7 குட்டிப் பிரசங்க மேடை மாதிரி மேக்கப் செய்யப்பட்ட அந்த ஆட்டோவிற்குள், காதர் பாட்சாவிற்காக காத்திருந்த முத்துக்குமார், டிரைவரின் முதுகு வழியாகக் கையைவிட்டு ‘ஹாரன்’ அடித்தான். அப்படியும் காதர் வராததால் கீழே குதித்து அந்த ஆட்டோவை வேடிக்கையாய்ப் பார்த்த சிறுவர், சிறுமியரையும், ஆங்காங்கே மூக்கில் விரல் வைத்தபடியே நின்ற பெண்களையும் பெருமிதமாகப் பார்த்தான். ஆயிஷாவைத் தான் காணோம். அந்த ஆட்டோவின் டிரைவர் இருக்கையில் இருந்து, பின்புற இருக்கை வரைக்கும், இரு பக்கமும் கதவுகள் போலான மூங்கில் தட்டி சுவரொட்டிகள். ஒன்றில் ஒரு ஒநாயின் கோரமான படம். அதன் பற்கள் மதவாதம் என்ற வார்த்தையின் வடிவில் வரையப்பட்டிருந்தன. அதன் எதிர்ப்பக்கம் ஒரு ஆட்டுக்குட்டி மான்குட்டி மாதிரியான சின்னக்குட்டி அதன் உடம்பில் மனித நேயம் என்ற வார்த்தைகள், இரண்டுக்கும் இடையே ஓநாயை எதிர் கொள்ளப் போர் முகம் காட்டும் கட்டிளங்காளை. அதன் கூரிய கொம்புகளில் முற்போக்குவாதம் என்ற வார்த்தைகள். இதற்குக் கீழே கோடு போட்டது போல் ‘மதவாதம் ஒழித்து மனித நேயம் காப்போம்’ என்ற வார்த்தைகள். ஆட்டோவின் மறுபக்கம் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைச் சித்தரிக்கும் பிரபஞ்சம். அதற்கு மத்தியில் இப்படிப்பட்ட வாசகங்கள்: முத்துக்குமார், காதர்பாட்சா வீட்டை உற்றுப்பார்த்தான். அறை அறையான அரங்கு வீடு. இந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய அந்தக் காலத்து வீடு. ஒரு அறைக்கு இன்னொரு அறையின் நிலைப்படியே கதவு மாதிரி. உள்ளே ஏதோ ஒருபுலம்பல் கேட்டது. முத்துக்குமார், பழக்கப்பட்ட அந்த வீட்டுக்குள் படியேறிப் போனான். மூன்றாவது அறையில் காதர்பாட்சா சுவரில் பொருந்திய கண்ணாடியில் தலையை சரி செய்து கொண்டிருந் தான். கீழே அவன் அம்மா நசீமா மூலையில் சாய்ந்து விசும்பிக் கொண்டிருந்தாள். ஆயிஷா, பெரியம்மாவின் கண்ணீரை அவளது முந்தானையாலேயே துடைத்து விட்டு, அவளைத் தூக்கிப் பிடித்தது, யானைக் குட்டியை மான் குட்டி விளையாட்டாய் இழுப்பது போல் இருந்தது. முத்துக்குமாரைப் பார்த்ததும் ஆயிஷா, பெரியம்மாவை விட்டுவிட்டு ஒரு சோகப் புன்முறுவலோடு நிமிர்ந்தாள். நசீமாவோ அவனைப் பார்த்ததும் அழுதழுது ஒப்பித்தாள். “நான் இவங்கிட்டே படிச்சுப் படிச்சுச் சொன்னேன். கேக்கலியேப்பா. மத்தவர்களை மாதிரி பழனிவேலுக்கு வாடகையைக் கூட்டி கொடுன்னு சொன்னேனே. பாவிப்பய பழனிவேலு பேன்சிக் கடையை தூள்தூளாக் கிட்டானாமே? ஆறாயிரம் ரூபாய் ரேக்கை வெளியிலே தூக்கிப் போட்டு மண்ணெண்ணெய்யை ஊத்தி எரிச்சானாமே? வாரவன் போறவன் எல்லாம கடையிலிருந்த பிளாஸ்டிக் தொட்டி, வளையலு, லெதர் பேக்கு, தூக்குப்பை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்களாமே. பாக்குறதுக்கு எல்லாம் சின்னப் பொருள் மாதிரி இருந்தாலும், பத்தாயிரம் ரூவாப்பா முத்துக்குமார்! போட்ட சீட்டை ஏலத்திலே எடுத்து வைச்ச கடையாச்சே! எப்படி சீட்டுப் பணத்தைக் கட்டுறது? இவன் அத்தா இறந்துபத்து வருஷத்திலே இப்பத்தான் இவன் தலையெடுத்தான். அதுக்குள்ளே இவனைத் தலையெடுக்காமப் பண்ணிட்டாங்களே அல்லா! எங்கள் ரப்பே நீதான் கேட்கணும்! அல்லா! முத்துக்குமார்! நான் யாருகிட்டே சொல்லுவேன்?” “அதான் அல்லாகிட்டே சொல்லிட்டியே?” என்று காதர்பாட்சா தலையில் இருந்த சீப்பை எடுக்காமல் கண்ணாடியை முறைத்த கண்களை விலக்காமல் சொன்னபோது, முத்துக்குமார் கீழே குனிந்த நசீமாவின் கைகளைப் பிடித்த தூக்கி “அழாதிங்கம்மா” என்றான். அப்போது காதர்பாட்சா ஒரு போடு போட்டான். “ஏண்டா! உனக்கு மூளையிருக்கா? பழனிவேலு கிட்டே மோதுறதாய் இருந்தால், எல்லாக் கடைக்காரங்களையும் ஒன்னா திரட்டி மோதுன்னு சொன்னேன்- கேட்டியாடா... இப்பப்பாரு, அந்த ரவுடிப் பய செய்திருக்க காரியத்த.” காதர்பாட்சா பேண்டில் இடதுபக்கப் பையில் வைத்த கைக்குட்டையை வலதுபக்கம் வைத்துக்கொண்டே கண்களைச் சிமிட்டிப் பேசினான். “பழனிவேல் கடையை இடிக்கலடா! பஸ் ஸ்டாண்டு பிளாட்பார ராமன் கோயில் இடிப்பட்டதைத் தாங்காமல் பக்தகோடிகள் கடைக்குள் வந்து, துக்கத்தை தாங்கிக்க வளையல்களையும், ரிப்பனையும், பிளாஸ்டிக் சாமான்களையும் எடுத்துட்டுப் போயிட்டாங்க! எனக்கு ஒரு கண்ணு போனாலும் பழனிவேலுக்கு இரண்டு கண்ணும் போயிட்டது. எப்படின்னு கேக்க மாட்டியே? எங்கடையிலே, பிளாட்பாரத்துக் கோவில்லே இருந்து வீசிக்கடாசப்பட்ட ஸ்ரீராமரை பிரதிஷ்டை செய்திருக்காங்களாம். நானாவது பழனிவேலுக்கு ஐநூறு ரூபாய் வாடகை கொடுத்தேன். ஸ்ரீ ராமர் என்ன கொடுப்பார். பாவம் பழனிவேல்... சரி புறப்படலாமா?” “பாருப்பா, இவனுக்கு சூடு, சொரணை, ரோஷம் இருக்கான்னு கேளு!” காதர்பாட்சா, அவை மூன்றும் இல்லாதது போல் சிரித்தான். அந்தச் சிரிப்பு முத்துக்குமாருக்கும் தொற்றிக் கொண்டது. அந்த தொற்றுச் சிரிப்போடு ஆயிஷாவைப் பார்த்தான். அவளோடு பல தடவை கண்கள் பேசிவிட்டன. ஒரு தடவை கையைக் கூடத் தலையைச் சொறிவது போல் தலைப்பக்கம் கொண்டு போய் லேசாய் ஆட்டியிருக்கிறான். ஆனால் இவ்வளவு நெருக்கமாய் இப்போது தான் நேருக்கு நேராய்ப் பார்க்கிறான். அவளை அப்படிப் பார்க்க பார்க்க அவள் தூரத்துப் பச்சையில்லை என்று புரிந்தது. ஒரு சின்ன மருவோ பட்டு முடியோ இல்லாத துப்புரவான முகம். ஊதிப்போகாமலும் உள்ளடங்காமலும் உள்ள கண்கள்; பள்ளதாக்காய்ப் போகாமலும், தூக்கலாய் ஆகாமலும் உரிய இடத்தில் உரிய முறையில் இருந்த கண்கள். காதுகளின் மேல் பகுதியை மறைக்கும் சுருட்டை முடி, இடைவெளியில்லாத சடை. அவளிடம் பேசப்போனான். வார்த்தைகள் ஒத்துழைக்கவில்லை. அவள் பேசுங்கள் என்பது போல் உதடுகளைப் பிரித்துக் காட்டி, ஒரு காதை வலது கையால் குவித்து அவன் பக்கம் தலையைச் சாய்த்த போது, பயலுக்குத் தெம்பு வந்துவிட்டது. என்ன பேசலாம் என்று யோசித்து, இறுதியில் எப்படியோ பேசினால் போதும் என்பதுபோல் பேசினான். “ஆயிஷா! முதல்ல உங்க பெரியம்மாவை சமையலறைக்கு கூட்டிப் போய் ஏதாவது சாப்பிடக் குடுங்க. கவலைப்படாதிங்கம்மா, கலெக்டர் கிட்டே மனுப்போட்டு நஷ்ட ஈடு கேக்கலாம்”, ஆயிஷா முகம்சுளித்தாள். ‘எதற்காகப் போகச் சொல்றார்? நான் நின்னா இவருக்கு என்னா? கட்டின பொண்டாட்டிய விரட்டுறது மாதிரி விரட்டறார்? நான் இங்க தான் நிற்பேன். இந்தப் பெரியம்மாவும் சுயமாக போகமாட்டேங்கா; சோறு வேண்டாமின்னும் சொல்ல மாட்டேங்கா...” சினந்து பார்த்த ஆயிஷாவை, முத்துக்குமார் சிரித்துப் பார்த்தான். அவள் மெல்ல முணுமுணுப்பது கேட்கவில்லையானாலும் அதைப் பார்க்க முடிந்தது. அந்த முணுமுணுப்புச் சுருக்கங்களை அவன் உடனடிச் சிரிப்பாய் விரிவாக்கினான். “ஆயிஷா! பெரியம்மாவுக்கு சாதம் கொடுத்துட்டு எனக்கும் ஒரு கிளாஸ்மோர் கொண்டு வாங்க இவன் கிட்டே கத்திக்கத்தி தொண்டை வத்திப் போச்சு!” ஆயிஷா மீண்டும் முணுமுணுத்தாள். பேர் சொல்லிக் கூப்பிடத் தெரியுது - பிறகு எதுக்கு ‘இங்க’ போடணும்? ஆனாலும் அவள் பெரியம்மாவைத் தூக்க முடியாமல் தூக்கி, சமையலறைக்கு நகர்த்திக் கொண்டு வந்தபோது காதரும் முத்துக்குமாரும் அடுத்த அறைக்குள் வந்தார்கள். காதர் நாற்காலியில் உட்காராமல் மேஜையில் உட்கார்ந்த போது முத்துக்குமார் கேட்டான். “ஆயிஷாவை நான் இந்த வீட்டிலே பார்த்ததே இல்லை.” “இவன் ஒருத்தன், இப்ப அது தான் முக்கியம்!” “உங்க சித்தி வராமல், மகளை அனுப்பியிருக்காங்களேன்னு கேட்டேன்.” “அக்கா ஏழையாயிருந்து தங்கச்சி பணக்காரியாய் இருந்தா சீனியாரிட்டி வயசுல நிக்காது. வசதியில் தான் நிக்கும். சித்தி என்ன சாதாரணமா? மெக்காவுக்கு பிளேன்லேயே போயிட்டு, பிளேன்லேயே வந்த ஹாஜி அஜீசோட பீவியாச்சே; எங்கம்மா எல்லாச் சொத்தையும் கீழத் தெரு ராஜலட்சுமிக்கு எழுதி வச்சுட்டு, கடைசியில மோதினாவா வேலை பார்த்த புகாரியோட சம்சாரமாச்சே! எங்கம்மாவுக்கு கால் ஒடிஞ்சாலும், இவங்க தான் அந்தக் காலை இழுத்து இழுத்து தங்கச்சி கிட்ட கால் ஒடிஞ்ச விவரத்தை, கதை மாதிரி சொல்லணும். இல்லைன்னா சித்திக்கு கோபம் வரும். ஆனா ஆயிஷா நல்ல பொண்ணு.” “நல்ல பொண்ணு மாதிரிதான் தெரியுது காதர்.” “உங்க பிரண்டு கண்ணுக்கு , நான் நல்ல பொண்ணு மாதிரிதான் தெரியுதாம். கேட்டியா காக்கா.” “ஏண்டா ஆயி கேட்குதுல்ல? பதிலுக்கு ஏதாவது பேசேன்?” “உங்களை பொண்ணுன்னு அங்கீகரிச்சனே. அதுக்குச் சந்தோஷப்படுங்கன்னு நான் சொன்னா அவங்களுக்கு கோவம் வரும். எனக்கெதுக்கு வம்பு?” “மாதிரிப் பெண்ணுன்னு சொல்ல வந்தேன்னு சமாளியேண்டா.” ஆயிஷா உதட்டைக் கடித்தபடியே சிரித்தாள். முத்துக்குமார் சிரித்தபடியே உதட்டைக் கடித்தான். இருவரையும் மாறி மாறிப் பார்த்தகாதர் எதையோ பெரிதாய்க் கண்டு பிடித்துவிட்டு, அதை உலகுக்கு முதல் முதலாய் அறிவிக்கும் விஞ்ஞானி போலப் பேசினான். “இப்போ நம்ம டவுனு பத்தி எரியுது! நம்ம மசூதிப் பாளையமும்பத்தி எரியப் போவுது! சாராயக் கடை போனதை பழனிவேலு ஒரு கெளரவ பிரச்சனையா எடுக்காம இருக்கப் போறதில்லை. இதுவே இந்து முஸ்லீம் கலவரமா மாத்தப்பட்டாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்ல. ஆனாலும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு வழி- ஒரே வழி இருக்கு. என்ன வழின்னு தான் கேளுங்களேன்.” “சொல்லாட்டா உனக்குத்தான் தலைவெடிச்சுடுமே?” “சரி வெடிக்கும் முன்னால சொல்லிடறேன். பழனிவேல் மகள் அபிராமிக்கும் திவான் முகம்மது மகன் சம்சுதீனுக்கும், அவங்க ஒருவரை ஒருவர் காதலிப்பதாலே அவங்களுக்கு போலீஸ் காவலில் கல்யாணம் செய்து, இந்து.. முஸ்லீம்னு சொல்லிக்கிட்டுத் திரியறவங்கள தலைகுனிய வைக்க லாம்னு நினைச்சேன். ஆனால் அந்தக் காதல் கிளிகள் இப்போ சண்டைக் கோழிகளாக மாறிட்டதுங்க. யாராவது ஒரு இந்துப் பயலும் ஒரு முஸ்லீம் பொண்ணும் காதலிச்சா சொல்லுடா. பப்ளிக்காகல்யாணம் செய்து இந்து-முஸ்லீம் ஒற்றுமையைக் கட்டிக் காப்பாத்தலாம்.” காதர்பாட்சா, அந்த இருவரையும் நோட்டமிட்டான். அவர்களோ அதைக் கவனிக்கவில்லை. கவனிக்க நேரமுமில்லை. ஒருவர் மீது ஒருவர் நிலைநாட்டிய கண்கள் பின்வாங்க மறுத்தன. ஒன்றுக்கு ஒன்று இணையாய் புன்னகைத்த உதடுகள் ஒட்டிக் கொள்ள மறுத்தன. இதனால் காதர்பாட்சாதான் மீண்டும் கேட்டான். “என்னடா சொல்றே?” “உனக்கு விளையாடறதுக்கு நேரமில்லையாடா?” “நான் சீரியசாத்தாண்டா சொல்றேன். யாராவது இருந்தால் சொல்லுடா. அவங்க எனக்கு சொந்தமாக இருந்தாக் கூட பரவாயில்லடா. இன்னைக்கே போலீஸ் பாதுகாப்பிலே தாலிகட்டி ஊர்வலமா வந்துட்டா, பல தாலிகளை நாம் காப்பாத்தலாம்.” சமையலறைக்குள் இருப்பதாக் எல்லோரும் நினைத்த நசீமா அங்கே கத்திக்கொண்டே ஓடிவந்தாள். “ஒங்களுக்கு மூளையிருக்குதா? முன்னப்பின்ன யோசிச்சிங்களா? அப்படியே கல்யாணம் நடத்தினால் முஸ்லீம் பெண்ணை இந்து கடத்திக்கிட்டு போனது மாதிரியும், இந்துப் பெண்ணை முஸ்லீம் கடத்திக்கிட்டு போனது மாதிரியும் கதை கட்டிவிட்டு, கடைசிலே குத்துப்பழி வெட்டுப்பழி வரும். நான் மகாத்மாகாந்தி இறந்தப்போ நடந்த கலவரத்தைக் கண்ணாலேயே பார்த்தவள். யாருக் காவது அப்படி ஒரு எண்ணம் இருந்தால் விட்டுடுங்க.” “நீ வேற பெரியம்மா, காதர் அண்ணன் விளையாட்டுக்குச் சொல்றான்.” “விளையாட்டுத்தான் வினையாகும்...!” “இல்ல ஆயி, நிசமாவே.” ஆயிஷாவும் முத்துக்குமாரும் தங்களுக்கு அப்போதே கல்யாணம் நடந்துவிட்டதுபோல் ஒருவரையொருவர் கண்களால் சல்லடையிட்டார்கள். ஏதாவது பேசினால் என்ன என்பது மாதிரி ஒவ்வொரு பல்லையும் ஊடுருவிப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள் அவர்கள். அப்படிப் பார்ப்பதைப் பார்த்த நசீமா பயந்து விட்டாள். ஆயிஷாவைக் கிட்டத்தட்ட தூக்கிக் கொண்டே அடுத்த அறைக்குள் ஓடினாள். ஏழெட்டுப்பேரைக் கொண்ட ஒரு கூட்டம் உள்ளே வந்தது. முருகானந்தம் தலையில் ஒரு கட்டு. அந்தக் கட்டு டிங்க்சர் அயோடினாலோ அல்லது ரத்தத்தாலோ ஒரு சதைக்கட்டி போலவே தோன்றியது. மீரான் கழுத்தில் பட்ட வெட்டுப் பள்ளத்தில் ஒரு களிம்பு கண்ணாடி மாதிரி பளித்சிட்டது. ஒருத்தனுக்கு ஒரு விரல் வளைந்திருந்தது. இன்னொருத்தனுக்கு மேல் உதடு சிதைந்திருந்தது. அவர்களைப் பார்த்ததும் காதர் பாட்சா கத்தினான். முருகானந்தம் மீரானைவிட்டுக் கொடுக்க விரும்பாதவன் போல் நிலைமையை விளக்கினான். “மசூதி இடிக்கும் முன்னாலேயே நாள் குறிச்ச மீட்டிங். அப்ப கூட என்ன பேசினேன்கிறே? நாம் அடிப்படை சம்பளத்தைக் கொடுக்க சொல்றது... இப்படிச் சொல்லி முடிச்சுட்டு, இப்போ அதைக் கேட்க சமய சந்தர்ப்பம் வரலே. இப்போ நம்ம கடமை வகுப்புக் கலவரம் வராமத் தடுக்கிறதுதான்னு சொல்லப் போனேன்! அதுக்குள்ள பாவிப் பயல்கள் வந்து பேசப்போன வாயிலே குத்திடானுக! முதுகுல தோளில் குத்தியிருந்தால் பேசியிருப்பேன்.” எல்லோரும் சிரித்தார்கள். அந்தச் சிரிப்போடு சிரிப்பாக காதர் பாட்சா ஒரு விஷயம் சொன்னான். அவர்களுக்கு அதை விளக்கியும் சொன்னான். “வெளியில நிக்கிற அலங்கார ஆட்டோவிற்குள்ள துண்டுப் பிரசுரம் இருக்கு. எடுத்து ஒவ்வொரு வீடா குடுங்க. நானும் முத்துக்குமாரும் அந்த ஆட்டோவில போய் டவுனுல பிரச்சாரம் செய்துட்டு வரோம்.” “நாங்களும் தயாரிச்சுருக்கோம் - ஒங்களுக்கும் தாறோம்...!” இதற்குள் நசீமா ஆயிஷாவை தோளில் கைபோட்டு, அப்படியே ஆதாரமாகப் பிடித்துக் கொண்டு அங்கே வந்தாள். கே.பி. சுந்தராம்பாளுக்கு விபூதியை அழித்து விட்டு தலையில் கோஷா போட்டால் எப்படியோ அப்படிப்பட்ட தோற்றம். இன்னும் சொல்லப் போனால் இஸ்லாமிய ஒளவையார் பரபரப்பாய்க் கேட்டாள். “வேண்டாம்ப்பா, வம்பை விலைக்கு வாங்காதீங்கப்பா. உலகமே கொந்தளிச்சு நிக்குது. சூறாவளியிலே சிக்கின துரும்பா ஆயிடாதீங்கப்பா!” “சிறு துரும்பும் பல்குத்த உதவும்மா, இன்ஸா அல்லா. பத்திரமாய் வீட்டுக்குத் திரும்புவோம். ஏன்னா எங்க பக்கம் அல்லா மட்டும் இல்ல. ஸ்ரீராமரும் இருக்கார்.” எல்லோரும் எழுந்தார்கள். கையில் மோரை வைத்திருந்த ஆயிஷா முத்துக்குமாரை மட்டும் தனிப்படுத்தி அதைக் கொடுப்பது முறையில்லை என்பது மாதிரி தயங்கினாள். இதற்குள் எல்லோரும் வீட்டுக்கு வெளியே வந்தார்கள். ஆயிஷா, வாசலிலே சரிபாதி நின்றபடி பின்பக்கமாக மறைத்து வைத்த அந்த மோர் டம்ளரை முத்துக்குமாரின் தலை நிமிரும் போதெல்லாம் அவன் கண்ணில் படும்படி முன்பக்கம் கொண்டு வந்தாள். வேறு கண்கள் படும்போது அதைப் பின் பக்கமாகக் கொண்டு போனாள். எப்படியோ முத்துக்குமாரின் கண்களில் அவளும், அவள் கை பிடித்திருந்த மோர் டம்ளரும் பட்டுவிட்டது. புரிந்து கொண்டான். ஆட்டோ உருமிக் கொண்டிருக்கும் போதே அவன் உள்ளே ஓடி வந்தான். அவள் அவன் கையில் தன்கை படாமல் இருக்க அந்த டம்ளரை ஒரு முக்காலியில் வைக்கப் போனபோது, அவன் அந்தக் கையோடு சேர்த்து மோர் டம்ளரைப் பிடித்தான். அவள், அவன் காதுகளில் கிசுகிசுத்தாள். “ஜாக்கிரதையாப் போங்க. நீங்க திரும்பி வரது வரைக்கும் உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு இருப்பேன்” வெளியே நின்றவர்கள் “முத்து, முத்து” என்று கத்தினார்கள். முத்துக்குமார் அவளை உற்றுப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்து விட்டு மோரைக் குடித்துக் கொண்டே வெளியே ஓடி வந்தான். பீடித் தொழிலாளர்கள் கைதட்ட, முத்துக்குமாரும் காதர்பாட்சாவும் அந்த ஆட்டோவில் ஏறிக் கொண்டார்கள். ஆட்டோ பறந்து கொண்டிருந்தது. தொழிலாளர்களும் துண்டுப் பிரசுரங்களோடு போய் விட்டார்கள். ஆயிஷா அந்த ஆட்டோவை முத்துக்குமாராக அனுமானித்து ஒரு கையில் கண்களைத் துடைத்தபடி இன்னொரு கையை ஆட்டினாள். ஒரு கரம் அப்படி ஆட்டிய கரத்தைக் கவ்விப் பிடித்தது. அவளது தந்தை ஹாஜி அஜீசின் கை. குரானை கரைத்துக் குடித்தவரின் கை. |