உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
வில்லவன் தேவி(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 9 வீரபல்லாளராயரும் இதர பெருந்தலைவர்களும் செங்கம் நோக்கிப் புறப்பட்ட அணியில் இருந்தாலும், அவர் மனதில் ஏனோ தெரியவில்லை கொஞ்சம் கொஞ்சமாக சின வேகமும் உற்சாக பரபரப்பும் குறைந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அவருக்குத் தன் அமைச்சர் பக்கத்திலில்லாதிருந்தது மனதை வெகுவாகப் பாதித்தது. ‘உலூப்கானையும் அவனுடைய வீரர்களையும் தேடித்தான் போகிறோம். அவன் படைகளில் பெரும்பகுதி திருச்சிக்குப் போயிருக்கும். மிகுதியுடன்தான் அவன் இங்கு இருக்க முடியும். எனினும் படவேட்டரைய குல நாசச் செய்தி காட்டுத் தீயை விட அதிவேகமாகப் பரவிவிடும். எனவே அவன் எங்கு ஒளிந்திருந்தாலும் நம்மவர்கள் அதாவது தென்னகத்தார் விடமாட்டார்கள். சோழ பாண்டியர்கள் இன்று ஒடுங்கிவிட்டதென்னவோ உண்மைதான். ஆனால் தென்னகத்தின் நெடுநாளைய தமிழ் மறக்குலங்களான முத்தரையர், வேட்டரையர், விழுப்பரையரெல்லாம் அன்றும் ஒடுங்கி கிடக்கவில்லை. தொண்டைமான் அண்மைக் காலத்தில் வலுவாகி விட்டனர். படவேட்டார் விவரம் இது காறும் எட்டாமலிராது. விழுப்பரையர்களுடன் சம்பந்தம் செய்துள்ள நாட்டறம்பள்ளியார் படவேட்டு ரேணுகாம்பாளம்மனைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள். அக்கோயிலின் பரம்பரை அறங்காவலர்களான சம்பூவராயர்களைத் தெய்வமாக நினைப்பவர்கள். வில்லியனூரார் நெட்டூரில் சம்பந்தமுள்ளவர். எனவே வில்லியனூரார் தங்கள் நலம் கருதி ஓடுவதற்குப் பதில் திருப்பித் தாக்கிப் பழி வாங்கத் தயங்க மாட்டார்கள். செங்காணியோ சம்பூவராயரின் மறுமகப்பிள்ளை. எனவே நம்மைவிட நம்முடன் உள்ள இந்தப் பெருந்தலைகளை யெல்லாம் விட, அதிகம் மனதில் ஆத்திரமும் வஞ்சந்தீர்க்கும் வெறியும் கொள்ளும் உரிமையுள்ளவர்கள் இவர்கள்தானே. தவிர அண்மைக் காலம் வரை வில்லவராயர்கள், தேவிகாபுரம்...’ என்று பல்லாளர் நினைத்ததும் ஒரு மின்வெட்டுப் போலச் சட்டென அவர் மனதில் தானப்பர் வந்து நின்றார். அருகேயிருந்த திம்மப்பனையும், இக்கேரியையும், தத்தனையும் மிக அருகே அழைத்தார். “திம்மப்பரே! எவர் கண்களில் அவன் மண்ணைத் தூவி மறைந்தாலும் நம்முடைய தேவிகாபுரம் தானப்பத்தேவரிடமிருந்து தப்ப முடியாதல்லவா?” என்று கேட்டதும் அவரும் விழிப்புற்றவர் போல “ஆம்... ஆம்! நம்முடைய அவசரத்தில் நாம் அவரிடம் ஒரு ஆளை அனுப்ப மறந்து விட்டோம்!” என்றார். இக்கேரி “எதற்கு ஆள்! நாம் இப்போது தேவிகாபுர எல்லையில்தானே இருக்கிறோம்?” என்று கூறிவிட்டு ஒரு குன்றினை சுட்டிக் காட்டியதும் அத்தனை பேர்களுடைய பார்வையும் அந்தப் பக்கம் திரும்பின. அங்கே பல நூறு வேடுவர்கள் தங்களுக்கே உரித்தான ஆடையணிகளுடன் கைகளில் வில், ஏந்தி உஷாராக நின்றிருப்பதைக் கண்டதும். “ஓ! நாம் அன்னியர்கள் என்ற நினைவில் அவர்கள் நிற்கிறார்கள் போலும். எனவே நம்மில் நாலைந்து பேர் மட்டும் வெள்ளைக் கொடியுடன் சென்று விளக்குவோம்” என்றார் பல்லாளர். ஆனால் இன்னொரு குன்றின் மீதும் சட்டென்று சில நூறு பேர் இதே மாதிரி வந்து நின்றதும், இந்த ஆயிரக்கணகான வீரர்களைக் கொண்ட படையணிகள் மேலே நகராமல் நின்றனர். வேட்டைக்காரர்களின் அம்புகளில் விஷம் தடப்பட்டிருக்கும்! “பல்லாளரே! நீங்கள்தான் இப்போது எங்கள் தலைவர். எனவே நீங்களும் திம்மப்பரும் மட்டும்...” என்று கூறி முடிப்பதற்குள் “அதுதான் நல்லது. இல்லாவிட்டால் நாமும் நமது புரவிகளும் சில நொடிகளில் பிணமாய் கிடப்போம். பதற்றம் இப்பொழுது பேராபத்து. வேடுவர்கள் சிறிதும் ஆலசியம் செய்பவர்கள் அல்ல” என்றான் தத்தன். பயங்கர உருவினனான இக்கேரிக்கு உடம்பெல்லாம் ஒரு முறை நடுங்கியது. பொழுது புலரும் நேரம். இரவு முழுமையும் நாலா திசையிலும் தேடி ஓடி அவதியுற்ற வீரர்கள் இந்தத் தடையை வரவேற்றனர். பிறகு தங்கள் குதிரைகளிலிருந்து இறங்கி விட்டனர். பல்லாளர் வேடர்களுடன் பேசித் திரும்பும் வரையிலாவது ஓய்வு பெறுவோம் என்றெண்ணி அவர்களில் பலர் தரையில் அப்பாடி என்று அமர்ந்து விட்டனர்! வீரபல்லாளருக்குக்கூட உள்ளூரப் பயம்தான். ‘தேவிகாபுரம் நாலாபக்கத்திலும் குன்றுகளால் சூழப்பட்ட பகுதி. அங்கு செல்ல ஒரே இடத்தில்தான் பெரியவழி உண்டு. அந்த வழியிலும் எப்போதும் காவலுண்டு. தவிர தேவிகாபுரத்தை அடுத்து மூன்று பக்கங்களிலும் பெரும் காடுகள். அந்தக் காடுகளில் உள்ள பயங்கர மிருகங்களை வேட்டையாடும் வீர இனத்தவரான வில்லவரையர்கள் தாங்கள் உண்டு தங்கள் நாடு உண்டு என்று எப்பவுமே ஒதுங்கியிருப்பர். மீறி எவராவது புகுந்தால், அந்தப் பயங்கர மிருகங்களின் கதிதான் இவர்களுக்கும். வேடுவர்கள் நண்பர்களுக்காக தம் உயிரையே இழக்கத் தயாராயிருப்பர். தேவிகாபுரத்துத் தானப்பதேவர் படவேட்டு ராச்சியத்தின் சம்பூவராயருக்கு இன்று நேற்றல்ல, பிறந்த நாள் தொட்டு நண்பர்கள். வீராந்தக வில்லவரையரின் ரத்தபாச நண்பர் தானப்பன். எனவே நாம் எச்சரிக்கையாகவே செல்ல வேண்டும்’ என்று எண்ணியபடி முன்னே குதிரையை ஓட்டினார். திம்மப்பரோ ‘இனி நாம் துருக்கரைப் பழி வாங்க வந்து நாமே விஷக்கணைக்குப் பலியாகி விடக் கூடாதே’ என்று பயந்தபடி அவர் பின்னே அச்சத்துடன் தயங்கித் தயங்கிக் குதிரையை நடத்தினார். வேடுவர்களின் மூத்த தலைவனான முத்தப்பன் மலையடிவாரத்துக்கு வந்து நின்றான். இவர்களை அருகில் எதிர்பார்ப்பவன் போல... அவன் புரவி மீதமர்ந்து எச்சரிக்கையாக இருந்த நிலையே எடுப்பாக இருந்தது. பல்லாளர் அவன் அருகில் சென்றதும் குதிரையிலிருந்து இறங்கித் தம் கரங்களை வேடர்களுக்கே உரிய பாணியில் முஷ்டிபிடித்து வணக்கம் தெரிவித்ததும் முத்தப்பன் முக மலர்ச்சியுடன் நாலடி முன்னே வந்து மிகவும் பணிவாக வணங்கி “வருக, பல்லாளரே வருக!” என்று அடக்கக் குரலில் வரவேற்றான். “மூத்தப்பா, நலம்தானே?” என்று கேட்டுவிட்டு “நான் தானப்பரை பார்க்க வேண்டும்” என்றார். “தெரியும். நடுநிசியில் இங்கு உங்கள் அமைச்சரும், சோழகரும் வந்திருந்தனர். இப்பொழுது அவர்கள் எங்கள் தலைவருடன் இருக்கிறார்கள். நீங்கள்...” “என்ன? எங்கள் பெத்தண்ணா இங்கே வந்தாரா?” என்று திடுக்கிட்ட குரலில் வியப்புடன் கேட்டதும், “ஆம் பல்லாளரே. உங்களுக்கு மறுப்பில்லையென்றால் உங்களையும் எங்கள் தலைவரிடம்...” “உடனே செல்லலாம் முத்தப்பா!” என்று கூறிவிட்டுச் சட்டெனக் குதிரை மீது ஏறினார். திம்மப்பர் திடுக்கிட்டார் என்றாலும் பல்லாளரைத் தொடருவதைத் தவிர வேறு வழி இல்லையே அவருக்கு! முத்தப்பன் தன் குதிரையை மேற்கு நோக்கித் தட்டிவிட்டதும் மறுபேச்சு பேசாது இருவரும் அவன் பின்னே சென்றார்கள். ஆனால் இவர்கள் இரண்டு மூன்று கல் போனதும் எதிரே மூவர் வருவதைக் கண்ட முத்தப்பன் “பல்லாளரே, அவர்களே அதோ வந்துவிட்டனர்!” என்று அறிவித்துச் சட்டெனத் தன் குதிரை மீதிருந்து இறங்கி விட்டான். வீரபல்லாளர், திம்மப்பர் இருவரும் ‘இதுவும் ஒரு நன்மைக்குத்தான். தாங்கள் இதரர்களிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்ததாலும், ஏன் இவர்கள் மட்டும் போனார்கள் என்ற பரபரப்பில் பின்னால் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தால் வேடுவர்கள் குறுக்கிட்டு நிறுத்தி அதன் காரணமாக புதிய விளைவு ஏற்பட்டால்...’ எனவே அவர்களும் இறங்கினார்கள். ஆனால் அருகே வந்தவர்களில் வேட்டைக்காரர் மட்டுமில்லை, தமது பிரதம அமைச்சர் பெத்தண்ணாவும், சோழகரும் வந்ததைக் கண்டு திடுக்கிட்டார். ‘இதென்ன விந்தை! இவர்கள் எங்கே போனார்கள் தானப்பரிடம்?’ பெத்தண்ணா தம் அரசரை வணங்கினார். வேட்டைக்காரன் வணக்கத்துக்கு பதில் வணக்கம் அளித்த பல்லாளர் “எங்கே என்னுடைய மந்திரி திடீரென்று உங்களிடம் வந்தார் தானப்பரே? எல்லாமே புதிர் போல இருக்கிறதே!” என்று பரபரத்தார். “அவர்கள் என்னிடம் வந்திராவிட்டால் மற்றும் ஒரு பெரும் கொடுமை, அநீதியான செயல் ஒன்றை நீங்களும் மற்றவர்களும் புரிந்திருக்கும்படி சந்தர்ப்பம் செய்திருக்கும் பல்லாளரே” என்றார் தானப்பர். “அநீதியான கொடுமையா? நானா?” “நீங்கள் மட்டுமில்லை. உங்களை முன்னிட்டுக் கொண்டு வந்துள்ள இந்தப் பகுதியின் பல பெருந்தலைகள்.” “நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தானப்பரே?” “நாங்கள் சிவபிரான் குலவழி வந்தவர்கள். கண்ணப்பரும், நம்பிராறரும், கந்தனும், கடம்பனும் எங்கள் மூதாதைகள் பல்லாளரே.” “நான் அதை மறுக்கவில்லை, ஆனால் என் அமைச்சர், சோழகர் இருவரும் ஒன்றும் பேசாமல்...” “அவர்கள் பிறகு பேசுவர் பல்லாளரே. இப்பொழுது குலவழி மூதாதை பற்றி ஏன் கூறினேன் தெரியுமா?” “தெரியவில்லை.” “நாங்கள் நெறி பிறழாத உண்மை ஒன்றைத்தான் பேச முடியும்.” “இது உலகறிந்த உண்மை.” “எனவே நான் உண்மையைச் சொல்லுகிறேன். உலூப்கான் சம்பூவராயரை அழித்திடவில்லை. மாளிகையை எரிக்கவில்லை. அவர் பெண்களை கொல்லவில்லை.” “என்ன?” என்று ஒரு ஆவேசமான குரலில் பல்லாளர் இரண்டடி முன்னே வந்து இரைந்து கேட்டதும் “ஆமாம் பல்லாளரே! இதுதான் உண்மை. சம்பூவராயரைக் கொன்றவன், தீ வைத்து நாசம் செய்துவிட்ட கொடுமையைப் புரிந்த கயவன் வேறு ஒருவன்.” “அது பிறகு. இந்த கொடுமையை உலூப்கான் செய்யவில்லை என்று நீங்கள் உறுதிபடக் கூறுவதை நான் ஏற்கிறேன். ஆனால்...” “நான் சொல்வது முழு உண்மை என்பதை பூசாரி பொன்னப்பர் உறுதிபடுத்துவார்” என்று கூறியதும் திடுக்கிட்டார் பல்லாளர். “அப்படியானால்... உலூப்கான் மீது வர்மம் கொண்டவர்கள்தான்...” “தானப்பரே, நாங்கள் சில நாழிகைகளுக்கு முன்னர் பூசாரியைச் சந்தித்தோம். அப்போது அவர் எதுவும் கூறவில்லை” என்று திம்மப்பர் தயக்கத்துடன் கூறினார். “அவருக்குச் சந்தர்ப்பம் இல்லை. தவிர அனைவரும் ஆத்திர உணர்ச்சியில் இருக்கும் நேரம். காலமானவருக்கு அந்திமக்கிரியைகளைச் செய்வது தலையாய கடமை. எனவே பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் கூறலாம் என்று இருந்திருப்பார்” என்று கூறினார் மந்திரியார்! பல்லாளர் பதறிவிட்டார். ‘அமைச்சரும் தானப்பரை ஆதரிக்கிறாரே!’ “நாங்கள் ஆயிரமாயிரம் பேர் கூடி பழிக்குப் பழி வாங்கப் புறப்பட்டிருப்பது அறிந்தும் அவர் உண்மையைக் கூறத் தயங்கினார் என்றால்...” என்று கூறிவிட்டுத் திம்மப்பர் மேலேதான் சொல்ல வந்ததைக் கூறாமல் வேட்டைக்காரரைப் பார்த்தார்! அவர் உடல் ஒரு தரம் நடுங்கிவிட்டது. ‘தம்மை ஏன் இப்படிப் பார்க்கிறார் தானப்பர்! யார் எப்படிப் போனால் என்ன? இந்த பல்லாளரை மிரட்ட வந்த இக்கேரி தன்னை இங்கு சிக்க விட்டுவிட்டு எங்கேயோ கிடக்கிறானே பாவி!’ என்று குமுறினார் அவர். ஆனால் வேட்டைக்காரர் அவரைப் பார்த்த பார்வையில் பயங்கரம் மட்டுமில்லை, ஏளனமும் இருந்தது. “திம்மப்பரே, செத்தவனுக்கு எடுக்க வேண்டிய இழவைவிட்டு இருப்பவனுக்கு இழவு காணப் புறப்படும் பேர்வழிகள் தென்னகத்தில் பெருகிவிட்டார்கள். பரவாயில்லை. உங்கள் நண்பர்களைச் சந்திக்க நான் மட்டுமில்லை, பூசாரி பொன்னப்பரும், ஏகாந்த வில்லவராயரும் இன்று மதியத்துக்குள் வருகிறோம். சரிதானா?” என்று கேட்டதும் அவர் நாடி தளர்ந்து போய் “ஐயா, வேட்டைக்காரரே! நான் உங்களைச் சந்தேகித்துப் பேசவில்லை. ஆனால் கூடியுள்ள குறுநில மன்னர்கள் எல்லாம் உலூப்கான்தான் இந்த அக்கிரமத்தைச் செய்திருப்பதாகக் கருதுகிறார்கள். ஏனென்றால் இங்கு அவருக்கு வேறு எதிரிகள் இல்லை. ஆனால் நீங்கள் மூவரும் வந்து சொல்லும் போது அது உண்மையைத் தவிர வேறு எதுவுமாக இருக்க முடியாது!” என்றார் மிரண்டு போய்விட்ட தோரணையில். பல்லாளர் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. தமது மந்திரியை உற்றுப் பார்த்தார். பெத்தண்ணா எதுவுமே பேசவில்லை. “நான்தான் அவருக்கு இறுதிக் கடனைச் செய்தேன்!” என்றார் பல்லாளர். “ஒரு உன்னதமான ஜீவனுக்கு நீங்கள் இத்தகைய கடன் ஆற்றியது உங்களுக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் பல்லாளரே!” என்றார் பெத்தண்ணா. பல்லாளர் மீண்டும் திடுக்கிட்டார். சரி, தமது இப்போதைய நடவடிக்கையைத் தாம் ஆதரிக்கவில்லை என்பதை மறைமுகமாக அறிவித்துவிட்டார் மந்திரி என்பதையும் ஊகித்துக் கொண்டார். தம்மைச் சுற்றி இப்போதிருப்பவர்கள் எத்தகையவர் என்பதைப் பல்லாளர் அறியாதவர் அல்ல. நேற்று வரை தன்னை எதிர்த்தவர்கள். துவாரசமுத்திரத்தில் தமது ஒய்சள குலம் நிலைத்து ஆள முடியாது திருவண்ணாமலைக்குத் தாம் ஓடிவர நேரிட்ட காலையில் எதிர்த்தவர்கள். தன் நாட்டு மக்கள் நாசமாகக் கூடாது என்ற எண்ணத்தில் உலூப்கானுடன் போரிடாமல் ஒத்துப்போனதை விரும்பாதவர்கள். திடீரென்று சம்பூவரையரிடம் பக்தி கொண்டுவிட்டார்களா என்றால் இல்லை. இந்தப் பல்லாளன் நான் இதிலெல்லாம் தலையிடமாட்டேன். ஏனென்றால், உலூப்கானின் நண்பன் என்று கூறுவான். உடனே திருவண்ணாமலையில் போசளர் நிலைப்பதை எதிர்த்து மக்களை எதிர்த்து இயன்றவரை நாசம் விளைவிக்கலாம் என்று வந்தவர்கள்தான் என்பதை அவர் அறியாமலில்லை. ஆனால் சம்பூவரையர் பல்லாளரின் நீண்ட கால நண்பர் மட்டுமல்ல. நேர்மையே உருவான நியாயவானும் கூட. எனவே... “சரி! வேட்டைக்காரரே, நான் என்னுடைய நண்பர்களுடன் அதோ உள்ள அந்த சாத்தனேரிப் பகுதியில் முகாமிட்டுள்ளேன். நீங்கள் வரும் போது...” “மதியம் வருகிறேன் பல்லாளரே. உங்கள் மந்திரியாரும் சோழகரும் உங்களுடன் திரும்புகிறார்கள்” என்று கூறிவிட்டு அவர்களுக்கு விடை கொடுத்துவிட்டுத் தன் தோழன் முத்தப்பருடன் தேவிகாபுரத்துக்குப் போய்விட்டார் தானப்பர். பல்லாளர் தமது அமைச்சருடன் முன்னே செல்ல சோழகர் திம்மப்பருடன் பின்னர் மெதுவாகவே வந்தார். அவர் மனதில் நேற்று இருந்த தீவிரம் இல்லை, வேகமும் இல்லை. தவிர இப்போது வேட்டைக்காரர் சொல்லுவதைப் பார்த்தால் சோழகர் பல்லாளரை நூற்றுக்கு நூறு ஆதரிப்பவர் அல்ல. காலஞ்சென்ற படவேட்டரையர் போலப் பல்லாளர் உலூப்புடன் சமரசமாகப் போவதை எதிர்த்தவர். என்றாலும் தம்மைப் போல வம்பு வேண்டாம் தற்போது இந்த நிலையில் என்று ஒதுங்கி நின்றவர். எனவே சோழகரை நம்பலாம் என்ற முடிவுடன் “சோழகரே, வேட்டைக்காரர் சொற்படி பார்த்தால்...” என்று மேலே பேசாமல் நிறுத்தினார். சோழகரும் நிதானமாக, “திம்மப்பரே, நாம் உணர்ச்சிவசப்படும் போது நிதானித்தும் சிந்திக்க முடிவதில்லை. நேற்று நமக்கெல்லாம் ஒரே ஆத்திரம். ஆதலால் ஆவேசத்தில் நம்மை மறந்தோம். இன்று அப்படியில்லை, நாம் உண்மையை அறிந்ததும் தவித்துத் திணறுகிறோம்” என்றார். “அப்படியானால் நீங்கள்?” “வேட்டைக்காரர் பெயர் சொல்லத் தேவையுமில்ல. சொல்லவும்மாட்டார். வில்லவராயர் எண்பது தாண்டியவர். எனவே நேற்று வரை நேர்மையே உருவாக இருந்து இந்தத் தென்னகத்தை வடக்கத்தி துருக்கர்களின் பிடிக்கு இலக்காகாமல் தடுத்துக் காத்த தீரரான அவர் இப்போது மட்டும் பொய் சொல்லுவாரா?” திம்மப்பர் திணறினார். என்ன சொல்ல முடியும்? “அப்படியானால் கம்பிலித்தேவன் துங்கபத்திரையிலிருந்து இங்கு வந்து தாக்கினான், தீவைத்தான், கொன்றான், கொடுமை புரிந்தான் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?” என்று நயமாகவும் சற்றே கேலி கலந்த முறையிலும் கேட்டதும், “இல்லை திம்மப்பரே. ஆந்திர பூமியைச் சேர்ந்த நீங்கள் கம்பிலியை நன்கு அறிவீர்கள் அல்லவா?” “நான் இருபது ஆண்டுகளுக்கு மேலாகக் கம்பிலியை அறிந்தவன். பிறகு சொல்லுகிறேன் என் கருத்தை. நீங்கள் கூறுங்கள். சில காலத்துக்கு முன்னர் கம்பிலித்தேவராயர் பல்லாளரிடம் வந்தார் என்பதும் வடக்கேயிருந்து வெள்ளமாகப் பெருகி வரும் துருக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்க நாம் ஒன்றுபடுவோம் என்றார் என்பதும், இவர் மறுத்தார் என்பதும் நம் அனைவருக்குமே தெரியும்.” “தெரியும் என்பது உண்மைதான். ஆனால் மாலிக்காபூர் தென்னகத்தில் முதல் முறை படையெடுத்து வந்த போதே யாதவராயரும், காகதீயரும், தேவகிரியாரும், ஒய்சளரும் ஒன்றுபடுவோம், காபூரை விரட்டுவோம் என்ற போது கம்பிலித்தேவர் ஒத்து வரவில்லை என்பதும் நாம் அறிந்ததே!” என்றார் நிதானமாக. திம்மப்பர் சிறிது பேசாதிருந்துவிட்டு “மாற்றான் வலுவுடன் வருகிறான். குஜராத் தோற்றுவிட்டது. யாதவராய ராமச்சந்திரதேவர் அதிக காலம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனவே மாலிக்கைத் திருப்பித் தாக்க வலுவான படைகள் வேண்டும் என்று முடிவு செய்தார். காகதீய பிரதாபருத்திரன் ஏன் தோற்றான் காபூரிடம்? தேவரிடமிருந்து பெற்ற படைகளும் பொருள்களும் கொடுத்த வலுவினால்தான். அதேபோன்று தம்மிடமும் இருந்தால் தாக்கலாம் திருப்பி என்று கம்பிலி நினைத்தார். ஆனால் தம்மை யாதவராயரின் மருமகன் தாக்குவார் என்று அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.” “உண்மை! ஆனால் கம்பிலித்தேவர் காகதீயர்களுக்கோ யாதவர்களுக்கோ உதவி செய்யாமல் சாகர் நாட்டு பர்ஹானுதீனுடன் சேர்ந்தது கண்டு அவரால் பொறுக்க முடியவில்லை.” “ஆனால் அவர் டில்லியையே ஆட்டிவைக்க முடியும் நாம் ஒன்று சேர்ந்தால் என்று முழங்கிய போது யாரும் அவருக்கு உதவவில்லை பர்ஹானுத்தினைத் தவிர.” “ஏன் என்று யோசித்தீர்களா திம்மப்பரே? கடந்த பதினைந்து ஆண்டுகளில் நாலு முறை தென்னாட்டின் மீது படையெடுத்து அமளி துமளிப்படுத்திய போதெல்லாம். யாதவர்கள் ஒடுங்கினர், காகதீயர் நசித்தனர், ஒய்சளர் இங்கு ஓடி வந்ததால் பிழைத்தனர். தெலுங்கு சோழர் மடிந்தனர். தென்னாடு முழுமையுமே தவித்த போது இவர்களுடன் சேராதிருந்த கம்பிலி இன்று அதே ஒய்சளரிடம் வந்து நாம் ஒன்று சேருவோம் என்றால் அது சுயநலத்தைக் குறிக்கிறதா? இல்லையா? ஒன்றன்பின் ஒன்றாக கடந்த பதினைந்து ஆண்டுகளில் வீழ்ந்துபட்ட தென்னத்தின் அரசர்கள் கதி தனக்கும் வரக்கூடாது என்று கருதும் உரிமை பல்லாள்ருக்கு மட்டும் இல்லை, உங்களுக்கும்தான் இருந்தது. இல்லையா?” என்று கேட்டதும் திம்மப்பர் மிக தருமசங்கடத்துடன் தவித்துவிட்டார். “நான் பல்லாளர் இணைந்தால் நாமும் இணையலாம் என்று பொறுத்தேன். தவிர...” “தவிர என்று சால்ஜாப்பு எதற்கு? நான் உங்கள் மீது குற்றங் கூறவில்லை. அவரவர்கள் பிரச்னை அவரவர்களுக்கு! இப்போதைய நிலைக்கே வாருங்கள். உலூப்கான் கொடுமை புரிந்துவிட்டான் என்று ஆத்திரங் கொண்டவர் பல்லாளரிடம் போவானேன்? அவர் மீதுள்ள ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளத்தானே? உலூபை நாமே போய் பிடிக்கலாம் என்று நானும் மற்றவர்களும் சொன்ன போது நீங்கள் இக்கேரி எல்லாம் முதலில் பல்லாளரை ஒருகை பார்ப்போம். ஏனென்றால் அவர் அந்த உலூப்கானுடன் வம்பு பண்ணமாட்டேன் என்று சொல்வார் என்றே நினைத்தீர்கள் இல்லையா?” என்று சற்றே வேகமும் ஏளனமும் கலந்த தொனியில் கேட்டதும் திம்மப்பர் வெகுவாகக் குன்றிப் போனார். “மறுப்பான் மன்னன். உடனே இதுதான் சாக்கு என்று தாக்கிவிடப் பார்த்தீர்கள். ஆனால் அவர் உலூபை நானே பழி வாங்குகிறேன் என்று புறப்பட்டதும் ஐயோ பாவம்! உங்கள் அத்தனை பேருடைய நிலையும் பரிதாபமாகி விட்டது. வேறு வழியில்லை. அவர் அன்றும் இந்தப் பகுதியின் குறுநில மன்னர்களுக்குத் தலைவர். இன்றும் தலைவர். மாற்றமும் மறுப்புமில்லை என்ற நிலை. இல்லையா திம்மப்பரே?” சோழகரின் ஒவ்வொரு சொல்லிலும் நியாயம் இருப்பதை திம்மப்பர் உணராமலில்லை. இப்பொழுது தங்கள் ஆவேசம், ஆத்திரம் எல்லாம் தோல்வி கண்டு உலூப்கான் குற்றமற்றவன் என்று முடிவாகி முகத்தில் கரி பூசிக் கொண்டு... சேச்சே! என்றாலும், ஒரு துரும்பைப் பிடித்தார். “சோழகரே, என்ன இருந்தாலும் நான் நம்பவில்லை. டில்லியையே மிரட்டும் அந்தக் கம்பிலித்தேவர் இந்தக் கேவல காரியத்தைச் செய்தார் என்பதை” என்று கூறிவிட்டுச் சோழகரைப் பார்த்தார். “யாரும் நம்பவில்லை திம்மப்பரே. எவனோ சோம்பேறி கிளப்பிவிட்ட வதந்தி இது. நாம் முட்டாள்களாக்கப்பட்டோம்” என்று கூறியதும் திடுக்கிட்ட திம்மப்பர், “அதெப்படி இவ்வளவு அழுத்தமாகக் கூறுகிறீர்கள் சோழகரே? இக்கேரியும் இம்மிடியும் கம்பிலியைத் தொலைவிலிருந்து பார்த்ததாகக் கூறுகிறார்களே தவிர பில்லம நாயக்கர் இந்தப் பகுதியில் பலதடவை காணப்பட்டதாக என் தளபதியே கூறியிருக்கிறார். புத்தூர்த்தத்தரும் பார்த்திருக்கிறார்.” “போகப்போக நமக்கே இதுவரை புரியாதிருந்த சில அதிசய உண்மைகள் தெரியும். நேரம் நெருங்குகிறது திம்மப்பரே” என்று கூறிவிட்டு பட்டென மவுனமானார் சோழகர். திம்மப்பர் திடுக்கிட்டார். ‘இதென்ன புது உண்மை. சேச்சே! நம்ம தளபதி எச்சரிக்கை செய்ததை நாம் புறக்கணித்துவிட்டு இந்த இக்கேரியுடன் இசைந்து வந்ததே பெருந் தவறு. மிகவும் அவமானப்பட வேண்டிய ஒரு கேவலச் சிக்கலில் நாம் சிக்கிவிட்டோம்’ என்று எண்ணிப் பொருமியபடி தொலைவில் கூடி நிற்கும் தம் நண்பர்களை வெறுப்புடன் பார்த்துக் கொண்டே முன்னேறினார். திம்மப்பர் மட்டுமில்லை. வீரபல்லாளரும் இதே போன்று தம்மை நொந்து கொள்ளும்படியான நிலையை மதியமைச்சர் பெத்தண்ணா உண்டாக்கி விட்டார். ‘நாலாந்தர சூதாடி அரசியல் சுயநலமிகளும், தடாலடிக்குட்டி ராசாக்களும் கூடித் தம்முடைய ஒரு அந்தஸ்தான நிலையை, தென்னகத்தில் திருவண்ணாமலைப் பகுதியிலுள்ள பல்லாளரை நண்பராக்கிக் கொண்டால் நலமுண்டு என்று துக்ளக் முதல் கம்பிலி வரை நினைத்து மதிக்கும் நிலைக்கு, இன்று ஊறு நேர்ந்துவிட்டது ஏன்? நிதானிக்கவில்லை. உய்த்துணரும் மனோபாவத்தைவிட்டு ஆத்திரத்துக்கும் ஆவேசத்துக்கும் இலக்காகி தன்னைத் தாக்கிட வேண்டும் என்ற சுயநலமிகளின் கைப்பாவையாக இயங்க வேண்டிய நிலைக்கு இலக்காகி விட்டது. சீரிய சிந்தனா சக்தியில்லாமையால்தான். இப்போது நிலைமையைச் சீர் செய்ய அமைச்சர்தான் வழி செய்தாக வேண்டும்? தன்னைத் தலைவராக ஏற்று இந்த ஆர்ப்பாட்ட வேட்டையில் ஈடுபட்டிருப்பவர்கள் உண்மையில் அந்த உலூப்பைப் பற்றி கவலைப்படவில்லை. தம்மைச் சந்தர்ப்பம் பார்த்து. சேச்சே! இடம் கொடுத்து விட்டு இப்போது விழித்தால்...’ உள்ளங் குமுறியபடி சென்ற அவர் எதிரே வந்து ஆக்ரோஷமாக நின்றார் இக்கேரி. “பல்லாளரே, உமது புதிய நண்பனை நாசகாலனான அந்தத் துருக்கனை எச்சரிக்கை செய்து எங்கோ அனுப்பி விடவே நீர் உம் மந்திரியை நேற்று அனுப்பிவிட்டதாக எங்களுக்கு இப்போதுதான் தகவல் கிடைத்தது. நீங்களும் வந்துவிட்டீர்கள். ஆனால் நாடகத்தில் நீங்கள் நடித்த நடிப்பு தோற்று விட்டது. இனி நாங்கள் உங்களை விடப்போவதில்லை” என்று கத்தியதும் பல்லாளர் மட்டுமில்லை, திம்மப்பரும் சோழகரும் கூட அதிர்ச்சி அடைந்து விட்டனர். |