1

     மாலைக் கதிரவன் தன் பொன்மயக் கிரணங்களால் அந்தத் தகரக் கொட்டகைத் தொழிலகங்களை முழுக்காட்டியவாறு யாருக்காகவோ காத்துக் கிடப்பது போல் தங்கியிருக்கிறான். வெண்மைச் சூட்டை மாற்றிக் கொண்டு மஞ்சட் குளித்து, அதுவும் மாறப் பொன்னாடை பூண்டு அத்தொழிலக வாயிலுள் எட்டி எட்டிப் பார்க்கிறான். நிழல்கள் நீண்டு விழுவதை வேடிக்கைப் பார்ப்பதில் பொழுது கரைகிறது. காத்துக் காத்துச் சோர்ந்த விழிகள் சுருங்குவது போல, பொன்னும் முறுகுகிறது. கதிரவன் இன்னும் அத்தொழிலக வாயிலிலேயே கண்ணாக இருக்கிறான்.

     அத்தொழிலகங்களுள், இந்த மண்ணின் தொழில் மய வளர்ச்சியில் பங்கு பெற்றிருக்கும் பிஞ்சு முகங்களைப் பார்க்கத்தான் கதிரவனுக்கு ஆவல் போலும். அதிகாலை உதயத்தில் சின்னப்பட்டி கிராமத்துக் குடிசைகளைக் கண் விழித்துப் பார்க்கையிலும் அந்த இளசுகளைக் காண்பதற்கில்லை. 'தொழிற்சாலை வண்டி வந்து போய்விட்டதே?' என்று பூமித்தாய் தன் மீது படிந்துவிட்ட சுவடுகளைக் காட்டிக் கொண்டு காட்சி தருவாள். இந்த மண்ணில் சூரியனுக்கு ஆண்டின் முக்காலே மூன்று வீசம் பகுதியும் செல்வாக்குப் பெற்றிருக்கும் பெருமை உண்டு. பூமித்தாயின் உள்ளீரத்தைக் கூடத் தன் கதிர்களால் உறிஞ்சிக் கொள்வான். 'இப்படி வறட்டி எடுத்து மக்களைப் பட்டினி போடுகிறாயே' என்று மண் அன்னை குற்றம் சாட்ட முடியாது.

     இவன் புகழ் பாடிக் கொண்டு இயங்க, இந்த மண்ணில் தொழில் வர்க்கங்களைப் படைத்து விட்ட பெருமைக்கும் இவன் உரியவன் தான். ஈரம் கொண்டு தான் மக்கள் வண்மை காண முடியும் என்ற கூற்றை இங்கே இவன் பொய்யாக்கி விட்டான். ஈரமில்லாத வண்மையைப் படைத்துக் காட்டுவேன் என்று அறைகூவுவது போன்று இந்த வறண்ட கரிசல் மண்ணின் தொழில்களனைத்துக்கும் கதிரவன் தன் வெம்மையை, வன்மையை, வண்மைக் கொடையாக்கிக் கொண்டிருக்கிறான். இதனால் பூமியன்னை இங்கே எப்போதும் வெய்துயிர்த்துக் கொண்டிருக்கிறாள். பகலானாலும் இரவானாலும், புறச்சூடும் உட்சூடுமாகப் பொடிந்து பொடிந்து புழுதிப் படலமாய்ச் சாலைகள் விம்மித் திணறுகின்றன. மாலை மங்கிவிட்டால் சாலைகளின் நெருக்கடி சொல்லத்தரமன்று. தொழில் வண்மை விரிக்கும் காட்சிகள் மாலை நேரச் சந்தைகளிலும், சந்தடிகளிலும், ரூபாய் நோட்டுக்களின் புழக்கத்தில் உயிர்த்துவம் கொண்டு கலகலக்கும். நகரின் மையமான சாலை நெடுகிலும் வயிற்றுப்பசி அவிக்கும் தீனிக் கடைகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்குகின்றன. வயிற்றுப் பசிக்கு மட்டும் தான் கடைகளா? புலன்களின் தேவைகளுக்கெல்லாம் தீனிகள் கிடைக்கும் இடங்கள் இந்த நெரிசலில் வண்மை கொழிக்கின்றன.

     சினிமாக் கொட்டகைகளும் சிறு தீனிக் கடைகளும் பெற்றிருக்கும் முக்கியத்துவத்தைப் போல், கோயில் வாயில்களும் மக்களைக் கவர்ந்திழுக்கின்றன. அங்கும் வெளிச்சங்கள், ஒலிபெருக்கிப் பாடல் கவர்ச்சிகளுக்குப் பஞ்சமில்லை.

     தொழில் நகரின் சாலைகளிலும் தெருக்களிலும் மக்கள் ஈக்கூட்டங்களாய் மொய்க்கத் தொடங்கிய பின்னரும், அத்தொழிலகத்திலுள்ள பிஞ்சு முகங்களைக் கதிரவனால் வெளியே காண இயலவில்லை. அவன் காத்துச் சலித்து மேற்கே மறைந்து போகிறான். மாசி மாதத்தின் பனி படரும் குளிர்ச்சியுடன் இருள் தனது துகிலை விரிக்கிறது.

     தொழிலகத்துள் கட்டுக் கோப்பாய் இயங்கிய மனிதத் துளிகளனைத்தும் பகுதிபகுதியாகக் கழற்றி விட்ட இயந்திரங்கள் போன்று, தொழிலகத்துக்கு வெளியே தெரியத் தொடங்குகின்றன. வளைவு வாயிலில், 'இளைய சேரன் திப்பெட்டித் தொழிலகம்' என்ற எழுத்துக்களுக்கு வெளிச்சம் காட்டும் குழல் விளக்கின் முன் பறக்கும் பூச்சிகளைப் போல் பொட்டு பொடிகளாய்க் குழந்தைகள் வந்து நிற்கின்றனர். அரைச்சராய் சட்டைகள், அழுக்குக் கிழிசல்கள், தோள்பட்டை நழுவும் கவுன்கள், பாவாடைகள், பிரிந்து விழும் முடிகள், உலகத்துச் சிருஷ்டி இரகசியங்கள் புரிந்து விட்டதால் ஏற்பட்ட நாண முகிழ்ப்புக்களின் அடங்கி விட்ட சுவடில்லா முகங்கள், துடுக்குத்தனங்களை அமுக்கிக் கொண்டு அச்சம் மருவிக் கிடக்கும் சாயல்கள் என்று பளிச்சென்று தெரியாத பல வண்ணங்கள், சோர்வும் அலுப்புமான சரங்களில் கோர்க்கப்பட்ட உயிர்த்துவம் மங்கிய புள்ளிகள். கைகளை அலங்கரிக்கும் அலுமினியத் தூக்குகள்; சிறு தகர டப்பிகள். முன் விளக்கொளியை அவர்கள் மீது பாய்ச்சிக் கொண்டு பஸ் வருகிறது.

     "ஏத்தா, இத பசு வந்திடிச்சி, ஒறங்காதே...!"

     "வாங்க... மோட்டாரு வந்திடிச்சு...!"

     சிறுவர் சிறுமியர் ஏறத் தயாராகின்றனர். இந்த உழைக்கும் பிஞ்சுகளுக்கும், இளசுகளுக்கும் பஸ்ஸில் ஏறிச் செல்வதும் திரும்புவதுமாகிய இரு பொழுதுகளே இவர்களுடைய வாழ்க்கையின் சொர்க்கானுபவ நேரங்கள். இந்தப் புது நகரின் முதுகெலும்பாய் ஓடும் பொதுச் சாலையில் வடக்கே எட்டுக்கல் தொலவில் உள்ள கூடமங்கலத்துக்கப்பால் மேற்கே இன்னும் மூன்று கல் தொலவுக்குப் பிரிந்து எங்கோ கரிசல் காட்டில் பதுங்கிக் கிடக்கும் சின்னப்பட்டியையும் பெரியபட்டியையும் அந்த ஊர்தி தொட்டிணைக்கிறது. சுற்று வட்ட ஊர்களிலுள்ள பெரிய தனக்காரரின் சற்றே வசதியுள்ள நிலங்களை அண்டியோ, வேறு வழி ஏதுமில்லாமலோ, கால் கஞ்சியும் முக்கால் பட்டினியுமாக முடங்கிய சிறுகுடி மக்களாகிய அவர்கள் மீது பெருங்கருணை கொண்ட தொழிலக அதிபர்கள் கப்பிச் சாலைகளால் அந்தப் பட்டி தொட்டிகளைப் பெரிய சாலையுடன் இணையச் செய்து விட்டார்கள். பஸ்... நீல வண்ண மயிலைப் போல் ஒளியை உமிழ்ந்து கொண்டு வருகிறது.

     பெரியபட்டியைச் சேர்ந்த செயா, பாலமணி, சந்திரா இவர்கள் முதல் உரிமைப் பெற்றவர்களைப் போல ஏறுகின்றனர். சின்னப்பட்டிச் சிறிசுகளில் சிலரும் உள்ளே அடித்துப் பிடித்துக் கொண்டு ஏற முயலுகின்றனர். 'சாதிகள் இல்லையடி பாப்பா. குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்' என்ற வரிகளைப் பற்றி இவர்களுக்கென்ன தெரியும்? அரசு இந்த நோக்கில் கம்பம் கம்பமாக, சுவர் சுவராக, கண்களும் மூக்குமாகப் பொம்மை போட்டு, தீண்டாமை கொடியது என்று விளம்பரம் செய்திருப்பதைப் பற்றியும் தான் இவர்கள் கண்டார்களா?

     "ஏண்டி புழுக்கச்சி? மொழங்கையால இடிக்கிற" என்று பாலமணி அழகாயியின் ஏழு வயசுத் தங்கச்சியின் முகத்தில் தனது அலுமினியத் தூக்கினால் மொத்துகிறாள். அந்த மொத்தலில், பித்தளை மூக்குத்தியின் அடித்திருகு பிஞ்சு நாசியின் இடைச்சுவரைக் கூழாக்கிவிடக் குருதி கொப்பளிக்கிறது. அப்போது, சின்னப்பட்டிக்காரனான பன்னிரண்டு பிராயத்துக் காத்தமுத்து, விடுவிடென்று உள்ளே சென்று 'பண்டல்' அடுக்குவதைச் சரிபார்த்துக் கொண்டிருக்கும் மாரிசாமியிடம் இக்கொடுமைக்குக் குரல் கொடுக்கிறான்.

     "அண்ணாச்சி! ஓடி வாங்க! பெரியபட்டிப் புள்ள சின்னப்பட்டி லட்சுமி மூக்க ஒடச்சிடிச்சி! நெத்தம் கொட்டுது!"

     மாரிசாமி ஓடி வரு முன் அந்த வண்டியுடன் செல்லும் இரத்தினம் அங்கே நியாயம் கேட்க வந்து விடுகிறான்.

     "அண்ணாச்சி, பாருங்க! மொழங்கையால் வேணுன்னு இடிக்கிறா!"

     "....."

     "நாங்க ஒண்ணும் இடிக்கல. அவ சீல முந்தி அதுவா வுளுந்திச்சி, தள்ளிவிட்டே..." என்று அழகாயி கீச்சுக் குரலில் பதில் கொடுக்கிறாள், பாலமணிக்கு.

     காத்தமுத்து விடவில்லை.

     "அதுக்குன்னு டிப்பன் பாக்ஸால மொத்திச்சி... பாருங்க நத்தம்..." ஏழுவயசு லச்சுமி மூக்கு வலிக்குக் குரலை வீசி அழக்கூடச் சக்தியற்று, கண்ணீரும் கம்பலையுமாகக் காட்சியளிக்கிறது.

     மாரிசாமி, ஓரெட்டு முன்வந்து, "அண்ணாச்சி, பெரியபட்டிப் புள்ளகள நீங்க கொஞ்சம் அடக்கி வய்க்கிறது நல்லது!" என்று கூறுகிறான். மினுமினுச் சட்டையும் கைக்கடியாரமுமாகப் பளபளக்கும் இரத்தினம் மாரிசாமியை உறுத்துப் பார்க்கிறான். "பண்டல் ரூமிலிருந்தவ, இங்க எதுக்கு ஓடி வார மாரிசாமி! இந்த வெவகாரத்துக்கு நீ வர வேண்டியது அநாவசியம்!"

     மாரிசாமியும் இரத்தினத்தைப் போன்ற நிலையில் ஒரு தொழிலாளிதான். 'கைபார்க்கும்' கணக்கப்பிள்ளை என்ற நிலையில் இருப்பவன். அவன் பிரிவிலுள்ள சிறுவர் சிறுமியரிடம் வேலை வாங்கி, கூலிக்கணக்குப் போட்டு, அன்றாட உற்பத்தியில் அவன் பங்கைக் கணக்காக்க வேண்டும். இரத்தினம் 'ஏசன்ட்' என்ற பெயரைப் பெற்று, இந்த இளந் தொழிலாளிகளைக் கூட்டி வந்து கொண்டு விடுவதுடன், தொழிலகத்தின் ஒரு பிரிவிலும் மேற்பார்வை செய்கிறான். இவன் மானேசர் சாமியப்பனுக்கு மிக வேண்டிய, நெருக்கமான ஆள். மானேசர், முதலாளியின் குடும்பத்துக்கு மிக வேண்டிய வட்டத்தில் ஒருவர். எனவே இரத்தினத்தின் செல்வாக்கு தொழிலகத்தில் பணிபுரியும் யாவரும் அறிந்ததாகும். மாரிசாமிக்கு மீசை துடிக்கிறது. உதட்டைக் கடித்துக் கொண்டு நிற்கிறான்.

     "என்னடி தவராறு? இந்தச் சின்னபட்டிச் செறுக்கியள, பெரியபட்டிக்காரிய உக்கார்ந்த பெறகு போங்கன்னு சொன்னா கேக்குறதில்ல? என்ன அடாவடித்தனம்?" என்று சாடுகிறான் இரத்தினம்.

     "வேணுன்னே வந்து இடிக்கிறா அண்ணாச்சி! பறப்பன்னி!" காத்தமுத்து குறுக்கே பாய்கிறான். "ஏ புள்ள ரொம்பத் துள்ளாத! ஆரடி பன்னிண்ணு சொல்ற! நீதா... பன்னி!"

     இரத்தினம் இப்போது கையிலுள்ள குச்சியடுக்கும் சட்டத்திலுள்ள கட்டையினால் அவன் முதுகிலும் தோள்களிலும் போடுகிறான்.

     "யார்ரா புழுக்கப்பய அவங்களுக்கு எடயில வர?" என்று அசிங்கமாக வசை பொழிகிறான்.

     காத்தமுத்து ஊளையிடும் குரலில் அழுகிறான்; திருப்பி வசை பொழிகிறான்.

     மாரிசாமி அவனருகில் வந்து தட்டிக் கொடுக்கிறான்.

     "அழுவாத, சின்னப்பட்டிக்காரங்கல்லாம் நீளத்து சீட்டில உக்காருங்கன்னு சொல்லிருக்கையில ஏன்ல எடயில வார?"

     "மாரிசாமி, நீ எடயில வராம போ இப்ப!"

     இரத்தினம் அடுத்து ஓர் அதட்டல் போடுகிறான் "எல்லாம் ஒளுங்கா அவியவிய எடத்தில போயி உக்காருங்க!"

     சிறிது நேரத்தில் பஸ் நிரம்பி விடுகிறது. மணி எட்டடிக்கப் போகிறது. இரவு பெரியப்பட்டியிலேயே இரத்தினம் தங்கிவிடுவான். ஓட்டிவரும் தங்கவேலு புது நகரத்தான் என்றாலும், அதிகாலையில் மூன்றரை மணிக்கே பஸ்ஸை எடுக்க வேண்டியிருப்பதால், அவனும் அங்கே தங்கிக் கொள்வதுண்டு. புது நகரத்தின் எல்லை கடக்கும் வரையிலும் பெரிய சாலையில் நீலக்குழல் விளக்குகள், 'ஆ'வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் தொழிற்சாலைகள், காவற்காரர்கள், வளைவு எழுத்துக்கள் என்ற பழக்கமான காட்சிகள் தாம். ஓரத்தில் முகத்தில் குளிர்ந்த காற்று வந்து படிவது ஒன்று தான் எரிச்சலுக்கு இதமாக இருக்கிறது. ஒட்டிய வயிறுகளும், நாவுகளும் நெஞ்சங்களும் தான் அதிகம். எனவே, பலருக்கும் கண்களும் ஒட்டிக் கொள்கின்றன.

     'சர்வீஸ்' பஸ்ஸானால், வழி நெடுகிலும் ஊர்ப் பெயரைச் சொல்லிக் கொண்டு பயணிகள் இறங்குவார்கள்.

     சேவித்தான் பட்டி, கிள்ளியங்காவாய், பாண்டியன் கொடை, ... என்று ஊர்களைக் கடந்து செல்கையில் காத்தமுத்து, குமுறிக் கொந்தளிக்கும் குமரப்பருவப் பொங்கெழுச்சியுடன் துடித்துக் கொண்டிருக்கிறான். இரத்தினத்தையும் பெரியபட்டிக்காரிகளான சில திமிர் பிடித்த குமரிப் பெண்களையும் அமுக்கிக் குப்புற வீழ்த்தி விட வேண்டும் போல் கைகள் பரபரக்கின்றன.

     கூடமங்கலத்துக்கு முன்பான ராசாத்தியோடையின் குறுக்கே இறங்கி பஸ் ஏறும் போது, கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் சிறுமியர் குலுங்கிக் கண் விழிக்கத் தூக்கிப் போடுகிறது. குடல் வாய்க்கு வந்துவிடுவது போன்ற இக்குலுக்களுக்கு, லச்சுமி சிரிக்கும். இன்று சிரிக்க முடியவில்லை. ராசாத்தியோடை, அங்கே சாலைக்கருகே இணைபோல் வரும் அரசன் ஆற்றிலே கலந்து விடும். ஆறும் ஓடையும் கலப்பதற்குச் சாட்சி போல, அங்கே சாமி கோயிலும் இருக்கிறது. இந்த மாதத்தில் இங்கு திருவிழா வரும். ஆற்றிலும், ஓடையிலும் எப்போதோ ஐப்பசி கார்த்திகை மாதங்களில் எங்கோ மலை மீது மழை பொழிந்ததற்கு அடையாளமாகத் தண்ணீர் குப்புற அடித்துக் கொண்டு வரும். மற்ற நாட்களில் இப்படிப் பஸ் இறங்கி ஏறிச் சர்க்கஸ் வித்தை பயிற்றுவித்துக் கொண்டு வரும்.

     வறண்ட கரிசல் காட்டுப் பொட்டலின் குடிசை ஊர்களுக்கிடையே சுதந்திர இந்தியாவின் மாண்புகளை அங்க அங்கமாகக் காட்டிக் கொண்டு குழல் விளக்கு ஒளியாய்ச் சிரிக்கும் கூடமங்கலம் வந்துவிட்டது. பகலில் சர்வீஸ் பஸ்களில் செல்லும் பயணியர், குடும்ப நலத் திட்டத்தைக் கைக்கொள்ள வேண்டி விழையும் தாய் சேய் நல விடுதி, தீவிர குடிநீர்த் திட்டம் என்று அறிவித்துக் கொண்டு காட்சி தரும் புள்ளி விவரங்கள் அடங்கிய பலகை ஆகிய அனைத்தையும் காண்பர். ஆனால், தீப்பெட்டித் தொழிலகச் சிறுவர் சிறுமியருக்கு, இங்கே ஊரைக்கடந்து குறுக்கே செல்லும் கப்பிச் சாலையின் ஓர்புறம் அமைந்திருக்கும் ஆறுமுகத்தின் தேநீர்க்கடை தான் நன்றாகத் தெரியும். அங்கு பஸ்ஸை நிறுத்திவிட்டு, தங்கவேலுவும் இரத்தினமும் இறங்கிச் செல்கின்றனர். இரத்தினம் கீழிறங்குமுன் கதவை அழுத்தச் சாத்திவிட்டு, "எல்லாம் மூச்சுப் பிரியாம உக்காந்திருக்கணும்!" என்று ஓர் ஆணையையும் விதித்துவிட்டுப் போகிறான்.

     மூச்சுப் பிரியாமல் எப்படி அமர்ந்திருக்க முடியும்? பாலமணியும் சந்திராவும் டீக்கடை முன்பு தட்டியிலிருக்கும் சினிமா விளம்பரத்தை இனம் கண்டு பேசத் தொடங்குகின்றனர்.

     காத்தமுத்து, நேராக முன்னேறிச் சென்று, பாலமணியின் சடைப்பின்னலை அடிமுடியிலிருந்து பற்றி இழுக்கிறான்.

     "யாரடி பன்னின்னே?..." என்று தொடங்கி அவன் உலுக்க முற்படுவது, திடீர்த் தாக்குதலாக இருக்கிறது.

     "ஐயோ, ஐயோ" என்று பாலமணி கூக்குரலிட்டுக் காத்தமுத்துவின் தாய் தலைமுறைகளை 'புழுத்த நாய் குறுக்கே' செல்லா வசைகள் கொண்டு ஏச, பஸ் மொத்தமும் "அண்ணாச்சி அண்ணாச்சி!" என்று அபயக் குரல் கொடுக்கிறது.