உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல் 7 வசந்தா, ஜன்னலோடு ஜன்னலாகச் சாய்ந்து, அதற்குத் திரைச்சீலையாய் நின்றாள். கையில், ஒப்புக்கு ஒரு புத்தகம் இருந்தது. எதிர் வரிசை வீட்டின் இரண்டாவது மாடியில், அவனும், ஜன்னலில் சாய்ந்து நின்றான். அவன் கீழே பார்க்க, இவள் மேலே பார்க்க, ஒரே பரமானந்தம். செக்கச் செவேல் உடம்பில், வெள்ளை டி சட்டைப் போட்டு, அவன் அழகாகத்தான் இருந்தான். அவளுக்குத் திடீரென்று பயம் வந்தது. சமயலறைக்குள் இருக்கும் அண்ணி பார்த்து விடுவாள் என்றோ, தனக்குப் பின்னால், வெறுந்தரையில் வெறுமனே படுத்திருந்த அம்மா கண்விழித்துப் பார்த்து விடுவாளோ என்ற பயம் அல்ல. ஒருத்தியை அடக்கிவிடலாம். இன்னொருத்தியை ஏமாற்றிவிடலாம். அதுவல்ல அவள் பிரச்சினை. அவன், சிவப்புக் கைக்குட்டையை எடுத்து அவளைப் பார்த்து ஆட்டுகிறான். கண்களை, வலிப்பு வந்தவன் போல் வெட்டுகிறான். கடந்த ஒரு மாத காலத்தில், பலதடவை அவனை ஜன்னலோரம் பார்க்கிறாள். ஆனால், இன்றுதான் அவன் சைகை செய்கிறான். வசந்தாவுக்கு. சிவப்புத் துணி அபாயம் போலவும் தோன்றியது. அவனோ, பைத்தியம். பைத்தியம் என்று சொல்லுவது போல், தன் தலையை, அவள் தலையாக நினைத்து அடித்துக் கொள்கிறான். அவளுக்கு, அவனைப் பார்க்காமலும் இருக்க முடியவில்லை. அங்குமிங்கும் பார்த்தபடி, லேசாய். லேசாய். புத்தகத்தை எடுத்து ஆட்டுகிறான். அங்கே நூலால் உருவான துணி இங்கே துணி மாதிரி இருந்த நூல். இரண்டும் ஆடிக் கொள்கின்றன. முகங்களும் ஆட்டிக் கொள்கின்றன. திடீரென்று சத்தம் கேட்டு, வசந்தா திரும்பினாள். நிலைகுலைந்தாள். சரவணன் வந்து, ஓசைப்படாமல் பின்புறமாய் நிற்கிறான். உடனே அவள் கையில் இருந்த புத்தகத்தால், முகத்தை மூடிக் கொண்டாள். புத்தக விளிம்பு வழியாக, அண்ணனை நோட்டமிட்டாள். அவனோ, எந்தவித சலனத்தையும் காட்டிக் கொள்ளாமல், தன் அறைக்குப் போனான். வசந்தா தேறினாள். ஒருவேளை பார்த்திருக்க மாட்டானோ? பார்த்திருந்தால். இப்படி யாரும் போகமாட்டாங்களே. அதுவும் அண்ணன்... பைய பைய நடந்து, அண்ணனின் அறையை நோட்டம் விட்டாள். அவன், தலையில் இரு கை வைத்து, கட்டிலில் கால் பரப்பிக் கிடந்தான். வசந்தாவால் நிற்க முடியவில்லை. இதயம் வெடித்து வெளியே வரப் போவது போலிருந்தது. ஆனாலும், அவன் பேசாமல் இருந்தான். அவளுக்கு ஒரு நிம்மதி. அரை மணி நேரம் ஆனது. முன்னறைக்கு வந்தவனை, அப்போதுதான் பார்ப்பது போல், அண்ணி ஆச்சரியப்பட்டு நின்றாள். அம்மா, இன்னும் எழவில்லை. வசந்தா, எதுவுமே நடக்காதது போல் “என்னண்ணா. சீக்கிரமாய் வந்துட்டே? உடம்புக்கு எதுவும்...” என்றாள். அவனும், எதுவும் நடக்காததுபேரில் பதிலளித்தான். “ஒனக்காகத்தான் வந்தேன்... நீ... புத்தகமும் கையுமாய் இருந்ததுல அண்ணனுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? என் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி நீ நடந்துட்டே எனக்கு... இப்போ சந்தோஷம் தலைவரைக்கும் வந்துட்டு. உம். நல்ல புடவை ஏதும் இருக்குதா? கடையில போய் வாங்கணுமா?” “எதுக்குண்ணா?” “ஒனக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒரு காரியத்தைச் செய்யப் போறேன். கழுத்துல ஒரு செயின் கூட உண்டுல்ல? எடுத்துப் போட்டுக்கோ. அண்ணி, இந்தங்க சாவி, பீரோவைத் திறந்தால், நூறு ரூபாய் தெரியும். எடுங்கோ. அண்ணன் ரொம்ப ரொம்ப ஏழைம்மா. மீதிப் பணத்தை அடுத்த மாசம் தாரேன்... உம்... புறப்படு.” “எங்கண்ணா?” “எங்கண்ணான்னு சொல்லாதே... என்ன அண்ணான்னு கேளு. ஆமாம். நான் என்ன அண்ணன்? உம். இந்தப் புடவையே நல்லாத்தான் இருக்குது... புறப்படு...” “என்னப்பா இதெல்லாம்?” “சொல்றேன் அண்ணி. இவளை... அதோ எதிர் வீட்ல. இரண்டாவது மாடி வீடு இருக்கு பாருங்க. அங்கே, ஒரு பொறுக்கி இருக்கான். அவன் கிட்ட ஒப்படைச்சுட்டு வந்துடுறேன்... அடேயப்பா. இவ்வளவு சீக்கிரமாய் எனக்குப் பொறுப்பு தீர்ந்திடுமுன்னு நான் நினைக்கல. ஏய்... ஏய்... வசந்தா... புறப்படுறியா... இல்ல... நான் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளிக் கொண்டு போகணுமா?” வசந்தா நடுநடுங்கினாள். நான்கு பக்கமும் பார்த்தாள். அண்ணியை அப்போதுதான் மனுவி மாதிரிப் பார்த்தாள். அண்ணனைப் பார்க்க முடியாமல், கண்களைக் கைகளால் மூடினாள். சுவரிடம் போய், தலையை முட்டப்போவது போல் வைத்துக் கொண்டு கேவினாள். விம்மினாள். சுவர் வழியாய் நீரோடியது. சரவணன், அவளை நோக்கி நடந்தான். வாய் தானாய் பேசியது. “இந்த நடிப்பெல்லாம் இனிமேல் வேண்டாம். இந்த வீட்ல நாங்க கெளரவமாய் வாழ விரும்புறோம்... உம்... எழுந்திரு... நீ போகாட்டால், நான் போவேன்... திரும்ப முடியாமல் போவேன்! ஒன்ன கொலை செய்துட்டு போவேன்.” அண்ணி இருவருக்கும் இடையே வந்தாள். “ஒரு பெண்ணை. அவள் எவ்வளவுதான் மோசமானவளாய் இருந்தாலும் அடிக்கப் போறது அநாகரிகம்...” “நான் அடிக்கப் போகல... அணைக்கிற இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன். அண்ணி. நீங்களே கேளுங்க... ஒரு வேளை, அண்ணன் கூட வாரது அவமானமுன்னு நினைச்சால், அவளே போகட்டும். கேளுங்க அண்ணி. அவள் போகப் பேறாளா? நான் போகட்டுமா?” இதற்குள் சத்தம் கேட்டு, தாய்க்காரி முத்தம்மா எழுந்தாள். ஒன்றும் புரியாமல் கண்ணைக் கசக்கினாள். அண்ணிக்காரி அழாக் குறையாய் பேசினாள்: “இந்த மாதிரி வருமுன்னுதான். நான் அவள் கிட்டே... எத்தனையோ தடவை படிச்சுப் படிச்சுச் சொன்னேன். ‘இப்போதாம்மா இந்தக் குடும்பம் தழைக்குது. ஒன்னால, எல்லாம் போயிடப் படாதும்மா.. மெட்ராஸுக்கு வந்ததால. நாம் மானத்துக்குப் பயப்படக் கூடாதுன்னு அர்த்தமில்லம்மா’ன்னு சொல்லித் தொலைச்சேன். என் பேச்சைக் கேட்டால் தானே? ஒன் கிட்ட கூட சொல்லாமச் சொன்னேன். நீயும் புரிஞ்சுக்கல...” அழுது கொண்டிருந்த மகளையும், அசையாமல் நின்ற மகனையும், உபதேசம் செய்யும் மருமகளையும் மாறி மாறிப் பார்த்த முத்தம்மாவும் அழுதாள். அழுகையோடு நிற்காமல், அழுகிப் போனவள் போல் ஒப்பாரி போட்டாள். “ஊர்ல. இருந்து புறப்படுறதுக்கே யோசிச்சேன். இப்டில்லாம் வருமுன்னு எனக்குத் தெரியும். அப்பாவிப் பொண்ண இப்படியாடா மிரட்டுறது? அவளோட அப்பா இருந்தால், இப்படி மிரட்டுவியா? நான் கைகால் கதியாய் இருந்தால், இப்படி மிரட்டுவியா? அடிக்கடி மயினியும், கொழுந்தனும் காதைக் கடிச்சபோதே எனக்குத் தெரியும். ஏய். வசந்தா எழுந்திருடி. நாம ஊரைப் பார்த்துப் போவோம். இவள். நம்ம ரெண்டுபேரையும் இருக்க விட மாட்டாள்...” தங்கம்மா, சமயலறைக்குள் போய்விட்டாள். அங்கே, அவள் கேவுவது, சரவணனுக்கு லேசாய் கேட்டது. அவன், வசந்தாவிடம் வந்தான். காலால், அவளை லேசாய் உதறினான். பிறகு, அமைதியாய் கேட்டான். “உம். எழுந்திரு ஒங்கம்மாவை. ஆமா. ஒனக்குத்தான் அம்மா, ஒன் குடியையும் கெடுத்த அம்மா. எங்கம்மா... அதோ, சமையலறைக்குள்ளே அழுதுட்டு இருக்காள். ஒங்க அம்மாவையும் கூட்டிட்டுப் புறப்படு. நான். அவன் காலுல விழுந்தாவது, ஒன்னை ஏத்துக்கச் சொல்றேன்...” திடீரென்று வசந்தா, அண்ணனின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தாள். அவன் குதிகால்களை, கைகளால் பிடித்தபடி, “தெரியாம அண்ணா... தெரியாம அண்ணா”" என்று முனங்கினாள். அவன் அதட்டினான். “என்னது தெரியாம? உம். சொல்லு... அவனோட தனியா எங்கேயாவது போனியா?” “சத்தியமாய் இல்லண்ணா...” “அவன் பேரு தெரியுமா?” “தெரியாதுண்ணா...” “எங்கே வேலை பார்க்கிறான்னு...” “தெரியாது...” “அவன், ஒரு அசல் பொறுக்கி, பல பெண்களோட சுத்துறவன், ஒனக்குத் தெரியுமா?” “தெரியாது. இன்னைக்குத்தான்...” “துவக்க விழாவா?” வசந்தா, அவன் கால்களை விடவில்லை. “காதல்னா... ஒனக்கு என்னென்னு தெரியுமா? கண்டதும் காதலுன்னு எதுவும் இல்லை. அப்படி இருக்கதாய் யாரும் சொன்னால், எழுதினால், அவங்களை ஒரே வெட்டாய் வெட்டணும். வெட்டுற வெட்டுல ஆள் தேறப்படாது. ஒரு ஆணும், பெண்ணும் பழகுறது தெரியாமல் பழகி, தான் ஆண் என்றோ, பெண் என்றோ பிரக்ஞை இல்லாமல், பேசுவது தெரியாமல் பேசி, காலத்தால், ஏற்படுகிற நட்புதான் காதலாய் மாறும். இதில், காதல் இன்ஸிடெண்ட். இந்த நட்பு காதலாய் மாறணுமுன்னும் கட்டாயமில்ல. காதலிக்காமலே, எத்தனையோ ஆண்பெண் நட்பு, நீங்க நினைக்கிற புனிதக் காதலை விட, ஆயிரம் மடங்கு அழுத்தமானது. நேயமானது. மகாத்மா காந்தியை, மீராபென் காதலிக்கவா செய்தாள்? இவங்க நட்புக்கு இணையாய் எந்தக் காதலாவது நிற்க முடியுமா? விவேகானந்தரை, நிவேதிதா காதலிக்கவா செய்தாள்? நான் ஒன்கிட்ட இவங்கள உதாரணமாய் சொல்றேன் பாரு. என் தப்புத்தான். ஒனக்கு... ஸில்க் ஸ்மிதாவையும், கிராஜுவேட்டாய் இருந்ததுனால அமிதாப் பச்சனையுந்தான் சொல்லணும்... ஆனால் எனக்குத் தெரியாதே...” வசந்தா, தலையை ஆட்டாமல், உடம்பை அசைக்காமல் கிடந்தாள். சரவணனுக்கு அவளைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. கோபத்தைக் குறைத்தபடி பேசினான். “உண்மையான காதலுக்கு உட்படுறவங்க... ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கணுமுன்னு பழக மாட்டாங்க. அவங்களுக்கு. பழக்கத்துலதான் காதல் வரும். காதலே ஒரு பழக்கமாகாது. ஆனால் உனக்கு. நீ. காதலிக்கணுமுன்னே அவனைப் பார்த்தே... அவன். ஒன்னைக் கற்பழிக்கணுமுன்னே பார்க்கான். அவனோட நீ பழகுனது இல்ல. பேசினது இல்ல. அப்படியும் நீ அவனைப் பார்க்கணுமுன்னால், அது உள்ளத் தாகம் இல்ல. உடல் தாகம். இப்படிப்பட்ட நீ அவனையே கல்யாணம் செய்தாலும், அதற்குப் பிறகும் எவனையாவது பார்ப்பே. அதை காதலுன்னும் சொல்லிக்குவே...” முத்தம்மா, சத்தம் போட்டாள். “என்னடா. தலைகால் புரியாமல் நிக்கே... சின்னப் பெண்ணை இப்டியா மிரட்டுறது? எம்மா. தங்கம். நீ வந்தால் தான் தீரும்...” தங்கம்மா, கண்களைத் துடைத்தபடி வந்தாள். “ஏய் வசந்தா. இனிமேல் அவனைப் பார்ப்பியா?” “பார்க்கமாட்டேன் அண்ணி. பார்க்க மாட்டேன். அண்ணாகிட்ட சொல்லுங்க அண்ணி!” சரவணன் கத்தினான். “அந்தக் கதை வேண்டாம். நானே கொண்டு விடுறேன். எழுந்திரு...” “அண்ணி. அண்ணி. ஒங்க பேச்சைக் கேளாதது தப்புத்தான். தப்பே தான்...” “துடிக்காதப்பா. ஒன்னோட நேர்மையும், ஒங்கண்ணாவோட நியாயமும்... இந்தக் குடும்பத்து மானத்தை காப்பாற்றிட்டு. இல்லன்னா, இப்போ வாரவனா நீ.? பெண்களுக்கு சபலம் வரத்தான் செய்யும். அப்புறம், ஒரு நாளைக்கு, அப்படி வரக்கூடாதுன்னு ஒருத்தி நினைச்சிட்டால், அப்புறம் அந்த இழவு வரவே வராது. வசந்தாவை நாம இப்போ நம்பலாம்...” சரவணன், அண்ணியை ஒரு மாதிரி பார்த்தான். அவள், கண்களைத் தாழ்த்திக் கொண்டாள். பிறகு அவன், விரக்தியின் விளிம்பில் நின்று பேசினான். “எப்படியோ போய்த் தொலையட்டும். இந்த மாதிரி அம்மா இருக்கையில. இவள், இன்னும் கெட்டுப் போகாமல் இருந்ததே பெரிய காரியம். இவள் கெட்ட கேட்டுக்கு ஒரு ஐ.பி.எஸ். ஆபீஸர். அதாவது சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் இல்ல. அதுக்கும் மேல், மேலான போலீஸ் அதிகாரி... கல்யாணம் பேசிட்டு வாரேன் அண்ணி.” “வயசானவன் எதுக்குப்பா...” “அய்யோ. அய்யோ. வயசானவன் இல்ல. என் வயசுதான். ஆனால் பெரிய போலீஸ் அதிகாரி. வேற யாருமில்ல. முன்னால, நம்ம வீட்டுக்குக் கூட வந்திருக்கான். ராமசாமின்னு பேரு...” “அடடே. ராமசாமியா? எங்க அம்மா வழில, அவன் சொந்தம்...” “இன்னைக்கு... அவனே வந்து கேட்டான். வலியக் கேட்டான். சரின்னு தலையாட்டிட்டு வாரேன்... இவள் என்னடான்னா எதிர்வீட்டுப் பயல்கிட்ட தலையை ஆட்டுறாள்...” “சரி விடு. அதையே சொல்லிச் சொல்லிக் காட்டாதே. எப்போ கல்யாணத்தை வச்சுக்கலாம்?” “அதை இப்போவா பேசுறது? இவள் தங்கைன்னா, அவன் எனக்குத் தம்பி, தங்கைக்குப் பிரியம் காட்டறதுல, தம்பிக்குத் துரோகம் பண்ணிடப்படாதேன்னு பாக்கேன்.” “சின்னப் பிள்ளை மாதிரி உளறாதேப்பா. ஆறு, குளிக்கிற இடத்துலதான் சுத்தமாய் இருக்கணும். ஒரு பெண்ணு குடும்பத்துக்கு வந்த பிறகுதான், புருஷன் அவளைக் கவனிக்கணும்...” அண்ணனை, மெளனமாகப் பார்த்த வசந்தா சொல்ல வேண்டாம். சொல்ல வேண்டாம். அண்ணா எனக்கு. அந்த ஐ.பி.எஸ். ஆபீஸர்தான் வேணும் என்று சொல்ல நினைத்தாள். எப்படிச் சொல்வது? எப்படியோ, வீடு அமைதிப்பட்டது. அவர்கள் அமைதிப் படாமலே, அது அமைதிப் பட்டது. சரவணன், தனது அறைக்குள் போனான். அயர்ந்து படுத்தான். அப்படியே தூங்கிவிட்டான். துக்க பாரம் விழிகளை அழுத்த உழைப்புப் பாரம் கட்டிலை அழுத்த, அரை மயக்கமானவன் போல் கிடந்தான். இரவில், அண்ணி சாதத்தட்டோடு வந்தாள். அங்கேயே தூக்கக் கலக்கத்தோடு சாப்பிட்டுவிட்டு, துக்கக் கலக்கத்தோடு படுத்துக் கொண்டான். மறுநாள், காலையில் கண்விழித்து, அப்படியே உட்கார்ந்திருந்தான். அலுவலகம் போகிற நேரம்கூட வந்து விட்டது. அண்ணி வந்தாள். “ஏதோ. கோர்ட் நோட்டிஸாம்... நேற்றே வந்தது. ஒன்கிட்ட கொடுக்க மனசு வரல...” சரவணன் படித்தான். உடம்பை நெளித்தான். அவனுக்கு நண்பன் என்று சொல்லிக் கொண்ட ஒருவன், அதிலும் அதிகாரி நண்பன், அந்த வீட்டிலுள்ள நாற்காலி மேஜைகளையும் பீரோவையும், ஸோபா ஸெட்டையும், ஒரு கம்பெனியில் மாதத் தவணையில் வாங்கிக் கொடுத்திருந்தான். சரவணனும் மாதாமாதம் அந்த நண்பனிடமே தவணைப் பணத்தைக் கட்டிவிடும்படி ரூபாய் கொடுத்தான். அவன் கட்டியிருப்பான் என்றுதான் நினைத்தான். இப்போது, அந்தக் கம்பெனி திவாலாகி, நீதிமன்ற ரிஸிவர் எடுத்திருக்கிறாராம். சரவணன் பணமே கட்டவில்லை என்று நோட்டீஸ் வந்திருக்கிறது. பணத்தை வாங்கியவன் மாற்றலாகி, இப்போது போபாலில் இருக்கிறான். மனித நாகரிகம் கருதி, நம்பிக்கையின் அடிப்படையில், அவனிடம் ரசீது கேட்காதது எவ்வளவு தப்பாய்ப் போயிற்று? என்ன உலகம்? என்ன மனிதர்கள்? இனிமேல் நட்புக்கே ரசீது வாங்க வேண்டுமோ? அண்ணி, அன்போடு கேட்டாள். “என்னப்பா... முகம் ஒரு மாதிரி ஆகுது?” “எதைத் தாங்கினாலும் துரோகத்தைத் தாங்க முடியல அண்ணி. நம் வீட்ல இப்போ இருக்கிற சாமான்களை ஒரு நல்லவன் தவணையில் வாங்கிக் கொடுத்தான். அவன் கிட்டயே, மாதாமாதம் பணத்தைக் கொடுத்தேன். உடனே கெட்டவனாய் ஆயிட்டான். போகிற போக்கைப் பார்த்தால், இன்னும் இரண்டு நோட்டிஸ்களையும் எதிர்பார்க்கேன். அவனும் கட்டியிருக்க மாட்டான். நோட்டீஸ் வரும். வீட்டையும் காலி செய்யும்படி வீட்டுக்காரன் நோட்டிஸ் விடப்போறான். வீட்டுல துரோகம், நட்புல துரோகம். ஆபீஸ்ல துரோகம். எத்தனை துரோகத்தை ஒருத்தனே சமாளிக்கறது அண்ணி?” “ஆபீஸ்ல என்னப்பா?" “நான். ஆபீஸ்ல ஒழுங்காய் இருக்கேன். அதுதான் பிரச்சினையாய் வளருது. ஒரு நாளைக்கு விளக்கமாய் சொல்றேன்.” “கவலப்படாதேப்பா. நேர்மை வேற. கடவுள் வேற இல்ல. கடவுள் கைவிட மாட்டார்... ஒன் அண்ணாவோட தர்மம் ஒன்னை உயர்த்திச்சு... ஒன்னோட தர்மம் வசந்தாவைக் காப்பாற்றிட்டு... இதைவிட என்ன வேணும்? பேசாமல், இன்னைக்கு ஏதாவது ஒரு கோயிலுக்குப் போயிட்டு வா. எல்லாப் பிரச்சினையும் தானாய் தீரும்!” சரவணனுக்கு, அண்ணி சொல்வது சரியாகப்பட்டது. அங்கேயே அப்போதே அலுவலகத்திற்கு டெலிபோன் செய்தான். அன்னம்தான் எடுத்தாள். “நான். சரவணன். நீங்க அன்னமா? இன்னைக்கு ஆபீஸ் வர மாட்டேன் ஏ.ஓ.கிட்ட சொல்லிடுங்க...” என்று சொல்லிவிட்டு, போனை வைத்தான். அவனையே பார்த்தபடி நின்ற அண்ணி போய்விட்டாள். சரவணன், கோயிலுக்குப் புறப்படப் போனான். பிறகு யோசித்தான். என்ன கோவில்... என்ன குளம்... உமாவுந்தான் கோயிலுக்கு போகிறாள். செளரிராஜன் வீட்டிலேயே பூஜை செய்கிறாராம். பத்மா பஜனை கூடப் பாடுவாளாம். காண்டிராக்டர், வீட்டுக்குள்ளேயே சின்னதா. நல்லதா கோயில் கட்டியிருக்கிறாராம். இந்தப் பெரிய மனிதர்கள் வழிபாட்டை ஏற்றுக் கொள்ளும் ஆண்டவன், இந்தச் சின்னவனின் வழிபாட்டை ஏற்றுக்கொள்ள, அந்த ஆண்டவனுக்கு ஏது நேரம். சரவணன் படுத்துக் கொண்டான். இரண்டு மணிநேரம் எழவில்லை. எழுந்தபோது, அவன் கண்களில் வசந்தா தென்பட்டாள். அம்மா, எதுவுமே நடக்காதவள் போல், வெற்றிலை பாக்கை இடித்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு வீடே ஆபீஸ் மாதிரி தெரிந்தது. சரவணன் எழுந்தான் வீட்டை விட, அலுவலகமே தேவையில்லை என்று புறப்பட்டான். |