சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல்

3

     அந்த அலுவலகம், இஞ்சி தின்னாத குரங்கு போல் இயல்பாக இருந்தது.

     சும்மா சொல்லக் கூடாது... அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் அத்தனை பேரும், வேலையும் கையுமாக இருந்தபடிதான், கையாட்டி காலாட்டி வாயாடிக் கொண்டிருந்தார்கள். கிரிக்கெட் வர்ணனையைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பத்மா, ஒரு கோப்பில் பாதி கண் போட்டு எழுதியபடி தான், அவ்வப்போது மீதிக்கண்ணை எடுத்து, அருகே இருந்த ராமச்சந்திரனிடம், எதையோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். உமா, ஒரு ரிஜிஸ்டரை தனது மடியில் கிடத்தி புரட்டியபடிதான், சற்றுத் தள்ளி, ரேக்கை குடைந்து கொண்டிருந்த பியூன் அடைக்கலத்திடம், “அந்தப் புடவை சரியில்லப்பா...” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீஸர் அல்லது ‘ஏஓ’ என்று அழைக்கப்படும் நிர்வாக அதிகாரி சௌரிராஜன், பாக்கெட் டிரான்ஸிஸ்டர் போல் இருந்த கணக்கு யந்திரத்தை - யந்திரம் என்று சொல்வது கூடத் தப்பு - கணக்குக் கருவியை தட்டித் தட்டிப் போட்டு, ஒரு காகிதத்தில் எழுதிக் கொண்டு தான், ஈஸ்வரியை ரசித்தார். கை, கணக்கை எழுதியபோது, வாய் “ஒங்க ஆத்துல இன்னிக்கு... என்ன குழம்பு” என்று தன்னிடம் பேசாமல் ‘சபார்டினேட் பயல்’ சம்பத்திடம் பேசிக் கொண்டிருந்த டைப்பிஸ்ட் ஈஸ்வரியிடம் கேட்டார் - அவள், நாக்கு ருசியைப் பற்றி மட்டுமே பேசுகிற வயதில் இல்லை என்பது தெரிந்தும்.

     மேலே சித்தரிக்கப்பட்டது ‘எஸ்டாபிளிஷ்மென்ட்’ செக்‌ஷன். இது போல் வாங்கும் பிரிவு, வந்ததை காக்கும் பிரிவு, கணக்குப் பிரிவு விநியோகப் பிரிவு என்று அந்த அலுவலகம் பலப்பல பிரிவுகளாய் இருந்தன. அவற்றிற்கு ஏற்றாற் போல் ஒவ்வொரு பிரிவு நாற்காலிகளுக்கும், இன்னொரு பிரிவு நாற்காலிகளுக்கும் இடையே இடைவெளிகளும் உண்டு. இந்தப் பிரிவுகளின் ‘இன்சார்ஜ்கள்’ சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகள் போல், பெரிய நாற்காலி, பெரிய மேஜை சகிதமாய் காட்சியளித்தார்கள்.

     இத்தனை பிரிவுகளிலும் ஒட்டியது போலவும், ஒட்டாதது போலவும், இந்திய கிராமத்துச் சேரி போல் சற்றுத் தள்ளி, அன்னம் இருந்தாள். மை கறையும், கோந்து கறையும், வெட்டப்பட்ட சோளத் தோட்டத்தில் எஞ்சி நிற்கும் அடிக்காம்புகள் போல், எரிந்து எரிந்து இறுதியில் திரிகள் நின்று, வெள்ளை வெள்ளையாய் இருந்த மெழுகுவர்த்தித் துண்டுகளும் கொண்ட மேஜையில், நான்கு பக்கமும் காகிதக் குவியல்களைப் பரப்பியபடி, அதன் நடுப்பக்கம், ஒரு ரிஜிஸ்டரைப் போட்டுக் குடைந்து கொண்டிருந்தாள். அவளுக்கு எதிரே, இரண்டு பியூன்கள், தயாராக இருந்தார்கள். சீல் போட வேண்டுமா? கவர் செய்ய வேண்டுமா? எதையும் ‘கவரப் பண்ண வேண்டுமா? ரெடி...

     அங்கே ஆட்கள் எப்படியோ, அலுவலகம் அழகாகத்தான் இருந்தது. குண்டூசி, காகிதம், இரப்பர், பால் பாயிண்ட் பேனா, பென்ஸில் ஸ்டேப்லர், பைல்கள் உட்பட பல்வேறு வகையான ஸ்டேஷனரிப் பொருட்களை, ‘கொட்டேஷன் மார்க்கெட்டில்’ வாங்கி, பல்வேறு அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு அந்த அலுவலகத்திற்கு. அலுவலகங்கள் அனுப்பும் ‘இன்டென்ட்களை’ செப்பனிட்டு, குறிப்பிட்ட சமயத்திற்குள் அவற்றைத் தருவித்துக் கொடுக்க வேண்டும். இல்லையானால் அலுவலகங்களில் டைப் அடிக்க முடியாது. அடித்தவற்றை பையில் அடக்க முடியாது. அடக்கியவற்றை ‘டேக்கால்’ கட்ட முடியாது. பேப்பர் வெயிட்டுகள் இல்லாமல், காகிதங்கள், பறக்கும்... குண்டூசிகள் இல்லாமல், பக்கங்கள் வெட்கங்களாகும். ஆக மொத்தத்தில் அது நூற்றில் ஒரு அலுவலகம் அல்ல... நூறு அலுவலகங்களுக்கும், இத்தகைய பொருட்களை, லட்சக் கணக்கான ரூபாயில் வாங்கிக் கொடுக்கும் ஒரே ஒரு அலுவலகம் - காண்டிராக்டர்கள் கண் வைக்கும் அலுவலகம்.

     சரியான சமயத்திற்கு வரும் சரவணன், முக்கால் மணி நேரம் கடந்தும் வராததால், ‘சீனியர் ஸ்டெனோகிராபர்’ - உமா, தனது அறையை விட்டு வெளியே வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும், பலர் வலியப் போய் குசலம் விசாரித்தார்கள். பார்ப்பதற்கு அழகாக இருந்தாள் என்பதற்காக அல்ல... அழகுதான், அடர்த்தியான முடிதான்... கிறக்கமான கண்கள் தான். களையான முகம் தான். வாளிப்பான உடம்பு தான். சிவப்புதான். இன்னும் கல்யாணம் ஆகவில்லைதான். அது, இன்னும் காலம் கடக்காததுதான். ஆனால், அதற்காக அவளிடம் வலியப் பேசவில்லை.

     பல ‘அந்தரங்க’ கோப்புகளின் அதிநுட்பமான விவரங்கள் அவளை மீறிப் போக முடியாது. எல்லோருடைய குடுமியோ, கிராப்போ, கொண்டையோ, அத்தனையும் அவள் கையில். அவள் பேசுகின்ற பேச்சு ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. ‘பம்பாய் நல்ல நகரந்தானே’ என்று ஒருத்தரிடம் கேட்டால், அவன் அந்த நகரத்திற்குப் போகப் போகிறான் என்று அர்த்தம். ‘பேசு... பேசு... எத்தனை நாளைக்குப் பேசுவே’ என்றால், அவனுக்கு ஓலை ரெடியாவதாய் பொருள். ‘அவருக்கென்ன குறைச்சல்’ என்றால் ஆசாமிக்கு பதவியுயர்வு வரப் போவதாகக் கொள்ளலாம். எனவே, சம்பந்தப்பட்டவர்கள், அவள் வாயைக் கிளறப் பார்த்தார்கள். அந்த மாதிரி சமயத்தில் அவள் பேசியவரை விட்டு விட்டு, பேசாதவரைப் பார்ப்பாள்.

     திடீரென்று அந்த அலுவலகத்தில் அரைகுறைப் பேச்சுக்கள் கூட அடங்கின. லாவகமாய் உடலாட்டி, நளினமாய் உலா வந்த உமா, உள்ளே ஓடி விட்டாள். ‘டெஸ்பாட்ச்’ அன்னம், நிமிர்ந்து உட்கார்ந்தாள். சரவணன், ஒரு பறவை பார்வையோடு அவசர அவசரமாய், தனது அறைக்குள் போகப் போனான்... பிறகு, எதையோ யோசித்தவனாய், அவன் பின்பக்கமாய் நடந்து அக்கௌண்டன்ட் ராமச்சந்திரனிடம்... “ஒங்க ஒய்புக்கு இப்போ... எப்டி இருக்குது” என்றான். உடனே அவர் “தேவல ஸார்...” என்றார்.

     “அதற்காக நீங்க கேர்லஸா இருக்கப்படாது... இன்னைக்கு வேணுமுன்னாலும் நேற்றுப் போனது மாதிரி முன்னாலேயே போங்க. ஐ டோன்ட் மைண்ட்...”

     “தேங்க் யூ ஸார்...”

     சரவணன் உள்ளே போய்க் கொண்டிருந்தான். தலைமைக் கிளார்க் பத்மா, மனைவியை மதிக்காத ராமச்சந்திரனை ஒரு மாதிரியாகப் பார்த்து புன்னகைத்தாள். பிறகு, அந்த இருவரும் சரவணனின் முதுகைப் பார்த்து எள்ளலாகச் சிரித்தார்கள். “ஒய்புக்கு... உடம்புக்கு உடம்புக்குன்னு சொல்லிச் சொல்லி அப்படி ஆயிடப் போகுது...” என்று கிசுகிசுத்த அந்தப் பெண்ணிடம் “கத்திரிக்காய்னு சொல்றதால பத்தியம் போயிடாது. சினிமாவுக்குப் போறேன்னா இந்தக் குரங்கு விடுமா?” என்றான். உடனே சிரிப்பு... அப்புறம் கிசுகிசு. இறுதியில், நிர்வாக அதிகாரி சௌரிராஜனின் காதை இரண்டு பேரும் ஊதினார்கள் - மாறி மாறி.

     ‘டெஸ்பாட்ச்’ அன்னம், அவர்கள் இருவரும் சரவணனுக்குப் பின்னால் சிரிப்பதைப் பார்த்தாள். ஆனால் ஆச்சரியப்படவில்லை. இன்னைக்கு இது என்ன புதுசா? நாளைக்கு இந்த பத்மாவும் ‘என் ஹஸ்பெண்டுக்கு நெஞ்சுவலி ஸார்’ என்பாள். பெர்மிஷன் கிடைக்கும். நெஞ்ச நிறைவோடு ‘முந்தானை முடிச்சுக்கு’ புருஷன் இல்லாமல் தனியாகவோ... டபுளாகவோ... போவாள். மறுநாள் இந்த சரவணன் இதே மாதிரி கேட்பார். இவர்களும், இதே மாதிரி சிரிப்பார்கள்.

     அன்னத்திற்கு, அவன் மேல் லேசாக இரக்கம் ஏற்பட்டது. நல்லா இருக்குதே... நான் எதுக்குய்யா ஒனக்காக வருத்தப்படணும்... பெரிய ஆபீஸராம் ஆபீஸர்... கீழே இருக்கிறவங்கள்ல யார் யார் எப்டி எப்டின்னு தெரிய விரும்பாத ஆபீஸர்... ஒனக்கு வேணுய்யா... எனக்குத்தான் ‘மெமோ’ கொடுக்கத் தெரியும்... அந்த மெமோவால என்னோட வேலை எவ்வளவு பாதிக்கப் போகுதுன்னு நினைச்சுப் பாத்தியா... இவ்வளவுக்கும் இந்த ஆபீஸ்ல நான் ஒருத்திதான் ஒன்ன பின்னால் திட்டாதவள்... புறம் பேசாதவள்... எனக்கு மெமோ... அதோ குலுங்கிச் சிரிக்கிற அவளுக்கு இன்கிரிமென்ட் சிபாரிசு... போய்யா... போ...

     அன்னம், அதற்குமேல் யோசிக்கப் பயந்து விட்டாள். அவள் இப்படி சிந்திப்பது கூட அவர்களுக்கும் உள்ளே இருக்கும் சரவணனுக்கும் தெரிந்து, கிடைக்காமல் கிடைத்த இந்த வேலை போய்விடக்கூடாதே என்ற பயம். பழையபடியும் ஊருக்குப் போய், அப்பாவிடமும், சித்தியிடமும் அகப்பட்டு விடக் கூடாதே என்ற அச்சம். இவ்வளவுக்கும் அவள், பார்வைக்கு பயப்படுபவள் போலவோ பயமுறுத்துபவள் போலவோ தோன்றவில்லை. பவுடர் தேவையில்லாத முகம். அழகு என்பது சிவப்பில் மட்டும் அல்ல என்பதை எடுத்துக் காட்டும் கறுப்பு. சிரிக்கும் போது மட்டுமே, சில பெண்களுக்கு, கண்கள் எழிலாய் இயங்கும். அவளுக்கோ, பேசும்போது கூட பொங்கும் விழிகள். உடையால் மட்டுமல்ல, உடம்பாலும் தெரியாத வயிறு. எவருடனும் அதிகமாகப் பேசாத வாய்; யார் சொல்வதையும் சிரத்தையோட் கேட்கும் காதுகள். பம்பரமாய் இயங்கும் கரங்கள். அடுத்த ‘மெமோ’ வந்தால் ஆபத்தாச்சே என்பது போல், உள்ளே இருந்த சரவணனை, துஷ்ட தேவதையைப் பார்ப்பதுபோல், பார்த்துப் பார்த்துப் பயந்து கொண்டாள் அன்னம்.

     உள்ளே உமா நின்று கொண்டிருந்தாள். வெளியே, தான் அரட்டையடித்ததைப் பார்த்துவிட்ட அந்த அஸிஸ்டெண்ட் டைரக்டர் மனதில், ஏதாவது கோபம் உதித்திருக்கிறதா என்பதை ஆழம் பார்ப்பதற்காகப் போனவள்.

     அடுத்த பதவியுயர்வு உமாவை, அக்கௌண்டண்ட் இருக்கையிலோ அல்லது தலைமைக் கிளார்க் இருக்கையிலோ உட்கார வைக்கும். அதற்கு, ஆபீஸ் தலைவிதியான அந்தரங்கக் குறிப்பேட்டை எழுத வேண்டியவன் இந்த சரவணன். இப்போது அவளுக்கு, அவன், தன்னைப் பற்றி என்ன நினைக்கிறான் - எப்படி எப்படி நினைக்க வேண்டும் என்பதே முக்கியம். எத்தனை நாளைக்குத்தான் ஈஸ்வரன் கழுத்தைச் சுற்றிய கடிக்காத பாம்பாகக் கிடப்பது? பதவியுயர்வு பெற்று... தனியாய் படம் எடுக்க வேண்டாமா...? பக்குவமாக, பதட்டப்படாமல் கேட்டாள்.

     “ஸார். ஏதாவது டிக்டேஷன் கொடுக்கிங்களா...”

     “இப்போ இல்லே.”

     “அப்போ அந்த ஸ்டேட்மென்டை அடிக்கட்டுமா?”

     “யெஸ்... அன்னத்தை, டெஸ்பாட்ச் ரிஜிஸ்டரோடு வரச் சொல்லுங்க.”

     உமா, குலுக்கலோடு போனாள். அவள் சைகைக்கு ஏற்ப அன்னம் உதறலோடு வந்தாள். கைக்குழந்தையை மார்பில் அணைத்தது போல், ஒரு ரிஜிஸ்டரை மார்போடு சேர்த்து அணைத்தபடி வந்தாள். ‘எதுக்காக இவன் என் பிராணனை எடுக்கான்? போயும் போயும் ஒரு அஸிஸ்டெண்ட் டைரக்டரா டெஸ்பாட்ச் ரிஜிஸ்டரை ‘செக்’ பண்றது. ‘ஏஓ’வே பார்க்கமாட்டார். ஹெட்கிளார்க் இருக்காள்... இவன் எதுக்கு? சந்தேகமே இல்லை... என்னை ஒழிக்கத்துக்கு திட்டம் போட்டிருக்கான். இரண்டாவது மெமோ கொடுக்கப் போறான்.’

     அவளை, அவன் ஏறிட்டுப் பார்த்தபோது, அன்னத்தின் கைகள் ஆடின. அந்த ஆட்டத்தில், அந்த பெரிய ரிஜிஸ்டரே ஆடியது.

     “உட்காருங்க.”

     “ஐ ஸே... சிட் டவுன்...”

     அன்னம் பயந்துபோய் உட்கார்ந்தாள். அவன், ரிஜிஸ்டரைப் புரட்டி, முந்தின நாள் கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கிறதா என்று கடிதம் கடிதமாக, நம்பர் நம்பராக, முகவரியோடு பார்த்தான். எல்லாம் சரியாகவே இருந்தன.

     “குட். நீங்க போகலாம்...”

     அன்னம் எழுந்தாள். ‘‘குட்’னு சொல்லிட்டு, தலையில் குட்டிட்டிங்களே ஸார்’ என்று கேட்பது மாதிரி, அவனைப் பார்த்தாள். ‘இனிமேல்... இப்டி மெமோ கொடுக்காதிங்க ஸார்’ என்று கேட்கலாமா... ஒருவேளை அப்படிக் கேட்டு, அதற்கே ஒரு மெமோ கொடுத்திட்டால். அன்னம், தயங்கித் தயங்கித் திரும்பப் போனாள். சரவணன் புன்னகை இல்லாமலே கேட்டான்.

     “எதையோ சொல்லணுமுன்னு நினைக்கதுமாதிரி பார்க்கிங்க...”

     “இல்ல ஸார்... இல்ல ஸார்...”

     “நான்... சிங்கம் புலியில்ல... மனிதன்தான். எனக்கு எதுக்கு ஸார் மெமோ கொடுத்திங்க... மோசமான வார்த்தையால கூட திட்டலாம். அதையே நல்ல வார்த்தையாய் கையால எழுதலாமான்னு கேட்க வாரிங்க... இல்லையா? நில்லுங்கம்மா, ஓடாதீங்க... ‘செளநா’ மார்ட் கம்பெனிக்காரன் தந்த பொருட்கள்ல குவாலிட்டி சரியில்ல... குவான்டிட்டி மோசம்... குண்டூசி முனை மழுங்கிட்டு... பேப்பர்ல இங்க் ஊறுது... ரப்பர். எழுத்துக்குப் பதிலாய் எழுதுன காகிதத்தைத்தான் அழிக்குது... பென்சில் சீவப் போனால் ஒடியுது... பால்பாயிண்ட் பேனாவுல, பாயிண்டே இல்ல. வாங்குன டேக்ல, ஒரு பக்கத்து முனை உதிரியாய் நிக்குது. அதனால இதையெல்லாம் சுட்டிக்காட்டி, அந்தக் கம்பெனிக்கு நாலு தடவை லட்டர் போட்டோம்... நாலு தடவையும் ரிஜிஸ்டர்லயே அனுப்பும்படியாய் சொன்னேன். நீங்க ஒரு தடவை கூட ரிஜிஸ்டர்ல அனுப்பல... ஒங்க லெட்டரே கிடைக்கலேன்னு அவன் சொன்னால், பதில் சொல்ல வேண்டியது நீங்களா? நானா? சொல்லுங்க...”

     அன்னம், பதில் சொல்ல முடியாமல் திணறியபோது, உமா உள்ளே வந்து சீல் போட்டு, ‘ரகசியம்’ என்று கொட்டை எழுத்துக்களில் சுட்டிக் காட்டிய ஒரு கவரை அவனிடம் கொடுத்துவிட்டு, அன்னம் போவதற்காகக் காத்திருந்தாள். சரவணன் தொடர்ந்தான்.

     “மிஸ் உமா... நீங்க அப்புறமாய் வாங்க... உம்... அன்னம்... சொல்லுங்க...”

     அன்னம் மருவினாள். உமா மட்டும் மிஸ் உமாவாம் நான் வெறும் அன்னமாம்... அவளால் பதிலளிக்க முடியவில்லை. அவன் சொல்வது உண்மையே. அவளால் உண்மையை ஒப்புக்கொள்ள முடிந்தது. ஆனாலும் ஆட்டுவித்த உண்மையின் பின்னணியை சொல்லத்தான் அவளால் முடியவில்லை. அவனை, பயந்துபோய் பார்த்தபோது, அவன் அதட்டினான்.

     “இனிமேலும்... சொல்றதுக்கு மாறாகச் செய்திங்கன்னால்... அப்புறம் நான் சொல்றதைக் கேட்க. நீங்க இந்த ஆபீஸ்ல இருக்க மாட்டிங்க, யு கேன் கோ நெள...”

     அன்னம், அரண்டு மிரண்டு போவதுபோல் போனாள். வாசல் பக்கம் நின்றபடி, அவனையே பார்த்தாள். வேலைக்கே உலை வைப்பான் போலுக்கே. அப்புறம் சித்தி, வீட்ல சரியாய் உலை வைக்கலைன்னு அவமானமாய் திட்டுவாளே... அன்னம், நின்ற இடத்திலேயே நின்றாள்.

     ‘கான்பிடன்ஷியல்’ கவரைப் பார்க்கப்போன சரவணன், அன்னத்தை நிமிர்ந்து பார்த்தான். அவள் இன்னும் போகாமல் இருப்பதில் ஆச்சரியப்பட்டு, அவளைத் தன்னருகே வரும்படி சைகை செய்தான்.

     “எதுவும் சொல்லணுமா?”

     “வந்து வந்து... மெமோ... இன்னும் எனக்கு புரபேஷன் பீரியடே முடியல...”

     “என்னாலே. ஒங்க வேலைக்கு ஆபத்து வராது. அதே சமயம். நீங்க இனிமேலும் ரிஜிஸ்டரை... ஆர்டினரியாக்கினால், நான் எக்ஸ்ட்ராடினரி நடவடிக்கை எடுப்பேன்...”

     அன்னம் பயந்துவிட்டாள். சொல்லித்தான் ஆக வேண்டும். சொல்லியே தீரவேண்டும்.

     “ஸார்... ஸா... ஸா...”

     “என்ன... சொல்லுங்க...”

     “ஹெட்கிளார்க் அம்மாதான் ரிஜிஸ்டர்ல வேண்டாம்... சாதாவா அனுப்புன்னு சொன்னாங்க. ‘அஸிஸ்டென்ட் டைரக்டர் சொல்றாரே’ன்னு சொன்னேன். பக்கத்துல நின்ன ஏ ஒ ‘ஆபிஸருங்க ஆயிரம் சொல்லுவாங்க... ஒனக்கு இமிடியட் பாஸ் ஹெட்கிளார்க்தான். சொல்றைதைச் செய்’னு சொன்னாரு... அவங்களும், தபால் தலைங்க அதிகமாய் ஆகுதேன்னு தான் சொன்னாங்க...”

     சரவணன், எழுந்திருக்கப் போகிறவன்போல், நிமிர்ந்தான். ஆச்சரியம், முகத்தில் தாண்டவ மாடியது.

     “என்னம்மா நீங்க... மெமோ கொடுக்கும் போது இதைச் சொல்லியிருக்கலாமே. நான் ஒங்கள களிமண்ணுன்னுல்லா நினைச்சுக் கொடுத்தேன்.”

     “நான் களிமண் இல்ல கிராஜுவேட்.”

     “நீங்க களிமண்ணு இல்லன்னு ஒத்துக்க மாட்டேன்... என்கிட்ட ஏன் இதைச் சொல்லல?”

     “எப்படி ஸார்... காட்டிக் கொடு... கொடுக்கது?”

     “இப்போ மட்டும் சொல்றீங்க?”

     “இனிமேல் சொல்லாட்டால் வேலைக்கே. ஆப...”

     சரவணன், அப்போதுதான் அவளை ஒரு பொருட்டாகப் பார்த்தான். தேறாத கேஸ் என்று அவன் தள்ளி வைத்திருந்த அவள் மனம் எவ்வளவு விசாலமாய் இருக்குது! இதுபோல் மூளையும் அழுத்தமாய் இருந்தால், எவ்வளவு அருமையாய் இருக்கும். மனமும், மூளையும் வடமிழுக்கும் போட்டி போல் ஒன்றை ஒன்று தன்பக்கம் இழுக்கப் பார்க்கும் காலமிது. மூளைக்காரர்கள், இதயத்தை மூளையிடம் ஒப்படைத்து, மற்றவர்களுக்கு இதய நோயை ஏற்படுத்துகிறார்கள். விசாலமான இதயக்காரர்கள், மூளையை சுத்தமாக வைக்கிறார்கள். பேலன்ஸ் இல்லாத மனிதர்கள்... மனிதச்சிகள்...

     சரவணனும். அவளை ‘பேலன்ஸ்' இல்லாமல் பார்த்தான். அறிவுபூர்வமாகப் பார்க்காமல், இதயப்பூர்வமாகப் பார்த்தான். இவள் அரட்டையடித்துக் கேட்டதில்லை. எவரையும் ஒரு மாதிரி பார்ப்பதைப் பார்த்ததில்லை. லேட்டாக வந்ததில்லை. இந்த அலுவலகத்தில் தன்னிடம் வந்து மற்றவர்களைப் புறம் பேசாதவர்களே கிடையாது. ஆனால் இவள்...

     “எங்கே படிச்சீங்க...?”

     “மதுரையில்... காலேஜ்ல...”

     “நீங்க கிராஜுவேட்டா...”

     “எக்னாமிக்ஸ்ல, ஹை செகண்ட் கிளாஸ் ஸார்...”

     “ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் எழுதித்தானே வந்தீங்க?”

     “ஆமாம், ஸார்... யூ.டி.ஸியாய் செலக்ட் ஆனேன், ரெண்டு வருஷத்துக்கு முன்னாலேயே...”

     “யூடிஸியாய் சேர்ந்திருக்கீங்க. அப்புறம் ஏன் இந்த டெஸ்பாச்சை கட்டிட்டு அழுகிறீங்க? ஏன்னு... சொல்லுங்க...”

     “இதத்தான் கொடுத்தாங்க...”

     “நீங்க கேட்கலியா...”

     “கேட்டேன்... ‘கோட்டாவுல’ வாரவளுக்கு கொட்டேஷன் வராதுன்னு சொன்னாங்க.”

     “ஐஸீ... நீங்களும் வேலையை தெரிஞ்சுக்க விரும்பல.”

     “கேட்டுப் பார்த்தேன்... சொல்லிக்...”

     “நான் மெமோ கொடுத்தேனே... அந்த ஆபீஸ் காபியை ரிஜிஸ்டர்ல எழுதச் சொன்னாங்களா? ஒங்க கிட்டே கையெழுத்து வாங்கினாங்களா?...”

     “ஆமாம் ஸார்...”

     “என்ன? ‘என்ட்ரி’ போட்டாங்களா? கையெழுத்தும் வாங்குனாங்களா? யூஸ்லெஸ்...”

     “ஆமா. யார்... எதுக்காக...”

     “ஒண்ணுமில்ல. நீங்க போகலாம்...”

     அன்னம், தயங்கித் தயங்கி நடந்தாள். ‘யூஸ்லெஸ் என்றாரே... சீ என்றாரே... யாரை? யாரைச் சொல்றார்... என்னைத்தான். என்னையேதான்...”

     சரவணன், காலிங் பெல்லை அழுத்தினான். ஓடி வந்த பியூனிடம், “ஹெட் கிளார்க்கையும், ஏ.ஓ.வையும் அன்னத்தோட பெர்சனல் பைலோட வரச்சொல்லுங்க...” என்றான்.

     சரவணன் அந்தக் ‘கான்பிடன்ஷியல்’ கவரைப் பிரிக்கப் போனான். ‘இப்போ அவங்க வருவாங்க... அப்புறம் படிக்கலாம். என்ன பெரிய கான்பிடன்ஷியல்... அந்தரங்கக் குறிப்பேடாய் இருக்கும்... இல்லைன்னா... ‘செக்யூரிட்டி ஏற்பாடு எப்படின்னு’ கேட்டிருப்பாங்க...”

     நிர்வாக அதிகாரி செளரிராஜனும், தலைமை கிளார்க் பத்மாவும் ஜோடியாக வந்து, ஜோடியாகவே உட்கார்ந்தார்கள். அவருக்கு ஐம்பது வயதிருக்கும். காதோரம் தெரிந்த நரை, அவர் தலைக்கு டை அடித்திருப்பதைக் காட்டியது. இந்த லட்சணத்தில் லேசாக ஒரு சின்னக் குடுமி. வெளியே தெரியாது. பத்மாவுக்கு முப்பத்தைந்து தேறும். அவள் போட்டிருந்த பிராவுக்கு ‘இருபது’ இருக்கும். அவனுக்கு எப்படியோ. அவள் கவர்ச்சிதான். செளரிராஜன், சீல் கவரைப் பார்த்தபடியே கேட்டார்.

     “இது அன்னத்தோட பெர்சனல் பைல் ஸார்... என்ன ஒரு நாளும் இல்லாமல் லேட்டு...?”

     சரவணன் பதிலளிக்கவில்லை. அவன் கரங்கள் அன்னத்தின் பெர்சனல் பைலைப் புரட்டின. அவன் கொடுத்த ‘மெமோ’, அவள் ‘பெற்றுக் கொண்டேன்’ என்று எழுதி கையெழுத்திட்ட வாசகத்தோடு கெட்டியாக இருந்தது. எரிச்சலை அடக்கியபடியே கேட்டான்.

     “அன்னத்துக்குக் கொடுத்த மெமோவை பைல்ல போட வேண்டாம். கிழிச்சிடுங்கன்னு சொன்னேன். நல்லாத்தான் வச்சிருக்கீங்க.”

     “நாம் கையெழுத்துப் போட்டதை நாமே கிழிக்கப்படாது ஸார். அப்புறம் ஆபீஸ்ல குளிர் விட்டுடும்.”

     “குளிர் விடாமல் இருக்கத்துக்கு... கொடுத்தது மாதிரி மெமோ. அந்தக் குளிர்... மலேரியா ஜூரமாய் மாறாமல் இருப்பதற்கு, அதை, அவங்களுக்குத் தெரியாமல் கிழிக்கிறது... இது சட்ட விதிகளுக்குப் புறம்பானதுதான். ஆனால் அதன் உணர்வுக்கு எதிரானது அல்ல. குறைந்த பட்சம், ‘ஒங்க மெமோவை கிழிக்கப்படாது’ன்னு நீங்க என்கிட்டேயே சொல்லியிருக்கலாம். நீங்க இப்படி நடப்பிங்கன்னு நான் நினைக்கல. திருக்குறளில் ‘கடிதோச்சி மெல்ல எறிக’ன்னு ஒரு இடத்துல வரும். கீழே இருப்பவங்களை கன்னத்துல அடிக்கலாம். வயித்துல அடிக்கப்படாது என்று அர்த்தம் அதுக்கு.”

     “நீங்க இப்படிப் பேசுவீங்கன்னு நானும் நினைக்கவே இல்ல ஸார். நம்முடைய கையெழுத்தை நாமே கிழிக்கப் படாதுன்னு தான்...”

     “சரி... இந்த ஹெட்கிளார்க் மேடத்துக்கு போனவாரம் ஒரு மெமோ கொடுத்தேன். அதுலயும் அழுத்தமாய்த்தான் கையெழுத்துப் போட்டேன். அப்போ. அதை நீங்க எடுத்துட்டு வந்து ‘பாவம், குட் ஒர்க்கர் ஸார் டிஸ்கரேஜ் பண்ணப்படாது’ன்னு சொன்னிங்க கிழிச்சுப் போடுங்கன்னு சொன்னேன். நல்லாத்தான் கிழிச்சிங்க... பட்... அன்னமுன்னு வந்தால்...”

     செளரிராஜன் திண்டாடிப் போனார். பத்மா தலை காட்டினாள்.

     “நானே யோசித்தேன்... இந்த அன்னம். ரெண்டு வருஷமாய் வேலை பார்க்கிறாள். தானாய் செய்யத் தெரியாட்டாலும், சொல்றதையாவது செய்யணும். நாலு லெட்டருங்களையும் ரிஜிஸ்டர்ல அனுப்பச் சொன்னீங்க. ஆர்டினரியாய் அனுப்புறாள். ‘செளநா மார்ட்’ கம்பெனிக்காரன், டைரக்டருக்கு ஏதாவது புகார் கொடுத்து, அதுல. ‘என்னோட குறைகளைச் சுட்டிக் காட்டி ஒரு லெட்டர் கூட வரலனு’ எழுதினால்... நீங்கதான் மாட்டிக்கணும்... அதனாலதான் யோசித்தேன்.”

     திடீரென்று பத்மா உதடுகளைக் கடித்தாள். அவள் முதுகை நிர்வாக அதிகாரி பிராண்டுவதையும் சரவணன் கவனித்தான். கோபத்துடன் கேட்டான்.

     “நீங்க பெரியவங்க எனக்காக யோசித்ததுல மகிழ்ச்சி. அதை என்கிட்டேயும் முன்னாலேயே சொல்லி இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாய் இருக்கும்...”

     அவன் எந்த அர்த்தத்தில் சொல்கிறான் என்பது புரியாமல் பத்மா விழித்தபோது, செளரிராஜன் சமாளித்தார்.

     “இப்போ என்ன ஸார் வந்துட்டு... இதோ நானே கிழிச்சுடுறேன்.”

     “நோ... நோ... நான் இன்னும் ஒரு முடிவுக்கு வர்ல... போகட்டும்... அன்னத்தோட அபீஷியல் டிஸிக்னேஷன் என்ன?”

     “யு.டி.ஸி. கோட்டாவுல வந்தவள்.”

     “ஐ.ஸி... அப்புறம் அக்கெளண்ட் செக்ஷனில் இருக்கிற சந்தானத்தோட டிஸிக்னேஷன்?”

     “எல்.டி.ஸி.”

     “ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலம் வந்தாரா?”

     “வர்ல... ஆனால் வேலையில் சூரன். நாலு வருஷமாய் டெம்பரரியாய் இருக்கான். நாமதான் ஏதாவது...”

     “நான்கு வருஷமாய், எல்டிஸி வேகன்ஸி இருக்குதுன்னு ஆபீஸ்ல இருந்து, கமிஷனுக்குத் தெரியப்படுத்தலேன்னு நினைக்கிறேன்.”

     “ஆமா ஸார். அப்படி எழுதுனால், பாவம் சந்தானத்துக்கு வேலை போய்விடும். இன்னும் ஒரு வருஷம் தள்ளிட்டால்... டிபார்ட்மெண்டுக்கு எழுதி. ரெகுலரைஸ் செய்திடலாம்.”

     “குட். செய்யணும்... அப்புறம் இந்த அன்னத்துக்கு வேற செக்ஷன் ஏதாவது கொடுத்தீங்களா...?”

     “அதுக்கு ஒரு இழவும் தெரியாது ஸார். டெஸ்பாட்சையே சரியாய் பார்க்கத் தெரியல்ல...”

     “என் கேள்வி... எந்த செக்ஷனையாவது கொடுத்தீங்களா என்கிறதுதான்...”

     “கொடுக்கலே ஸார்... விஷப் பரிட்சை நடத்த முடியுமா? முயலைப் பிடிக்கிற நாயை மூஞ்சைப் பார்த்தாலே தெரியுமே...”

     “ஸோ... அதனால... அந்தப் பெண்ணுக்கு விஷத்தைக் கொடுத்திட்டிங்க... முயலைத் துரத்துவது மாதிரி அவளைத் துரத்துறீங்க... தண்ணீருக்குள் பார்க்காமலே... அவளுக்கு நீச்சல் தெரியாதுன்னு ஒரு முடிவுக்கு வந்திட்டிங்க...”

     “ஸார்... ஸார்... ரொம்ப இன்ஸல்டிங்காய்...”

     “நான் பேசுறது இன்ஸல்டுன்னால், நீங்க செய்தது மானக் கொலை. எஸ்.எஸ்.எல்.சி. படித்த ஒரு சந்தானத்தை எப்படியோ வேலையிலே சேர்த்து, அக்கெளண்ட்ஸைக் கவனிக்கச் சொல்லலாம்... அவரு இருக்கிற கிளார்க் வேலையை... ஸ்டாப் செலக்ஷன் கமிஷனுக்கு முறைப்படித் தெரியப்படுத்தாமல், சட்டவிரோதமாய் இருக்கலாம்... அப்புறம் நாலைஞ்சு வருஷத்துக்குப் பிறகு... அந்த சட்ட விரோதத்தையே ஆதாரமாக்கி... சட்டப்படி அவரை நிரந்தரமாக்கலாம்... அதே சமயம்... ஒரு கிராஜுவேட் பெண்... கமிஷன்ல பரீட்சை எழுதி பாஸாகி... இண்டர்வியூவில் தேறி... யு.டி.ஸி.யாய் வாராள்... அவளுக்கு விசாரணை இல்லாமலே தீர்ப்பளிச்சு, சமஸ்கிருத மந்திரம் மாதிரி சட்டதிட்டங்களை மறைச்சு, அவளை கன்டெம்ட் செய்து டெஸ்பாட்ச்லே போட்டுடலாம். ஏன்னா... சந்தானம் பட்டா போட்டு வேலைக்கு பரம்பரையாய் வாரவரு... அன்னம் கோட்டாவுல வந்தவள். அப்படித்தானே ஸார்...?”

     “ஸார் ரொம்ப இன்சல்டிங்கா...”

     “ஓங்ககிட்ட வேற எப்படிப் பேசுறது? ஒங்களுக்கு ஹரிஜனப் பெண்ணுன்னால், ஒன்றும் தெரியாதுன்னு நினைக்கிற சட்டவிரோத சமூக விரோத சிந்தனை, ஆல்ரைட்... நான் சந்தானத்தையும் காப்பாத்துவேன். அன்னத்தோட அபிஷியல் நிலையையும் காப்பாற்றணும். சந்தானத்தை டெஸ்பாட்ச் செக்ஷன்லே போடுங்க... ஆபீஸ் ஆர்டர் போட்டாகணும்... அன்னம் ‘நேட்டிவ் இண்டலிஜெண்ட்’ கேர்ல்... படித்த ஹரிஜனங்களோட திறமை, வெட்டியெடுக்கப்படாத தங்கம் மாதிரி... தூசி படிந்த கண்ணாடி மாதிரி... நாம் தங்கத்தை வெட்டியெடுக்கணும்... ஏதோ ஒரு பித்தளை இருக்குதுன்னு தங்கத்தை புதைச்சுடப் படாது... கண்ணாடியைத் துடைச்சுப் பார்க்கணும்... கைக் கண்ணாடி போதுமுன்னு, அதை உடைச்சுடப் படாது. இந்த மாதிரி வேற ஏதும் கோளாறு இருக்குதா...?”

     “இல்ல ஸார்... அன்னம் கோளாறுதான்...”

     “அன்னம் கோளாறுயில்ல... ஆபீஸ்தான் கோளாறு. நானும் ஏழைக் குடும்பத்துல, ஹரிஜனங்களோட மோசமான பேக்ரவுண்டில் வந்தவன். எனக்குத் திறமை இருக்குதுன்னு நீங்க ஒத்துக்கிட்டால். அன்னத்திடமும் அடையாளம் காணாத திறமை இருக்குமுன்னு நீங்களே ஒத்துக்கப் போறீங்க. ஓ.கே. ஆபீஸ் ஆர்டர் இஷ்ஷு பண்ணுங்கோ... நான் இன்றைக்கே எப்படியும் கையெழுத்துப் போட்டாகணும். அன்னத்தோட பெர்சனல் பைல் இங்கேயே இருக்கட்டும்...”

     அஸிஸ்டெண்ட் டைரக்டராக ஆவதற்கு ஆசைப்பட்ட செளரிராஜனும், அவரது இதயத்தில் இடம் பிடித்திருப்பதுபோல், அவர் இப்போது அமர்ந்திருக்கும் நாற்காலியையும் பிடிக்க நினைத்த பத்மாவும் பயந்து போனார்கள். அவர்களின் ‘அந்தரங்கக் குறிப்பேடுகளில்’ கை வைத்து விட்டால்...?

     ‘இந்த அன்னம் திமிர்பிடிச்ச சேரிக்கழுதை... இந்த கிறுக்கன் கிட்டே என்னவெல்லாமோ சொல்லிக் கொடுத்திருக்காள். இருக்கட்டும்... இருக்கட்டும்... எத்தனை நாளைக்கு இந்த சரவணன் ஆட்டம்? இதோ... இந்தக் கவரை உடைச்சுப் பார்த்தாமுன்னால், தெரியும்... ஒரேடியாய் உடையப் போறான்... அணையப்போற விளக்கு கொழுந்துவிட்டு எரிகிறது மாதிரி குதிக்கான்.

     செளிராஜனும், பத்மாவும் கொந்தளிப்போடு போனபோது, சரவணன் அந்த ரகசிய உறையைக் கிழித்து, ரகசிய ரகசியமான கடிதத்தை அம்மண மாக்கினான். விடுநர் முகவரியைப் பார்த்து, நெற்றி சுருங்கியது. படிக்கப்படிக்க உதடுகள் துடித்தன. கண்கள், உடனடியாக எரிந்தன. தொண்டைக்குள் ஏதோ ஒன்று பூதாகாரமாய் மேலும் கீழும் நகர்வது போலிருந்தது. ஏதோ ஒரு சுமை, ஆகாயத்தில், இருந்து எழுந்து அவன் தலையை அழுத்தப் பற்றியது போலிருந்தது. எதிர்பாராத அதிர்ச்சி... எண்ணிப் பார்க்க முடியாத கடிதம். அவனின் மூன்றாண்டு கால அலுவலக அனுபவத்தில், இப்படி ஒரு கடிதம் மற்றவர்களுக்கு வந்ததாகக் கூட அவன் அறிந்ததில்லை.

     சரவணன், தன்னையறியாமலே எழுந்தான். எவரிடமாவது சொல்லியாகவேண்டும். கதவுக்கு வெளியே எட்டிப் பார்த்தான். பிறகு அந்த அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாய் அலைந்தான். மீண்டும் இருக்கையில் உட்கார்ந்து, அந்தக் கடிதத்தை எடுத்தான். துஷ்டி ஒலைபோல் வந்த அதையும் கிழிக்கக்கூடப் போனான். வாய் பின்னி விரிந்தது. கைகள் பின்னி, ஒன்றை ஒன்று நெரித்துக் கொண்டன.

     திடீரென்று இரண்டு பேர் வந்து, உள்ளே நுழைகிறார்கள். தன்னையும். சமூக நெறிகளையும் தேடிக் கொண்டிருந்த அவன் தனிமையைப் பன்மையாக்கினார்கள். ஒருவர், அவன் தூரத்து உறவு பள்ளிக்கூட மேனேஜர். இன்னொருவர் காண்டிராக்டர்., ஜெகதலப் புரட்டர்கள். சரவணன், மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான்.

     “உட்காருங்க.”

     “எங்களை ஞாபகம் இருக்குதா...?”

     காண்டிராக்டர் கண்ணடித்துப் பேசினார்.

     “அவனுக்கு இப்போல்லாம் கண்ணு தெரியுமா...”

     “எப்படி இருக்கீங்க...”

     “நாங்க என்னப்பா... கிராமத்து ஆட்கள். ஒன்னை மாதிரியா ஆயிரம் ஆயிரமாய் சம்பாதிக்கோம்?”

     “எப்போ... வந்தீங்க?”

     “ஒரு விஷயமாய் வந்தோம்... அப்படியே ஒன்னையும் பார்த்துட்டுப் போகலாமுன்னு வந்தோம். இவரை பொதுப்பணித் துறையில் பிளாக்லிஸ்ட் செய்திருக்காங்க... ஆறுமாதமாய் காண்டிராக்ட் வராமல் அவஸ்தைப் படுறார்... நீ... அந்த டிபார்ட்மெண்ட்ல. யாருக்காவது...”

     “எனக்கு யாரையும் தெரியாதே...”

     “செகரட்டேரியட்ல கேட்டோம்... ஒன்கூட முஸொரியிலயோ எதுலயோ டிரெயினிங் எடுத்தவரு... அந்த டிபார்ட்மெண்ட்ல டெபுடி செகரட்டரியாய் இருக்கார்... பெயர்... கமலேக்கர்...”

     “கமலேக்கரா? நல்ல பையன்... நேர்மையானவன்...”

     “ஒரு சின்ன போன் போட்டு...”

     “இவர் என்ன தப்புப் பண்ணுனாராம்?”

     “என்னத்தையோ ஒரு கட்டிடத்தை சரியாய் கட்டலியாம்... எவன் யோக்கியமாய் கட்டுறான்?”

     “டில்லிலயும், பெங்களுர்லயும்... ரெண்டு கட்டிடங்கள் இடிஞ்சு. பலர் செத்தாங்க பாருங்க... அது மாதிரி ஆகப்படாது பாருங்க...”

     “என்னமோப்பா... எதாவது செய்... விதி முடிஞ்சவன் சாவான்.”

     “கமலேக்கர், இதுல ரொம்ப கண்டிப்பு...”

     “சும்மா பேசிப் பாரேன்.”

     “இந்த மாதிரி விஷயத்துல, நான் அதைவிடக் கண்டிப்பு...”

     “ஏதோ ஊர்க்காரனாச்சேன்னு வந்தோம். ஒனக்கு இப்போ... எங்கே கண்ணு தெரியும்?"

     சரவணன் வெடித்தான்.

     “நீங்க என்னமோ... நான் ஊர்ல பட்டினி கிடக்கும் போது. தானம் செய்தது மாதிரியும், நான் அதுல படிச்சுட்டு, இப்போ நன்றி இல்லாதது மாதிரியும் பேசுறீங்க... ஊருக்கு எத்தனையோ தடவை வந்திருக்கேன். ஒங்க ரெண்டு பேர்ல... யாராவது ‘எப்போ வந்தேன்’னு கேட்டிருப்பீங்களா? நல்ல விஷயங்களுக்கு வந்தால் செய்யலாம். ஒங்க அயோக்கியத் தனத்துக்கு நான் உடந்தையாக இருக்க முடியுமா? அப்புறம் வேற எதுவும் விஷயம் உண்டா? நான் இப்போ பிஸியாய் இருக்கேன்.”

     ஊரிலிருந்து வந்தவர்கள், வாயடைத்துப் போனார்கள். பிறகு, சிறிதுநேரம் கடித்துக் குதறுவது மாதிரியாக அவனையே பார்த்துவிட்டு, இருவரும் சேர்ந்தாற்போல், வாசலுக்குள் நுழைந்து, அப்புறம் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினார்கள். சிறிது நேரம்வரை, தன்னை மறந்த சரவணனுக்கு, அப்போதுதான் நிலைமை புரிந்தது. அவர்கள் அயோக்கியர்கள்தான். ஏழை பாளைகள் வயிற்றில் அடிப்பவர்கள்தான். ஆனாலும், இவர்கள் பேச்சே இப்படித்தான். இவர்களை இப்படிப் பேசி அனுப்பியிருக்கக் கூடாது... சொன்ன கருத்தையே, வேற மாதிரி சொல்லி இருக்கலாம். எனக்கு... என்ன வந்தது? இன்றைக்கு என்ன வரணும்? இந்த லெட்டரைவிட வேற என்ன வரணும்...?

     சரவணன், நாற்காலியில் சாய்ந்து கொண்டான். சில சமயம் கோபத்தால் அதன் நுனிக்கு வந்தான். பின்னர், உணர்வுகளை கட்டுப்படுத்தியபடியே மீண்டும் நாற்காலியில் அப்படியே சாய்ந்து கொண்டான். திடீரென்று எதையோ நினைத்துக்கொண்டு, அந்தக் கடிதத்தைப் படித்தான். பல, தற்செயலான சம்பவங்கள் அவன் மனத்தில் நிழலாடின. எல்லாம் திட்டமிட்டு எழுதப்பட்டிருப்பது போல் தோன்றுகிறது. செளரிராஜன் சொல்லச் சொல்ல. இந்த பத்மா எழுதியிருப்பாள். அவன் கையெழுத்துப் போட்டிருப்பான். வெளியே மனித நேயர்களாய் சிரித்தபடியே, உள்ளுக்குள் ஓநாய்த்தனத்தை மறைத்துக் கொள்ள இவர்களால் எப்படி முடிகிறது? ‘சீ... நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு’ என்ற பாரதியார் பாடலைத்தான், இவர்களுக்குப் பாடிக் காட்டணும்... அப்போவும்... பாட்டைக் கேட்டதுக்குக் கூலி கேட்கும் ஜென்மங்கள்.

     சரவணன், நிதானப்பட்டான். கால்மணி நேரம் நாற்காலியில் சாய்ந்து கிடந்தான். இது போராடித் தீரவேண்டிய பிரச்சினை. அறிவை ஆயுதமாகவும், நேர்மையைக் கேடயமாகவும் வைத்து, இரண்டில் ஒன்றைப் பார்க்க வேண்டிய பிரச்சினை. கடைசியில் ஆபீஸ் பியூன்கள் அடைக்கலமும், சிதம்பரமும் கூட காலை வாரிவிட்டதுதான் அவனுள் தாளமுடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரவணன், கால்மணி நேரம், நாற்காலியில் சாய்ந்து கிடந்தான். பிறகு, பியூன்களை வரவழைத்தான்.

     “கூப்பிட்டீங்களாமே ஸார்...”

     “சிதம்பரம்!... ஒங்களுக்கு ஞாபகம் இருக்குதா. மூன்று மாதத்துக்கு முன்னால, என் குடும்பத்தோட தட்டுமுட்டுச் சாமான்களை... ரயில்வே நிலையத்தில் இருந்து வீட்டுக்குக் கொண்டு வருவதற்கு டெம்போ எங்கே பிடிக்கலாமுன்னு ஒருத்தருக்கு போன்ல கேட்டேன்... உடனே, அடைக்கலம் குறுக்கே வந்து, நம்ம காண்டிராக்டர் கிட்டயே, டெம்போ இருக்குது. தூக்கிட்டு வாடான்னு சொன்னால் வாரான்னு சொன்னது ஞாபகம் வருதா?”

     “ஞாபகம் இருக்குது ஸார்... நல்லாவே இருக்குது.”

     “உடனே நான், கம்பெனிக்காரன் சமாச்சாரம் வேண்டாம். வேற கம்பெனியைப் பாருங்கன்னு சொன்னேனா... இல்லியா?”

     “ஆமாம் ஸார்... சொன்னிங்க...”

     “அப்புறம்... சிதம்பரம் கைல நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து. டெம்போவுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னேன்... நீங்க ரெண்டுபேரும் சாமான்களை இறக்கிப் போட்டுட்டு... மறுநாள் என்கிட்டே 14 ரூபாய் 70 பைசா மிச்சமுன்னு நீட்டினீங்க. நான், உடனே ஒங்களையே அந்தப் பணத்தை வச்சுக்கச் சொன்னேன்... இல்லையா?”

     “ஆமாம் ஸார்...”

     “சரி... இப்போ எனக்கு ஒண்ணு தெரியணும். எந்தக் கம்பெனி டெம்போவை ஏற்பாடு செய்தீங்க? சொல்லுங்க அடைக்கலம்...”

     “வந்து... வந்து... பேர் மறந்துபோச்சு ஸார்...”

     “நான் சொல்றேன்... காண்டிராக்டர் டெம்போவை எடுத்துட்டுப் போனீங்க... இல்லையா? தலையைச் சொறியாதீங்க... சொல்லுங்க...”

     “ஆமாம் ஸார்...”

     “ஆனால், அவருக்கு டெம்போ சார்ஜ் கொடுக்கல... ஆபீஸருக்குத் தானேன்னு. அவரும் சும்மா இருந்துட்டார். இல்லையா?”

     “நான்... நான் கொடுக்கத்தான் செய்தேன் ஸார்... அவரு... வாங்கமாட்டேன்னுட்டாரு...”

     “இதை என்கிட்ட சொன்னீங்களா? 14 ரூபாய் எழுபது பைசான்னு... கணக்காய் வேற கொடுத்தீங்க...”

     சிதம்பரம் அடைக்கலத்தைச் சாடினார்.

     “அட பாவிப்பயலே... படுபாவியே... அய்யாகிட்டயும் பிராடுத்தனம் பண்ணிட்டியா? ஸார். இந்த பிராடுகிட்ட... அன்றைக்கே சொன்னேன்... யார் கிட்ட வேணுமுன்னாலும் பிராடு பண்ணுடா. ஆனால் இந்த சரவணன் சாரு நேர்மையாய் இருக்கிறவரு. அவர் பேச்சும் நடையும் நல்லாவே காட்டுது. வாணாண்டா வாணாண்டான்னேன். சத்தியமாய் சொல்றேன் ஸார். அன்றைக்கு நான் வெளியூர் பூட்டேன்... பாக்கித் தொகையை ஒங்ககிட்டே கொடுக்கதுக்கு... என்னையும் ஏன் ஒங்க கிட்டே கூட்டிட்டு வந்தாமுன்னு இப்போதான் புரியது... நீங்க கொடுத்த மீதிப் பணத்துல ஒரு சிங்கிள் டீ தான் வாங்கிக் கொடுத்தான் ஸார்... இப்ப என்ன ஸார்... பழையதுல்லாம்...”

     “ஒண்ணுமில்ல. ஆனால், அடைக்கலம் இப்படி செய்திருக்கப் படாது... அதுவும் இந்த மாதிரி ஒரு பெயரை சுமந்துகிட்டு...”

     “ஏய். பிராடு... அய்யா மன்சு எவ்வளவு உடைஞ்சிருந்தால் இப்படிப் பேசுவாரு... இவரு கிட்டயே பிராடுத்தனம் பண்ணிட்டியேடா... வெளில வா...”

     “இந்த விஷயம் வெளில போகப்படாது... யார் கிட்டயும் சொல்லப்படாது.”

     “ஆமாம் ஸார்... இங்க ஆளை விக்கிற பசங்க ஜாஸ்தி...”

     பியூன் அன்பர்கள் போய்விட்டார்கள். சரவணனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இந்த சிதம்பரத்தால் எழுந்துள்ள பிரச்சினைக்கு எப்படிப் பதிலளிப்பது? அவனை எப்படிக் காட்டிக் கொடுப்பது?

     சரவணன், அன்னத்தின் பெர்சனல் பைலைப் புரட்டினான். இறுதியில், அவன் கொடுத்த மெமோ இருந்தது. இதை மேலிடத்திற்கு எடுத்துச் சொன்னால், அவன் காண்டிராக்டருக்கு அனுப்பிய தாக்கீதுகள் உறுதிப்படும். சரவணன் யோசித்தான். அப்படி எழுதினால் அவளுடைய மெமோவையும் கிழிக்க முடியாது. அவளும், அப்புறம் உத்தியோகத்தில் தேற முடியாதே. மற்றவங்களுக்கு டில்லியில் ஆட்கள் உண்டு. இவளுக்கு இவள்தானே... அதுக்கு என்ன செய்யுறது? தனக்கும் போகத்தான் தானம்... நானே மாட்டிக் கொள்ளும்போது, யார் மாட்டினால் என்ன... மாட்டாவிட்டால் என்ன?

     சரவணன், சிந்தனையுள் மூழ்கினான். நீண்ட நேரத்திற்குப் பிறகு, ஒரு முடிவுக்கு வந்ததுபோல், தலையை ஒரு தடவை ஆட்டிவிட்டு, அன்னத்திற்குக் கொடுக்கப்பட்ட மெமோவில் மடமடவென்று எழுதினான். பிறகு, எழுதிமுடித்த கையோடு இன்டர்காமில், செளரிராஜனுடன் பேசினான்.

     “அக்கெளண்டண்ட், மிஸ்டர் ராமச்சந்திரனையும் கூட்டிட்டு வாங்கோ... மிஸ் உமா... நீங்களும் வாங்க...”

     செளரிராஜன், ராமச்சந்திரன், உமா ஆகியோர் வந்து உட்கார்ந்தார்கள். சரவணன், அவர்களை ஏற்ற இறக்கமாகப் பார்த்துவிட்டு, அந்த ரகசியக் கடிதத்தை உமாவிடம் கொடுத்தான். “சத்தமாய் படிக்கணும். அவங்க ரெண்டு பேருக்கும் சேர்த்துப் படிங்க.” என்றான்.

     உமா அந்தக் கடிதத்தை அதற்குள்ளேயே மனப்பாடம் செய்துவிட்டு, “அட கடன்காரா...” என்றாள். பிறகு கடிதத்தைப் படித்தாள். ஆங்கில வாசகம்... அதன் அர்த்தம் இதுதான்.

     “பேரன்புமிக்க டைரக்டர் அவர்களுக்கு,

     உங்கள் சென்னை கிளை அலுவலகத்திற்கு, கடந்த பத்து ஆண்டுகளாக, குறித்த நேரத்தில், குறிப்பிட்ட எழுதுபொருள் சாமான்களை ஒப்பந்த அடிப்படையில் எம் கம்பெனி கொடுக்கிறது. இதில் கம்பெனிக்கு லாபம் இல்லையானாலும், அரசாங்கத்துடன் தொடர்பு வைக்கும் வாய்ப்பிற்காக, இந்தப் பணியை செய்து வருகிறோம். இப்போது இருக்கும் உதவி டைரக்டர் திரு. சரவணனைத் தவிர, இதற்கு முந்திய அதிகாரிகள். எங்களை வாயால்கூட குறை கூறியது கிடையாது. இது இப்படி இருக்க, அடுத்த காண்டிராக்டிற்கும் எம் கம்பெனியின் கொட்டேஷன்தான் மிகக் குறைந்தது. ஆனால் திரு சரவணன், எங்கள் கம்பெனி கொடுத்ததைவிட, ஆயிரம் ரூபாய் அதிகமாகக் கேட்டிருக்கும் ‘சவுண்ட் ஸ்டேஷனரி’ கம்பெனியை சிபாரிசு செய்திருக்கிறார்.

     திரு சரவணன் எம் கம்பெனிமேல் காட்டமாக இருப்பதற்குக் காரணம் உண்டு. நாங்கள் முறைகேடாக எதுவும் செய்து பழக்கமில்லாதவர்கள். திரு. சரவணன், மூன்று மாதத்திற்கு முன்பு, எமது டெம்போ வண்டியைக் கேட்டார். வண்டியை அனுப்பினோம். பில் எண் 616. நகல் இணைக்கப்பட்டுள்ளது. டெம்போ வண்டியின் லாக்புக் எக்ஸ்டிராக்டும் வைக்கப்பட்டுள்ளது. பில்லை அனுப்பினோம். ஆனால், திரு சரவணன் உதவி டைரக்டர் என்ற ஆணவத்தில், பணம் கொடுக்காதது மட்டுமில்லாமல், எங்களைப் பார்க்க வேண்டிய சமயத்தில் பார்க்கவேண்டிய விதத்தில், பார்த்துக் கொள்வதாக மிரட்டியதைக் கூட நாங்கள் பெரிதுபடுத்தவில்லை. பணத்தையும் வசூலிக்கவில்லை. இப்போதுதான் அவரது மிரட்டல் புரிகிறது. அவர், எம் கம்பெனிக்கு, குறைகளைச் சுட்டிக் காட்டி, நான்கு தடவை கடிதங்கள் எழுதியதாகச் சொன்னது சுத்தப் பொய்; இதைத் தவிர. அவரிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாதுதான். அவர் சிபாரிசு செய்திருக்கும் சவுண்ட் ஸ்டேஷனரி கம்பெனி, மோசடிக்குப் பெயர் போனது. இவருக்கு அடிக்கடி பணம் கொடுக்கிறார்கள். இதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. இவை, தேவையானால் கோர்ட்டுக்குக் கொண்டு போகப்படும்.

     நல்லிதயம் படைத்த அக்கெளண்டண்டும், நிர்வாக அதிகாரியும் எம் கம்பெனிக்காக கொட்டேஷன்படி செய்த சிபாரிசு வரைவை உதவி டைரக்டர் அடித்து விட்டு, ஏதேச்சாதிகாரமாய், வேறு கம்பெனியை சிபாரிசு செய்திருக்கிறார். நாங்கள், பல்வேறு தொழில்களை நடத்துவதால், இந்தத் தொழிலை சரியாகச் செய்ய முடியவில்லை என்று அவர் வாதிடுவதும் அனாவசியமானது. ஆதாரமற்றது. மாநில அரசு, எம் கம்பெனி மீது நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட விவகாரம், இப்போது கோர்ட்டில் உள்ளது. இது, கோர்ட்டை அவமதிக்கும் சட்டப் பிரச்சினையாகும். இதனை, திரு. சரவணன், உங்களுக்குத் தெரியப் படுத்தியது. அசல் அவதூறாகும்.

     ஆகையால், சட்டப்படி, குறைந்த கொட்டேஷன் கொடுத்த எங்களுக்கு காண்டிராக்ட் கொடுப்பதுடன், திரு. சரவணன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.

இப்படிக்கு,
செளமி நாராயணன்
செளநா ஸ்டேஷனரி மார்ட்டிற்காக

     நீண்ட மெளனம். தலைமையிடம், சரவணனிடம் காமென்ட் கேட்டு எழுதிய கடிதம் புகார் கடிதத்துடன் இணைக்கப் பட்டிருந்தது. சரவணன் நிர்வாக அதிகாரியைப் பார்த்தான். செளரி நாராயணன் கம்பெனியை சிபாரிசு செய்யக் கூடாது என்று அவன் தெரிவித்தபோது, அவர் படபடத்தும், துடிதுடித்தும், ‘கிறுக்குப் பயல். ஆனால் நல்லவன் ஸார். பத்து வருஷமாய் நம்மோட தொடர்பு உள்ளவன் ஸார். பிழைச்சிட்டுப் போறான் ஸார்’ என்று பட்டும் படாமலும், அப்போது பேசியது அவனுக்கு இப்போது நினைவுக்கு வந்தது. அவரை விட்டுவிட்டு, சரவணன், அக்கெளண்டண்ட் ராமச்சந்திரனைப் பார்த்தான். அந்தக் கம்பெனியில், இந்த ஆசாமி பார்ட் டைம் வேலை பார்ப்பதாய் பேச்சு அடிப்பட்டதே... உண்மையாய் இருக்குமோ? இந்த உமா இப்போ நகத்தைக் கடிக்கிறாள். செளரி நாராயணன் வீட்டில், ஏதோ ஒரு விசேஷத்தின் போது இவள் போயிருந்தாளாம். போனதில் தப்பில்லை. ஒருவேளை அங்கே அவன் காதைக் கடித்திருப்பாளோ? அன்னத்திற்கு, நிர்வாக அதிகாரியும், தலைமை கிளார்க் பத்மாவும் போட்டிருந்த வாய்மொழி ஆணையையும் நினைத்துப் பார்த்தான். தாக்கீதுகளை, ரிஜிஸ்டரில் அனுப்பாமல் தடுத்திருக்கிறார்கள்.

     சரவணன் மெளனத்தைக் கலைத்தான்.

     “இப்போ... எனக்கு அந்தக் கம்பெனிக்காரன் பெரிசில்ல... எனக்குத் தெரிய வேண்டியது. நாம் தலைமை அலுவலகத்துக்கு ரகசியமாய் அனுப்பியதாக நம்பப்படும் கடிதத்தோட விவரங்கள், அவனுக்கு எப்படிக் கிடைத்தது என்பதுதான். எந்தக் கம்பெனியை சிபாரிசு செய்தோம், என்கிறதும், அந்தக் கம்பெனியோட ரேட்டும் அவனுக்குத் தெரிஞ்சிருக்கு. நாலு தடவை போட்ட லெட்டரும் வர்லேன்னு அந்த சத்தியேந்திரன் எழுதியிருக்கான், போகட்டும். நாம் ஹெட் ஆபீஸுக்கு எழுதின லெட்டர், ஒங்க மூன்று பேருக்கும், எனக்குந்தான் தெரியும். நான் சொல்லியிருக்க முடியாது. யார் சொன்னது? ஆபீஸ் ரகசியம் வெளியில் போவது ஒரு ஸீரியஸ் சமாச்சாரம்.”

     இந்த மூவரும் சீரியஸாக இருந்தார்கள். ஒவ்வொருவரும் சரவணனைப் பார்த்துவிட்டு, மற்ற இருவரையும் பார்த்துக் கொண்டார்கள். ‘நான் இல்லே. ஒரு வேளை. இவங்க இரண்டு பேருமாய் இருக்கலாம்...’

     இறுதியில் மலையைக்கூட வாய்க்குள் வைக்கும் திறன் கொண்டவர் போல் தோன்றிய செளரிராஜன் சாவகாசமாய் சொன்னார்.

     “ஸார். இந்த ஆபீஸ் ஒரு குடும்பம்.”

     “தப்பு... குடும்பம் மாதிரி இருக்கணுமுன்னு சொல்லுங்க. இது இப்போ குடும்பமில்ல. மிருகங்கள் குடும்பம் குடும்பமாய் திரியுற காடு.”

     “எப்படியோ... நீங்க நினைக்கது மாதிரி இங்கே யாரும் காட்டிக் கொடுக்கிறவங்க கிடையாது. ஒரு வேளை, ஹெட் ஆபீஸ்ல எந்தப் பயலாவது. இந்த மொள்ளமாறி செளமிப் பயலுக்குக் காசுக்கு ஆசைப்பட்டு சொல்லியிருக்கலாமே... செளமி நாராயணனோட சட்டகர் ஒருத்தர் டெப்டி டைரக்டராய் வேற இருக்கார்.”

     “சரி. அக்கெளன்டன்டும், நிர்வாக அதிகாரியும் செய்த சிபாரிசு வரைவை அடிச்சுட்டு, உதவி டைரக்டர் எதேச்சதிகாரமாய் எழுதியிருக்கார் என்கிறான். நீங்க எழுதின விவரம் மேலிடத்திற்குத் தெரியாது. சட்டப்படி தெரிய முடியாது.”

     செளரிராஜன் உடம்பை நெளித்தார்.

     “யார் ஸார் கண்டா? நான் இல்ல... அவ்வளவுதான் சொல்ல முடியும். நம்ம பியூன்கள் லேசுப்பட்டவங்கல்ல.”

     “பியூன்களுமுன்னு சொல்லுங்கோ.”

     “பகவான் அறியச் சொல்றேன். நான் சொல்லியிருந்தால் என் நாக்கு அழுகிடும்.”

     உமா இடைமறித்தாள்.

     “ஸார்... ஏ.ஓ சொல்றது... எனக்கும் சேர்த்துச் சொல்றது மாதிரி.”

     ஏ.ஓ. கோபப்பட்டார்.

     “என்னம்மா... நீ ஒனக்கு வேணுமுன்னால். நீ தனியாய்ச் சொல்லு.”

     “எனக்கு நாக்கு...”

     சரவணன், கடுமையாகச் சொன்னான்: “நம்ம பிரச்சினை நாக்குப் பிரச்சினையல்ல. லஞ்சப் பிரச்சினை. உண்மை எப்போதாவது தெரியத்தான் செய்யும்...”

     செளரி உபதேசிக்கலானார்...

     “அதைத்தான் ஸார் நான் சொல்ல வந்தேன்... பத்து வருஷத்துக்கு முன்னால. இதே ஆபீஸ்ல அக்கெளண்டண்டாய் இருந்தேன். அப்புறம் இப்போ அஞ்சு வருஷமாய் நிர்வாக அதிகாரியாய் இருக்கேன்... இந்த அனுபவத்துல சொல்றேன் கேளுங்கோ... கெடுவான் கேடு நினைப்பான்... நீங்க ஏன் இதுக்குப்போய் கவலைப்படுறீங்க? பிச்சு உதறிப்படலாம். செளமிப் பயல் கண்ணுல, விரலை விட்டு ஆட்டிடலாம்... செங்கோலுக்கு முன்னால சங்கீதமா? கொடுங்க ஸார் லெட்டரை... என்ன நினைச்சுக்கிட்டான்? கொடுங்க ஸார்... அதுவும் ஒங்களைப்போய் லஞ்சம் வாங்குறவர்னு சொல்லியிருக்கான் பாருங்க... இதுக்கே அவன் கம்பெனியை பிளாக் லிஸ்ட் செய்திடலாம்... இன்னைக்கே ‘ஓ.டி.’ போட்டு. அவனோட பழைய சமாச்சாரங்களை கிளார்க்குகளை வச்சு கிளறிக் காட்டுறேன் பாருங்கோ.”

     “மன்னிக்கணும். இனிமேல் இந்த விவகாரத்தை, நான் மட்டும் கவனிக்கிறேன். எனக்கு, அந்தக் கம்பெனி சம்பந்தப்பட்ட எல்லா ரிஜிஸ்டர்களையும் அனுப்புங்க... மிஸ். உமா பீரோ சாவியை கொடுங்கோ. நானே வச்சிக்கிறேன்...”

     செளரிராஜன் முகத்தில் பேயறைந்தது. உமா முகத்தில் பிசாசு அறைந்தது. இந்த இரண்டுமே நான் தான் என்பதுபோல் அக்கெளன்டன்ட் ராமச்சந்திரன், அசையாமல் இருந்தார். சரவணன், வேறு வேலைகளைக் கவனிக்கத் துவங்கியதால், அந்த மும்மூர்த்திகளும் வெளியேறினார்கள்.

     அரை மணி நேரமாகியும், செளநா கம்பெனி சம்பந்தப்பட்ட எந்த ரிஜிஸ்டரும் வரவில்லை. சரவணன், எழுந்து. கதவு முனையில் தலை வைத்தபடியே, “மிஸ்டர் செளரி, இன்னுமா ரிஜிஸ்டருங்க கிடைக்கல?” என்றான். திரும்பப் போய் உட்கார்ந்தான்.

     ஒரு மணி நேரம் கழித்து ரிஜிஸ்டர்கள் வந்தன. ஒவ்வொன்றாய் புரட்டினான். ஒரு விவரமும் இல்லை. அவனே, வெளியே வந்தான்.

     “அந்தக் கம்பெனியோட டெலிவரி ஷீட்டுகள் எங்கே?”

     அக்கெளண்டண்ட் பதிலளித்தார்.

     “அதுதான்... டெலிவரி ரிஜிஸ்டர் இருக்குதே ஸார்.”

     “அவர் கொடுத்த தேதியை நீங்க தப்பாய்ப் போட்டிருக்கலாம். நான் அதை செக்கப் பண்ணணுமே... கமான்... கொடுங்க. அதுங்கள்ல தானே கான்டிராக்டர் கையெழுத்து இருக்கும்.”

     ராமச்சந்திரன் உளறிக் கொட்டினார்.

     “தேடுறேன்... கிடைக்கல ஸார்... ஒருவேளை ரிஜிஸ்டர்ல என்ட்ரி போட்டாச்சேன்னு கிழிச்சுப் போட்டுட்டேனோ என்னவோ.”

     “லுக் மிஸ்டர் ராமு... டெலிவரி பேப்பருங்க, ரிஜிஸ்டரைவிட முக்கியம். அது இல்லாட்டால் அவன் சொல்றதுதான் வேதவாக்கு. நீங்க அப்படி கிழிச்சிருந்தால் நீங்க சஸ்பெண்ட் ஆகவேண்டிய நிலை வரும். புரியுதா? இன்னும் ஒரு மணிநேரம் டயம் கொடுக்கிறேன்... அப்புறம் நீங்க அந்தக் கம்பெனிக்கு, பார்ட் டைமிற்குப் பதிலாய் நிரந்தரமாய் போயிடுவீங்க.”

     சரவணனை, இதரப் பிரிவுக்காரர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். நிர்வாக அதிகாரியே அசந்து விட்டார். ஆடிப் போவான் என்று நினைத்தால், ஆட்டிப் படைக்கிறான்! ராமச்சந்திரன், அதுல பார்ட் டைமில் இருக்கது இவனுக்கு எப்படித் தெரியும்? எல்லாம் அதோ இருக்கானே, குத்துக்கல்லு மாதிரி தங்கமுத்து. அவன்தான் சொல்லியிருப்பான்.

     அன்னத்திற்கு ஒன்றும் புரியவில்லை. அடடே... இந்த ஆளுக்கு, என்னைத்தான் விரட்டத் தெரியுமுன்னு நினைச்சேன். எல்லாரையும் விரட்டுறாரு. இந்த அக்கெளண்டண்டுக்கு வேணும்... ஒரு தடவை, கொஞ்சம் சொல்லிக் கொடுங்க ஸார்னு நான் கேட்டதுக்கு, “அவ்வளவு பகிரங்கமாவா கற்றுக் கொடுக்க முடியுமுன்”னு அசிங்கமாய் கேட்ட பயல். அப்போ, இந்தக் கிழட்டு செளரியும் எப்டிச் சிரிச்சான்? ஆமாம், அஸிஸ்டெண்ட் டைரக்டர் ஏன் இப்படிக் கத்துறாரு? என்ன வந்துட்டு அவருக்கு?

     எல்லோரையும் பார்த்த சரவணன், தன்னைப் பார்க்காமல் போனதில், அன்னத்திற்குக் கொஞ்சம் வருத்தம்தான்.

     சரவணன், தனது அறைக்குப் போய், இருக்கையில் கைகளை ஊன்றாமல் அப்படியே உட்கார்ந்தான். சிறிது நேரம், நாற்காலியிலேயே முடங்கிக் கிடந்தான். அப்புறம், ஒவ்வொரு ரிஜிஸ்டராக, ஒவ்வொரு பேப்பராக படித்துப் படித்து, குறிப்பெடுத்துக் கொண்டான்.

     மதிய உணவு நேரம், வெளியே எல்லோரும் கும்பல் கும்பலாய் கூடிப் பேசினார்கள். அன்னம், தனது டிபன் கேரியரை எடுத்து, பியூன் சிதம்பரத்துடன் பகிர்ந்து கொண்டாள். ஒருவருக்கொருவர் பிடிக்காத அலுவலர்கள் கூட, ஒருவரை ஒருவர் பிடித்தபடி பேசிக் கொண்டார்கள். தலைமைக் கிளார்க் பத்மா என்றால், உமாவுக்கு வேப்பங்காய். இப்போதோ, அவள் கன்னத்தை ஆப்பிள் மாதிரி தடவியபடியே பேசினாள். செளரிராஜன், கொடுரமாகச் சிரித்துக் கொண்டார். நடுங்கிக் கொண்டிருந்த அக்கெளண்டண்டைப் பார்த்து, தைரியமாய் இருக்கும்படி சைகை செய்தார். ‘இது, யோக்கியன் பயப்பட வேண்டிய காலம்; நீ பயப்பட வேண்டாம்’ என்று அவன் காதில் போடப் போனார். பிறகு. அவனும் கொஞ்சம் பயந்து, தன்னிடம் சரணாகதியடையட்டுமே என்ற ஆசையில், அந்த ஆசாமியை கண்டுக்கவில்லை.

     சரவணன், டிபன் காரியரைத் திறக்கவில்லை. டெலிவரி ரிஜிஸ்டர், பேமென்ட் ரிஜிஸ்டர், பெனால்டி ரிஜிஸ்டர் என்று பல ரிஜிஸ்டர்கள். இன்னும் ஒன்றைக் காணோம். அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. துள்ளிக் குதித்து வெளியே வந்தான். சாப்பிட்டுக் கொண்டிருந்த செளரியின் அருகே வந்தான்.

     “மிஸ்டர் செளரி, நாம் வினியோகிக்கிற எழுது பொருள்களோட தரமும் சரியில்ல. சரியான சமயத்துக்கும் வர்லேன்னு பல ஆபீஸ்கள்ல இருந்து வந்த புகார்களை... தனியாய் ஒரு பைல்ல போடச் சொன்னேனே... போட்டீங்களா?”

     “இல்ல லார். அப்போ தேவையில்லைன்னு நினைச்சேன்.”

     “அப்படி நினைத்தால்... நீங்களே தேவையான்னு நான் நினைக்க வேண்டியது வரும்...”

     “ஸார்... நாலுபேர் முன்னிலையில், என் வயசுக்காவது...”

     “ஐ ஆம் ஸாரி மிஸ்டர் செளரி. நான் இங்கே கேட்டிருக்கப் படாதுதான். பட், அந்தக் கடிதங்கள் எனக்கு வேணுமே...”

     “தேடிப் பிடிச்சுத் தாரேன் ஸார்... சாப்புடுறீங்களா ஸார்?”

     “நோ... தேங்க்ஸ்...”

     சரவணன், அறைக்குள் சிறையானான்.

     நேரம் ஒடிக் கொண்டிருந்தது. வெளியே காலடிச் சத்தம் கேட்டு சரவணன், கடிகாரத்தைப் பார்த்தான். மணி மாலை ஐந்தா? நழுவப் போன ராமச்சந்திரனைக் கூப்பிட்டான். “டெலிவரி. ஷீட்டுங்க என்னாச்சு?” என்றான்.

     “நாளைக்கு... சத்தியமாய் தாரேன் ஸார்.”

     “மறந்துடப்படாது... பீ கேர்புல்...”

     சரவணன் கூப்பிடாமலே செளரி வந்தார்.

     “நாளைக்கு... எப்படியும் அந்த லெட்டருங்களை தேடிப் புடிச்சுத் தந்துடுறேன் ஸார்.”

     “ப்ளீஸ்.”

     “வரட்டுமா ஸார்...”

     “யெஸ்.”

     அலுவலகம் வெறுமையாகிக் கொண்டிருந்தது.

     வாட்ச்மேன் வந்து வணக்கம் போட்டான்.

     “அன்னத்தைக் கூப்பிடுப்பா... ஏய்யா முழிக்கிறே? டெஸ்பாட்ச் கிளார்க் அன்னத்தை...”

     அன்னம், அரை நிமிடத்தில் வந்தாள். தனக்குள் பேசிய படியே வந்தாள். சிதம்பரம் ‘இன்னைக்கு ஆபீஸர் சாப்பிடலன்’னு சொன்னார். அதே மாதிரி டிபன் காரியரும்...

     “கூப்பிட்டீங்களா ஸார்...”

     “எங்கே தங்கியிருக்கீங்க?”

     “ஒரு பெண்கள் விடுதியில்...”

     “நைட்ல... எதுக்குள்ளே போகணும்...”

     “எட்டு மணிக்குள்ளே...”

     “அப்படியா... நாளைக்கு ஈவினிங்ல ஏழு மணிவரைக்கும் இருக்கும்படியாய் வாங்க.. ஏன் யோசிக்கிறீங்க? ஒங்களை கடிச்சுத் தின்னுட மாட்டேன்... முடியாதுன்னா வேண்டாம்... சொல்லுங்க...”

     “முடி..”

     “அப்படின்னா என்னம்மா அர்த்தம்?”

     “உம்...”

     அந்தப் பதட்டத்திலும், சரவணனுக்குச் சிரிப்பு வந்தது. அவளோ, அப்பாவித்தனமாய் பேசிய அசட்டுத் தனத்தை நினைத்து வெட்கப்படுபவள் போல் நின்றாள்.

     “ஓ.கே... நீங்க... போகலாம்...”

     அன்னம், மெல்ல மெல்ல நடந்தாள். எதுக்கு இந்த ஆள், நாளைக்கு இருக்கச் சொல்றார்...? ஒருவேளை கதைகளுலயும், சினிமாவுலயும், வாரது மாதிரி... சீ. இவரு அப்படிப்பட்டவர்னா, உலகத்தில் நல்லவங்களே இருக்க முடியாது. சரிதாண்டி... உலகத்துல நல்லவங்க இருக்கிறதாய், ஒனக்கு யாருடி சொன்னது?

     சரவணனின் கைகள் பம்பரமானபோது, அன்னம்மா தலைக்குள் பம்பரத்தை ஆடவிட்டவள் போல், ஆடி ஆடி நடந்தாள்.


வேரில் பழுத்த பலா : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9