மூட்டம் - Moottam - சு. சமுத்திரம் நூல்கள் - Su. Samuthiram Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com

8

     அந்த நகரின் வால்முனையில் உள்ள தியேட்டர். அது வரை நடந்து வந்த புதிய படத்தை எடுத்துவிட்டு, அன்றைக்கு மட்டும் சம்பூர்ண ராமாயணத்தின் புதிய காப்பியைக் காட்டினார்கள்; அப்படியும் அது காலைக் காட்சிதான். அதுவும் ஓசிதான். பட்டிதொட்டி பதினாறுக்கும் சாதித் தலைவராக விளங்கும் பழனிவேலுவின் வேண்டுகோளின்படி, எல்லோருமே கத்தி, கடப்பாரை, கம்புகளோடு கூடிவிட்டார்கள். தியேட்டர் வளாகத்திலேயே மதிய சாப்பாடு. இப்போது பொதுக் கூட்டம். அந்தக் கூட்டத்திற்கு இடையிடையே வாய்க்கால் வரப்புப் போல் குண்டாந்தடி ஏந்திய குண்டர்கள் மாதிரியான தொண்டர்கள். ஆங்காங்கே, பட்டொளி வீசிப்பறக்காத, மக்கிப்போன காவிக்கொடிகள்.

     மேடைக்குப் பின்னணியாக, வில்லேந்தும் ஸ்ரீராமர், அரக்கனைக் கீழே மிதித்து ஆனந்தக் கூத்தாடும் நடராஜர், ராட்சஸனை ஒழிக்கும் திரிசூலி, அத்தனையும் கோபாவேச தெய்வப் படங்கள் - வாழைப்பழ ஊதுபத்தி சாட்சியோடும், மாலை மரியாதைகளோடும் வைக்கப்பட்டிருந்தன. காண்ட்ராக்டர் ராமலிங்கம் அங்கிருந்த சுவாமிஜியையும், பழனிவேலையும் ஒரு பார்வை பார்த்து விட்டும், ஒரு கூழைக் கும்பிடு போட்டுவிட்டும் வரவேற்புரை நிகழ்த்தினார்.

     “நாம் முதலில் இந்து. அப்புறம்தான் மனிதன். இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கே தெரியும், மசூதிபாளையத்தில் உள்ள மசூதி மாடியைக் கட்டிக் கொண்டிருந்தவன் நான். விலைவாசிக்கு ஏற்ப எனக்கு ரேட்டை கூட்டிக் கொடுப்பதாகக் கூடச் சொன்னார்கள். ஆனால் எப்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டதோ அப்போதே அறியாமையிலிருந்து நான் விடுபட்டு, ஒரு இந்துவாகி விட்டேன். செலவழித்த பணமான மூன்று லட்ச ரூபாய் போனால் போகட்டும் போடா என்று வேலையை நிறுத்தி விட்டேன். இப்படித் தான் ஒவ்வொரு இந்துவும் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு முஸ்லீமின் மமதையும் அடங்கும். இமயமலையில் கடுந்தவம் செய்து நம் தவப்பயனாய் இங்கு வந்தருளியுள்ள சுவாமிஜி ஜெய் ராமானந்தா உங்களிடையே இப்போது பேசுவார்.”

     ஜரிகை வேட்டியும், பட்டுச் சட்டையுமாய் கிழட்டுக் கல்யாண மாப்பிள்ளை மாதிரி வந்திருந்தார் பழனிவேல், அந்தக் ‘கழுதை களவாணிப்பய’ காண்ட்ராக்டர், தலைவர் என்ற முறையில் தன்னைப் பேசக் கூப்பிடாதது அவருக்கு வருத்தந்தான். அதுவும் இருவகையில் நிம்மதி, சாதிக் கூட்டங்களில் ஆபாசமான வார்த்தைகளால் பேசிப் பழகியவர். இங்கே அப்படிப்பட்ட வார்த்தைகள் வந்து விடக்கூடாது.

     பழனிவேல், அவருடைய ஒரே சொல்லுக்காக வந்திருக்கும் உருண்டு திரண்ட அந்தக் கூட்டத்தைப் பார்த்தார். கூட்டத்தின் முன் வரிசையில் உள்ள பெண்களில் தனியழகாய்த் தோன்றிய மகள் அபிராமியைப் பார்த்தார். நெற்றியில் நீளமான வெள்ளைக்கோடு. அதில் உருளையான சந்தனம். அதற்கு மேல் குங்குமம். அன்னை அபிராமியே அங்கே திரிசூலம் இல்லாமல் உட்கார்ந்திருப்பது போன்ற தோரணை. மகளைப் பெருமிதப்பட்டுப் பார்த்த அவர், பலத்த கைதட்டலுக்கு இடையே மைக் பக்கம் போன ஜெய் ராமானந்தாவைப் பார்த்தார். மூன்றாண்டுகளுக்கு முன்பு வீட்டுக்கு வந்து அடிக்கடி காசு கேட்ட மனிதன் - அதுவும் காலில் விழாத குறையாக. ஒரு தடவை இவர், “உழைச்சு பிழையேன்யா” என்று கூடச் சொல்லிருக்கிறார். அப்புறம் ஆளைக் காணவில்லை. ஜெயிலுக்குப் போனானோ எங்கே போனானோ, இப்போது இமயமலையில் பிறந்து அங்கேயே தவம் செய்தது மாதிரி எங்கிட்டேயே கரடி விடுறான். கரடியோ - புரளியோ அவனால் ஒரு காரியம் ஆகவேண்டும். சங்கரசுப்பு மோசம் செய்துவிட்டான். கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கலாம். தப்பில்லை தான். ஆனால் அறுநூறு ரூபாய் வாடகை வரக்கூடிய கடையை எப்படி ஸ்ரீராமர் கோவிலாக மாற்றலாம்? சுவாமிஜியின் காதுகளைக் கடித்தாகிவிட்டது. கரங்களைச் சொறிந்தாகி விட்டது. மனை சாஸ்திரப்படி அங்கே ஸ்ரீராமர் இருக்கக்கூடாது என்று சுவாமிஜி சொல்லியிருக்கிறார். அப்படியும் சங்கரசுப்பு அசையவில்லையானால், ராத்திரி யோடு ராத்திரியாய் ஸ்ரீராமரை இடித்துப் போட்டுவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டுவிட வேண்டியதுதான். சாராயக் கடையை தவிடுபொடியாக்கின பயல்களுக்கு சரியான பாடம். இப்போ இங்கே கூடியிருக்கதே, இடிபட்ட சாராயக்கடைக்கு நீதி கேட்டுத்தானே.

     சுவாமிஜிக்குக் கூட்டம் கை தட்டவில்லை, மேடையிலிருந்த சங்கரசுப்பு, அப்படித் தட்டும்படி இரண்டு கைகளையும் தட்டி கூட்டத்தைத் தூக்கப் போவதுபோல் மேலே கொண்டு போனபோதும் அந்தக் கூட்டம் அசையவில்லை. பழனிவேல் கையாட்டிய போதுதான் பயங்கரமாய்த் தட்டியது. அவரே நிறுத்தும்படிச் சொல்லுமளவிற்கு அது ஒரு கைதட்டுக் கூட்டமாகியது.

     சுவாமிஜி, மாலை மரியாதைகளையும், பொன்னாடைகளையும் கண்களால் எடைபோட்டு வாங்கிக் கொண்டு பேச்சைத் துவக்கப் போனார். காவிவேட்டி, காவிச்சட்டை... அதே நிறத்திலான கால் கைகள்... அதே நிறத்திலான முகம்; எண்ணெய் தடவிவிட்டது போன்ற தாடி... அதில் வெண்ணெய் தடவி விட்டது போன்ற லேசான நரை முடி. பேட்டைத் தனமான பார்வை. இதோ அவரே பேசப் போகிறார்.

     “ஜெய்ராம்! எல்லோரும் சொல்லுங்க! ஜெய்ராம்...”

     சும்மா இருந்த கூட்டம், பழனிவேலு கையாட்டியதும், ஒற்றை மனிதனாய்க் கத்தியது.

     “செயராம்... செயசெயராம்...”

     சாமியார் முகம் சுளித்தார். அவர்களின் முழக்கத்திற்கு திருத்தம் கொண்டு வந்தார்.

     “அப்படிச் சொல்லப்படாது. நான் சொல்ற மாதிரியே ‘ஜெய்ராம்’ என்று சொல்லணும். செயசெயராம்னு சொல்லக் கூடாது. ஏனென்றால் நமது கொள்கை ஒரு நாடு. ஒரு மதம். ஒரே கலாச்சாரம் என்பது. ஆகையால் இனிமேல் எந்த பக்தனும் ஜெய்ராமுக்குப் பதிலாக செயசெயராம் என்றால், அது பாவமாகக் கருதப்படும். ராமா அல்ல, ராம். செயஅல்ல, ஜெய். சொல்லுங்க பார்க்கலாம். ஜெய்ராம்...”

     “செய்ராம் செய்ராம்”

     “என்னத்தை செய்யப் போரீங்க? நீங்க சொல்றதைப் பாத்தா நாம், ராமனுக்காக எதுவும் செய்யாமல் அவரே தனக்குத்தானே ஏதாவது செய்யனும் என்று நினைப்பது போல் இருக்கிறது. சொல்லுங்கள். ‘ஜெய்ராம், ஜெய்ராம்’ ஒங்களுக்கு ‘ஜெ’ பிடிக்காதா... பிடிக்கணும்... வேற வழியில்லை...”

     கூட்டத்தின் முக்கால்வாசிப் பேருக்கு ‘ஜெ’ வரவில்லை. ஆனால் அபிராமிக்கு வந்தது. கம்பீரமும் இனிமையும் குரலில் கலக்க ‘ஜெய்ராம்’ என்றாள். ஆனால் அவளுக்கு ஒரு வருத்தம். சுவாமிஜி, அவளை இந்தப் பூலோகத்தில் பிறப்பித்த அன்னை அபிராமியைப் பற்றியும் முழங்கியிருக்க வேண்டும். ஆனாலும் ஒரு சமாதானம் ஸ்ரீராமன் யார்? அன்னை அபிராமியின் சகோதரன்தானே? தாய்மாமன் பேரைச் சொன்னால் தப்பில்லையே...

     சுவாமிஜி, ஒரு கையைத் தூக்கி விரல்களை முஷ்டியாக்கி, அதுவே ஒரு குட்டிக் குண்டாந்தடிபோல் தோன்றப் பேசினார்.

     “இந்துக்களே! இந்துக்களே! நீங்கள் எல்லாம் இந்துக்களா... இந்துக்களே...! இந்து என்பவன் யார்? எவனொருவன், இந்து ஆலயம் இருக்குமிடத்தில் இருக்கும் மசூதியைத் தகர்ப்பானோ, எவனொருவன் வர்ணாஸ்ரம தர்மத்தைக் கடைப்பிடிப்பானோ, எவனொருவன் இந்த நாட்டிலே இருக்கும் ‘பாகிஸ்தானியர்களை’ தட்டிக் கேட்பானோ, எவனொருவன் காவிக் கொடியைக் கரம் ஏந்திப் பிடிப்பானோ அவனே இந்து; அவள்தான் இந்து.”

     சுவாமிஜி பேசிக் கொண்டே போனார். முஸ்லிம் படையெடுப்பு, ஒளரங்கசீப்பின் அட்டுழியம். மூன்று பொண்டாட்டி, இஸ்லாமியச் சட்டம், தலாக் போன்ற பலவேறு ‘விஷ’யங்களை விளக்கிக் கொண்டு போனார். கூட்டம் தூங்கப் போனது. அதற்குள் வெளியே ஒரு உரத்த குரல். மணியடிப்பது மாதிரியான மைக் வழியான குரல். பாதிப்பேர் விழுந்தடித்து வெளியே ஓடிவந்து நின்றபோது. அந்த ஆட்டோவே தனது உச்சித் தலைமூலம், உரத்துக் கத்துவது போல் தோன்றியது.

     “பெரியோர்களே தாய்மார்களே ஒளியின் வேகம் அதாவது, ஒளி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் வேகம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் மைல், நமது சூரியனிலிருந்து அந்த ஒளி பூமிக்கு வருவதற்கு நான்கு நிமிடம் ஆகிறது. இப்படிப் பல நட்சத்திரங்களிலிருந்து ஒளி வருவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகள் கூட ஆகின்றன என்றால், இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு பரந்து விரிந்து உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்தப் பூமி, பிரபஞ்சக் கடலில் ஒரு துளிதான். கோடி கோடியே கோடி சூரியன்கள் பிரபஞ்சத்தில் உள்ளன. இயற்கையில் ஒவ்வொன்றுமே ஒரு அற்புதம், காலையில் பூக்கும் மலர்கள், மாலையில் பூக்காது; மாலையில் பூக்கும் மலர்கள் காலையில் கண் திறக்காது. வண்டுகளும் அப்படியே. பரிணாம போட்டியின் பக்குவமே இந்தப் பூக்கள். இந்த வண்டுகள்; இப்படிப்பட்ட இந்த அற்புதக் கிரகத்தில் விஞ்ஞான யுகம் வேகவேகமாய் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று சொல்வது பாசிசம், அதாவது கொடுங்கோன்மை. இப்படிச் சொல்கிறவர்கள் ஆதிதிரா விடர்களைத் தள்ளி வைத்தது ஏன்? இப்பவாவது ஆதி திராவிடர் வீட்டில் பெண் கொடுக்கல், வாங்கல் செய்வார்களா? இல்லை வயல் வெட்டிக்குப் போகும் உங்களுடைய கூலியைக் கூட்டித் தருவார்களா? ஆகையால் பெரியோர்களே! ஒரே கலாச்சாரம் என்பது, கண்ணால் கூட வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாத கழுதையாக இருக்க வேண்டும் என்று சொல்வது மாதிரி, அடாவடித்தனமானதும் கூட. ஆனால் இந்தியர்களாகிய நாம் கழுதைகள் இல்லை. பல்வேறு நிறத்திலான குதிரைகள். சண்டைக் குதிரைகள் அல்ல. இந்த நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லும் சவாரிக் குதிரைகள். பிறத்தியார் நிலத்தில் கட்டிய வீட்டைக் கூட இடிக்க முடியாத இந்தக் காலத்தில் பழமையான ஒரு மசூதியை, இடிப்பது...”

     வெளியே நின்ற கூட்டம் அப்படியே நின்றது. சிலர் கை தட்டக்கூடப் போனார்கள். அதற்குள் பழனிவேல், சங்கரசுப்பு வகையறாக்களோடு வந்து ஆட்டோவை முறைத்தார். கூட்டம் நிதானித்ததைப் பார்த்த முத்துக்குமாரும் காதர்பாட்சாவும், ஆட்டோவிலிருந்து இறங்கி வெளியே வந்தார்கள். முத்துக்குமார் கை மைக்கில் பேசப் பேச, காதர்பாட்சா தலையை ஆட்டினான். பழனிவேலால் தாங்க முடியவில்லை.

     “நாம் பள்ளுப்பறைகளைக் கட்டணும்னு சொல்றான். நம்ம பொண்ணுகளை பள்ளுப்பறைகளுக்குக் கொடுக்கணும்னு சொல்றான். இன்னுமாடா பாத்துக்கிட்டு நிக்கிறிக? இதுக்காடா கூட்டி வந்தேன்?... நம்மை வம்புக்கு அழைக்கிறது மாதிரி, ஆட்டோவை அனுப்பி இந்துமத விரோதப் பிரச்சாரம் செய்யுற மசூதிபாளையம் மண்டியிடனும்”

     அந்தக் கூட்டம், உடம்பை நெளித்தபோது குண்டாந்தடி சீருடைக்காரர்கள், அந்த ஆட்டோவைப் பார்த்து ஓடினார்கள். அப்படியும், காதரும் முத்துக்குமாரும் தங்கள் பாட்டுக்கு இயங்கியபோது, டிரைவரால் பொறுக்க முடியவில்லை. ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி, அவர்கள் இரண்டு பேரையும் ஆட்டோவுக்குள் தூக்கிப்போட்டு வண்டியை எடுத்தார். ஆட்டோ அந்த டவுனின் பிரதான சாலை வழியாக ஓடி, பின்னர் அதிலிருந்து கிளைவிட்ட குப்பிச்சாலையில் தாவி மசூதி பாளையத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. பின்னால் குண்டாந்தடித் தொண்டர்களும், கூட்டமும் கற்களை எடுத்து எடுத்து ஆட்டோவின் மேல் எறிந்து எறிந்து ஓடியது. ஆட்டோவின் ஒலிபெருக்கிக்கு சில விழுப்புண்கள். பல கற்கள் ஆட்டோவின் பின் திரையைக் கிழித்து உள்ளே பாய்ந்தன. உள்ளே என்ன செய்தனவோ ஏது செய்தனவோ? ஆனாலும் ஆட்டோ அவர்களுக்கு ‘கடுக்காய்’ கொடுத்தபடியே ஓடியது.

     அந்தக் கூட்டம் ஆயுத பாணியோடு ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றது. மசூதிபாளையம் கண்ணுக்குத் தெரிந்த இடம். பழனிவேல் இப்போது சுவாமிஜியோடும், சங்கரசுப்புவோடும், ராமலிங்கத்தோடும் அங்கே வந்தார். மசூதிபாளையத்திற்குச் சிறிது தொலைவில் உள்ள ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு போகும் குழாய்களைப் பார்த்தார். மேலே பறந்த மின்சாரக் கம்பங்களையும், டெலிபோன் கம்பிகளையும் நோட்டம் விட்டார். ஆவேசமாகக் கத்தினார்.

     “இங்கே நில்லுங்க, இப்படியே நில்லுங்க... எந்த சாய்புவையும் உள்ளேயும் விடப்படாது. வெளியேயும் விடப்படாது. அவங்க இந்த வழியா வந்துதான் ஆகணும். அந்தப் பக்கம் ஏரி. இந்தப் பக்கம் குளம். பின்பக்கம் மலை. பொந்துக்குள்ள இருக்கிற பெருச்சாளி மூட்டம் போட்டால் வெளியில வராமலா இருக்கும்? என்னடா பார்த்துக்கிட்டு இருக்கீங்க? அந்தத் தண்ணிக் குழாயை உடையுங்க, சாய்புப் பயலுவ எப்படி தண்ணி குடிக்கானுவன்னு பார்க்கிறேன். சங்கரசுப்பு நீங்க தொண்டர்களை கூட்டிக்கிட்டு ஏரிப் பக்கம் போங்க. மதகை அடையுங்க. டெலிபோன் ஒயரை வெட்டுங்க... டேய்... டேய்... அது மின்சாரக் கம்பிடா... தொடாதே... அதுக்கு... அப்புறமா ஒரு வழி செய்யலாம்.”

     குண்டாந்தடித் தொண்டர்கள் சொல்லப் பொறுக்கவில்லை. நான்கைந்து பேர்களிடமிருந்து - அவர்கள் காரணம் புரியாமலே வைத்திருந்த கடப்பாரைக் கம்பிகளைப் பறித்தார்கள். ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றை வழி மறித்துக் கட்டிய ஏரியிலிருந்து தண்ணீர் சுமந்து பாதி மண்ணில் புதைபட்டும், மீதி வெளியே தெரிந்தும் நெருப்புக் கோழியாய் வெளிப்பட்ட நான்கு சிமெண்ட் குழாய்கள் பக்கம் போய்க் கம்பீரமாய் நின்றார்கள். பிறகு தங்களது ‘கர சேவைக்கு’ ஸ்ரீராமனைத் துணைக்கழைக்க கண்களை மூடித் தியானித்தார்கள். அந்தக் கண்கள் மீண்டும் திறந்ததும் நெடுஞ்சாண்கிடையாய்க் கிடந்த குழாய்கள் மேல் இரும்புக் கம்பிகள் மோதின. அந்தக் குழாய்களில் ஒரு பகுதி வார்ப்பு இரும்பால் வடிக்கப்பட்டதால் , குத்தப் போன கம்பிகள் திருப்பித் தாக்கப்பட்ட்துபோல் அந்தக் குழாய்களிலிருந்து நழுவின. ஆனாலும் அந்தக் குழாய்களில் வெள்ளை வெள்ளையான காயங்கள் ஏற்பட்டன. பழனிவேல் கூட்டத்தை ஏவிவிட்டார். அத்தனை பேரும் குழாய்ப் பக்கம் ஓடினார்கள். அவற்றை உடைப்பதில் உள்ள உழைப்பின் கஷ்டத்தைப் புரிந்து கொண்ட படித்த சிலர் இரண்டு மூன்று காவிக் கொடிகளை சாலைப் பக்கம் நட்டுக் கொண்டு இருந்தார்கள்.

     அரை மணி நேரத்திற்குள், அந்தக் குழாய்கள் குற்றுயிரும் குலையுயிருமாய்த் துடித்தன. அவற்றிலிருந்து ஓடிய தண்ணீர் முதலில் கண்ணிராயும், பிறகு செந்நீராயும் வெளிப்பட்டது. ஆங்காங்கே சின்னப் பிள்ளைகள் வீடுகட்டி விளையாடுற மாதிரியான சின்னச் சின்னக் குளங்கள்! குழாய்களை உடைத்துக் களைத்துப் போனவர்கள் அந்தத் தண்ணீரையே தாகத்திற்குக் குடித்தார்கள். அடித்துப் போட்ட மாட்டின் ரத்தத்தை புலி குடிக்குமே அப்படி. சிலர் கையலம்பிக் கொண்டார்கள். இதற்குள் டெலிபோன் கம்பிகள் தலைகீழாய்த் தொங்கின. சங்கரசுப்பு பழனிவேலிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.

     “இன்னும் அரை கிலோ மீட்டர் வரைக்கும் குழாய் போகுதே, அதில இருக்கிற தண்ணிர் அவனவனுக்கு ஒரு நாளைக்கு போதுமே இப்படி விட்டுக் கொடுக்கலாமா?”

     “நீர் எந்தக் காலத்திலேயாவது விவசாயம் பார்த்திருந்தால் தெரியும்... இந்தப் பக்கம் பள்ளம். அந்தப் பக்கம் மேடு, அதோ பாருங்க. தண்ணீர் தபதபன்னு தரையில விழுகிறதை...”

     சங்கரசுப்பு, திருப்தியோடு தலையாட்டிய போது, பழனிவேல் கூட்டத்திற்கு ஆணையிட்டார்:

     “ரோட்டை மறிச்சுக்கிட்டு நில்லுங்கப்பா. இப்படி மனிதச் சங்கிலி மாதிரி இல்ல, இரும்பு வேலி மாதிரி நிக்கணும்...”

     இதற்குள் குண்டாந்தடித் தொண்டர்கள் கூட்டத்தை பிய்த்துப் பிய்த்து வரிசையாக்கினார்கள். தென்முகமாய் ஐம்பது பேரும், வடமுகமாய் ஐம்பது பேரும் நிறுத்தப்பட்டார்கள். மற்றவர்கள் அங்கும் இங்கும் சிதறி நின்றார்கள். மசூதிபாளைய முனையில், ஒரு கூட்டம் திரண்டு நிற்பது தெரிந்தது.

     சிறிது நேரத்தில், மசூதிபாளையத்தில் இருந்து ஒரு கார் வந்தது. குண்டாந்தடித்தொண்டர்கள் அதைப் போகவிடாமல் சாலை மறியல் செய்தபோது, உள்ளே அந்தக் காரையே நொறுக்கிவிட்டு வெளியே வரப்போவது போல் ஒரு கர்ப்பிணிப் பெண் அலைமோதினாள். அவள் அம்மா கண்ணீரும் கம்பலையுமாய் காரைச் சூழ்ந்தவர்களிடம் மன்றாடினாள்.

     “ஆம்பளைங்க வந்தா வம்புன்னு எம்புருஷனையும், மருமகனையும் அங்கேயே விட்டுட்டு நான் மட்டும் இவளைக் கூட்டிக்கிட்டு வாரேன். தயவு செய்து கருணை காட்டுங்க. அண்ணே நீங்கதான் பழனிவேலு-ஒங்களை திவான்முகம்மது வீட்டிலே பலதடவை பார்த்திருக்கிறேன்... எங்களை... அவரு எப்பவுமே சேர்த்துக்க மாட்டாரு. நீங்களும் சேர்க்காட்டி எப்படி? நான் கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்த பொண்ணுண்ணே... ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகாட்டி வாயும் வயிறுமாய் செத்துப்போவாண்னே... கருணை காட்டுங்கண்ணே.. அல்லா உங்களுக்கு அருளுவார்ண்ணே...! வழிவிடுங்கண்ணே...!”

     பழனிவேலு வேறுபக்கமாக நடந்தபோது, ஒரு குண்டாந்தடி அதட்டியது.

     “அல்லா உங்களுக்கு மட்டும் அருளினால் போதும். எங்களுக்கு ராமர் இருக்கார், ஒங்களுக்கு வழிவிட எங்களுக்குப் பைத்தியமா? முதல்ல ஆஸ்பத்திரிக்கு ,போவிங்க. அப்புறம் கலெட்டர்கிட்டே போவிங்க. போலீஸ் இங்க வரும், படுகளத்திலே ஒப்பாரி கூடாதும்மா. திரும்பிப் போ! திரும்பிப் பார்க்காமே போ!” இன்னொரு சீருடை குறுக்குக் கேள்வி போட்டது.

     “இப்பக்கூட இந்தப் பொண்ணு வயித்துக்குள்ளே பஞ்சை அடைச்சிக்கிட்டு நடிக்கமாட்டான்னு என்ன நிச்சயம்?”

     அம்மாக்காரி, மீண்டும் மீண்டும் கெஞ்சினாள். அதற்குள், உள்ளே கிடந்த பெண், சன்னம் சன்னமாய் குரல் இழந்து கொண்டிருந்தாள். இன்னொரு குண்டாந்தடி அதட்டியது.

     “ஏண்டா நீ டிரைவரா இல்ல... எருமமாடா காரை எடுத்துக்கிட்டு போறியா... இல்லை... அதை காயலாங்கடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பவா...

     இப்போது, தாய்க்காரியின் முகம் வெளுத்தது. கண்கள், சிறிது நேரம் மூடின. அவள் திறந்தபோது, எதிரே தோன்றிய அரிவாள்களையும், உள்ளுறுப்புகளைத் தோண்டி எடுக்கக் கூடிய சூரிக்கத்திகளையும், தொட்டாலே ரத்தம் குடிக்கும் வேல் கம்புகளையும், இழுத்துப் பிடித்துக் கவ்வும் சைக்கிள் செயின்களையும் கண்டன. இதற்குள் இரண்டு மூன்று பேர் அந்தக் காரை அங்கும் இங்கும் முஷ்டிகளால் குத்தினார்கள். ஆனாலும் அங்கே நின்ற சாதா கூட்டத்திடம் பச்சாதாபம் மேலோங்கியது. ஆனாலும் பழனிவேல் பார்த்த பார்வையில் கட்டுப்பட்டது. வெளியே கோபப்படுவது போல் பாவலா செய்து கொண்டும், உள்ளுக்குள் அழுது கொண்டும் நின்றது. பிணம் போல் கிடந்த மகளைப் பார்த்தபடியே தாய்க்காரி காருக்குள் ஏறினாள். கார் பின்பக்கமாய் நகர்ந்து, அப்புறம் தென்பக்கமாய்த் திரும்ப ஓடியது. கூட்டத்திற்கு, பின் கண்ணாடி டி.வி.காட்சி போலத் தெரிந்தது. அந்தக் கர்ப்பிணிப் பெண் கைகளை மீண்டும் மீண்டும் மேலே தூக்குகிறார். தாய்க்காரி அவற்றை இழுத்துப் பிடிக்கிறார் கூட்டம், பழனிவேலுவை குற்றம்சாட்டும் தோரணையில் பார்த்தபோது, அவர் ஆணையிட்டார். “எவ்வளவு நாளானாலும் சரி... இங்கேயே நிற்கணும்... இப்படியே நிற்கணும்... ஆறுமணி நேரத்திற்குப் பிறகு சைடில நிற்கறவுங்க இங்க வரணும். நீங்க அங்க போகணும், மசூதி பாளையத்திலிருந்து இந்தப் பக்கம் ஒரு காக்கா குருவிகூடப் பறக்கக் கூடாது. நீங்க என்னனெல்லாம் சாப்பிடுவீங்களோ அதெல்லாம் உங்களைத் தேடி இங்க வரும். உறையும் பாக்கெட்டும் தானா வரும். இந்தச் சமயத்தில் மசூதி பாளையத்தில் முனையில் கூட்டம் அதிகமானது போல் தோன்றியது. ஆகாயத்தை நோக்கிக் கைகளை வளைத்தது கண்ணில்பட்டது. இங்கிருந்து பலர் அவர்களை நோக்கி ஓடப்போனார்கள். சிலர் அவர்களைத் தங்கள் பக்கம் வரும்படி சவால் விட்டார்கள். ‘செய்ராம் செய்ராம்’ என்ற முழக்கங்கள்! அப்போது பார்த்து ஒரு ஸ்கூட்டர் சத்தம்...

     அந்தப் பிரதான சாலையிலிருந்து சம்சுதீன் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தான். அவனுக்கு விபரம் தெரியாது. பழனிவேலுக்கு ஆத்திரம். அதனால் அவனுக்குக் காத்திருக்க வேண்டுமென்ற நடப்பு புரியாமல், புத்திமட்டாகக் கத்தினார்:

     “அதோ வரான் பாரு திவான் முகம்மதுவோட பயல்... காலேஜில் இந்துப் பெண்கள் கிட்ட வம்பு பண்ற பயல்... செருக்கி மகனை ஒரே போடாப் போடுங்கடா! ஒடுங்கடா! பிடிங்கடா!”

     அந்தக் கூட்டத்தில் ஒரு பகுதி ஆயுத பாணியாய் சம்சுதீனைப் பார்த்து ஓடியது. சிறிது நேரம் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பிரமித்து நின்ற சம்சுதீன், அந்த ஸ்கூட்டரைத் திரும்பப் பார்த்தான். அதற்குள் எல்லாம் முடிந்து விடும் என்பதை உணர்ந்தவன் போல் அந்த ஸ்கூட்டரிடமிருந்து விடுபட்டு தலைதெறிக்க ஓடினான். கூட்டமோ ‘செய்ராம்’ ‘செய்ராம்’ என்று கத்தியபடி அவனைத் தொடர்ந்து துரத்தியது.

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247