மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்

இயற்றிய

மணிமேகலை

... தொடர்ச்சி - 7 ...

13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

'மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளிய
ஆபுத்திரன் திறம் அணி இழை! கேளாய்
வாரணாசி ஓர் மறை ஓம்பாளன்
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்
பார்ப்பனி சாலி காப்புக் கடைகழிந்து
கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சி
தென் திசைக் குமரி ஆடி வருவோள்
சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை
ஈன்ற குழவிக்கு இரங்காள்ஆகி
தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்க 13-10

தாய் இல் தூவாக் குழவித் துயர் கேட்டு ஓர்
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர
நாவான் நக்கி நன் பால் ஊட்டி
போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப
வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன்
இயவிடை வருவோன் இளம்பூதி என்போன்
குழவி ஏங்கிய கூக் குரல் கேட்டுக்
கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு
"ஆ மகன் அல்லன் என் மகன்" என்றே
காதலி தன்னொடு கைதொழுது எடுத்து 13-20

"நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை!" என
தம் பதிப் பெயர்ந்து தமரொடும் கூடி
மார்பிடை முந்நூல் வனையாமுன்னர்
நாவிடை நல் நூல் நன்கனம் நவிற்றி
ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம்
நாத் தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின்
அப் பதி தன்னுள் ஓர் அந்தணன் மனைவயின்
புக்கோன் ஆங்குப் புலை சூழ் வேள்வியில்
குரூஉத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றி
வெரூஉப் பகை அஞ்சி வெய்து உயிர்த்துப் புலம்பிக் 13-30

கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி
வலையிடைப் பட்ட மானே போன்று ஆங்கு
அஞ்சி நின்று அழைக்கும் ஆத் துயர் கண்டு
நெஞ்சு நடுக்குற்று நெடுங் கணீர் உகுத்து
"கள்ள வினையின் கடுந் துயர் பாழ்பட
நள் இருள் கொண்டு நடக்குவன்" என்னும்
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு புடை ஒதுங்கி
அல்லிடை ஆக் கொண்டு அப் பதி அகன்றோன்
கல் அதர் அத்தம் கடவாநின்றுழி
அடர்க் குறு மாக்களொடு அந்தணர் எல்லாம் 13-40

கடத்திடை ஆவொடு கையகப்படுத்தி
"ஆ கொண்டு இந்த ஆர் இடைக் கழிய
நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய்
புலைச் சிறு மகனே! போக்கப்படுதி" என்று
அலைக் கோல் அதனால் அறைந்தனர் கேட்ப
ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியைக்
கோட்டினில் குத்திக் குடர் புய்த்துறுத்துக்
காட்டிடை நல் ஆக் கதழ்ந்து கிளர்ந்து ஓட
ஆபுத்திரன் தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன்
"நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின் 13-50

விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம் பால்
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை
முது மறை அந்தணிர்! முன்னியது உரைமோ?"
"பொன் அணி நேமி வலம் கொள் சக்கரக் கை
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய
அரு மறை நல் நூல் அறியாது இகழ்ந்தனை
தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ அவ் 13-60

ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய்
நீ மகன் அல்லாய் கேள்" என இகழ்தலும்
"ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி
புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
நரி மகன் அல்லனோ கேசகம்பளன்
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று
ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ
நான்மறை மாக்காள் நல் நூல் அகத்து?" என
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும் 13-70

"ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன்" என
"நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்
வடமொழியாட்டி மறை முறை எய்தி
குமரி பாதம் கொள்கையின் வணங்கி
தமரின் தீர்ந்த சாலி என்போள் தனை
'யாது நின் ஊர்? ஈங்கு என் வரவு?' என
மா மறையாட்டி வரு திறம் உரைக்கும்
'வாரணாசி ஓர் மா மறை முதல்வன்
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான்
பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின் ஒழுகி 13-80

காப்புக் கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன்
எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு
தெற்கண் குமரி ஆடிய வருவேன்
பொன் தேர்ச் செழியன் கொற்கை அம் பேர் ஊர்க்
காவதம் கடந்து கோவலர் இருக்கையின்
ஈன்ற குழவிக்கு இரங்கேனாகித்
தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன்
செல் கதி உண்டோ தீவினையேற்கு?' என்று
அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன்
சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின் 13-90

புல்லல் ஓம்பன்மின் புலை மகன் இவன்" என
ஆபுத்திரன் பின்பு அமர் நகை செய்து
"மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ
முது மறை முதல்வன் முன்னர்த் தோன்றிய
கடவுள் கணிகை காதல் அம் சிறுவர்
அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும்
புரி நூல் மார்பீர்! பொய் உரை ஆமோ?
சாலிக்கு உண்டோ தவறு?' என உரைத்து
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப
"ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான்" என்றே 13-100

தாதை பூதியும் தன் மனை கடிதர
"ஆ கவர் கள்வன்" என்று அந்தணர் உறைதரும்
கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும்
தக்கண மதுரை தான் சென்று எய்தி
சிந்தா விளக்கின் செழுங் கலை நியமத்து
அந்தில் முன்றில் அம்பலப் பீடிகைத்
தங்கினன் வதிந்து அத் தக்கணப் பேர் ஊர்
ஐயக் கடிஞை கையின் ஏந்தி
மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி 13-110

'காணார் கேளார் கால் முடப்பட்டோர்
பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்
யாவரும் வருக' என்று இசைத்து உடன் ஊட்டி
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து
கண்படைகொள்ளும் காவலன் தான் என் 13-115

14 பாத்திர மரபு கூறிய காதை

'ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பலப் பீடிகை
பூங் கொடி நல்லாய் புகுந்தது கேளாய்
மாரி நடு நாள் வல் இருள் மயக்கத்து
ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ
துயில்வோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி
"வயிறு காய் பெரும் பசி மலைக்கும்" என்றலும்
ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன்
ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த
"கேள் இது மாதோ கெடுக நின் தீது" என
யாவரும் ஏத்தும் இருங் கலை நியமத்துத் 14-10

தேவி சிந்தாவிளக்குத் தோன்றி
"ஏடா! அழியல் எழுந்து இது கொள்ளாய்
நாடு வறம் கூரினும் இவ் ஓடு வறம் கூராது
வாங்குநர் கைஅகம் வருந்துதல் அல்லது
தான் தொலைவு இல்லாத் தகைமையது" என்றே
தன் கைப் பாத்திரம் அவன் கைக் கொடுத்தலும்
"சிந்தாதேவி! செழுங் கலை நியமத்து
நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்!
வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி!
ஏனோர் உற்ற இடர் களைவாய்!" எனத் 14-20

தான் தொழுது ஏத்தித் தலைவியை வணங்கி
ஆங்கு அவர் பசி தீர்த்து அந் நாள் தொட்டு
வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின்
மக்களும் மாவும் மரம் சேர் பறவையும்
தொக்கு உடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ
பழு மரத்து ஈண்டிய பறவையின் எழூஉம்
இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப
ஈண்டுநீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன்
பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின்
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி 14-30

வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி
மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும்
ஆர் உயிர் முதல்வன் தன் முன் தோன்றி
"இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க" என
வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு
எள்ளினன் "போம்" என்று எடுத்து உரை செய்வோன்
"ஈண்டுச் செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல்
காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது
அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் 14-40

நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர்
யாவரும் இல்லாத் தேவர் நல் நாட்டுக்கு
இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர்
திருந்து முகம் காட்டும் என் தெய்வக் கடிஞை
உண்டிகொல்லோ உடுப்பனகொல்லோ
பெண்டிர்கொல்லோ பேணுநர்கொல்லோ
யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன்?" என்றலும்
"புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு
இரப்போர்க் காணாது ஏமாந்திருப்ப 14-50

நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும்
பரப்பு நீரால் பல் வளம் சுரக்க!" என
ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்கண்ணோன்
ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும்
பன்னீராண்டு பாண்டி நல் நாடு
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது
வசித் தொழில் உதவ மா நிலம் கொழுப்பப்
பசிப்பு உயிர் அறியாப் பான்மைத்து ஆகலின்
ஆர் உயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை
ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி 14-60

விடரும் தூர்த்தரும் விட்டேற்றாளரும்
நடவை மாக்களும் நகையொடு வைகி
வட்டும் சூதும் வம்பக் கோட்டியும்
முட்டா வாழ்க்கை முறைமையது ஆக
ஆபுத்திரன் தான் அம்பலம் நீங்கி
ஊரூர் தோறும் உண்போர் வினாஅய்
"யார் இவன்?" என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு
அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை
"இருந்தாய் நீயோ!" என்பார் இன்மையின்
திருவின் செல்வம் பெருங் கடல் கொள்ள 14-70

ஒரு தனி வரூஉம் பெருமகன் போல
தானே தமியன் வருவோன் தன்முன்
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச்
"சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின்
ஊன் உயிர் மடிந்தது உரவோய்!" என்றலும்
"அமரர் கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது
குமரி மூத்த என் பாத்திரம் ஏந்தி
அங்கு அந் நாட்டுப் புகுவது என் கருத்து" என
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி
கால் விசை கடுகக் கடல் கலக்குறுதலின் 14-80

மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்துத்
தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன்
"இழிந்தோன் ஏறினன்" என்று இதை எடுத்து
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும்
வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி
அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்
"மன் உயிர் ஓம்பும் இம் மா பெரும் பாத்திரம்
என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன்
தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தேன்
சுமந்து என் பாத்திரம்?" என்றனன் தொழுது 14-90

கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின்
"ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று" என விடுவோன்
"அருள் அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர்
உளர்எனில் அவர் கைப் புகுவாய்" என்று ஆங்கு
உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்ப்புழி
அந் நாள் ஆங்கு அவன் தன்பால் சென்றேன்
"என் உற்றனையோ?" என்று யான் கேட்பத்
தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன்
குண திசைத் தோன்றி கார் இருள் சீத்துக்
குட திசைச் சென்ற ஞாயிறு போல 14-100

மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு
தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு
சாவகம் ஆளும் தலைத் தாள் வேந்தன்
ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்தான் என் 14-104