது தலை தப்ப. கிழவியின் பிணத்துக்கு, நாலு நாளைக்குப் பூஜை செய்துதான் நீர் பிழைக்க வேண்டும்" என்று நான் கூறிக் கொண்டே இருக்கையில் மிரள மிரள விழித்தார் என் கணவர். "பயந்து என்ன பயன் இப்போது? தூக்குத் தண்டனை உமக்குக் கிடைத்தால், என் குழந்தை நிர்க்கதியாகும். நான் இறந்தாலும் பரவாயில்லை. நான் சாகத் துணிந்துவிட்டேன். இன்றைய நாலாம் நாள் நான் செத்துவிடுவேன். சுடலையில் கொளுத்தலாம். பைத்தியம் என்று எண்ணுகிறீரா! பைத்தியமல்ல! தியாகம், தியாகம் என்று யாராவது பெரியவர்கள், எப்போதாவது சொல்லக் கேட்டிருக்கிறீர்களல்லவா! அதுதான் இது. நான் சாகப் போகிறேன், உம்மைக் காப்பாற்ற. உத்தமராகிய உமக்கு ஒரு ஆபத்தும் வரக்கூடாதே என்பதற்கு அல்ல; என் ஆசைக் கண்மணியின் நன்மையை எண்ணி இக்காரியம் செய்ய நினைக்கிறேன். மேலும் நான் உண்மையில் சாகப் போகிறதுமில்லை. என் பிணம் தீப்பிடித்து எரிவதைக் கூட நான் என் கண்களால் காண முடியும். முதலியாரே! விஷயத்தை விளக்கமாகச் சொல்கிறேன் கேளும். எனக்குக் கடுமையான அம்மை கண்டுவிட்டது என்று ஊரிலே கூறிவிடும் காலையிலே. அம்மை என்றால் யாரும் அருகே நெருங்கமாட்டார்கள். அம்மையை நீக்குவதற்காக, அற்புதம் தெரிந்த சாமியார் ஒருவர் வந்திருப்பதாகவும், அவருடைய கண்டிப்பான உத்தரவின்படி யாரும் வீட்டிற்குள் நுழையக்கூடாது என்றும் சொல்லிவிடவேண்டும். நாலாம் நாள் நான் இறந்துவிட்டதாகக் கூறி, கிழவியைக் கொண்டுபோய்க் கொளுத்திவிட வேண்டும். பிணமான பிறகும், யாரும் நெருங்கக் கூடாது. முகத்தைக்கூடப் பார்க்கக்கூடாது. தகப்பனாரும், தங்கையும், குழந்தையுங்கூடக் காணக்கூடாது. அது ஊருக்கே பேராபத்தாகும் என்று சாமியார் சொல்வதாகச் சொல்லிவிடும். அம்மையால் இறந்தவர்களைக் கொளுத்தக்கூடாதே என்பார்கள். இது ஒரு தனிவிதமான அம்மை, கொளுத்திவிடத்தான் வேண்டும் என்று சாமியார் சொன்னதாகச் சொல்லிவிட வேண்டும். எதையும் சாமியார் சொன்னார், சாமியார் சொன்னார் என்று கூறிவிட்டால், நமது ஜனங்கள் வாய்திறந்து ஏன் என்று கேட்கமாட்டார்கள். நான், இங்கு நாலு நாள் சாமியார் கோலத்தில் தங்கி இருப்பேன். பிறகு, நான் சாமியார் கோலத்திலேயே ஊரைவிட்டுச் சென்றுவிடுவேன் - எனக்கு இனி இந்த வாழ்க்கை வேண்டாம் - இவ்வளவும் செய்கிறேன் என் குழந்தைக்காக! நீ, எவ்வளவு கொடுமை செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்தாகிவிட்டது. ஒரே ஒரு நல்ல காரியம் செய்; கடைசிக் காலத்திலே என் மகனைக் கைவிடாதே! அவன் ஓராண்டுக் குழந்தை! அவனை விட்டுப் பிரிந்து போகிறேன் - காவி அணிந்து கொண்டு. எனக்குக் கேடு செய்தாய் - துரோகம் செய்தாய், கொலைகாரனானாய், உன்னால் பிணமாக்கப் பட்டாள் ஒரு ஏழை. இந்த அளவு போதும். எவ்வளவு கேவலமான கெட்ட குணம் கொண்டவனும் இதைவிடக் கொடுமை செய்ய முடியாது. ஆகவே தான், நான் உன்னை நம்புகிறேன். இப்போது இந்தக் காட்சி உன் மனதிலே இருக்கும் கெட்ட எண்ணத்தையே சுட்டுச் சாம்பலாக்கிவிடும் என்று நம்புகிறேன்." "ஆகவேதான் என் குழந்தைக்கு ஆபத்து நேரிடாது என்று துணிந்து இந்த ஏற்பாட்டைக் கூறுகிறேன். எனக்கு ஏதோ ஒரு வகை நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்ற போதிலும், இன்னும் கொஞ்சம் பாதுகாப்பும் முன்னேற்பாடும் அவசியம். அதற்காக இரண்டு காரியம் செய்தாக வேண்டும். ஒன்று, நடந்தது அவ்வளவையும் எழுதிக் கையெழுத்திட்டு என்னிடம் தர வேண்டும். என் குழந்தைக்குத் துரோகம் செய்ய நினைத்தால் உன்னை என்ன கதியாக்க முடியும் என்னால், அந்தக் கடிதத்தைக் கொண்டு, என்பதை எண்ணியாவது நல்வழிப்படு. இரண்டாம் காரியம், என் குழந்தையைத் தங்கம் ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டாக வேண்டும். அவள் காலில் விழுவாயோ, மிரட்டுவாயோ, என்ன செய்வாயோ எனக்குத் தெரியாது. ஆனால், ஸ்வீகாரப் பத்திரம் வேண்டும். இந்த இரண்டு பாதுகாப்புடன் வேறொன்றும் இருக்கிறது. எந்தச் சமயத்திலே நீ, என் குழந்தைக்குத் துரோகம் செய்தாலும், புரட்டன் அடைந்த கதிதான் உனக்கும். உன்னால் மட்டுந்தான் கொலை செய்ய முடியும் என்றுதானே நினைத்தாய். நீயே பார்த்தாயல்லவா, புரட்டனைக் கொலை செய்தேன், ஜாக்கிரதை. சம்மதமா? சம்மதத்தைக் கேட்பானேன். செய்துதான் ஆகவேண்டும். நீ, இனி அழுது பயன் இல்லை; கெஞ்சிப் பயனில்லை; காலில் வீழ்ந்தும் பயனில்லை. நான், இனி உன்னோடு வாழமுடியாது. நான் சாமியாராகிவிடப் போகிறேன். இது மாற்றமுடியாத தீரமானம். எனக்கு இனி இங்கு இருந்தால், அடுத்தபடி உன்னைக் கொலை செய்யத் தோன்றும் - தங்கம் இரண்டாவதாகக் கொலை செய்யப்படுவாள். புலி ஒரு முறை இரத்தம் குடித்தானதும் மறுபடியும் மறுபடியும் தேடுமாமே? அப்படி ஆகிவிடுவேன். என் மகனின் நலனை எண்ணியேதான் நான் இதுவரையில் கூட இங்கு இருந்தேன். இனி இருக்க முடியாது. எனக்கு இந்தக் குடும்ப வாழ்க்கையே வேண்டாம். பிச்சைக்காரியாக உலவுவேன். பிறந்ததற்கு நான் படவேண்டியது அவ்வளவும் பட்டாயிற்று. இனி நான், ஆண்டவனின் அருளைப் பெறுவதற்கு, அல்லும் பகலும் பாடுபடுவேன். பந்தம், பாசம், பற்று எல்லாவற்றையும் விட்டுவிடத் துணிந்துவிட்டேன். மகனிடம் கொண்டுள்ள ஆசை மட்டும் போகவில்லை. ஆகவே தான் சில நிபந்தனை விதித்தேன். நான் இனி ரங்கமல்ல! உன் மனைவி அல்ல! நான் இனி ஒரு நாடோ டி பிச்சைக்காரி, சாது, சன்யாசி. ஆமாம்! முதலியாரே, முதலியாரே! என்று அழைக்கிறேனே, அதிலிருந்து தெரிந்து கொள்ளும், நமக்கு இருந்து வந்த சம்பந்தத்தை அறுத்துவிட்டேன் என்பதை. இதோ தாலி" என்று கூறினேன். என் கண்களிலும் நீர், அவர் கண்களும் குளம். என் கால்களைப் பிடித்துக் கொண்டார். பிடியை உதறிவிட்டு என் படுக்கை அறை சென்றேன் - கத்தரிக் கோலெடுத்து, என் தலை முடியை ஒட்ட வெட்டிவிட்டேன், நகைகளைக் கழற்றிப் பெட்டியிலே வீசினேன். அலங்கோல ரூபத்துடன் மீண்டும் அவர் முன் வந்து நின்றேன்; அவர் கோவெனக் கதறலானார். வாயை மூடச் சொல்லி ஜாடை காட்டினேன். மூடிக்கொண்டார். "இது போதாது! நாளைக்குத் தலையை மழுங்கச் சிரைத்தாக வேண்டும். நீரேதான் செய்யவேண்டும்" என்று கூறினேன். தம்பி! பிறகு நடந்ததைச் சுருக்கமாக்கிவிடுகிறேன். நாலு நாள் வீடு முழுதும் ஒரே சாம்பிராணி மயம் - பிண நாற்றம் தெரியாதிருக்க! ஊரெங்கும் ஒரே பேச்சு, எனக்கு கடுமையான அம்மை என்று. சாமியார் கோலத்திலே நான் வீட்டிலே இருந்தேன். தெருவில் இருந்தபடி விசாரித்துவிட்டுப் போவார், என் தந்தை, பாபம்! "மகளைக் காணாமல் இந்த ஜன்மம் எதற்கு? பிராணன் போனாலும் போகிறது - நான் பார்த்தாக வேண்டும் ரங்கத்தை" என்று பல முறை கேட்டார். "உமக்கு மட்டுமல்லவே. ஊருக்கே சர்வ நாசம் வருமென்று சாமியார் சொல்கிறாரே" என்றார் உன் அப்பா. ஊர் முழுதும் ஏமாந்தது. என் ஏற்பாட்டின் படியே காரியம் நிறைவேறிற்று. நாலாம் நாள், புரண்டு புரண்டு அழச்சொன்னேன், அவரை. தெருக் கதவைத் தாளிட்டுவிட்டு, கிழவியின் பிணத்துக்கு என் உடைகளைப் பூட்டி, முக்காடிட்டு, முகத்தையும் மறைத்துவிட்டேன். பிறகே, ஒரு சிலரை மட்டும், ஊழியக்காரர்களை மட்டும் வரவழைத்து பிணத்தைச் சுடலைக்கு எடுத்துச் செல்லும் ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னேன். சுடலையிலும் சர்வ ஜாக்கிரதையாக இருந்து, யாருக்கும் துளிச் சந்தேகமும் வராதபடி கிழவியைக் கொளுத்த ஏற்பாடு செய்தேன். சுடலைக்குப் பிணத்தை எடுத்துச் செல்லும்போது, நானும் உடன் சென்றேன். தம்பி, உலகிலேயே வேறு யாருக்கும் நேரிட்டிருக்க முடியாத சம்பவம், சொன்னால் கூட நம்பமாட்டார்கள். ஆனால் கடுமையான அம்மை, காளியின் கோபம், சாமியாரின் கடுமையான உத்தரவு, ஊருக்கு நாசம் வந்துவிடும் - காளி சகலரையும் பலி கேட்பாள் என்ற இப்படிப்பட்ட மிரட்டல்கள் அந்த ஊரை அடக்கிவிட்டது. நான் சாமியாரானேன்! "ரங்கத்தின் வாழ்வு முடிந்துவிட்டது! மகராஜி! பூவோடும் மஞ்சளோடும், வெள்ளிக்கிழமை போகிறாள்" என்று ஊரார் பேசினர். அதே இரவு, நான் மொட்டைத் தலை, கையில் தடி, உடலில் காவி, நெஞ்சிலே எப்போதும் ஏற்பட்டிராத அளவு தைரியம், இந்த நிலையில் ஊரைவிட்டே சென்றேன். |