19

     அவர்களுடைய தெருக்கோடியில் வீட்டுவாயிலிலேயே காலையில் முத்தாச்சி இட்டிலிக்கடை போட்டுவிடுவாள். காலை நேரத்தில் அங்குதான் கட்டைக் கணக்குப்பிள்ளை கூடலிங்கம் குச்சி, கட்டை, சில் அட்டை, தாள் சாதனங்களை அந்த வட்டத்துப் பெண்களுக்குக் கொடுக்க வருவான். வாடிக்கையாளரான பெண்கள் குச்சி அடுக்கிய சட்டங்களுடன் அங்கே காத்திருக்கும் நேரத்தில் வம்புப் பேச்சுக்களும் கலகலக்கும்.

     வேலம்மா அங்கு செல்ல மாட்டாள். லோசனிதான் மகளை அனுப்பி ‘எம்புட்டு’ என்று கேட்டு வரச்சொல்வாள். செய்து முடித்த பெட்டிகளையும் அவள்தான் ஆளைக்கூட்டி வந்து எடுத்துச் செல்வாள். பெட்டி எடுத்துச் செல்லப் பத்து மணிக்குமேல்தான் வருவான்.

     வேலம்மா காலையில் ‘சாமான்’ துலக்கி விட்டு, அடுப்படியில் காப்பி போடுகிறாள். சண்முகம் அதிகாலையில் எழுந்து ஒரு நடை வெளியே சுற்றிவிட்டு வரப் போய்விட்டார்.

     வாசுகி வந்து ‘எம்புட்டு’ என்று கேட்கையில் வேலம்மா உள்ளிருந்து “சுமதி, செம்புமேல சிட்ட வச்சிருக்கிறேன். எடுத்திட்டுப் போயிப் பதிஞ்சிட்டு, ரெண்டுகட்டு அட்டையும் தாளும் வாங்கியாரச் சொல்லு. மேப்பெட்டி போதும்...”

     சுமி ஒரு ரூபாய் மலிவு நாவல் ஒன்றில் சுவாரசியமாக ஈடுபட்டிருக்கிறாள். பரீட்சை முடிந்து விடுமுறை தொடங்கி விட்டது. மாணவிகளும் ஆசிரியைகளுமாகக் கன்யாகுமரி செல்கிறார்களாம். இவளும் போகப் போகிறாளாம். விஜியுடன் அவள் ஒட்டுவதேயில்லை. சின்னப்பட்டிக்கு சிற்றப்பா வீட்டுக்குச் செல்வதும் அவளுக்குப் பிடிக்காது. அவர்கள் வேலம்மாவைப் பற்றிக் குறைவாகப் பேசுவதால் இவளும் அவர்கள் உறவைப் பொருட்படுத்தவில்லை. சுமி சிட்டை எடுத்துக் கொடுக்கிறாள்.

     “சுமி, அப்படியே ஏனம் எடுத்திட்டுப் போயி முத்தாச்சிட்ட ஒரு ரூபா இட்லியும் சாம்பாரும் வாங்கிட்டு வா கண்ணு!”

     “போ வேலம்மா, அவ காக்க வய்ப்பா!” என்று முகத்தைத் தூக்கிக் கொண்டு மீண்டும் புத்தகத்தில் ஈடுபடுகிறாள்.

     “நான் போயி வாங்கிட்டு வரேன்” என்று விஜி கிளம்புகிறாள். வேலை எதுவும் செய்ய வேலம்மா விடுவதில்லை. ஆனாலும் விஜிக்கு இங்கு சுவாதீனமாக எதையும் செய்ய முடியும்.

     கட்டைக் கணக்கப்பிள்ளை, சில்க் சட்டையும் தங்கப் பட்டை கடியாரம், கேலிப் பேச்சுமாக விடலையாகத் தெரிகிறான். பத்துப் பெண்களுக்குக் குறையாமல் சூழ்ந்திருக்கின்றனர். கைவண்டியில் கட்டைகளை, குச்சிச் சாக்குகளைத் தள்ளிவந்திருக்கும் பாட்டாளியும் இருக்கிறான். ஒரு வாளியில் குச்சிகளைக் குத்துக் குத்தாகக் கணக்கப்பிள்ளை அளந்து போடுகிறான்.

     சற்றே நடுவயசுக்காரியாகத் தோன்றும் ஒரு முஸ்லிம் பெண்மணி, “இன்னும் போடுங்க, ஆமாம், நாலுகட்டக்கின்னு நீங்க குடுக்கறது, மூணு அடுக்கி பத்துச் சக்கக்குள்ளாறவே தீந்து போவுது!” என்று குறை கூறினாள்.

     “ஆமா, பாதிக்குச்சி கழிவு!” இன்னொருத்தி ஆமோதிக்கிறாள். “கழியும் கழியும்! வாளி வாளியா தஸ்கரம் பண்ணிப் போடுவிய” என்று சுறுசுறுப்பாக அடுக்கி வைத்திருக்கும் சட்டங்களைப் பார்வையிடுகிறான் அவன். பிறகு குறுக்குச் சக்கைகளை எண்ணுகிறான்.

     “ஏத்தா? ஆருது இது? ரெண்டு சக்க குறயிது! ஆளசந்தா ஏப்பம் வுட்டுடுவிய!...”

     “என்னுதில்ல! என்னது இங்க வச்சிருக்கிறே...” என்றெல்லாம் ஒவ்வொருவராக நழுவுகின்றனர்.

     “ஆயிசா? உன்னுதா?...”

     “இல்ல... என்னுது எண்ணி வச்சிருக்கிறே...”

     “இதா ருக்குமணி, உன்னுதா, மரியாதியா உள்ளார வச்சிருக்கிற சக்கய எடுத்திட்டு வந்திடு! கூலியில் ஒரு ரூவா புடிச்சிடுவா!”

     “ஏய்யா? எப்பிடி இருக்கு?...” என்று ருக்குமணி சிமிக்கியும் மயில் மூக்குத்தியுமாக முகத்தை ஆட்டுகிறாள்.

     “இவிய ஒரு கெட்டில ஏழு குரோசு அட்டக்குச்சி இருக்கும்னு குடுக்கிறா. ஆரு குரோசு கூட இல்ல! ஒரு கிலோ குச்சிம்பா, எண்ணூறு கூட இருக்காது!”

     “ஆமா, நீங்க குரோசு தொண்ணூத்தஞ்சு பைசா பொட்டி விக்கிறிய!...”

     “ஐயோ! பாத்தியாடி! தொண்ணூத்தஞ்சு பைசாவாம்! ஏய்யா அஞ்சு பைசா குறக்கிறிய? நாளெல்லாம் இத்த ஒட்டிப் போடவே குறுக்கு முறியுது!”

     “அப்ப ஒரு ரூவாயாத் தாரன், பெட்டி எடுத்து வையி...” என்று அவன் சிரிக்கிறான்.

     “பாரேன், இந்த அவராதித்தனத்த!...” என்று நடிப்புத் திறமையைக் காட்டும் ருக்கு, “பின்ன என்ன பண்ண, உங்களைப் போல உள்ள மாப்பிளய கட்டி கட்டியா பவன், பண்டம்னு கேக்குறியளா எப்பிடி சம்பாதிக்கிறது?... இப்பிடி உருட்டிப் புரட்டினாத்தான்...” என்று ஒப்புக்கொள்கிறாள்.

     “அடி சுந்தரி, சொகுசுக்காரி, என்னக் கட்டிக்கிறியா சொல்லு! நான் பவன் மாலையே போடுற...” என்று நேரடியாகச் சல்லாபம் தொடங்குகிறான் கணக்குப்பிள்ளை.

     “கட்டுவே, மூஞ்சியப் பாரு?” என்று நொடிக்கிறாள் ருக்மணி.

     இதற்குள் முத்தாச்சி பாய்ந்து ஒரு அதட்டல் போடுகிறாள்.

     “என்னாடி, கட்ட குடுக்க வந்த புள்ளகிட்ட அவராதிப் பேச்சு? சோலியப் பாத்துட்டுப் போங்க!”

     அப்போதுதான் விஜி அங்கு திண்ணை ஓரம் பாத்திரத்துடன் நிற்பதை முத்தாச்சி பார்க்கிறாள். “அட... விஜியா? வாம்மா? நீ என்னத்துக்கு வரணும்?” என்று பாத்திரத்தை வாங்கிக் கொள்கையில் விஜி ஒரு ரூபாய்த் தாளை நீட்டுகிறாள்.

     “துட்டுக்கென்னம்மா அவுசரம்?... அடுப்பில வேவுது, சூடாக் கொண்டாந்து தாரே. நீ ஏம்மா இங்கிட்டெல்லாம் வந்து நிக்கணும்? அந்தப் பால்காரப் பயகிட்ட ஒரு சொல்லுச் சொல்லி அனுப்பினாக் கூடப் போதுமே?”

     விஜி வீடு திரும்பியதும் வேலம்மாளிடம் கேட்கிறாள்.

     “அதென்ன வேலம்மா, தொண்ணூத்தஞ்சு பைசா குரோசு தீப்பெட்டி?” வேலம்மா அவளுக்குக் காப்பியை இறுத்துச் சீனியும் பாலும் சேர்த்து ஆற்றி வைக்கிறாள்.

     “ஆரு சொன்னது?”

     “கணக்கப்பிள்ள கிட்ட பேசிச் சண்ட போட்டாங்க. ஏழு குரோசுக்குக் கொடுக்கும் சாமான் ஆறுக்குத்தான் வருதுன்னு. அதுக்கு அவன் சிரிச்சிட்டே ஒரு ரூவா குடுத்துப் பொட்டி வாங்க வாரேன்னா.”

     “திருட்டுப் பொட்டி விப்பா!”

     “எப்பிடி? சில்லு சாமானெல்லாம் கணக்குக்கே வரலன்னா.”

     “இவனுவ குறச்சிக் குடுக்கிறா. இவங்களும் கூலியச் சரிக்கட்ட, ஒட்டின பொட்டில தண்ணியத் தெளிச்சி வச்சிடுவா, ராத்திரியிலியே. ஏழு குரோசு பத்துக் குரோசுனெல்லாம் எண்ணிச் சாத்தியப்படுமா? அதா கூடை வச்சிருக்கிறேன் பாரு. அதுல அளந்து போடுவா. இவங்க தண்ணி தெளிச்சி வச்சிருக்கிறதால கூடயில கொறவாத் தான் கொள்ளும்... இப்பிடித்தா. அவ இவாள ஏமாத்துனா இவா அவன ஏமாத்துறா. உங்கையா சொல்லுவாங்க. சம்பளத்த நூறு நூத்திருவதுன்னுதா குடுக்குறா. ஓவர்டைமுன்னு எழுபது எம்பது சம்பாரிக்க வழி செஞ்சுகிடறா. இது ஒரு ஏமாத்து. அதிக நேரம் வேலை வாங்கிக்கிறா, நியாயமான சம்பளம் இல்லாமப்பாரு - ஆரு கூடலிங்கமா வந்திருந்தா?”

     “ஆமா. குட்டையா, கொஞ்சம் சிவப்பா இருந்தான். சின்ன வயசு...”

     “அவந்தான். கலியாணங்கட்டி மூணு பிள்ளை இருக்கு...”

     “ஐயோ? அப்ப அவனா அந்த ருக்குமணிய பார்த்து சரசம் பேசினா?”

     “பேசுவான். ருக்குமணியா? அந்தப்புள்ள, பாவம் சமஞ்சி பத்து வருசம் ஆவுது. எத்தனை எடத்தில பாத்தாச்சி?... ஒண்ணும் சரிப்பட்டு வரல. அப்பா பாரிசவாயு வந்து படுத்துக் கெடக்கிறா...” பேசிக் கொண்டிருக்கையிலேயே முத்தாச்சி இட்டிலி கொண்டு வந்து விடுகிறாள்.

     “வேலம்மா!” என்று குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே வந்து, இலை போட்டு மூடிய சட்டினியோடு இட்டிலி அடுக்கும், சாம்பார்த் தூக்கும் கொண்டு வைக்கிறாள்.

     “ஒரு வார்த்த சொல்லி அனுப்பிச்சா நாங்கொண்டு வந்து வைக்கமாட்டேன்? அதுங்கிட்ட, பாவம். ஒரு சூதுவாது தெரியாத பொண்ணு பெரிய முதலாளி காரப் போட்டுட்டு வாரா. அங்க வாக்கப்பட்டது. இதுங்க பொறுக்கித் தின்னும், கண்டமானும் பேசும். எதுக்கு வரணும்? அதுங்களுக்கானும் ஒரு அச்சடக்கம் இருக்கா? கட்டக் கணக்கப் புள்ள கிட்ட இளிச்சிட்டுப் பேசுதுங்க. நா மொதல்ல திரும்பியே பாக்கல. பொறவுதாங் கவனிச்சேன். இதுங்க நாக்குக்குத் துரும்பு கெடச்சாப் போதும். மாப்பிள ஏன் வாரக்கணம். கூட்டிட்டுப் போவாம இங்க வந்திருக்குதுன்னு பேசுறாளுவ. தாய்வூடுன்னு வராதா?... இதுங்க கண்ணே நல்லதில்ல. அம்மாடி, பதனமாப் பாத்துக்க; வாரன்!...”

     வாசலில் அப்பா வருவதைப் பார்த்துவிட்டு, தான் தொடர நினைத்ததைக் கத்திரித்துக்கொண்டு செல்கிறாள். முத்தாச்சியின் சாமர்த்தியமான ‘புழுக்குத்தல்’ அவளைக் கட்டிப்போடுகிறது. அப்பா உள்ளே சென்று தனது சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டுத் துண்டைப் போட்டுக் கொண்டு அறை பெருக்குகிறார். விஜி விரைந்து சென்று அவர் கையிலிருந்து வாருகலைப் பிடுங்குகிறாள். “இருக்கட்டுமேம்மா! நாஞ் செய்தா என்ன?”

     “பரவாயில்லப்பா, நான் கூட்டினா என்ன?...”

     “நீதான இப்பல்லாம் செய்யிற? நானே கூட்டிடறேன் இன்னிக்கு...” அவர் குப்பையைப் போட்டுவிட்டுக் குளிக்கச் செல்கிறார்.

     அவர் குளித்துவிட்டு வருமுன் விஜி அறையை ஈரத்துணி கொண்டு துடைத்து, மண் பானையில் நல்ல நீரூற்றி வைக்கிறாள். முற்றத்து அடி குழாயைக் கொஞ்ச நாட்களுக்கு முன் தான் பழுது பார்த்திருக்கிறார்கள். எனவே இந்தக் கோடை ஒருவாறாகப் போகிறது.

     அவர் பிழிந்த வேட்டி துண்டுடன் உள்ளே வரும் நேரத்தில் சுமதியைக் கண்டிக்கிறார். “காலங்காத்தால என்ன நாவல் அது, தூக்கி வச்சிட்டே? உன் துணியெல்லாம் நேத்துலேந்து சோப்புல முக்கி வாளில வச்சிருக்கே! காலம சுறுசுறுப்பா உடம்பு வணங்கணும்!”

     “அப்பாக்குக் காப்பி பலகாரம் குடுத்திட்டு நீங்களும் சாப்பிடுங்க. இத நான் கடைக்கிப் போயிட்டு வந்திடறேன்...” என்று வேலம்மா படியிறங்கிச் செல்கிறாள்.

     வாசலில் ரிக்‌ஷா நிற்கும் சத்தம் கேட்கிறது.

     பஞ்சநதம் மாமா, ரிக்‌ஷா கொள்ளாமல் உட்கார்ந்திருக்கிறார். சந்தனப் பொட்டு அதில் சிறு குங்குமம், பின்னணியில் திருநீறு எல்லாமாக அவர் மெள்ள இறங்கி வருவதை விஜி, அறை சன்னல் வழியாகக் கண்ணுறுகிறாள்.

     “அட... வாங்க! வாங்க மாமா! வாங்க!”

     அப்பா வரவேற்கும்போது விஜி அறையிலிருந்து கூடத்துக்கு நழுவி விடுகிறாள்.

     வாசற் பக்கத்துக் கதவு வழியாகவே அவரை வரவேற்று சண்முகம் நாற்காலியைக் காட்டி உபசரிக்கிறார்.

     ஐயாம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரனாகும் உறவு இவர். மகமை பண்டாபீசில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அவளுடைய கணவன் வீட்டாரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். இவருடைய மூத்த மகன் ஆஃப்செட் அச்சகம் வைத்திருக்கிறார். கடைசிக்காரன் இவள் கணவனுக்கு நெருங்கிய தோழன், தொழில் நுட்பம் படித்திருப்பவன், புதுநகரத்துத் தொழிற்பேட்டையில் அவன் தொழிலகம் ஒன்று நிறுவியிருப்பதாகத் தெரிந்து கொண்டிருக்கிறாள். அவனுக்குச் செல்வியைக் கொடுப்பதாக ஒரு பேச்சு இருக்கிறது.

     “எப்ப வந்தீங்க மாமா? நீங்க வடக்க யாத்திரை போயிருந்ததாச் சொன்னாங்க?”

     “வந்து பத்து நாளாச்சி, ஊர்த் திருவிழாவுக்கே வரணும்னு. பெறகு காச்மீரமெல்லாம் போகண்ம்னு ஒரு ஆசை வந்திடிச்சி... சிவராத்திரிக்கு முன்ன கிளம்பினம். சிவராத்திரிக்குப் பசுபதிநாதம்னு நேரப் போயிட்டோம். குளிருதான். ஆனால் ரொம்ப நல்லாயிருந்தது. எல்லாத் தரிசனமும் ஆச்சு. பாட்னா கயா... காசியில் வந்து தங்கினோம். என்ன வெயிலு அதுகுள்ள? பிறகு அலகாபாத் டில்லி, அரித்துவாரம்னு போனோம். பத்ரிநாத்தும் போயிட்டு டில்லிக்கு வந்தோம். கடோசில இனிம வரமோ என்னமோன்னு காச்மீருக்கும் டூரிஸ்டு கார் போகுதுன்னு போயிட்டு வந்தோம்... இப்பத்தான் சமாசாரம் எல்லாம் தெரிஞ்சிச்சு. வெங்கியப் பார்த்தேன்...”

     விஜி கூடத்திலேயே நின்று கேட்கிறாள். அவருடைய குரலில் ஏதோ அசாதாரண முக்கியத்துவம் தொனிப்பது போல் படுகிறது.

     “என்னமோ, ‘மாச்சஸ்ல தகராறு, மாரிசாமி பய கணக்கப் பிள்ளைய அடிச்சிட்டான். விவகாரமில்லாம ஏதோ நடந்திச்சி’ன்னான். விஜி இதுக்காக வருத்தப்பட்டுக் கோபிச்சிட்டுப் போயிட்டுதுன்னான்...”

     “மாமா, விஜிக்கும் இந்த விவகாரத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லியே?” அப்பா துணுக்குற்றவராகப் பேசுகிறார்.

     “பின்ன, ஏதோ கலாட்டா வந்து ஒரு நாள் பிள்ளங்க வராம தொழிற்சாலையை மூடிட்டான்னானே? விஜி யாரோ பையனச் சின்னப்பட்டிலேந்து ஃபாக்டரி வண்டியில கூட்டிட்டு வந்து ஃபாக்டரில சாமிக்கண்ணுகிட்ட சண்டை போட்டாளாம். பிள்ளைங்களுக்கு லஞ்ச் அவர் குடுக்கறதில்லையா? எட்டு மணி நேர வேலைதான் குடுக்கணும்னு சொன்னாளாம்...”

     “மாமா, இந்த ஊருல, அப்படி விஜியோ, நானோ சொல்லி மாத்திடற பிரச்னை இல்ல இது. காலங்காத்தால பிள்ளைங்களைத் தூக்கத்திலேந்து எழுப்பி அள்ளிப் போட்டுட்டு ஃபாக்டரிக்குக் கொண்டு போற வழக்கத்தை மாத்தணும்னா அவங்க தாய் தகப்பனே அதை விரும்பல. பீஸ் வொர்க் மகத்துவமே இதுதான். நிறையக் குச்சியடுக்கினாத்தான் நிறையக் கூலி. இவங்களுக்கு டிமான்ட், அவங்களுக்குத் துட்டு. விஜி நியாயமாக் கோபப்பட்டுக் கேட்டிருக்கு. எல்லாம் கோரிக்கை வச்சு ஃபாக்டரியத் திறந்தா, ஆனா பிள்ளைங்களுடைய தாய் தகப்பனே நாளைக்கு ரெண்டு ரூபாய்க்கி குச்சியடுக்கணும்னு சொன்னா, கோரிக்கையாவது மண்ணாவது?”

     “அதான், விஜி இப்படி மனத்தாபப்பட்டுட்டுப் போயிட்டா, நம்ம தொழிற்சாலைகளில், போனஸ், பண்டிகைக் காசு எல்லாம் கொடுக்கிறோம். பி.எஃப் புடிச்சிருக்கிறோம். கலியாணம் காதுகுத்துன்னு வந்தா தனியாகப் பணம் கொடுக்கிறோம்-ன்னு சுப்பையா பாரு, நேத்துரா வந்து உக்காந்து, மாமா நீங்கதா எடுத்துச் சொல்லணும், ஏதோ நடந்து போச்சுன்னு ரொம்ப வருத்தப்பட்டான். திருவிழாவுக்கு அவ வரலியாம். அவளும் புடிவாதமா இருந்தா, நானும் ஆத்திரத்தில் ரெண்டு சொல் சொல்லிருப்பேன்... இப்பிடிக் கோச்சிட்டுப் போவான்னு நினைக்கலன்னு பாவம், அழுதான். அவன் இப்பிடி அழுவான்னு, நான் நினைக்கல, சிறு வயசில ரொம்ப முரடா இருப்பான்.”

     விஜி இன்னும் வெளியேதான் நிற்கிறாள். உணர்ச்சிகள் மோதிக்கொள்ளும் பரபரப்பு அவளை ஆட்கொள்கிறது.

     “இதற்கு விட்டுக் கொடுக்காதே!” என்று அறிவு முன்னேற்பாடாக எச்சரிக்கிறது. அப்பா வெளியே வருகிறார். “விஜி இங்கதானிருக்கிறியா? உள்ளே வா!” என்றழைக்கிறார்.

     விஜி உள்ளே செல்கிறாள். ஆனால், அப்பா உள்ளே வரவில்லை. இந்த மாமாவின் உறவுக்கு, இவளுடைய உறவு அந்த வீட்டில் பிணைக்கப்படுமுன் எந்தவிதமான முக்கியத்துவமும் கிடையாது. இவர் சென்னைக்கு வந்தால் அவர்கள் வீட்டில் தங்கமாட்டார். ஆனால் ஒரு மிட்டாய் பொட்டலத்துடன் வந்து பார்த்துவிட்டுப் போவார். திருமணச் சம்பந்தத்துக்கு முதல் தூதாக இவர் தாம் வந்தார். திருமண வைபவத்தில் கேலிகள் செய்தார். இவருடைய மகள் மனைவி எல்லோரும் உள்ளூற அவள் தங்கள் ‘அந்தஸ்து’ மதிப்புக்குக் கீழானவள் என்ற எண்ணம் உண்டு.

     “உக்காரம்மா, விஜி!”

     “பரவாயில்ல மாமா, நிக்கிறது சங்கிடமில்ல... நான் சின்னவதானே?”

     “அதில்ல, உட்கார்ந்துதான் பேசணும்... நீ படிச்ச பொண்ணு. எங்களப் போல கிணத்துத்தவள இல்ல. உனக்கு நாலு பேரோடு பேசிப்பழகி விவரம் புரிஞ்சிக்கத் தெரியும். எதோ ஒண்ணுந்தெரியாததுங்க முரண்டிக்கிட்டுதுன்னா அட விட்டுத் தள்ளுன்னு போயிட்டிருக்கலாம். உன்னை அப்படி நினைக்கறதுக்கில்ல. நீ என் கிட்டச் சொல்லு உனக்கு என்ன மனத்தாபம்னு...” இது போன்று ஓர் தூதனுப்புவார்கள் என்று அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

     அவள் தலை குனிந்தபடியே, “எனக்கும் அவருக்கும் அந்த வீட்டுக்கும் ஒரு அம்சத்திலும் கூட ஒத்துவரல. இந்தக் கல்யாணத்துக்கு நான் உடன்பட்டதே நான் செய்த தப்பு...” என்று நிதானமாகத் தெரிவிக்கிறாள்.

     அவருடைய மலர்ந்த முகபாவம் மாறி, தீவிரம் ஏறுகிறது. அவளை உற்றுப் பார்க்கிறார்.

     “நீங்களேதானம்மா பாத்துப் பேசி கட்டிக்கிட்டீங்க? கலியாணம்ங்கறது இப்படி சட்டுனு முடிவு பண்ணுற சங்கதியா நாம நினைச்சே வழக்கமில்ல. ஆனா, நீங்க ரெண்டு பேரும் சின்னப்பிள்ளைங்க இல்ல. பார்த்துப் பேசி, ஒத்துத்தான் பண்ணிட்டீங்க. அத்த, இப்படி இடையில மாத்துறங்கறது பாக்கிறவங்க, கேக்குறவங்களுக்கு ரொம்பக் கொறவாப் படும்மா! கீழ்ச்சாதியில கட்டிக்கிறதும் வாணாம்னு விட்டுட்டுப் போறதும் வழக்கமாயிருக்கும். நாம அப்படியா? உனக்கென்ன குறை அங்கே? வீடு - வாசல், தனி ரூம், சமையலுக்கு, மேல் வேலை எல்லாத்துக்கும் ஆளு, பொறுப்புக்கு மாமியார், வண்டி, துணிமணி, நகை நட்டு, என்ன குறை?”

     அவளுக்கு விரக்தியான சிரிப்புத்தான் மேலிடுகிறது.

     ஒரு பெண்ணின் உலகை எவ்வளவு எளிதாகக் குறுக்கி விடுகிறார்கள்!

     “இதெல்லாம்தான் உலகம்னு என் மனசு ஒப்பல மாமா!”

     புருவங்களைச் சுருக்குகிறார் மாமா.

     “என்னம்மா இது? நீ பேசறது புரியாம இருக்கு! ஒரு பொண்ணுக்கு இளமையான தொழில்காரனான புருசன், நினைச்சபடி இருக்க பணவசதி, நல்ல வீடு இதெல்லாம் பெரிசில்லன்னா, வேற என்னதா சொல்லுது உம் மனசு? அதிசயமால்ல இருக்கு?”

     “நீங்க ரொம்ப மன்னிக்கணும் மாமா. முன்னமேயே நாங்க பேசிட்டது உண்மைதான். ஆனால் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக நடிச்ச நடிப்புண்ணு தெரியாம ஏமாந்திட்டேன்...”

     அவருக்கு அடக்க இயலாமல் கோபம் வந்துவிடுகிறது.

     “இத பாரம்மா, நமக்குதாம் பேசத் தெரியும்னு வாயறியாம வார்த்தய வுட்டராத. இப்ப என்ன ஏமாத்திட்டாங்க, என்ன நடந்து போச்சி? புருசன் பொஞ்சாதிக்குள்ள பேச்சுவார்த்த தகராறு வர்றதுதா, தடிக்கிறதுதா. ஆனால், பகல் சண்டை பகலோட போயிடும். இத்தப்போயி பெரிசு பண்ணிட்டு கேவலம் பண்ணுற? எனக்கு இது நல்லால்ல. கொஞ்சங்கூட நல்லால்ல, ஆமாம்!”

     “மாமா, சும்மா இருந்த எங்கிட்ட நீங்கதா வந்து கேட்டீங்க, நான் சொன்னேன். நடந்து போனதை நான் சொப்பனம்னு நினைச்சி மறக்க முயற்சி செஞ்சிட்டிருக்கிறேன், ஏன் தொந்தரவு செய்யறீங்க?”

     “இது நல்ல நாயம்மா! உன் சொந்த விசயம் இல்ல இது; குடும்பத்தின் மானம், கௌரதை சம்பந்தப்பட்ட விசயம். உங்க குடும்பம் மட்டுமில்ல, கௌரவப்பட்ட அந்தக் குடும்பம் சம்பந்தப்பட்டது. என்னமோ கோவிச்சிட்டு பொட்டியத் தூக்கிட்டு வந்திட்டதால் தீந்து போயிடாது, நினைச்சிக்க.”

     “மாமா, என்ன மெரட்டுறீங்க? மானக் குறைவுக்கு நான் ஒண்ணும் பண்ணிடல. குடிச்சிட்டு வரதும், பெண்சாதியப் புழுபோல நினைச்சி நாலுபேரு முன்ன கை நீட்டி அடிக்கிறதும் சரின்னு பொறுத்துக்கிட்டு கிடக்க நான் அம்பது வருசத்துக்கு முந்தி பிறந்திருக்கல. ஐ ஹாவ் நோ ரிக்ரட்ஸ். என்னால் அங்கே போய் வாழுவதான பெயரில் சிறைவாசம் அனுபவிக்க முடியாது. எனக்கு வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்கு...”

     சில கணங்கள் அவர் நாவடைத்துப் போகிறார்.

     “என்ன துடுக்குத்தனம் உனக்கு! இந்தப் பேச்சுக்கு நீ ரொம்ப வருத்தப்படப் போறேம்மா! ரொம்ப வருத்தப்படப் போறே! லட்சக்கணக்கில் சொத்து வச்சி அந்தக் குடும்பத்தில் பொண்ணு கொடுக்க இன்னிக்கும் தயாராயிருக்கா...” என்று ஒரு குண்டை வெடிக்கிறார்.

     “லட்சம் லட்சம்னு நீங்கல்லாம் சொல்லுறதைக் கேட்டு எனக்குச் சிரிப்புத்தான் வருது. இந்த ஊருல மாட்ச் வொர்க்ஸ்காரங்க கிட்ட சேரும் லட்சமெல்லாம், பிஞ்சுப் பிள்ளைகளின் எதிர்காலத்தை வறட்டி எடுக்கும் காசு. பெற்றவர்களின் வறுமையையும் அறியாமையையும் வச்சு முதலெடுக்கும் காசு. அந்த லட்சங்களில் எனக்கு ஒரு மேன்மையும் தெரியவில்லை!”

     அவள் முகம் அசாதாரணமாகச் சிவக்கிறது.

     அவர் மேல் வேட்டியை விசிறிப் போட்டு கொண்டு எழுந்திருக்கிறார்.

     அப்பா அப்போது காபியை எடுத்துக் கொண்டு உள்ளே வருகிறார்.

     “காப்பி குடிங்க மாமா!”

     “ஒண்ணும் வேணாம்... ஒண்ணும் சாப்பிடறதுக்கில்ல. உன் பெண்ணை இப்படி ஒரு தறுதலையா வளத்திருப்பேன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. அந்தம்மா சொன்னது அப்படியே சரியாயிருக்கு!”

     “மாமா, இந்தக் காலத்துல அவங்களுக்கு அவங்க வாழ்க்கையைப் பத்தி முடிவெடுக்க தைரியமும் சுதந்திரமும் இருக்கு. இதுக்கு நீங்க எதுக்கு வருத்தப்படணும்?”

     “என்னடா பேசுற நீ? என்ன சுதந்திரம் இது?” என்று பஞ்சநதம் மாமா அடித்தொண்டையில் இருந்து கத்துகிறார். “என் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சு அனுப்பினா, இந்தச் சிறுக்கி தூக்கி எறிஞ்சி பேசிட்டாளே. பொம்பிளப் பிள்ளையள வைக்கிறபடி வச்சி வளக்கணும்!”

     “மாமா! நீங்க பெரியவர்னு வயசுக்கு மதிப்புக் கொடுக்கிறேன்! வீணாகப் பேச வேண்டாம்!” என்று விஜி கோபத்தை அடக்கிக் கொண்டு மொழிகிறாள். மாமா விர்ரென்று எழுந்து காத்திருந்த ரிக்‌ஷாவில் சென்றமருகிறார்.

     “இந்த மாமா, அந்தக் குடும்பத்துக்கு இவ்வளவுக்கு வேண்டியவர்னு எனக்கு இப்பத்தான் அப்பா தெரியிது!”

     “இவர் பெரிய பையன் அவங்க பிரஸ்ஸிலதான் முதல்ல வேலைக்கிருந்தான். ரெண்டாவது பையன் பேரில் மாட்ச் ஃபாக்டரி ஒண்ணு இருக்கே, அது அப்ப, 1969இல் தீப்பெட்டிக்கு பண்ட்ரோல் போடுற தீர்வை வேண்டாம்னு வச்சிருந்தா, அப்ப ஆரம்பிச்சாரு. அதுக்கு உதவி செஞ்சவங்க உங்க வீட்டுக்காரங்கதான். அப்ப வரியே கட்டாம இந்த ஊரில கறுப்புப் பணத்தை குவிச்சவங்க ஏராளம். அஞ்சாறு வருசம் அப்படி இருந்திச்சி. மறுபடியும் எழுபத்தஞ்சிலே திரும்பி பண்ட்ரோல் போடுறது கொண்டு வந்திட்டா... இந்த வரி ஏய்ப்புங்கறதுதான் ஒரு பெரிய கோளாறா, கறுப்புப் பணப் புழக்கத்தைக் கொண்டு வருது. கணக்கப்பிள்ளை, மானேசர், இவங்கல்லாம் திடீர் திடீர்னு புதுத் தொழில் செய்ய முதல் போடுறதும் பெரிய பெரிய வீடு கட்டுறதும் அதுனாலதா? சுற்று வட்டமெல்லாம் தொழிலுக்குச் சிறு பிள்ளைகளைப் பீராய்ஞ்சிட்டு வராங்க. வங்கியும் சிறு தொழில்னு மேல மேல கடன் கொடுத்து உதவி செய்யிது. முன்ன, இவ்வளவுக்கு இங்கே இந்தக் குழந்தைத் தொழிலாளிகள் கிடையாது. ‘ஸ்மால்ஸ்கேல் செக்டர்’ங்கறதுக்கு வங்கி உதவி கிடைக்கிதுன்னா, உடனே பெண்சாதி மேல இருக்கும் நகைய உருவிப்போட்டு, கடன் வாங்கி, தொழில் தொடங்கிடறான். அரசு அதிகாரிகளுக்கும் அடியிலிருந்து தலைவரைக்கும் லஞ்சம் கொடுக்கிறான். அதனால அவனுக்கும் பணம் லாபம் சம்பாதிப்பது ஒண்ணே குறியாகிப் போகுது. தொழில், பொருளாதார உற்பத்தி மேன்மைக்கும், அது மக்களுடைய வாழ்க்கை மேன்மைக்குமாக பெருகணும். அது இல்லையேம்மா?”

     “சிறு தொழில் பெருக்கத்தில் நிறையத் தொழிலதிபர்கள்னு பெருகியிருக்கிறார்கள். ஆனால், ஒருபுறம் அகழ்ந்து தான் ஒருபுறம் மேடு, என்ற நிலை மாறவில்லை. சிறு குழந்தைகளை படிக்கவிடாமல் தூங்க விடாமல்தான் இந்தத் தொழில் வளரணும்ங்கற நிலையை எப்படி மாற்றலாம்?... ஆறு மணிநேரம் வேலை செய்யணும்னா, இவர்களுக்கு லாபம் வராது. அதிகமான ஆட்களை ஈடுபடுத்த வேண்டும். குச்சியடுக்குவதும் லேபில் ஒட்டுவதும் பெரியவங்க செய்வதனால் அதிக உற்பத்தி காண முடியாது...”

     “ஓரளவுக்குப் பெரியவங்களை வச்சுத்தான்மா, குழந்தைகளை விடுவிக்க வேணும். சின்னப்பட்டி போல் ஊரிலேயிருக்கும் பிள்ளைகளைப் பெற்றோர் ஏன் அனுப்புறாங்க? அவங்களுக்கு அங்கே வருசம் முழுதும் பிழைப்பு இல்ல. அங்கே சின்னச் சின்ன அளவில் குடிசைத் தொழிலாக இதை ஊக்குவிக்கலாம். காட்டில் வேலையில்லாத நாட்களில் பெரியவங்க சும்மாத்தானிருக்கா. அவர்கள் குழந்தைகளை அனுப்பலேன்னா, கட்டுப்பாடாக இருந்தால், மாற இடமுண்டு. கூட்டுறவு முறையில் தனக்குத்தான் என்று குடும்பத்தினரே வேலை செய்து ஊதியம் காண தொழில் பெருக்குவதுதான் இதற்கு மாற்று... மற்றபடி ஒரு பயனுமில்லை...”

     “சின்னப்பட்டியில் நாம அப்படி ஒரு முயற்சி செய்தால் என்னப்பா?” தந்தை அவளை இரங்கும் விழிகளுடன் நோக்குகிறார்.

     ‘குழந்தைபோல் பேசுகிறாயேம்மா, அவ்வளவு இலகுவில் அது நடைபெற, மற்றவர் விட்டு விடுவார்களா?’ என்று கேட்பதுபோல் இருக்கிறது.

     “விஜி... நீ... உங்க வீட்டில என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. ஆனா... நீ சந்தோஷமாக இருக்கமுடியலன்னு புரிஞ்சிட்டிருக்கிறேன்... பொது வாழ்வைச் சொந்த வாழ்வோடு பிணைக்காதவன் அந்தரங்க சுத்தியோடு பொது வாழ்வில் ஈடுபட முடியாது. ஆனா... அதுக்காகச் சொந்த வாழ்வைப் புறக்கணிப்பது சரியா?”

     அவர் கண்கள் மேலே படத்தில் நிலைக்கின்றன. துயரத்தை விழுங்கிக் கொள்கிறார்.

     “உன்னம்மா, ஒருபோதும் என் செய்கைகளை எதிர்க்கவுமில்லை; மறுக்கவுமில்லை. என் வகையில் பத்தாயிரம் கொடுத்துத் தொழில் செய்ய அவர்கள் இழுத்தபோது, அவளிடம் கேட்காமலேயே மறுத்தேன். அதெல்லாம் தப்புத்தான்னு பின்னால நினைக்கிறேன். அவ என்ன நினைச்சிட்டிருக்கிறாள்னு அறியக்கூட முயற்சி செய்யல நான்... அவ... நான் தெரிஞ்சுக்கறதுக்கு இல்லாமலே, உலகத்தை விட்டே போயிட்டா...”

     குரல் அழுகிறது.

     விஜி எதுவும் பேசாமல் சிந்தனையில் மூழ்கிப் போகிறாள்.