11

     மசூதி பாளையம், மூச்சு மூட்டித் திணறியது.

     கடந்த மூன்று நாட்களில், அது அடியோடும் அடியற்றும் மாறிவிட்டது. ஆங்காங்கே தெருக்களுக்கு இடையே தென்படும் கண்ணைப் பறிக்கும் நூல் இழைப் பந்தல்களைக் காணோம். சாலை மறியல் செய்தாற்போல் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களைப் பார்க்க முடியவில்லை. கோலியாடும் சிறுவர்கள், கிளித்தட்டு போடும் சிறுமிகள் என்ன ஆனார்கள். எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரிய வில்லை. சாலைகளைச் சலனப்படுத்தும் வாகனங்கள் தோன்றவில்லை. ஒரு கடை கூட உயிர்ப்பிக்கப்படவில்லை. ஊரே வாயடைத்து, தெருக்கள் கதவடைத்துக் கிடந்தன.

     அந்த ஊரின் ஏழு தெருக்களில், ஐந்து தெருக்களில் இருந்த இஸ்லாமியர்கள் அதன் பிரதானத் தெருக்களில் கூட்டம் கூட்டமாய்க் குவிந்தார்கள். வாசலோரமும் ஜன்னலோரமும் நின்ற பெண்களும் பெண் கூட்டமாய் நின்று அப்படித் தனித்திருக்கப் பயந்து, ஆண் கூட்டத்தோடு சங்கமமானார்கள். வளைக்குள் இருந்து வெளியேற முடியாமலும், அதே சமயம் வெளியே இருந்து போடப்படும் மூட்டம் தாங்க முடியாமலும் தவிக்கும் பெருச்சாளிகளின் நிலைமை. மேற்குப் பக்கமுள்ள கருவேல மரக்காட்டைத் தாண்டிப் போகலாம் என்றால், அந்தக் காட்டுக்குள்ளேயும், அதைத் தாண்டிய ஆற்று மேட்டிலும் பழனிவேலு ஆட்களது நடமாட்டம் இருப்பதாகச் செய்தி. கிழக்குப் பக்கம் உள்ள பொட்டல் காட்டைத் தாண்டினால் அதற்குள் வேலி போலான ஒரு கிராமம். அங்கேயும் பழனிவேலுவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்கள். இந்த நிலையில் மசூதி பாளையத்தின் மக்களுக்கு அதற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை. கடைகளில் இருந்த சோடாக்களைக் குடித்தாகிவிட்டது. தாகத்தைத் தடுக்க முடியவில்லை என்றாலும், ஒரளவு தவிர்க்க முடிந்தது. பசிதாங்காமல் வெங்காயத்தைத் தின்று பார்த்தாச்சு. முள்ளங்கியை முழுங்கிப் பாத்தாச்சு. அரிசி புளி மிளகாய் கூட இருக்கு. ஆனால் அவற்றை ஆகாரமாய் ரசவாதம் செய்ய ஸ்டவ்வுக்கு எண்ணெய் இல்லை. மசூதிபாளையம் வாரச் சந்தையில் வாங்கிக் கொள்ள நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள். சந்தை நடக்கவில்லை. டவுனில் இருந்து வரும் மண்ணெண்ணெய் வண்டி வரவில்லை என்பதோடு, இனிமேல் வருமா என்ற சந்தேகம். ஏழைகளின் வீடுகளில் அடுப்புக்கு விறகு இருந்தாலும் ஆக்குவதற்கு அரிசி இல்லை. மூன்று நாளைக்கு அதைச் சேமித்து வைக்க இயலாத அன்றாடம் காய்ச்சிகள். எல்லாம் இருந்தாலும் தண்ணீர் இல்லை. இப்போது ஒரு கிலோ தங்கத்தையும், ஒரு லிட்டர் தண்ணீரையும் காட்டி யாரிடமாவது “இரண்டில் ஒன்று மட்டும் எடு” என்றால், லிட்டர் பாத்திரத்தையே பறிப்பார்கள். அந்த அளவுக்குத் தாகம். தாகப்பட்டுத் தாகப்பட்டு எச்சில் கூட மிச்சமில்லை.

     இந்த உடல் வாதைகளைவிட அவர்களின் மன வாதை சொல்லி மாளாது. ஒரு சதவீதம் கூட எதிர் பார்க்காத முற்றுகை. நூறில் ஒரு பங்கு கூட இதுவரை அனுபவித்திராத அத்தனை கொடுமைகள். மாடுகள் பம்மிக் கிடந்தன. ஆடுகள் அலறின. கோழிகளைக் கண்டு ஒதுங்கிப் போகும் பூனைகள் கூட அவற்றைக் கடித்து ரத்தத்தைக் குடிக்கலாமா என்பது போன்ற தாகப் பார்வை.

     அமீர் கடையிருக்கும் அந்தப் பிரதானத் தெருவில் தெருவடைத்து நின்ற அத்தனை பேர் முகத்திலும் ஒரு பீதி. குரல் கொடுக்க முடியாத இயலாமை. பேசுகிற சொற்கள் ஏறமுடியாத காது இரைச்சல்கள். பம்பரமாய்ச் சுழன்ற தலைகள். ஒருவர் இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ள முடியாத தலைச் சுற்றுகள். வயிறுகள் கீழே இழுக்கின்றன. தலைகளோ பின்புறமாய் வளைகின்றன. உடம்பு உறுப்புக்கள் ஒவ்வொன்றும் உலர்ந்து உலர்ந்து ஈரச்சதைகள் கருவாடாய்க் காய்ந்து போனது போன்ற தோற்றங்கள். இந்தச் சமயத்தில் அந்த ஏழு தெருக்களுக்கும் பயந்துகிடந்த இரண்டு இந்துத் தெருக்களிருந்தும் பலர் பயந்து பயந்து தயங்கித் தயங்கி வந்தார்கள். அந்தத் தெருவுக்கு முன்பு ‘அண்ணாவியாக’ இருந்த துரைச்சாமியை, முத்துக்குமார் கைத் தாங்கலாகப் பிடித்து வந்தான். அவர்களுக்குப் பின்னால் வந்த கூட்டம் பயந்து பயந்துதான் வந்தது. ஆனால் ஏழு தெருக்காரர்களும் அவர்களை ஏறிட்டுப் பார்த்தார்களே தவிர, எந்தக் கோபதாப சமிக்ஞையையும் ஏற்படுத்தவில்லை. இதனால் சிறிது ஊக்கமடைந்த கூட்டம் மெல்ல நடந்து பிறகு ஓடிப் போய் அந்த முஸ்லிம் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து கொண்டது. துரைச்சாமி தட்டுத் தடுமாறி கண்னெல்லாம் நீராகப் பேச முடியாமல் பேசினார்.

     “என் ஆயுள் பரியந்தத்துல இப்படிப்பட்ட அரக்கத் தனத்தைப் பார்க்கலயே! தயவு செய்து இந்துக்கள் எல்லோரும் இப்படி இருப்பாங்கன்னு மட்டும் நினைக்காதீங்க. அப்படி அவங்க இந்துக்களா இருந்தால், ரெண்டு தெரு இந்துக்கள் பாதிக்கப்படுவாங்களேன்னு நினைச்சிருப்பாங்க! உங்கள மாதிரிதான் நாங்களும் பட்டினி! உங்கள மாதிரிதான் தாகத்துல துடிக்கோம்! இப்படிச் சொல்றதுனாலே அங்க மறியல் செய்யற இந்துப் பயலுவ எங்களுக்கு ஏதாவது செய்திருக்கணுமின்னு நான் சொல்றதா நினைக்காதீங்கப்பா, அவங்க அப்பிடி எதையாவது அனுப்பியிருந்தாலும் அதை வீசி எறிஞ்சிருப்போம். எங்க ஊர்க்காரனை இந்தப் பாடுபடுத்தறவன் இந்துவாயிருந்தாலும் அவள் எனக்கு எதிரிதான். எந்த நாட்டிலேயும் இல்லாத அநியாயத்தை பண்ணுறாங்களே. கேக்குறதுக்கு நாதியில்லை. ஒரு போலீஸ் கூட எட்டிப் பார்க்கலயே அய்யோ!”

     எழுபது வயது துரைச்சாமி அங்குமிங்குமாக தலையை ஆட்டினார். அவர் மகன் முத்துக்குமார் தந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவரது கண்களைத் துடைத்துவிட்ட அமீரிடம் புலம்பினான்:

     “எங்கப்பா சக்கரை நோய்க்காரருன்னு உங்களுக்குத் தெரியுமே? வீட்டுல அவருக்குன்னு சப்பாத்தி செய்து வச்சிருக்கோம். சாப்பிடச் சொன்னால் எங்க ஊருக்காரன் ஒருத்தன் பட்டினி கிடந்தால் கூட நான் சாப்பிடமாட்டேன்னு அடம்பிடிக்கார். அவர வீட்டுக்குக் கூட்டிப் போய் ஒரு சப்பாத்தியையாவது சாப்பிடச் சொல்லுங்க காக்கா.”

     அமீர், துரைச்சாமி முதலாளியின் முதுகைத் தொட்டார். அவரைத் தன்னோடு சேர்த்து நகர்த்தப் போனார். ஆனால், துரைச்சாமியோ அவர் காதில் கிசுகிசுத்தார். “என்னைப் பற்றி உனக்குத் தெரியுமில்லை. அமீரு நான் சாப்பிடுவனா? அப்படி சாப்பிட்டா என் வயிறு வாங்கிக்குமா? கடவுளே என் ஊர்க்காரரை பாவிக இந்தப் பாடு படுத்துறாங்களே! போன வருசம் வந்த நோயில நான் போயிருக்கப்படாதா?”

     அமீரும் முத்துக்குமாரும் அவரை ஆளுக்கொரு பக்கமாய் கைபிடித்து, ஒரு திண்ணையில் உட்கார வைத்தார்கள். காதர்பாட்சா ஓடிவந்து தனது துண்டை எடுத்து அவருக்கு வீசிவிட்டான்.

     கூட்டம் அலைமோதியது. கண்ணுக்குத் துல்லியமாய்த் தெரிந்த அந்த முற்றுகைக் கூட்டத்தை பிதியோடு பார்த்தது. அங்கே இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் வரலாம் என்பது மாதிரியான அபாயம். அதற்கு ஏற்றாற்போல் தொலைதூரக் கூட்டத்திலிருந்து ஒரு சிலர் முன்னோக்கி ஓட, அவர்களில் பலர் அவர்களைப் பின்னோக்கி இழுப்பதைப் பார்க்க முடிந்தது. இதனால் இங்கிருந்து சிலர் தத்தம் பிள்ளைகளைப் பார்த்து “வீட்டுக்குள்ள போய் கதவை மூடுங்க. ஜன்னலையும் சாத்துங்க” என்று குரலிட பல பெண்கள் அலறியடித்தார்கள். சிலர் வீடுகளைப் பார்த்து ஓடினாலும், பல பெண்கள் ஆண்களை அப்படி நிர்க்கதியாக நிற்கவிட்டு ஓடி ஒளிய விரும்பவில்லை. கூட்டத்தில் கரைந்து போன திவான் முகம்மது, அஜீஸ், நூருல்லா ஆகியோர் தத்தம் வீட்டு நகை நட்டுக்களை எங்கே புதைக்கலாம் என்பதுபோல் யோசித்தார்கள். நூருல்லாவுக்கு ஒரு கூடுதல் பயம்; அவரால் அடிபட்ட மீரான் முருகானந்தம் வகையறாக்கள், சந்தடி சாக்கில் தன்னை கைவைத்துவிடக் கூடாதே என்ற பயம். ஆகையால் தனக்கு வேண்டியவர்களின் பக்கத்திலேயே பாதுகாப்பாக நின்று கொண்டார்.

     கூட்டத்தில் ஒவ்வொருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்களே தவிர எவருக்கும் பேச்சு ஒடவில்லை. ஒருவரையொருவர் ஆறுதல் தேடித்தான் பார்க்க முடிந்ததே தவிர, ஆற்றுப்படுத்துவது போல் பார்க்க முடியவில்லை, இடுப்புக்கு மேலே எந்த உடையும் இல்லாமல் ஆங்காங்கே கிடந்த முதியவர்களும், மூதாட்டிகளும் உயிர் வாதையில் உழன்று கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே வந்த சிறுவர்களிடம் விவரங்கேட்க விரும்பினாலும் பேச முடியவில்லை.

     இதற்கிடையே ஆண்களும், பெண்களுமாய்ப் பலர் கூட்டத்திலிருந்து சிறிது விலகி, பழைய சாராயக்கடை இருந்த ஊர் முனைக்குப் போய் முற்றுகைக் கூட்டத்தையே பார்த்தார்கள். “ஐயோ அப்துல்லா” என்ற புலம்பல்கள். “என் மவனே என் மவனே” என்ற அலறல்கள். ஒரு மூதாட்டி பேரனை நினைத்து அந்த நினைவு கொடுத்த நெஞ்சத்தை அடிப்பது போல் நெஞ்சை அடித்தாள். அவள் அருகே நின்ற ஒரு இளம் பெண் அந்த முதியவளைத் தூக்கிவிட்டுக் கொண்டே, வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாள். டவுனுக்குப் போய் விட்டு வீடு திரும்பாத கணவன்மாரை நினைத்துக் கதறும் சத்தங்கள். மகன்களை இழந்தது போல் துடிக்கும் தாய்மார்களின் அவலங்கள். இதற்குள், அமீரும் காதர்பாட்சாவும், முத்துக்குமாரோடு அங்கே போனார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிடமும் போய், ஆறுதலாகப் பேசினார்கள். பிறகு அந்தக் கூட்டத்தை ஒருமுகப்படுத்தி, அமீரின் கடைப்பக்கம் கூட்டிக் கொண்டு வந்தார்கள்.

     திவான் முகம்மது, அமீரைப் பார்த்துவிட்டு தலைதெறிக்க ஓடிவந்தார். அவர் பின்னாலே இன்னொரு முதியவளும் ஓடிவந்தாள். திவான், அமீரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, கேவிக் கேவி அழுதார். அவரது கைகள் இரண்டையும் தன் தோள்பக்கம் போட்டுக் கொண்டு அழுதார். அமீர் அவர் முதுகைத் தட்டி, அணைத்துக் கொண்டபோது, திவான் அவரிடம் குழந்தைபோல் கேவிக் கேவி அழுதுகொண்டே சொன்னார்.

     “என் பையன் சம்சுதீன் என்ன ஆனானோ? முணு நாளா கண்ணுக்கு அகப்படலேயே. ஒருநாள் கூட வீடு வராம இருந்ததில்லை. பாவிப்பயலுவ டெலிபோனையும் கட் பண்ணிட்டானுவ... நான் எதாவது தப்பு செய்திருந்தால் அதை மன்னிச்சு என் மகனைக் கண்டு பிடிச்சுக் கொடு. அமீரு இனி மேல் நீ என்ன சொன்னாலும் நான் கட்டுப்படுவேன்.”

     அமீர் “அல்லா காப்பாத்துவான்” என்று சொல்லிவிட்டு அவர் பிடரியைத் தடவிக் கொடுத்தார். இப்போதுதான் அவரும் மனுசன் என்பது மாதிரி பார்த்த திருமதி திவான் முகம்மதுவை ஆறுதலோடு பார்த்தார். ஆனாலும் காதர்பாட்சாவுக்கு கடுங்கோபம். இந்த திவான், ஜமாத்து தலைவராம். ஊரே உயிரோட துடிக்குது. கர்ப்பிணிப் பெண்ணைப் பறிகொடுத்த தாய் பொறி கலங்கி நிக்காள். குழந்தைகள் கண்கள் சாகப் போகிறது மாதிரி சொருகுதுங்க. இவருக்கு இங்கே இருக்கவன்களைப் பற்றிக் கவலையில்ல. எங்கேயோ டவுன்ல. லாட்ஜ்ல பத்திரமாய் இருக்கக்கூடிய சம்சுதீனுக்கு மட்டும் வருத்தப்படுகிறார். இவரெல்லாம் ஒரு இஸ்லாமியன் சீ... சீச்சீ...

     இப்போது அந்தக் கூட்டத்தில் அனைவரும் அமீரை ஒரு திடீர்த் தலைவராகவும், காதர்பாட்சாவை ஒரு போர்த் தளபதியாகவும், முத்துக்குமாரைக் கூட ஒரு அமைச்சராகவும் ஏற்றுக்கொண்டது போல் ஒரு சேரப் பார்த்தார்கள். அவர்கள் எந்தப் பக்கமெல்லாம் நகர்கிறார்களோ, அந்தப் பக்கமாக நகர்ந்தார்கள். இந்தச் சமயத்தில் பீடித் தொழிலாளர்களான மீரானும் முருகானந்தமும் தங்கள் தோழர்களோடு அந்தப் பக்கமாக மொய்த்தார்கள். முன்பெல்லாம் எவரையும் ஒரு பொருட்டாக நினைக்காத அஜீஸ், நூருல்லா வகையறாக்கள் இப்போது தங்களைப் பொருட்படுத்தாத கூட்டத்தில் சாதாரணப் பிரஜைகளாக நின்று கொண்டார்கள். நூருல்லா, அந்தத் தொழிலாளர்களைப் பார்த்து ஒருவரின் முதுகுப்பக்கம் ஒளிந்தபடியே, கையெடுத்துக் கும்பிடத் தயாராய் இருந்தார்.

     பீடி முதலாளி நூருல்லாவின் உபயத்தில் இன்னும் வாயில் காயம் ஆறாத முருகானந்தம் ஆவேசமாய்ச் சொன்னான்:

     “முற்றுகையிடுகிற கூட்டம் கீழ் வெண்மணியை எரிச்ச சக்தியோட வாரிசுங்க. பாபர் மசூதியை இடிச்ச மனித விரோதிகளின் வால்கள். இவங்க மனிதர்களே இல்ல. அதனால் அவங்களை இந்துக்களாகவோ, வேற மதமாகவோ பார்க்கப்படாது. அவங்க, காட்டுல சாதுவான பிராணிகளை மறிக்கிற ஓநாய்க் கூட்டம், அமீர்பாய், நாம் ஏதாவது செய்யணும். இங்க சாகிறதுக்கு அங்க சாகலாம்.”

     அமீர், லேசாய் யோசிப்பது போல் கண்கள் பின்னிழுக்க, மோவாய் முன்னிழுக்க ஆகாயத்தைப் பார்த்தார். முருகானந்தம் சொல்வது நியாயமாகவே பட்டது. அவனுக்கு ஆதரவாய்ப் பேசப் போன மீரானை, அது தேவையில்லை என்பது போல் கையமர்த்திய போது, காதர்பாட்சா உஷாராகச் சொன்னான். “காக்கா, நாம ஜகாத்தா போகல. முறையிடத் தான் போறோம். இதை... நாம் ஞாபகம் வச்சுக்கணும். இல்லையாடா முத்துக்குமார்?”

     “அடப் போடா... அவன் அவன் உயிருக்குப் போராடிக் கிட்டிருக்கான். இவன் வார்த்தையில வெளையாடிக்கிட்டு இருக்கான். மயிலே மயிலே இறகு போடுன்னா போடுமா? ரெண்டுல ஒண்ண பாத்துட வேண்டியதுதான். காக்கா! நீங்க வாரிகளா? இல்ல நாங்க போகட்டுமா?”

     அமீர், முத்துக்குமாரைக் கையமர்த்தினார். அலைமோதிய கூட்டத்திற்குக் கேட்கும்படி உரக்கச்சொன்னார்:

     “கையில் எதையும் எடுக்கப்படாது. கோபமாய்க் கத்தவும்படாது. ஆத்திரத்தை அடக்க முடியாதவங்க இங்கேயே நிக்கலாம். நாம் துக்க ஊர்வலமாய்த் தான் போறோம். எங்களை ஏன் இப்படி வாட்டி வதைக்கீங்கன்னு கேட்கத்தான் போறோம். அதுவும் அவங்ககிட்டே இல்லை, அவங்கள கும்பிட்டு வழிவிடச் சொல்லி, கலெக்டர் கிட்டே கேட்கப் போறோம். இந்த நாட்டிலே, அதிரடிப்படை, தனிக்காவல்படை, மாநில ஆயுதந்தாங்கிப் படை, மத்திய ஆயுதந்தாங்கிப் படை, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்லேயும் ஒவ்வொரு படை இப்படி எத்தனையோ விதவிதமான படையிருந்தும், இந்தப் பக்கம் ஒரு கான்ஸ்டபிளைக் கூட அனுப்பலயே! இதுக்குக் காரணத்தையாவது சொல்லுங்கன்னு கேட்கத்தான் போறோம். நம்ம நோக்கம் கண்டிக்கிறது தானே தவிர தண்டிக்குறது இல்ல.”

     அமீர், திண்ணைச் சுவரில் சாய்ந்தபடி தட்டுத் தடுமாறிக் கையாட்டி, துரைச்சாமி முதலாளியிடம் லேசாக தலையைக் குனிந்தார். பிறகு “இன்ஸா அல்லா” என்று சொல்லிக் கொண்டு ‘வாருங்கள்’ என்பது மாதிரி கையாட்டிவிட்டு முதலில் நடந்தார். அவர், முன்னால் அழுதபடியே நின்ற சம்ரத் பேகத்தை, தோளைத் தட்டிக் கொடுத்தார். மகள் பாத்திமா கண்ணில் படுகிறாளா என்று பார்வையிட்டார். அவளைக் காணவில்லை. மனைவியின் கையை மென்மையாகப் பிடித்து ஒரு பக்கமாக ஒதுக்கிவிட்டு, அவர் தனியாக நடந்த போது, அவருக்கு இருபக்கமும் காதர்பாட்சாவும் முத்துக்குமாரும் சேர்ந்து கொண்டார்கள். அதற்குப் பின்னால் மீரான், முருகானந்தம் வகையறாக்கள். இவர்களுக்குப் பின்னால் பீடித் தொழிலாளர்கள். அவர்களுக்குப் பின்னால் சாதாரண மக்கள். ரயிலுக்குப் பின்பக்கம் போட்ட என்ஜின் போல கடைக்கோடியில், திவான் முகம்மது, நூருல்லா, அஜீஸ் வகையறாக்கள். அந்தக் கூட்டத்தோடு சேரப் போன இமாமை அமீர் கையைப் பிடித்துக் கூட்டிப் போய் துரைச்சாமி முதலாளியின் பக்கத்தில் உட்கார வைத்துவிட்டு, மீண்டும் ஓடிப் போய்க் கூட்டத்தின் முன்னால் நடந்தார். பின்னால் ஒரு பெண் பட்டாளமே தெரிந்தது. அவலமான அழுகைகள். “திரும்பி வாங்க” “திரும்பி வாங்க” என்பது மாதிரியான கையசைப்புகள். சத்தம் கேட்டு அமீர் திரும்பவில்லை யானாலும், முத்துக்குமார் திரும்பிப் பார்த்தான். ஒரு கல்லில் ஏறித் திண்ணைத் துணை ஒரு கையால் ஆதரவாய்ப் பற்றிக் கொண்டு, மறுகையால் ஆயிஷா கையாட்டினாள். முத்துக் குமாரைப் போக வேண்டாம் என்பதுபோல் இடதுபுறம் இருந்து வலதுபுறம் ஒரு ஆட்டம். வாருங்கள் வாருங்கள் என்பது போல மேலும் கீழும் தலையாட்டு.

     முத்துக்குமார், அவளுக்குப் பதிலுக்குக் கையாட்டி, வெற்றி என்பது போல் கட்டை விரலைத் தூக்கிக் காட்டி பிறகு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

     தலைகளுக்கு மேல் இரண்டு கைகளையும் தூக்கியபடி அமீர் இப்போது முத்துக்குமாரிடமிருந்தும், காதர்பாட்சாவிடமிருந்தும் விடுபட்டு முன்னால் நடந்தார். நடந்து கொண்டே இருந்தார். பின்னாலுள்ள கூட்டம் வந்தால் வரட்டும்; நின்றால் நிற்கட்டும் என்பதுபோல் நடந்தார். ஆனாலும் அந்தக் கூட்டத்தின் காலடிச் சத்தங்கள் அவருக்குப் பக்கத்திலும் பக்கபலமாயும் ஒலித்தன.

     அந்தக் கூட்டம் கால் கிலோ மீட்டர் தூரம் வரை நடந்திருக்கும். திடீரென்று எதிரே குதிரைகள் தெரிந்தன. வெள்ளை வெள்ளையாய் வேன்கள் தெரிந்தன. காக்கி காக்கியாய் ஜீப்புகள் தோன்றின. அமீருக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. கடையில் சர்க்கார் இருக்கத்தான் செய்யுது. உதவிக்கு போலீசை அனுப்பித்தான் வைக்குது. முன்னாலேயே அனுப்பியிருக்கலாம். பரவாயில்லை. ஏதோ வந்தாங்களே அதுவே போதும்.

     அமீர் பின்பக்கமாகத் திரும்பாமல் கையைக் கீழே கொண்டு வந்து, கூட்டத்திற்குப் புறங்கை காட்டி நிற்கும்படி சைகை காட்டினார். அவரும் நின்றார். முத்துக்குமாரும் காதர்பாட்சாவும், இரட்டைப் பிறவிகள் போல் நடந்த மீரானோடும், முருகானந்தத்தோடும் முன் வரிசையில் வந்து நின்றார்கள். எதிரே வருகிறவர்களை எதிர் கொண்டு அழைப்பதுபோல் நின்றபோது, அமீர் இருகரம் கூப்பி நின்றார்.

     அவர்களுக்கு இருபதடி இடைவெளியில் ஒயர்கள் பொருத்திய இரண்டு ஜிப்புகளும், அதற்குப் பின்னால் மூன்று போலீஸ் வேன்களும் அவர்களை மோதாக் குறையாக ஓடிவந்து நின்றன. பக்கவாட்டில் குதிரைப் போலீசார். வேனில் இருந்தவர்கள், ஒரு கையில் லத்திக்கம்போடும், இன்னொருகையில் கல்லெறியைத் தாங்கும் மூங்கில் கேடயத்தோடும் ஒரு வேனில் இருந்து கீழே குதித்தார்கள். இன்னொரு வேனில் இருந்து துப்பாக்கி தரித்த போலீசார்; குதிரைகள் முன்கால்களைத் தூக்கி அங்கும் இங்குமாய் லாகவமாய்த் துள்ளின. ஒயர் பொருத்திய போலீஸ் ஜீப்பிலிருந்து ஒரு ஆஜானுபாகு மூன்று நட்சத்திரக்குறி மனிதர் கீழே குதித்தார். எடுத்தவுடனேயே அதட்டினார்.

     “என்னடா நினைச்சிக்கிட்டீங்க ஒங்க மனசிலே மரியாதையாய்க் கலைஞ்சு போங்க! இல்லாட்டா நடக்கிறதே வேறே.”

     அமீர் ‘டா’ போட்டு பேசிய அந்த மனிதரிடம் அடக்கமாகவே பேசினார்.

     “நீங்க எங்களைக் காப்பாத்த வந்திருக்கிறதா நினைச்சு சந்தோஷமாய் நிற்கிறோம். நீங்க என்னடான்னா...”

     அந்தப் போலீஸ் மனிதர், அமீரை மேற்கொண்டு பேசவிடவில்லை. “டா போட்டு பேசுகிற இந்த ரிங்லிடர் பயகிட்ட என்ன பேச்சு? இவனுக்குக் கண்ணீர்ப் புகைதான் பதில் சொல்லணும் லத்திக் கம்பு தான் குசலம் விசாரிக்கும்.”

     காதர் பாட்சா, கூட்டத்தைப் பார்த்துத் திரும்பிக் கத்தினான்.

     “இவங்க காப்பாத்த வரல, நம்மள கொன்னுட்டு அதே வேகத்துல நம் பெண்டு, பிள்ளைங்ககிட்ட துஷ்டி கேட்க , வந்திருக்காங்க. சுட்டா சுடட்டும், உடம்பு துடிச்சா துடிக்கட்டும். இவ்வளவு தூரம் வதைபட்டும், பசியால் துடிச்சும் கிடக்கிற நம்மளை அதட்டுற இவங்களை விடப்படாது. இன்ஸா அல்லா. என்ன வேணுமின்னாலும் செய்யட்டும்.”

     “நகருங்கடா...”

     “நாங்க நகரமாட்டோம். ஒரு அங்குலம் கூட நகரமாட்டோம்.”

     முத்துக்குமார் இப்போது தனது தோழன் காதர்பாட்சாவிற்கு தோள் கொடுத்துப் பேசினான்.

     “வேணுமின்னா சுட்டுக் கொல்லுங்க. வந்துட்டாங்க பெரிசா ஏன்யா பராக்கு பாக்கீங்க, சுடுங்கய்யா! உங்க துப்பாக்கி எத்தனை பேரை சுடுதுன்னு பார்ப்போம்.”

     அந்த மனிதப் போலீஸ் அவர்கள் ஆற்றாமையில் பேசியதை அறியாமையில் பேசியதாகக் கூட நினைக்கவில்லை. ஏதோ வெளிநாட்டுப் படை ஒன்று ஏகே-47 வகைத் துப்பாக்கிகளோடு தமிழகத்தில் தக்காரும் மிக்காரும் இல்லாத போலீஸ் படைக்கு சவால் விடுவதாகவே நினைத்தார். ஒரு பக்கமாய்ப் புலிப் பாய்ச்சல் ஆயத்தத்தோடு நின்ற போலீசாரைப் பார்த்து “டியர் கேஸ், டியர் கேஸ்” என்றார்.

     உடனே அவரது ‘டியர்’ போலீஸ் தொண்டர்களில் ஒரு பகுதியினர் ஒரு போலீஸ் ஜீப்பின் பின்பக்கமாக உள்ள இரும்புப் பெட்டிகளில் இருந்து ஈயம் மாதிரியான சதுரக்கட்டையை எடுத்தார்கள். மூன்று சின்னச் சின்ன கட்டங்களைக் கொண்ட அவற்றை எடுத்து கூட்டத்தின் முன்னாலும் கூட்டத்திற்குள்ளும் எறிந்தார்கள். அவற்றில் ஒவ்வொன்றும் தரையில் நேராக விழுந்தது. இரண்டு பக்கங்களில் தெறித்தது. பின்னர் புகை புகையாய் மூச்சு விட்டது. எங்கும் கரும்புகை, அடுப்புக்கரி நிறத்திலான கரும்புகை, காடே எரிந்து கரும்புகையானது போன்ற பெரும்புகை, கண்ணீர்ப்புகை. மாறி மாறி ஆற்று நீர்ப்பாய்ச்சலிலிருந்து மீன்கள் துள்ளித் துள்ளித் தரையில் தாவுவது போன்ற புகைக் குண்டுகள்.

     அந்த மக்கள் அங்கும் இங்குமாய்ச் சிதறினார்கள். “கண்ணு போச்சே! கண்ணு போச்சே!” என்று கதறினார்கள். இதற்குள் இத்தகைய பல போராட்டக் களங்களைப் பார்த்த பீடித் தொழிலாளர்களில் சிலர் (இவர்கள் வெளியூர் ஆலைகளிலிருந்து பழிவாங்கப்பட்டு, துரத்தப்பட்டு பீடி பேக்டரியில் சேர்ந்தவர்கள்) துள்ளி வந்த ஒரு சில புகைக் குண்டுகளை, கைகளை வேல் வீச்சாய் வீசி, அவை தரையில் விழுவதற்கு முன்பே தாங்கிப் பிடித்து, பிடித்த வேகத்திலேயே போலீசை நோக்கி அந்த குண்டுகளைத் திருப்பி எறிந்தார்கள். இப்போது அந்த போலீசும் பொதுமக்களைப் போலவே அங்கும் இங்குமாய்ச் சிதறியது. இதனால் ஆத்திரமடைந்த போலீஸ் மனிதர், அங்குமிங்குமாய்த் திரும்பிய போது, அவர் முன்னாலும் ஒரு புகை குண்டு வெடித்து அவர் கண்களை எரித்தது. அந்த எரிச்சலை விட அவருக்கு நெஞ்செரிச்சலே அதிகம். தடியடிப் பிரயோகத்திற்கு ஆணையிடாமலே வாயை அகலப்படுத்தி ஒரே சொல்லாய் உத்தரவிட்டார்.

     “யூ இடியட்ஸ்... சூட்மேன் சூட்... இம்மீடியட்லி சூட்...”

     “டைம் கொடுக்காதே... சூட்... சுடு... நேராச் சுடு... நானிருக்கேன்... சுடு...”

     நான்கைந்து போலீசார் பரம சாதுபோல் எண்ணெய் வழவழப்போடு இருந்த கட்டைத் துப்பாக்கிகளைக் கூட்டத்திற்குக் குறியாக நீட்டினார்கள். ஒருவர் ‘சேப்டிகேஜை’ திறக்காமல் போல்ட்டை இழுத்த போது அது சும்மா இருந்தது. ஆனால் மற்றவர்களோ அந்த துப்பாக்கிகளின் ஒரு பக்கமுள்ள ஒரு இரும்பு வளையத்தை இழுத்து, அவற்றின் மேல் பக்கமுள்ள நீண்ட பிடியைத் தட்டி விட்டபோது தோட்டாக்கள் பறந்தது தெரியவில்லை. மக்கள் ஆங்காங்கே விழுவதுதான் தெரிந்தது. ‘அய்யோ அம்மா’ என்ற அலறல்களோடு பலர் நொண்டிக் கொண்டு ஓடுவதும், ஓடியபடி விழுவதும், விழுந்தபடியே தாவுவதுமாய் அல்லாடினார்கள். ஆங்காங்கே சுடப்பட்ட கொக்குகளைப் போல, சுருண்டு விழுந்தார்கள்.

     அமீர் குப்புறக் கிடந்தார். அவரது குதிகால்களில் பிடரியைப் போட்டு முத்துக்குமார் மல்லாக்கக் கிடந்தான். அமீரின் மார்பை ஒரு சின்னத் துளையாய் துளைத்த தோட்டா முதுகு வழியாய் வட்ட வட்டமாய்ச் சுழன்று, முதுகில் ஒரு பெரிய வட்டத்தை ஏற்படுத்தி, அவரைத் தாங்கப் போன முத்துக்குமாரின் மார்பில் பாய்ந்து முதுகில் பெரிய வட்டத்தை ஏற்படுத்தி, அப்படியும் அதன் ரத்தத் தாகம் அடங்காமல், அருகே நின்ற காதர்பாட்சாவின் தோளையும் துளைத்து, அப்புறம் ஆள் கிடைக்கிறதா என்று தேடி ஒரு பொட்டல் பக்கமாய் விழுந்திருக்க வேண்டும்.

     அமீரும் முத்துக்குமாரும் ஒற்றை மனிதர் போல் ரத்தக் குழம்போடும், பிய்ந்து போன சதைகளோடும் பிணமாய்க் கிடந்தார்கள். அமீரின் தலையைத் தாண்டிய இடத்தில் ரத்தம் திரவ நிலையிலிருந்து திடப்பட்டு சிவப்புக் கல்லாய் ஒளிர்ந்தது. முத்துக்குமாரின் மார்பிலிருந்து நீரூற்றாய்க் கிளம்பிய குருதி அவன் கால்வழியாக ஆறாய் ஓடிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே சிலர் சுருண்டு கிடந்தார்கள். ஆனாலும் உயிருக்கு ஆபத்தில்லாதவர்கள் போல் அங்கு மிங்குமாய் நெளிந்தார்கள். அப்படியே உட்கார்ந்த காதர் பாட்சா தோளைப் பிடித்துக் கொண்டே, தனது தோழர்களைப் பார்த்து நடந்தான். ஒருவரின் பிடரியையும் இன்னொருவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்து அப்படியே வளைந்து நின்றான். அவன் தோளில் பொங்கிய ரத்த ஊற்று அந்த முன்னாள் மனிதர்களின் பாதங்களிலும், தலையிலும் சொட்டுச் சொட்டாய்த் தெறித்துக் கொண்டிருந்தது.

     இதற்குள் அங்குமிங்குமாய்ச் சிதறிய கூட்டம் நடந்ததை நம்பமுடியாமல் உற்று உற்றுப் பார்த்தது. பிறகு முடியாதது நடந்து விட்டதுபோல் ஆங்காங்கே கும்பல் கும்பலாய்க் கூடிக் கீழே கிடந்த கற்களை எடுத்து போலீசை நோக்கி எறிந்து கொண்டே இருந்தது. உடனே குதிரைப்படை போலீஸ் லத்திக் கம்புகளோடு அங்கும் இங்குமாய் பாய்ந்தார்கள். குதிரைகளை, கடிவாளத்தைப் பிடிக்காமலேயே தாவ விட்டார்கள். அங்குமிங்குமாய்க் கம்புகளைச் சுழற்றினார்கள். ஆங்காங்கே ஒரு சில தலைகள் சிவப்பாகிக் கீழே விழுந்து கொண்டிருந்தன. எதிர்த் திசையிலிருந்து பெண்கள் கூட்டம் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அலைமோதி ஓடிவந்தது. தொலைவில் உள்ள முற்றுகைக் கூட்டமும் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்து வந்தது. அதுவரை கால எமதூதர்களாய்ச்செயல்பட்ட போலீசார் இப்போது முதலுதவி மருத்துவர்களானார்கள். ஆங்காங்கே துள்ளத் துடிக்கக் கிடந்தவர்களை தட்டுமுட்டுச் சாமான்களைத் தூக்கிப் போடுவதுபோல் ஸ்டெச்சர்களில் தூக்கி, ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றினார்கள். அந்த போலீஸ் மனிதர், கீழே கிடந்த தோட்டா உறைகளை எடுத்து எண்ணிக் கொண்டி ருந்தார். அவருக்கு செத்தவர்களின் எண்ணிக்கையை விட செலவான தோட்டாக்களின் எண்ணிக்கையே முக்கியமானது. விலை உயர்ந்த தோட்டாக்கள். இந்த சாக்கில் எவனும் பிறத்தியாருக்கு விற்றுவிடக் கூடாது. ஒவ்வொருத்தனும் எத்தனை ரவுண்டு சுட்டான் என்று அப்புறமாய்க் கணக்கு கேட்க வேண்டும். வன்முறைக்கும்பல் ஒன்று காவலர்களைத் தாக்கியதால், அந்தக் காவலர்களே வேறு வழியில்லாமல் குறைந்த பட்ச சக்தியை உபயோகித்து, ஒரு கொடிய சதியை மிகச் சிறிய உயிரிழப்பிலே அடக்கிவிட்டார்கள் என்று பத்திரிகையில் எழுத வைக்க வேண்டும். முதலமைச்சரும் சட்டப் பேரவையில் கண்ணை மூடிக் கொண்டு படிக்க ஒரு அறிக்கை தயார் செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அந்த ‘ஸ்பாட்டில்’ இல்லாத தாசில்தாரைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்தான் சுடும்படி உத்தரவிட்டதாகக் கையெழுத்து போடவைக்க வேண்டும். காயம்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மருத்துவமனையில் ஏதாவது சித்து வேலை செய்ய வேண்டும்.

     அந்த மூன்று நட்சத்திர போலீஸ் மனிதரிடம், இரண்டு நட்சத்திர சகாக்கள் ஆலோசித்துக் கொண்டிருந்த போது, மசூதி பாளையத்திலிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடி வந்த பெண்கள் கூட்டத்தில் முன்னால் ஓடிவந்த சம்ரத் பேகம் குப்புறக் கிடந்த அமீரை, அப்படியே வெறித்துப் பார்த்தாள். பிறகு அடியற்ற மரமாய் அவர் மேல் விழுந்தாள். அவர் முதுகில் அங்கும் இங்குமாய் முகம் புரட்டி வட்டக் கிணறாய் இருந்த ரத்தக் கிணற்றில் மூழ்கி ரத்த முகமாய் அரற்றினாள். பிறகு அப்படியே மயங்கி விழுந்தாள். ஆயிஷா மல்லாக்கக் கிடந்த முத்துக்குமாரையே கண் நிலைக்கப் பார்த்தாள். ஏங்கி ஏங்கி அழுதாள். ‘என்னை விட்டுட்டு போயிட்டியே’ என்று வெளிப்படையாய்க் கூட அழமுடியாத கொடுமை மல்லாக்கக் கிடப்பவனை மார்போடு சாய்த்து முட்டி மோதி அழுது அழுது, அவன் ரத்தத்தையும் தன் கண்ணீரையும் கலக்க முடியாத இயலாமையில் தவித்தாள். ஒருவேளை அவளும், அவன் மீது அப்படியே படர்ந்திருப்பாள்; அதற்குள் ஹாஜி அஜீஸ் அவளைப் பற்றி இழுத்தார். முன்பு ஒரு முறை பற்றிய அந்த வேகம் கையில் இல்லை. ‘என்னைப் பிடித்துக் கொள்’ என்பது மாதிரி அந்தக் கை ஆறுதலாகவும், ஆறுதல் கேட்டும் பிடித்தது. மகளை மார்போடு சேர்த்து நகர்த்தினார். துரைச்சாமி தத்தித் தத்தி வந்தார். இரண்டு பிணங்களையும் கண்கள் ஆடாமல் பார்த்தார். வாய் மட்டும் துடித்தது. அங்குமிங்குமாய் தலை ஆடியது. பிறகு அமீரின் மேல் கிடந்த சம்ரத் பேகத்தின் கையைத் தொட்டார். அவள், “காக்கா! காக்கா” என்று அவர் கால்களைக் கட்டிக் கொண்டாள்.

     எல்லாம் அடங்கி எல்லாம் முடிந்திருந்தது. காதர்பாட்சா வையும் வேனில் தூக்கிப் போட்டார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டறக் கலந்து நின்றார்கள். பழனிவேல், அந்தப் போலீஸ் மனிதருக்கு சங்கரசுப்பு சாட்சியாய் பட்டும் படாமலும் கைகொடுத்துக் கொண்டிருந்தார். போலீஸ் வேன்கள் பிரேத வண்டிகளாய்த் தோற்றம் காட்டியபோது, பாத்திமா போட்ட சத்தம் அனைவரையும் சுண்டி இழுத்தது. எங்கிருந்து வருகிறாள் என்று எல்லோரும் எட்டிப் பார்ப்பதற்கு முன்பே அவள் அப்பாவின் உடம்பில் அப்படியே விழுந்தாள். “வாப்பா வாப்பா" என்று வாய் பேசியது. அந்த வாப்பாவை மல்லாக்கக் கிடத்தினாள். அவர் முகத்திலும், கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டாள். அவர் கழுத்தில் கைகளை வளையமாக்கி மடியில் போட்டாள். மாறிமாறித் தலையில் அடித்தாள். எவருக்கும் அவளைப் பிடித்திழுக்க தைரியமில்லை. எல்லோரும் வாயடைத்தும், ஒருசிலர் கண்ணடைத்தும் நின்றபோது, மாரியப்பன் துள்ளிக் குதித்து ஓடி வந்தான். “அமீர் பாய்! அமீர்பாய்! என்னைப் பெறாமப் பெத்த அப்பனே!” என்று புலம்பிக் கொண்டே வந்தான். கீழே விழுந்து கிடக்கும் இன்னொரு பிணம் அவன் கண்ணில் படவில்லை. அந்த அமீரின் சடலம் மட்டுமே அவன் கண்களை முள்ளாய் அழுத்தியது. ஊசியாய்த் தைத்தது “அமீர் பாய்! அமீர்பாய்! ஐயய்யோ அமீர் பாய்...”

     பாத்திமா, பழக்கப்பட்ட சத்தம் கேட்டதுபோல் திரும்பினாள். அவனைப் பார்த்து மெல்ல மெல்ல எழுந்தாள். பிறகு அவன் மேல் அப்படியே சாய்ந்தாள். அவன் கழுத்தை அப்படியே கட்டிக் கொண்டாள். அவன் அவள் தோளைச் சுற்றிக் கொண்டான். ஒருவர் கீழே சாயாமலிருக்க இன்னொருத்தர் பிடித்துக் கொண்டது போன்ற பிடி. இனிமேல் எப்போதும் ஒருவரை ஒருவர் விடப் போவது இல்லை என்பது மாதிரியான பிடி; அந்தக் கணத்தில்...

     எல்லா இந்துக் கண்களும், இஸ்லாமியக் கண்களும் தலைகீழாய்ப் பார்த்தன. தரையைத் துளைத்தன. பிறகு அந்த இரண்டு பேரையும் பார்த்துப் பார்த்து மனிதக் கண்களாய் நிமிர்ந்து கொண்டிருந்தன.

முற்றும்