உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
வில்லவன் தேவி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 2 உடல் நடுக்கம், மனக் கலக்கம் இரண்டுமாகச் சேர்ந்து இரு பெண்களையும் அந்த நேரத்தில் நிலைகுலையச் செய்துவிட்டன. இப்போது புதிய அபாயம். கம்பிலித்தேவனை விட இந்த உலூப்கான் கொடியவனோ, இல்லையோ தெரியாது. ஆனால் சம்பூவராயர்கள் முன்னே துருக்கர்களை எதிர்த்தவர்கள். இந்த நொடி வரை அந்தத் துருக்கர்கள்தான், உலூப்கான்தான் தங்கள் தந்தை மாளிகையில் பூசித்துக் கொண்டிருந்த போது தீ வைத்தார்கள்; தங்களைப் பிடித்து வா, மானபங்கப் படுத்துவோம் என்று மிரட்டியவன் என்ற நினைவில் இருப்பவர்கள். எனவே நாரைக்குப் பயந்த தேரை நாகப் பாம்பின் வாயில் விழுந்த மாதிரி, இவனிடம் சிக்கிக் கொண்டால்... தவித்துப் போனார்கள். ஆனால் கம்பிலித்தேவன் கூட்டம் அப்பால் ஓடியதும் மீண்டும் அமைதி பயங்கரமாக நிலவுவதேன்? ஏன் உலூப்கான் ஆட்கள் அங்குமிங்கும் தேடி ஓடி அலையவில்லை? திடீரென்று அவன் போட்ட சத்தம் அடங்கிவிட்டதே! தவிர தங்களுக்கு அருகே, அண்மையில் வந்தவன் யார்? அவன் இப்போது எங்கே? எதிரிகளில் எவனாவது தங்கள் அருகிலேயே வந்து பதுங்கியிருந்து இப்போது பாய்ந்துவிட்டால்... புவனசுந்தரி ஒரு முறை நடுங்கிவிட்டு அக்காளைச் சட்டென அணைத்துக் கொண்டாள். தங்கையை அன்புடன் வருடிக் கொண்டே அக்காள் “புவனி, கலங்காதே... இனி நாம் பொழுது புலரும் வரை இதை விட்டு அசைவதற்கில்லை. குளிரும் பனியும் நம்மை அதுவரை உயிருடன் வைக்குமானால் காலையில் எப்படியாவது பிழைத்துக் கொள்வோம்!” என்றாள் நிதானமாக. “எப்படி அக்கா! அந்தப் பாவிகள் போய்விட்டால் இந்தப் பாவிகள்...” என்று அவள் பதற்றத்துடன் கூறிவிட்டு மேலே ஏதோ சொல்வதற்குள் மீண்டும் அருகே ஒரு சலசலப்பு கேட்டதும் அமரசுந்தரியும் இப்பொழுது அரண்டுவிட்டாள். “உலூப்கானோ அசன் அலியோ... யாரோ நம் அருகில் வந்திருக்கிறான் புவனி... வாளை எடுத்துக் கொள்... கடவுளை ஒரு முறை வேண்டிக் கொள்வோம்...” “கடவுளை ஒரு முறையல்ல, பலமுறை வேண்டலாம், தவறில்லை. ஆனால் அதற்கு வாள் தேவையில்லை” என்று மிருதுத்தன்மை நிறைந்த ஒரு கம்பீரக் குரல் மிக நிதானமாகப் பரப்பரப்பில்லாமல் வந்தது அவர்களை நோக்கி. “யார் நீ... அசன் அலியா...?” “அசனும் இல்லை. அலுப்பும் இல்லை. அடியேன் பெயர் ரொம்பவும் சாதாரணமான பெயர் விஜய குமார வில்லவராயன் என்பது...” என்று பதில் தெளிவாக வந்ததும் அமரசுந்தரி அந்த இருட்டில் கண்களை ஊடுருவவிட்டு உன்னிப்பாக நோக்கினாள். ஆட்களை அடையாளம் புரிந்து கொள்ளும்படியான ஒளி இல்லை. என்றாலும் அமரசுந்திரியின் மனதில் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை துளிர் விடலாயிற்று. “மூன்று முகங்கள் வைத்த கைப்பிடி கொண்டது, வில்லவரையர்களின் வாள்..” என்றாள் பளிச்சென்று. “இதோ அது நகர்த்தப்படுகிறது தங்களிடமிருந்து பதில் பேச்சாக வரும் திசை நோக்கி...” என்று அவன் தன் வாளைக் கீழே வைத்து மெதுவாக நகர்த்தினான். “அக்கா, ஜாக்கிரதை...” என்றாள் புவன சுந்தரி. “எச்சரிக்கையாயிருப்பது அவசியம்தான்!” என்றான் விஜய குமாரன். அமரசுந்தரி அந்த இருட்டில் கூடப் பளிச்சென்ற மின்னி வரும் அந்த வாளை மெதுவாக எடுத்தாள்... மேலே உள்ள பிடியைத் தடவிப் பார்த்தாள். ஆம்! அது மூன்று முகப் பிடிவாள்தான்! “கடவுளே நீ இன்னும் சாகவில்லை” என்றாள் நங்கை. இதைக் கேட்டதும் இலேசாகச் சிரித்துவிட்டான் இளைஞன். “கடவுளைச் சாக அடிக்கும் அளவுக்கு நாம் நொந்துவிட்டோம். பரவாயில்லை. இனி அவர் தயவும் நமக்குத் தேவை” என்றான். “இனிதான் பயம். அசன் உங்களைத் தேடுகிறான். உலூப்கான் வஞ்சம் தீர்ப்பதில் பயங்கரமானவன். வில்லவரையர் கம்பிலியைப் படுத்திய பாட்டுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல உலூப்கானைப் படுத்திய பாடு.” “உண்மை. ஆனால் அவர் உயிருடன் இல்லை.” “இருந்தாலும் அவர் மகனாகிய நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் தாத்தாவைத் துணையில்லாமல் விட்டுவிட்டு எங்ளுக்காக நீங்கள் வந்திருப்பது தெய்வம் வந்த மாதிரிதான். என்றாலும் மாவீர ஏகாந்தர் உலுத்தனிடம் சிக்கும்படி விடுவதோ அல்லது உங்களை அவர்கள் பிடிப்பதோ கூடாது.எனவே முதலில் நீங்கள் இங்கு இருப்பதறிந்தால் எங்களை மறந்துவிட்டு அதோ நிற்கும் அந்தக் கொடியவன் உங்களை...” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள். “இல்லை! அது அசனும் அல்ல, உலூபும் அல்ல. என் தாத்தாதான். உலூப்கான் மாதிரி சத்தம் போட்டவரும் அவர்தான். கம்பிலித்தேவன் வேறு எதற்கும் அஞ்சுபவன் அல்ல. நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்ட தன்னை உலூப்கான் விடமாட்டான் என்பதுதான் அவனுடைய ஒரே பயம்” என்றான் விஜய குமாரன். “அப்படியானால் வீராந்தகத் தாத்தாவா அந்த மாதிரி மிலேச்சக் குரலில் கத்தினது...?” என்று அதிசயத்துடன் கேட்டவள் அமரசுந்தரி அல்ல, புவன சுந்தரி! குரலே இவ்வளவு இனிமையாக இருக்கிறதே! இந்தத் தேன் குரலுக்குச் சொந்தக்காரியான அவள்... எவ்வளவு அழகாயிருப்பாள்... என்று அந்தப் பயங்கரமான சூழ்நிலையிலும் ஒருகணம் நினைக்காமலில்லை அவன். எனினும் சுதாரித்துக் கொண்டுவிட்டான். “தாத்தா வடபுலத்தில் நெடுங்காலம் இருந்தவர். புலி வேட்டையாடுவதில் நிகரற்ற அவர் வடநாட்டிலுள்ள பல மன்னர்களுக்கு அவ்வகை வேட்டைக்குப் பயிற்சியளித்தவர்.” “தெரியும். வில்லவரின் வில் பார்த்தனுடைய வில்லுக்குச் சமம் என்பார் அப்பா அடிக்கடி.” “இனி அந்த அன்புக்குரல் நம் காதில் ஒலித்திட முடியாது அக்கா...” என்று கூறிய புவனசுந்தரியின் குரல் தழுதழுத்தது. அன்புடன் அவளை அணைத்த அக்காள் “நடந்தது நடந்துவிட்டது. நாம் கலங்குவதன் மூலம் சோர்வடைகிறோம். வேறு பலன் இல்லை புவனி... நீ சற்று இப்படியே இரு...” என்று கூறிவிட்டுச் சட்டென எழுந்து தன் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டாள். அங்கே எடுப்பான தோற்றத்துடன் நின்றிருந்தான் விஜய குமார வில்லவரையன்! அமரசுந்தரிக்கு அவன் நின்றிருந்தது தெரிந்ததேயன்றி அவன் முகம் தெரியவில்லை. என்றாலும் மனதில் தெளிவும் தெம்பும் உண்டாக அந்தத் தெளிவும் அப்போது போதுமானதாயிருந்தது. “நீங்கள் இருவரும் இங்கேயே இருங்கள். தாத்தா அதோ அந்தக் குன்றில் இருக்கிறார். அவரைப் போய் இங்கே அழைத்து வருகிறேன்” என்று புறப்பட்டான். “தேவையில்லை, நாங்களே அங்கே வருகிறோம்” என்றாள் அமரசுந்தரி. இதுவரை இருந்த சோர்வும் கலக்கமும் சட்டென விலகி அங்கே அலாதி நிம்மதியும் புதிய வலுவும் கூட அல்லவா தோன்றிவிட்டது! “ஆமாம் அக்கா! நாம் எத்தனை நாழிகையாகத்தான் இங்கே முடங்கிக் கிடப்பது...” என்று கூறியபடி எழுந்து மெதுவாக வந்தாள் புவனசுந்தரி. “இவள் என் தங்கை புவனசுந்தரி.” “என் பெயர் உங்களுக்குத் தெரியும்...” “அது மட்டும் இல்லை. நீங்கள் பேசிக் கொண்டிருந்தது. அத்தனையும் தெரியும். தாத்தாவை அப்படி என்ன ஆனாலும் ஆகட்டும் என்று விட்டுவிட்டு வரலாமா?” என்று கேட்டாள் புவனி. “கூடாதுதான். ஆனால் தாத்தா கட்டளையை மீறிய குற்றத்துக்கு ஆளாகலாமா? எனவே அவர் யோசனையை ஒப்பினேன். பதிலுக்கு நான் ஒரு யோசனையைக் கூறினேன். இப்போது அவரும் பிழைத்தார், நாமும் பிழைத்தோம்.” “உலூப்கானும் ஆவி போல இங்கே வந்து போயிருக்கிறான் இந்தக் குயுக்தியான யோசனை மூலம்!” என்றாள் குறும்புக்காரி புவனசுந்தரி. வில்லவன் அதை உள்ளத்தில் மீறி எழுந்திட்ட உவகை உணர்ச்சியுடன் ஏற்றான்! ‘ஏ பாழும் இருளே! நீ சீக்கிரமே தொலையக் கூடாதா? அழகிய முக தரிசனத்தைக் கூட தெரியாமல் செய்கிறாயே?’ “உங்களுடைய குதிரைகள்...” என்று இழுத்தாள் தங்கள் குதிரைகளைப் பிடித்த புவனி. “எங்களுக்கு குதிரைகள் இல்லை. நாங்கள் இந்தப் பகுதிக்கு கால்நடையாகவே வந்தோம்” என்றான் நிதானமாக. “அடக்கடவுளே... இது எவ்வளவு கொடுமை? எப்படி கிழவரும் நீங்களும் இந்தக் கல்லிலும் முள்ளிலும்... கால்கள் ரணமாயிருக்குமே...?” அழகி இப்படிச் சொல்லிவிட்டு அந்த இருட்டில் தன் கால்களைப் பார்த்து அனுதபிக்கிற மாதிரி ஒரு பிரமை ஏற்பட்டது. அவனுக்கு... கால் முழுவதும் ரணமாகிக் கிடக்கிற அவல நிலையை அவள் காணக் கூடாதே என்றும் நினைத்தான். “பாவம்! தாத்தாவுக்குத்தான் சித்திரவதை. குதிரைகளை நாங்கள் இழந்த கதை நீளமானது. ஒரு இடத்தில் கூட நாங்கள் தங்க முடியாத நிலை! தாவுத்கான், உலூப்கான், அசன்ஷா, பல்லாளர் எல்லோருமே எங்களைத் தேடுகிறார்கள். துருக்கரிடம் இருந்து தப்பினால் போதும் என்ற சாக்கில் எங்களை எப்படியாவது பிடித்துக் கொடுப்பதில் பல்லாளர் கூட நிரம்ப அக்கறை காட்டுகிறாராம்! தாவுத்கான் குழுவுடன் கூடச் சேர்ந்து எங்களை கண்டுபிடிப்பதில் தீவிரமாய் இருக்கிறார்கள். மதுரைக்குப் போயுள்ள பெரும் படைகள் திரும்பி வருவதற்குள் எங்களைப் பிடித்துவிட வேண்டும் என்று கட்டளை போட்டு இருக்கிறார்.” “சே! பல்லாளர் இவ்வளவு சுயநலக்காரராக இருப்பது நமக்கு எல்லாம் கேவலமில்லையா?” “அவர் என்ன செய்வார்? கம்பிலித்தேவரா? உலூப்கானா? என்று ஆராய்ந்தவர், தேவருக்கு இவனே தேவலை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அவ்வளவுதான்! அவரைச் சொல்லிக் குற்றமில்லை! காலம் செய்யும் கோலம்!” “இல்லை! சுயநலம் செய்யும் வேலை! ஏன் துருக்கர்களை அவர் எதிர்க்கவில்லை?” “அது சாத்தியமில்லை. லட்சக்கணக்கில் படைகளைக் கொண்டு வந்துள்ள துருக்கரிடம் நம்மில் இன்று எவரும் நேர் நின்று யுத்தம் செய்வது என்பது சாத்தியமில்லை.” “அந்தத் திமிரால்தான், எங்கள் தந்தையை, நாட்டை, வீடு வாசலை அந்த துருக்கர்...” “இல்லை. அதை நான் சிறிதும் நம்பவில்லை. கம்பிலிதான் இந்தக் கொடுமையைக் செய்திருக்கிறான். அவன் சற்று முன்னே பேசியதிலிருந்தே என் ஊகம் உறதிப்படுகிறது. என்றாலும்...” “எங்களைப் பொறுத்தவரை எதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. என்றாலும் சற்று முன்னர் அவன் போட்ட சத்தம் எங்கள் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்திவிட்டது என்பது மட்டும் உண்மை.” “நான் இதைத் தெளிவுபடுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன். உலூப்கான் கொடியவன்தான். ஆனால் வீரன். இம்மாதிரி தீ வைப்பதும், பெண்களை விரட்டுவதும் போன்ற தீமைச் செயல்களைச் செய்யக் கூடியவன் அல்ல என்று என் தந்தை என்னிடமே கூறியுள்ளார். நானும் இதை நம்புகிறேன்” என்றான் அழுத்தமாக. சிறிது நேரம் கழித்து அமரசுந்தரி தன் நிலையை விளக்கினாள். “எங்கள் நிலையில் நீங்கள் அன்று இருந்திருந்தால் இந்த முடிவுக்கு வந்திருப்பீர்களா என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நாங்கள் புதுவைத் துறைக்குப் போய்விட்டு அப்பொழுதுதான் அரண்மனைக்கு திரும்பினோம். எங்கெல்லாமோ சுற்றி வந்த அலுப்பில் நான் உறங்கிவிட்டேன் என் அறையில். இவள் ஓடி வந்து என்னை எழுப்பி ‘அக்கா, அந்தத் துருக்கர்கள் வந்திருக்கிறார்கள். நமது தளபதிகள் நால்வரையும், அறுநூறு படை வீரர்களையும் கைதாக்கியிருக்கிறார்கள். நம் அரண்மனையைச் சுற்றிலும் அவர்களுடைய ஆட்கள் சுற்றுகிறார்கள்’ என்றாள். நான் விதிர்விதிர்த்துப் போய், வா அப்பாவிடம் போவோம்” என்று கூறி, அவளுடன் அப்பா இருந்த மத்திய அறைக்குச் சென்றேன். “என் தந்தை நடுநாயகமாக தமது இருக்கையில் வழக்கம் போல அமர்ந்திருந்தாலும் அவர் முகம் கடுகடுப்பாயிருந்தது. அவரைச் சுற்றி உலூப்கான் மட்டும் அல்ல மற்றும் பதின்மர். ‘நீங்கள் ஏன் வந்தீர்கள்!’ என்று எங்களைப் பார்த்து அவர் மிக்க சினத்துடன் கேட்ட பிறகுதான் நான் செய்த தவறு புரிந்தது. பதில் பேசாமல் திரும்பினேன். ஆனால், ‘சம்பூவராயரே இப்போதாவது கூறுங்கள். உங்கள் மகள்களின் எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறதல்லவா?’ என்று உலூப்கான் வேகத்துடன் கேட்டதும், வாயிற்படி தாண்டிய நாங்கள் திடுக்கிட்டு நின்றோம். ‘இதே பார் உலூப்... நீ இல்லை, அந்த துக்ளக்கே வந்தாலும் சரி, நாட்டுக்குத் துரோகம், நம்பிக்கைத் துரோகம் இரண்டும் செய்ய இயலாது. நீயோ, மற்றவர்களோ செய்தாலும் என்னால் பொறுக்கவும் இயலாது. இதுதான் முடிந்த முடிவான வார்த்தை’ என்றார். உலூப்கான் கோபத்தை அடக்க முடியாமல், ‘இப்போது நீங்கள் பேசும் நியாயம் எப்போதோ உங்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். உங்களுக்கு அன்றே அப்படித் தோன்றியிருந்தால் நாங்கள் இந்த பகுதிக்கே வந்திருக்க மாட்டோம். இப்போது நிலைமை மிஞ்சிவிட்டது. மாலிக்காபூர் மகா கெட்டிக்காரன். நான் ஏமாந்தவன் என்று பேரெடுக்க நான் தயாராக இல்லை. தங்களை வெல்லுவது அல்லது அடியோடு தீர்த்துவிடுவது என்பது ஒருவகை; மாறாக நீங்கள் பல்லாளர் போல எங்களுடன் ஒத்துழைக்க முன் வருவது என்பது இன்னொரு வகை; இரண்டாவது முறையை நானே உங்களிடம் வந்து கூறியது உங்கள் நன்மையை உத்தேசித்தான். நீங்கள் ஒத்துழைக்கவில்லையேல் பின்னர் நடப்பது...’ ‘எதுவாயிருந்தாலும் நான் மாறப்போவதில்லை. வீர பாண்டியர் என்று தென்னகத்துக்குள் உங்கள் கூட்டத்தைக் கொண்டு வந்தாரோ அன்றே இந்தப் பகுதிக்குச் சனியன் பிடித்துவிட்டது. இப்போது பல்லாளர் அவ்வளவுதான்’ என்றார். ‘சம்பூவராயரே, நன்றாகச் சிந்தித்து பதில் கூறுங்கள். உங்களைப் போலத்தான் தேவகிரி யாதவ ராமச்சந்திர தேவரும் அவர் மகன் சங்கமத் தேவரும் நடந்து கொண்டார்கள். இன்று அவர்கள் கதி...’ ‘மீண்டும் மீண்டும் மிரட்டுவதில் பொருளில்லை உலூப்கான். ஆற்காட் அரசனும், அண்ணாமலைப் பல்லாளனும் உங்களுடைய நண்பர்கள் ஆனதைப் போல நான் ஆகத் தயாராக இல்லை என்று கூறும் போது திரும்பத் திரும்ப என்னையும் அதே போலச் செய்யச் சொன்னால் செய்வேனா என்று சிந்திக்க வேண்டியது நீதானே அன்றி நானல்லவே...’ உலூப்கான் அப்போதும் விடவில்லை. ‘சம்பூவராயரே இன்னும் ஒரு நாழிகைக் காலம் சிந்திப்பதற்கு அனுமதிக்கிறேன். பிறகு நடப்பது எதுவானாலும் அதற்குப் பொறுப்பு நீங்களே அன்றி நானல்ல’ என்று கூறிவிட்டு, ‘அசன், நாம் சற்று அப்பால் சென்று வருவோம். சம்பூவராயருக்கு தனித்து சிந்திக்க இடமளித்துவிட்டு’ என்று சொல்லிக் கொண்டே அப்பால் நகர்ந்தான். அவன் அவ்வறையைவிட்டு வெளியேறியதும் கலக்கத்துடன் நான் அப்பாவிடம் ஓடினேன். எங்களைக் கண்டதும் அப்பா சற்றே கோபத்துடன் ‘அமரசுந்தரி, அவன் வந்திருக்கும் போது நீங்கள் இருவரும் வரலாமா? மிலேச்சர்களின் மனப்பாங்கு அறியக் கூடிய பக்குவம் உனக்கு இல்லையே... சரி, சரி, நீங்கள் உங்கள் அறைக்கு போங்கள். போகும் போது பூசாரியாரை என்னுடைய பூசை அறைக்கு அனுப்பி வை’ என்றார். நான் எப்படியோ துணிவு பெற்று ‘அப்பா, நமக்கு இந்தத் துருக்கனால் நிச்சயம் ஆபத்து ஏற்பட்டுவிடும். அப்பா... நான் புதுவையிலிருந்து வரும் போது நமது காவலர்களையோ படையினரையோ எங்குமே பார்க்கவில்லை அப்பா. எங்கு பார்த்தாலும் நம் படையினர் யாரையுமே காணவில்லை.’ ‘தெரியும் சுந்தரி. நாம் அவன் போடும் நிபந்தனைப்படி ஒத்துழைக்க ஒப்பினால் அவன் நிச்சயம் போய் விடுவான். அதற்காக ஒரு நாளும் சுயநலத்துக்காக நான் நியாயத்தை பலி கொடுக்க விரும்பவில்லை’ என்றார். இப்படி அவர் கூறியதும் என்ன பதில் கூறுவதென்று எனக்குப் புரியவில்லை. இதற்கிடையே புவனி ஓடி வந்தாள் பரபரப்புடன். ‘உலூப்கானும் அவனுடைய உதவிகளும் திடீரென்று கோட்டைக்கு வெளியே போய்விட்டார்கள்’ என்றாள். அப்பா, ‘சரி போகட்டும்’ என்று சொல்லிவிட்டுச் சிறிது நேரம் எதுவும் பேசாமலிருந்தார். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டு ‘அமரசுந்தரி, நீயும் புவனியும் இனி இங்கிருப்பதற்கில்லை. உடனே வெளியேறி விட வேண்டும். எனவே அதற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்து கொண்டு தயாராகுங்கள்’ என்று கூறிவிட்டு என் பதிலைக் கூட எதிர்பாராமல் சட்டெனத் தமது பூசை அறைக்குள் போய்ப் புகுந்து விட்டார். அவர் பூசை அறைக்குள் புகுந்ததும் நானும் புவனியும் எங்கள் அறைக்கு ஓடினோம். ஆனால் அடுத்த நொடியே ‘தீ! தீ! ஐயோ! யாரோ நெருப்பு வைத்துவிட்டார்கள்...’ என்று கூக்குரல் எழுந்தது. நான் அதிர்ந்து போய் நின்றேன் சில நொடிகள். திடீரென்று யாரோ அங்குமிங்கும் ஓடும் சப்தம். குய்யோ முறையோ என்று எங்கள் அரண்மனை ஆட்கள் கதறிக் கொண்டு பதறும் அவலச் சத்தம். அறையில் அவசரம் அவசரமாக ஆடையணிந்து கொண்டிருந்த நாங்கள் என்னவோ ஏதோவென்று பதறிப்போய் வெளியே வந்ததும் திடீரென்று அரண்மனையில் ஏதோ ஒரு இடத்திலிருந்து உலூப்கான், ‘இந்தக் கிழவன் அந்தப் பூசை அறைக்குள்ளேயே சாகட்டும். அந்தப் பெண்களை விட்டுவிடாதீர்கள்’ என்று கத்திய சத்தம் கேட்டதும் நான் சட்டென உள்ளே புகுந்து கதவைச் சாத்திக் கொண்டேன். அச்சமும் கலக்கமும் எங்களை செயலறச் செய்துவிட்டது. ஒரே புகை மண்டி எங்கும் சடார் படார் என்று சுவர்களும் மாடங்களும், மேல் உத்தரங்களும் வெடித்தன நாலா புறமும். எங்கிருந்தோ பூசாரி பொன்னப்பர் ஓடி வந்தார்! அவர் ஆடைகளில் கூட தீ. ‘சீக்கிரமாக இப்படி வாருங்கள்’ என்றார். நாங்கள் அவர் பின்னே ஓடினோம். அவரால் மேலே நடக்க முடியவில்லை. ‘இளவரசிகளே பின் பக்கம் குதிரைகள் தயாராக இருக்கின்றன... சீக்கிரம் தப்பிவிடுங்கள்’ என்றார். ‘அப்பா...’ என்று கத்தினாள் புவனி. ‘அவர் தெய்வமாகிவிட்டார்!’ என்று சொன்னபடி அவர் வேறு பகுதிக்கு ஓடினார் துணிகளைக் களைய. அவ்வளவுதான்... புவனி, அப்பா என்று கதறத் துவங்கியதை நான் கஷ்டத்துடன் அடக்கிச் சட்டென்று வெளியேறி எப்படியோ குதிரை மீது ஏறிவிட்டோம். அப்புறம் நாங்கள் திரும்பிப் பார்க்கவும் அஞ்சி ஓடினோம்... ஓடிக் கொண்டேயிருந்தோம். இப்போது...” என்று தொடர்ந்து பேசியவள் ஆயாசத்துடன் பின்னால் கல்லில் சாய்ந்து உட்கார்ந்ததும் அவள் பின்னால் நிற்கும் புவன சுந்தரியை குமாரன் உற்றுப் பார்த்தான். அலங்கோலமான ஆடைகள் காற்றில் அசைந்தன. ஆயினும் அழகானதொரு சிலையாக நிற்கும் அவளை அதற்கு மேலும் நோக்காமல் கண்களை மூடிக் கொண்டு சட்டெனத் திரும்பினான், அந்த ஆண் மகன். “கடவுள் எவ்வளவு பயங்கரமான சோதனைகளை நடத்துகிறார். தான் படைத்த மக்களையே கருவிகளாகக் கொண்டு” என்று பொருமியபடி அங்கிருந்து நகர்ந்தான். பனி மூட்டம் சற்றுக் கலையவும், அதுகாறும் பரவிருந்த மூடுதிரை விலகத் துவங்கிய நேரம். தாத்தா விக்கிராந்தர் தம் இருப்பிடத்திலிருந்து நகரவில்லை. பேரனைக் கண்டதும் “கடவுள் அவர்களை காப்பாற்றியதற்காக நன்றி கூறுவோம்!” என்றார். “இல்லை தாத்தா! நான் நன்றி கூறத் தயாராக இல்லை. தென்னகத்தின் மாவீரர் சம்பூவராயர். அந்தக் காலத்தில் தான தருமங்களைச் செய்து தரத்தில் உயர்ந்த குடும்பம் அது. அந்தக் குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு இன்று மானங் காத்திட ஆடை அணிகூட இல்லாமல் கலையச் செய்துவிட்ட அந்தக் கடவுளுக்கு நன்றி வேறாக்கும்!” என்று ஆத்திரத்துடன் பேசியதும் பெரியவர் பதறிவிட்டார். சிறிது நேரம் அவர் வாய்விட்டுப் பேசவில்லை. பிறகு நிதானமாக எழுந்தார். “வா குமரா... நாம் அவர்களிடம் போகலாம்” என்று அடிமேல் அடி வைத்ததும் அவன் திடுக்கிட்டு அவர் கால்களை நோக்கினான்... கால்கள் ரணத்தினால் புண்ணாகி இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. “தாத்தா...” “ஆமாம் குமாரா... விஷக்கற்களில் கால்களை வைத்துவிட்டேன். நீ பக்கத்தில் இல்லாத போது... பரவாயில்லை இது பற்றியெல்லாம் கவலைப்பட நேரமில்லை. முதலில் அந்தப் பெண்களை காத்திடுவதுதான் தலையாய கடமை” என்று விந்தி விந்தி நடந்தவரை தோளில் தாங்கி மெதுவாக நடந்தான் விஜயகுமார் வில்லவராயன். இருள் பிரிந்திட்ட நேரம். பனியும் விலகும் நிலையேற்பட்டதால் ஆங்காங்கு ஒளிக்கீற்றுகள் மின்னிடத் துவங்கி அக்காள் நிலை மிகவும் மோசமாகிவிட்டது என்று உணர்ந்த புவன சுந்தரி தன்னையே ஒருமுறை பார்த்துக் கொண்டாள். அவளுக்கே நாணம் ஏற்பட்டுவிட்டது. அரைகுறையாக ஆடை தரித்த நேரம், குதிரை மீது வந்த வேகத்தில் காற்று செய்த உதவி மேலாடைகள் விலகி ஓடிவிட்ட விதி... எஞ்சியவை மலை மீது கிடந்த புதர்கள், முட்செடி, கொடிகள் செய்த பேருதவியால் உள்ளதும் போச்சு! சே! முகத்தைப் பொத்திக் கொண்டாள். பிறகு “அக்கா... அக்கா...” என்று எழுப்பினாள். அவள் சற்றே கண்களைத் திறந்து பார்த்தாள் தங்கையை. தாங்கள் இருக்கும் அலங்கோல நிலை அவளை என்னமோ செய்தது. “சற்று மறைவில் செல் புவனி... முதலில் நம்மை மூடிக் கொள்ள ஏதாவது செய்ய வேண்டும். இதுவரை இருளும் பனியும் உதவிற்று... இனி...” அவர்கள் இருவரும் மேலே வரும் நடைச் சப்தமும் பெரியவரின் “உம்” சப்தமும் அவர்கள் காதில் கேட்டதும் சட்டென ஒரு பாறை மறைவில் பதுங்கினாள் புவன சுந்தரி. தன் மீதுள்ள கொஞ்ச நஞ்சம் ஆடைகளைத் திருத்திக் கொள்ள முயற்சித்த அமரசுந்தரி, “வில்லவத் தாத்தா எங்கள் நிலை பரிதாபமாயிருக்கிறது!” என்றாள் விம்மும் குரலில். “மகளே! இதோ இரு கம்பளிகள். முதலில் இதைப் போர்த்திக் கொள்ளுங்கள்” என்றார் அவர். நிமிர்ந்தவள் அங்கு விஜய குமாரனைக் காணவில்லை. அவனுக்கு நன்றியை மனதுள்ளே செலுத்தியவள், “புவனி, நம் சுயநலம் தாத்தாவையும் அவர் பேரனையும் குளிரின் கொடுமைக்கு இலக்காக்கி விட்டது. இருந்தாலும் வேறு வழியில்லை! இந்தா, இதை அணிந்து கொள்” என்று நீட்டியதும் புவன சுந்தரி பெற்றுக் கொண்டாள். பனி மூட்டம் நன்றாகக் கலைந்துவிட்டது. புவன சுந்தரி வியப்புடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். சுற்றிலும் ஒரே மலைகள், காடுகள்; வானமும் பூமியும் ஒன்றாகிவிட்ட மாதிரி ஒரு தோற்றம். அந்தப் பதினாறு வயது பருவக் குமரிக்கு புதியதோர் உற்சாகம், சிலிர் சிலிர்ப்பு. கம்பளி மூடிய பிறகும் இயற்கையின் அழகுக் கொடைகளால் உருவான அவள் மீண்டும் ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தவாறு சுதந்திரமான நிம்மதியை சற்றே சுவாசிக்க முயன்றாள். “மகளே... நீ இந்த நிலையில் புறப்படும்படி செய்துவிட்ட விதியைப் பற்றி இனி அழுது பயனில்லை. தெய்வம் தங்களைப் பொறுத்த வரையில் மிகப் பயங்கரமாக விளையாடிவிட்டது. என்றாலும் இருள் போய் ஒளி வருகிறது பார். அது போல உங்கள் வாழ்விலும் ஒளிமயமான காலம் வருகிறது மகளே!” என்று தழுதழுக்கும் குரலில் கூறிவிட்டு “எங்கே உன் தங்கை?” என்ற ஆர்வமுடன் கேட்டார். “இதோ இருக்கிறேன் தாத்தா” என்று வந்து நின்றாள் வனிதை போர்த்திய கம்பளி மூட்டத்துடன் தலையை மட்டும் காட்டியபடி! “மகளே... இனி நான்தான் உனக்கு அபிமானத் தந்தை.. இப்படி வா... வனத்திலே மலர்ந்துவிட்ட வாடா மலராகத் தோற்றமளிக்கிறாய் நீ! என் சின்ன மகளை ஏன் இறைவன் இவ்வளவு அழகாகப் படைத்தான் அந்த இறைவன் என்று ஒரு நாள் கேட்டார் சம்பூவரையர். நான் சொன்னேன், நீங்கள் செய்த பாக்கியம், அழகு லட்சுமி வந்து பிறந்தாள் என்றேன். உடனே அவர் நம் குலத்துக்குத் தேவை வீரலட்சுமியும், வரலட்சுமியும், தீரலட்சுமியும், தனலட்சுமியும்தானே அன்றி அழகு லட்சுமி எதற்கு? அது... அது...” என்று மேலே கூறாமல் தயங்கினார் அவர். சட்டென்று சொன்னாள் புவன சுந்தரி “அது ஆபத்தைக் கொண்டு வரும் என்றார். அப்படித்தானே...?” என்று கேட்டாள். வில்லவர் சோகத்துடன் சிரித்துவிட்டு “அது எப்படித் தெரியும் உனக்கு?” என்று பதில் கேள்வி போட்டார். “என் தந்தை என்னிடமே பலமுறை கூறியிருக்கிறார் தாத்தா! அடிக்கடி சீதையின் அழகால் விளைந்தது ராமாயணமும், சம்யுக்தையின் அழகால் வந்தது நாட்டுக்கு ஆபத்து. சம்பூவரையன் மகளால் எதுவும் நேராமலிருந்தால் சரிதான் என்று கூறுவார்.” “அவர் சற்றுப் பதட்டக்காரர். ஆனால் சொக்கத் தங்கம்! சத்திய சீலர். நட்புகுகந்த நிகரற்ற பெருந்தகை, உத்தம சிகரம், உயர்ந்த பண்பாளர். அவர் மகளாக நீ பிறந்ததுவே பேரதிர்ஷடம் மகளே!” என்று அடுக்கிவிட்டுப் பெரியவர் அடக்க முடியாத துக்கத்தால் விம்மி வெடித்தார். “தாத்தா! நீங்களே இப்படியானால் நாங்கள்... இனி அடுத்தபடி ஓடுவது பற்றிச் சிந்திக்கலாமே!” என்றாள் அமரசுந்தரி. “இல்லை அக்கா... இனி உன்னால் பயணம் செய்ய முடியாது அக்கா” என்று எச்சரித்தாள் புவன சுந்தரி. பெரியவர் தமது கண்களைச் சற்றே துடைத்துக் கொண்டு அமரசுந்தரியைப் பார்த்ததும் அவள் தலைகுனிந்திருந்தது. சட்டென்று அவர் “அடக் கடவுளே! இப்படியும் ஒரு சோதனையா?” என்று பதறி வாய்விட்டுச் சொல்லிவிட்டார். “ஆம் தாத்தா. ஏன் நான் இன்னமும் உயிர்விடாமல் இருக்கிறேன்? இந்த நிலைக்காக மட்டும் இல்லை. உரியவரிடம் சேர்த்திட வேண்டுமல்லவா?” “நீ பூரண கர்ப்பிணி என்று தெரிந்த பிறகும்...” “தாத்தா! இதற்காக மட்டுமில்லை என்றேனே! என் தங்கையை நான் கட்டிக் காத்திட வேண்டாமா?” “அவன் உன் கணவன் மட்டுமில்லை, படவேட்டரின் மருமகன். என் மகனிடம் வாட் பயிற்சியும், வில் பயிற்சியும் பெற்ற வல்லவன். கங்கையச் செங்காணியின் பெயரைக் கேட்டதும் எதிரிகள் பதறியோடும் பெருமை கொண்டவனாயிற்றே... ஆனால்...” என்று மேலே கூறாமல் அவர் தயங்கியதும் அமரசுந்தரி பதற்றத்துடன் நிமிர்ந்தாள். “ஆனால் என்ன தாத்தா? செங்கத்தில் அவருக்கு எந்த விபரீதமும் நேரவில்லையே தாத்தா?” என்று அழைத்தபடியே வந்த வில்லவன் குரலில் ஏதோ ஒரு எச்சரிக்கைத் தொனி இருந்தது. அதுகாறும் சோர்வே உருவாக இருந்த சுந்தரி பதறி எழுந்துவிட்டாள். “தாத்தா... மறைக்க வேண்டாம். இது வரை அனுபவித்த கொடுமையைக் காட்டிலும் அதிகமாக எதுவும் இருந்திட முடியாது. எனவே உண்மையை மறைக்க வேண்டாம். கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.” “எங்களை வேட்டையாடும் அந்தக் கம்பிலி, பல்லாளன், உங்கள் உலூப்கான், அசன் எல்லாருமே செங்காணியர் மீதே குறிவைத்தார்கள். எங்களை அவர்தான் எங்கேயோ மறைத்து வைத்திருக்கிறார் என்ற எண்ணத்தைப் பல்லாளன் உலூப்கான் மனதில் ஊற வைத்துவிட்டான். கம்பிலிக்கு இன்னொருவன் சொல்ல வேண்டியதில்லை. எனவே அவர் செங்கத்தில் இப்போது இல்லை.” “ஐயோ கடவுளே... இந்தப் பாவிகள் எங்கள் தந்தையைக் கொன்றது போதாதென்று...” “இல்லை சுந்தரி, பதறாமல் கேள். உன் கணவனை அவர்கள் எதுவும் செய்திடவில்லை. ஏனெனில் அவன் அவர்களிடம் சிக்காமல் மறைந்து விட்டான். இப்போது, செங்கம் மாற்றார் வசம் இருக்கிறது. எங்களைத் தேடுவது போல செங்காணியையும் தேடுகிறார்கள் எதிரிகள்!” என்றார். அமரசுந்தரி பிரமை பிடித்தவள் போல விழிகளை எங்கோ செலுத்தினாள். பிறகு ஒரு நீண்ட பெருமூச்சு விடுத்து “தாத்தா, இனி எங்கள் இருவருக்கும் ஒரே ஒரு போக்கிடம்தான் இருக்கிறது. எனவே அந்த இடத்துக்கு. நாங்கள் போய்விடுகிறோம். நீங்கள் உங்கள் பேரனுடன் புறப்படுங்கள். நாங்கள் எங்கள் வழி...” “பொறு மகளே பொறு! நீ வீரர் மகள். வீரன் மனைவி. உன் மனதில் இத்தகைய அசட்டு எண்ணங்கள் எல்லாம் தோன்றக் கூடாது. ஒளவைக் கிழவி பாரி மகளிருக்குச் செய்தது போல நானும் உங்களுக்கு உதவுவேன். சற்று முன்னே சொன்னேன் நாள் வரும் என்று. நீ பொறுக்க வேண்டும். நம்ப வேண்டும். அதற்கு ஒரு உறுதி கொடு. நானும் என் பேரனும் இருக்கும் வரை உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. தவிர நீ பெற்றிடப்போகும் சிசுவுக்காகவாவது நீ உயிர் வாழ்ந்தாக வேண்டும். அது செங்காணியர் வீட்டுச் சொத்து. இறைவன் கொடுத்தது...” “ஆமாம்! இறைவன் எங்களுக்கு மற்ற கொடுமைகளைப் புரிவது போல இந்தக் கொடுமையையும் புரிந்திருக்கிறான் தாத்தா...” “இது கொடுமையா சீர்மையா என்பதைப் பிறகு ஆராயலாம் மகளே. நாம் இப்போது பிரத்தியட்ச உலகுக்கு வர வேண்டும். நீ இப்போதுள்ள நிலையில் நிச்சயமாகப் பயணம் செய்ய இயலாது. எனவே நமக்கு இப்போது அவசர உதவி தேவை. நெட்டூர் இன்னும் நாலு கல்கள் உள்ளன. செங்கமோ வடக்காலே இன்னும் பத்து கல்கள் போக வேண்டும். எனவே என் பேரன் முதலில் நெட்டூர் போகிறான். அவனுக்கு உன்னுடைய குதிரை உதவட்டும். நாம் இங்கு எங்காவது குகைகள் இருக்கிறதா என்று பார்த்து அங்கு தங்குவோம் அவன் திரும்பும்வரை.” “இல்லை தாத்தா... இங்குத் தங்கத் தங்க...” “முடியாது மகளே முடியாது. என் மகள் நெட்டூரில் இருக்கிறாள். அவள் ஒரு அசாதாரணமான பெண்மணி. இந்த மிலேச்சர்களோ கம்பிலியோ, அங்கே தலைகாட்ட முடியாது. அவளுக்கு இரண்டு மகன்கள். பெரியவனுக்குப் பனிரெண்டு வயது. சின்னவனுக்குப் பத்து வயது. அவளுடைய கணவன் காலமாகிவிட்டான். ஆனால் அவளுடைய மாமனார் துளசிங்கச்சிங்கராயர் இன்னும் இருக்கிறார். என் வயதிருக்கும். என்றாலும் தள்ளாமை இன்னும் அவரிடம் நெருங்கவில்லை. இந்த வயதிலும் ஒரு சிங்கத்தைப் பிடித்துக் கசக்கி எறிவார் மன்னன். நெட்டூர்ச் சிங்கராயரை இதுவரை வென்றவர் எவருமில்லை. இந்த குமாரன் இது நாள் வரை அவர் ஆதரவில்தான் வளர்ந்தான். சரி, முதலில் அவன் புறப்படட்டும்” என்றார். அமரசுந்தரிக்கு என்ன பதில் கூறுவது என்று புரியவில்லை. ஆனால் புவன சுந்தரி “அப்படியே செய்யுங்கள் தாத்தா!” என்றாள் சட்டென்று. “குமாரா... இனி இங்கே நீ வரலாம்” என்றார் கிழவர். பாவை புவனி சட்டென்று மறைவில் ஒதுங்கினாள் மீண்டும். அங்கிருந்தே அவனைச் சற்றே எட்டிப் பார்க்கத் தவறவில்லை அவள். பொழுது நன்றாகப் புலர்ந்து விட்டது. அமரசுந்தரி ஏன் எதுவும் பேசவில்லை என்று கிழவர் பார்த்த போது அவள் பக்கத்திலிருந்த கல் மீது சாய்ந்தபடி உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். அவளை எழுப்பிடக் கூடாதென்ற நினைவுடன் மெதுவான குரலில், “குமாரா, நீ உடனே நெட்டூர் போய் உன் அத்தையை இங்கே அழைத்து வந்துவிடு... கிடைக்குமானால் ஒரு பல்லக்கு கொண்டுவா. இல்லாவிட்டால் மட்டக் குதிரைகள் இரண்டைக் கொண்டுவா... புரிகிறதா? தாமதம் கூடாது...” “நல்லது தாத்தா. நான்...” தயங்கினான் குமரன். “நீ தயங்குவது புரிகிறது. குதிரையில் போகிறாய் நீ... மகளே எங்கேம்மா, உங்கள் குதிரைகள்?” என்று புவன சுந்தரியைக் கேட்டதும் அவள் “இங்கேதான் இருந்தன. ஒருவேளை நான் பார்த்து வருகிறேன் தாத்தா” என்று தன் மறைவிடத்திலிருந்து அவள் வெளிப்பட்டதும் அவள் முக லாவண்யம் ஒரு மின்வெட்டாகி அவன் கண்களைப் பறித்துத் தன்னை மறந்திடச் செய்தது! |