வில்லவன் தேவி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) வில்லவன் தேவி பிறந்த கதை தமிழக வரலாற்றில் சேர, சோழப் பாண்டிய, பெரு மன்னர்கள் மட்டுமின்றி, பல்வேறு குறுநில மன்னர்களும் மிக்க புகழுடன் வாழ்ந்திருக்கிறார்கள். வீரத்திலும் தீரத்திலும், அறிவிலும் ஆற்றலிலும், வாய்மையிலும் வள்ளன்மையிலும், கலைகளிலும், புலமையிலும் கூட இந்தக் குறுநில மன்னர்கள் பலர், அன்றையப் பேரரசர்களைக் காட்டிலும் சிறப்புகளைப் பெற்றிருந்தனர் என்பதை சங்ககால இலக்கியங்கள் மட்டுமில்லை, வரலாறுகளும் உறுதிப்படுத்துகின்றன. வாணகோவரையர், பழுவேட்டரையர், விழுப்பரையர், முத்தரையர், முனையரையர், பல்லவரையர், போத்தரையர், வல்லவரையர், மழவரையர் என்று பல்வேறு குலவழி வந்த குறுநில மன்னர்களும் அவ்வப்போது தமது சிறப்பு மிக்கப் பணிகளால் நிலைத்த பெரும்புகழ் ஈட்டியதுண்டு. பேரரசர் பலருக்கு இவர்கள் உறுதுணையாக நின்றதால்தான் அவர்கள் பல அரிய சாதனைகளைப் புரிய முடிந்ததென்றும் கூறும் வரலாறுகள், தனித்தே நின்று சிலரும் கூட பெருமை கண்டனர் என்றும் உறுதிப்படுத்துகின்றன. (வரலாற்றுப் பேராசிரியர் திரு சதாசிவ பண்டாரத்தாரின் தமிழ் இலக்கிய வரலாறு 13, 14,15 ஆம் நூற்றாண்டுகள் என்னும் நூலின் 51, 63, 66ம் பக்கம் - இது அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு.) தவிர அவர்கள் குலப்பெயர் சம்பூவராயர் இல்லை, சம்பூவரையர்கள்தான் என்றும் வில்லவராயர்கள் இல்லை, வில்லவரையர்கள்தான் என்றும் கூறுவாரும் உண்டு. எப்படியிருப்பினும் நான் இந்த நவீனத்துக்குப் பொருந்தக் கூடிய வகையில் சம்பூவராயர் என்ற குலப்பெயரையும் வில்லவரையர் என்ற குலப்பெயரையும் எடுத்துக் கொண்டேன். (திரு. பண்டாரத்தார் அவர்கள் இவ்வாறே பெயரினைக் குறிப்பிட்டுள்ளார்.)
மல்லிநாதச் சம்பூவராயர் உத்தம குணம் படைத்த உயர்ந்த அரசர். மிகவும் தாராள குணம் படைத்த தருமசீலர். தன் நாட்டுக் குடி படைகளிடத்தில் அவர் கொண்டிருந்த அன்பும் கருணையும் மிகச் சிறப்பானது. வரதட்சிணைக் கொடுமையால் தங்கள் குலப்பெண்கள் காலா காலத்தில் கலியாணம் செய்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் தவிப்பதையும் அந்தச் சமூகம் மூடப்பழக்க வழக்கங்களால் நீண்ட காலமாக வாடி வருந்துவதையும் அறிந்த அவர் அந்த வரதட்சிணைக் கொடுமையை அந்நாளிலேயே நீக்கிவிட்ட சீர்திருத்தச் செம்மலாகவும் விளங்கிய பெரியார். இன்றைக்கும் இம்மாபெருஞ் சீர்திருத்தப் பணியின் ஆணை விளக்கம் அவ்வூர் ஆலயக் கல்வெட்டுகளில் பதிந்துள்ளது.
(டாக்டர் மா. இராசமாணிக்கனார் இயற்றியுள்ள கல்வெட்டுக்களில் அரசியல், சமயம், சமுதாயம் என்னும் ஆராய்ச்சி நூலின் 98ம் பக்கம் - இந்நூலை வெளியிட்டுள்ளவர் சென்னை சேகர் பதிப்பகத்தார்) வீரவல்லாளராயன் என்ற பெயருடன் திருவண்ணாமலையில் நிலைத்து ஆண்டவன் நெடுநாள் புகழ் பெற்ற, போசளர் வமிசத்தைச் சேர்ந்தவன். அவனும் மேற்படி மல்லிநாதச் சம்பூவராயனும் ஒரே காலத்தவர் என்பதும் வரலாற்று மூலம் உறுதிப்பாடாகியுள்ளது. (1340ல் பல்லாளன் பற்றிய திருவண்ணாமலைக் கல்வெட்டு.) கம்பிலி நாட்டின் கம்பிலித்தேவன் என்பவன், அக்கால ஆந்திர நாட்டில் துங்கபத்திரைப் பகுதியில் மேலே கண்ட பெயருடன் விளங்கிய நாட்டின் அரசன் என்பதையும் வரலாறு உறுதிப்படுத்தியுள்ளது. இவன் பல்லாளராயனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு முகமது பின் துக்ளக்குடன் போராட முயன்றதாகவும் ஆனால் பல்லாளன் இதை ஏற்காமல் துக்ளக்கின் பிரதிநிதியான உலூப்கானுடன் (இவன் துக்ளக்கின் மகன் என்றும் கூறப்படுகிறது) சமரசமாக நடந்து கொள்ள முடிவு செய்ததாகவும் வரலாறு கூறுகிறது. (பேராசிரியர் கே.கே.பிள்ளை அவர்கள் எழுதியுள்ள தென் இந்திய வரலாறு இரண்டாம் பாகம் 12, 13ம் பக்கம். இது பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு.) எனினும் முகம்மதியர்கள் இந்தப் பகுதியை அதிக காலம் நிலைத்து ஆள முடியவில்லை. விஜய நகரத்தார் தென்னகத்தின் தனிப்பெரும் சக்தியாக நாளடைவில் வலுப்பெற்றுவிட்டனர். எனவே முகம்மதியர்களை தென்னகம் கொண்டுவர பாண்டியர் செய்ததற்குப் பரிகாரமாக ஒரு குறுநில மன்னனான வில்லவராயர் வழித்தோன்றல் ஒருவன் விஜய நகரத்தாருடன் இணைந்து அவர்களை இங்கே கொணர்ந்த சிறப்புப் பெற்றான் என்பதையும் வரலாறு உறுதிப்படுத்தியுள்ளது. தென்னகம் விரும்பிற்றோ இல்லையோ விஜயநகர ராய மன்னர்களும், பிறகு நாயக்க மன்னர்களும் தென்னகத்தில் ஏறத்தாழ 250 ஆண்டுகள் ஆட்சியாளர்களாகத் தொடர்ந்து ஆண்டனர். இந்த வரலாற்று நவீனத்தில், வாசகர்கள் எதிர்பார்க்கும் ரசனை உணர்வைத் திருப்தி செய்ய சகோதரிகளைக் கற்பனையாக உருவாக்கியுள்ளேன். ஏனென்றால் சம்பூவராயருக்கு ஆண் சந்ததியில்லை என்பதுடன், மல்லிநாதருக்குப் பிறகு அந்தப் பரம்பரையினர் படை வீட்டை ஆண்டதற்கு வரலாற்றுப் பூர்வமான உறுதிப்பாடான ஆதாரமும் இல்லையாதலால் அச்சந்ததியின் இறுதிக் கால நிலையை விரித்திட ஒரு ஆசிரியனுக்குள்ள உரிமையை நான் பயன்படுத்திக் கொண்டுள்ளேன் என்பதைத் தவிர இதர கதாபாத்திரங்கள் யாவரும் வரலாற்று தொடர்புள்ளவர்களேயாவர். வழக்கம் போல நல்ல நவீனங்களை நிறைய நிறைய வரவேற்று எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் ஊக்குவிக்கும் வாசக நேயர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன். அன்புள்ள ய. லட்சுமி நாராயணன் |