21 சிற்றப்பா சங்கரலிங்கத்துடன் ராமுவும் கணேசனும் மாம்பலம் நிலையத்திலேயே அவளை எதிர் கொண்டழைக்கின்றனர். வீட்டில் சுகந்தி தன்னை அழைத்துச் செல்லவில்லை என்ற கோபத்துடன் மூலையில் முகத்தைத் தொங்கப் போட்டிருக்கிறாள். “வாம்மா! விஜி!” என்று வரவேற்கும் குரலுடன் “போடி! விஜியக்கா வந்தாச்சி!...” என்று சொர்ணாச் சித்தி அவளை இழுத்து வருகிறாள். “என்னம்மா விஜி? மாப்பிள்ளையக் கூட்டிட்டு வராம வந்திருக்கிற?” என்று ராசுச் சிற்றப்பா கேட்கிறார். கடைப் பையன்கள் வேலையை மறந்து சிரிப்பைச் சிந்தி வரவேற்கின்றனர். அருகில் வந்து நிற்கும் ஜயதேவியும் சந்திரனும் அவள் கவனத்தை ஈர்க்கின்றனர். சந்திரனைத் தூக்கிக் கொள்கிறாள். “நேத்திலேந்து விஜியக்கா வருது வருதுன்னு ஜபம் பண்ணிட்டிருக்கிறா! தூங்கி முளிச்சாத்தா வரும்னு சொன்னே.” “ஜயதேவி ஸ்கூலுக்கு ஒழுங்காப் போவுதா?” “அதெல்லாம் கேக்காதே! வாசலப் பாத்தே உக்காந்திட்டு இன்னும் அழுவுது. இவங்களச் சமாளிக்கவே முடியல! மூணு டீச்சர் டியூசன் மாறியாச்சி! லீவு விட்டிச்சி, நீ இருந்தா கூட்டிட்டுப் போவே. இங்க கடயில் இப்பதா நெருக்கடி. அவுக யாருக்கும் வரதுக்கில்ல. இந்த வாலுகளைக் கூட்டிட்டு என்னால தனியாகப் போகறதுக்கும் இல்ல. இந்த லதா பெயில் இந்த வருசம், நாம சொன்னா படிக்குதுங்களா...” என்று சித்தி பொரிந்து கொட்டுகிறாள். விஜிக்கு இந்தச் சூழல் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. “நீங்க ஒங்க புராணத்த மொள்ளமா அவுத்துவிடுங்க. அத்தப் பேசவிடாம பேசிட்டே போனா? ஏம்மா, மாப்பிள வீட்டில எல்லாரும் சுகமா? சின்னப்பட்டிக்குப் போயிருந்தியா?” என்று ராசுச் சிற்றப்பா விசாரிக்கிறார். “எல்லாரும் சுகம். சின்னப்பட்டிக்கு இங்க வரதுக்கு முன்னதா போயிருந்தேன். ஐயாம்மா உடம்பு முடியாமதா இருக்கு. பட்டணம் வாங்கன்னேன். வரமாட்டேன்னுட்டாங்க. இந்தத் தண்ணி ஒத்துக்காதாம்!” செய்தியறிந்து அடுத்த தெரு அத்தை விரைந்து வருகிறாள். “மாமியா வீட்டுக்காரங்க நல்லபடியா இருக்கிறாங்களா? மாப்பிள அடிக்கடி பம்பாய் டில்லின்னு போவார்னு கலியாணத்தின்போது சொல்லிட்டாங்க. ஒரு நடை இங்க அவருகூட நீயும் கூட்டிட்டு வரக்கூடாது?...” விஜி ஒரு புன்னகையுடன் நிற்கிறாள். “உன் நாத்தூனுக்குக் கலியாணம் பாத்திட்டிருக்கா; பஞ்சநதம் மாமா பையன் குமாருக்குத்தான் குடுக்கப்போறா. ஒரு லட்சம் கொடுக்கறான்னு பத்துநா முன்ன செம்பகராமன் வந்து சொன்னான்...” இந்த அத்தைக்கு யாரேனும் ஊரிலிருந்து வந்த வண்ணம் இருப்பார்கள். “அப்படியா?” என்று செய்தியைக் கேட்டுக் கொள்கிறாள். மலர்ச்சியும் மகிழ்ச்சியும் இவள் மயிலேஷைச் சார்ந்து, அவன் மனைவியாக இருக்கிறாள் என்ற நிலைக்கே கரை புரளுகின்றன. இரண்டு சின்னம்மாக்களும் இதற்குள் அவள் மீது ஓரப்பார்வை பதிந்து இரகசியம் பேசிக் கொள்கின்றனர். அவர்களுடைய ஊகம் அவள் முகத்தில் சிவப்பேறச் செய்கிறது. ஒரு வேகத்துடன் மறுக்கிறாள். “அதெல்லாமில்ல... நீங்க எதுவும் கற்பனை பண்ணிடாதீங்க!” “அதது காலத்தில உண்டாகணுமில்ல?” என்று சிரிக்கிறாள் சொர்ணம். “கலியாணத்துக்குப் பிறகு கொஞ்சங்கூட பூசுனாப்பல மினுமினுப்பா எல்லாம் மாறவேயில்லை. கறுத்துப்போயிட்டா!” “ரயிலில வந்த வாட்டம்.” குழந்தைகளுடன் கடற்கரைக்குச் செல்வதும் பூங்காவுக்குச் செல்வதுமாக நாலைந்து நாட்கள் ஓடியது தெரியவில்லை. பிறகு பள்ளி திறந்து விடுகிறார்கள். அவர்களுக்கான புதிய புத்தகங்கள், பாடங்கள் என்றும் பொழுது விரைவாகச் செல்கிறது. இந்தச் சுமுகமான நிலையை அவள் தன் உண்மையான மனநிலையை வெளியிட்டு உடைத்து அதனாலேற்படும் எதிரொலிகளை ஏற்கத் துணிவு இல்லாதவளாக இருக்கிறாள். ஊடே, ஐயாம்மா அவளைக் கவலை கொண்டு தூண்டித் துருவியதையும் நினைக்காமலில்லை. “இப்ப எதுக்குடீ நீ மட்டும் பட்டணம் போற? உம் புருசன் ஊருல தான இருக்கிறான்?” என்று கேட்டாள். “ஐயாம்மா, என் இஷ்டப்படி கொஞ்ச நாள் மாறுதலா இருக்கக்கூடாதா?” “அடீ உன்னப்பன் என்னை ஊர்ப்பக்கம் மிதிக்கவிடாதபடி செஞ்சான். நீ என்னைப் பெரியபட்டி சாமி கோயிலுக்குக் கூடப் போக வாணாம்னு செஞ்சிட்டே...” என்றாள். அவள் அதிர்ந்து போனாள். “கண்டதும் நினச்சிட்டுப் பேசாதீங்க ஐயாம்மா.” இப்ப என்ன ஆயிடிச்சி?” இன்னும் என்னடீ ஆவணும்? புருசன் வீட்டிலேந்து சண்ட போட்டுக்கிட்டு ஓடி வந்திட்டியாம்! உன் மாமியா வந்து வருத்தப்பட்டு அழுதாளாம். பஞ்சநதம் மாமாவை அனுப்பிச்சாங்களாம்... நீ தூக்கி எறிஞ்சி நான் வரப்போறதில்லன்னு திருப்பி அனுப்பினியாம். எனக்கு ஒண்ணுந் தெரியாதுன்னு நினைச்சுக்காத! விளையாட்டாடீ இது?” அவளால் அந்த முதிய தலைமுறைக்காரியைத் தன் நியாயத்தைக் கூறிச் சமாதானப்படுத்த முடியவில்லை. “விஜி, கலியாணமான பொண்ணு காரணமில்லாம ரெண்டு நாள் பொறந்த வீட்டில தங்கினாக்கூட, ஊர் உலகம் எதுக்கு வந்திருக்குன்னுதா விசாரிக்கும்... ஏண்டி இப்பிடி இருக்கிற? அவன் சின்னப்புள்ள. எங்கேன்னு பலாப்பழத்தில் வந்து ஈ குந்துறாப்பல வருவாங்க. படிச்ச உனக்கு ஏண்டி இதெல்லாம் தெரியல?” அவளுடைய நயம், பயம் எதையும் விஜியினால் ஏற்க முடியவில்லை. அவளுக்கு எப்படிப் பார்த்தாலும் மயிலேசனின் மீது உள்ள வெறுப்பு மாறவில்லை. தான் வெறுப்புக் கொள்வது சரியல்ல என்று மனசின் ஓரத்தில் உறுத்தினாலும், தான் அந்த நேர நெகிழ்ச்சிக்கு இடம் கொடுத்துக் காதல் என்று மயங்கியதைத் தவறாகவே கருதுகிறாள். புத்தகத்தில், கதைகளில் மிகைப்படுத்தப்படும் கவர்ச்சிகளைத் தான் எப்படி ஒப்புக் கொண்டாள் என்பதே அவளுக்குப் புரியவில்லை. மாரியம்மன் கோவில் விழாவில் நாவில் ஊசிபோட்டுக் கொள்ளும் பக்திப் பரவசக்காரர்களையும், ‘கயிறு குத்து’ நேர்ச்சைக்காரர்களையும் கண்டே இது எப்படி வலிக்காமல் சாத்தியமாகிறது என்று அறிவு பூர்வமாக ஆராய்வாள். அத்தகையவள், திருமணம் என்பது சமுதாயக் கட்டுக்கோப்புக்காக, ஆணும் பெண்ணும் அன்பு கொண்டு, இயற்கையான எழுச்சிகளை ஒருவர்பால் ஒருவர் என்று திருப்பிக் கொண்டு, ஒத்து வாழ்வதற்கானதோர் பிணைப்பு ஒப்பந்தம் என்றும், ஒருவரை ஒருவர் மீறாமலிருப்பதற்காகச் சில விதிகள் நிலையுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவள் கருதியிருக்கிறாள். இதில் பெண் முக்காலும் பொருளாதார சுதந்திரமில்லாமல் இருப்பதனால், எந்நாளும் ஆணைச் சார்ந்த வாழவேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தியிருக்கின்றனர். ஒரு பெண் எந்த நிலையிலும் தனித்து வாழ முடியாது என்று அச்சமுண்டாக்கும் வகையில் சமுதாயத்தில் அவள் கணவனைச் சார்ந்தே கௌரவிக்கப்படுகிறாள். இந்தக் கட்டுக்களை எடுத்துவிட்டால், பொருளாதார சுதந்தரம், அறிவு பூர்வமான மனவளர்ச்சி ஆகிய நிலைகளில் ஆணைக் காட்டிலும் தாழ்ந்தவள் என்றில்லாமலாகிவிட்டால், திருமண பந்தங்களின் குறிக்கோள் சுயநலத்திலிருந்து மாறிப்போகும். விஜி தனது நிலையைச் சின்னம்மா, அத்தை யாரும் புரிந்து கொள்வார்கள் என்று நம்பவில்லை. அவளுக்கு மிகவும் நெருங்கிய, சமூகவியல் பேராசிரியை ஒருவர் இருக்கிறார். அவள் பெண்கள் கல்லூரியில் படித்து முடித்த பின் அந்த அம்மாள் ஓய்வுபெற்றார். திருமணமாகாமலே காலம் கழிப்பவர்; அவளிடம் அவருக்கு மிகுந்த அன்பும் மதிப்பும் உண்டு. ஒரு நாள் பிற்பகல் அவரைத் தேடிச் செல்கிறாள், விஜி. மணியை அடித்து, வாயிற்கதவு திறந்ததும் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் தெரிவித்து அன்போடு வரவேற்கிறார், அந்த அம்மை. ஆஸ்த்மா நோவு, சென்ற இரண்டு மூன்றாண்டுகளில் அவரை உருப்புரியாமல் மாற்றியிருக்கிறது. வெண்பட்டுப்போல் மினுமினுக்கும் முகமும், கழுத்தும், தொய்ந்து சுருக்கங்கள் விழுந்து முதுமைக் கோலம் காட்டுகிறது. “...இந்த ஊரில தானிருக்கிறியா விஜி? ஹவ் கைன்ட் அஃப் யூ! கொஞ்சங்கூட மறக்காம பாக்க வந்திருக்கே!...” என்று அவள் கையுறையாகக் கொண்டு சென்ற பன்னீர் திராட்சையை எடுத்து ருசிக்கிறாள். “இதுதான் சாப்பிடுவேன்னு தெரிஞ்சிட்டுக் கொண்டாந்திருக்கிற! ஹவ் நைஸ் அஃப் யூ!” கண்களில் நீர் கசிய விஜியை அணைத்து மகிழ்ச்சியைத் தெரிவிக்கையில் துணிவும் தன்னம்பிக்கையும் அறிவொளியுமாக நிமிர்ந்து நின்ற சாந்திதேவிதானா இவர் என்று கூட விஜிக்குத் தோன்றுகிறது. “விஜி டியர்! உனக்கு மாரியேஜ் ஆயிடிச்சில? யாரோ சொன்னாங்க ஆனா பத்திரிகை எதுவும் வந்ததா நினைப்பில்ல. இந்த ஆஸ்த்மா தொந்தரவு, பிறகு ஹார்ட் டைலட் ஆயிருக்குங்கிறா; நான் கோடைக்கு மலைப்பக்கமெல்லாம் கூடப் போறதில்ல. ஒரு வேளை கடிதாசி அனுப்பி மிஸ் ஆயிட்டுதோன்னு நினைச்சேன்...” விஜிக்கு உள்ளூர நாணமாக இருக்கிறது. “ஆமாம் மேடம். எங்க ஊரிலதான் கல்யாணமாச்சு. உங்களுக்கு இன்விடேஷன் அனுப்புறது எப்படியோ தவறியிருக்கு... அதான் நேராகவே வந்திருக்கிறேன்...” என்று புன்னகை செய்து சமாளிக்கிறாள். பிறகு கல்லூரி வாழ்வின் பல நினைவுகளில் உரையாடல் சரளமாகத் தொடருகிறது. பணி செய்பவன் தேநீரும் பிஸ்கோத்தும் எடுத்து வந்து வைக்கிறாள்... “எடுத்துக்கம்மா...” தேநீரைச் சுவைத்துக் கொண்டு, அந்தரங்கத்தின் படிகளில் இறங்கி வருகிறாள். “ம், எப்படியிருக்கேம்மா, துரு துருன்னிருப்பே, பெரிய பிஸினஸ்காரங்க வீட்டில, ஹவ் இஸ் லைஃப்...” விஜி தலைகுனிந்திருக்கிறாள். சரேலென்று அவள் முகபாவம் இருண்டு போகிறது. “நாட் வெரி குட் மேடம்...” ஆதரவான கை அவள் முதுகில் படிகிறது. “ஏம்மா? உன் மேல் அன்பாத்தானே இருக்கிறார்?...” “மேடம், உங்ககிட்ட எல்லாம் சொல்லி ஒரு யோசனை கேக்கத்தான் வந்திருக்கிறேன்...” “சொல்லம்மா, என்ன பிராப்ளம்?...” விஜி நிறுத்தி நிறுத்தி, மயிலேசனைச் சந்தித்தது, பேசியது, தாய்வழி குடும்ப உறவு, திருமணம், தந்தை, எல்லா விவரங்களையும் கூறுகிறாள். கணவனின் உண்மையான தன்மை, வீட்டாரின் நினைப்பு, குழந்தைத் தொழிலாளிகளினால் ஏற்பட்ட பாதிப்புகள், கணவன் வீட்டாருடன் தன்னால் ஒத்துப்போக இயலாத நிலை. அதனால் ஏற்படும் சிக்கல்கள் எல்லாவற்றையும் விவரிக்கிறாள். “மேடம், தொழில் செய்து பணம் குவித்திடுபவர் வீடுகளில் பெண்கள் தமக்கென்று ஓர் உலகை நிறுவிக்கொண்டு அதில் மிதக்கிறார்கள். எல்லாப் பெண்களும் உயர் கல்வி கற்றிருக்கின்றனர். ஆனால் வாழ்க்கையில் அதன் பாதிப்பே இல்லை. தோட்டம் போடுதல், நாய் வளர்த்தல், மலர் சிங்காரிப்பு, அழகு பராமரிப்பு என்று பொது வாழ்க்கையிலும் சமுதாய உணர்வே இல்லாமல் கண்களை மூடிக்கொண்டு உண்மைகளைப் புறக்கணிக்கிறார்கள். என் மாமியார் சாமியார்களுக்குக் குருபூசை செய்வதும், ஆயிரம் ஆயிரமாகப் பூசை அறை அலங்கரிக்கச் செலவிடுவதும் புண்ணியம் என்று கருதுகிறாள். உயிருடன் சிறுபிள்ளைகளைத் தொழிலகங்களில் சாறு பிழிவதைப் பற்றி நாம் நினைக்கத் தேவையில்லை என்று கருதுகிறாள். பெண்கள் பொதுவாக மென்மையும் ஈரமும் உள்ளவர்கள் என்பதை நினைவில்கொண்டு ‘சமுதாயம் - நம்மைச் சுற்றியவர்’ என்ற கண்ணோட்டமே தவறு என்ற அளவில் அவளை உருவாக்குவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பெரிய இடத்துப் பெண்கள் தாமாகவே ஓர் வசதி படைத்த சிறையைச் சிருஷ்டி செய்து கொண்டிருக்கின்றனர். நம்மைச் சுற்றி, கிராமங்களில் எவ்வளவு அறியாமை வேரோடி இருக்கிறதென்று தெரிந்து கொள்வதைக் கூட மறுத்து வாழ்கிறார்கள். வசதி உள்ளவர்கள் இப்படி என்றால் மற்றவர்கள், வாழ்க்கையின் தேவைப் போராட்டங்களிலேயே முழு வாழ்வையும் கொடுத்து விடுகிறார்கள். இன்றைக்கு, எங்க ஊர்ப்பக்கத்தில் டவுனைப் பொறுத்த வரையிலும் எல்லாப் பெண்களும் பொருளாதார சுதந்தரம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் என்ன? சாப்பிடணும், துணி உடுத்தணும், சினிமாவுக்குப் போகணும். இதற்குமேல் சீட்டுப் பிடித்து சம்பாதித்து, நகை, ஏனம் வாங்கணும், கல்யாணம் கட்டணும், மறுபடியும் ஆண் எப்படி இருந்தாலும் அவனுக்கடங்கிச் சகிக்கணும்... இது ஒரு வருக்கம். இதுக்கும் கீழே, வாழ்க்கையே அன்றாடத் தேவைகளுக்கான போராட்டம்தான். இங்கே மனிதனுக்கு உணர்ச்சிக் கட்டுப்பாடு, பொறுப்புணர்வு எதுவும் இருக்க நியாயமேயில்லை. வருசாவருசம் குழந்தைப்பேறு குழந்தை பேச, நடக்கத் தெரிந்த நாளிலிருந்து குடும்பப் பொறுப்பைச் சுமக்கிறது. ஆறு வயசுக்குக் குச்சியடுக்கப் போகிறது. மூன்று வயசுக் குழந்தை அம்மா பசை தடவிக் கொடுத்தால் பெட்டி ஒட்டிப் போடுகிறது! நீங்க பார்த்தால் ஆச்சரியப்படுவீங்க மேடம்! ஒரு வயசிலேயே குழந்தைக்குத் துட்டின் மகிமை புரியும். இதனால் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்புவதனால் ஒரு லாபமும் இல்லை என்றே பெற்றோர் முடிவு செய்கிறார்கள். எங்க கிராமத்துப் பள்ளிக்கூடத்தில், வாத்தியார் இந்தக் கொடுமையை நான் போனால் சொல்லி அழுகிறார். தொழிலகத்தில், பிள்ளைகளுக்கு வேலை நேரம் விடிகாலம் அஞ்சுமணிக்குத் துவங்குகிறது. இதற்காகத் தொலைவிலிருக்கும் குழந்தைகளை அழைத்துச் செல்ல ஃபாக்டரி வண்டி மூன்றரை மூன்றே முக்காலுக்கே வந்துவிடுகிறது. பிள்ளைகளை எழுப்பும் ஆளுக்கு இப்ப அறுபது ரூபாய் சம்பளம். நாளெல்லாம் பன்னிரண்டு, பதினான்கு மணி நேர வேலை செய்தாலும் அந்த அளவு கூலி கிடைப்பது சிரமமாக இருக்கிறது. எங்கள் தொழிற்சாலையில் ‘லஞ்ச் அவர்’ என்ற கட்டாயம் கூடக் கிடையாது. குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் சென்று சாப்பிடலாமாம். ஆனால் இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யவில்லை என்றால் கணக்கப்பிள்ளை கையிலுள்ள சக்கையால் அடிக்கிறான்; பயமுறுத்துகிறான். வீட்டில் பெற்றோர் ஏன் கூலி குறைந்தது என்று நெருக்குகிறார்கள். இந்தக் கொடுமைகளைப் பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. கூட்டுக் குஞ்சுக்கு, பறவை இனத்தில் கூடத் தாயும் தகப்பனும் இரை கொடுத்துப் பேணுகிறது. மனித இனத்தில்... ஏனிப்படி? ஒருநாள் குழந்தைகளுடன் நான் ஃபாக்டரிக்குள் போனேன் என்பதற்காக என்னை அவர் கை நீட்டி அடிக்கத் துணிந்தார். என்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமுன், தனது முன்னேற்றக் கருத்துக்களையும் மாணவர் இயக்கத்தில் தான் பங்கு கொண்டிருந்ததையும் சொன்னார். இப்போது நான் இந்தக் குழந்தைகளுக்காக இவர்கள் முறைகளை எதிர்க்கிறேன் என்று வந்ததும், ‘யூ ப்ளடி, கம்யூனிஸ்ட்!’ என்று ஏசுகிறார். மேடம், நான் அன்னிக்கு நினைத்தேன். நான் வெறும் பெண்ணில்லன்னு. விஜி என்ற பெண்ணை, தனிப்பட்ட முறையில் அவள் உணர்ச்சிகள் வெறும் உடல் வேட்கையினால் தவறான வழிகாட்டிவிட்டன. அப்போது அவரைத் தீரத் தெளியப் புரிந்து கொள்ளும் நிதானம் இல்லாதவளாகி விட்டதற்காக வெட்கப்படுகிறேன். வெளித்தோற்றத்துக்கும், உள்நடப்புக்களுக்கும் எத்தனை பயங்கர வேறுபாடு! என் தனித்தன்மையை இப்போது நான் கொன்று கொள்ளக் கூடாதுன்னு நினைக்கிறேன். என்னைச் சுற்றியுள்ள உறவினர் யாரும் என்னைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஒரு பெண்ணுக்குக் கல்யாணமானால்தான் மதிப்பு; அதுவும் அவள் தன் தனித்தன்மையை அந்தக் குடும்ப ஆதிக்கத்தில் பலி கொடுக்க வேணும். அப்படி இல்லையானால் இந்தச் சமுதாயம் அவளைக் குழியில் தள்ளிவிட அஞ்சுவதில்லை. ஒரு பெண் மலையில் வளர்ந்தாலும் உரலில் நசுங்க வேண்டுமாம்! அவளுக்கு ஃபாஷன், நகை, சேலை, ப்யூட்டிகேர், பொன்சாய் என்று விரிந்த உலகையும் உயர்ந்த பட்சமாகக் குறுக்கிடறாங்க...!” உணர்ச்சி வசப்பட்டுப் பொல பொலக்கும் அவள் சொற்களைக் கேட்கையில் அந்தப் பேராசிரியை, தனது மாணவியாகவே இன்னும் வந்திருக்கும் அவள் கையை எடுத்து தனது இரு கரங்களுக்குள்ளும் வைத்து மெல்ல அழுத்துவதன் வாயிலாகத் தன் மனக்கசிவை வெளியாக்குகிறாள். “விஜி... விஜி. ஐ ஆம் ப்ரௌட். இன்றைக்குப் படிச்சுப் பட்டம் வாங்கிட்டுப் போறவங்களும், வேலை பார்க்கிற பெண்களும், பல விஷயங்களில் அறியாமை மிகுந்த பாட்டிகளைக் காட்டிலும் மோசமாகவேதான் இருக்கிறார்கள். அப்படி இல்லாதவங்களையும், ஆண் நிர்ப்பந்தம் செய்கிறான்... சரிதானேம்மா?” “தொழில் பெருகியிருக்கு. எல்லாருக்கும் பட்டினி இல்லாம வேலை இருக்கிறதாகச் சொல்றாங்க. ஆனால், தொழில் பெருக்கம் எல்லா மக்களுடைய வாழ்க்கை நிலைகளிலும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க வேண்டாமா? பொதுவாக, முக்கியத் தேவையான குடிதண்ணீருக்குத் தட்டுப்பாடான நிலை. அடித்தள மக்களிடையே இன்னிக்குப் பெற்றோர் குழந்தைகள் பாசம் கூட ஏனில்லை? உயிர் வாழ அத்தியாவசியமான தேவைகளைப் பெறுவதே கஷ்டமாக இருக்கிறது. இந்தத் தொழில்கள், பணலாபம் கருதியே செய்யப்படுவதால், கள்ளத்தனம், கைக்கூலி, சூது, எல்லா வாணிபங்களுக்கும் இடம் கொடுக்கின்றன. இன்னிக்குத் தொழிற்சாலைக்குத் தொழில் செய்யப்போகும் இளம்பெண் தனது நல்ல பெயருக்குக் களங்கம் வரக்கூடாதே என்று அஞ்ச வேண்டியிருக்கு...” “விஜி, உன் சொந்த வாழ்க்கையை இப்படி ஒரு பொதுப் பிரச்னையோடு ஐக்கியப்படுத்துவது... அசாதாரணமானது. உனக்குச் சிறு வயது. உன் வயசில், நான் இதைக் காட்டிலும் துடிப்போடு இருந்தேன். அந்தக் காலத்தில் கல்யாணம் குடும்பம் என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள மாட்டேன்னு, மாரியஸ் ப்ரொபஸல் வந்த போது துச்சமாகத் தள்ளினேன். இப்ப நிலைமை வேறு... நான் உனக்கு நளாயினி கதையைச் சொல்ல வரதாக நினைக்காதே. நீ ஏமாந்து போயிட்டேன்னு சொல்றே. ஆல்ரைட் உங்க வீட்டு மனிதர்களையே மெல்லக் கருத்துமாற்றம் கொள்ளச் செய்ய நீ ஏன் முயற்சி செய்யக்கூடாதும்மா? எப்படியிருந்தாலும், உனக்கு வெறுப்பு விழக்கூடாது, ஏனென்றால் மனிதத் தன்மை சாசுவதமானது. அவரும் வயசு இளையவர், அதனால் உன் சொந்த வாழ்வில் வெறுப்பை வளர்த்துக் கொண்டால் பொது வாழ்வில் எதுவும் நன்மை காண முடியாது விஜி!” “அதற்காக, அவர்களும் என் நியாயமான உணர்ச்சிகளை மதிக்க வேண்டாமா மேடம்!” “உண்மைதான் விஜி. இது காலம் காலமாக அழுந்திப் போன மனப்பான்மை. பொருளாதார நெருக்கடிகள் சமுதாயத்தில் திடுதிப்பென்று சில நடைமுறைகளைத் தலைகீழாக்கியிருக்கின்றன. ஆனால், மனப்பான்மைகள் மாறிவிடவில்லை. அதை மாற்றாமல் இருந்தாலே லாபம் என்று இன்னும் பலரும் நினைக்கிறாங்க. அதனால் ஒரே நாளில் எல்லாம் மாறி விடணும்னு நீ எதிர்பார்க்க முடியாது.” விஜிக்கு அவள் கூற்றின் உட்பொருள் புரியவில்லை. “நீங்க என்ன செய்யலாம்னு சொல்லுங்கம்மா, ப்ளீஸ்...” “முதலில் உன் சொந்த வாழ்க்கையையும் இந்தத் தொழில் பிரச்னையையும் சேர்த்து முடிச்சுப் போட்டதை விடுவி. இந்தக் குழந்தைத் தொழிலாளர் பிரச்னை குறித்து நாலு வருஷம் முன்ன அப்ப சமுதாய நல அமைச்சராக டில்லியில் இருந்த அம்மா தீர்வு காண முயற்சி செய்தாங்க. இங்கே தென்னாட்டுக்கு வந்து, உங்க ஊர்ப்பக்கமெல்லாமும் போனாங்க. லண்டனில் நான் அவங்க மாணவியாக இருந்தேன். அந்தக் காலத்தில், ‘ஒன்றும் செய்ய முடியாது சாந்தா, இது முழுக்கப் பொருளாதாரப் பிரச்னை. அடிப்படைத் தேவைகள் இல்லாத வறுமை நிலையை மாற்றாத வரையிலும் எதுவும் செய்ய முடியாது’ என்று நான் கேட்டபோது ஒப்புக் கொண்டார். ஏன் இங்கே ‘அர்பன் ஸ்லம்’மில் என்ன நடக்குது? தேவைகளின் பசி பயங்கரமாயிட்டுது. இந்தப் பசிகளுக்கு முன்ன, தாய்மை அன்பு, நீதி நெறி எதுவுமே இல்லைன்னு ஆயிட்டுது. பணம் ஒண்ணே குறின்னு எல்லாம் ஓடுறாங்க. அதனால்தான் சொல்றேன், நீ ஒருத்தி உனது சொந்த வாழ்க்கையை வெறுப்புக் கண் கொண்டு உதறுவதால் இந்த சமுதாயப் பிரச்னையைத் தீர்த்துவிட முடியாது! நினைச்சுப் பார் விஜி.” விஜி மருட்சியுடன் நோக்குகிறாள். எல்லோரும் அவள் நிலையையே குறை கூறுகின்றனர். பஞ்சநதம் மாமா கோபித்துக் கொண்டு போனார். அவரிடம் தீர்மானமாக அங்கு வந்து வாழ்வதற்கில்லை என்றாள். இப்போது, அவள் பெரிதும் மதிக்கும் பேராசிரியை... தான் நிற்கும் பூமியே சரிவதுபோல் விஜிக்குப் பிரமை உண்டாகியது. “திரும்பவும் சொல்கிறேன், விஜி. யூ ஆர் யங்க, குடும்பம் என்பது மிகவும் பழமையான ஏற்பாடு என்றாலும், ஒரு சமுதாயத்தின் நிர்வாகத்தை அது உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. அதில் வரும் மாற்றமும் இயல்பாகவே மெல்ல வரவேண்டும். இந்த அமைப்பை இருபாலரும் கட்டிக்காக்கத் தான் வேண்டும். கல்யாணம் ஒருவகையில் சூதாட்டம்போல் நமது நாட்டில் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து அமைகிறது என்றாலும், இரண்டு பேரும் பிரிவதில் நாட்டம் கொள்ளக் கூடாது. தனியாக வாழ உனக்குத் துணிவிருக்கலாம். ஆனால் இன்றைய நிலை அதற்குச் சாதகமாக இல்லை. இதை உடைத்துவிட்டு இன்னொரு குடும்ப அமைப்புக்கு வணங்குவதற்கும் நீ தயாராக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால் என் அறிவுரை இதுதான். நீ போராடு. ஆனால் மணப்பந்தத்தை முறித்துக் கொண்டு வெளிவரப் போதிய காரணமில்லை என்று நினைக்கிறேன். நீ திருமணமே செய்து கொள்ளாமலிருந்தால் நான் பொது வாழ்வைப் பிணைத்துக் கொள்ளாதே என்றோ, திருமணம் செய்து கொள் என்றோ வற்புறுத்தப் போவதில்லை. ஆனாலும் அமைதியாக யோசனை செய். திடீர் முடிவு எடுக்காதே!” “மேடம், குடும்பத்தில் என் நிலை மாற்றமடையாத வரையில் நான் எப்படிச் சமுதாய அளவில் என் சக்தியை ஈடுபடுத்த முடியும்? ஒவ்வொரு சிறு விஷயத்துக்கும் மோதிக் கொண்டு கழிப்பதில் என்ன லாபம்?” “ஐ அக்ரி. ஆனால் வெளியில் வந்தால் மட்டும் எப்படிச் சாதிப்பாய்? வெளியே வந்தால் அவருக்கு இன்னொருவர் பெண்ணைக் கொடுப்பார். அண்மைக் காலங்களில் தொழில் செய்பவர்கள் நஷ்டம் காண்பதில்லை. ஏனெனில் வங்கிக் கடன் கிடைக்கிறது; லாபம் காட்டி யாரும் வரி கட்டுவதில்லை; அதிகாரிகள் உடந்தையாகின்றனர். அரசியல்வாதி இதை வைத்துப் பிழைக்கிறான். நீ சொல்லும் குழந்தைத் தொழிலாளிகளிலிருந்து வரதட்சணை வரை எல்லாப் பிரச்னைகளும் இன்று கறுப்புப் பணம், கள்ளச்சந்தை என்ற ஊட்டத்தில் வலிவடைந்து வருகிறது. நீ ஒருத்தி சாந்த வாழ்வைத் தியாகம் செய்வதனால் அது தீரப் போவதில்லை...” விஜி அவரிடம் அறிவுரை நாடி வந்தபோது, சற்றே தான் கலங்கியிருந்தாள். தெளிவு காண வழி சொல்லாமல் நன்றாகக் கலக்கி விட்டுவிட்டார் பேராசிரியை. |