வில்லவன் தேவி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

10

     அதிகாலையில் அலாதி தெளிவும் தெம்பும் அந்தக் குகைவாசிகளிடம் உண்டாகி விட்டது. இரவு எந்த விபரீதமும் நடைபெறவில்லை. புவன சுந்தரிக்கு மட்டும் சிறிது ஏமாற்றம். அத்தையின் மீது சிறிது கோபம். ஏன்? அந்த விஜயகுமார வில்லவரையன் மீது கூடத் தாபம். இல்லை... இல்லை. கோபமும் தாபமும்! எல்லோரும் எழுந்தாலும் இன்னும் புவன சுந்தரி எழுந்திருக்கவில்லை.

     “போதும் அத்தை! நீ போய் உள்ளே படுத்துத் தூங்கு. இளவட்டங்களுக்குப் பரவாயில்லை. பனி தாங்காது உன் உடம்புக்கு” என்று பெரிதும் ‘பாசம்’ கொண்ட மாதிரி நடித்தாவது அவளை அனுப்பியிருந்தால்... அதற்குக் கெட்டிக்காரத்தனமில்லாத இவர்... ரொம்பப் பெரிய வீரபரம்பரையாமே. உக்கும்! வில்லியனூரையும், பாகூரையும், பாச்சூரையும் கொண்ட ஒரு பெரிய நாட்டினை ஆண்டவர்களாம். உக்கும்... துணிச்சலுடன் அத்தையை உள்ளே போய்ப் படு என்று விரட்டும் தைரியமில்லாத விஜயம்... சேச்சே! அவர் பேரைச் சொல்லலாமா? மரியாதை தெரியவில்லையே இந்த மனசுக்கு! அதென்ன போயும் போயும் புரியாத்தனமாக அவர் பெயரையே இந்த மனம் மனனம் செய்து கொண்டிருக்கிறது?

     எவ்வளவு அடக்கமாக இருக்கிறார். அரையும் குறையுமாக ஆடையணிந்திருந்த அந்த நேரத்தில் எவ்வளவு ஆண்மையுடன் மறுபுறம் திரும்பி நின்று பெண்மைக்குப் பெருமதிப்புத் தந்தார். என்ன இருந்தாலும் என் விஜயன்... அடேடே! இந்த மக்கு மனசுக்குப் புத்தியும் இல்லை. லஜ்ஜையும் இல்லை. பெரிய ஆண்மையாம்... அப்படிப்பட்டவர் அத்தையை விரட்டிவிட்டு என்னுடன் ஒரு இரண்டு வார்த்தையாவது தனியாகப் பேசினால் என்ன?

     ஓ! என்ன பேசுவது? அவர் அப்படி உண்மையிலேயே துணிந்து பேச வந்துவிட்டாரானால்... இதென்ன இப்படி இந்த உடம்பு பதறுகிறது! அவர் பேச வந்தால் என்று நினைத்த மாத்திரத்திலேயே இப்படிப் பரபரத்தால் அவர் உண்மையில் பேசவே வந்துவிட்டிருந்தால்...

     சே! என்ன ஆசை இந்த அசட்டு மனசுக்கு? அவர் ஏதோ ஒரு கடமை என்று நம்பி செயல்படுகிறார். பெரியவர்களுக்குக் கட்டுப்பட்டு நாணயமாகச் செயல்படும் அவரைப் போய் ஏன் இந்த மனசு அசட்டுப் பிசட்டென்று என்னவெல்லாமோ நினைத்துக் கனவு காணுகிறது?

     ஆமாம்! ராத்திரி அவர் மட்டும் சும்மாயிருந்தாரா? நான் என்னையும் மறந்து நேற்று இரவு அப்படித் தூங்கி விட்டேன். இல்லை, கட்டை போலக் கிடந்தேன் என்பதுதான் சரி. அந்தத் தூக்கத்திலும்கூட அவர் அங்கே வந்து அருவியில் ஆனந்தமாக நான் யாருமில்லை என்ற தைரியத்தில் உல்லாசமாக நீராடினால்... திடுதிப்பென்று இவர் அங்கே வருகிறார். வந்தவர் எட்ட நிற்கக் கூடாதா? அருகே வருகிறார். போங்கள் அப்பாலே என்று சொல்ல இந்த அசட்டுப் பெண் மனசுக்குத்தான் தைரியமில்லை, தோன்றவில்லை என்றால் அவர் ஆண்பிள்ளை. வரலாமா? வந்தவர் தவறு என்று சொல்லிவிட்டுப் போக வேண்டாமா? போகவில்லையே! எங்கே திரும்பிப் போய்விடுவாரோ என்று இந்தப் பாழும் மனசு அடித்துக் கொண்டது. எப்படியோ அவருக்குத் தெரிந்துவிட்ட மாதிரி மேலும் நெருங்கி வந்தாரே பார்க்கலாம். கண்களை நான் மூடிக் கொண்டுவிட்டேன். பின்னே என்ன செய்ய முடியும்? அருவித் தண்ணீர்தான் என்னைத் திரையிட்டிருந்தது. எப்படி வெட்கம் பிடுங்கித் தின்னாமலிருக்கும்? ஐயோடி! ஆனால் அவர் “புவனி, நானும் இந்த அருவியில் நீராட வரலாமா?” என்று கேட்கிற மாதிரி ஒரு பிரமை. சே! வெட்கமே இல்லையே அவருக்கு! ஒரு பெண், தன்னந்தனி நட்டநடுக் கானகம்... ஈ காக்காய் இல்லை. சுற்றுப் புறத்தில் மலை. காடுகள், அருவி, அருவியின் நீர் வீழ்ச்சி. இது தவிர நானும் அவரும். அந்த வானத்து நிலவுக்குத்தான் எவ்வளவு கள்ளத்தனம். எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டு. சே! யாருக்குமே வெட்கமில்ல.

     அடக்கஷ்டமே! அவர் ஏன் இப்படி பெண்பிள்ளை மாதிரி பயந்து திரும்புகிறார். ஒருவேளை திரும்பிப் போய்விடுவாரோ! அடேடே! ஒரு பெண், பாவம்! அவள் அபலை தனக்காகத் துடிக்கிறாள். தன்னைச் சந்தித்துப் பேசத் தவிக்கிறாள் என்று அறிந்தும் வாய்விட்டுச் சொன்னால்தான் தெரியுமா. சே! அவருக்கே புரிய வேண்டாமோ?

     “புவனி..!” என்று அழைக்கிறார். ஆமாம் என் பெயரை அவர் வாய் சொல்லும் போது எங்கிருந்தோ தேன்மழையே பெய்கிற மாதிரி அல்லவா இருக்கிறது!

     “இன்னொரு தரம்! இன்னொரு தரம் அழையுங்களேன் அப்படி.”

     “புவனி... புவனி... நான்...”

     “உம்... நான்...”

     “உம்.”

     “ஏன் ‘உம், உம்’ என்று. மேலே ஏதாவது சொல்லுங்களேன்.”

     “புவனி...!”

     “வில்லவரே...! என் வல்லவரே...!”

     “அது யாருடி அவன் வில்லவன்? அவன் எங்கேடி வந்தான் இப்ப உன்கிட்டே! நல்லா இருக்குது நீயும் உன் கனவும் உளறலும். எளுந்திரடி குட்டி. புலித்தோலைக் கசக்கி களேபரம் பண்ணிட்டியே. பொளுது விடிஞ்சு நாலு நாளியாவுது.”

     புவன சுந்தரி அலறியடித்துக் கொண்டு எழுந்தாள். அத்தை அவளைக் குறும்புச் சிரிப்புடன் பார்ப்பதையும், அக்காள் ஆதுரத்துடன் நாணப் புன்னகை சிந்துவதையும் கண்டு சட்டென முகத்தைப் பொத்திக் கொண்டு அப்பால் எழுந்து ஓடினாள்.

     “அடி அம்மாடி! அமரசுந்தரி, மூணு பொழுது கூட தாங்க முடியல்லியே உந்தங்கைக்கு.. அந்தப் பொடியன எம் மறுமவன்தான்... என்னடான்னான் ராவெல்லாம் பொட்டுக் கூடத் தூங்காமே அங்கே போறான் இங்கே போறான். மலையிலே ஏறுகிறான். அருவிக்கிட்டே போயி நிக்கறான். ‘என்னடா இது?’ என்று அப்பாரு கேட்டா ‘காவல்’ என்று கதைக்கிறான். நாம் எல்லாம் அவுங்களுக்கு முன்னே பிறந்தவங்க என்ற விஷயத்தை மறந்து போயி இங்கே இவள் கிடந்து புலம்பறா. அங்கே அவன் என்னவோ ஆடறான்! ரொம்பப் பிரமாதம் போ!” என்று கூறியது புவனியின் காதில் விழுந்ததும் “ஐயோ பாவம்! இரவு முழுவதும் உறங்கவில்லையாமே...?” என்று பொருமிய வண்ணம் அருவிக்கரைக்கு ஓடினாள்.

     வெளியே வந்தவள் தன் வேலைகளை முடித்துக் கொண்டு, குகைக்குத் திரும்பினாள். ஆனால் அவனைக் காணவில்லை.

     ‘எங்கே போயிருப்பார், பொழுது விடிந்ததும் விடியாததுமாக?’

     “மகளே, இரவில் வம்பு எதுவும் நடவாமல் போனது நிம்மதிதான். ஆனாலும் இன்றைக்கும் இங்கே இருப்பதென்றால்...” என்று வில்லவர் கூறிய போது “இல்லை, அப்பா! இன்றும் புறப்படுவதற்கில்லை. இன்னும் சற்று நேரத்தில் நம் ஆட்கள் இருநூறு பேர்களாவது வருவர். கடந்த இரவில் வேட்டைக்காரர் ஆட்கள் தேவிகாபுரம் எல்லையில் காவல் இருந்ததும் நல்லதாயிற்று. அவர்களும் இன்று இங்கு வரலாம். செங்காணியார் ஆட்கள் இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடலாம். அவர்கள் வந்ததும் நமக்குப் பொறுப்பு சற்றுக் குறையுமே அன்றி அறவே அகன்றுவிடாது. ஆனால் இவள் மாமியார் பொறுப்பில் நாம் வெளிவேலைகளைக் கவனித்திடலாம். எனவே இன்று இரவும் இங்குதான்.”

     இதற்கிடையே ஏதோ கிடைத்ததைக் குடித்துவிட்டு புவன சுந்தரி அருவிக்கு ஓடினாள். அங்கே குமாரன் கால்களை நீரில் அலையவிட்டபடி ஒரு கல்லின் மீது சாய்ந்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டாள்.

     பாவம்! இரவெல்லாம் தூங்கவில்லை. அவனுடைய ஆடைகள் சில அருகில் கிடந்தன. ரத்தக் கரையாயிருந்த அவற்றை நீரில் அலசிக் கசக்கிப் பிழிந்து உலர்த்தினாள்.

     ‘அப்பா இல்லாமல் போனது எவ்வளவு கொடுமையான சோதனையாகி விட்டது. நம் மனதில் உள்ளதை அப்படியே கூறலாமே அவரிடம். அப்படி சொல்லாமல்... ‘புவனி... வில்லவன் மகனைத்தானே விரும்புகிறாய். இதோ உன்னை அவனுக்கே மணம் முடித்து வைக்கிறேன்’ என்பார். இப்போது நிலமை முற்றிலும் மாறிவிட்டது. அக்கா மறுக்கமாட்டாள் என்றாலும் அவள் கணவர் செங்காணியார் மறுப்புக் கூறாமல் இருக்க வேண்டும். அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இவர் மறுக்காமல் இருக்க வேண்டுமே...’

     சட்டென யாரோ தன் பெயரைக் கூவி அழைப்பது கேட்டுத் திடுக்கிட்டாள். பரக்கப் பரக்க விழித்தபடி நாலா திசையும் பார்த்தவள் அவ்வழைப்பு வெகு அண்மையிலிருந்து வருவது கேட்டு விஜயகுமார வில்லவராயனை சற்றே நெருங்கி நின்று பார்த்தாள் திகைப்புடன்.

     “புவனி... புவன சுந்தரி...!”

     அவனுடைய இந்தக் கனவுலக முணுமுணுப்பு அவளையும் ஒரு இன்பக் கனவுலகுக்குக் கொண்டு போய்விட்டது. ஏதோ எங்கோ பறப்பது போன்ற ஒரு உணர்வு அவளுக்கு உண்டாகித் தன்னையே மறந்து நின்றாள்.

     அட பைத்தியமே! இத்தனை நேரம் தவித்தவள் இப்போது அவரே வாய்விட்டு அழைத்தும் கூட ஏன் இப்படி...

     “புவன சுந்தரி...”

     எவ்வளவு கம்பீரமான குரல்... வாய் நிறைய என் பெயரை... எழுப்பினால் என்ன? ஐயோ! எழுப்பினால் அவர் பேர் சொல்லி அழைப்பாரோ? மாட்டாரோ! இப்படியே கனவில்...

     “இங்கேயா இருக்கிறான் வில்லவன்!” என்று கேட்டுக் கொண்டே அங்கே வேட்டைக்காரத் தானப்பர் வந்ததும் அவள் திடுக்கிட்டாள் என்று கூறுவதைக் காட்டிலும் பயந்து விட்டாள் என்று கூடச் சொல்லலாம். ஆனால் இந்தப் பாழும் மனுஷனுக்கு இப்போது என்ன அவசரம் வந்து தொலைத்தது? திடுதிப்பென்று வந்து நம் இன்பக் கனவைக் கலைத்துக் குலைத்து விட்டாரே என்று நினைத்து என்னாத அவரைத் திட்டவும் தயங்கவில்லை அவள்.

     ஆனால் வேட்டைக்காரனுக்கோ அவசரம். இவளுடைய அவதியைப் பொருட்படுத்தாமல் “வில்லவா?” என்று அழைத்ததும் சட்டெனக் கண்களைத் திறந்து பரபரவென்று எழுந்தான் பாவம்!

     “குமாரா... நமக்கு ஏகப்பட்ட வேலைகள் வந்திருக்கிறது. உன்னுடைய தாத்தாவும் நானும் விரைவில் புறப்பட்டாக வேண்டும். அதற்குள் அவரே படவேட்டார் மகளை அனுப்பி உன்னை எழுப்பச் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. அப்படித்தானே?” என்று அவளைப் பார்த்துக் கேட்டதும் புவன சுந்தரி பரபரப்புடன் “ஆமாம்... ஆமாம்... அப்படித்தான்” என்றுதான் வந்த வழி திரும்பி விட்டாள்.

     ‘இரவு முழுமையும் தூங்காது விழித்துத் தவித்தவரை எப்படித்தான் எழுப்ப மனம் வந்ததோ இந்தக் கல் நெஞ்சம் படைத்த புலி வேட்டைக்காரருக்கு?’ என்று உள்ளூரப் பொருமியபடி குகைக்குத் திரும்பினாள்.

     அரை நாழிகைக்குப் பிறகு குகைக்கு வெளியே வில்லவராயர், விஜயன், வேட்டைக்காரர், சித்தேசுவரி ஆகியோர் கொண்ட ஒரு குட்டி மகாநாடு அங்கு நடைபெற்றது. குகைக்குள்ளே சிசுவிடம் கொஞ்சிக் கொண்டிருந்த புவன சுந்தரிக்கு மனம் மட்டும் எங்கெல்லாமோ போய்ச் சுற்றி வந்தது.

     அக்காள் அமரசுந்தரியின் மனமோ தனது தற்போதைய நிலை, எங்கோ இன்பமயமான சூழ்நிலையில், அற்புதமாளிகையில், அம்சதூளிகா மஞ்சத்தில் ஆனந்தமாகப் பிறந்து உறங்கிச் சிறப்புக் காண வேண்டிய இந்தப் பயல் இங்கே நட்டநடுக் கானகத்தில் ஊர் பேர் இல்லாத மலைக்குகையில், கல்லிலும் முள்ளிலும் கிடந்து அவதிப்படப் பிறந்திருக்கிறானே. இந்நேரம் இவனைக் கண்டு ஆனந்தப் பரவசமடைய வேண்டிய இவன் தந்தையார்...

     “ஏன் அக்கா இப்படி ஏதோ பெரிதாக யோசித்து நீ மட்டுமே கவலைப்படுகிறாய்? என்னையும் அதில் பங்கு கொள்ளச் செய்யக் கூடாதா?”என்று கேட்டாள் புவன சுந்தரி.

     “முடியாது புவனி” என்றாள் சட்டெனத் தன் பதிலில் குறும்பும் கேலியும் இழையோட.

     புவன சுந்தரி துணுக்குற்றாள்.

     “அக்கா, நீ மட்டும்தான் அப்பாவுக்குப் பெண் என்றால் சரி. நானும் அல்லவா ஒருத்தி பிறந்துவிட்டேன் அவர் மகளாக...” என்று சிறிது ஆத்திரத்துடன் சொன்னதும் அமரசுந்தரி “நீ படவேட்டார் மகளாகப் பிறந்துவிட்டது உண்மைதான். இன்று நீ அவரை இழந்து என்னோடு அவதியுறுவதும் உண்மைதான். ஆனால் எனக்கு ஒரு கணவர் என்று ஒருவர் இருக்கிறாரே! இதோ இந்தத் துரதிர்ஷ்டக் கட்டையின் தந்தை... அவரை நான் எப்படிப் பங்கு போட்டுக் கொள்ள முடியும் புவனி?”

     “அக்கா, நான் எப்பவுமே முட்டாள். அசடு, ஆத்திரக்காரி. மன்னித்துவிடு அக்கா!” என்று பதறிப் போய்விட்ட தொனியில் அக்காளை அணைத்தாள் தங்கை.

     “மன்னிப்பதும் மறப்பதும் மனித வாழ்க்கையில் சகஜம் புவனி. ஆனால் நான் உன்னைவிட மூத்தவள். உனக்கு முன்னே நாலைந்து ஆண்டுகளுக்கு முன்னே பிறந்தவள். ஒரு சமயம் அப்போது எனக்குப் பத்துப் பனிரெண்டு வயதிருக்கும். அப்பொழுது உனக்கு ஐந்தாறு வயதிருக்கும். அம்மாவைப் பார்க்க யாரோ ஒரு பெரியவர் வந்தார். பார்ப்பனர் அவர். அம்மா சொன்னாள் ‘மகாராஜா இன்னும் அரண்மனை திரும்பவில்லை. கோயிலுக்குப் போனவர். நீங்கள் இப்படி உட்காருங்கள். நான் என்ன செய்யட்டும்?’ என்று கேட்டாள். அவர் ‘மகாராணி, குடிபடைகளை எட்ட வைத்து நான் ராஜா ராணி என்று பெருமை பாராட்டிக் கொக்கரிக்கும் பரம்பரையில்லை இந்தச் சம்பூவராயார் பரம்பரை. இது மக்களோடு மக்களாகவே அவர்களுடன் சரி சமமாக ஒன்றிவிட்ட பரம்பரை. அதனால்தான் அரண்மனைக்குள்ளேயே நான் வர முடிகிறது’ என்றார்.

     ‘தங்களைப் போன்ற பெரியவர்கள் ஆசியால் நாங்கள் எப்பவுமே இம்மாதிரி நல்லபடியாக இருக்க ஆண்டவன் துணை செய்வார். சரி, நீங்கள் வந்த விஷயம் சொல்லுங்கள். அரசர் வந்தால் எதற்காக இப்படிக் காக்க வைத்தாய் என்று கேட்டுக் கோபிப்பார்’ என்றாள் அம்மாள்.

     பெரியவர் நிதானமாக ‘மகாராணி, அரசர் இந்த விஷயத்தில் கோபிக்க முடியாது. நான் வந்த வேலையும் அவ்வளவு எளிதில் முடியக் கூடியதல்ல. ஏனென்றால் இந்த ராஜ்யத்தில் பல சாதிமத சமூகத்தினர் இருக்கிறார்கள். நாங்கள் பார்ப்பனர்கள். எங்கள் சமூகத்தில் ஒரு பெரிய பிரச்னை உண்டாகி சம்சாரிகளான நாங்கள் பல வகையிலும் துன்புற வேண்டிய கொடுமை ஏற்பட்டுவிட்டது. எனவே இது சம்பந்தமாக நாங்கள் யாவரும் ஒரு இருபது முப்பது குடும்பத்தினர், இங்கே மகாராஜவைக் காண வந்திருக்கிறோம். அவர் திரும்பும் வரை காத்திருக்கிறோம் ராணி. நீங்கள் போய் உங்கள் வேலையைக் கவனியுங்கள்’ என்றார்.

     அப்பா வந்துவிட்டார். அவரைக் கண்டதும் நீ பாய்ந்தோடினாய். உன்னைத் தூக்கி உச்சி முகந்துவிட்டு ‘பெரியவரே, நான் கோயிலிலிருந்து திரும்பத் தாமதமாகிவிட்டது. என்ன விஷயம்? ஏகப்பட்ட பேர்களாக வந்திருப்பதைப் பார்த்தால் பிரச்னை பெரிதாயிருக்கும் போல் தெரிகிறது. என்றாலும் தயங்காமல் கூறுங்கள்’ என்றார்.

     ‘உங்கள் ஆட்சியில் எங்களுக்கு ஒரு குறையும் இல்லை மகாராஜா. படை வீட்டு ராஜ்யம் தர்ம ராஜ்யம்’ என்றார்.

     ‘மகிழ்ச்சி பெரியவரே. வந்த வேலை...’

     ‘நாங்கள் இருபது குடும்பங்கள். சன்னதித் தெருவில் நாங்கள் ஒரு சமூக அமைப்பாகத் தங்கள் முப்பாட்டனார் காலத்திலிருந்து இருக்கிறோம்.’

     ‘நல்லது பெரியவரே.’

     ‘முன்னெல்லாம் சகல சம்பத்துக்களும் இருந்தது. எல்லாம் சம்பிரமமாகச் செய்ய முடிந்தது. இப்போது அப்படியில்லை. காலம் மாறிவிட்டது. ஆனால் நம்முடைய மூடப்பழக்கவழக்கங்கள் மட்டும் மாறவில்லை. எங்களிடையில் ஒரு கொடிய வழக்கமாக இருந்து வருவது வரதட்சிணைப் பழக்கம். அது இன்று எங்களை நிரம்பவும் பாடுபடுத்துகிறது. இதனால் நாங்கள் படாதபாடு படுகிறோம். எங்கள் சமூகப் பெண்கள் மட்டும் இல்லை, வாலிபர்களும் இந்தக் கொடுமையால் வெகுவாக பாதிக்கப் பெற்று பலர் மணமாகாத விபரித நிலை. காலம் மாறிவிட்டது. சுபீட்சம் இல்லை. எனவே இதைக் கைவிடுவோம் என்றால் கல்நெஞ்சக்காரர்களான சிலர் மறுக்கிறார்கள். எனவே உங்களிடம் வந்தோம்.’

     ‘இது மூடத்தனமான பழக்கம்தான். இருப்பவர் பற்றிக் கவலையில்லை. இல்லாதவர் பாடு திண்டாட்டம்தான். சரி, இதற்கு நான் என்ன செய்ய முடியும்? என்னிடமிருந்து ஏதோ திரவிய உதவி...’

     ‘இல்லை மகாராஜா, நீங்கள் இதற்கெல்லாம் கொடுத்துக் கட்டுப்படியாகாது. சர்வசக்தியுள்ள நீங்கள் ஒரு உத்தரவு போட வேண்டும்.’

     ‘ஒரு உத்தரவா? எதற்கு?’

     ‘இன்று முதல் யாரும் வரதட்சிணை கேட்பதோ அல்லது கொடுப்பதோ சட்ட விரோதம் என்று.’

     இப்படி அவர் சொன்னதும் அப்பா திடுக்கிட்டார். ‘இது ஒரு சமூகத்தின் பிரச்னை. அரசர் நம்முடைய சொந்த விவகாரம், பாரம்பரிய உரிமைகளில் தலையிடலாமா என்று பதறி எழுந்தால்?’

     ‘கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண்மூடிப் போகட்டும் என்று உத்திரவிடுவதுதான் அரசின் தலையாய கடமை மகாராஜா. நீங்கள் வடநாடு சென்று திரும்பிய பின்னர் உங்கள் பெரிய மகளுக்கு அமரசுந்தரி என்று பெயர் வைத்ததும் இது என்ன விபரீதம் என்று கேட்டவர்கள் உண்டு.’

     ‘ஆமாம் பெரியவரே, என் தாயார் கூடத்தான் முதலில் மறுப்பு கூறினார். பிறகு நான் காசியில் கங்கையில் நீராடும் போது ஒரு ஆபத்து ஏற்பட இருந்ததையும் என் உயிரைக் காத்தவர் பெயர் அமரசுந்தரர் என்றும், அவர் நினைவாகவே வைத்தேன் என்று விளக்கியதும் அன்னையார் மகிழ்ந்தார். பிறகு இந்தச் சின்ன மகளுக்கு தொண்டைமான் அவர்களே புவன சுந்தரி என்று பெயர் வைத்தார். ஊரார் அற்புதமான பெயர், அழகான குழந்தைகளுக்கு என்று பிறகு பாராட்டியதுமுண்டு.’

     ‘இதே போலத்தான் எங்கள் சமூகம் இன்று. நாளை இந்நாட்டு மக்கள். பிறகு இந்த நாட்டின் எதிர்கால வரலாறு கூடப் பாராட்டும் மகாராஜா.’

     ‘அமைச்சரையும், ஆலயத்துப் பூசாரிகளையும் மற்ற பெரியவர்களையும் பார்த்து பேசி நாளை சொல்லுகிறேன்’ என்றார் அப்பா.

     பார்ப்பன பெரியவர் மகிழ்ச்சியுடன் திரும்பினார். மறுநாள் அப்பாவின் ஆணை அனைவருடைய அங்கீகாரத்தையும் பெற்று ஆலயத்திலேயே அறிவிக்கப் பெற்று அங்கேயே நிரந்தரமாக மக்கள் காலமெல்லாம் கண்டு மதித்து நடக்கட்டுமென்று பதிப்பித்திடவும் செய்தார். அப்பாவை அன்று முதல் சமூக சீர்த்த சிகாமணி, சர்வ சமய ரட்சகமணி என்றெல்லாம் எல்லாரும் ஏற்றிப் போற்றினர்.

     அப்பா ஒரு மகாராஜா. ஆகையால் நாம் நெருங்கக் கூடாது என்று மக்கள் யாருமே நினைத்ததில்லை. இதனால் நம் மாளிகைக்கூடப் பல நாட்கள் மக்களின் மாளிகையாக விளங்கியதுண்டு. ஆனால் காலம் மிகக் கொடியது. அதன் தீர்ப்பும் கொடியது என்பதற்கு இப்போதைய சம்பவம் உதாரணமாகும். ஏனென்றால் ஒரு கணியன் எப்பவோ அப்பாவிடம் உங்களுக்குத் துர்மரணம் ஏற்படும் என்றானாம். இது கேட்டதும் நம் வீரர்கள் அவரை அடித்துப் போடவும் துணிந்தனர். ஆனால் அப்பா சொன்னாராம் ‘விதியின் முறையை மாற்ற நாம் யார்? உம்முடன் சம்பூவரையர் சந்ததி கூட பேரரசாளும் பெருமையை இழக்கும் என்று முன்பு ஒரு பெரியார் எப்போதோ கூறியுள்ளாராம். இதற்காக நாம் பதறிப்பயனில்லை. நடப்பது நடக்கட்டும்’ என்று தடுத்துக் காணியருக்குப் பொன் கொடுத்து அனுப்பினாராம். இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் துக்கத்தைத் தவிர வேறு எது புவனி நம் மனதில் ஊடாடும்?” என்று அமரசுந்தரி கேட்டதும் புவன சுந்தரி விம்மி வெடித்தாளேயன்றி வாய் திறக்கவில்லை.

     “புவனி, இனி நாம் விம்மி வெடித்துப் பயனில்லை. இன்று ஒருநாள் மட்டும்தான் நாம் இங்கு இருக்க முடியும். நாளை மீண்டும் நம் பயணம் செங்கத்தை நோக்கியதாக இருக்கும்” என்று சொல்லுவதற்குள் ஏக்கத்துடன் புவன சுந்தரி “அக்கா, நாம் என்றால்...” என்று மேலே கேட்காமல் நிறுத்தினாள்.

     அமரசுந்தரி சோகப் புன்னகையுடன் தங்கையை உற்று பார்த்து விட்டு, “நாம் என்றால் இப்போதைக்கு நீயும் நானும் இந்தத் துரதிர்ஷ்டக் கட்டையும்தான். மற்றவர்கள் நம்மை ஆதரிக்கும் அனுதாபிகள். நல்லெண்ணங் கொண்ட உத்தமர்கள். ஆனால் நாம் மேலும் மேலும் அவர்களைச் சிரமப்படுத்துவது நியாயமில்லை புவனி.”

     “அது உண்மைதான் அக்கா. நாம் பெண்கள்தான் என்றாலும் அளவுக்கு மிஞ்சி மற்றவர்களை சிரமப்படுத்துவதும் நியாமில்லைதான். ஆனாலும்...”

     “புவனி, நீயும் சரி, நானும் சரி அனுபவம் போதாதவர்கள். நம் செங்கணாயாரும், நமது குலகுருவான பூசாரி பொன்னையா தாத்தாவும்தான் நம் விஷயம் எதையும் முடிவு செய்ய முடியும். நாமாக எதையும் முடிவு செய்து கொள்ளும் உரிமை நமக்கு இல்லை. புரிகிறதா?” என்று சற்றே குரலில் கடுமையைக் கூட்டிக் கேட்டதும் புவன சுந்தரி “புரிகிறது அக்கா. ஆனால் நம் அப்பா சுதந்திரமாகச் செயல்பட்டவர். கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்போகக் செய்த அப்பாவுக்குப் பெண்கள்தானே நாம்? அவர் சுதந்திரமாக முடிவெடுத்தறிய நாமும் செயல்படுவது, அதாவது அது நிலையானதாயிருந்தால் தவறில்லையே அக்கா. மற்றவர்களுக்குப் பிடிப்பது நமக்குப் பிடிக்கவில்லையென்றால் நமக்குப் பிடிப்பதைத்தானே நாம் ஏற்க வேண்டும்? எனவே நாமாக ஒன்றை நமக்குப் பிடித்த முறையில் நிறைவேற்றி கொள்ளுவதை அனுமதிக்கப் பெரியவர்கள் தயங்க மாட்டார்கள் அக்கா” என்று மிகச் சாதாரணமாக வார்த்தைகளை கோர்த்து நிதானமாகப் பேசியதும் அமரசுந்தரி அயர்ந்து போனாள்! சில நொடிகள் அவளால் எதுவுமே பேச முடியவில்லை. பிறகு தங்கையிடம் ஏதோ சொல்ல வாய் திறந்த அவளைச் சிசு அழுகையால் தடுத்து அடக்கிவிட்டது.

     அப்பாவின் பெருமையையும் சிறப்பும் மகள் அறியட்டும் என்றுதான் அக்காள் வரலாற்றுப் பெருமை பெற்ற அந்தச் சம்பவங்களைக் கூறினாள் என்பது உண்மையானாலும் இந்தத் தங்கை அப்பா சுதந்திரமாகத் தாம் நினைத்தது சரியென்று முடிவில் செயல்பட்டார் என்பதைத் தனது மனோநிலை கேற்ப ஒரு பிடியாகப் பற்றிக் கொண்டுவிட்டாள்.

     இப்படி நினைத்ததும் அமரசுந்தரி உள்ளூர வெகுவாகக் கலங்கச் செய்தாள். இன்னும் தந்தை இறந்து மூன்று நாட்கள் கூட ஆகவில்லை. அவருக்கு ஈமக்கடன்களை நடத்தினார்களா இல்லையா? யார் நடத்தியது? என்று கூடத் தெரியவில்லை. ஆனால் விதி? இவள் மனதை வேறு எங்கோ திருப்பிவிட்டது.

     ‘நாமே எந்த ஒரு முடிவையும் செய்யவிடாதபடித் தானே எந்த ஒரு முடிவையும் திணிக்கும் சக்தி பெற்ற அந்த விதியை நோவதைத் தவிர இப்போது வேறு என்னதான் செய்ய முடியும்?’