உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல் 2 சரவணனுக்கு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த சத்தத்தில், வீட்டுக்குள் ஏற்பட்ட சத்தம் கேட்கவில்லை. வீட்டில் ஏற்பட்ட சில்லறை ரகளையில், எக்ஸ்பிரஸ் பஸ் இந்நேரம் அலுவலகமே போயிருக்கும். இந்த மாதிரி சமயத்தில் தான் அவன் ஸ்கூட்டரை எடுப்பான். அலுவலகத்திற்கு, தாமதமாய்ப் போனாலும், அவனை யாரும் தட்டிக் கேட்கப் போவதில்லை. அவன், அதன் மகுடதாரி. அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீஸர் எனப்படும் நிர்வாக அதிகாரி கூட, ஓரிரு தடவை, “சாரி நீங்க... கெஜட்டட் ஆபீஸர்... உங்க அந்தஸ்துல இருக்குற அதிகாரிங்களுக்குக் குறிப்பிட்ட நேரத்துல வரணுமுன்னு ஆபீஸ் விதி கிடையாது. ஆனா நீங்க என்னடான்னா ஆபீஸ் டைமுக்கு முன்னாலேயே வந்துடுறீங்க...” என்றார். உடனே இவன், “கெஜட்டட் ஆபீசருக்கு நேரம் கிடையாதுன்னு ரூல்ஸ்ல சொல்றது எதுக்குன்னா, அவங்க ஆபீஸ் நேரத்துக்கு முன்னாலயும், பின்னாலயும் கூட வேலை பார்க்கணுமுன்னு அர்த்தப் படுத்திக்கணுமே தவிர, இதுக்கு இடையில், எப்போது வேணுமுன்னாலும் வரலாமுன்னு அர்த்தப் படுத்திக்கக் கூடாது...” என்று சுவையாவும், சுடச்சுடவும் சொன்னவன். எப்படியாவது வழக்கம் போல் பத்து மணிக்கு முன்பாகவே அலுவலகம் போய்விட வேண்டும் என்ற அவசர ஆவலில், அவன் ஆக்ஸிலேட்டரை அழுத்த, ஸ்கூட்டர் ஆவேசமாகியது அவன் மனமும் அதே மாதிரிதான். அவனைப் பொறுத்த அளவில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காலமான அண்ணன், அவனுக்குத் தந்தை. அண்ணி தங்கம்மா இரண்டாவது தாய். அம்மா, அண்ணியைச் சாடியது, அவனை இரண்டாந்தரத் தாயாக அவனுக்குக் காட்டியது. இப்படிப் பேச எப்படி மனம் வரும்? இவளா என்னைப் பெற்றாள்? அப்பா, அவன் நினைவுக்கு வராத வயதிலேயே காலமாகி விட்டாராம். ஊரில், வயதான கிழடுகளை ‘வழியனுப்ப’ப் ‘பாரதம்’ படித்தும், கல்யாண வீடுகளில் ‘கொழுந்தி கொழுந்தி - நாவல் கொழிந்தியபடி’ என்று வாழ்த்துப் பாடியும், அம்மன் கொடைகளில் ‘வரி’ பிரித்து, அவற்றை நடத்திக் காட்டியும், அக்கம் பக்கத்து அடிதடி சண்டைகளில் நடுநிலை மாறாத வழக்காளியாகவும் இருந்தவர் அண்ணன். அவரது பாட்டைக் கேட்டுத்தான், அவனுக்குத் தமிழில் ஆர்வம் ஏற்பட்டது. அவர் ‘வழக்கு’ப் பேசும் நேர்மையைக் கண்டு தான் அவனுக்குள் தர்மம் உதித்தது. “வழக்காளி... மணிமுத்தோட தம்பியாடா நீ? ஒனக்காடா வாயில் பொய் வருது?” என்று கண்டித்தது நினைவுக்கு வந்தது. அப்படிப்பட்ட அண்ணன் தான், கொஞ்ச நஞ்சமிருந்த நிலத்தில் அன்றாடம் படாத பாடுபட்டு, குடும்பத்தைக் காப்பாற்றினார். கல்யாணமாகி ஏழெட்டு வருடமாகியும், குழந்தை பிறக்காத போது அம்மா உட்பட, அண்ணியின் மௌன சம்மதத்தோடு, பலர் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளச் சொன்ன போது, எனக்கு ரெண்டு தாய் இருக்காங்க... இரு மகனும் மகளும் இருக்காங்க... யாருவே... எனக்கு குழந்தையில்லைன்னு சொல்றது” என்று எதிர்வாதம் பேசி சீதையை காட்டுக்கு அனுப்பாத ராமபிரான். அண்ணி மட்டும் என்னவாம்... அண்ணனுடைய ‘பாரத’ப் படிப்பிற்காகவும், ‘வழக்காளி’ என்ற செல்வாக்கிற்காகவும், வசதியான குடும்பம் வலியக் கொடுக்க, வந்தவள். அவளோட அம்மா, அப்பா எவ்வளவோ தூண்டிப் பார்த்தும், தனிக்குடித்தனத்திற்கு இணங்காதவள். அதற்காகவே, தாய் வீட்டிற்குப் போவதைக் குறைத்துக் கொண்டவள். அண்ணியோடு, அவன் ‘அவர்கள்’ வீட்டுக்குப் போகும் போது, அந்த அத்தை, அண்ணியிடம், “புருஷனைக் கூட்டிக்கிட்டு இங்கே வாடி... அந்த சனியங்க வாடை வேண்டாம். நாங்க, ஒனக்கு தனியாய் வீடுகட்டி ஒன் புருஷனுக்கு ஒரு பலசரக்குக் கடையும் வச்சுக் கொடுக்கோம்!” என்று சரவணன் காதுபடவே பல தடவை சொல்லியிருக்காள். ஒரு வேளை சரவணன் தன் அம்மாவிடம் சொல்லி, அப்படியாவது வீடு இரண்டுபடட்டும் என்பது போல் நினைத்தார்களோ என்னவோ. அப்போதெல்லாம், அண்ணி, தன் அம்மாவுக்குக் காது கொடுக்க மறுத்தாள். சரவணனும், தன் அம்மாவிடம், அண்ணியின் தாய் வீட்டில், அங்கே தின்ற விதங்களைத்தான் சொல்லியிருக்கிறானே தவிர, திட்டிய விதங்களைச் சொன்னதில்லை. அது மட்டுமா? பட்டறைச் சட்டம் போல் இருந்த அண்ணன், பாரதம் படிக்கத் தேவையில்லாமல், எட்டாண்டுகளுக்கு முன்பு, பனைமரத்தில் நொங்கு வெட்ட, அதுவும் தனக்காகப் பனையில் ஏறி, அவன் கண் முன்னாலேயே கீழே விழுந்து, துள்ளத் துடிக்கச் செத்தார். அப்போது அம்மா கூட அவனை “பாவிப் பய மவனே... நீ ஏன் என் கண்மணி கிட்டே நொங்கு கேட்டே? நீ நொங்கு சாப்புடுறதுக்காகப் போனவனை சாவு சாப்பிட்டுட்டே”ன்னு மூன்று நாள் சேர்ந்தார் போல், விளக்குமாறு, செருப்பு, கை போன்ற பல்வேறு ஆயுதங்களால் அவனை அடித்தாள். அப்போதெல்லாம், அம்மாவைத் தடுத்து, “தோளுக்கு மேலே வளர்ந்த பிள்ளையை அடிக்கப் படாது” என்று அந்த ஆற்றாமையிலும், அவனுக்கு ஆறுதலாக வந்தவள் அண்ணி. ஒரு மாதம் கழித்து, “ஒனக்கு... பிள்ளையா குட்டியா? இந்த சொத்துகூட நமக்கு வேண்டாம். நம்ம வீட்டுக்கு வா” என்று பெற்றோர் சொன்ன போது, அவர்களைப் பிரிந்தோராய் கருதியவள் அண்ணி. எஸ்.எஸ்.எல்.ஸியுடன் தனது படிப்பை ‘ஏரக் கட்டிவிட்டு’, அவன், அண்ணனுக்குப் பதிலாய் ஏரைப் பிடிக்கப் போன போது, அதை அம்மா அங்கீகரித்த போது தடுத்தவள். அவன் கல்லூரியில் படிப்பதற்காக, தனது தங்க நகைகளை விற்றவள்... அவனை மட்டுமல்ல... இப்போ ‘கிசு கிசு’ படிக்கும் இந்த பி.காம். காரியை, அம்மா வயல் வேலைக்குத் துரத்திய போது, அவளைப் பள்ளிக்குத் துரத்திவிட்டு, ஆண்பிள்ளை போல், வயல்வேலைகளைப் பார்த்தவள். ஆண் பிள்ளை இல்லாத நிலத்தை ஆக்கிரமிக்க, சில வீராதி வீரர்கள், வில்லங்க ஆயுதங்களோடு வந்த போது, அவர்களை நேருக்கு நேராய் நின்று வாதாடி, ஊரில் வாதிட்டு, நிலத்தின் எல்லைகளைக் காத்தவள். இந்த சரவணனுக்கு, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம், எடுத்த எடுப்பிலேயே கிளாஸ் ஒன் ஆபீஸர் வேலை கிடைத்த போது “இந்தா பாருப்பா சரவணா... ஆபிஸருங்களுக்கு சம்பளம், சிகரெட்டுக்கு... கிம்பளம், வீட்டுக்குன்னு ஆகிப் போயிட்டதாப் பேசுறாங்க. நீ இன்னார் தம்பி... நியாயம் தவறமாட்டார்னு பேர் வாங்கணும்... சப்-ரிஜிஸ்டார், பத்திரத்துக்கு நூறு ரூபாய் வாங்குறது மாதிரியோ... சப்-இன்ஸ்பெக்டர் கொலைக்கு ஆயிரம் ரூபாய் வாங்குறது மாதிரியோ வாங்கப்படாது... அப்படி எப்பவாவது ஒனக்கு சலனம் வந்தால், ஆயிரம் வழக்குலயும், அரை டம்ளர் டீ கூடக் குடிக்காத அண்ணனோட கையும் அந்தக் கையால் அண்ணிக்கு அவர் கட்டுன தாலியும் இந்த படிப்புலயும், வேலையிலயும் விழுந்திருக்குமுன்னு நினைக்கணும். அப்போதான் நீ கீழே விழமாட்டே” என்று ‘ஒன்னை படிக்க வச்சேன் பார்’ மார்தட்டும் பாணியில் சொல்லாமல், ‘ஒன் அண்ணன் மூலம் எனக்கு ஒரு குழந்தை இருந்தால் எப்படி இருக்குமோ, அந்தக் குழந்தையாய் ஒன்னைப் பார்க்கேன்’ என்று சொல்லாமல் சொன்னவள். அந்த அண்ணியின் முக தரிசனம் முழுமையாய் கிடைக்க வேண்டும் என்ற பாசத்தோடு, குடும்பப் பொறுப்போடும், டில்லியில் இருந்து, பதவியுயர்வில் மாற்றலாகி வந்த மறுமாதமே, அதாவது மூன்று மாதங்களுக்கு முன்பு, தனியாக வீடு எடுத்து, அவர்களைக் கொண்டு வந்திருக்கிறான். அந்த அண்ணியை, வேண்டாத விருந்தாளியாக அல்ல, வேண்டப்படாத வேலைக்காரியாக அம்மா நினைக்கிறாளோ? இந்த அண்ணியும் என்கிட்ட சொல்லித் தொலைச்சால் என்ன? எப்படிச் சொல்லுவாங்க... நான் எப்போ கேட்டேன்...? இன்னைக்கு சாயங்காலம் வீட்டுக்குப் போனதும், முதல் வேலை... இதுதான். உரத்த சிந்தனையோடும், பலத்த வேகத்தோடும், ஒரு சாலையின் முனைக்கு வந்து, இன்னொரு சாலைக்கு, வலப்புறமாய் திரும்பினான். நேராகப் போகிற வண்டிகளுக்கு வழிவிட்டுத்தான், குறுக்கே திரும்பும் வண்டிகள் நின்று நிதானித்து போக வேண்டும் என்பது சாலை விதிகளில் ஒன்று. இதுவே மனித நடைமுறையாக இருந்தால், நாடு எப்போதோ முன்னேறியிருக்கும். எங்கே முன்னேற? அதோ லாட்டரிக்கடை... ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக ஆகும் உழைப்பில்லா முயற்சிக்கு உழைக்கும் பணத்தை வீணாக்குகிறார்கள். ராஜஸ்தான் பம்பர் குலுக்கலாம்... பூடான் கோடி குலுக்கலாம்... ஒரு காலத்தில் ஒரு ரூபாய் - ஒரு சீட்டு - ஒரு லட்சம் என்று இருந்தது. ஆக்கப் பணிகளுக்கு ஒரு ஏழையின் ஒரு ரூபாய் போவதில் தப்பில்லை. ஆனால் இப்போது, உழைப்பிற்குப் பதிலாய் ஊதாரித்தனந்தான் முன்னேறியிருக்கிறது... என்னமாய் ஏழை மக்கள்... துள்ளித் துள்ளி லாட்டரி அடிக்கும் லாட்டரி பையனையே பார்க்கிறார்கள். இது போதாது என்று பார்த்தால், டிரான்ஸிஸ்டர் செட்டில் கிரிக்கெட் வர்ணனை... ஒவ்வொருவரும், தனக்கு கிரிக்கெட் தெரியும் என்று மற்றவர்கள் நினைக்க வேண்டுமாம்... ‘எத்தன ஓவர்... எவ்வளவு ரன்... கபில்தேவ் பரவாயில்லையா... ஆமாம் கவாஸ்கருந்தான்’. ‘உழைப்புக்கு ஈடு இணை இல்லை’ என்று பஸ்ஸில் ஒரு விளம்பரம்... அதன் அடுத்த முனையில் லாட்டரி விளம்பரம்... என்ன நாடோ... என்ன மக்களோ... இந்த நாட்டில் இருந்து, லாட்டரிகளும், கிரிக்கெட்டும் துரத்தப்பட்டாலொழிய நாடு முன்னேறாது... ஆபீஸ்ல ஒவ்வொருவரும் பைலைப் பார்க்காமல் லாட்டரி ரிசல்டைப் பார்க்கான். அல்லது ஏழை மக்கள், தாமாய் வந்து சொல்வதைக் காதில் போடாமல், கமென்டரியை போடுறான். ஒரு வருஷத்துல எத்தனை நாளைக்குப்பா கிரிக்கெட் சண்டை? ஆமாம்... இது விளையாட்டுப் போட்டியல்ல... ஏதோ பாகிஸ்தானும், பாரதமும் மீண்டும் போருக்குப் போய்விட்டது போன்ற வினையான போட்டி. சரவணன் பதட்டப்படாமல், நல்லது கெட்டது என்று நாலையும் சிந்தித்தபடி, இடது காலை தரையில் ஊன்றி, ஒரு ‘பல்லவன்’ போவதற்காகக் காத்திருந்தான். அப்போது விசில் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். போக்குவரத்துக் காவலர் அவனை சைகை செய்து வரச் சொன்னார். சரவணன் வண்டியை விட்டு இறங்கி, அவர் பக்கமாய் அதை உருட்டிக் கொண்டு போய், அவரைப் பார்த்தான். “யெல்லோ லைனை எதுக்கு ஸார் கிராஸ் செய்தீங்க?” சரவணன் அப்போதுதான் அந்த லைனைப் பார்த்தான். யெல்லோதான். ஆனாலும், அந்த மஞ்சள் நிறம், அம்மா, அண்ணி முகங்களில் ஒரு காலத்தில் இருந்தது. இப்போது இல்லாதது போல் ஆனது. வழக்கமாக, அந்த டிரம்மைச் சுற்றி வராமல், அவன் வருவது புரிந்தது. அவன் மட்டுமல்ல, எல்லோருமே... எல்லோரும் ஒரு தப்பைச் செய்தால், அது ஜனநாயகமாய் இருக்கலாம். ஆனால் சட்ட நியாயமாய் இருக்க முடியாது. தப்புத்தான். இதுல ‘மஞ்சள் கோடு எங்கேய்யா இருக்குது’ன்னு கேட்பது விதண்டாவாதம். ஒரு வேளை... இப்படி எல்லா வண்டிகளும் திரும்பித் திரும்பியே அது அழிபட்டிருக்கலாம். சரவணன் ஸ்கூட்டரை ‘ஸ்டாண்ட்’ போட்டுவிட்டு, அவரை நெருங்கப் போனான். அதற்குள் ஒரு கார், அவன் திரும்பிய அதே இடத்தில் திரும்பியது. கான்ஸ்டபிள் விசில் அடித்தார். கார் நின்றது மாதிரி போனது. கான்ஸ்டபிள் விசில் அடித்தார். கார் நின்றது மாதிரி போனது. கான்ஸ்டபிள் கோபத்தோடு பின்னால் ஓடினார். பிறகு அந்தக் கார்காரரிடம் கெட்ட வார்த்தைகளை வாங்கிக் கொண்டவர் போல் நிமிர்ந்தார். விறைப்பாக ஒரு ‘சல்யூட்’ அடித்துவிட்டு, பின்புறமாய் நடந்தார். ஐ.ஏ.எஸ்ஸோ... ஐ.பி.எஸ்ஸோ, வேறு யாரோ... இதற்குள், இரண்டு சைக்கிள்கள் எதிர்திசையில் வந்தன. அவர் விசிலடித்தார். ஒருவழிப் பாதை. சைக்கிள்காரர்கள், கீழே துள்ளிக் குடித்து, மடித்துக் கட்டிய வேட்டிகளை பருவப் பெண்கள் போல் நாணி கோணி பாதம் வரைக்கும் இழுத்துப் போட்டபடி வந்தார்கள். அவர் தொப்பிக்கு மரியாதை கொடுக்கிறார்களாம்! போலீஸ்காரர், அவர்களிடம், காருக்கார டிரைவர் கொடுத்த கெட்ட வார்த்தைகளை விநியோகிப்பது போலிருந்தது. அவர்களோ, அவர் ஏதோ தங்களைப் பாராட்டுவது போல், அதற்கு தாங்கள் தகுதிப்பட்டாலும், புகழில் அடக்கம் வேண்டும் என்று அதற்கு அடங்கி நிற்பது போல், மேடையில் பாராட்டுக்குரியவர் பவ்யமாய் பார்ப்பது போல் பார்த்தார்கள். அந்தக் கான்ஸ்டபிள், தனது டயரியை எடுத்தார். காகிதங்களைப் புரட்டிப் பார்த்தார். பென்ஸிலை எடுத்தார். அதற்குள் அவர்கள், அண்டிராயர்களுக்குள் கைவிட்டு, ஆளுக்கு இரண்டு காகிதங்களை நீட்டுவது தெரியாமல் நீட்டினார்கள். எந்தக் காகிதம் ஜெயிக்கும் என்று சரவணன் வேடிக்கை பார்த்தான். டயரிக் காகிதமா... அசோக சக்கரம் பொறித்த காகிதமா... அசோக சக்கரத்தில் மூன்று சிங்கங்கள் நிற்குதே. சிங்கம் விடுமோ... ஜெயித்து விட்டது... காவலர், இப்போதாவது, தன்னைக் கவனிப்பார் என்று, சரவணன் அவரைப் பார்த்தான். அவரோ, கண்மண் தெரியாமல் ஓடிய ஒரு மண் லாரியைப் பார்த்து விசிலடித்தார். அது பெப்பே காட்டியபடி ஓடியது. பாவம்... அவரால் நம்பரைக் கூட ‘நோட்’ செய்ய முடியவில்லை. டயரியை எடுக்கப் போனால், அதற்குள் இருந்த சிங்க நோட்டுக்கள் கீழே விழுந்தன. அவற்றைப் பொறுக்கவே, அவருக்கு நேரம் சரியாக இருந்தது. சரவணன், பழையபடி அவரைப் பார்த்தான். அதற்குள் ஒரு சைக்கிள், ஒருவழிப் பாதையில் வரவில்லையானாலும், அதற்கு மட்டுமே ஒரு பாதை வேண்டும்... டபுள்ஸில் வரலாம்... அதுக்காக ஒரு பெரிய குடும்பமே வருவதா? அவர் தான் விடுவதா? பழையபடியும் டயரிக்கும், அச்சடித்த காகிதத்துக்கும் போர்... இரண்டவது ரவுண்டிலும் சிங்கக் காகிதம் ஜெயித்தது. சரவணனுக்கு அலுவலக நினைவு வந்தது. அவரை படபடப்பாய்ப் பார்த்தான். “ஸார்... மிஸ்டர்... ஒங்களத்தான்... முதலில் என்னை அனுப்புங்க...” போலீஸ்காரர், அப்போதுதான் அவன் மீது சிரத்தை எடுத்து வந்தார். “நான் செய்த தப்பு என்ன ஸார்?” “யெல்லோ லைனை கிராஸ் பண்ணிட்டு, என்னையும் கிராஸ் பண்றீங்களா?” “அப்போ ஒரு கார் போச்சுதே... அதை சல்யூட்டோட விட்டிங்க...” “யெல்லோ லைனை மட்டுந்தான் கார் கிராஸ் செய்தது... ஒங்க ஸ்கூட்டர்ல... பல்ப்ல... கருப்பு பெயிண்ட் இல்ல... அதுக்குத்தான் சார்ஜ் பண்ணப் போறேன்...” “அது ராத்திரிலதானே எப்படி ஏரியுதுன்னு தெரியும்...” “ஒங்களுக்கு அப்படியா? எனக்கோ எப்பவும் தெரியும்... நான் பகலில் பார்த்தால் தான்... நீங்க ராத்திரிக்குள்ள மாத்திடுவீங்க.” “அப்படியா... இப்போ நான் சீக்கிரமாய் ஆபீஸ் போகணும்... என்ன செய்யணுமுன்னு சொல்றீங்களா?” “ஒங்க கண்ணாலயே பார்க்கிறீங்க... என்கிட்டே கேட்டால் போலீஸ்காரன் வாயால் கேட்கமாட்டான்...” “அப்படியா! இந்த சரவணன் கேஸுக்குப் போவானே தவிர கேஷுக்கு போகமாட்டான்... உம்... எழுதுறதை எழுதிட்டு, மெமோ கொடுங்க... எப்போ கோர்ட்டுக்கு வரணுமோ... அப்போ வாரேன்... ஏன் யோசிக்கிறீங்க? என் பெயர் சரவணன்...” “போங்க ஸார்...” “சும்மா எழுதுங்க ஸார்... சத்தியமாய் கோர்ட்ல இதை, கன்டெஸ்ட் செய்ய மாட்டேன். நீங்க காசு வாங்குனதையோ, காருக்கு சல்யூட் அடிச்சதையோ சொல்ல மாட்டேன். ஏன்னால்... இப்போதெல்லாம் நான் பொய் பேசாவிட்டாலும், உண்மையை சொல்லாமல் இருக்கத் தெரிஞ்சிக்கிட்டேன்... சும்மா எழுதுங்க ஸார்... என் வரைக்கும் நான் வண்டி ஓட்டுனது தப்புத்தான்... தப்புக்குத் தண்டனை கிடைச்சால் தான் எனக்கும் சாலைவிதி தலைவிதி மாதிரி மனசுல நிற்கும்... உம்... எழுதுங்க... எனக்கும் மனிதாபிமானம் உண்டு... ஒங்களக் காட்டிக் கொடுக்கறதுனால இந்த வழக்கம் நின்னுடப் போறதில்ல. இந்த சமூகத்தை மாற்றாமல், ஒங்களை மாற்றுறது அர்த்தமற்றதுன்னு எனக்குத் தெரியும்...” போலீஸ்காரர், அவனை ஆழம் பார்த்தார். இதற்குள் பல சைக்கிள் கிராக்கிகள் தப்பிக் கொண்டிருந்தன. இவர் யார்? யாராய் இருப்பார்...? “எங்க ஸார் வேலை பார்க்கிறீங்க?...” “கேஸ் எழுதுங்க சொல்றேன்...” “தயவு செய்து போங்க ஸார்... இது பஸ்ட் வார்னிங்னு நினைச்சுட்டு திருப்தியோட போங்க... அடேய்... வண்டி... உன்னத்தாண்டா... நில்லுடா கம்மனாட்டி... ஒப்பன் வீட்டு ரோடா? நில்லுடா...” சரவணன், ‘ஒரு ஏழையை ஏன் திட்டுறீங்க... வேணுமுன்னால் கேஸ் எழுதுங்க’ என்று சொல்லப் போனான். கோளாரான சமூக அமைப்பில் ஏழைகள் தங்களோட தன்மானத்தை விலையாகக் கொடுத்தால் தான், சுதந்திரமாக நடமாட முடியும் என்பதை நினைத்தபடி ஸ்கூட்டரை உதைத்தான். |