சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல்

8

     அலுவலகத்திற்குள் நுழைந்த சரவணன், நுழைந்தபடியே நின்றான். ஒருவேளை வீட்டில் இன்னும் தூங்கிக் கொண்டும். தூக்கத்தில் கனவுக் காட்சி வந்து கொண்டும் இருக்கிறதோ? சுற்றும் முற்றும் பார்த்தான். அவனை எதிர்பாராத கான்டிராக்டர் செளமி நாராயணன் திருதிருவென்று விழித்தார். நிர்வாக அதிகாரியின் மேஜையில் ஒரு கையை ஊன்றியபடி அலுவலகத்தையே கான்டிராக்ட் எடுத்ததுபோல, உமாவைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்த அந்த மனிதர், அசையாமல் நின்றார். அவர், தன்னையும் கொத்தடிமையாய் ஒப்பந்தம் எடுத்திருப்பது போல், குழைந்தும் நெளிந்தும் பேசிய செளரிராஜன், பத்மா, விலாவில் இடிப்பதை உணர்ந்து, அவளைப் பார்த்தார். அவளோ சரவணன் நிற்கும் இடத்தைச் சுட்டிக் காட்ட முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள். ஒயிலாக நின்றபடி, பல் தெரியச் சிரித்த உமா, சிரிப்பைப் பாதியில் விட்டாள். மொத்தத்தில் அந்த மூவரும், ஏதாவது சோப்புக் கம்பெனி விளம்பரத்தில், சிரித்தும், திடுக்கிட்டும், நிற்பது போல் போஸ்கள் வருமே, அந்தப் போஸ்களைக் காட்டியபடி நின்றார்கள். அலுவலகக்காரர்கள் அத்தனை பேரும் வேலையை விட்டுவிட்டு, விறைத்து உட்கார்ந்தார்கள்.

     சரவணன், அடிமேல் அடிவைத்து நடந்தான். செளமி நாராயணன், கும்பிடு போட்டார்.

     “என்ன மிஸ்டர் செளமி... என்ன இந்தப் பக்கம்?”

     “பிரண்ட்ஸ் பார்த்துட்டுப் போகலாமுன்னு வந்தேன் ஸார்.”

     சரவணன், செளமி நாராயணனை ஏற இறங்கப் பார்த்தான். நாற்பத்தைந்துக்கும் ஐம்பதுக்கும் இடைப்பட்ட வயது. சிவப்பு நிறம், வட்டமுகம், நாகரிகமான சந்தனப் பொட்டு, சபாரி உடை, சாய்வான பார்வை, அயோக்கியப் பயல். பழிபழியாய் போட்டுட்டு. ஆபீஸ் வரைக்கும் வந்திருக்கான். எவ்வளவு திமிர் இருக்கணும்?

     செளமி நாராயணன் நழுவப் போனார். சரவணன் நாவால் தடுத்தான்.

     “நில்லுங்க மிஸ்டர்.செளமி. நீங்க ஏதோ டெம்போவுக்கு பில் கொடுத்ததாயும். நான் பணம் கட்ட மறுத்ததாயும் எழுதியிருக்கீங்க.”

     “அதாவது ஸார்...”

     “நீங்க எதையும் சொல்ல வேண்டாம். போன வாரந்தான் எனக்கே விஷயம் தெரியும்... இந்தாங்க ரூபாய்...”

     “வேண்டாம் ஸார். வாறேன். ஸார்...”

     “இப்படி கூழைக்கும்பிடு போட்டுட்டு. ஒங்களால எப்படி ஸார் என்னைப்பற்றி இல்லாததும் பொல்லாததுமாய் எழுத முடிஞ்சது? இங்கே ஒங்களுக்கு பிரண்ட்ஸ் இருக்கிற தைரியமா?”

     “எனக்கு வாக்குவாதம் பிடிக்காது... வாறேன்.”

     “நில்லுங்க. டெம்போப் பணத்தை வாங்கிட்டுப் போங்க.”

     “வேண்டாம்... நான் வசூலிக்கிற விதமாய் வசூலிச்சுக்குவேன்...”

     “அப்படின்னா, நீங்க இங்கே வந்திருக்கப்படாது.”

     “பப்ளிக் பிளேஸ். நண்பர்களைத்தான் பார்க்க வந்தேன். செளரிராஜன் ஸார்... நான் வாறேன்.”

     “டேய் நில்லுடா... ஒன்னத்தாண்டா... நில்லு.”

     அலுவலகத்தார் அசந்தார்கள். அன்னம் பதறிப்போனாள். உமா ஓடப் போனாள் பத்மா பயத்தில் செளரிராஜனைப் பிடித்துக் கொண்டாள். கான்டிராக்டர், கசாப்புக்கடை ஆடு மாதிரி நின்றார். சரவணன் அவரை வழிமறித்தான். ஊழியர்கள் வந்து, வட்ட வட்டமாய் நின்றார்கள். அஸிஸ்டென்ட் டைரக்டர் சரவணன், இப்போது ஆவேசியானான்.

     “ஒன் மனசுல என்னடா நினைச்சுக்கிட்டே? இந்த ஆபீஸ் ரகசியங்களைத் திருடுனது மட்டுமில்லாமல், இங்கேயே வந்து உலாத்துற அளவுக்கு ஒனக்கு யாருடா தைரியம் கொடுத்தது? சொல்றதை நல்லாக் கேளு. இப்போ கூட. ஒன்னை என்னால போலீஸ்ல ஒப்படைக்க முடியும். ஆனால் ஒன்னை மாதிரி நான் நடந்துக்க விரும்பல. இனி ஒரு தடவை. ஒன்னை இந்த ஆபீஸ்ல நான் பார்த்தேனா, போலீஸுக்கு போன் செய்யமாட்டேன். நான் பனை மரத்துல ஏறி நொங்கு வெட்டுனவன். தென்னை மரத்துல ஏறி தேங்காய் பறிச்சவன். ஒன் கழுத்துக்கு மேல் தலையிருக்காது. எதுக்குய்யா ஆபீஸிற்கு வந்தே? ஏ.ஓ! நீயா இவனை வரச் சொன்னே?”

     “இல்லே ஸார். இல்லவே இல்ல ஸார்...”

     தங்கமுத்து, ஏ.ஓ வைக் கேட்டான். “நீதானய்யா போன்ல பேசி வரச் சொன்னே...”

     சரவணன், அவனை கையமர்த்தினான்.

     “மிஸ்டர் செளமி... கெட் அவுட் கெட் அவுட்.. மேன். விபரீதமாய் ஏதாவது நடக்கும் முன்னால ஓடிடு. இந்தாப்பா அடைக்கலம். இவரை அடுத்த தடவை பார்த்தால்...”

     “அடுத்த தடவை என்ன ஸார்? இப்பவே. கொடுத்த பணத்தை வாங்காமல்... அடுத்துக் கெடுத்த பயல்.”

     சரவணனின் கையாட்டலுக்கு, அடைக்கலமும் உட்பட்டார். செளமிநாராயணன், பல்லைக் கடித்துக்கொண்டு வேக வேகமாய் வெளியேறினார். வாசலில் சிறிது நின்று, “என்னை நீங்க துரத்துனதாய் நினைக்காதீங்க... இன்னைக்கோ, நாளைக்கோ. நீங்களே என்னை வரவேற்கதுக்கு வாசலில் நிற்கப் போறீங்க...” என்றார்.

     “அப்படி ஒரு நிலைமை வந்தால். ஒண்ணு, நீ உலகத்துல இருக்க முடியாது. அல்லது. நான் இந்த ஆபீஸ்ல இருக்கமாட்டேன். போங்க மிஸ்டர். டில்லியில் எங்க ஆபீஸ்லயே ஒன் கோ-பிரதர் டெப்டி டைரக்டராய் இருக்கலாம்... ஆனால் கொலை சமயத்துல எவனும் உதவ மாட்டான்...”

     செளமி நாராயணன் ஓடிவிட்டார்.

     சரவணன், நிர்வாக அதிகாரியைப் பார்த்தான். அவர் நிலை குலைந்தார். பத்மா, பதுங்கிக் கொண்டாள். உமாவைக் காணவில்லை. இரணியனைக் கொன்ற பிறகும், ஆவேசம் அடங்காத நரசிம்மமூர்த்தி போல், சரவணன் அலுவலகம் முழுவதையும் சுற்றினான். இதற்குள் தத்தம் இருக்கைகளில் உற்சாகமாக உட்கார்ந்த ஊழியர்கள், அவனுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.

     “குட்மார்னிங் ஸார்.”

     “வணக்கம் ஸார்.”

     “ஸார் குட்மார்னிங்.”

     “ஸார் வணக்கம்.”

     சரவணன் அவர்கள் வணக்கத்தை முகத்தை ஆட்டி வரவேற்றான். ‘இதுதான் சரி. அடிதடி உதவுறது மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்.’ என்று தங்கமுத்து, தன்பாட்டுக்குப் பேசிக் கொண்டிருந்தான். அத்தனை ஊழியர்களும் சரவணனை, விழியுயர்த்திப் பார்த்தார்கள். ‘இப்படியெல்லாம் இவருக்குப் பேச வருமா?’ என்று ஒருத்தி, தன் சந்தேகத்தை அன்னத்திடம் மெல்லக் கேட்டாள். அவளோ, எல்லோருக்கும் கேட்கும்படி, கத்தலுக்கும். உரையாடலுக்கும் இடையேயான குரலில், பகிரங்கமாய் திருப்பிக் கேட்டாள்.

     “ஏன் வராது? சாதுக்குக் கோபம் வந்தால் காடே தாங்காது. ஆபீஸ் எப்படித் தாங்கும்?”

     சரவணன், தனது அறைக்குள் வந்தான். அதற்காகக் காத்திருந்தவர் போல், சிதம்பரம் வந்து, ஒரு தம்ளரில் தண்ணீர் வைத்தார். அவன் எதுவும் பேசாததைக் கண்டு திரும்பினார். திரும்பிய தீ முகத்தில், நேருக்கு நேராய் தென்பட்ட நிர்வாக அதிகாரியை முறைத்தபடியே, சிதம்பரம் வெளியேறினார்.

     சரவணனுக்கு தன்மீதே எரிச்சலாக இருந்தது. என்ன இருந்தாலும் நான் இந்த அலுவலகத் தலைவன். என்னோட கோபத்தை இப்படி காட்டியிருக்கக் கூடாது. சிக்கல்கள் வந்தாலும், அவற்றில் சிக்காமல் சீராக நிற்பவனே மனிதன்... எனக்கு என்ன வந்தது? ஒருவேளை, கோவிலுக்குப் போயிருக்கலாமோ? நல்ல வேளை, போகல. கோவிலை நினைத்தாலே... இப்படி வந்திருக்கு... போயிருந்தால் கொலையே நடந்திருக்கும்... இவ்வளவு நடந்தும் நிர்வாக அதிகாரி முகத்தில் ஒரு அழுத்தம் தெரியுதே. கல்லுளிமங்கன் மாதிரி இருக்கானே... இந்த கான்டிராக்டர் கூட ‘நீங்களே என்னை வரவேற்பீங்கன்’னு சபதம் போட்டுட்டுப் போறான்... என்னவாய் இருக்கும்?

     சரவணன் நிலைகொள்ளாமல் தவித்தான். ஒரு மணிநேரத்தில் அவன் கேள்விக்குப் பதில் கிடைத்தது.

     நிர்வாக அதிகாரியே வந்து ஒரு ரகசியக் கவரை அவனிடம் கொடுத்துவிட்டு, நிற்காமலே போய்விட்டார். அவன், கவரை அவசர அவசரமாய் கிழித்தான். உள்ளே இருந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்தான். அவன் முகம், வெள்ளையாய் வெளுத்தது. மேஜையில், அதை மல்லாக்க போட்டபடியே, பல தடவை படித்தான். ஒரு தடவை கொதித்தான். மறுதடவை தவித்தான். பிறகு எரிந்தான். அப்புறம் அணைந்து போனவன் போல் ஆகிவிட்டான். நாற்காலியில் முடங்கியபடியே, அதைப் பார்த்தான். ஆங்கில வாசகங்களை தமிழாக உட்படுத்திக் கொண்டான்.

தாக்கீது

     1. செளநா ஸ்டேஷனரி மார்ட்டிற்கு, இந்த நிதியாண்டில் இருந்து, மூன்று வருட காலத்திற்கு எழுது பொருள் சாமான்களை வாங்கிக் கொள்வதற்கு, கான்டிராக்ட் இதன் மூலம் வழங்கப்படுகிறது. அஸிஸ்டென்ட் டைரக்டர் திரு. சரவணன் இந்தக் கம்பெனியின் உரிமையாளர் திரு. செளமி நாராயணனுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒப்பந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து அவரது கையெழுத்தை உடனடியாக வாங்கி அனுப்ப வேண்டும் என்று கோரப்படுகிறார்.

     2. சென்ற ஒப்பந்த காலத்தில் செளநா மார்ட் சிறப்பாகப் பணியாற்றியதற்கு நன்றி தெரிவித்து, திரு. சரவணன், அதன் உரிமையாளர் திரு. செளமி நாராயணனுக்குக் கடிதம் எழுதவேண்டும் என்றும், அதன் நகல் தலைமையிடத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

     இது அவசரம்.

சீனிவாசன்
டெட்டி டைரக்டர்
(டைரக்டருக்காக)

     சரவணன் குமைந்தான். கொந்தளித்தான். கை கால்கள் குடைந்தன. தலை மரத்துப் போனது. கைகள் கனத்துப் போயின. கால்கள் துவண்டு போயின. வெளியே கேட்கும் பேச்சுக்குரல், யாரோ கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் கேட்டது. காதுகள் இரைத்தன. கண்கள் எரிந்தன. வெளியே தென்பட்ட உருவங்கள், நிழல் படிவங்களாய் பட்டன. உள்ளே யாரோ வந்தது போலிருந்தது. எதையோ எடுப்பது போலிருந்தது. அவனையே உற்றுப் பார்ப்பது போலிருந்தது. அப்புறம் போவது போலிருந்தது. ஆனா? பெண்ணா? தங்கமுத்தா. அன்னமா? அவனால் சிந்திக்க முடியவில்லை. சீராக இருக்க முடியவில்லை. நாற்காலியில் தலையைப் போட்டு உருட்டினான். பிறகு ஒரு ஓரமாகக் கிடந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தான்.

     ஒரு மணி நேரம், காலமும் அவனும் உருண்டோடியபடி கழிந்தது. சரவணனுக்கு லேசாக உணர்வு தட்டியது. கனவுலகில் இருந்து பலவந்தமாக தன்னைப் பிரித்து, நனவுலகில் இறங்கிக் கொண்டான்.

     ‘என்ன அநியாயம் இது? சொல்ல முடியாத கொடுமை. வெளியே சொன்னால், ஒழுங்கு நடவடிக்கை வரும். உள்ளத்திற்குள்ளேயே போட்டுக் கொண்டால், உடலுக்குள் ஒழுங்கீனங்கள் ஏற்படலாம். பலருக்கு ரத்தக் கொதிப்பும், இதய நோயும் வருவது இப்படித்தானோ? அவனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

     ‘செளநா உரிமையாளர் செளமி நாராயணன், மத்திய அரசின் பாதுகாப்பு விதிகளின் கீழ் வரும் இதே இந்த அலுவலகத்தில், ‘உள்ளறுப்புக்காரர்களை’ கைக்குள் போட்டுக் கொண்டு, அலுவலக ரகசியங்களைத் திருடியிருப்பதைச் சுட்டிக் காட்டியிருந்தான். உடனடியாக, ஒரு ஜாயிண்ட் டைரக்டர் வந்து, விசாரணை நடத்துவார் என்று எதிர்பார்த்தான். டெலக்ஸில் பதைபதைத்து பாதுகாப்பைப் பலப்படுத்து என்று வரும் என்று எதிர்பார்த்தான். ஆனால், எழுதியதைப் பற்றிப் பேச்சில்லை. மூச்சில்லை. பெற்றுக் கொண்டோம் என்று ஒரு வரிப் பதில் கூட இல்லை. அவ்வளவு அலட்சியம்: உதாசீனம். யாருக்கோ வந்த நோய். அதே சமயம், எந்த காண்டிராக்டர் கைது செய்யப்படக் கூடிய நிலைக்குக்கூட வரவேண்டுமோ, அவனுக்குக் காண்டிராக்ட் கொடுக்கப்படுகிறது. மன்னிப்புக் கடிதம் எழுதுவது மாதிரி எழுதவேண்டும் என்ற ஆணை. இது என்ன டிபார்ட்மென்ட்? என்ன நியாயம்? அவனுக்கு காண்டிராக்ட் கொடுத்ததன் மூலம், அவன் தன்மீது தெரிவித்த குற்றச்சாட்டுகளை அங்கீகரித்தாய் ஆகாதா? அப்படித்தான். அப்படியேதான்.

     ‘என்மீது விசாரணை வரும். ஏதாவது ஒரு ஜாயிண்ட் டைரக்டருக்கு, சென்னையில். அண்ணன் மகனுக்குக் கல்யாணம். மாமா மகனுக்குக் கருமாந்திரமுன்னு. ஏதாவது நடக்கும்போது, விசாரணை வரும். அதுவரைக்கும் நான் ஆயுள் கைதி. அப்புறம்தான் தூக்குக் கைதி.

     ‘பொதுமக்களுக்கு, இலாக்காக்களின் அக்கிரமங்கள்தான் தெரியும். இந்த இலாக்காக்களுக்குள்ளேயே நடக்கும் அக்கிரமங்கள் யாருக்குத் தெரியும்? ஒவ்வொரு அலுவலகமும், ஒரு எலிப் பொந்து... எறும்பு மொய்க்கும் இடம். ஆபீஸர் எனப்படும் பாம்பு. எலி வளைக்குள் இருக்கும் எலிகளைப் படாதபாடு படுத்துவதும், கடித்துத் தின்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்? அல்லது... எறும்புகள் மொய்க்கும் இடத்தில், நேர்மைச் சிறகால் பறக்கும் வண்ணப்பூச்சி வந்து உட்கார்ந்து விட்டால். அந்த எறும்புகள் அதை என்ன பாடு படுத்தும்? இவற்றில் இரண்டில் ஒன்றுதான் இன்றைய அலுவலகம். என்னைப் பொறுத்த அளவில், இந்த செளமி நாராயணனின் சட்டகர் என்ற டெப்டி டைரக்டர் பாம்புக்கு எலியானேன். பல்வேறு எறும்புப் பேர்வழிகளுக்குப் பூச்சியானேன். என்னய்யா கவர்மென்டு? பல்வேறு துறைகளைக் கொண்ட அரசில், ஒரு சின்னத் துறையில், பல பெரிய அதிகாரிகளில் ஒரு சின்னப் பெரிய அதிகாரி, தனது சட்டகருக்கு, அரசே ‘அவார்ட்’ வழங்குவதாய் காட்டிக் கொள்ள முடிகிறது என்றால், இது என்ன இலாகா. இதில் நான் இன்னும் இருப்பதா...

     ‘செளமி நாராயணன் சபதம் போட்டுட்டுப் போயிருக்கான். அவனை நேருக்கு நேராய் என்னால் பார்க்க முடியுமா? பார்த்தியா என்பது போல், பார்ப்பான். அதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? தாங்கித்தான் ஆகணும்! தங்கை வசந்தாவின் பிரகாசமான எதிர்காலத்திற்காக, அண்ணி இன்னும் வயல் வேலைக்குப் போகாமல் இருப்பதற்காக, எதிர்காலத்தில், இந்த இலாகாவிற்கே நான் தலைமை அதிகாரியாய் ஆவதற்காக, பொறுத்துத்தான் ஆகணும். அதோடு வேலையை விட்டால் மாடு கூட மேய்க்க முடியாது.

     முடியாது. முடியவே முடியாது. எதிர்காலத்திற்கு அஞ்சுகிறவனால், இந்த நிகழ்காலத்தில் கூட நிம்மதியாய் இருக்கமுடியாது. இந்த அக்கிரமங்களை அங்கீகரித்து, இந்த அசிங்கம் பிடித்த நிர்வாக அதிகாரியைப் பார்த்தபடியே, என்னால் ராசியாக முடியாது. ராஜினாமாதான் செய்யப் போறேன். நேர்மைக்காரனின் நடவடிக்கையை சரிபார்க்க வேண்டிய பொறுப்பு அக்கிரமக்காரர்களின் கையில் உள்ளது. ஓநாய், ஆட்டுக்குட்டியிடம் நியாயம் பேசிய கதைதான். இந்தக் கதை எனக்கு வேண்டாம், என்னில் எழுதப்பட வேண்டாம்.’

     சரவணனுக்குள், அசைக்க முடியாத ஒரு உறுதி பிறந்தது. அவனுக்கே ஆச்சரியம். நெருக்கடி வரும்போது மனித மனம், அபரிமிதமான சக்தியை அளிக்கும் என்பது எவ்வளவு உண்மை உலகம் பரந்தது. வாழ்க்கை விசாலமானது. அதை, இந்த அலுவலக டப்பாவிற்குள் அடைக்கலாகாது. விடுபடணும், விட்டே ஆகணும். சரவணன் சிரித்தான். வெடிவெடியாய் சிரித்தான். வெறுமையாய்ச் சிரித்தான்.

     விரக்தியின் விளிம்பில் நின்று, அதனால் முடக்கப்பட்டு, பிறகு அந்த விரக்தியின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளிப்பட்டவன் போல், சரவணன் அமைதியடைந்தான். அன்னம், எதற்கோ உள்ளே வந்தாள். அவன் இருந்த கோலத்தைப் பார்த்துவிட்டுப் பதறினாள்.

     “ஸார்... ஸார்!”

     “இதை முதலில் படிங்க.”

     இலாகா பொறுப்பாளர்களின் உத்தரவைப் படிக்கப் படிக்க, அவளும், சரவணன்போல் அரை மயக்க நிலைக்குப் போனாள். பிறகு, உறுதியுடன் நிமிர்ந்தாள்.

     “இது... அக்கிரமம் ஸார்... அநியாயம் ஸார்... விடப்படாது ஸார்.”

     “நீங்க. சாயங்காலம் ஆபீஸ் டயத்துக்கு அப்புறம் கொஞ்சநேரம் இருக்க முடியுமா?”

     “இதைவிட எனக்கு என்ன ஸார் வேலை?...”

     “தொந்தரவுக்கு மன்னிக்கணும். ஆனால். இதுதான் என்னோட கடைசித் தொந்தரவு...”

     “ஸார்... ஸார்.”

     “யெஸ்... மேடம். யெஸ்...”

     “சாப்பிடுங்க ஸார்...”

     “எனக்கா... சாப்பாடா... எப்படி இறங்கும்?”

     சரவணன் பேசாமல் இருந்தான். அவனையே அசைவற்றுப் பார்த்த அன்னம், அங்கே நிற்க முடியாமல், நடந்து நடந்து நின்று நின்று போய்க் கொண்டிருந்தாள். சரவணன், அவளைக் கூப்பிட்டான்.

     “மேடம்... இந்த லெட்டர் விவகாரத்தை யார்கிட்டேயும் பேசப்படாது. தங்கமுத்துகிட்டே கூட... பிராமிஸ்?”

     “யெஸ் ஸார். ஈவினிங்ல எவ்வளவு நேரம் வேணுமின்னாலும் இருக்கேன் ஸார்...”

     “தேங்க் யூ...”

     “சாப்பிடுங்க ஸார்.”

     “நன்றி...”


வேரில் பழுத்த பலா : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9