வில்லவன் தேவி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

3

     நடுநிசியிலிருந்து குதிரைகள் தனித்து விடப்பட்டிருந்தாலும், அவற்றுக்கே உள்ள தனி அறிவைக் கொண்டு அவை எங்கோ குளிருக்கு அடக்கமான இடத்தைச் சேர்ந்து தங்கியிருந்தன போலும்! எனவே அக்கம்பக்கத்தில் அவற்றைக் காணவில்லை என்றதும் புவன சுந்தரி வெளியில் வந்து சுற்று முற்றும் பார்த்தாள். பிறகு வில்லவரிடம் “தாத்தா, நீங்கள் அக்காளைக் கவனித்துக் கொள்ளுங்கள். நான் அவற்றைக் கண்டுபிடித்து வருகிறேன்” என்று கூறிவிட்டுப் பதில் எதிர்பாராமல் சடசடவென்று கீழே இறங்கினாள்.

     வில்லவர் திடுக்கிட்டார். உதயகாலத்தின் வரவால் நாலா திசையினும் பரவியிருந்த ஒளியின் சோபையை மீறிய சோபையுடன் ஒயிலாக நகரும் அவளைத் தன் பேரன் வைத்த கண் வாங்காமல் பார்ப்பதைக் கண்டு எச்சரிக்கையாக ஒரு முறை கனைத்துக் கொண்டார்,

     சட்டெனத் திரும்பி நோக்கினான் அவரை.

     “எச்சரிக்கையாக நடப்பது சில சமயங்களில் அவசியம் குமாரா. என் பதிலை எதிர்பாராமல் அவள் போனது தவறு. நீ போய் எச்சரிக்கையாக, ஆமாம் திரும்பவும் சொல்ல வேண்டியிருக்கிறதே இந்த எச்சரிக்கையை!”

     “தேவையில்லை தாத்தா, புரிந்துவிட்டது.”

     “புரிந்துவிட்டதல்லவா? அப்படியானால் சரி. அவள் அதோ போகிறாள். நீயும் போய் உதவி செய். குதிரைகள் அப்படியொன்றும் ஓடிவிடாது. அது கிடைத்ததும் நீ தாமதிக்காமல் புறப்படு. இங்கு நிலைமை மிகவும் நெருக்கடியாகிவிட்டது... புரிகிறதா?”

     “புரிகிறது தாத்தா. அத்தையுடன் திரும்புகிறேன்” என்று கூறிவிட்டு புவன சுந்தரி போன திசையில் ஓடினான்.

     குதிரைகள் ஒரு பாறையின் இடுக்கில் கிடைத்த இடத்தில் ஒடுங்கி நின்றிருந்தன பாவம்! புவன சுந்தரி அவற்றை வெளியே கொண்டு வந்தாள். அவை இன்னமும் குளிரில் வெடவெடத்த மாதிரி நடுங்கின. நல்ல காலம் உதய காலத்தின் இளம் வெய்யில் அவற்றுக்குச் சற்றே தெளிவூட்டின போலும்! புவன சுந்தரி அவற்றின் கால்களில் ஏற்பட்டிருந்த ரணத்தைப் பார்த்து “த்சுத்சு...” என்றவள் தன்னிச்சையாக திரும்பி நோக்கினாள்.

     சற்று எட்டத்தில் நின்ற விஜயகுமாரன் அவள் தன் கால்களை நோக்குவது கண்டு ரணங்களை மூடிக் கொள்ள முயன்றான்.

     “கல்லும் முள்ளும் கடவுளுக்குத் துணை செய்கின்றன போலும். இல்லாவிட்டால் இப்படிக் கால்கள் புண்களால்...”

     “குதிரையைத் தட்டி அனுப்புங்கள். தாமதம் கூடாது என்றார் தாத்தா...” என்றவன் பரபரப்புடன் முன் வந்து குதிரையைப் பிடித்துக் கொண்டு திரும்பிப் பாராமல் நடந்தான்.

     அவள் வியப்புற்றாள். பிறகு வெட்கமும் கொண்டுவிட்டாள் என்பது அவள் முகத்தில் ஏறி நிலைத்த சாயை காட்டிவிட்டது.

     குதிரை மீது பாய்ந்து ஏறிய அவன் ஒரே முறை திரும்பிப் பார்த்தான்.

     முகத்தை மூடிக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவள் கைகளை முகத்தின் அருகே கொண்டு போனாலும் கண்கள் பார்க்க வேண்டும் என்று துடிக்கின்றனவே!

     அதுகாறும் சோகமே ஊறித் திளைத்த அந்த அழகு முகம் சற்றே விகசித்து இலேசான ஒரு மகிழ்ச்சி ரேகை பரவியதை அவன் கவனித்தானோ இல்லையோ... உதய ஞாயிறு சட்டெனக் கவனித்துவிட்டான்!

     குதிரை பறந்தது. சில நொடிகள் அங்கேயே நின்ற அவள், இதுகாறும் இல்லாத ஒரு வகையில் மனதில் உண்டான ஏதோ ஒரு மாறுதலை உணர்ந்து கொண்டு, ‘நமக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கொடுமையான சூழ்நிலையில் இந்த மனசுக்கு ஏன் வீணான ஒரு பிரமையில் ஈடுபட்டுத் தவிக்க வேண்டும்?’ என்று தோன்றிற்று. ‘புண்பட்ட மனசுக்குப் புத்தி வரவில்லையே? வீண் ஆசை கொண்டுவிட்டுப் பிறகு வரம்பிலாத வேதனைக்குள்ளாவானேன்?’ என்று சிந்தித்தபடி அக்காவிடம் திரும்பினாள்.

     “மகளே, நீ அக்காவுடன் இரு. நான் மலையில் ஏதாவது குகை இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன்” என்று பெரியவர் எழுந்ததும் அவர் கால்களை நோக்கிய அவள் “ஐயோ கடவுளே...! இது என்ன கோரம்! உங்கள் கால்கள் இப்படி...” அவள் கண்கள் மட்டும் இல்லை உள்ளமும் கூட இதோ அழுகை வந்துவிட்டது என்று துடித்தது.

     “மகளே, உயிர் மீது ஆசை இருக்கும்வரை இத்தகைய ரணங்கள் என் போன்றவர்களுக்கு ஏற்படுவது சகஜம். ஆனால் உன்னைப் போன்ற பூக்களையும் கூட விதி கசக்கிட முயலுகிறதே என்றுதான் நான் வேதனையுறுகிறேன்...” என்றார்.

     புவன சுந்தரி மீண்டும் அக்காளைப் பார்த்தாள். அவள் தூக்கம் இப்போது கலைக்கப்படுவதற்கில்லை.

     “தாத்தா, நீங்கள் இங்கேயே இருங்கள். நான் போய் பார்த்து வருகிறேன். நேரம் ஆக ஆக வெய்யில் வேறு. தயவு செய்து என் வேண்டுகோளை நிராகரிக்காதீர்கள். விரைவில் வந்துவிடுகிறேன்” என்று தடதடவென்று மீண்டும் இறங்கிவிட்டாள் அவள், பதில் எதிர்பாராமல்!

     வில்லவர் வியந்து வேதனையுற்றாலும் அவளுடைய இங்கித குணத்தையும் இளமைக்கே உரிய பரபரப்பையும் கண்டு உள்ளூரப் பெருமிதமுறவே செய்தார்.

     கீழே இறங்கிச் சென்றவள் எச்சரிக்கையாகவே நடந்தாள். எனினும் வெய்யில் முகத்தில் அடித்தது. கண்கள் கூசின. மலையின் முழுத் தோற்றத்தையும் இப்பொழுதுதான் பார்த்தாள்.

     ‘செங்கம், திருவண்ணாமலைப் பகுதியெல்லாம் மலைகள் இவ்வளவு பெரிதாயிருக்குமா என்ன? காடுகள் கூட பயங்கரமாகத்தானே இருக்கின்றன.’

     நடந்தாள். பாறைகளின் ஊடே அவள் கண்கள் ஊடுருவின. குகைகள் அப்படியென்ன எல்லா மலைகளிலுமே இருந்திடுமா என்ன! மலையை ஒட்டியே சென்றவள் சட்டென ஏதோ ஒரு கொடி மாதிரி பாதை செல்லுவதைக் கண்டு அதன் வழியே உற்று நோக்கினாள். அங்கே மலை பிளந்த மாதிரி ஏதோ ஒரு வழி.

     ‘ஒருவேளை...’ அச்சம் இலேசாகத் தலை நீட்டியது. ‘யாரேனும் நம்மைப் போலவே குகை தேடி வந்திருந்தால்... அல்லது எதிரிகள் எவரேனும் பதுங்கியிருந்தால்...’

     அந்தக் குகையின் நுழைவாயிலில் நின்றாள். கண்களை உள்ளே செலுத்தி ஊடுருவச் செய்தாள்.

     ஏதோ ஒரு பொறி தட்டிய மாதிரி மூளை வேலை செய்தது. சட்டென ஒரு கல்லைப் பொறுக்கி அந்தக் குகைக்குள் போட்டுவிட்டு அப்பால் நகர்ந்து பாறையுடன் ஒட்டிக் கொண்டு நின்றாள் சிலை போல.

     ‘கிறீச்!’ என்று ஒரு பெரும் இரைச்சல். ‘படபட’வென்று அதைத் தொடர்ந்து ஒரு பயங்கர ஒலி மூச்சைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றாள் என்று கூடச் சொல்லலாம். திடீரென்று இரண்டு மூன்று மான்குட்டிகள் குகைக்குள்ளேயிருந்து அதிவேகமாக ஓடிவர... அவற்றைத் தொடர்ந்து இரு பெரிய மான்கள், ஆணும் பெண்ணுமாக வெளியே ஓடி வந்து சில நொடிகள் நின்று மிரளமிரள விழித்துவிட்டுப் பிறகு முன்னே ஓடிய குட்டிகளைத் தொடர்ந்து ஓடிவிட்டன.

     “ஐய்யோ பாவம்! குளிருக்குப் பயந்து குகையில் ஒண்டியிருந்த குடும்பம் இது. இப்படி குறுக்கே வந்து கொடுமை புரிந்தேனே அவற்றை விரட்டி...” என்று தானே முணுமுணுத்துக் கொண்டாள்.

     என்றாலும் மனதில் இன்னொரு பக்கம் சற்றே நிம்மதி. குகையில் மான்கள் இரவு முழுமையும் பழுதுபடாமலிருந்தன. எனவே அங்கு ஆபத்து எதுவும் இல்லை. எச்சரிக்கையாகக் குகைக்குள் அடியை எடுத்து வைத்தாள். ஒரே இருட்டு. பகல் வந்தும் அங்கே நிலவிய இருள் அகலவில்லை. ஆனால் மீண்டும் ஒரு கிறீச்சொலி புறப்பட்டதும் திகைத்து நிமிர்ந்தாள்.

     வெளவால்கள்... புவன சுந்தரி தன் தலை மயிரை ஒருமுறை கோதிவிட்டுச் சுருட்டிக் கட்டி முன்னேறினாள். நாலா திசையும் இலேசாகத் தெரிந்தது. இதோ ஒரு அலாதி மணம் அங்கு பரவியிருப்பதைக் கண்டு மூக்கால் அதை உறிஞ்சிக் கண்டுபிடிக்க முயன்றவள் இன்னும் நாலடி முன்னேறியதும் அங்கு ஏதோ பளிச்சென்று தெரிந்ததைக் குனிந்து கண்டு பார்த்துக் கையில் எடுத்தாள்.

     அது ஒரு முத்திரை மோதிரம். இளம்பிறை போலக் கற்களை வைத்துக் கட்டப்பட்டிருந்தது. மீண்டும் சுற்று முற்றும் நோக்கினாள். ஒரு பெரிய மூட்டை மாதிரி ஏதோ கிடந்தது. அதன் அருகில் போகலாமா, தொட்டுப் பார்க்கலாமா என்று தயங்கியபடி நின்றவள் காதில் ஏதோ ஒரு ஒலி நுழைந்ததும் சட்டெனத் திரும்பினாள் இடையிலிருந்த குறுவாளில் கைவைத்தபடி.

     “யார் நீ?” என்று ஏக காலத்தில் இரு குரல்கள். இவளும் கேட்டாள். குகைக்குள் அப்போதே நுழைந்தவனும் கேட்டான்.

     புவன சுந்தரி பதறிவிட்டாள். உள்ளூர அச்சம் உண்டாகி ஒருமுறை அவளை உலுக்கிவிட்டாலும் சட்டென சுதாரித்துக் கொண்டு “யார் நீ?” என்று கேட்டபடி வந்தவனை உற்றுப் பார்த்தாள்.

     குகைக்குள் நுழைந்து நின்றவன் மிக நெடிய தோற்றத்தினன். கறுத்த மேனியன். சிவந்த கண்கள். ஊடுருவும் பார்வை பயங்கரம்தான். அவற்றை மிகைப்படுத்திக் காட்டின அந்தக் கொம்பு மீசை.

     ‘எங்கோ பார்த்திருக்கிறோம் இந்த ஆளை. எங்கே... எங்கே...?’

     “பெண்ணே, நீ யாராயிருந்தாலும் சரி. நான் உன்னை எதுவும் செய்திடப் போவதில்லை. ஆனால் அதோ அந்த மூட்டையை நீ தொடக்கூடாது. ஏனெனில் அது எனக்குச் சொந்தமானது. அதை எடுத்து போகவே நான் வந்தது. புரிகிறதா?” என்று அவன் சற்றே கரகரத்த குரலில் சொன்னான்.

     “புரிகிறது! ஆனால் திடீரென்று நீங்கள் இங்கு வந்ததும் அந்த மூட்டை உங்களுக்கும் சொந்தம் என்றால் அது வியப்பூட்டுகிறது” என்றாள் நிதானமாக.

     “பெண்ணே! என்னை மரியாதையுடன் அழைத்துப் பேசுவதைப் பார்த்தால் நீ ஒரு பெரும் அந்தஸ்திலுள்ள குடும்பப் பெண் என்று தெரிகிறது. நல்லது, அந்த மூட்டையை நேற்றிரவு கொண்டு வைத்தவன் நான்தான். நான் இந்தப் பகுதியைச் சேர்ந்தவன் அல்ல. இந்த மலையின் அந்தப் பகுதியைச் சேர்ந்தவன். தேவிகாபுரம் தானப்பன் என்பது என் பெயர். போதுமா?” என்று கேட்டான் சற்றே பொறுமையிழந்தவன் போல.

     ‘தானப்பன்... தானப்பன். அப்பாவிடம் இந்தப் பெயருள்ள ஒரு ஆள் முன்னெல்லாம் வருவான். ஊன்றிக் கவனிப்தில்லை. புலித் தோல்களைக் கொண்டு வந்தானே ஒரு முறை. அவனா இவன்?’

     “இந்த மூட்டையில் இருப்பதென்ன? புலித்தோலா? அல்லது...” என்று அவள் கேட்டு முடிப்பதற்குள் குறுக்கிட்ட அவன் “பெண்ணே! எப்படி ஊகித்தாய் நீ? யார் நீ? தயவு செய்து நான் முரடனாவதற்குள் சொல்லிவிடு. ஏன் என்றால் இரவு பூராவும் இதைக் காக்க நான் பட்டபாடு சொல்ல இயலாத ஒரு கொடுமை. நீ பார்ப்பதற்கு ஏன் இந்த மாதிரி கம்பளியைப் போர்த்திக் கொண்டிருக்கிறாய் வெய்யில் வந்த பிறகும்? நீ உண்மையில் யார் பெண்ணே?”

     “நானா? என்னை யார் என்று கூறிவிடுவதற்கும் இந்த மூட்டைக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா? இந்த மூட்டையில் புலித்தோல்தான் இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் நான் யாரென்று கூறுகிறேன்” என்றாள் நிதானமாகவே.

     “நான் முரடனாவதற்குள் நீ உண்மையைச் சொல்லுவதுதான் நல்லது பெண்ணே! தேவிகாபுரம் தானப்பன், அவன் வேட்டையாடிச் செயிக்கும் புலிகளைவிடக் கொடியவன் என்று கூறுவார்கள்.”

     “யாரோ கூறுகிறார்கள் என்பதை நான் எதற்கு ஏற்க வேண்டும்? நான் படவேட்டரசர் மகள்” என்று அவள் மூன்றே வார்த்தைகளில் பதில் கூறியதும் தீயை மிதித்துவிட்டவன் போல் துள்ளிக் குதித்த அவன் “என்ன என்ன படவேட்டரையர் மகளா. கடவுளே! இது உண்மைதானா? அந்த உத்தமரைப் பாவி கம்பிலித்தேவன்...”

     “இல்லை! உலூப்கான்.”

     “இல்லவேயில்லை. நானும் அவனும் உங்கள் மாளிகை எரிந்த போது மூன்று கல் தாண்டியிருந்த ஒரு இடத்தில் பேசிக் கொண்டிருந்தோமே.”

     “அவனில்லாவிட்டால் அவன் உதவி அசன் ஷா.”

     “இல்லை. அவனும் எங்கள் கூடவே இருந்தான். நிச்சயமாகத் துருக்கர் உங்களை அரண்மனையைக் கொளுத்தவில்லை. உங்கள் தந்தையைக் கொல்லவில்லை. அப்படி அவன் செய்திருந்தால் இதோ இந்தக் கைகளே அவன் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கும்” என்று பக்கத்தில் கிடந்த ஒரு கல்லை எடுத்து அவன் கைகளால் அழுத்தியதும் அது பொடிப் பொடியானது கண்டு அவள் பெரிதும் பதறிவிட்டாள்.

     “அப்படியானால் நீங்கள்தான் என் தந்தையிடம்...”

     “ஆம் பெண்ணே! நான் அவரைத் தவிர வேறு யாரையும் சந்தித்ததில்லை. அவர் என்னுடைய மதிப்பிற்குரிய ஆசான். வீராந்தக வில்லவரையரின் நண்பர். சத்திய சந்தர். புலித்தோல்களை அவர் விரும்பி வாங்குவார். எதற்கு? துறவிகளுக்குத் தருமமாக வழங்கிட; அடிக்கடி புலிவேட்டை பற்றி ரசனையுடன் பேசுவார். இதோ இந்த மூட்டையில் இருப்பவை யாவும் புலித்தோல்கள்தான். ஏறத்தாழ இரண்டாயிரம் பொன் பெறும். உலூப்கான் கேட்டான். பொற்காசுகள் கொடுக்கத் தயாராக இருக்கிறான். ஆனால் கடந்த தொண்ணூறு நாழிகைகளாக அவன் அவனாக இல்லை. கம்பிலி தன் மீது அபாண்டம் சுமத்தி தென்னகத்தில் பெரும் அபவாதத்தை உண்டாக்கி விட்டதால் ஒரே ஆத்திரமாக இருக்கிறான். நாலா திசையிலும் அவன் ஆட்களை அனுப்பி கம்பிலியைத் தேடுகிறான். ஆனால் அவன் பழைய பெருச்சாளி. நேற்று இங்கேதான் சுற்றிக் கொண்டிருந்தான். தக்க துணையுடன் இருந்ததால் நான் எதுவும் செய்திட இயலவில்லை.”

     “அப்படியானால் உலூப்கான் எங்கள் மாளிகையில் தீ வைத்த அன்று நீங்கள்...”

     “இல்லை பெண்ணே, அது உண்மையில்லை. படவேட்டடாரைத் தன் கட்சி சேரும்படி உலூப்கான் நயமாகவும் மிரட்டியும் பார்த்திருக்கிறான். பிறகு ஒரு சந்தர்ப்பம் தரலாம் என்று எண்ணியே அப்பால் வந்திருக்கிறான். நான் எதிர்ப்பட்டேன். சம்பூவராயர் பெருமையை நான் விளக்கிக்கூறிக் கொண்டே மைலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். அவன் எந்த காரணம் கொண்டும் படவேட்டரையருடன் போரிடப் போவதில்லையென்றும் அவருடைய துருப்புக்கள் யாவும் கைதான பிறகும் கூட அவர் கலங்கவில்லையே என்று பெருமையுடன் பேசினான். மாலிக்காப்பூர் தென்னகம் ஒரு முறையல்ல நாலு முறைகள் வந்திருக்கிறான். அவனை வீரம் நிறைந்திருந்த மாவீரனாகப் பலர் பேசுகிறார்கள், சிலர் ஏசுகிறார்கள். அவனைவிடத் தான் எல்லாவிதத்திலும் சிறந்தவன் என்று பேரெடுக்க வேண்டுமென்பதே அவா என்று கூறினான். இது நியாயமானதுதான்.

     “ஆலயங்களை அழிப்பது, மாளிகைகளை இடிப்பது, பெண்டு பிள்ளைகளைக் கெடுத்து நாசம் செய்வது, வலுவிழந்தவர்களை நசுக்குவது என்பதுதான் வீரம் என்றால் அது கோழைகளின் கொள்கை என்றேன் நான். இதற்குள் ஒரு வீரன் ஓடி வந்து ‘படவேடு எரிகிறது’ என்று பதற்றத்துடன் கூறினான். உலூப்கான் திடுக்கிட்டான். நான் அவனை வெறுப்புடன் பார்த்தேன். அல்லா மீது ஆணையாகத் தானோ தன் ஆட்களோ இந்த அக்கிரமத்தைச் செய்யவில்லை என்று ஆணையிட்டான். பிறகு சொன்னான் சம்பூவராயர் தமது பூசை அறைக்குச் சென்றார் என்று. நான் சொன்னேன், அவர் பூசை அறைக்குள் புகுந்துவிட்டால் உலகையே மறந்திடுவாரே, என்ன ஆயிற்றோ? என்று குமுறினேன். நாங்கள் ஒட்டு மொத்தமாக திரும்பினோம். ஆனால் அதற்குள் தீத்தேவன் தன் பணியை முடித்துக் கொண்டுவிட்டான்.

     “உலூப் குழந்தை போல அழுதான். ‘வேட்டைக்காரரே! அவருக்குத் தெய்வீகமான அழகும் களங்கமற்ற புஷ்பங்களைப் போன்ற முகமும் கொண்ட இரு மகள்கள்! பாவம், அவர்கள் எங்கள் எதிரில் வந்ததும் எப்படி நீங்கள் இங்கே வரலாம் என்று கூடப் பதறினார். சம்பூவராயர் என்னைக் காமுகன் என்று எண்ணிவிட்டார் போலும். பரவாயில்லை. ஆனால் நான் கேவலம் அவர்களைக் கொன்றுவிட்ட அக்கிரமக்காரன் என்றல்லவா உலகம் என்ன ஏசிடும். நல்ல பேர் எடுத்திட விரும்பும் எனக்கு இப்படி ஒரு அவலப்பேர் கிட்டினால்...’

     “தவித்தான், புலம்பினான். அது போலியல்ல. அவன் இதயமே அழுகிறது என்று நான் அறிந்தேன். ‘யாராயிருந்தாலும் சரி, அவர்களை சும்மாவிடப் போவதில்லை என்று சவால் விட்டுவிட்டுத் தன் ஆட்களுடன் இன்று தென்னகமெங்கும் அலைகிறான் அந்த அக்கிரமக்காரர்களைத் தேடி. ஆனால் விதியின் போக்கே வேறல்லவா?

     “நேற்றிரவு நான் இந்தக் குகையில் என்னுடைய இந்த மூட்டையுடன் தங்கியிருந்தேன். கம்பிலித்தேவன் தன் கைக்கூலிகளுடன் வந்து கன்னி வேட்டையாடினான். அந்தப் பாவி பில்லமன் வேறு அவனுக்குத் துணை! நல்ல காலம், அவன் கண்களில் நீ... பெண்ணே, என்னை மன்னித்துவிடு. உன் சகோதரியை நான் அடிக்கொரு முறை பார்த்திருக்கிறேன். பொதுகைக்கு அடிக்கடி தன் தோழிகளுடன் வருவதுண்டு. அவள் நலந்தானே?” என்று தொடர்ந்து கேட்டான்.

     “யாரது? தானப்பனா?” என்ற குரல் ஒன்று குறுக்கிட்டதும் திடுக்கிட்டு திரும்பியவன் குகை வாயிலில் வில்லவராயர் நிற்பதைக் கண்டு ஓடி வந்து அவர் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்துவிட்டான்.

     இந்தக் காட்சியைக் கண்டு சில நொடிகள் உணர்ச்சி வசப்பட்டுத் தன்னையே மறந்து நின்றாள் புவன சுந்தரி. தன்னை யாரோ தொடுவது உணர்ந்து கண்களை விழித்தவள் அக்காள் அமரசுந்தரி நிற்பதைக் கண்டு அவளை அணைத்துக் கொண்டாள்.

     “நீ குகை தேடிப்போய் நெடுநேரம் ஆயிற்றே என்ற கவலை எங்களை இங்கே கொண்டு வந்துவிட்டது புவனி. இங்கே வந்ததும் தேவிகாபுரம் தானப்பரைக் கண்டதும் நமக்கு ஆயிரம் யானைப் பலம் வந்துவிட்டது என்று நிம்மதியுண்டாகிவிட்டது” என்றாள் திணறித் திணறி மூச்சுவிட்டுக் கொண்டே.

     அக்காளின் நிலைமை தங்கையை விழிப்புறச் செய்தது. மேலேயிருந்து இறங்கி மலைப்பாதையில் நடந்து வந்ததில்...

     “அக்கா, இப்படியே படுத்துக் கொள்” என்று சொல்லிவிட்டு மூட்டையிலிருந்து புலித்தோலை எடுத்து விரித்தாள். தங்கையின் கட்டளையை மதித்தோ அல்லது சிரமம் தாங்காமலோ அக்காள் அமரசுந்தரி சட்டெனப் படுத்துவிட்டாள்.

     கிழவர் வெளியே ஏதோ தானப்பரிடம் சொன்னதும் அவர் ஒரு நொடி கூடத் தயங்காமல் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு மாதிரி பாய்ந்தோடினார்.

     புவன சுந்தரி வெளியே வந்ததும் கிழவர், “மகளே, இன்னும் கால் நாழிகையில் வந்துவிடுவான் தானப்பன் வேடுவப் பெண்களுடன். முருகன் அதுவரை நமக்குத் துணை நிற்பான்” என்று ஒரு பெருமூச்சு விட்டதும் புவன சுந்தரி, “உங்கள் பேரன்?” என்று ஒரு கேள்வி போட்டாள்.

     பெரியவர் விஷயம் அறிந்தவர் போல் “அவனும் விரைவில் திரும்பிவிடுவான். சரி, நீ போய் முதலில் அதோ பார், அங்கே ஒரு அருவியிருக்கிறது. போய் முகத்தை... இரவு பூராவும் தூங்கவில்லை நீ. ஆகாரமும் இல்லை. கடவுளே.”

     “இல்லை தாத்தா, பசி இல்லை. இதோ வந்துவிடுகிறேன்” என்று நொடியும் தாமதிக்காமல் அருவியை நோக்கிப் பறந்துவிட்டாள் அரிவை!