சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல்

5

     அலுவலக நேரத்திற்கு முன்னதாகவே வந்துவிட்ட அன்னத்தை, அது முடிந்து பத்து நிமிடம் கழித்து சேர்ந்தாற்போல் வந்த செளரிராஜனும், பத்மாவும், உமாவும் ஆளுக்கொரு பக்கமாய் உலுக்கினார்கள். உமா வாசல் பக்கமாய் நின்றபடி, சரவணன் வரும் வழியையும் கண் வைத்தாள். அவன் வருவதற்கு முன்பு ஆத்திரத்தைக் கொட்டி முடித்துவிட வேண்டும் என்ற ஆங்காரத்தோடு அவள் நின்றபோது, தலைமை கிளார்க் பத்மா பற்களைக் குத்தியபடி கேட்டாள்.

     “அன்னம் ஒன் மனசுல என்னடி நினைப்பு? ஆபீஸர் கிட்டே போய் ஏன் எங்களை வத்தி வச்சே... ஏதாவது குறையிருந்தால், எங்க கிட்டே சொல்ல வேண்டியது தானே!”

     செளரி, பத்மாவின் பக்கத்தில் வந்து, அவளை அதட்டுவது போல் பேசினார்.

     “நீ வேற... பாவம் ‘காலனிப்’ பொண்ணு. இது பார்க்கக்கூடிய ஒரு வேலை ‘டெஸ்பாட்ச்’னு ‘பாவம்’ பார்த்தோம் பாரு, நமக்கு இதுவும் வேணும்... இன்னமும் வேணும்...”

     உமா, அன்னத்தின் முன்னால் வந்தாள்.

     “நான் இந்த ஆபீஸர் கூட மட்டுமல்ல, இவரை விட பெரிய பெரிய ஆபீஸருங்க கிட்டேகூட நெருக்கமாய் பழகி இருக்கேன். யாரைப் பத்தியாவது வத்தி வச்சிருப்பேனான்னு இவங்க கிட்டேயே கேளு. ஏதோ அவரு லேசாய் சிரிச்சுப் பேசிட்டார்னு. இப்படியா வத்தி வைக்கிறது? ஒன்னைப் பற்றி வத்தி வெச்சு... அதை நெருப்பாய் மூட்டறதுக்கு எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? சீ... கடைசில ஒன் புத்தியை காட்டிட்டியே...”

     அன்னம் திண்டாடியதில், பத்மாவுக்குக் கொண்டாட்டம்.

     “சொல்றதை நல்லா கேளுடி... நீ அவருகிட்டே... மினுக்கிக் குலுக்கிச் சொன்னால் கூட எங்களுக்கு அனாவசியம். இந்த ஆபீஸ்ஸுக்கு அஸிஸ்டெண்ட் டைரக்டராய் எத்தனையோ பேரு வருவாங்க... போவாங்க. எவரும் மூணு வருஷத்துக்கு மேல... நிரந்தரமாய் இருக்கப் போறதில்ல. நாங்கதான் நிரந்தரம். நீ ஆடுனாலும், சரவணன் இருக்கதுவரைக்குந்தான் ஆட முடியும்... ஒன்னோட வேலைத் திறமையைப் பற்றி எழுதப் போறது நான். அதைச் சரியான்னு பார்க்கப் போறது செளரி ஸார்... அலிஸ்டென்ட் டைரக்டர் மொட்டைக் கையெழுத்துத்தான் போடணும்... புள்ளி வச்சோமுன்னால், அது ஒன் உத்தியயோகத்துல, கமாவா இருக்காது... புல்ஸ்டாப்தான். புத்தியோட பிழைச்சுக்கோ... அவ்வளவுதான் சொல்லலாம்.”

     அன்னம், மருவி மருவிப் பார்த்தாள். கண்கள் அவளைக் கேளாமலே நீரைச் சுரந்தன. தொண்டை அடைத்தது. அவள் சித்தி கூட இப்படி அவளைக் குரோதமாகப் பார்த்ததில்லை. ஏன் திட்டுறாங்க? என்னத்த சொல்லிட்டேன்? நேற்று, சரவணன் அவளை குசலம் விசாரித்தது மனத்திற்கு வந்தது. குசலம் விசாரிப்பதுபோல் விசாரித்து, அந்த ஆள் புலன் விசாரணை செய்திருக்கான். படுபாவி நான் என்றால் அவனுக்குக் கூட இளக்காரம்.

     அன்னம், விக்கி விக்கி, திக்கித் திக்கிப் பேசினாள்:

     “நானாய் எதுவும் சொல்லல. அவராய் கேட்டாரு... அவராய்தான் கேட்டாரு. தெரியாத்தனமாய் ஏதோ பேசிட்டேன். அப்போகூட நீங்க ரிஜிஸ்டர்ல அனுப்பாதே. சாதாரணமாய் அனுப்புன்னு சொன்னதை. யோசித்து யோசித்து, பயத்துலதான் சொன்னேன். இவ்வளவுக்கும். உங்களால் எனக்கு மெமோ கிடைச்ச போதுகூட மூச்சு விடல. என்னை நம்புங்க. நான் கோள் சொல்லத் தெரியாதவள்... எனக்கு யாரும் விரோதியில்ல...”

     உமா, வக்கீல்போல், ஆள்காட்டி விரலை ஆட்டி ஆட்டிக் கேட்டாள்.

     “நேற்று சாயங்காலமாய் அவரை எதுக்காக ஸ்பெஷலாய் பார்த்தே?”

     “நான் பார்க்கல. அவராய் கேட்டாரு. இன்னைக்கு ஈவினிங்ல, ஏழு மணி வரைக்கும் ஆபீஸ்ல இருக்க முடியுமான்னு கேட்டாரு. வேணுமுன்னால். முடியாதுன்னு சொல்லிடுறேன்...”

     “இருக்கியான்னு கேட்டால், நீ படுக்கிறேன்னு சொல்லி இருப்பே...”

     உமா, கண்ணாடியைப் பார்த்துப் பேசியவள் போல், உதட்டைக் கடித்தாள். செளரிராஜன், “நல்லதுக்குக் காலமில்ல. ஒன்னையெல்லாம் அக்கெளவுண்ட் செக்ஷன்ல மாட்ட வச்சு. டிராப் செய்யணும்... காலனிப் பெண்ணாச்சேன்னு கருணை வைக்கிறதுக்கு இது காலமில்ல... அவர்கிட்டே என்னெல்லாம் சொன்னியோ? எங்க தலைவிதி... காட்டான் கோட்டான் கிட்டேல்லாம் தலை குனிய வேண்டியதிருக்கு...” என்று கர்ஜித்தார்.

     திடீர் என்று ஒரு குரல் ஒலித்தது:

     “ஆமா... ஒங்க மனசுல என்ன நினைக்கிறீங்க... சொல்லுக்குச் சொல்லு. காலனி காலனின்னு சொல்றீங்க...”

     எல்லோரும் திகைத்தபோது, தங்கமுத்து தாவி வந்தான். வினியோகப் பிரிவு கிளார்க்... நேராக, அழுது கொண்டிருந்த அன்னத்தின் முன்னால் வந்தான்.

     “அன்னம்!... ஒங்களைத்தான். கிராமத்து சேரி குனிகிறது மாதிரி இங்கே குனிந்தால், அப்புறம்... பூமியில் வந்துதான் முன் தலை இடிக்கும். இங்கே... யாரும் ஒங்களுக்கு அவங்களோட அப்பன் வீட்ல இருந்து சம்பளம் கொடுக்கல... பிச்சை போடல... யாரோட தயவாலயும் நீங்க இங்கே வேலைக்கு வரல... ஒங்க மாமா மச்சான் ஒங்களை இங்கே... அட்ஹாக்ல போட்டு, அப்புறம் நிரந்தரமாக்கல. செலக்ஷன் கமிஷன் மூலம் வந்தவங்க நீங்க. சிரிக்கிறவங்களைப் பார்த்துச் சீறணும். சீறுறவங்களைப் பார்த்து அலட்சியமாய் சிரிக்கணும். அப்போதான். நம்மை மாதிரி ஆளுங்க காலம் தள்ள முடியும். இந்த அஸிஸ்டெண்ட் டைரக்டர் இருக்கும்போதே இந்தப் பாடு... மற்றவங்க இருந்தால் என்ன பாடோ? இந்தா பாரு... பாவிப் பொண்ணே! ஒன்னை இனிமேல், யாராவது காலனிப் பொண்ணுன்னு சொன்னால், காலணியைக் கழற்றி அடி அது ஒன்னால முடியாதுன்னால்... செட்யூல்ட்காஸ்ட் கமிஷனுக்கு கம்ப்ளெயிண்ட் கொடு... நான் எழுதித் தாறேன். அதுவும் முடியாதுன்னால்... அப்புறம் நான்தான் இந்த ஆபிஸ்ல கொலைகாரனாய் ஆகணும்... ஒரு கொலையோட நிற்கமாட்டேன்... ஒவ்வொருத்தி ஜாதகமும் என் கையில இருக்கு... ஒன்னைப் போய் படுக்கிறவள்னு கேட்கிறாள். நீ பல்லை உடைக்கிறதுக்குப் பதிலாய், பல்லைக் காட்டி அழுகிறே. எத்தனை பேரு எத்தனை லேடிஸுக்கு, பைல் எழுதிக் கொடுக்காங்கன்னும் எனக்குத் தெரியும். காலனிப் பெண்ணாம்... வேலை வராதாம்...”

     செளரி ஆடிப்போனார். உமா ஓடிப்போனாள். பத்மா பதுங்கிப் போனாள். அன்னம் தலைநிமிர்ந்தாள். அவனையே அண்ணாந்து பார்த்தாள்... அந்தப் பார்வைச் சூட்டில், அவள் கண்ணிர் ஆவியாகியது.

     சரவணனின் தலை தென்பட்டது. தங்கமுத்து, இருக்கைக்குப் போய்விட்டான். அறையில் கால் வைத்தபடி, உள்ளே போகப் போன சரவணன், எதையோ நினைத்துக் கொண்டவன் போல், செளரியிடம் வந்தான்.

     “மிஸ்டர் செளரி. அன்னத்துக்கு சேஞ்ஜ் கொடுத்திட்டிங்களா? ஆர்டர் ரெடியா?”

     “உள்ளே வந்து. விவரமாய் சொல்றேன். ஸார்...”

     சரவணன் கத்தப் போனான். கூடாது. பொறுப்பான பதவியில் இருப்பவரை, பகிரங்கமாய் விமர்சிக்கக் கூடாது. உள்ளே போனவனையே அன்னம் பார்த்தாள். அவன், உட்காரு முன்னாலே, உமா போய்விட்டாள். எப்படி நெளிச்சுக் குலுக்கிப் போறாள். எங்கப்பன் கிட்டே இப்போ இரண்டாவது சம்சாரமா இருக்கவள் கல்யாணத்துக்கு முன்னாலயே, அவருகிட்டே சேலையை இழுத்து இழுத்து, மூடி மூடிப் பேசுவாளே. அதே மாதிரி பேசுறாள். இந்த ஆளும் தலையை ஆட்டுறான்... ஆமா... போகும்போது என்னைப் பத்தி கேட்டுட்டுப் போனாரே. ஆர்டர்னு வேற சொன்னாரு... என்ன ஆர்டரு? வாயேண்டி எவ்வளவு நேரமாய் அவரை அறுக்கிறே... அப்பாவி மனுஷன்... நீ முன்னால குலுக்குறதைப் பார்த்துட்டுப் பின்னால பேசாதவள்னு நினைக்காரு... இவரை எப்டில்லாம் திட்டியிருக்கே... இப்போ மட்டும் எப்டி குலுக்குறேடி?

     இன்னும் செளரிராஜன் வராததைக் கண்டு கதவருகே வந்து ‘மிஸ்டர் செளரி’ என்றான். அவர் நிதானமாக வந்து உட்கார்ந்தார்.

     “அன்னத்தை ஷிப்ட் செய்யுற ஆர்டர் என்னாச்சு?”

     “இப்போ அந்த காண்டிராக்ட் பயல் கலாட்டா செய்யும் போது, வேண்டாமுன்னு பாக்கறேன், ஸார்.”

     “இப்போதான் வேணும்... நேற்று திறமையைப் பற்றிப் பேசுனிங்க. எபிஷியன்ஸியை வருவித்துக் கொள்ளலாம். ஆனால் லாயல்ட்டி விசுவாசம் ரத்தத்தோடயே வாரது. அன்னம் உடம்புல, நல்ல ரத்தம் ஓடுது. ஆபீஸ் சகாக்களைப் பற்றி அப்பாவித் தனமாய் சொல்லாம். ஆனால் அடாவடியாய் சொல்ல மாட்டாள்.”

     “அப்புறம் உங்க இஷ்டம்... அவளுக்கு மெமோ கொடுத்தது உங்களுக்கு இப்போ எவ்வளவு சாதகமாய் போயிட்டு என்கிறதை நினைச்சுப் பாருங்க...”

     “இதோ, அவளோட பெர்சனல் பைல்... படியுங்க. நான், நீங்க நினைக்கிற மாதிரி. அவ்வளவு மட்டமானவன் இல்லே...”

     செளாரிராஜன், அன்னத்திற்குக் கொடுக்கப்பட்ட மெமோவைப் படித்தார். ரகசியக் கடிதத்தைப் படித்தபோது, சரவணன் எப்படித் துடித்தானோ... அப்படித் துடித்தார். மெமோவில், சரவணன் கைப்பட எழுதியதைப் படித்துவிட்டுக் கத்தினார்.

     “என்ன ஸார்... இது அநியாயம்... யூடிஸி, பெண்ணை டெஸ்பாட்ச்ல போட்டது தவறு... அவள் விரக்தில வேலை பார்க்காமல் இருந்திருக்கலாம். முதல் கடிதமே ரிஜிஸ்டர்ல போகாததை செக் செய்யாத தலைமைக் கிளார்க்கும், நிர்வாக அதிகாரியும், இதுக்கு ஒரு காரணமுன்னு எழுதியிருக்கீங்க... என்ன ஸார் இது அக்கிரமம்.”

     “பொறுமையாய்ப் படிங்க... நானும் ஒரு காரணமுன்னு எழுதியிருக்கேனே.”

     “ஸார், ரிஜிஸ்டர்ல. இதை யெல்லாமா எழுதுறது?”

     “நீங்க சொல்லித்தான், அன்னம் கடிதங்களை ரிஜிஸ்டர்ல அனுப்பவில்லை. இது எழுதலாமுன்னுதான் நினைச்சேன்... ரிக்கார்டாச்சேன்னு, பெருந்தன்மையாய் விட்டுட்டேன்.”

     “இதைவிட மெமோவை கிழித்திருக்கலாம் நீங்க.”

     “நான் கிழிப்பேன்... அப்புறம் மொட்டைப் பெட்டிஷன் போகும். எதுக்கு ஆர்டரை நான் போட்டுடுறேன். டோண்ட் ஒர்ரி... அப்புறம் அக்கெளண்டண்ட ராமச்சந்திரன் இன்னும் வர்லயா?”

     “உடம்புக்குச் சுகமில்லையாம்... டெலிபோன் செய்தான்...”

     “ஐஸி... நாளைக்கு மெடிக்கல் லீவ் வரும். அப்போ கூட நான் அந்த பூரீராமச்சந்திரனை மெடிக்கல் போர்டுக்கு அனுப்பிவைத்து, அவமானப்படுத்த மாட்டேன்... டெலிவரி ஷீட்ஸ் என்னாச்சாம்?”

     “அதைப் பத்தி அவன் பேசல ஸார்.”

     “நீங்களும் கேட்கல. ஒழியட்டும். நீங்களாவது. நான் சொன்ன புகார் லெட்டருங்களை தேடுனிங்களா?”

     “இப்போ. இதோ தேடுறேன். ஸார்...”

     “பாவம். பைல் பண்ண மறந்துட்டிங்க... இல்லியா?”

     “ஆமாம் ஸார்... அவசரத்துல மறந்துட்டேன்...”

     “இதோ பாருங்க இந்த பைல்... இதுல எல்லா லெட்டருங்களும் பைலாகி இருக்கு... பீரோவுக்குப் பின்னால கிடந்தது...”

     “சத்தியமாய் எனக்குத் தெரியாது ஸார். வேற யாரும் பைல் செய்திருக்கலாம்...”

     “நான் ஒங்களைக் குறை சொல்லலியே... யாரோ வேலை மெனக்கெட்டு... பைல் பண்ணிட்டு... அப்புறம் பீரோவுக்குப் பின்னால் ஒளிச்சி வச்சிருக்காங்க...”

     “நான் வேணுமுன்னால் லீவ்ல போறேன். ஸார்... இந்த ஆபீஸை விட்டுத் தொலையுறேன். ஸார்.”

     “அது ஒங்க இஷ்டம்... எந்த நிறுவனத்துலயும் தனி மனிதன் முக்கியத்துவம் அதிகமாகப்படாது... ஆகாது... நிறுவனம், மனிதனை விடப் பெரிசு. இந்த ஆபீஸ், நீங்க இல்லாட்டாலும், நான் இல்லாட்டாலும், இயங்கும். அன்னம் மூலம் அக்கெளண்ட செக்ஷன் கூட அழகாய் இயங்கும்.”

     “போய் ஆர்டர் போடுறேன். ஸார்.”

     “வேண்டாம். நான் போட்டுக்கிறேன். நீங்க வேணுமுன்னால் லீவ் லெட்டர் எழுதுங்க... இல்லன்னா... வேற வேலையைக் கவனியுங்க... ஓ.கே. நீங்க போகலாம். செளமி நாராயணன் புண்ணியத்துல நான் பிஸ்ஸி...”

     “நல்லதுக்கே காலமில்ல ஸார்.”

     “அதனாலதான் நீங்க இங்கே இருக்கிறீங்க.”

     செளரிராஜன் அசந்து போனார்... இவ்வளவு ஊழல் குற்றச் சாட்டிலும், கல்லு மாதிரி இருக்கான். எல்லோரையும் கைக்குள் போட வேண்டிய சமயத்தில் கூட கைவிடுகிறான்... ஒருவேளை, பைக்குள் போடாதவன் எவரையும் கைக்குள் போடவேண்டிய அவசியம் இல்லையோ?

     செளரி, அவனுக்கு முகம் மறைத்து, எழுந்து அப்புறம் போய் விட்டார். உமா வந்தாள்.

     “ஸார்... எதுவும் டிக்டேஷன்...”

     “ஆமா... உட்காருங்க...”

     சரவணன் டிக்டேட் செய்தான். அன்னத்தை, கணக்கு பிரிவில் இரண்டாவது பொறுப்பிலும், அதைக் கவனித்து வரும் சந்தானத்தை, ‘டெஸ்பாட்ச்சிலும்’ மாற்றும் ஆர்டரைச் சொன்னான். மூன்றே மூன்று வரிகள்தான்.

     “ஸார், சாயங்காலமா எனக்கு வேலை இருக்குதா? இப்பவே சொல்லிட்டிங்கன்னா, எங்க அண்ணாவுக்கு போன்ல சொல்லி, ஸ்கூட்டர்ல வரும்படி சொல்லிடுவேன்.”

     “நோ... தேங்க்ஸ்.”

     உமாவுக்கு சூடேறியது. அவனை உஷ்ணமாய்ப் பார்த்தாள். அடிக்கப்போவது போல் பார்த்தாள். அது முடியாததால், வெளியேறிவிட்டாள். “அன்னம் என்னைவிட உசத்தியா?”

     நேரம், சரவணனுக்கு நிமிடங்கள் இல்லாமலும், செளரி, பத்மா, உமா வகையறாக்களுக்கு, வினாடி வினாடியாகவும் ஓடிக் கொண்டிருந்தது. கப்சிப் அமைதி. கலகலப்பான பேச்சில்லை. சிறிது நேரத்தில், உமா வந்து டைப் அடித்ததில் கையெழுத்து வாங்கினாள். பிறகு ஒரு காகிதத்தை நீட்டி “இவர் உங்களை பார்க்கணுமாம்” என்றாள். கண்ணனாம்... சவுண்ட் ஸ்டேஷனரி கம்பெனியாம். சரவணனுக்கு நினைவுக்கு வந்தது. இந்தக் கம்பெனிக்காரன் கம்பெனியைத்தான் சிபாரிசு செய்திருக்கிறான். எதற்காக வந்தார்? எதற்கு வந்தாலும், பார்க்காமல் அனுப்புவது நியாயமில்லை. உமாவிடம் ‘வெயிட் பண்ணச் சொல்லுங்கள்’ என்று சொல்ல நினைத்தான். அவளே உம் என்று இருக்கும்போது, அவன் பேச விரும்பவில்லை. அவள் நீட்டிய காகிதத்தில் ‘பிளீஸ் காத்திருக்கவும். அழைக்கிறேன்’ என்று எழுதி அவளிடம் நீட்டினான். அவளும், கன்னத்தை உப்பியபடி போய்விட்டாள்.

     ரிஜிஸ்டர்களில் கண்ணைவிட்ட சரவணன், கடிகாரத்தைப் பார்த்தபோது, அரை மணி நேரமாயிருந்தது. அடேடே. இவ்வளவு நேரமாயா ஒருத்தரைக் காக்க வைக்கிறது? பெல் அடித்தான். கண்ணன் வந்தார். கைகூப்பி வந்தார்.

     “வணக்கம் ஸார்.”

     “வணக்கம் உட்காருங்க...”

     “விஷயத்தைக் கேள்விப்பட்டேன்... செளமி நாராயணன் எப்போமே இப்படித்தான். ஒருத்தரை சப்ளை அண்ட் சர்வீஸ்ல அடிக்க முடியாட்டால், ஆள் வெச்சுக் கூட அடிப்பான்...”

     “நீங்க எதுக்காக வந்தீங்க?”

     “என்னைப் பத்தியோ, என் கம்பெனியைப் பத்தியோ ஒங்களுக்கு தெரியாது. அப்படி இருந்தும் சிபாரிசு செய்திருக்கீங்க. அதனால செளமி அனுப்புன புகார் விஷயமாய் என்னோட உதவி தேவையான்னு கேட்டுட்டுப் போகலாமுன்னு வந்தேன்... எனக்கும் டில்லில செல்வாக்கான ஆட்கள் இருக்காங்க...”

     “இருக்கட்டும்... நல்லாவே இருக்கட்டும்... நாங்க, ஒங்களை சிபாரிசு செய்திருக்கதும், அவர் புகார் எழுதியிருக்கார்னும் ஒங்களுக்கு எப்படித் தெரியும்?... மழுப்பாதீங்க. நீங்க சொன்னால் நான் ஆபீஸை சுத்தம் செய்ய உதவியாய் இருக்கும்.”

     தகப்பன், தன் பிள்ளையைப் பார்ப்பதுபோல் பார்த்த அந்த ஐம்பது வயதுக் கண்ணன், திடீரென்று எழுந்து, அவனைத் தகப்பன் சாமியாய் பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டார்.

     “மன்னிக்கணும்... யு ஆர் கிரேட் ஸோல்... வாறேன். ஸார்...”

     கண்ணன் போய்விட்டார். அவர் போவது வரைக்கும் காத்திருக்க முடியாமல், சிறிது நேரத்தில் உமா வந்து, டைப் அடித்ததில் கையெழுத்து வாங்கினாள். அப்போது ஒரு உருவம், எட்டி எட்டிப் பார்த்தது. சரவணன், “யெஸ்...” என்றதும், அது உள்ளே வந்தது. சந்தானம்... டெஸ்பாட்ச் செக்ஷன் போகிற அட்ஹாக் கிளார்க். புடலங்காய் உடம்பு... சோளத்தட்டை வளர்த்தி...

     “ஸார். ஸார். இந்த ஆபீஸ் பாரதப் போர்ல. நான் அரவானாய் ஆயிடப்படாது ஸார்...”

     சரவணன், அவனை சிடுசிடுப்பாய்ப் பார்த்தான்.

     “எப்படியோ... நாலு வருஷமாய் ஆபீஸருங்க கையைக் காலைப் பிடிச்சு, தாக்குப் பிடிக்கேன்... அய்யா என்னை அனுப்பிடப் படாது...”

     “ஒங்களை நான் எதுக்கு அனுப்பணும்?”

     “‘ஏஓ’ சொல்றார். ‘வீட்டுக்குப் போறடா...’ என்கிறார். ஆனால், வேலை போயிட்டால். எனக்கு வீடே கிடையாது. எங்கே போறது? இதை நம்பிக் கல்யாணம் வேற செய்துட்டேன் ஸார்.”

     “லுக்... நான் இந்த ஆபீஸ்ல இருக்கது வரைக்கும் என்னாலயோ, மற்ற யாராலேயோ... ஒங்க வேலைக்கு ஆபத்து வராது... ஆனால், டெஸ்பாட்ச் வேலையைத் தான் செய்யணும்...”

     “தேங்க் யூ ஸார்... தேங்க் யூ ஸார்... அது கிடைச்சாலே போதும் ஸார். இந்த ஏ.ஓ. வுக்கே இப்போதான் உங்களைப் பார்த்தால் ஆபீஸராய் தெரியுது. ஒரு நாளைக்கு உங்களுக்கு பேக்ரவுண்ட் விஷயங்களைச் சொல்றேன்... அடேயப்பா... செளமி நாராயணன் இங்கே வாரதும், இவங்க அங்கே போறதும்...”

     “டோண்ட் டாக் நான்சென்ஸ்... எனக்கு எதுவும் தெரியவேண்டாம். நீங்க நல்லா வேலை பார்க்கீங்கன்னு மட்டும் தெரியணும்...”

     “சத்தியமாய், கடவுள் அறிய... நீங்க அறிய...”

     “அப்புறம்... அன்னத்துக்கு அக்கெளண்ட் வேலையைச் சொல்லிக் கொடுங்க. ஒருவாரம் அவங்க ஒங்ககிட்டே அப்ரண்டீஸாய் இருக்கட்டும்...”

     “அப்படியே டெஸ்பாட்ச் வேலையும்... இது முன்னால். முடியாதுன்னு சொல்லல.... முடியுறது சிரமமுன்னு சொல்ல வந்தேன்...”

     “அதுவரைக்கும் சிதம்பரத்தை டெஸ்பாட்ச் வேலையை கவனிக்கச் சொல்றேன்...”

     “அய்யா... என்னையும்...”

     “நான் ஒரு தடவைதான் பேசுவேன் மிஸ்டர்... சொன்ன சொல்லுக்கு மாறாய் நடக்க மாட்டேன்... அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், ஒங்க கிட்டேதான் மொதல்ல சொல்லுவேன்...”

     “அப்படி ஒரு நிலைமை வார அளவுக்கு நான் நடந்துக்க மாட்டேன் ஸார்.”

     “பட். லூஸ்தனமாய் பேசுறதை குறைக்கணும்...”

     “வேலை லுலாய் இருக்கதுனால. தலையும் லுலாய். வாறேன் ஸார்...”

     சரவணன் தன்னையும் மீறிச் சிரித்தான். பாவம், அவனை அட்ஹாஹ் அட்ஹாஹ்னு எல்லோரும் அதட்டி வச்சிருக்கலாம்.

     ஆனாலும், அவன் இவ்வளவு சீக்கிரமாய் அவங்களைக் காட்டிக் கொடுக்கப்படாது... எப்படியோ போறான். வேலையை ஒழுங்காய் பார்த்தால் சரிதான்...

     சரவணன் மீண்டும் குறிப்பெடுக்கத் துவங்கினான். இன்றைக்கே செளமி நாராயணனின் புகார் கடிதத்திற்குப் பதில் எழுதியாக வேண்டும். இதற்கிடையில் எத்தனையோ டெலிபோன் ‘கால்கள்’... மலைபோல குவிந்த கோப்புகள். அவன் குறிப்பெடுத்து முடித்து விட்டு, கோப்புகளையும் பார்வையிட்டு அனுப்பிய போது, அலுவலகம் முடிந்து கொண்டிருந்தது. ஒவ்வொருவராகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

     அன்னம், உள்ளே எட்டிப் பார்த்தாள். பிறகு தயங்கித் தயங்கியே வந்தாள். அவன் அறைக்கு அலுவலக நேரத்திற்குப் பிறகு போகக்கூடாது என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால், இப்போதோ அவள் கண்கள் அவனை ஆச்சரியமாய்ப் பார்த்து விரிந்தன. நன்றிப் பளுவில், இமைகள் மூடிய போது, நீர் கொட்டியது. இந்த நிர்வாக அதிகாரியும், பத்மாவுந்தான் ஆபீஸ் நடத்துனர்கள் என்று நினைத்தது எவ்வளவு பெரிய தப்பு. அவளுக்கே ஆண்டுக் கணக்கில் அரைகுறையாய்த் தெரிந்த உண்மையை முழுமையாகக் கண்டுபிடித்து, ஒரே நாளில் எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்து விட்டான்... ஸாரி... டார்... அன்னத்திற்கு இவ்வளவு நாளும் தான் பட்டபாடும், அவர்கள் படுத்தியபாடும் இப்போதுதான் பெரிதாய்த் தெரிந்தது. தெரியத் தெரிய அழுகை... அழ அழ கோபம்... அதுவும் பொங்கப் பொங்க, ஒரு ஆவேசம்...

     சரவணன், அவளை உட்காரும்படி கையாட்டி விட்டு, தான் எழுதி வைத்திருந்த குறிப்புகளில் கண் செலுத்தினான். கால் மணி நேரத்திற்குப் பிறகு, அவளைப் பார்த்தான்.

     “ஸாரி... காக்க வச்சுட்டேன்...”

     “பரவா...”

     “இனிமேல் நீங்கதான் அக்கெளண்ட்ஸ் செக்ஷனுக்கு இன்சார்ஜ். ராமச்சந்திரன் வரமாட்டார்... அண்டர்ஸ்டாண்ட்..? ஒரு வாரத்துக்குள்ளே வேலையை பிக்கப் பண்ணனும். சந்தானம், வேலை விவரத்தைச் சொல்லித் தருவார்...”

     “அவரு சொல்லாட்டாலும் பரவாயில்ல ஸார். தங்கமுத்து சொல்லித் தாரேன்னார்.”

     “யாரு ஆபீஸ் அம்பேத்காரா?”

     அன்னம், தலையாட்டினாள். லேசாய்ச் சிரித்துக் கொண்டாள். நல்லாத்தான் பெயர் வைக்கிறார். தங்கமுத்து கிட்டே சொல்லணும்: சந்தோஷப்படுவார். சரவணன், அவனிடம் அந்தப் புகார் கடிதத்தை நீட்டி “முதலில் இதைப் படிங்க. அப்போதான் நான் சொல்றதைப் புரிந்துகொண்டு எழுத முடியும்” என்றான்.

     அன்னம், கூச்சத்தோடு அதை வாங்கிப்படித்தாள். பிறகு, கோபத்தோடு அவனையே பார்த்தாள். ‘என்ன அக்கிரமம். இவரைப் போய் லஞ்சம் வாங்குறதாய் அயோக்கியப் பயல் எழுதியிருக்கான். இப்போதுதான் புரியுது. பத்மாவும், உமாவும், காண்டிராக்டரோடு ரகசியம் ரகசியமாய் பேசுனதும், அக்கெளண்டன்ட் ராமச்சந்திரன் தலையைச் சொறிந்தபடி நின்னதும் இவர் கிட்ட சொல்லலாமா? இவருக்குத் தெரியாமலா இருக்கும்? பாவம். இதனாலதான் இரண்டு நாளாய் சிரித்த முகம், சீரழிஞ்சு கிடக்குதா?’

     “சரி. ஆரம்பிக்கலாமா?”

     “சரி ஸார்.”

     ஏதோ சொல்லப்போன சரவணன், நாற்காலியில் சாய்ந்தான். அவளிடம், நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று கூடச் சொல்லப் போனான். எப்படி இந்த ‘டெம்போ’ விவகாரத்திற்குப் பதில் எழுதுவது? இல்லை என்று சொல்ல முடியாது... உண்மையைச் சொல்வது, பாதிக் கிணறு தாண்டுவது மாதிரி. கடைசியில் இந்த சிதம்பரமும், இந்த அடைக்கலமும், இவர்களைக் காட்டியும் கொடுக்க முடியாது...

     நினைத்த நேரத்தில் வரும் தேவதைகள் போல், அடைக்கலமும் சிதம்பரமும் உள்ளே வந்தார்கள். அடைக்கலம் கையில் காகிதம், சிதம்பரம், பெருமிதத்தோடு பேசினார்.

     “இந்த டெம்போ விஷயத்தை, காண்டிராக்டர் பயல், இவ்வளவு அசிங்கம் பண்ணுவான்னு நினைக்கல ஸார். எல்லாம் இங்க இருக்கிற எட்டப்ப பசங்களோட வேலை ஸார். இவன் கிட்டே, இவனால ஒங்களுக்கு ஏற்பட்டிருக்கிற நிலைமையை எடுத்துச் சொன்னேன். ‘உத்தியோகத்திற்கு உலை வச்சிட்டியேடா பாவி’ன்னேன். இன்னைக்குத் தான் ஸார். இவன் கண்ணே கலங்குறதைப் பார்த்திருக்கிறேன். அப்புறம், நாங்க இரண்டு பேருமாய் திட்டம் போட்டோம். டைரக்டருக்கு அடைக்கலம் லெட்டர் எழுதிப் போட்டுட்டான். இனிமே ஒங்களால கூட, ஒண்னும் செய்ய முடியாது... இந்தாங்க ஸார் நகல்.”

     சரவணன் வாங்கினான். அவ்வப்போது, அவர்கள் இருவரையும் ஆச்சரியமாய்ப் பார்த்தபடி படித்தான். பிறகு, அவர்களையே பார்த்தான். மனிதன் சின்னவனாய் இருக்கான். அப்புறம் விஸ்வரூபம் எடுக்க நினைத்தால், எப்படி எடுக்கான்? அப்படித்தான் இந்த அடைக்கலமும். டெம்போ யாருக்குரியது என்பது கூட சரவணன் ஸாருக்குத் தெரியாது என்றும், அவர் கொடுத்த பணத்தை தான் செளமி நாராயணனிடம் கொடுக்கப் போனதாகவும், அவர் மறுத்ததாகவும், சரவணன் தன்னைத் திட்டுவான் என்று பயந்து, பணத்தை வைத்துக் கொண்டதாயும் எழுதியிருந்தார். எவ்வளவு பெரிய உதவி.

     சிதம்பரம் ஒரு போடு போட்டார்.

     “ஸார் இவன். கடைசியாய் எழுதுனதுதான் பொய்... நீங்க திட்டுவீங்கன்னு பணத்தை வச்சுக்கல. பணம் என்றாலேயே, இவனுக்கு வச்சுக்கணுமுன்னுதான் தோணும்... வாறேன் ஸார்... இந்தாம்மா... ஒன்னைத்தான்! ஆள்காட்டிப் பசங்க இருக்கிற ஆபீஸ் இது. ஸாரை கெட்டியாய்ப் பிடிச்சுக்கோ. அவரு உதறினாலும் கீழே விழப்படாது. விழுந்திட்டால், எல்லாருமாய்ச் சேர்ந்து ஒன்மேல கல்லைத் தூக்கி எறிவாங்க. வாறோம் ஸார்... அடேய்... ஒன்னைத்தாண்டா... அடைக்கலம்... வா... ஏ.ண்டா தலையைச் சொறியுறே? இவன் இப்படித்தான் ஸார். யாருக்காவது உதவிட்டால், தலையைச் சொறிவான். அப்படியும் பார்ட்டிக்குப் புரியாவிட்டால் அப்புறம் சட்டைப் பையைச் சொறிவான். வாறோம் ஸார். ஏதோ அன்பில், மூடத்தனமாய் பேசிட்டேன். வாறேன் ஸார்...”

     சரவணன், போகிறவர்களையே பார்த்தான். அன்னம், அப்படிப் பார்த்தவனையே பயபக்தியோடு பார்த்தாள்.

     “ஆரம்பிக்கலாமா மேடம்?”

     அவள் அதிசயித்தாள். மேடமாமே. கேட்கிறதுக்கு, எவ்வளவு நல்லா இருக்குது...

     சரவணன் கோர்வையாகச் சொல்லிக் கொண்டு போனான். முனையில்லாத குண்டூசி, ஒடியும் பென்சில், ஊறும் காகிதம், ஒரு பக்கம் சில தகரத்துண்டு இல்லாத டேக், கிழிந்த கோப்புக் கவர்கள் ஆகியவற்றின் வரலாற்றுப் பின்னணியை சுவைபடச் சொன்னான். அப்போது அன்னம் கூடச் சிரித்துக் கொண்டாள். பிறகு, இதர அலுவலகங்களில் இருந்து, எழுது பொருட்கள் இடர்வதைப் பற்றி வந்த கடிதங்களைத் தேதி வாரியாகக் குறிப்பிட்டான். காண்டிராக்டர் எந்தெந்த தேதிகளில் எத்தனை நாள் எத்தனை மாத தாமதத்துடன் டெலிவரி செய்திருக்கிறார் என்பதை, டயரியைப் பார்த்துப் பார்த்துச் சொன்னான். டெம்போ விவகாரத்திற்கு, ஒரு கடிதம் இணைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டான்.

     அப்புறம் லஞ்சக் குற்றச்சாட்டு, “என் வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம். ஆனால் அதிலே நான்தான் எழுதுவேன். யார் வேண்டுமானாலும் படிக்கலாம். இளமையிலேயே தந்தையை இழந்தேன். அண்ணனின் நேர்மை அப்போதே எனக்குத் தாலாட்டுப் பாடியது. கிணறு வெட்டியிருக்கிறேன். ஆனால் உழைக்கும் அலுவலகத்திற்குக் குழி வெட்டியது கிடையாது. மரத்தில் ஏறியிருக்கிறேன். அதிகார மரத்தில் ஏறியதில்லை.... பள்ளிக்கூடக் காலத்தில் வேலைக்கும் கூலிக்கும் கை நீட்டி இருக்கிறேன். ஆனால், இதுவரை யாரிடமும், சட்ட விரோதமாய் சமூக விரோதமாய் கைநீட்டியதில்லை. என் வீட்டைச் சோதனையிடலாம். சி.பி.ஐ. மூலம், என் மீதுள்ள குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும். கண்டிப்பாய், தயவு செய்து நான் காசு வாங்கினேன் என்று எந்தக் கை சுட்டிக் காட்டப்படுகிறதோ... அதனால் இப்போது என்னால் சாப்பிடக்கூட முடியவில்லை.”

     அன்னத்தின் கண்கள் கலங்கின. நேற்று, அவன் சாப்பிடாமல் இருந்தது நினைவுக்கு வந்தது.

     சரவணன் தொடர்ந்தான். அந்த அலுவலகம், மத்திய அரசின் பாதுகாப்பு விதிகளின்கீழ் வருவதைச் சுட்டிக் காட்டி, அலுவலக ரகசியங்கள் காண்டிராக்டருக்கு எப்படிப் போய் சேர்ந்தது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும், இல்லையானால், லட்சக்கணக்கான பொருட்களைத் தருவித்து, சேமிக்கும் அலுவலகம், பெருச்சாளிக் கிடங்காய் மாறிவிடும் என்றும் சொன்னான். அலுவலகத் தகவல்களை, காசுக்கு விற்பவர்கள் சமூக விரோதிகள் என்றும், விசாரணைக்கு உத்திரவிட்டால், தன்னால் சிலரைப் பற்றி தகவல்கள் கொடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டான். மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தாமதித்தால், தான் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் எச்சரித்தான். இறுதியில், இப்போது வெளியே தெரியாமல் இருக்கும் இத்தகைய கேள்விக் குறிகளை, இப்போதே கண்டு பிடிக்கவில்லையானால், அலுவலகம் காணாததாகிவிடும் என்றும் சொல்லி முடித்தான். ரகசியங்களைத் திருடிய காண்டிராக்டர் செளமி நாராயணன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அன்னத்தைக் குறிப்பெடுக்க வைத்தான்.

     அவன் ஆவேசம், அவளையும் பிடித்துக் கொண்டது. பல்லைக் கடித்தபடி குறிப்பெடுத்தாள். இந்த ஆபீஸ்ல இவ்வளவு வேலை நடக்குதா? இவருக்கும் தெரியுமா? இப்படிப் பட்டவங்களை வைத்து, எப்படி இவர் ஆபீஸ் நடத்துறது? எப்படிப்பட்ட பழி வந்திருக்கு? பழிகாரப் பயல்கள். பொறுத்துப் பாருங்கோடா. பாருங்கடி.

     சரவணன் அவளை ஆச்சரியமாய்ப் பார்த்தான். பிறகு, வாயை விசாலப்படுத்திப் பார்த்தான். அவளுக்கும் லேசாய் பெருமிதம்: அலுவலக நியாயப் போராட்டத்தில், தனக்கும் ஒரு பங்கு இருக்கிறது. தானும் ஒரு பொறுப்பான அபிஷியல் என்ற பெருமிதம். சரவணன், அவன் நினைப்புக்கு மேற்கொண்டு இடம் கொடுக்கவில்லை.

     “சரி. போய் டிராப்ட் அடிச்சுட்டு வாங்க... ஒரு தடவை பார்த்துடுறேன்... அப்புறம் நகல் பண்ணலாம்...”

     அன்னம், அவசர அவசரமாய் எழுந்தாள். அவன், களைப்பில் நாற்காலியில் சாய்ந்தான். டைப் சத்தம் தாலாட்டாகி விட்டது. உழைப்பே இப்போது தூக்கமாய் உருமாறி, அவனை ஆட்கொண்டது. அன்னம் ‘ஸார் ஸார்’ என்று சொல்லிவிட்டு, பிறகு டேபிள் வெயிட்டால் மேஜையைத் தட்டிய பிறகுதான் கண் விழித்தான். கடிகாரத்தைப் பார்த்தான்; மணி இரவு எட்டு. பாவம் எவ்வளவு நேரமாய் காத்திருந்தாளோ?

     “சரிம்மா. நீங்க போங்க... நான் டிராப்டை செக் பண்ணப் போறேன்... நாளைக்கு ஈவினிங்ல காபி எடுத்துடலாம். ஒரு விஷயம். கடித விவரத்தை, யார் கிட்டேயும் தெரியாத்தனமாகச் சொல்லிடப்படாது. இன்றைய சினேகிதர்கள். நாளைய விரோதிகள் என்கிற நினைப்புலதான் ஆபீஸைப் பொறுத்த அளவுல பழகணும் தேங்க் யூ... ஒகே. குட்நைட்...”

     அன்னம் தயங்கியபடி நின்றாள். அவன் கவனித்ததாகத் தெரியவில்லை. மெள்ள மெள்ள கால்களை நகர்த்தினாள். இந்தத் தங்கமுத்தையாவது கொஞ்சம் காத்திருக்கச் சொல்லி இருக்கலாம் எனக்கும் தெரியாமல் போயிட்டு...

     சரவணன் டிராப்டைப் படித்தான். அசந்து போனான். ஓரிரு தப்புகளைத் தவிர, வேறு எந்தத் தப்பும் தெரியவில்லை. உமாவால் கூட இப்படி டிக்டேஷன் எடுத்து. இவ்வளவு கச்சிதமாய், டைப் அடிக்க முடியாது. நல்ல பெண். வேலையை பிக்கப் செய்துக்குவாள்.

     கால்மணி நேரத்தில் திருத்தினான். அடுத்த கால்மணி நேரத்தில் புள்ளி விவரங்களை ரிஜிஸ்டர்களோடு ஒப்பிட்டுச் சரிபார்த்தான். பின்னர் புறப்பட்டான். அறைக்கு வெளியே வந்தான். தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்த அன்னம் எழுந்தாள்.

     “இன்னும் போகலியா?”

     “இருட்ல தனியாப் போறதுக்குப் பயமாய்...”

     “சரியாப் போச்சு... வாட்ச்மேனை கொண்டு விடச் சொல்ல வேண்டியதுதானே...”

     “கேட்டேன் ஸார். ஆபீஸர் இருக்கும்போது. தலையே போனாலும் வெளில போகமாட்டாராம்...”

     “ஆபீஸர் இல்லாவிட்டால் போவாராமோ? சரி நடங்க... எங்கே தங்கியிருக்கீங்க?”

     “அமிஞ்சிக்கரை... ரெண்டு பஸ் ஏறணும் ஸார்...”

     “ஐ ஆம் ஸாரி... நாளைக்கு தங்கமுத்தை வச்சு டைப் அடிக்கிறேன். உம். நடங்க...”

     சரவணன் யோசித்தான். அன்றைக்கும் ஸ்கூட்டர் கொண்டு வந்திருந்தான். அவளை எப்படி ஏற்றிக் கொண்டு.? இரண்டு பஸ்ல போகணுமாமே. இந்த இருட்டில் எப்படித் தனியாய் போவாள்? அந்தச் சமயத்தில், வாட்ச்மேனை விட்டுவிட்டு வரச் சொல்லலாம் என்றும், அவர் திரும்புவது வரைக்கும், தானே, அலுவலகக் காவலாளியாக இருக்கலாம் என்றும் அவனுக்குத் தோன்றவில்லை.

     இருவரும் வெளியே வந்தார்கள். அவன் ஸ்கூட்டரை உதைத்தான். அவள் மனதுக்குள் உதைத்தாள். வாட்ச்மேன் வந்து, ஸ்கூட்டரைப் பிடிப்பதுபோல் நின்றார்.

     “ஸார்... பஸ்ல...”

     “நானும் யோசித்தேன்... ஆபத்துக்குத் தோஷமில்லை. உம். ஏறுங்கோ...”

     அன்னம் பயந்து போனாள். ஸ்கூட்டரில் இதுவரை ஏறியதில்லை. எப்படி. எப்படி. சரவணன் ஆற்றுப் படுத்தினான். அன்னம் இருக்கையில் கண் பதித்தாள். பிறகு ஏறிக் கொண்டாள். அவன் சிரித்தபடி சொன்னான்:

     “லேடீஸ் ரெண்டு காலையும் பரப்பி உட்காரப்படாது... ஒரு பக்கமாய் உட்காருங்க. ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ப். காதலர்கள் ஸ்கூட்டர்ல ஜோடியாய் போனதைப் பார்த்ததில்லையா? ஓ.... ஐ அம். ஸாரி... அபத்தமாய் பேசுறேன். நீங்க என்னோட சகா... ஒங்க பாதுகாப்புல எனக்கு அக்கறை உண்டு. உம். தப்பாய் நினைக்காதீங்க.”

     அன்னம் பயந்து பயந்து, ஸ்கூட்டரின் பின்னிருக்கையில் இறங்கி ஏறினாள். அது நகர்ந்தபோது, அவளும் பக்கவாட்டிலும், பின்புறமாகவும் நகர்ந்து போனாள். பியூன் சிதம்பரம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது இதைத்தான் சொல்லியிருப்பாரோ. ‘ஸாரை, கெட்டியாய் பிடிச்சுக்கோ’ன்னு சொன்னாரே.

     அவளுக்குச் சிரிப்பு வந்தது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று அவமானமும் வந்தது. இது முறையா என்ற சந்தேகமும் வந்தது. இந்த எல்லா உணர்வுகளையும், ஒரு உணர்வு அடக்கியது. பயம். விழப்படாதே என்ற பயம். ஸ்கூட்டர், ஐம்பது கிலோ மீட்டரில் பாய்ந்தது.

     அன்னம், கீழே விழாமல் இருப்பதற்காக, அவனைப் பிடித்துக் கொண்டாள். அவனே அசைய முடியாதபடி பலமாய் பிடித்துக் கொண்டாள்.


வேரில் பழுத்த பலா : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9