சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல்

6

     ஒரு மாதம், வந்தது தெரியாமல் போனது.

     அன்னம் வேலையில் பாதி தேறிவிட்டாள் இப்போது, அவள் முகத்தில் ஒரு மினுக்கம். பார்வையில் ஒரு நம்பிக்கை. நடையில் ஒரு துள்ளல். தங்கமுத்துவும், சந்தானமும் போட்டி போட்டு, அவளுக்கு வேலை விவரங்களைச் சொல்லிக் கொடுத்தார்கள். அக்கெளண்டன்ட் ராமச்சந்திரன் போனவர் போனவர்தான். ‘அம்மாதான்’ அந்தப் பிரிவுக்கு இன்சார்ஜ். நிர்வாக அதிகாரி, சந்தானத்தைப் பார்த்துக் கருவினார். “அடே உருப்படுவியாடா? பகவானுக்கே அடுக்குமாடா? பன்னாடப் பயலே. என்கிட்டே ஒரு காலத்துல குழைஞ்ச பயல். இப்போ பேசுறத்துக்கு யோசிக்கிறியா? இரு... இருடா... இரு...”

     தங்கமுத்துவும், அன்னமும் ஒருவருக்கொருவர் மணிக்கணக்கில் அன்னியோன்யமாய் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து பத்மாவும், உமாவும் கண்ணடித்துக் கொண்டார்கள். சரவணனும், நிர்வாக அதிகாரியை மட்டும் கூப்பிடாமல், செக்ஷன்-இன்சார்ஜ்களைக் கூப்பிட்டு, கோப்புகளை விவாதித்தான். ஒருதடவை, அன்னம் வந்து, “ஸார்... செளமி நாராயணன் குண்டூசிக்கு அதிக ரேட் போட்டிருக்கார். ஆபீஸ்ல குண்டூசி டிமாண்ட் எண்ணிக்கையை குறைச்சு, சவுண்ட் கம்பெனி அதிகமாய் ரேட் போட்ட பிளாட்டிங் பேப்பர் எண்ணிக்கையை கூட்டியிருக்காங்க. போன பைனான்ஷியல் இயர் கணக்குப்படிப் பார்த்தால், காண்டிராக்டர் கண்ணன் கொடுத்ததுதான் மினிமம் ரேட்” என்றாள். சரவணன், பெருமை பிடிபடாமல், அவளைப் பார்த்தான். ‘ஒர்க் அவுட் செய்யுங்க’ என்றான். அன்னம், ஒர்க் அவுட் செய்து, ஸ்டாண்டர்ட் கம்பெனியின் ரேட்டுதான். மினிமம் கொட்டேஷனாகி, டில்லிக்குப் போய்விட்டது.

     சரவணனுக்கு இன்னும் ஒரு எரிச்சல். காண்டிராக்டர் செளமி, அவன் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளருக்குச் சொந்தக்காரனாம். அவரிடம் ஊதியிருக்கிறான். வீட்டுக்காரர். இப்போது அவனைக் காலிசெய்யச் சொல்லுகிறார். சீ... ஒருத்தன் இவ்வளவு சின்னத்தனமாவா நடக்குறது? முடியாதுன்னு சொல்லியாச்சு என்ன பண்ணுறானோ பண்ணட்டும்.

     “மே ஐ கம் இன்” என்ற குரல் கேட்டு, சரவணன் நிமிர்ந்தான். ராமசாமி ஐ.பி.எஸ். அதிகாரி... மாநில அரசில், கமர்ஷியல் கிரைமை பார்த்துக் கொள்பவன். அவனுடைய காலேஜ்மேட். முசெளரியில் டிரெயினிங் மேட்... எல்லாவற்றையும்விட இன்டிமேட்...

     “அடேடே... வாடா வா!”

     “நான் ஒன் ஆபீஸுக்கு நாலு தடவை வந்தாச்சு. நீ ஒரு தடவையாவது வந்திருக்கியாடா?”

     “ஒனக்கென்னப்பா. நீ ஐ.பி.எஸ். காருங்க ஒனக்காக காத்திருக்கும். நான் அப்படி வரமுடியுமா? எனக்கு டெம்போ கூட...”

     “என்ன உளறுறே?”

     “என்ன சாப்பிடுறே?”

     “கூலா கொடு...”

     ராமசாமி ஐ.பி.எஸ். ஒப்பித்தான்.

     “வீட்ல தொல்லை தாங்க முடியலப்பா.. அதனாலதான் இப்போ வந்தேன். சீக்கிரமாய் கல்யாணம் பண்ணிக்கோன்னு அப்பா பிரஸ் பண்றார். நான் கல்யாணம் பண்ணுறதைப் பார்த்துட்டுதான் தாத்தா சாகப் போறாராம். படுத்த படுக்கையாய் கிடக்காராம். ஏதாவது ஒரு நல்ல பெண்ணாய் இருந்தால் சொல்லுடா...”

     “என்னடா நீ. ஐ.பி.எஸ். அதிகாரி ஒனக்குப் பெண் கொடுக்க, எத்தனையோ ரவுடிங்க கியூவிலே நிற்பாங்க.”

     “அதனாலதான் ஒன்கிட்டே வந்தேன். டேய். சீரியஸாத்தான் கேட்டேன்.”

     “நீ ஒருத்தன். நான் என் தங்கச்சிக்கே மாப்பிள்ளை கிடைக்காமல் திண்டாடுறேன். ஒன்று செய்யலாம். நீ அவளுக்கு மாப்பிள்ளை பாரு. நான் ஒனக்குப் பெண் பார்க்கறேன்.”

     ராமசாமி சரவணனை, பெண்ணைப் பார்ப்பது போல் பார்த்தான். பாவாடை - தாவணியில் பார்த்த வசந்தா, வாசல் பக்கம் நிற்பதுபோல், தலையை நீட்டினான். எப்படிக் கேட்பது? இதில் என்ன ஒளிவு மறைவு.?

     “டேய். ஒன் தங்கையை. எனக்குத் தாறதுல ஆட்சேபம் இல்லையே?”

     “விளையாடுறியாடா?”

     “இதுல என்னடா விளையாட்டு. நீ என் நண்பன். சீனியர் கிளாஸ் ஒன் ஆபீஸர். ஒன்னோட தங்கையை கட்டித் தந்தால், சந்தோஷப்படுவேன். எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது.டா. நீயாவது லேசாய் சிகரெட் பிடிப்பே. நான் அதுகூட பிடிக்கமாட்டேன். ஏண்டா யோசிக்கே?”

     “யோசிக்க வேண்டிய விஷயம்.”

     “சரி உனக்கு இஷ்டமில்லன்னா...”

     “இல்லடா... சந்தோஷ அதிர்ச்சியை என்னால தாங்கிக்க முடியல. பெரிய இடத்துல நீ செய்துகிட்டால், ஒனக்கு நல்லது பாரு.”

     “லாக்கப்புல போட்டுடுவேன்... ஒன்னைவிட எனக்கு... எந்த அயோக்கியண்டா பெரிய இடம்? அப்பாவுக்கு. லெட்டர் போடட்டுமா?”

     “வசந்தாவை இப்ப ஒரு தடவை பார்த்துக்கோ...”

     “நீயே பெண் மாதிரிதான் இருக்கே ஒன்னைப் பார்த்தது போதும். நல்லவேளை. நீ என் நண்பன் மட்டுமில்லாமல், ஜாதிக்காரனாய் வேற போயிட்ட...”

     “என்றைக்கு ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ், அரசியல்வாதி, எழுத்தாளன். கவிஞன், பத்திரிகை ஆசிரியர்ன்னு ஒருவனுக்குப் பட்டம் வருதோ, அப்போ அவன் தன்னோட ஜாதிப் பட்டத்தைத் துறந்துடனும். நீ ஐ.பி.எஸ். தானே?”

     “எவண்டா இவன். எனக்கு ஜாதி கிடையாது. ஆனால் எங்க தாத்தா, கல்யாணம் முடிஞ்சவுடனே கண்ணை மூடப்போறதாய் உறுதி கொடுத்திருக்கார். நான் வேற ஜாதில கட்டி, அவர் உயிரு போக முடியாமல் இருந்தார்னால், யாருடா அவஸ்தைப் படுறது?”

     சரவணன் மனம் விட்டுச் சிரித்தான். இப்படிச் சிரித்து எவ்வளவோ நாளாகிவிட்டது. இதற்குள் அடைக்கலம், கூல் டிரிங்ஸ்ஸோடும் ஒரு காகித உறையோடும் வந்தான். ராமசாமி, குடித்துக் கொண்டிருந்தபோது, சரவணன் படித்துக் கொண்டிருந்தான்.

     பழையபடியும் பாழாப்போன செளமி நாராயணனோட இரண்டாவது புகார். முன்பு, கான்டிராக்டர் கண்ணன் பெயர் கொண்ட காகிதத் துண்டில், ‘தயவு செய்து. காத்திருக்கவும்’ என்று சரவணன் எழுதியிருந்தானே. அதன் போட்டோஸ்டெட் நகல். புகார் கடிதத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. செளமி, தனது முந்திய ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, அதை வைத்திருந்தான். தற்செயலாய் - மனித நாகரிகம் கருதி எழுதப்பட்டதை எப்படி மாற்றி விட்டான். அவனுக்கு யார் கொடுத்தது.? என்ன சந்தேகம்? உமாதான் கொடுத்திருப்பாள். கேட்டால், அய்யோ. அம்மா. கண்ணன் சூதுவாது இல்லாம கீழே போட்டிருப்பார். எந்தப் பொறுக்கியோ எடுத்திருப்பான் என்று இந்தப் பெண் பொறுக்கி ஒப்பாரி போடுவாள். ஏற்கனவே பல அந்தரங்க சமாச்சாரங்கள் கொண்ட கோப்புக்கள் தனக்கு வரவில்லை என்ற ஆதங்கத்தில் இருப்பவள்.

     போகட்டும். இன்றைக்குள்ளே தலைமையிடத்திற்கு, காமெண்ட்ஸ் கொடுக்கணுமாம்... ஆபீஸ் எட்டப்பர்களைப் பற்றி எழுதியதற்கு, இன்னும் பதிலே இல்லை. அங்கே மட்டும் எட்டப்பன், எட்டப்பச்சி. இல்லாமலா இருப்பார்கள்? மச்சானாகப் போகிற இந்த ராமசாமியிடம் சொல்லலாமா? கமர்ஷியல் கிரைமை கவனிக்கிறவன். செளமி நாராயணன் ஆபீஸை ரெய்டு செய்தால், அவன் ஒழிஞ்சான். ஒருவேளை இங்கே உள்ளவங்க எழுதிக் கொடுத்த விவரங்களும் கிடைக்கலாம். வேண்டாம். வேண்டாம். இதுவும் ஒரு வகை அதிகார துஷ்பிரயோகம்தான். நல்லதுக்கும் கூட, இன்னொருத்தன் அதிகாரத்தை, எனக்காகப் பயன்படுத்தக் கூடாது.

     குளிர்பானத்தைக் குடித்து முடித்த ராமசாமி, அவனை உலுக்கினான். "நீ ஏண்டா. குடிக்கல?"

     சரவணன், கூல்டிரிங்கை குடித்தபடியே “மச்சானாகப் போறே, சார் போட்டுப் பேசுடா” என்றான். சிரிக்கத்தான் போனான். சிரிப்பு வரவில்லை. ராமசாமி, போலீஸ் அதிகாரியாய் இருந்தாலும், அப்போது கல்யாண மாப்பிள்ளையாகவே ஆகிவிட்டதால், சரவணனின் மாற்றத்தைக் கவனிக்க வில்லை.

     “அப்புறம் வாறேண்டா. கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்?”

     “அப்பாவுக்கு எழுது. எந்த தேதியும் எனக்கு நல்ல தேதிதான்.”

     ராமசாமி போய்விட்டான். சரவணன், தங்கைக்குக் கிடைத்த மாப்பிள்ளையை நினைத்து மகிழப் போனான். உடனே, போட்டோஸ்டெட் நகலும், கான்டிராக்டர் கடிதமும், அந்த மகிழ்ச்சியைக் குலைத்தன. பாஸ்டர்ட்... எப்பவோ ஒரு தடவை வருகிற மகிழ்ச்சியைக் கூட அனுபவிக்க முடியாமல் கெடுத்திட்டானே.

     சரவணனால் இருக்க முடியவில்லை. உமா வந்தால், அவளை அறைந்தாலும் அறைந்துவிடாலாம். என்ற அச்சம் ஏற்பட்டது.

     தனக்குத்தானே பயந்து, வன்முறை உணர்விலிருந்து தன்னை, விடுவித்துக் கொள்வதற்காக, பகல் பன்னிரெண்டு மணிக்கே புறப்பட்டான். உள்ளே வந்த அன்னத்திடம் பேசாமல், அவன் பாட்டுக்கு வெளியேறினான். வீட்டில் போய் உடம்பைக் கிடத்தணும், போட்டோஸ்டெட் விவகாரம் நாளைக்குத்தான்.


வேரில் பழுத்த பலா : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9