சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல்

9

     அலுவலகத்தின் நேரம், கான்டிராக்டரின் கையாட்களாக மட்டுமல்ல. காலாட்களாகவும் நடப்பதுபோல் தோன்றும் செளரி-பத்மா-உமா கம்பெனிக்கும். ஒரு சில உதிரி மனிதர்களுக்கும், அவசர அவசரமாகவும், சரவணனுக்கு ஆமை வேகத்திலும், அன்னத்திற்கு, நத்தை வேகத்திலும் கழிந்தது. மாலை, ஐந்து மணியைக் கடந்து, அதற்கு மேலும் நீண்டு கொண்டிருந்தது. ஆனாலும், அந்த கான்டிராக்ட் ஆட்கள் போகவில்லை. செளரிராஜன், மேஜையை தாளம் போட்டபடியே உள்ளே பார்த்தார். ‘இன்னும் செளமி நாராயணனுக்கு, லெட்டர் போடாமல் இருக்கான். எப்போ போடுவான்? கல்லு மாதிரி இருக்கான். எதையும் கண்டுபிடிக்க முடியல. இந்த ஆபீஸ்ல பழமும் தின்னு, கொட்டையும் போட்டவன் நான். என்னோட பிரண்டையா நீ எடுக்கப் பார்த்தே? ஒன்னையே நான் எடுக்கேன் பார். ஒன் கையில இருக்கிற காகிதத்தோட ஒவ்வொரு எழுத்தும். டில்லியில் டைப் அடிக்கதுக்கு முன்னாலயே எனக்குத் தெரியுமாக்கும்...’

     காத்துக் காத்து, ஏதோ வேலை இருப்பது போல் பாசாங்கு செய்த செளரி, இரண்டு பெண்டாட்டிக்காரன் மாதிரி, பத்மா-உமா சகிதமாய் போய்விட்டார். அவர்கள் போவதற்காகவே காத்திருந்த அன்னம், சரவணனின் அறைக்குள் வந்தாள். அவனைப் பார்க்கவே, அவளுக்குப் பாவமாக இருந்தது. அடியும், தலையும் அச்சடித்தது மாதிரி இருந்தவரு. இப்போ நச்சடித்தது மாதிரி ஆயிட்டாரே. பாவிங்க... இப்படி ஆக்கிட்டாங்களே. சாப்பிடக்கூட மறுத்திட்டாரே. கடவுளே... கடவுளே... நாங்க என்னமோ இருக்கோம். நீ எப்படி இருக்கே? இருக்கியா?

     சரவணன் விழியுயர்த்தினான். வாயசைக்கான். அன்னம் உட்கார்ந்தாள்.

     “ரெடியா மேடம்...”

     “ரெடி ஸார்...”

     “டெமி அபீஷியல். டி.ஓ. லெட்டர். என் பேரு. பதவியை போட்டுக்கங்க. உ.ம். சொல்லட்டுமா?”

     “எஸ்... ஸார்.”

     “ஐ ஹியர்பை டெண்டர் மை ரிசிக்னேஷன்...”

     “ஸார்... ஸார். ராஜினாமாவா செய்யப் போறீங்க? ராஜினாமாவா?”

     “ஆமாம்மா.. என்னால வேலை பார்க்க முடியாது. நாளையில் இருந்து ஆபீஸுக்கே ஒரு பெரிய கும்பிடு. உம். எடுத்துக்கங்க...”

     “நான் எழுதமாட்டேன் ஸார்... குறிப்பெடுக்க மாட்டேன் ஸார்... வேணுமுன்னால் மெமோ கொடுங்க ஸார்...”

     அன்னத்தின் கண்கள் கலங்கின. அப்புறம் அவற்றில் இருந்து, நீர் சொட்டுச் சொட்டாகி, வெள்ளைத் திரிபோல், கன்னங்களில் பாய்ந்தன. வாயில் விம்மல்கள், வெடிவெடியாய் வெடித்தன. முகத்தைத் திருப்பிக் கொண்டாள். பிறகு எழுந்து, சுவர் பக்கமாய் நின்றபடி கேவினாள். பின்னர் அடம்பிடிக்கும் குழந்தைபோல், சரவணனை, விம்மலுக்கு ஒரு தடவை பார்த்துக் கொண்டாள். சரவணன், தலை நிமிர்த்தினான். எழுந்து போனான். என்ன செய்கிறோம் என்று தெரியாமல், அவள் கையைப் பிடித்திழுத்து, நாற்காலியில் உட்கார வைத்தான். இருக்கையில், மீண்டும் உட்கார்ந்தபடியே தழுதழுத்த குரலில் ஒப்பித்தான்.

     “ஒங்களோட அன்புக்கு அடிபணிகிறேன் மேடம். எனக்கும். வேலையை விட்டுவிட்டால், அடுத்த சாப்பாடு நிச்சயமில்லே. வயது வந்த தங்கையைக் கரையேத்த முடியாது. முடியக் கூடியது. என் அண்ணி பழையபடியும் வயல் வேலைக்குப் போறதுதான்... ஆனால் அப்படி ஒரு நிலைமையை என்னால தாங்கிக்க முடியுமா என்கிறது நிச்சயமில்ல. இவ்வளவையும் மீறி, நான் ராஜினாமா செய்யுறேன்னால், என் மனம் படுற பாட்டை நீங்க புரிஞ்சுக்கலாம். பிளீஸ். நான் சொன்னத எடுங்க ஐ ஹியர்பை உம் எடுங்க.”

     “எடுக்க முடியாது ஸார்.”

     “அப்படின்னா... போங்க...”

     “போக முடியாது ஸார்...”

     “சரி நானாவது போறேன்...”

     “போக விடமாட்டேன் ஸார்...”

     எழுந்து, இரண்டடி நடந்தவனை, அன்னம் வழி மறித்தாள். அவனோ, அவளை தர்மசங்கடமாகப் பார்த்தான். அவள் காட்டிய பாசம் அவனை உலுக்கத்தான் செய்தது. உலுங்கிய உள்ளத்தை, மூச்சில் பிடித்து வைத்து, ஒரே மூச்சாய்ப் பேசினான்.

     “இந்த ஆபீஸ்ல என்னால குப்பை கொட்ட முடியாதும்மா...”

     “குப்பைக் கூளங்களை அப்படியே விட்டுடப்படாது. நீங்க கொட்டாட்டால், வேற யாராலும் முடியாது.”

     “கேட்கதுக்கு சந்தோஷமாகத்தான் இருக்கு. ஆனால்...”

     “இந்த அக்கிரமத்தை மேல் அதிகரிகளுக்கும், மந்திரிக்கும் தெரிவிக்கலாமே. அதுவரைக்கும் கான்டிராக்டரை உள்ளே விடாமல் பார்த்துக்க முடியாதா ஸார்?”

     “அதையும் யோசித்தேன். இது அவசர அவசரமான காலம். எந்த ஆபீஸர் அநியாயமாய் நடந்தாரோ, அவர்கிட்டயே நான் எழுதுன புகார் தீர்ப்புக்குப் போகும். அப்புறம் நான்தான் தீர்ந்து போவேன். இப்போவாவது. மரியாதையாய் வேலையை விட்டுட்டு, வேற வேலை தேடலாம், அது இல்லாமல், நான் எதையோ எழுதப் போய், அதையே சாக்காக்கி, அவங்க என்னை டிஸ்மிஸ் செய்தால், எனக்குச் சேரவேண்டிய பணமும் சேராது. வேற வேலையும் கிடைக்காது. அதோட. இந்த அற்ப மனிதர்கள் கண்ணுல விழிக்க விரும்பல.”

     அன்னம் கொதித்துக் கேட்டாள்.

     “மூன்றே மூன்று பேரை வெச்சு ஏன் ஸார் ஆபீஸ் ஆட்களை தீர்மானிக்கிறீங்க? ஒங்களுக்காக காலையில், எத்தனை பேர் கான்டிராக்டரை முரட்டுத்தனமாய்ப் பார்த்தாங்க தெரியுமா? செளரிராஜன் தானா ஒங்களுக்குப் பெரிசாத் தெரியும்? தங்கமுத்து இல்லையா... சிதம்பரம் இல்லையா இவங்க போகட்டும். நான் எதுக்கு ஸார் இருக்கேன்? உட்காருங்க ஸார். கடைசில பெரிசாய் இருக்கிற ஆபீஸருக்குத் தெரியப்படுத்துங்க ஸார்.”

     “நீங்க நினைக்கறது மாதிரி இது சின்ன விஷயம் இல்ல மேடம். மனுப் போட்டதில் இருந்து, அது முடியுறது வரைக்கும் மனநிம்மதியில்லாமல் போயிடும். இந்த டிபார்ட்மென்டை எதிர்த்து நிற்கிறதுக்கு ஆள் பலமோ. பண பலமோ.. எந்தப் பலமோ.. என்கிட்ட இல்லை. நல்லவனுக்கு அடையாளம், சொல்லாமல் போகிறதுதான்...”

     அன்னத்தின் கண்களில் ஒரு ஒளி. அவனை, நேருக்கு நேராய்ப் பார்த்தாள். தீர்க்கத்தோடு தீர்மானமாய்ப் பேசினாள்.

     “ஒரு வேளை கான்டிராக்டரை உள்ளே விடாமல். அதனால சஸ்பெண்டாகி, போராட்டம் முடியுறது வரைக்கும் பாதிச் சம்பளந்தானே வருமுன்னு யோசிக்கிறீங்களா? அதை விட வேற வேலைக்கே போயிடலாமுன்னு நினைக்கிறீங்களா?”

     சரவணன் தலையாட்டினான்.

     “வீட்டுக்கு வீடு வாசல்படிதான் ஸார். ஒங்களை மாதிரி நேர்மையானவங்க எங்கே போனாலும் வீம்புதான். அதனால. தெரிஞ்ச வம்பு தெரியாத வம்பை விட நல்லது. ஒங்களுக்கு அப்படி ஒரு நிலைமை வந்தால், நான் இருக்கேன் ஸார். என்னோட கல்யாணத்துக்காக பத்தாயிரம் ரூபாய் சேர்த்து வச்சிருக்கேன். தொளாயிரம் ரூபாய் சம்பளத்துல, முந்நூறு ரூபாய் எனக்குப் போதும். மாதா மாதம் அறுநூறு ரூபாய் தந்துடுறேன். கல்யாணப் பணத்தையும் தாறேன். ஒங்களோட தன்மானப் போராட்டத்தை விட எனக்குக் கல்யாணம் முக்கியமில்லை. ஏன் ஸார் யோசிக்கிறீங்க?”

     அன்னத்தையே வெறித்துப் பார்த்த சரவணன், அவளின் அன்புப் பிரவாகத்தில் கரைந்து போனான். ஆனாலும், அவன் அவளை சிரமத்திற்கு உள்ளாக்க விரும்பாததுபோல், தழுதழுத்த குரலில் பதிலளித்தான்.

     “ஓங்களோட தாயுள்ளத்துக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலம்மா. இந்த ஒரு வார்த்தையே போதும். ஆனால், அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு, ஒங்க உதவியை நான் ஏற்றுக்கிட்டால், ஊர் என்ன பேசும், நம்மோட உறவைப் பத்தித்தான் என்ன நினைப்பாங்க. ப்ளீஸ் டிக்டேஷன் எடுங்க...”

     “ஊரோ, ஆபீஸோ பேசுனால் பேசட்டுமே ஸார். ஊருக்குப் பயப்படனுமுன்னு நீங்க நினைச்சால், என்னை வேணுமின்னால் உறவாக்குங்க. இதோ என் கழுத்து. நீங்க எப்போ வேனுமானாலும் ஒரு மஞ்சள் கயிறைப் போடலாம்...”

     சரவணன் திடுக்கிட்டு எழுந்தான். அவளையே உற்று உற்றுப் பார்த்தான். அவளோ, வரம்பு மீறிப் பேசிவிட்டதை உணர்ந்தவள் போல், நெற்றியை கைகளால் தேய்த்தாள். இருவருக்கும் இடையே, எத்தனையோ ஏற்றத்தாழ்வுகளைக் கண்டவள் போல், தவித்தாள். அவனின் நேரடிப் பார்வையைச் சந்திக்கும் தைரியமில்லாமல், முகத்தை வேறுபுறமாகத் திருப்பப் போனாள். பிறகு அவனை, மேல் நோக்காய்ப் பார்த்து, “ஸாரி ஸார். தெரியாமல் பேசிட்டேன் ஸார். என்னோட கல்யாணத்துக்காகப் பேசல ஸார். சத்தியமாய் ஒங்களோட எதிர்காலத்தை நினைச்சு... தத்துபித்துன்னு உளறிட்டேன் ஸார்... இனிமேல் அப்படிப் பேசமாட்டேன் ஸார்... டிக்டேஷனும் எடுக்க மாட்டேன் ஸார்” என்றாள்.

     சரவணன், அன்னத்தை ஆடாது பார்த்தான். அசைந்து அசைந்து பார்த்தான். இவளுக்கு எவ்வளவு பெரிய மனசு!... எனக்காக எப்படியெல்லாம் துடிக்காள்! அலுவலக மரங்களின் உச்சாணிக் கிளைகளில், அணில் கடித்த பழங்களையும், பிஞ்சில் பழுத்த பழங்களையும் பிடுங்காமல் பார்த்த எனக்கு இவ்வளவு நாளாய். இந்த வேரில் பழுத்த பலா பார்வைக்குப் படாமல் போய்விட்டதே? இப்போ, இவளை இவளையே. இவளை மட்டுமே... நாள் பூராவும் பார்த்துக் கொண்டே இருக்கணும் போல் தோணுதே இதுக்குப் பெயர்தான் காதலோ... வசந்தாவிடம் சொன்னதுபோல், காதல் பிரக்ஞை இல்லாமல் வருவது. எனக்கும் வந்துட்டுதோ...!

     சரவணனுக்கே ஆச்சரியம். ஏதோ நடந்தது போலிருந்தது. கையை நீட்டியது போலிருந்தது. அவள், தன் மார்பில் தானாய் சாய்ந்தாளா. அவனாய் சாய்த்தானா? அவனுக்கும் புரியவில்லை. அவளுக்காவது தெரியுமா என்று அறிவதுபோல், தன் மார்புக்குள் அடைக்கலமானவளைப் பார்க்கிறான். அவள், ‘கண்மூடி’தனமாய் கிடக்கிறாள்.

     திடீரென்று டெலிபோன் ஒலி.

     சரவணன், அவளை மென்மையாய் விலக்கிவிட்டு, ரிஸீவரை எடுத்தான்.

     “யாரு. வசந்தாவா? அண்ணி பேசணுமா? கொடு. உம். என்ன அண்ணி. வசந்தா மாறிட்டாளா? அந்தப் பயலுக்குச் செருப்பைத் தூக்கிக் காட்டினாளா? குட். போலீஸ் அதிகாரிதான் வேணுமா? என்ன. வசந்தாவே என்கிட்டச் சொல்லச் சொன்னாளா? சரி. நான் அவன்கிட்ட உளறல... அப்புறம் அண்ணி. ஒங்க வீட்டுக்கு, ஒங்க தங்கையை எனக்குக் கொடுக்கிறதாய் எழுதிட்டிங்களா? இன்னும் எழுதலியா? வேண்டாம். வீட்ல வந்து விவரமாய் சொல்றேன். டெலிபோன்ல பேசிப் பழக்கம் இல்லாட்டாலும் நல்லாத்தான் பேசுறிங்க.”

     டெலிபோனை வைத்த சரவணனை, அன்னம் சங்கடமாகப் பார்த்தாள். அழப் போகிறவள் போல் கேட்டாள்.

     “யாரோட தங்கை? யாரோட கல்யாணம்?”

     “நீ இன்னைக்கு எங்க வீட்டுக்கு வா. என் தங்கைக்குப் புத்திமதி தேவை. இந்தக் காலத்துல எப்படி எப்படிக் காதலிக்கணும் என்கிறதைவிட எப்டில்லாம் காதலிக்கக்கூடாது என்கிறது முக்கியம். பாவம். அவளுக்குத் தெரியல. நீ வந்து அட்வைஸ் பண்ணனும் திருந்திட்டாளாம். இருந்தாலும் நீயும் வந்து சொல்லணும்...”

     “யாரோட தங்கை. யாரோட கல்யாணம். லெட்டர்னு சொன்னிங்க...”

     “ஒ. அதுவா? எங்க அண்ணிக்காக, அவங்களோட தங்கையை கட்டிக்க, நான் தயாராய் இருக்கதாய் அண்ணியை லெட்டர் எழுதச் சொல்லியிருந்தேன்...”

     “எப்போ.. எப். எழுதப் போறாங்களாம்.”

     “இனிமேல் ஏன் எழுதுவாங்க. ஆமா. நீ ஏன் ஒரு மாதிரி ஆயிட்டே? இனிமேல் வேற பெண்ணை நான் நினைப்பேனா? இன்னும் ஒன்னால என்னைப் புரிஞ்சுக்க முடியல... சரியான லூஸு...”

     சரவணன், அவள் கைகளைப் பற்றினான். அவள், அவன் தோளில் முகம் புதைத்து, “நீங்கதான் ஸார் லூஸ்... சரியான லூஸ்... என்னைப் புரிஞ்சுக்க இவ்வளவு நாள் எடுத்துக்கிட்ட லூஸ்” என்று சொல்லிச் சொல்லிச் சிணுங்கினாள். சிணுங்கிச் சிணுங்கிக் கூவினாள்.

     சரவணன், அன்னத்தின் கைகளை ஆறுதலாகவும், ஆறுதல் தேடியும் பற்றிக் கொண்டிருக்கிறான். அகநானூற்றுப் பாடல்களின் தளமாய்ப் போன அவன் உள்ளத்தில் புறநானூறு போர்க்குரல் கொடுக்கிறது. அது இப்படித் தீர்மானித்தது.

     நாளைக்கே அமைச்சருக்கும், அமைச்சகச் செயலாளருக்கும், தலைமை டைரக்டருக்கும், எல்லா விவரங்களையும் எழுதப் போகிறான். என்ன ஆனாலும் சரி. செளமி நாராயணனை, அலுவலகத்திற்கு உள்ளே விடப்போவதில்லை. அவனே, மாநில அரசு நிறுவனத்திற்கு கான்டிராக்ட் கொடுக்கப் போகிறான். இது கைசுத்தமான கான்டிராக்ட் என்று அனைவருக்கும் புரியும். தவறுதான். மேலிட ஆணைக்கு எதிராக இப்படி நடக்கக் கூடாதுதான். முன்பின் நடக்காததுதான். ஆனாலும் இது தவறப்போன நீதியை தவறாமல் இருக்கச் செய்யும் தவறு. ஆரோக்கியமான தவறு. சாயப்போகும் குலைவாழையை நிமிர்த்துவதற்காக, அதைத் தாங்கிப் பிடிக்கும் முட்டுக்கம்பு. ஒரு அரசு ஊழியனை, நேர்மையாய் செயல்பட முடியாமல் தடுப்பது சட்டப்படிக் குற்றம். சமூகப்படி துரோகம்... இதை அரசே செய்தாலும், குற்றம் குற்றந்தான். அதுவும் குற்றவாளிதான்.

     சரவணனின் உள்ளுலகில் அலுவலகப் போர், படம் படமாய் விரிகிறது. அதைப் பயமுறுத்த வேண்டும். பயப்படலாகாது. கண்முன்னால் கரடுமுரடான பாதை கூட இல்லை. இனிமேல் அவனேதான் பாதையே போடவேண்டும்... பரீட்சார்த்த பாதை. அக்கினிப் பாதை....

     சரவணன் படபடக்கவில்லை. குழம்பிப் போகவில்லை. அன்னத்தை, குதூகலமாய்ப் பார்க்கிறான். அவளும், ‘ஒங்களுக்கு அந்தக் கால வழக்கப்படி வெறுமனே திலகமிடுபவள் அல்ல நான்’ என்று சொல்லாமல் சொல்வதுபோல் கரத்தை தூக்கி நிறுத்தி, முஷ்டியாக ஆக்குகிறாள்.

முற்றும்


வேரில் பழுத்த பலா : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9