வில்லவன் தேவி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

4

     வானமே பிளந்து விட்ட மாதிரி அவ்வளவு உயரத்திலிருந்து அதி பயங்கரமாக நீரைக் கொட்டிய அந்த அருவியை ஆவலுடன் இல்லை, பரவசத்துடன் நோக்கினாள் பாவை. இரவு பூராவும் குளிரிலும் பனியிலும் பட்ட அவதியும் சோர்வும் பறந்து போய் அருவியில் திளைத்திடும் ஆர்வம் பொங்கியது அந்த அழகியின் இதயத்தில். சுற்றுச் சூழ்நிலையெல்லாம் மறந்து போய், இயற்கையின் சூழலுக்கு இலக்காகி விட்டாள் அவள்.

     அருவியில் நீராடும் வேகத்தில், ஆர்வத்தில் தன் நிலை மறந்த அவள் அதில் எவ்வளவு நேரம்தான் அப்படித் திளைத்தாளோ அவளுக்கே தெரியாது.

     திடீரென்று எங்கோ ஒரு குரல். அது என்னவென்றே இனம் புரியாத ஒரு ஒலி. நாலா திசையிலும் எதிரொலித்துப் பரவிய அவ்வொலியின் காரணமாகாவா, அல்லது வேறெதனாலோ புரியவில்லை, அவள் மீண்டும் இவ்வுலகுக்கு வந்தாள். சட்டென ஒருமுறை உடலை உதறிவிட்டுக் கொண்டு சுற்று மற்றும் பார்த்தாள்.

     ‘சே! இப்படி ஒரு மெய்மறந்த நிலையா?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு, இல்லை, தன்னையே கோபித்துக் கொண்டு அருவியின் பிடியிலிருந்து விடுபட்டு விலகினாள்.

     “யாரும் இல்லை, யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்...” தானாகவே வெட்கத்துடன் புலம்பியபடி கம்பளிப் போர்வையை எடுத்துச் சுற்றியதும் அது முள்ளைப் போலக் குத்தி அவள் பூப்போன்ற மேனியெங்கிலும் பிடுங்கி யெடுத்தது. வேறொரு இடமாயிருந்தால், ஆடைகளும் இருந்தால் இந்த முள் போர்வையை தூக்கி எறிந்திருப்பாள். பாவம்! மாற்றாடை இல்லையே.

     வானத்தில் சூரியன் முன்னே இருந்த இடத்திலிருந்து எவ்வளவு தொலைவில் நகர்ந்து விட்டான். எப்பொழுது வந்தோம், எப்பொழுது திரும்புகிறோம். அங்கு என்ன நடந்ததோ, என்ன ஆயிற்றோ. கால் நாழிகைதான் அவகாசம் அளித்தார் கிழவர். இப்பொழுது நாலு நாழிகை ஆயிருக்கும் போலிருக்கிறதே. அடக்கடவுளே... பறந்தோடினாள் குகையைக் தேடி!

     “குவா... குவா... குவா... குவா...”

     புவனி நடுங்கி நின்றாள். இல்லை, மகிழ்ச்சி தாங்காமல் மெய்ம்மறந்து நடுங்குகிறாள் போலும். ‘எவ்வளவு தாமதமாக்கி விட்டேன்...’

     “மெதுவா வாம்மா... மெதுவா... நம்ம வீட்டுக்கு முருவன் வந்துட்டான்.”

     புவனி நிமிர்ந்தாள். கிழவர் வில்லவராயர் முகம் எல்லாம் நிம்மதி கலந்த மகிழ்ச்சிக் களையிட்டிருந்தது.

     “தாத்தா...!” என்று ஏதோ சொல்ல நினைத்தவள் முகத்தைத் தன் தளிர்க் கரங்களால் மூடிக் கொண்டு விட்டாள்.

     “நீ ஏனம்மா வெட்கப் படுகிறாய்? உங்கக்காவுக்காக படவேட்டுராஜா திரும்ப வந்துவிட்டார் அம்மா. போய்ப் பார் அந்தத் தெய்வப் பிரசாதத்தை. கடவுள் எத்தனையோ சோதனைக்குப் பிறகுதான் வந்தருளுகிறார் மகளே...”

     “தாத்தா, நான்... தாமதித்து விட்டேன். அக்காவுக்கு?”

     “ஒன்றுமில்லை நிம்மதியுடன் தூங்குகிறாள். முருகன்தான் ஒரேயடியாகக் கத்துகிறான். சின்னம்மாளைக் காணவில்லையே என்று!”

     “நான் ஒரு முட்டாள் தாத்தா. அக்காவைத் தனியாக...”

     “அவள் தனியாக இல்லை மகளே, நெட்டூர் ராணி வந்திருக்கிறாள். நாலு வேடுவப் பெண்கள் வந்திருக்கிறார்கள். தேனும் பாலும் தினைமாவும், பூவும் பழமும் பொருள் யாவும் வந்துவிட்டன அம்மா. படவேட்டார் மாளிகையே இந்தக் குகையில்தான்.”

     “அப்பா, யார் கூட நீங்கள்... ஓ! இவள் தானா நம்ம படவேட்டாரு மகள்! அடி ஆத்தேங்கிறேன். பயமவன் அதான் கண்ணைப் போட்டானோ? சரித்தான்... இந்தாம்மா இப்படி வா. புவனி, புவனின்னு உங்கக்கா கத்திட்டா” என்று ஆதுரக் குரலில் அழைத்தபடி வந்து நின்றவளைப் பார்த்த புவன சுந்தரி அதிர்ச்சி கொண்டு நின்றாள்.

     ‘என்ன உயரம்? எப்படிப்பட்ட தோற்றம்! வீராங்கனை என்று வார்த்தையளவில் வர்ணிப்பதைத்தான் இது வரை கேட்டிருக்கிறாள் அவள். ஆனால் இப்போது உண்மையில் ஒரு வீராங்கனையே அல்லவா வந்து நிற்கிறாள்!’

     தன்னுடைய தாயின் நினைவில்லை அவளுக்கு. சின்னஞ் சிறு வயதிலேயே அவளை இழந்துவிட்டாள். இப்போது குகையின் வாயிலில் நிற்பவள், நல்ல உயரம் மட்டும் இல்லை. நல்ல கறுப்பும் கூட. அழகான உருண்டை முகம். தலைமுடி சற்றே நரைத்திருந்தாலும் நிறையவே இருந்தது; கூரிய கண்கள். ஆம்! இந்தக் கண்களைப் பார்த்தாலே அச்சந் தோன்றுகிறதே.

     “அதென்னடி பெண்ணே! என்னை விழுங்கிடற மாதிரி பார்க்குறே. நான் உங்கம்மா கணக்கா அவ்வளவு நாகரீகமறியாதவதான். ஆனால் மத்ததிலே அவுங்களைப் போலத்தான் நானும். வா இப்படி” என்று இரண்டடி முன்னே வந்து அவளைப் பிடித்ததும் தாவிச் சுருண்டு கொடி போலத் தழுவி அடைக்கலமாகி விட்டாள்!

     “அப்பா! ஆண்டவன் இம்மாதிரி இளங்குருத்துக்களை எல்லாம் ஏன் இவ்வளவு கொடுமைப்படுத்தணும்?” என்று அவர் மகள் சித்தேஸ்வரி கேட்டதும் கிழவர் வில்லவராயர் “இதுதான் அம்மா விதிப்பயன்” என்றார்.

     சட்டெனச் சினமுற்ற அவள், “நீங்கள் என்னப்பா இப்படி பேசறீங்க? இது என்ன செய்தது விதிகிட்டே போயி? இதுகளாலே ஒரு எறும்புக்குக் கூடத் தீம்பு நினைக்க முடியாதேப்பா?”

     புவன சுந்தரி குமுறிக் குமுறி அழுதாள். இதுகாறும் வேறு வழியின்றி அடக்கி வைக்கப்பட்டிருந்த துக்கம் பீறிட்டு அருவியாகப் பாய்ந்து வந்தது அவள் அழகு விழிகளிலிருந்து.

     “அம்மா தாயி, அழுதது போதும். இப்போ உனக்கு துணையா ஒரு ஆம்புளைச் சிங்கம் வந்துட்டான். கண்ணைத் துடைத்துக் கிட்டு வா. இம்...” அவள் கண்களைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்து கரகரவென்று அவளை உள்ளே அழைத்துச் சென்று விட்டாள்.

     “புவனி!” மிகவும் தீனமாக இருந்தது அமரசுந்தரியின் குரல். ஆனால் அதில் பெரும் நிம்மதி. அளவு கடந்த மகிழ்ச்சி அதே சமயம். குழந்தை அருகில் போனாள் புவன சுந்தரி. அது அப்பொழுதுதான் அழுகையை நிறுத்தி விட்டுக் கண்களை முடியிருந்தது.

     “அக்கா, செங்காணியார் அச்சு அப்படியே இருக்கிறது” என்று சொல்லிவிட்டு இரு கைகளையும் களிப்புடன் தட்டினாள். விழித்துக் கொண்டான் பயல். உடனே அழுகையும் துவங்கி விட்டது.

     “இந்தா... இந்தா... அழாதே. நான்...” அது இன்னும் பெரிதாக அழுதது!

     “ஐயோ! இதென்ன ஒரு அழுகுணிப் பயலா இருக்கிறான்...” என்று தவித்துப் போனாள் தங்கை.

     சித்தேசுவரி அக்காளையும் தங்கையையும் குழந்தையையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு “பயல் அப்பன் வரலேன்னு அழுவுரான். குமாரு போயிருக்கிறான். எப்படியாவது...” என்று ஏதோ சொல்வதற்குள் பதறியெழுந்தாள் புவன சுந்தரி.

     “எங்கே போயிருக்கிறார் அவர்?” என்று பாய்ந்தோடி வந்து கேட்டதும் குறும்புக்காரியாகி விட்டாள் முரட்டு சித்தேசுவரி.

     “எவரு... எவுரை நீ விசாரிக்கிறே?”

     “அதுதான் அவர் தாத்தா... செங்காணியார் உலூப்கானிடம். இவரும் போய் அங்கே அவர்களிடம் சிக்கிக் கொண்டால்” என்று துக்கமும் ஏக்கமும் கலந்த குரலில் கேட்டதும் சித்தேசுவரி “இவ யாரைப் பத்தி இம்மா அக்கரையாக் கேக்குற? நான் நம்ம குமாருவைப் பத்திப் பேசினா இவ யாரோ திடுதிப்புன்னு தன்னோடே புருசன் போயிக்கிட்ட மாதிரி...”

     கிழவர் வாய்விட்டுச் சிரித்து விட்டார். சித்தேசுவரியும்தான் குறும்புப் புன்னகையுடன் புவனியை நோக்கியதும் அதிர்ச்சியும் வெட்கமும் அவளை அங்கிருந்து விரட்டிவிட்டது.

     “அப்பா, நீ போய்ச் சொல்லு விளக்கமா. குமாரு கிட்டே அந்தத் துருக்கன் ஜம்பமெல்லாம் சாயாதுன்னு. இவன் சித்தேசுவரியின் வளர்ப்பு விக்ராந்தரின் பேரன், வீராந்தகன் மகன், வில்லவரிலே பெரிய வில்லவன்னு... போங்க” என்றாள்.

     கிழவர் மீண்டும் வாய்விட்டுச் சிரித்து எழுந்தார். அவர் கால்களிலிருந்த, ரணங்களில் ஏதோ பச்சிலை தடவப்பட்டிருந்தது. மெல்ல எழுந்தவர் குகைக்குள் எட்டிப் பார்த்துவிட்டு “மகளே!” என்று கனிவாக அழைத்தார்.

     இதற்குள் அமரசுந்தரி தன் அருகே தங்கையை அழைத்து ஏதோ சொல்ல, அவளும் சித்தேசுவரியண்டை சென்றாள்.

     “இந்தா இதோ புதுச்சேலை. இந்த வர்ணம் குமாருக்கு ரொம்பப் பிடிக்கும் தெரியுமா?” என்று கேட்டதும் அவள் அதை லபக்கென்று வாங்கி “போங்க அத்தை!” என்று பதில் கூறிவிட்டு அப்பால் சென்று விட்டாள்.

     சித்தேசுவரி திடுக்கிட்டவள் போல. “போங்க அத்தையாமே! கெட்டிக்காரியாயிருக்கிறாளே... இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து விரட்டுவாள் என்று நினைச்சேன். இப்பவேல்ல எங்கிட்டே பாணத்தைத் தொடுத்துட்டா...” என்று சொன்னதும் அமரசுந்தரி இலேசாக முறுவலித்தாள்.

     இதற்குள் புத்தாடை அணிந்து கொண்ட புவன சுந்தரி சித்தேசுவரி எதிரே வந்ததும் அவளை விழுங்கி விடுகிற மாதிரி பார்த்தாள்.

     “அடடே! தேவலோகத்து ரம்பை கணக்கா இருக்கிறியே, சேச்சே! என் கண்ணே பட்டுடப் போவது பெண்ணே. இப்படி வா! திருஷ்டி களிச்சுவிடறேன்!” என்று அவளை அன்புடன் இழுத்து இரு கன்னத்திலும் கைவைத்து நெட்டி முறித்துப் பிறகு இறுக அணைத்து அன்பு முத்தங்கள் அளித்ததும், “போங்க அத்தை” என்று அவள் திரும்ப இவள் கன்னத்திலேயே இலேசாக ஒரு தட்டு தட்டிவிட்டு வெளியே ஓடிவிட்டாள்.

     அமரசுந்தரி அருகே வந்து அமர்ந்தாள் சித்தேசுவரி. “மகளே, காலம்தான் என்ன பாடு படுத்துது? பிறகு அதே காலம் நமக்கு என்னனவோ செய்யுது! எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்றே புரியவில்லை. நேற்று வரை மாடமாளிகையும் கூடகோபுரங்களும் மிகுந்த படவேட்டார் கோட்டை தரைமட்டமாவானேன்? நிம்மதியாய் இருந்த அப்பாவி அபலைகளான உங்களை இப்படி விதி தவிக்க வைப்பானேன்? பிறகு தங்க விக்கிரகம் போன்ற ஒரு செல்வத்தை குகையிலே நீ வந்து பெறுவானேன்? எங்கேயோ உல்லாச மாளிகையிலே உப்பரிகையில் சப்ரமஞ்சத்திலே துயில வேண்டிய இந்த ராசாப்பய இங்கே புலித்தோலு மேலே கிடக்கிறான்னா இவனோட அப்பா எங்கேயோ! கடவுளே! இப்படி நம்ம மாதிரி நரமனிசங்க கிட்டேயெல்லாம் விளையாடுறான்னா... நாம என்ன செய்ய முடியும்? அடபோய்யா உங்க கைவரிசையெல்லாம் உங்க மாதிரி கடவுளுக்கிட்டே காட்டாமே நம்மகிட்டே காட்டுரியே, நாயந்தானான்னு கேட்டுட வேண்டியதுதான்” என்று தன் போக்கில் பேசியதும் அமரசுந்தரி வாய்விட்டுச் சிரித்துவிட்டாள்.

     “அடேடே! குருத்தாட்டமே கிடக்கிறவகிட்டே நான் இப்படியெல்லாம் பேசவும் கூடாது. நீயும் இப்படி சிரிக்கக் கூடாது” என்று சொல்லிவிட்டு, “பாவாயி..” என்று ஒரு குரல் கொடுத்ததும் வேட்டுவப் பெண் ஒருத்தி வந்து நின்றாள்.

     “நீங்கள்ளாம் போய் ஏதாவது வவுத்துக்குப் போட்டுவிட்டு மாலையில் வாருங்கள்!” என்று உத்திரவிட்டதும் அவளுடன் வந்த இதர பெண்களும் வணங்கிவிட்டு வெளியேறி விட்டார்கள்.

     “இந்த நிலைலே நீ பயணப்படக் கூடாது. நாளை ஒரு நாளாவது போகணும். எனவே தேவிகாபுரத்தாரு வந்ததும் ராத்திரிக்கு எல்லாவற்றையும் சாக்கிரதையாச் செய்தாகணும். கம்பிலி இன்னும் இங்கேதான் எங்கேயாவது சுத்திகிட்டு இருப்பான். அவனை நம்ப முடியாது.”

     “அப்படியானால் நீங்கள் கூடத் துருக்கர்கள்தான் எங்கள் தந்தையை...”

     “இல்லை மகளே, இல்லவேயில்லை. உலூப்கான் முரடன்தான், பிடிவாதகாரன்தான். ரொம்பப் பெரிவனா அந்த மாலிக்கைக் காட்டிலும் பெரிய ஆசாமியா ஆகணும் என்று பேராசைப்படுபவன்தான். ஆனால் கோழையில்லை. பெண் வெறி பிடித்தவன் இல்லை. படவேட்டரையர் போன்றவர்களிடம் நெறிமுறை தவறி நடக்கக் கூடியவனும் அல்ல.”

     “அப்படியானால் எங்கள் படையினரைக் கைது செய்தது உண்மைதானே?”

     “உண்மையாகத்தான் இருக்கணும். ஆனால் அதன் நோக்கம் என்ன? நாங்க இருபதாயிரம் பேரு, நீங்க இரண்டாயிரம் பேரு. பிடிச்சுட்டோம். சொன்னபடி கேளுங்க. உங்களுடைய ஆளுங்க உங்களுக்கு உதவ முடியாது, புரிகிறதா? அப்படின்னு மிரட்டித்தான் அதைச் செய்திருக்கிறான். இவுரு மிரளவில்லை. போய்விட்டான். அப்பாலே சரண் அடைந்துவிடு என்று எச்சரித்தான். எதிர்த்தா போராடியிருப்பான். இதுதான் நடந்திருக்கும். ஆனால் கம்பிலித்தேவன் அப்படியில்லை. அவன் காமவெறி பிடித்த கயவன். பெண்களைப் போகப் பொருளாக நினைப்பவன். ஒரு விஷப்பாம்பு” என்று கூறிவிட்டுப் பற்களை நறநறவென்று அவள் கடித்ததும் அமரசுந்தரி பயந்துவிட்டாள்.

     ஆனால் சித்தேசுவரியின் முகம் கோரமாக மாறிவிட்டது. “கம்பிலி மனுஷ உருவிலே வந்துள்ள மிருகம். இருபது வருஷத்துக்கு முன்னாலே அவன் எவ்வளவு வெறியனா இருந்தானோ, அதே அளவுக்குத்தான் அவன் இந்த வயசிலேயும் இருக்கிறான். கடவுளுக்கு இந்த மாதிரி ஆளுங்க ஆயுசைக் கெட்டிப்படுத்த தெரியுமே தவிர நல்லவங்களை சீக்கிரமா கொண்டு போயிடறாரு.”

     “அத்தை, நீங்கள் வீணில் பதற வேண்டாம். அவன் கிடக்கிறான். நாம் எச்சரிக்கையாயிருந்து விட்டால் அவன்...”

     “இல்லை, நம்முடைய எச்சரிக்கை நம்மை வேண்டுமானால் காப்பாற்ற முடியும். நம்ம நாட்டிலே இருக்கற அத்தனை அழகிகளையும் நாம காப்பாற்ற முடியுமா?”

     “நீங்கள் என்னதான் சொல்லுகிறீர்கள் அத்தை?”

     “வேறே வழியில்லை. சொல்ல ஆரம்பிச்சதே தவறு. இப்போது சொல்லி முடிக்காம இருப்பது தவறு. மகளே, நானே அவன் கிட்டே பலியாகி இருந்தவள்தான்.”

     “அத்தை!”

     “பதறாமே கேளும்மா! இருபது வருஷத்துக்கு முந்தி இந்த புவனி வயசு. இல்லே இரண்டொன்று கூடவும் இருக்கலாம். கல்யாணம் ஆயிடிச்சு. நானும் என் புருசனும் மறுவீட்டுக்காகப் பயணமானோம். எங்கேயிருந்தோ இந்த கம்பிலி வந்து சேர்ந்தான். நெட்டூர் பத்துக்கல்லு இருக்கும். ஒரு சின்ன ஊரு நாங்க தங்கின இடம். என் புருஷனை எப்படியோ வசியம் பண்ணிட்டான். பிறகு நிலை தெரியாமே கள்ளைக் குடித்துவிட்டாரு. நான் நெடுநேரம் அவருக்காகக் காத்திருந்தவ, அவுரு வந்த நிலைகண்டு தவிச்சுப்புட்டேன். அவுரு உளுந்தாரு படுக்கையிலே தன்னை மறந்து. நான் கீழே ஒரு மூலையில் படுத்தேன். விதியை நினைத்து வருந்தி விட்டுத் தூங்கி விட்டேன். ஏதோ ஒருமாதிரி சத்தம். பக்கத்திலே வந்து நின்னவன் கம்பிலிதான்.”

     “ஐயோ! அப்புறம்...”

     “விரிட்டுன்னு எழுந்த என் தோளைப் பிடிச்சான் பேய் மகன்.”

     “ஐயையோ!”

     “இப்படி அளுதா முடியுமா? எப்படி நடந்ததோ தெரியாது. என் பலத்தையெல்லாம் சேத்து அவன் மார்பிலே தலையாலே ஒரு முட்டு முட்டினேன். ‘உம்...’ என்று மூச்சுவிட்டு அப்பாலே போயி விழுந்து விட்டான். அந்த அறையிலே கடப்பாறை, கோடாலி எல்லாமே கிடந்தது. கீழே கிடந்த அவன் எழுந்திருப்பதற்குள் நான் என் கையில் கிடைத்த மண்வெட்டியாலேயே என்னையும் மிஞ்சிய வேகத்துடன் தாக்கினேன். ‘ஐயோ! செத்தேன்...’ என்றான். ரத்தம் அவன் முகமெல்லாம். திரும்பவும் போட்டேன் ஒரு போடு. காலிலே வந்து விழுந்தான். இதுக்குள்ளே எம் புருஷன் கட்டிலில் இருந்து எழுந்து மலர மலர விழித்தாரு. பிறகு ‘அடப்பாவி!’ன்னாரு. தடதடன்னு ஐந்தாரு ஆட்கள் வந்தாங்க. எல்லாரும் அவன் ஆட்கள்!

     “கீழே கிடந்த கம்பிலி மேலேயெல்லாம் ரத்தம். என் கால் எல்லாம், சேலையெல்லாம் ஒரே ரத்தம். என்ன நினைத்தார்களோ என்னவோ, சட்டென்று அவர்கள் அவனைத் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். என் கையிலிருந்த மண்வெட்டி இன்னும் இறங்கவில்லை. ‘ஐயோ! என்னை ஒண்ணும் செய்யாதே! இனி என் சென்மத்துக்கும் குடிக்கமாட்டேன்’னாரு எம் புருசன்.

     “சிரிச்சேன்... காளி மாதிரி பேய் சிரிப்பு சிரிச்சேன். ஏன் மகளே பயமாயிருக்குதா?” என்று குரலைத் தணித்துக் கேட்டதும் இதுவரை தன்னையும் மறந்து அவள் விளக்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்த அமரசுந்தரி “ஆ! என்ன... என்ன அத்தை... எங்கே அந்தப் பாவி?” என்று உளறியதும் சித்தேஸ்வரி வாய்விட்டுச் சிரித்துவிட்டாள்.

     “இந்தா பொண்ணே! நடந்ததைக் கேட்டதுமே இப்படி பயந்துட்டியே. இதற்கெல்லாம் இப்படிப் பயந்தா நாம எப்படிம்மா இந்த நாட்டிலே வாழ முடியும்? உங்க படவேடும் சரி, எங்க நெட்டூரும் சரி, ஏன் செங்கம், புத்தூரு எல்லாமே மலையோரத்திலுள்ள ராஜ்யங்கள்தான். காடுகளுக்குப் பஞ்சமில்லை. புலி, கரடிக்கும் குறைவில்லை. ஆனால் மான்களும், மயிலுகளும் இல்லாம இருக்குதா? நாமும் தைரியாமத்தான் இருந்தாகணும். புரியுதா?” என்று கேட்டுவிட்டு குழந்தையை அவளிடமிருந்து வாங்கி படுக்க விட்டாள்.

     “அத்தை! உங்க கதையைக் கேட்டதிலேயிருந்து எனக்கு ஒரே யோசனைதான் ஏற்படுது. ஆனால் உங்கள் கணவர் எப்படி விட்டார் அந்தக் கிராதகனை என்பதும் அடுத்தாற் போலத் தோன்றாமலில்லை.”

     “அங்கேதான் நாம்ம தப்புப் பண்ணிப்புடறோம்! நான் ஒரு பெரிய தப்புப் பண்ணிட்டேன். அவரு மயக்கம் தெளிஞ்சதும் நடந்ததைச் சொல்லிட்டேன். சிறிசுதானே! தெரியாமே குமுறிக் குமுறி அழுதுக்கிட்டே சொல்லிப்புட்டேன். அதனாலே அன்னையிலேயிருந்து இன்னைக்கு வரை நான் அளுதுக்கிட்டிருக்கும்படி ஆயிடிச்சு.”

     “என்ன அத்தை சொல்லுறீங்க?”

     “அவுரு அன்னைக்கே கம்பிலியை தெரித்திக்கிட்டு கிளம்பிட்டாரு! அன்னைக்குப் புறப்பட்டவரு, போவாரு, வருவாரு. நிலையில்லை. ஆனா ஒரு நாளு திரும்பினாரு... உயிரிழந்த பிரேதமாய்...”

     “அடப்பாவித் தெய்வமே!”

     “தெய்வத்தைத் திட்டி என்னம்மா லாபம்? நாம் நம்ம தலையிலே எழுதியுள்ள விதிப்படிதானே ஆடணும்?”

     “அத்தை, நீங்கள் சற்று முன்னே தெய்வம் ஏன் இந்த மனுசங்க கிட்டே கொடுமையா நடக்கணும், தெய்வத்துக் கிட்டேயே தெய்வம் கைவரிசையைக் காட்டக் கூடாதான்னு கேட்டீங்க!” என்று அமரசுந்தரி வேகமாகச் சொன்னதும் சித்தேசுவரி சிரித்துக் கொண்டே “நீ என்ன இவ்வளவு அப்பாவியாய் இருக்கே! சும்மா ஒரு பேச்சுக்கு அப்படிச் சொன்னா... நாமல்லாம் தெய்வத்துக்கிட்டே போட்டி போட முடியுமா?” என்று திரும்பக் கேட்டாள்.

     “இல்லே அத்தை! சில சமயம் எனக்கு என்ன தோணுது தெரியுமா?”

     “சொல்லு!”

     “நம்ம கையாலாகாத்தனத்தை மறைக்க தெய்வத்து மேலே குத்தம் சொல்லித் தப்பிச்சுக்கிடப் பார்க்கிறோம்!”

     “அதுவும் சரிதான் மகளே. ஆனால் எல்லாருமே அப்படியில்லை. என் புருஷன் மேலே நான் பின்னாலே குத்தம் சொல்ல எதுவுமில்லே. ஏன்னா அவரு புலி வேட்டை ஆடற மாதிரி அந்தக் கம்பிலியைத் தேடினாரு. அவன் பதுங்கிட்டான் எங்கேயோ! அவனைக் கொல்லாமே வீடு திரும்ப முடியாது என்று இவரு ஆணை போட்டாரு. ஆனால் இவுரு இந்த ஆணையை நிறைவேற்ற ஒரு பெரிய தவறு செய்தாரு. கம்பிலித் தேவனுடைய நாட்டுக்கே போயிட்டாரு. பிறகென்ன... அவன் தன் கையாளுகளை விட்டு இவரைக் கொன்று போட்டுட்டான்.”

     “அத்தை, எங்களை எல்லாம் காட்டிலும் நீங்கள் மகா துரதிருஷ்டசாலிதான். உங்க இளமை பாழ், மகிழ்ச்சி பாழ், வாழ்வே பாழாகி விட்டதே!”

     “இதுதான் வாழ்க்கை மகளே... நாம எப்ப மனுசங்களாப் பிறந்துட்டமோ அப்பவே இதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும்.”

     “உங்கள் வாழ்க்கையே ஒரு பெரிய பாரதமாகிவிட்டதே அத்தை!”

     “ஆமாம்! நீ சொன்னது சரிதான். ஆனால் நான் துரோபதை ஆகவில்லை. உங்க படவேட்டம்மா இருக்குறாளே ரேணுகாம்பான்னு பேரோட, அவள் துர்க்காதேவி, மாரியாத்தா, காளிகாதேவி. ஆமாம் நானும் ஒரு காளிகா தேவியாயிட்டேன். இந்தப் பக்கத்திலே என் பேரைக் கேட்டாலே நடுங்கும்படி அவ்வளவு பயங்கரமானவளா மாறிட்டேன்.”

     “எங்கப்பா அடிக்கடி புலி வேட்டை ஆடற வீராத்தாள் என்று..”

     “என்னைத்தான் அப்படிச் சொல்லுவாங்க...”

     “உண்மையாகவா?”

     “ஆமாம் மகளே. நான் புலி வேட்டையாடுவேன். ஏன் சிங்கமின்னா கூடப் பயப்படமாட்டேன். இந்தப் பக்கத்துக் காடுகளில் வசிக்கும் மக்கள் எல்லாம் என்னை பத்ரகாளின்னு கும்பிடக் கூடச் செய்வாங்க. ஏன்னா அவுங்க ஆடு மாடுகள், குழந்தை குட்டிகளை யெல்லாம் புலிகள் அடிச்சி அழிக்குதில்லே. அவைகளை நான் வேட்டையாடிக் கொன்றால்... தேவிகாபுரம் தானப்பரும் இப்படித்தான். ஏன்? உம் புருஷன் செங்காணியார் கூட சிங்க வேட்டையிலே தேர்ந்தவர். எங்க அண்ணன் கிட்டே பயிற்சி பெற்றவர் அவர். எங்க அண்ணன் வீராந்தக வில்லவரையர் மிருகங்களுக்கெல்லாம் ராஜாதிராஜனைத் தனக்கே அடிமைப் படுத்தி விட்டவர் மகளே. இந்த நாட்டிலே அவருக்கு ஈடு அவருதான்...”

     “அப்படிப்பட்ட மாவீரர்களைப் படைக்கிற கடவுள் ஏன் இம்மாதிரி கம்பிலிகளையும் படைக்கிறார்?”

     “இது நல்ல கேள்விதான். ஆனால் அவரைத்தான் கேட்கனும் மகளே” என்று அவள் கூறும் போது வீராந்தகர் குகை வாயிலில் வந்து நின்றார். அவள் சொன்ன பதில் அவர் காதிலும் விழுந்தது.

     “அது பிரயோசனமில்லை சித்தம்மா...” என்றார் அவர்.

     “ஏன் அப்பா?” என்று கேட்டுக் கொண்டே அவள் எழுந்து வாயில் அண்டை வந்தாள்.

     “கடவுளிடம் நாம் போய்க் கேட்க முடியுமா என்பது வேறு விஷயம். ஆனால் அப்படிப் போய்க் கேட்டால் அவர் நீ பேசத் தெரிந்த பிராணி. ஆதலால் கேட்க வந்தாய். புலி கேட்கிறதா ஏன் மானைப் படைத்தாய் என்று? அல்லது மான்தான் கேட்கிறதா? இல்லையே... காலில் மிதிபடும் எறும்புகள் தன்னை மிதித்துக் கொல்லும் மனிதனை ஏன் படைத்தாய் என்று கேட்கிறதா? என்று திரும்பக் கேட்பார் அல்லவா?” என்று இலேசாகச் சிரித்துக் கொண்டே கேட்டதும், “அது சரிப்பா, அந்தக் கடவுள் விஷயம் ரொம்ப சிக்கல். நீங்க உலகத்துக்கு வாங்க. எங்கே உங்க கூட வந்த அந்தப் பெண் புவன சுந்தரி?”

     “அவளா? அருவியின் அழகைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருக்கிறாள். தானாகவே சிரிக்கிறாள். ஆனால் உங்கண்ணன் மவன் ஏன் இன்னும் திரும்பவில்லை? என்று நாலைந்து தடவைகள் கேட்டு விட்டாள் அவள்” என்று கூறியதும், “சரிதான், பிடிச்சுதா பைத்தியம்?” என்று பதில் சொல்லிச் சிரித்ததும் குகைக்குள்ளேயிருந்த அமரசுந்தரியும் புன்னகை புரிந்தாள்.