மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்

இயற்றிய

மணிமேகலை

... தொடர்ச்சி - 13 ...

25. ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை

அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்து
தருமசாவகன் தன் அடி வணங்கி
அறனும் மறனும் அநித்தமும் நித்தத்
திறனும் துக்கமும் செல் உயிர்ப் புக்கிலும்
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும்
ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு
'பெண் இணை இல்லாப் பெரு வனப்பு உற்றாள்
கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா
அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும்
இங்கு இணை இல்லாள் இவள் யார்?' என்ன 25-10

காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன்
'நாவல் அம் தீவில் இந் நங்கையை ஒப்பார்
யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம்
கிள்ளிவளவனொடு கெழுதகை வேண்டிக்
கள் அவிழ் தாரோய்! கலத்தொடும் போகி
காவிரிப் படப்பை நல் நகர் புக்கேன்
மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்தாங்கு
ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன்
ஆங்கு அவள் இவள்! அவ் அகல் நகர் நீங்கி
ஈங்கு வந்தனள்' என்றலும் இளங்கொடி 25-20

'நின் கைப் பாத்திரம் என் கைப் புகுந்தது
மன் பெருஞ் செல்வத்து மயங்கினை அறியாய்
அப் பிறப்பு அறிந்திலைஆயினும் ஆ வயிற்று
இப் பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ?
மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது
பிணிப்புறு பிறவியின் பெற்றியை அறியாய்
ஆங்கு வருவாய் அரச! நீ' என்று அப்
பூங் கமழ் தாரோன்முன்னர்ப் புகன்று
மை அறு விசும்பின் மடக்கொடி எழுந்து
வெய்யவன் குடபால் வீழாமுன்னர் 25-30

> வான் நின்று இழிந்து மறி திரை உலாவும்
பூ நாறு அடைகரை எங்கணும் போகி
மணிப்பல்லவம் வலம் கொண்டு மடக்கொடி
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும்
தொழுது வலம் கொள்ள அத் தூ மணிப்பீடிகைப்
பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த
'காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
மாயம் இல் மாதவன் தன் அடி பணிந்து
தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி
பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம் 25-40

'விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும்
கலங்கு அஞர்த் தீவினை கடிமின் கடிந்தால்
தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர்
ஆகலின் நல்வினை அயராது ஓம்புமின்
புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன்
உலகு உயக் கோடற்கு ஒருவன் தோன்றும்
அந் நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது
இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை
மாற்று அருங் கூற்றம் வருவதன் முன்னம்
போற்றுமின் அறம்' எனச் சாற்றிக் காட்டி 25-50

நாக் கடிப்பு ஆக வாய்ப் பறை அறைந்தீர்
அவ் உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த
வெவ் உரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின்
"பெரியவன் தோன்றாமுன்னர் இப் பீடிகை
கரியவன் இட்ட காரணம் தானும்
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய
என் பிறப்பு உணர்த்தலும் என்?" என்று யான் தொழ
"முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது
மற்று அப் பீடிகை தன்மிசைப் பொறாஅது
பீடிகை பொறுத்த பின்னர் அல்லது 25-60

வானவன் வணங்கான் மற்று அவ் வானவன்
பெருமகற்கு அமைத்து 'பிறந்தார் பிறவியைத்
தரும பீடிகை சாற்றுக' என்றே
அருளினன் ஆதலின் ஆய் இழை பிறவியும்
இருள் அறக் காட்டும்" என்று எடுத்து உரைத்தது
அன்றே போன்றது அருந் தவர் வாய்மொழி
இன்று எனக்கு' என்றே ஏத்தி வலம் கொண்டு
ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும்
ஆங்கு அப் பொழில் விட்டு அகநகர் புக்கு
தந்தை முனியா தாய் பசு ஆக 25-70

வந்த பிறவியும் மா முனி அருளால்
குடர்த் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர்
அடர்ப் பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும்
மா முனி அருளால் மக்களை இல்லோன்
பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும்
ஆய் தொடி அரிவை அமரசுந்தரி எனும்
தாய் வாய்க் கேட்டு தாழ் துயர் எய்தி
இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம்
பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து
'செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க 25-80

அரைசு வீற்றிருந்து புரையோர்ப் பேணி
நாடகம் கண்டு பாடல் பான்மையின்
கேள்வி இன் இசை கேட்டு தேவியர்
ஊடல் செவ்வி பார்த்து நீடாது
பாடகத் தாமரைச் சீறடி பணிந்து
தே மரு கொங்கையில் குங்குமம் எழுதி
அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி
நறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்தி
மதி முகக் கருங் கண் செங் கடை கலக்கக்
கருப்பு வில்லி அருப்புக் கணை தூவ 25-90

தருக்கிய காமக் கள்ளாட்டு இகழ்ந்து
தூ அறத் துறத்தல் நன்று' எனச் சாற்றி
'தௌிந்த நாதன் என் செவிமுதல் இட்ட வித்து
ஏதம் இன்றாய் இன்று விளைந்தது
மணிமேகலை தான் காரணம் ஆக' என்று
அணி மணி நீள் முடி அரசன் கூற
'மனம் வேறு ஆயினன் மன்' என மந்திரி
சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி
'எம் கோ வாழி! என் சொல் கேண்மதி
நும் கோன் உன்னைப் பெறுவதன் முன் நாள் 25-100

பன்னீராண்டு இப் பதி கெழு நல் நாடு
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு
ஈன்றாள் குழவிக்கு இரங்காளாகி
தான் தனி தின்னும் தகைமையது ஆயது
காய் வெங் கோடையில் கார் தோன்றியதென
நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!
தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்கட்கு
வானம் பொய்யாது மண் வளம் பிழையாது
ஊன் உடை உயிர்கள் உறு பசி அறியா
நீ ஒழிகாலை நின் நாடு எல்லாம் 25-110

தாய் ஒழி குழவி போலக் கூஉம்
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ
உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின்
இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ!
பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே!
தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும்
மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால்
மதி மாறு ஒர்ந்தனை மன்னவ!' என்றே
முதுமொழி கூற முதல்வன் கேட்டு
'மணிபல்லவம் வலம் கொள்வதற்கு எழுந்த 25-120

தணியா வேட்கை தணித்தற்கு அரிதால்
அரசும் உரிமையும் அகநகர்ச் சுற்றமும்
ஒரு மதி எல்லை காத்தல் நின் கடன்' என
'கலம் செய் கம்மியர் வருக' எனக் கூஉய்
இலங்கு நீர்ப் புணரி எறி கரை எய்தி
வங்கம் ஏறினன் மணிபல்லவத்திடை
தங்காது அக் கலம் சென்று சார்ந்து இறுத்தலும்
புரை தீர் காட்சிப் பூங்கொடி பொருந்தி
அரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்தி
காவலன் தன்னொடும் கடல் திரை உலாவும் 25-130

தே மலர்ச் சோலைத் தீவகம் வலம் செய்து
'பெருமகன்! காணாய் பிறப்பு உணர்விக்கும்
தரும பீடிகை இது' எனக் காட்ட
வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு
உலந்த பிறவியை உயர் மணிப் பீடிகை
கைஅகத்து எடுத்துக் காண்போர் முகத்தை
மை அறு மண்டிலம் போலக் காட்ட
'என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன்
தென் தமிழ் மதுரைச் செழுங் கலைப் பாவாய்!
மாரி நடு நாள் வயிறு காய் பசியால் 25-140

ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு
இரந்தூண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு
அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில்
"நாடு வறம் கூரினும் இவ் ஓடு வறம் கூராது
ஏடா! அழியல் எழுந்து இது கொள்க" என
அமுதசுரபி அங்கையில் தந்து என்
பவம் அறுவித்த வானோர் பாவாய்!
உணர்வில் தோன்றி உரைப் பொருள் உணர்த்தும்
மணி திகழ் அவிர் ஒளி மடந்தை! நின் அடி
தேவர் ஆயினும் பிரமர் ஆயினும் 25-150

நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி
பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது
மறந்து வாழேன் மடந்தை!' என்று ஏத்தி
மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து
தென் மேற்காகச் சென்று திரை உலாம்
கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர்
தூ மலர்ப் புன்னைத் துறை நிழல் இருப்ப
ஆபுத்திரனோடு ஆய் இழை இருந்தது
காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி
'அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு 25-160

பெருந் துயர் தீர்த்த அப் பெரியோய்! வந்தனை
அந் நாள் நின்னை அயர்த்துப் போயினர்
பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி
நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர்
ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண்
ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர்
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண்
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப
ஆய் மலர்ப் புன்னை அணி நிழல் கீழால்
அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய 25-170

என்பு உடை யாக்கை இருந்தது காணாய்
நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கிப்
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய்
கொலைவன் அல்லையோ? கொற்றவன் ஆயினை!
பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய
மடவரல் நல்லாய்! நின் தன் மா நகர்
கடல் வயிறு புக்கது காரணம் கேளாய்
நாக நல் நாடு ஆள்வோன் தன் மகள்
பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள்
பனிப் பகை வானவன் வழியில் தோன்றிய 25-180

புனிற்று இளங் குழவியொடு பூங்கொடி பொருந்தி இத்
தீவகம் வலம் செய்து தேவர் கோன் இட்ட
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி
கம்பளச் செட்டி கலம் வந்து இறுப்ப
அங்கு அவன்பால் சென்று அவன் திறம் அறிந்து
"கொற்றவன் மகன் இவன் கொள்க" எனக் கொடுத்தலும்
பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி
பழுது இல் காட்சிப் பைந்தொடி புதல்வனைத்
தொழுதனன் வாங்கி துறை பிறக்கு ஒழிய
கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள் 25-190

இலங்கு நீர் அடைகரை அக் கலம் கெட்டது
கெடு கல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது
வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப
மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்
நல் மணி இழந்த நாகம் போன்று
கானலும் கடலும் கரையும் தேர்வுழி
வானவன் விழாக் கோள் மா நகர் ஒழிந்தது
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள்
"அணி நகர் தன்னை அலை கடல் கொள்க" என
இட்டனள் சாபம் பட்டது இதுவால் 25-200

கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த
வடி வேல் தடக் கை வானவன் போல
விரிதிரை வந்து வியல் நகர் விழுங்க
ஒரு தனி போயினன் உலக மன்னவன்
அருந் தவன் தன்னுடன் ஆய் இழை தாயரும்
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர்
பரப்பு நீர்ப் பௌவம் பலர் தொழ காப்போள்
உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின்
மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம்
முன் நாள் எடுத்ததும் அந் நாள் ஆங்கு அவன் 25-210

அற அரசு ஆண்டதும் அறவணன் தன்பால்
மறு பிறப்பாட்டி வஞ்சியுள் கேட்பை' என்று
அந்தரத் தீவகத்து அருந் தெய்வம் போய பின்
மன்னவன் இரங்கி மணிமேகலையுடன்
துன்னிய தூ மணல் அகழத் தோன்றி
ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கித்
தான் பிணி அவிழாத் தகைமையது ஆகி
வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த
பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி
மன்னவன் மயங்க மணிமேகலை எழுந்து 25-220

'என் உற்றனையோ இலங்கு இதழ்த் தாரோய்?
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது
மன்னா! நின் தன் மறு பிறப்பு உணர்த்தி
அந்தரத் தீவினும் அகன் பெருந் தீவினும்
நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும்
அரசர் தாமே அருளறம் பூண்டால்
பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு?
"அறம் எனப்படுவது யாது?" எனக் கேட்பின்
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது 25-230

கண்டது இல்' எனக் காவலன் உரைக்கும்
'என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும்
நல் நுதல்! உரைத்த நல் அறம் செய்கேன்
என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை
நின்திறம் நீங்கல் ஆற்றேன் யான்' என
'புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின்
மன் பெரு நல் நாடு வாய் எடுத்து அழைக்கும்
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன்' என்று
அந்தரத்து எழுந்தனள் அணி இழை தான் என் 25-239

26 வஞ்சி மாநகர் புக்க காதை

அணி இழை அந்தரம் ஆறா எழுந்து
தணியாக் காதல் தாய் கண்ணகியையும்
கொடை கெழு தாதை கோவலன் தன்னையும்
கடவுள் எழுதிய படிமம் காணிய
வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து
வணங்கி நின்று குணம் பல ஏத்தி
'அற்புக் கடன் நில்லாது நல் தவம் படராது
கற்புக் கடன் பூண்டு நும் கடன் முடித்தது
அருளல் வேண்டும்' என்று அழுது முன் நிற்ப
ஒரு பெரும் பத்தினிக் கடவுள் ஆங்கு உரைப்போள் 26-10

'எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது
வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள்
மதுராபதி எனும் மா பெருந் தெய்வம்
"இது நீர் முன் செய் வினையின் பயனால்
காசு இல் பூம்பொழில் கலிங்க நல் நாட்டுத்
தாய மன்னவர் வசுவும் குமரனும்
சிங்கபுரமும் செழு நீர்க் கபிலையும்
அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள்
மூ இரு காவதம் முன்னுநர் இன்றி
யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டுப் 26-20

பல் கலன் கொண்டு பலர் அறியாமல்
எல் வளையாளோடு அரிபுரம் எய்தி
பண்டக் கலம் பகர் சங்கமன் தன்னைக்
கண்டனர் கூறத் தையல் நின் கணவன்
பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும்
தீத் தொழிலாளன் தெற்றெனப் பற்றி
ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு
குற்றம் இலோனைக் கொலைபுரிந்திட்டனன்
ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி
ஏங்கி மெய்பெயர்ப்போள் இறு வரை ஏறி 26-30

இட்ட சாபம் கட்டியது ஆகும்
உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது" எனும்
மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும்
சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன்
மேற் செய் நல் வினையின் விண்ணவர்ச் சென்றேம்
அவ் வினை இறுதியின் அடு சினப் பாவம்
எவ் வகையானும் எய்துதல் ஒழியாது
உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு
யாங்கணும் இரு வினை உய்த்து உமைப் போல
நீங்கு அரும் பிறவிக் கடலிடை நீந்தி 26-40

பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர்
"மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு
ஒரு பெருந் திலகம்" என்று உரவோர் உரைக்கும்
கரவு அரும் பெருமைக் கபிலை அம் பதியின்
அளப்பு அரும் பாரமிதை அளவு இன்று நிறைத்து
துளக்கம் இல் புத்த ஞாயிறு தோன்றிப்
போதிமூலம் பொருந்தி வந்தருளி
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து
பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும்
அந் நிலை எல்லாம் அழிவுறு வகையும் 26-50

இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி
எண் அருஞ் சக்கரவாளம் எங்கணும்
அண்ணல் அறக் கதிர் விரிக்கும்காலை
பைந்தொடி! தந்தையுடனே பகவன்
இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின்
துன்பக் கதியில் தோற்றரவு இன்றி
அன்பு உறு மனத்தோடு அவன் அறம் கேட்டு
துறவி உள்ளம் தோன்றித் தொடரும்
பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம்
அத் திறம் ஆயினும் அநேக காலம் 26-60

எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம்
நறை கமழ் கூந்தல் நங்கை! நீயும்
முறைமையின் இந்த மூதூர் அகத்தே
அவ்வவர் சமயத்து அறி பொருள் கேட்டு
மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய
பின்னர் பெரியோன் பிடக நெறி கடவாய்
இன்னது இவ் இயல்பு' எனத் தாய் எடுத்து உரைத்தலும்
"இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளை பொருள் உரையார் வேற்று உருக் கொள்க" என
மை அறு சிறப்பின் தெய்வதம் தந்த 26-70

மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய்
தேவ குலமும் தெற்றியும் பள்ளியும்
பூ மலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து
நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும்
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும்
எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில்
செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன்
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில்
போர்த் தொழில் தானை குஞ்சியில் புனைய
நில நாடு எல்லை தன் மலை நாடென்ன 26-80

கைம்மலைக் களிற்று இனம் தம்முள் மயங்க
தேரும் மாவும் செறி கழல் மறவரும்
கார் மயங்கு கடலின் கலி கொளக் கடைஇ
கங்கை அம் பேர் யாற்று அடைகரைத் தங்கி
வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து
கனக விசயர் முதல் பல வேந்தர்
அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை
சிமையம் ஓங்கிய இமைய மால் வரைத்
தெய்வக் கல்லும் தன் திரு முடிமிசைச்
செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன் 26-90

வில் திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க
பொன் கொடிப் பெயர்ப் படூஉம் பொன் நகர்ப் பொலிந்தனள்
திருந்து நல் ஏது முதிர்ந்துளது ஆதலின்
பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என் 26-94