உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நானூறு சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் உரையாசிரியர் : ஊ.புட்பரதச் செட்டியார் ... தொடர்ச்சி - 2 ... 6. துறவு
[அதாவது செல்வ முதலியவற்றிற் பற்று நீங்குதல் வேண்டுமென்பதைக் குறித்துச் சொல்லியது.]
51. விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன் தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய் தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை தீர்விடத்து நிற்குமாம் தீது. (இ-ள்.) விளக்கு புக - தீபமானது (ஓரிடத்தில்) பிரவேசிக்க, இருள் மாய்ந்து ஆங்கு - இருட்டு அழிவது போல், ஒருவன் தவத்தின் முன் - ஒருவன் செய்த தவம் விளங்குமிடத்து, பாவம் நில்லாது - பாவச் செய்கைகள் நிற்கமாட்டா; விளக்கு நெய் தேய்விடத்து - விளக்கின் எண்ணெய் முதலியவை குறைந்து போகுமிடத்து, இருள் சென்று பாய்ந்து ஆங்கு - இருட்டுப் போய் பரவுவது போல, நல்வினை தீர்விடத்து - புண்ணிய காரியங்கள் நீங்குமிடத்திலே, தீது நிற்கும் - பாவச்செய்கை வந்து பிரவேசிக்கும், எ-று. ஆம் இரண்டும் - அசை. விளக்கின் முன் இருள் கெடுவதுபோலவும் விளக்கினெய் குறையக் குறைய இருட்டு பரவுவது போலவும் புண்ணிய காரியஞ் செய்து வரப் பாவகாரியம் நாசப்படும், புண்ணிய காரியம் தேய்ந்துவரப் பாவகாரியம் வந்து சேரும் என்பதாம். எனவே ஒருவன் இடைவிடாது நற்காரியஞ் செய்துவந்தால் பாவகாரியம் புக இடம்பெறாது நீங்கும். இடைவிட்டுச் சும்மாவிருந்தால் பாவத்திற்கு இடமுண்டாகும் என்பது கருத்து. இந்திரியங்கள் வியாபாரமின்றிச் சும்மாவிரா வாதலால் எதையாகிலும் செய்து கொண்டேயிருக்கும். செல்வம் யாக்கை முதலியவற்றுட் பற்றிருக்கின் அவற்றைப் போற்றப் பல அக்கிரமங்களுக்கு மிடமுண்டா மென்பதைப் பற்றி அப்பற்றை விட வேண்டுமென்பது கருத்து. வடநூலார் இந்திரியங்கள் "குர்வத்ரூபங்கள்" என்பர். புக - காரணப் பொருட்டாய் வந்த செயவெனெச்சம். மாய்ந்தாங்கு - மாய்ந்தது ஆங்கு, மாய்ந்து ஆங்கு என இருவகையிலும் கொள்ளலாமென முன்பே தெரிவித்தனம். தேய்வு, தீர்வு - இரண்டும் தொழிற்பெயர், அவையுண்டாம் போதில் எனக் கொள்க.
52. நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித் தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச் சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும் பித்தரின் பேதையார் இல். (இ-ள்.) தலை ஆயார் - மேலானவர்கள், நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி - (உடம்பு செல்வ முதலானவைகளில்) நிலையில்லாமை என்றும் வியாதிகளும் கிழத்தனமும் சாவும் ஆகிய குற்றங்களையுடையவனவென்றும் யோசித்து, தம் கருமம் செய்வார் - தமக்கு உறுதியான காரியங்களைச் செய்து வருவார்கள்; தொலைவு இல்லா - நீங்குதலில்லாத, சத்தமும் சோதிடமும் - சொல்லைக் குறித்த சாஸ்திரங்களும் (கிரகவோட்டமும் அதனால் வரும் பயன் முதலியவற்றையு முணர்த்தும்) சோதிட சாஸ்திரமும், என்று இவை - என்று சொல்லப்பட்ட பல நூல்களையே, பிதற்றும் - (விடாமல்) சொல்லிக் கொண்டு திரிகிற, பித்தரில் - பைத்தியம் பிடித்தவரைக் காட்டிலும், பேதையார் இல் - புத்தியினர் (உலகத்துள்) இல்லை, எ-று. செல்வமுதலியவற்றுள் பல குற்றங்களிருப்பதைக் கண்டு அவைகளில் அபிமானத்தை வைக்காமல் தமக்கு நற்கதிக்கேதுவான வேதாந்த சாஸ்திர முதலியவை கற்றுக் காலத்தைக் கழிப்பர் பெரியோர்; இம்மைக்கே பெரும்பாலும் உபயோகப்படுகிற இலக்கண முதலிய நூல்களையே கற்றுக் காலத்தை வீண் போக்குவர் மூடர் என்பது கருத்து. சத்தம் என்பது ஐந்திலக்கணங்களும் சங்கீதமும்; தொனிகளுக்கும் பொது. சோதிடம் என்பது கணிதத்துக்குமாம். இப்படிப்பட்ட நூல்கள் இம்மை மறுமைகளிற் சிறிது உபயோகமானாலும் வேதாந்த முதலிய நூல்களைப் போல் முக்கியமா யுதவியாகாமையின் அவற்றையே முக்கியமாகக் கொண்டவரை இப்பாட்டிற் பழித்தது என அறிக. நிலையாமை - ஒரு தன்மையதாயிராமை என்று என்னும் எண்ணிடைச் சொல்லை நிலையாமை முதலிய நான்கிலும் கூட்டிக் கொள்க; [இடை. சூ. 10.] மேற்படி இயல் 9ம் சூத்திரத்தினால் இது தொகைபெறாதாயிற்று. ஆயுள் முழுதுமே போதாதாகையால் 'தொலைவில்லா' என்றார். ஆங்கு - அசை. பித்தரில் - ஐந்தனுருபு எல்லைப் பொருளில் வந்தது. நீக்கப் பொருளெனக் கொள்வாருமுளர்.
53. இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம் செல்வம் வலிஎன் றிவையெல்லாம் - மெல்ல நிலையாமை கண்டு நெடியார் துறப்பர் தலையாயார் தாம்உய்யக் கொண்டு. (இ-ள்.) இல்லம் - மனை, இளமை - வாலிபம், எழில் வனப்பு - மிகுந்த அழகு, மீக்கூற்றம் - செல்வாக்கு, செல்வம் - சம்பத்து, வலி - தேகபலம், என்று இவையெல்லாம் - என்று சொல்லப்பட்ட இவைகளெல்லாம், நிலையாமை - நிலைத்திராமையை, மெல்ல கண்டு - நிதானித்து யோசித்து, தலையாயார் - மேலோர், தாம் உய்யக் கொண்டு - தாங்கள் கடைத்தேறுவதற்கு, நெடியார் - நீடியாதவராகி, துறப்பர் - (இல்ல முதலியவற்றுட்) பற்றை விடுவார்கள், எ-று. முதற்பாட்டின் கருத்தே இதிலுமென்றறிக. எழில் வனப்பு என்பன ஒரு பொருட் கிளவியாயினும் "ஒரு பொருட் பன்மொழி சிறப்பினின்வழா" என்கிற [பொது. 47வது சூ.] விதியால் அமைந்தன. மீக்கூற்றம் - மீ - மேலான, கூற்றம் - கூறுதல் [சொல்லுதல்]. எல்லாவற்றின் மேலாகச் சொல்லுதலென்றபடி. என்று என்பதை எண்ணிடைச் சொல்லாக் கொண்டு முரைக்கலாம். மெல்ல - மென்மையடியாக வந்த குறிப்பு வினையெச்சம். நெடியார் - எதிர்மறை வினையாலணையும் பெயர்; நெடு - பகுதி, தாமதித்தல், ஆர் - எதிர் மறையையுங் குறிக்கும் பலர்பால் விகுதி, உய்யக்கொண்டு - ஒரு சொல்லாக் கொள்ளுதற் நேர்; தாம் உய்வதைக் கொண்டெனவும் உரைக்கலாம்.
54. துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம் இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையாறு அடைவொழிந்தார் ஆன்றமைந் தார். (இ-ள்.) ஏழையார் - விவேகமற்றவர்; பல நாள் துன்பம் உழந்தும் - பலதினம் துக்கத்தை யனுபவித்தும், ஒரு நாளை இன்பமே காமுறுவர் - ஒருதினத்தில் கிடைக்கும் சுகத்தையே விரும்புவார்கள்; ஆன்று அமைந்தார் - அறிவு அதிகமாகப் பொருந்தினவர். இன்பம் இடைதெரிந்து - சுகமானது மாறுபடுவதை அறிந்து, இன்னாமை நோக்கி - அதனால் வருந் துன்பத்தைக் கண்டு, மனை ஆறு அடைவு - இல்வாழ்க்கை வழியில் சேருதலினின்றும், ஒழிந்தார் - நீங்கினார், எ-று. புத்தியீனர் இல்வாழ்க்கையிற் பலதுன்பத்தை அனுபவித்தும் ஒரு கால் நேரிடுகிற சொற்ப இன்பத்தைப் பற்றி அதையொழித்தாரில்லை; விவேக மிருந்தவரோ அது மாறிப்போய் பல துன்பங்கள் நேரிடுவதை யோசித்து அதையொழித்தார் என்பதாம். நாளை - ஐ - சாரியை, காமம் - விருப்பம், அதனை உறுவர் காமுறுவர், மரூஉமொழி, காமம் இடைகுறைந்த தென்னவுமாம். இடை - இடைதல் அதாவது நீங்குதல்; முதனிலைத் தொழிற்பெயர். இன்னாமை - இனி என்பதின் எதிர்மறைப் பண்பு. ஆன்று - இது அகன்று என்பதின் விகார மென்பர்; ஆன்றல் என்பது தனித்த ஒரு சொல் எனவுஞ் சொல்லுகின்றனர்.
55. கொன்னே கழிந்தன்று இளமையும் இன்னே பிணியோடு மூப்பும் வருமால் - துணிவொன்றி என்னொடு சூழாது எழுநெஞ்சே போதியோ நன்னெறி சேர நமக்கு. (இ-ள்.) இளமையும் - இளமைப்பருவம், கொன்னே கழிந்தன்று - வீணாய்ச் சென்றது; இன்னே - இப்பொழுதே, பிணியொடு மூப்பும் வரும் - நோயும் கிழத்தனமும் வந்து சேரும்; (ஆதலால்) துணிவு ஒன்றி - துணிவைப் பொருந்தி என்னொடு சூழாது - என்னொடு ஆலோசியாமல், எழு நெஞ்சே - எழுகின்ற மனமே, நமக்கு நல் நெறி சேர - நமக்கு நல்ல வழியானது கிடைப்பதற்கு, போதியோ - போகிறாயோ, எ-று. ஒருவன் திடீரென்று விஷய வாசனை தீர்ந்து நன்மார்க்கத்திற் செல்லத் துணிந்த தன் மனதை நோக்கி "நானு நீயு மொன்றியே எல்லாக் காரியமும் வெகுநாளாய் நடத்தி வந்தோமே, இப்பொழுதென்ன என்னோடே ஆலோசியாம லெழுந்தாய்? கால இயல்பினால் வருந் துன்பங்களைக் கண்டு விஷயப் பற்றை விட்டு நித்திய சுகமான மோக்ஷவழிக்குப் போகிறாய் போலும்" என்று சொன்னது என்பது கருத்து. நன்னெறி - மோக்ஷவழி. நமக்கு - உனக்கும் எனக்கும், நீ என்பது மனம்; நான் என்பது ஆத்துமா. மனதின் வழியாகவே சுகதுக்கங்களை யனுபவிப்பது என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. நமக்கு என்பது தனித்தன்மைப்பன்மை யென்னவுமாம். கழிந்தன்று - கழி - பகுதி, த் - இடைநிலை, சந்தியால் வந்த தகரம் மெலிந்தது. அன்சாரியை; று - விகுதி, உம்மைகள் எண்ணில் வந்தன. ஆல் - அசை, காரணம் குறித்த தெனவுமாம். துணிவு - நிச்சயமும் தீரமுமாம். போதி - இ - விகுதி. தகரம் - எழுத்துப் பேறு, தி என்பதே விகுதி என்னலாம்; இவ்விகுதி ஏவலுக்கும் நிகழ்காலத்துக்கும் வருகின்றது; அல்லது தகரம் - இடைநிலை; இ - விகுதி, விரைவு பற்றி நிகழ்காலம் இறந்தகாலமான வழுவமைதி என்னலாம்.
56. மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்லெனினும் பூண்டான் கழித்தற்கு அருமையால் - பூண்ட மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே கடியென்றார் கற்றறிந் தார். (இ-ள்.) மாண்ட குணத்தொடு மக்கள் பேறு இல் எனினும் - மாட்சிமைப்பட்ட குணங்களும் பிள்ளையைப் பெறுதலும் (இல்லாளிடத்து) இல்லாவிட்டாலும், பூண்டான் - கலியாணஞ் செய்து கொண்டவன், கழித்தற்கு அருமையால் - (அம்மனையை) நீக்குவதற்குக் கூடாமையாலே, பூண்ட மிடி என்னுங் காரணத்தின் - (தான்) அடைந்த வருத்தம் என்கிற காரணம் பற்றி, மேல் முறைக்கண்ணே - மேலாகிய ஒழுக்கத்திலே, [அல்லது பூர்வ காலத்திலேயே.] கற்றறிந்தார் - நூல்களைக்கற்று [அதன்படி அனுபவத்தை] அறிந்தவர்கள், கடி என்றார் - (விவாகத்தை) விடு என்றார்கள். நற்குணமும் பிள்ளைப்பேறு மில்லாதிருந்தாலுங் கொண்ட பெண்டாட்டியை விடக்கூடாதாகையால், விவாகம் செய்த பின் இல்வாழ்க்கையில் பலதுன்பங்களுண்டாவதைப் பற்றி முன்னமே அதனை விடு என்று பெரியோர் சொன்னார்கள் என்பது கருத்து. கடி என்னுஞ் சொல்லுக்குக் கலியாணமென்றும் ஒரு பொருளுண்டு. அது கடிய வேண்டுவது என்கிற காரணம் பற்றி வந்ததென்பது அபிப்பிராயம். இதைச் செயப்படுபொருள் விகுதி குன்றிய பெயரென்றாகிலும் கடி என்று சொல்லப்படுவதினால் வந்த பெயரென்றாகிலும் கொள்க; நேர்பொருளில் ஏவலொருமை; [உரியியல் "கடியென் கிளவி காப்பே கூர்மை" என்கிற 16வது சூத்திரத்தைக் காண்க.] குணத்தொடு - ஒடு - எண்ணிடைச் சொல், 'என்று மெனவு மொடுவும்' என்கிற [இடை. சூ. 10னால்] பிரிந்து மக்கட்பேறு என்பதோடு சேர்ந்தது. அருமை இங்கே கூடாமை; மனையாளைக் கழித்தற்குக் காரணம் தருமநூலிற் காட்டப்பட்டிருப்பதனால் இதைப் பெரும்பான்மையிற் கொள்க. மிடி - துன்பத்திற்கு ஆகுபெயர். காரணத்தின் - இன் உருபு ஏதுப் பொருளில் வந்தது. கடி என்பதற்கு இங்ஙனம் பொருள் படுத்ததை 'நிருத்தி' அலங்கார மென்ப.
57. ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத் தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால் நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம் காக்கும் திருவத் தவர். (இ-ள்.) ஊக்கி - முயற்சிப்பட்டு, தாம் கொண்ட விரதங்கள் - தாம் ஆரம்பித்த விரதங்கள் [தவங்கள்], உள் உடைய - சொரூபங் கெடும்படி, தாக்கு அரு துன்பங்கள் - தாங்குதற்குக் கூடாத தீங்குகள், தலைவந்தக்கால் - அவற்றினிடம் வந்தால், நீக்கி நிறூஉம் உரவோரே - அவற்றைத் தள்ளி (விரதங்கள்) ஸ்திரப்படுத்தும் மனோபல முள்ளவர்களே, நல் ஒழுக்கம் காக்கும் - மேலான துறவற வொழுக்கங்களைக் காக்கும்படியான, திருவத் தவர் - சிறப்பையுடையவர், எ-று. உறுதியாகத் தாம் ஆரம்பித்த விரதங்களில் சொரூப மழியும் படியான இடையூறுகள் வந்தால் அவற்றை நீக்கி விரதங்களைக் காக்கத் தக்கவரே துறவிகளாவார் என்பது கருத்து. விரதங்களாவன்; தியான தாரணாதிகள், உள் என்பது இங்கே உண்மை. அதாவது சொரூபம். துன்பங்களாவன: தன்னைப் பற்றி வருவனவும், பிருதிவி முதலியவைபற்றி வருவனவும், தெய்வங்களால் வருவனவுமான மூன்று தாபங்கள், தாக்கரு - தாங்கு அரு, வலித்தல், முதனிலைத் தொழிற்பெயர், நான்காம் வேற்றுமைத் தொகை. நிறூஉம் - நிறுவும் என்பதின் விகாரம். திருவத்தவர் - திரு - பகுதி, அத்து, அ - இரண்டும் சாரியை, அர் - விகுதி. திரு - மேன்மை பொருந்திய, அத்தவர் - அப்படிப்பட்ட தவசிகள் எனவுமுரைக்கலாம்.
58. தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று பரிவதூஉம் சான்றோர் கடன். (இ-ள்.) தம்மை இகழ்ந்தமை - தங்களைத் தூஷித்ததை, தாம் பொறுப்பது அன்றி - தாங்கள் பொறுத்துக் கொள்வதுமல்லாமல், மற்று - மேலும், எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - நம்மைத் தூஷித்த செய்கையின் பலனால், உம்மை - மறுமையில், எரிவாய் நிரயத்து - எரிகின்ற வாயையுடைய நரகத்திலே, வீழ்வர்கொல் என்று வீழ்வார்களே என்று, பரிவதூஉம் - இரங்குவதும், சான்றோர் கடன் - (துறவறவியல்பு) மிகுந்தவர்களுடைய கடமை, எ-று. தம்மை யிகழ்ந்ததைப் பொறுத்தலோடு இகழ்ந்ததைப் பற்றி அவருக்கு நரகம் நேரிடுமேயென்றிரங்கி அப்படி யில்லாமலிருக்கப் பிரார்த்திப்பதும் துறவிகள் கடமை என்பது கருத்து. இடையூறுகளுக்குப் பின்வாங்காமையும் பிறர்க்குத் துன்பம் நேரிடப் பொறாமையும் துறவிகளுக்கு வேண்டும் என்பதாம். இகழ்ந்தமை - தொழிற்பெயர் விகுதி. உம்மை - மை - இடம். பரிவதுவும் என்பது பரிவதூஉம் என இன்னோசைக்கு அளபெடுத்தது. இப்பாட்டு பின் அதிகாரங்களிலிருப்பது நன்று.
59. மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய் கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான் விலங்காது வீடு பெறும். (இ-ள்.) மெய் வாய் கண் மூக்கு செவி -, என பெயர் பெற்ற - என்று பேர் கொண்ட, ஐ வாய் - ஐந்தின்வழியாய் வருகின்ற, வேட்கை அவாவினை - மிகுந்த ஆசையை, கலங்காமல் காத்து - மனக்கலக்கமின்றி (தம்மிடஞ்சேராமற்) பாதுகாத்து, கைவாய் உய்க்கும் - நல்லொழுக்கத்திற் செலுத்துகிற, ஆற்றல் உடையான் - வல்லமையுடையவன், விலங்காது - தப்பாமல், வீடு பெறும் - மோக்ஷமடைவான், எ-று. ஐம்பொறிகளை அடக்கி ஞானவழியிற் செலுத்துகிறவனுக்கு மோக்ஷம் நிச்சயம் என்பது கருத்து. மெய் என்பது பரிசேந்திரியம்; வாய் என்பது நாக்கு. இங்கும் 'என' என்னும் எண்ணிடைச் சொல் முன் குறித்த இடையியல் சூத்திரத்தினால் மெய் முதலிய ஐந்தோடும் கூடும். ஐவாய் - ஐந்து வாய் பண்புத்தொகை. இதன்மேல் இவற்றால் வருபவை என்னும் பொருளில் அகரவிகுதி வந்தது; இது தத்திதம். இது வேட்கையவர் என்பதோடு இருபெயரொட்டுப் பண்புத்தொகை; பெயரெச்சமெனவுங் கொள்ளலாம். வேட்கையவா - ஒருபொருட் பன்மொழி, சிறப்பைக் குறிக்கும்.
60. துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார் இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம் இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப் பசைதல் பரியாதாம் மேல். (இ-ள்.) துன்பமே மீது ஊரக் கண்டும் - துக்கமே மேலிட்டு வரப்பார்த்தும், துறவு உள்ளார் - துறத்தலை நினையாதவராய், ஏழையார் - புத்தியீனர், இன்பமே காமுறுவர் - சுகத்தையே இச்சிப்பார்கள்; மேல் - மேலானவன், இன்பம் இசைதோறும் - இன்பத்தின் காரணம் கூடுந்தோறும், அதன் இன்னாமை நோக்கி - அதனிலுள்ள துக்கத்தைக் கண்டு, பசைதல் பரியாது - ஆசைப்படுவதை விரும்பான், எ-று. ஆம், மற்று - அசைகள். இதற்கு நாலாம்பாட்டின் கருத்தே பெரும்பாலும் அமையும். பண முதலிய இன்பத்தின் காரணத்திலும் அதனைக் காத்தல் வளர்த்தல் முதலான துன்பங்களை நோக்கி அதனையும் விரும்பார் என்பது விசேஷம். உள்ளார் - முற்றெச்சம்; "வினைமுற்றே வினையெச்சமாகலும்" என்கிற வினையியல் 32வது சூத்திரவிதியைக் காண்க. இசை - முதனிலைத் தொழிற்பெயர். மேல் என்பது ஆகுபெயர். 7. சினம் இன்மை
[அதாவது கோபிக்கக் காரணமிருந்துங் கோபியாமலிருப்பது.]
61. மதித்திறப் பாரும் இறக்க மதியா மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார் காயும் கதமின்மை நன்று. (இ-ள்.) மதித்து இறப்பாரும் இறக்க - தம்மை மேன்மைப் படுத்திச் செல்லுகிறவர்களும் செல்லுக; மதியாது மிதித்து இறப்பாரும் இறக்க - மதியாமல் தம்மைக் கீழ்ப்படுத்திச் செல்லுகிறவரும் செல்லுக; ஈயும் - (பறக்கும்) ஈயும், மிதித்து ஏறி- (நம்மை) மிதித்து (நம்) மேலேறி, தலைமேல் இருத்தலால் - தலையின் மேல் இருப்பதனால், அஃது அறிவார் - அதை அறிந்தவர், காயும் கதம் இன்மை - சுடும்படியான கோபம் இல்லாதிருப்பது, நன்று - நல்லது, எ-று. அறிவுடையோன் மதிப்பான், அறிவிலான் அவமதிப்பான்; அதற்கு ஈயே திருஷ்டாந்தம், ஆதலால் அவமதித்தவனைக் கோபியா திருத்தல் வேண்டும் என்பது கருத்து. உம்மைகள் எண்ணில் வந்தவை. ஈயும் - இவ்வும்மை இழிவு சிறப்பு. இறக்க - வியங்கோள். அறிவார் என்னும் எழுவாய் இன்மையின் பகுதியாகிய இல் என்பதற்குக் கருத்தாவாய் நின்றது.
62. தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின் முடிகிற்கும் உள்ளத் தவர். (இ-ள்.) மண்டி - நெருங்கி, அடி பெயராது - வைத்த பாதத்தை வாங்காமல், ஆற்ற இளி வந்த போழ்தில் - மிகவும் அவமதிப்பும் இழிவும் வந்த போதிலும், முடிகிற்கும் உள்ளத்தவர் - (அதற்குக் கலங்காது எடுத்த காரியத்தை) நிறைவேற்றும் படியான மனோபல முள்ளவர்கள், தண்டா சிறப்பின் தம் இன் உயிரை - நீங்காத சிறப்பையுடைய தமது இனிமையாகிய பிராணனை, தாங்காது - தரியாமல், கண்டுழி எல்லாம் - கண்ட விஷயங்களிலும், துறப்பவோ - துறப்பார்களோ, எ-று. பிறர் தம்மை யிகழ்ந்ததற்காகக் கோபங்கொண்டு அதற்காக உயிரை விடும் அற்பரைக் குறித்துச் சொல்லியது. மகத்தான இகழ்ச்சியிலும் அதை லக்ஷியஞ் செய்யாமல் எடுத்த காரியத்தை முடிக்கும்படியானவர் கண்ட விஷயங்களில் தம் உயிரைத் துறவாமல் சாந்தமாயே யிருப்பார் என்பது கருத்து. 'தண்டாச் சிறப்பின்' என்பதை 'சிறப்பின் தண்டா' என மாற்றி "சிறப்பின் நீங்காத" எனவு முரைக்கலாம். சிறப்பின் - ஐந்தனுருபு. நீக்கத்தில் வந்தது; முன் உரைத்தபடியாகில் இன்சாரியை. கண்டுழி - கண்ட உழி என்பதில் ஈறு தொகுத்தல் நியதி; ஏழாம் வேற்றுமைத் தொகை. எல்லாமும் அப்படியே. கண்டுழியெல்லாம் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. துறப்ப - பகரம் - பலர்பால்விகுதி [வினை. சூ. 8]. ஓ - எதிர் மறையில் வந்தது. போழ்தின் என்பதோடு உயர்வு சிறப்பும்மை கூட்டிக் கொள்க. முடிகிற்கும் - முடி - பகுதி, கில் - ஆற்றலைக் காட்டும் விகுதி, கு - சாரியை, உம் - விகுதி.
63. காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல் ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து. (இ-ள்.) காவாது - தன் வாயைக் காக்காமல், ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல் - ஒருவன் தன் வாயைத் திறந்து சொல்லுஞ் சொல்லானது, ஓவாதே - ஒழியாமல், தன்னைச் சுடுதலால் - தன்னை வருத்துவதனால், ஓவாதே ஆய்ந்து அமைந்த கேள்வி - ஒழியாமல் ஆராய்ந்து பொருந்திய கேள்வியைப் பெற்ற அறிவுடையார் - விவேகிகள், எஞ்ஞான்றும் - எப்பொழுதும், கறுத்து - கோபித்து, காய்ந்து அமைந்த - உக்கிரமாகி யிருக்கிற சொற்களை, சொல்லார் - சொல்ல மாட்டார்கள். எ-று. தம்மைப் பிறன் நிந்தித்த போது தமக்கு உண்டாயிருக்கிற வருத்தத்தையே திஷ்டாந்தமாக் கொண்டு பிறர் விஷயத்தில் கடுமையான சொற்களைச் சொல்லார் விவேகிகள் என்பது கருத்து. ஓவாது - எதிர்மறை வினையெச்சம், ஓ அல்லது ஓவ - பகுதி, ஆ - எதிர்மறை விகுதி, து - விகுதி. காய்ந்தமைந்த - பலவின்பால் வினையாலயணையும் பெயர், இரண்டாம் வேற்றுமைத் தொகை; இது அன்சாரியை பெற்றால் 'அமைந்தன' என்றிருக்கும்.
64. நேர்த்து நிகரல்லார் நிரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்ததனை உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத் துள்ளித்தூண் முட்டுமாம் கீழ். (இ-ள்.) நிகர் அல்லார் - தமக்குச் சமானமாகாதவர்கள், நேர்த்து - எதிர்த்து, நீர் அல்ல சொல்லியக்கால் - அயோக்கியமான சொற்களைச் சொன்னால், விழுமியோர் - மேலானவர்கள், வேர்த்து வெகுளார் - (உடம்பு) புழுங்கி கோபிக்க மாட்டார்கள்; கீழ் - கீழோன், அதனை ஓர்ந்து - அந்த நிந்தனையை ஆராய்ந்து, உள்ளத்தான் உள்ளி - மனதினால் நினைந்து, உரைத்து - (பலர்க்கும்) சொல்லி, உராய் - உராய்ந்து, ஊர் கேட்ப - ஊராரெல்லாம் கேட்கும்படி, துள்ளி - அதிகமாய் குதித்து, தூண் முட்டும் - தூணில் முட்டிக் கொள்ளுவான், எ-று. அற்பர் செய்யும் நிந்தனையைக் குறித்துக் கோபிக்க மாட்டார் பெரியோர். கீழ்மக்களோ தம்மை வெகுமேலாக நினைத்திருப்பதனால் நிந்தனையைக் கேட்ட மாத்திரத்தில் நம்மை இப்படி சொல்லலாமாவென்று மனம் பொறாமல் பலருக்குஞ் சொல்லி நிமிஷத்துக்கு நிமிஷம் கோபம் மிஞ்சுவதனால் துள்ளித் தூணில் முட்டிக் கொள்வார்கள் என்பது கருத்து. நேர்த்து, ஓர்த்து - இரண்டிடத்தும் வலித்தல் விகாரம். நீர் - சற்குணம், அதை யுடையதுக்கு ஆயிற்று. அல்ல - பலவின் பெயர் விழுமியோர் - விழுமு - பகுதி, சிறப்பு, விரும்புதலுமாம்; இன் - இடைநிலை ஈறுகெட்டது, ஆர் - விகுதி, ஓர் ஆயிற்று, [பொது. சூ. 2] உராய் - முதனிலையே வினையெச்சமா நின்றது. "வினைமுற்றே வினையெச்சமாகலும்" என்கிற வினையியல் 32வது சூத்திரத்தின் உரையைக் காண்க. 'ஊர் கேட்ப என்றதற்கு துள்ளுதல் முட்டிக் கொள்ளுதலின் ஓசை யாவருக்கும் செவிப்படும்படி எனவும் ஊரார் ஓடி வந்து இதென்னவென்று வினாவ எனவும் கருத்துக் கொள்ளலாம். கீழ் - ஆகுபெயர்.
65. இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள் இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம் ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன் பொறுக்கும் பொறையே பொறை. (இ-ள்.) இளையான் அடக்கம் - (வாலிபன் பொறிவழிச் செல்லாது) அடங்கி நிற்பதே, அடக்கம் - அடக்கமென்று சொல்லப்படும்; கிளை பொருள் இல்லாஜ்ன் - விர்த்தியாகும் படியான பணமில்லாதவன், கொடையே கொடைப்பயன் - (பிறர்க்குப் பண முதலியவற்றைக்) கொடுப்பதே பயனுள்ள கொடையாம்; எல்லாம் ஒறுக்கும் - எல்லாவற்றையும் வெல்லத்தக்க, மதுகை - தேகபலமும், உரன் - மனவுறுதியும், உடையாளன் - உடையவன், பொறுக்கும் பொறையே - பொறுத்துக் கொள்ளும் பொறுமையே, பொறை - பொறுமையென்று சொல்லத்தகும், எ-று. பொறிகளை வெல்லுதற்குக் கூடாத வயதுள்ளவன் இந்திரியங்களை ஜயிப்பது எப்படி சிரேஷ்டமோ, பணமில்லாதவன் கொடுப்பது எப்படி கொண்டாடும்படியான கொடுத்தலோ, அப்படி தேகபல மனோபலங்களை யுடையவன் கோபத்தைப் பொறுத்தல் மேலானது என்பது கருத்து. இது ஒப்புமைக் கூட்டம் என்னுமலங்காரம். இளையான் - இளமையுடையவன். அடக்கம் - தொழிற்பெயர், அடங்கு - பகுதி, வலித்தது, அம் - விகுதி. கொடை, பொறை - இரண்டும் தொழிற்பெயர்கள். கொடு, பொறு, - பகுதிகள், ஐ - விகுதி; "முற்றுமற்றொரோ வழி" என்றதனால் உகரம் கெட்டது. கிளை பொருள் - கிளைக்கின்ற பொருள், வினைத்தொகை. 'கொடைப் பயன்' என்பதை 'பயன்கொடை' என மாற்றிக் கொள்க. எல்லாக் கொடையும் பயன்படுவதானாலும் சிறப்பைப் பற்றி இங்ஙனம் சொல்லப்பட்டது. மதுகையுரன் - உம்மைத் தொகை. உடையாளன் - உடையனாதலை ஆள்பவன். பொறுக்கும் பொறை - பெயரெச்சம் தொழிலைக் கொண்டது; பொறுத்தல் என்பதே திரண்ட பொருள், [வினை. சூ. 21] இப்பாட்டில் விதியலங்காரமும் சேர்ந்திருக்கின்றது.
66. கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல் எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம் குடிமையான் வாதிக்கப் பட்டு. (இ-ள்.) ஒல்லை - சீக்கிரத்தில், இடு நீற்றால் - மந்திரித்திட்ட விபூதியினால், பை அவிந்த நாகம் போல் - படம் அடங்கின பாம்பைப் போல, தத்தம் குடிமையால் - தங்கள் தங்கள் குலப்பெருமையால், வாதிக்கப்பட்டு - வருத்தப்பட்டு, (யோக்கியர்) கல் எறிந்தது அன்ன - கல்லால் எறிந்தது போலிருக்கிற, கயவர் வாய் இன்னாச்சொல் - மூடர் வாயிலுண்டாகிற கொடுஞ்சொற்களை, எல்லாரும் காண - யாவரும் காணும்படி, பொறுத்து -, உய்ப்பர் - செலுத்துவார்கள், எ-று. விபூதி மந்திரித்துப் போட்டால் தலை யெடுக்க மாட்டாமல் அடங்கிக் கிடக்கிற பாம்பைப் போல பெரியோர்களும் தங்களைத் துஷ்டர் வைதால் தங்கள் குலப்பெருமைகளை நினைத்துப் பொறுத்துக் கொண்டு சும்மா விருப்பார்கள் என்பது கருத்து. உய்ப்பர் என்பதற்கு அந்த இன்னாச் சொற்கள் தங்கள் மேல் பட்டனவாகப் பாவியாமல் புறத்திற் பட்டனவாக்குவார் என்று அபிப்பிராயம். வாதிக்க - இது பாதிக்க என்னும் வடமொழித் திரிபு. இதற்கே தர்க்கிக்கப்பட்டு எனப்பொருள் கொண்டு, நீர் இந்தப்படி செய்வது இன்னின்ன காரணத்தால் நம் பெருமைக்குத் தகாது என்று தர்க்கஞ் செய்யப்பட்டு எனவும் கருத்துரைக்கலாம். எறிந்தன்ன - 'எறிந்தாலன்ன', 'எறிந்தது அன்ன' என்றிரு வகையுங் கொள்ளலாம். கல் எறிந்து எனவுமாம். உய்ப்பர் - பிறவினை, உய் - தன்வினை பிறவினைகளுக்குப் பொதுவான பகுதி. தத்தம் - தம் தம் என்பது "மவ்விரொற்றழிந்து" என்கிற விதியால் மகரங்கெட்டுத் தகர மிகுந்தது. குடிமை - மை - விகுதி, இயல்பைக்காட்டும்.
67. மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப் பேர்த்தின்னா செய்யாமை நன்று. (இ-ள்.) மாற்றார் ஆய் நின்று - பகையுள்லவர்களாகி நின்று, தம் மாறு - தம் பகைக்கு உரிய காரியங்களை, ஏற்பார்க்கு மேற்கொண்டவர்க்கு, ஏவாமை - (தானும்) அதை மேற்கொள்ளாம லிருப்பதை, ஆற்றாமை என்னார் அறிவுடையோர் - சத்தியீனமென்று சொல்லமாட்டார் விவேவிகள்; (ஆதலால்) ஆற்றாமை - பொறாமல், அவர் நேர்ந்து - (அப்பகைவரை) எதிர்த்து, இன்னா செய்தக்கால் - கொடுமையானவைகளைச் செய்தால், தாம் அவரை - தாங்கள் அவர்களுக்கு, பேர்த்து இன்னா செய்யாமை - மீட்டும் கொடுமைகளைச் செய்யாதிருந்தால், நன்று - நல்லதாம். எ-று. பகை கொண்டவர் அதற்குரிய கொடுமைகளைச் செய்தால் தாமும் அவர்களுக்கு அப்படி செய்யாமல் பொறுப்பது நலம். இவ்வாறு செய்ததனால் விவேகிகளால் சத்தியீனனென்கிற நிந்தை வர மாட்டாது என்பது கருத்து. மாறுதலையுடையவர் மாற்றார். மாறு - முதனிலைத் தொழிற்பெயர், மற்று - அசை. இரண்டாம் ஆற்றாமை - எதிர்மறை வினையெச்சம், மை - விகுதி. இன்னா - எதிர்மறைப் பலவின்பாற் பெயர்.
68. நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே சீர்கொண்ட சான்றோர் சினம். (இ-ள்.) நீசர் வெகுளி - கீழ் மக்களுடைய கோபம், நெடுங்காலம் ஓடினும் - அதிககாலஞ் சென்றாலும், கெடும் காலம் இன்றி - அழியுங்கால மில்லாமல், பரக்கும் - வியாபிக்கும்; சீர் கொண்ட சான்றோர் சினம் - கீர்த்தி பெற்ற பெரியோர் கோபமானது, அடும் காலை - காய்ச்சும் பொழுது, நீர் கொண்ட வெப்பம் போல - ஜலமானது கொண்ட உஷ்ணத்தைப் போல, தானே தணியும் - பிறர் ஆற்ற வேண்டாமல் ஆறும், எ-று. நீசர் தம்மிடத்து மகிமையுளதாக எண்ணி அகங்காரங் கொண்டிருப்பவராதலால் அவர்க்கு வரும் கோபம் காலம் செல்லச் செல்ல வளர்ந்தே வரும், சான்றோர் சினமோ காய்ச்சும் போது நீர் வெப்பங் கொண்டாலும் பின் தானே ஆறுவது போல் தானே ஆறிவிடும் என்பது கருத்து. இயல்பில் தண்மையும் பிறர் காயச் செய்தால் வெம்மையும் நீர்க்கு இருப்பது போல் பெரியோர் குணத்திற்கும் இருக்கிறது என்று அவ்வுவமை கூறப்பட்டது. இன்று - எதிர்மறைக் குறிப்பு வினையெச்சம். பரக்கும் - பர - பகுதி. தானே - ஏகாரம் பிரிநிலை. தணியுமே - ஏ - அசை.
69. உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம் தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல் வான்தோய் குடிப்பிறந்தார்க் கில். (இ-ள்.) உபகாரம் செய்ததனை - (ஒருவன்) தனக்குச் செய்த உபகாரத்தை, ஓராதே - நினையாமல், தங்கண் - தம்மிடத்தில் [உபகாரஞ் செய்தவரிடத்தில்], அபகாரம் ஆற்ற செயினும் - அபகாரத்தை மிகச் செய்தாலும், தாம் உபகாரம் செய்வதல்லால் - தாங்கள் (அவனுக்கு) உபகாரம் செய்வதேயன்றி, தவற்றினால் - பிசகியும், தீங்கு ஊக்கல் - தீமையைச் செய்ய ஆரம்பித்தல், வான் தோய் குடி பிறந்தார்க்கு - புகழால் வானத்தை எட்டிய குலத்திற் பிறந்தவர்க்கு, இல் - இல்லை, எ-று. தாம் உபகாரஞ் செய்திருக்க, தமக்கே அபகாரஞ் செய்த நீசருக்கும் மறுபடி தர்ம உபகாரஞ் செய்வாரேயல்லாது அபகாரஞ் செய்யார் நற்குடிப் பிறந்தோர் என்பது கருத்து. உபகாரம் - உதவி, அபகாரம் - அதற்கு எதிரானது. செய்ததனை - செய்தது - செய்யப்பட்டது. "செயப்படு பொருளைச் செய்தது போல்" என்கிற [பொது. சூ. 49] விதி; உபகாரத்துக்கு விசேஷணமாகக் கொள்க. ஆற்ற - வினையெச்சம், ஆற்று - பகுதி, தவற்றினால் - தவறு என்னும், பெயரின் மூன்றாம் வேற்றுமை. ஊக்கல் - விர்த்தி செய்தல்.
70. கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற் பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக் கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ மேன்மக்கள் தம்வாயால் மீட்டு. (இ-ள்.) நாய் - , கூர்த்து - கோபித்து, கௌவிக் கொளக் கண்டும் - (தம்மைக்) கவ்விக் கொள்வதைப் பார்த்தும், பேர்த்து தம் வாயால் - எதிராகி தமது வாயினால், நாய் கௌவினார் - அந்த நாயைக் கவ்வினவர்கள், ஈங்கு இல்லை - இவ்வுலகத்திலில்லை; (ஆதலால்) கீழ்மக்கள் - அயோக்கியர், நீர்த்து அன்றி - குணமுடைய தல்லாமல், கீழாய சொல்லியக்கால் - ஈனமான பேச்சுகளைப் பேசினால், மேன்மக்கள் - யோக்கியர், மீட்டு - மறுபடியும், தம் வாயால் - , சொல்பவோ - (அப்பேச்சுக்களைச்) சொல்வார்களோ, எ-று. நாய் நம்மைக் கடித்தால் எதிரே நாமும் கடித்தல் போலக் கீழோர் வைதால் நாமும் அவரை வைதல் தகாது என்பது கருத்து. வைதலுக்குக் காரணம் சினம். கௌவிக் கொள - இதனை வினைப் பெயர் போல் கொள்க. நீர்த்து - நீரையுடையது, நீர் - சற்குணம், கீழாய - பலவின் பெயர். சொல்ப - பலர்பால் வினைமுற்று; ப - விகுதி. ஒ - எதிர்மறை. 8. பொறையுடைமை
[அதாவது எந்தக் காரணங்களாலாயினும் தம்மோடு கலந்தவர் செய்த பிழையைப் பொறுத்தல். இதுவும் சினமின்மையையொடு சேர்ந்ததனாலும் அது சாதாரணமாக அயலார் விஷயமாகவும் இது கலந்தார் விஷயத்தில் விசேஷமாகவும் கூறப்பட்டன என்றறிக.]
71. கோதை யருவிக் குளிர்வரை நன்னாட பேதையோடு யாதும் உரையற்க - பேதை உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான் வழுக்கிக் கழிதலே நன்று. (இ-ள்.) கோதை அருவி - மாலை போன்ற அருவிகளாலே, குளிர்வரை - குளிர்ந்த மலைகளையுடைய, நல்நாட - நல்ல நாட்டையுடைய அரசனே!, பேதையோடு யாதும் உரையற்க - புத்தியீனனோடு எதையும் சொல்லாதிருக்கக் கடவாய், பேதை - பேதையானவன், உரைப்பின் - சொன்னால், சிதைந்து உரைக்கும் - மாறுபட்டுச் சொல்வான், (ஆதலின்) ஒல்லும் வகையான் - கூடுமான விதத்திலே, வழுக்கி கழிதலே - தப்பித்து நீங்குதலே, நன்று - நல்லது. எ-று. அரசனே உன்னிடத்துச் சேர்ந்திருக்கிற வேவலரில் புத்தியீனனாயிருப்பா னொருவனோடு ஒரு சங்கதியும் சொல்லாதே. சொன்னால் அவன் அதைச் சொல்ல வேண்டுமிடத்துச் சரியாய்ச் சொல்லாமல் மாறுதலாய்ச் சொல்வான். அது உனக்குக் கோப காரணமாகும். அப்படி கோபம் வந்தால் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இதைக் காட்டிலும் அந்தச் செய்தியை அவனிடம் சொல்லாமல் தப்பி நீங்குவதே நல்லதென்பது கருத்து. பேதையோடியாதும் - "யவ்வரினிய்யாம்" என்கிற விதியால் ஓடு ஓடி ஆயிற்று; இது குற்றியலிகரம். உரையற்க - எதிர்மறைவியங்கோள், உரை - பகுதி. அல் - எதிர்மறை விகுதி, க - விகுதி. உரைப்பின் - பகரம் - இடைநிலை, ககரமும் வரும். அப்போது உரைக்கின் என்றாகும் கழிதலே - ஏகாரம் - தேற்றம். நன்று - குறிப்புமுற்று.
72. நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது தாரித் திருத்தல் தகுதிமற்று - ஓரும் புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம் சமழ்மையாக் கொண்டு விடும். (இ-ள்.) நேர் அல்லார் - செவ்வையாகாதவர், நீர் அல்ல - குணவீனமான சொற்களை, சொல்லியக்கால் -, அது தாரித்து இருத்தல் - அதைப் பொறுத்திருப்பது, தகுதி - யோக்கியமாம், மற்று - அதற்கு வேறாகிய பொறாமையை, பொங்கு நீர் ஞாலம் - மேலோங்குகிற சமுத்திரஞ் சூழ்ந்த பூமி [பூமியிலுள்ளோர்], புகழ்மை ஆ கொள்ளாது - புகழத்தக்கதாக் கொள்ளாமல், சமழ்மை ஆ கொண்டு விடும் - அவமதிக்கத்தக்கதாகக் கொள்வார்கள், எ-று. அரசனே காரியங்களை நேராகக் கண்டறிய மாட்டாத இயல்புடையோர் குணவீனமாகப் பேசினால் அதற்குக் கோபியாமல் பொறுக்க வேண்டும். அதுதான் உலகத்தார் புகழத் தக்கது. அப்படி பொறுக்காமற் போனால் அது நிந்தனையாம் என்பது கருத்து. நேர் - இது பகுதியே பெயரானது அல்ல - பலவின் பெயர். முதலிலிருக்கும் மற்று - அசை, பிந்திய மற்று பெயராக் கொள்ளத்தக்கது. ஒரும் - அசை, [இடை. சூ. 21] புகழ்மை சமழ்மை இவைகளில் மை - தன்மையைக் குறிக்கும் விகுதி. ஞாலம் - இடவாகு பெயர்.
73. காதலார் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும் ஏதிலார் இன்சொல்லின் தீதாமோ - போதெல்லாம் மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப! ஆவ தறிவார்ப் பெறின். (இ-ள்.) போது எல்லாம் - பூக்களிலெல்லாம், மாதர் வண்டு - அழகான வண்டுகள், ஆர்க்கும் - ஒலிக்கின்ற, மலி கடல் தண் சேர்ப்ப - நிறைந்த கடலினது குளிர்ச்சியான, கரையை யுடைய அரசனே!, ஆவது அறிவார் பெறின் - தமக்கு நன்மை யாவதை அறிந்திருப்பவரைப் பெற்றால், காதலார் சொல்லும் சுடு சொல் - தன்னிடத்து அன்புள்ளவர் சொல்லுகிற கடுமையான சொல்லானது, உவந்து உரைக்கும் - சந்தோஷப்பட்டுச் சொல்லுகிற, ஏதிலார் இன்சொலின் - அயலாருடைய இனிமையான சொல்லைக் காட்டிலும், தீது ஆமோ - தீமையைத் தருவதாகுமோ, எ-று. தமக்கு நன்மை தருவது இது, தீமை தருவது இது என்று அறிந்திருக்கிற விவேகிகளுக்கு அன்புள்ளவர்கள் கடிந்து சொல்லுகிற உறுதிச்சொல் எதிரிகள் சிரித்துக் கொண்டு பிரியமாய்ச் சொல்லுகிற சொல்லைவிடத் தீதாகாது என்றால் "அழ அழச் சொல்லுவார் தமர், சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவார் பிறர்" என்கிற பழமொழிப்படி, தற்காலத்தில் பிரியமாகாமல் வெறுக்கத்தக்கதாகச் சொன்னாலும் பிற்காலத்தில் நன்மையைத் தருமாதலால் நண்பர் பேச்சையே யோசித்து எடுத்துக் கொண்டு பொறுக்க வேண்டுமல்லாமல், பிறர் தற்காலத்துக்கு இனிப்பாகச் சொல்லும் பேச்சை எடுத்துக் கொள்ளலாகாது என்பது கருத்து. குறள் - "நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக்கண், மேற்சென்றிடித்தற் பொருட்டு." பெறின் என்பதனால் அது அருமை என அறிக. ஏதும் இலார் - தமக்கு நன்மை செய்யும்படியான யாதொரு சம்பந்தமும் இல்லாதவர் ஏதிலார். இன்சொல் - இனிமையில் மையோடு இகரமும் கெட்டது. சொலின் - ஐந்தனுருபு எல்லையில் வந்தது. போதெலா மாதர் வண்டார்க்கும் என்பது கடற்கரையைச் சிறப்பிக்கின்றது. அறிவார்ப்பெறின் - உருபு - 18வது சூத்திர விதியால் பகரம் மிகுந்தது.
74. அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி உறுவது உலகுவப்பச் செய்து - பெறுவதனால் இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது. (இ-ள்.) அறிவது அறிந்து - அறிய வேண்டிய நன்மை தீமைகளை அறிந்து, அடங்கி - கோபதாபங்களில்லாமல் சாந்தமாகி, அஞ்சுவது அஞ்சி - அஞ்சத்தக்க பழி பாவங்களுக்கு அஞ்சி, உறுவது (தமக்கு) நேர்ந்த காரியத்தை, உலகு உவப்ப செய்து - உலகம் சந்தோஷிக்கும்படி செய்து, பெறுவதனால் - (நியாயத்தின்படி தாம்) பெற்ற பொருளால், - இன்பு உற்று - சந்தோஷத்தை அடைந்து, வாழும் இயல்பு உடையார் - வாழும்படியான சுபாவத்தை யுடையவர்கள், எஞ்ஞான்றும் - எப்பொழுதும், துன்பு உற்று - துன்பத்தை அடைந்து, வாழ்தல் அரிது - வாழுவதில்லை, எ-று. இதனால் நமக்கு நன்மையாகும், இதனால் தீமையாகுமென்று தெரிந்து கொண்டு, கோபமில்லாமல் பொறுத்துப் பழிபாவங்களுக்கு அஞ்சித் தாம் செய்ய வேண்டியதை உலகுக்கு இன்பமாச் செய்து பிறரிடத்துப் பொறாமையில்லாமல் தமக்குக் கிடைத்ததைக் கொண்டு சந்தோஷப் படுகிறவர்களுக்கு எப்போதும் துன்பமில்லையென்பது கருத்து. அறிவது முதலானவை செய்தது போல் வந்த செயப்பாட்டு வினையாலணையும் பெயர்கள் அரிது - இங்கு இன்மையில் வந்தது.
75. வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால் தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின் ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின் தூற்றாதே தூர விடல். (இ-ள்.) இருவர் - இரண்டு பேர், வேற்றுமை இன்றி கலந்து - பேதமில்லாமற் சேர்ந்து, நட்டக்கால் - சிநேகிதத்தால், தேற்றா - ஒழுக்கம் - அறிவிக்கக்கூடாத நடக்கை, ஒருவன் கண் உண்டாயின் - ஒருவனிடம் உண்டாயிருந்தால், ஆற்றும் துணையும் - பொறுக்கக் கூடிய அளவும், பொறுக்க - பொறுக்கக் கடவன், பொறானாயின் - பொறுக்கக் கூடாமற் போனால், தூற்றாதே - (பிறர் அறிய) வெளிப்படுத்தாமல், தூர விடல் - (அவன் சிநேகத்தை) தூரத்தில் விடக்கடவன், எ-று. சிநேகித்தவனிடத்தில் அயோக்கியமான நடக்கை உண்டாயிருந்தால் கூடிய அளவு பொறுத்திருக்க வேண்டும். கூடாமற் போனால் சிநேகத்தை விடலாமே யல்லாமல் அதைத் தூற்றலாகாது என்பது கருத்து. நட்டக்கால் - நள் - பகுதி, கால் - விகுதி; ளகரம் டகரமானது சந்தி, மற்றொரு டகரம் எழுத்துப் பேறு, அகரம் - சாரியை, ககர மிகுதியும் சந்தி. தேற்றல் - தெளியச் செய்தல், அறிவித்தல். தூரவிடல் - அந்தச் சிநேகம் தூர்ந்துபோம்படியாக விடல்; அதாவது அழிந்துபோம்படி எனவும் உரைக்கலாம். விடல் - வியங்கோள் வினைமுற்று.
76. இன்னா செயினும் இனிய ஒழிகென்று தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக் கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட! விலங்கிற்கும் விள்ளல் அரிது. (இ-ள்.) கானக நாட - காடு மிகுந்த நாடுடையவனே!, இன்னாசெயினும் - (நண்பர்) இனிமையாகாதவை செய்தாலும், இனிய ஒழிக என்று - (அந்த இன்னாதவை) இனியவாக நீங்கட்டும் என்று நினைத்து, தன்னையே தான் நோவின் அல்லது - தன்னையே தான் வெறுப்பதல்லாமல், துன்னி கலந்தாரை - சேர்ந்து சிநேகித்தவரை, கைவிடுதல் - விட்டுவிடாதே; விள்ளல் - (சிநேகத்திற்) பிரிதல், விலங்கிற்கும் அரிது - மிருகங்களுக்கும் கூடாத காரியம், எ-று. சிநேகிதர் தீங்கு செய்தால் அதற்குக் கோபியாமல் அத்தீங்குகள் நமக்கு நல்லவையா ஒழியட்டுமென்று எண்ணி இப்படியாவதற்குக் காரணம் நம்முடைய பாவந்தான் என்று தன்னைத்தான் வெறுக்க வேண்டுமே யன்றிப் பொறாமல் சிநேகிதரைத் துறப்பது தகுதியன்று. இப்படிச் செய்வது மிருகங்களிலும் இல்லை என்பதாம். இனி + அவ் + ஒழிக என்பது தொகுத்தலாய் இனிய வொழிக என்றாயிற்று எனக்கொண்டு இனி அவ் இன்னாதவை ஒழியட்டுமென்று எனவுமுரைக்கலாம். அவ் - பலவின்பால் சுட்டுப் பெயர். செயினும் என்கிற இழிவு சிறப்பும்மையால் அப்படி செய்தல் பெரும்பாலுமில்லை யென்றாகிறது. நோவின் - இதில் இன் சாரியை, வேற்றுமையுருபு முதலியவின்றித் தனித்துப் பெயரோடு வந்ததெனக் கொள்ள வேண்டும்; செயினென் வாய்பாட்டு வினையெச்ச விகுதி யென்றாகிலும் ஐந்தனுருபென்றாகிலும் கொண்டால் பொருள் பொருந்தாமை அறிக. நோவு - தொழிற்பெயர்; நோவதல்லது என வருவதைக் காண்க. விலங்கிற்கும் - இழிவு சிறப்பும்மை. விலங்கு - குறுக்கு, மனிதரைப் போல் நேரே நிற்பதின்றிக் குறுக்காய் நின்று உணவு முதலாயவற்றைக் கொள்ளுதலாலே விலங்கு என்னப்பட்டது. இதனை வடநூலார் 'திர்யக்' என்பர்.
77. பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த அரிய பொறுப்ப என்றன்றோ - அரியரோ ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட! நல்லசெய் வார்க்குத் தமர். (இ-ள்.) ஒல் என் அருவி - ஒல் என ஒலிக்கின்ற அருவிகளையுடைய, உயர் வரை நல் நாட - உயர்வாகிய மலைகளையுடைய நல்ல நாட்டின் அரசனே!, பெரியார் பெரு நட்பு கோடல் - பெரியோர்களுடைய மேன்மையான சிநேகத்தைக் கொள்ளுதல், தாம் செய்த அரிய பொறுப்பு என்று அன்றோ - தாங்கள் செய்த பொறுத்தற்குக் கூடாத குற்றங்களைப் பொறுத்துக் கொள்வார்கள் என்றல்லவா, நல்ல செய்வார்க்கு - நன்மைகளைச் செய்பவர்க்கு, தமர் - நேசராகிறவர்கள், அரியரோ - (கிடைக்க) அருமையானவர்களோ, எ-று. தம்மைச் சேர்ந்தவர்கள் அரிய குற்றங்களைச் செய்தாலும் அவை பொறுப்பது பெரியோரியல்பு. நன்மை செய்பவர்களுக்கு எவரும் நட்பாவாராதலால் அது விசேஷமல்ல வென்றபடி. கோடல் - தொழிற்பெயர், கொள், தல் - பகுதி விகுதிகள், பகுதி முதனீட்சி - விகாரம்; இதை எழுவாயாக வைத்து ஆகின்றதெனப் பயனிலை வருவித்துக் கொள்க. பெரியார் பொறுப்ப என்பது இவ்வாக்கியத்தின் உள் வாக்கியம். பொறுப்ப - பலர்பால் வினை முற்று. அன்றோ என்பது பிரசித்தத்தைக் காட்டுகின்றது. தமர் - தாம் என்னுங் கிளைப் பெயரடியாக வந்த பெயர். அரியரோ - ஓகாரம் எதிர்மறை. நல்ல - பலவின் பெயர்.
78. வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு அற்றம் அறிய உரையற்க - அற்றம் மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே தம்மைத் துறக்கும் துணிவிலா தார். (இ-ள்.) வற்றி - (உடம்பில் மாமிச முதலிய) வற்றி, ஆற்ற பசிப்பினும் - மிகவும் பசித்தாலும், அற்றம் - (தமது) வறுமையை, பண்பு இலார்க்கு - சற்குண மில்லாதவருக்கு, அறிய உரையற்க - அறியும்படி சொல்லாதிருக்கக் கடவர்; தம்மை துறக்கும் துணிவு இலாதார் - விசேஷ சங்கடங்களில் தம்மை மாய்த்துவிடும் படியான மனவுறுதி யில்லாதவர். அற்றம் மறைக்கும் துணையார்க்கு - தமது வறுமையை நீக்க வல்லவருக்குச் சொல்லலாமே யல்லாமல் அயோக்கியரிடத்துச் சொல்லலாகா தென்பதாம். இப்பாடல் வேறு அதிகாரத்தில் சேர்க்கத் தக்கது ஆனாலும் பொறுக்கிறதென்கிற வொரு சம்பந்தத்தால் இங்கே சேர்க்கப்பட்டது. வாய் திறந்து கொண்டு தூங்கினான் என்பது போல் பசித்து வற்றினாலும் என மாற்றிக் கொள்க. அற்றம் - அது - பகுதி, அம் - கர்த்தாப் பொருள் விகுதி; செல்வம் அற்றிருப்பது. என்பது பொருள். ஏ - அசை.
79. இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும் இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம் ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட! பழியாகா ஆறே தலை. (இ-ள்.) ஓங்கு அருவி நாட - மேலெழும்புகிற அருவிகளுள்ள நாடுடையவனே! இன்பம் பயந்து - இன்பத்தைத் தந்து, ஆங்கு இழிவு தலைவரினும் - அதிலே தாழ்மை நேர்ந்தாலும், இன்பத்தின் பக்கம் - இன்பம் வருகிற பக்ஷத்திலேயே, இருந்தைக்க - இருக்கின்ற உனக்கு, இன்பம் ஒழியாமை கண்டாலும் - சுகம் நீங்காதிருப்பதைப் பார்த்தாலும், பழி ஆகா ஆறே - பழிப்பு உண்டாகாத வழியே, தலை - முக்கியம், எ-று. ஒரு காரியஞ் செய்தால் அதில் இன்ப முண்டாவதோடு பழியும் தாழ்மையு முண்டானால் அதை விட வேண்டும். தாழ்மையைப் பொறுத்து இன்பம் வருவதையே நோக்கி நிற்கிறவனுக்கு ஒழியாத இன்பம் கிடைத்தாலும் அது வரும் வழி பழிப்பில்லாததாயிருக்க வேண்டும் என்றபடி. இருந்தைக்க - இருந்தை - முன்னிலை வினையாலணையும் பெயர், கு - நான்கனுருபு, அ - சாரியை பெற்றது. (பெயர். சூ. 61.) இப்பாடலும் பழிப்பைப் பொறுத்தல் தகுதியல்ல வென்பது மாத்திரத்தால் இங்கு சேர்க்கப்பட்டதென அறிக. ஏகாரம் - தேற்றம் கண்டாலும் - உம்மை உயர்வு சிறப்பு.
80. தான்கெடினும் தக்கார்கேடு எண்ணற்க தன்னுடம்பின் ஊன்கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க - வான்கவிந்த வையக மெல்லாம் பெறினும் உரையற்க பொய்யோடு இடைமிடைந்த சொல். (இ-ள்.) தான் கெடினும் - தான் கெட்டாலும், தக்கார் கேடு எண்ணற்க - யோக்கியருக்குக் கெடுதி செய்ய நினையாதிருக்கக் கடவன்; தன் உடம்பின் ஊன் கெடினும் - தன்னுடம்பில் மாமிசம் வற்றி யழியும்படி யானாலும், உண்ணார் கைத்து - உண்ணத்தகாதவர் கையினால் வரும் உணவை, உண்ணற்க - உண்ணாதிருக்கக் கடவன்; வான் கவிந்த - ஆகாயம் மூடிய, வையகமெல்லாம் பெறினும் - உலகத்தையெல்லாம் பெறுவதாயிருந்தாலும், பொய்யோடு இடைமிடைந்த சொல் - இடையிலே அசத்தியத்தோடு சேர்ந்த சொல்லை, உரையற்க - சொல்லாதிருக்கக் கடவன், எ-று. பொறாமையாலே தன்னைப் போல் பிறரும் கெடட்டும் என்று யோக்கியருக்கு கேடு நினையாதிருக்க வேண்டும்; பசி பொறாமையாலே உண்ணாத விடத்தில் உண்ண வேண்டாம்; உலகமெல்லாம் கிடைப்பதா யிருந்தாலும் பொய் சொல்லாமல் தன் வளப்பமின்மையைப் பொறுக்க வேண்டும் என்பது கருத்து. முந்திய உம்மை இரண்டும் இழிவு சிறப்பு, பிந்தியது உயர்வு சிறப்பு, கைத்து - கையினால் வருவது; அவரிடுஞ் சோறு; பொருள் எனவுமுரைக்கலாம்; கை - பகுதி, து - விகுதி. பொய்யோடிடைமிடைந்த சொல் என்றதனாலே சில உண்மையானாலும் பொய் சிறிது கலந்ததும் சொல்லலாகாதென்பதாம். 9. பிறர்மனை நயவாமை
[அதாவது பிறருடைய மனையாளை விரும்பாதிருத்தல்.]
81. அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால் நிச்சம் நினையுங்கால் கோக்கொலையால் - நிச்சலும் கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன்தாரம் நம்பற்க நாணுடை யார். (இ-ள்.) அச்சம் பெரிது - பயம் அதிகமானது; அதற்கு இன்பம் - அக்காரியத்தில் இன்பமானது, சிறு அளவு - அற்ப பிரமாணமுள்ளது; நிச்சம் - தினமும், நினையுங்கால் - யோசித்தால், கோ - அரசனால், கொலை - கொல்லுதல் (நேரும்); நிச்சலும் - நித்தமும், கும்பிக்கே - நரகத்திற்கே, கூர்ந்த வினை - மிகுந்த செய்கை; (ஆதலால்) நாண் உடையார் - வெட்கமுள்ளவர்கள், பிறன் தாரம் - பிறனுடைய மனையாளை, நம்பற்க - விரும்பாதிருக்கக் கடவர், எ-று. பிறர் தாரத்தினிடத்தில் போக எத்தனப்பட்டால் அவளுக்குடையவர் அடிப்பது முதலான செய்கைகளுக்கு அஞ்ச வேண்டுவதும், விஞ்சினால் அரசன் கொலை செய்வானென்கிற பயமும், இத்தனை தான் பொறுத்தாலும் அதில் வரும் சுகமோ அற்பம், பின்பு நரகத்திற்குக் காரணம். இவ்வளவு சங்கடங்களிருப்பதனால் பிறர் தாரம் விரும்புதல் யோக்கியமன்று என்றதாம். அச்சம் - அஞ்சு - பகுதி, அம் - தொழிற்பெயர் விகுதி, வலித்தல் விகாரம். அதற்கு - கு - இடப்பொருளில் வந்தது, வேற்றுமை மயக்கம். நிச்சம் நிச்சல் இரண்டும் 'நித்யம்' என்கிற வடமொழித் திரிபு. கொலை - தொழிற்பெயர்; கொல் ஐ - பகுதி விகுதிகள். கும்பிக்கு - கு - பொருட்டுப் பொருளில் வந்தது. [பெயர். சூ. 41.] ஆல் - நான்கும் அசை. தாரம் - வடமொழி. நாணுடையார் என்பதனாலே அக்காரியத்தில் எல்லாக் குற்றங்களுக்குமுன் நாண முண்டாவது பெரிதென்றாயிற்று.
82. அறம்புகழ் கேண்மைபெருமைஇந் நான்கும் பிறன்தாரம் நச்சுவார் சேரா - பிறன்தாரம் நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று அச்சத்தோடு இந்நாற் பொருள். (இ-ள்.) அறம் புகழ் கேண்மை பெருமை இந்நான்கும் - தருமம் கீர்த்தி சிநேகம் மேம்பாடு ஆகிய இந்த நான்கு பொருளும், பிறன் தாரம் நச்சுவார் - பிறன்மனையாளை விரும்புகிறவர்களை, சேரா - சேரமாட்டா; பகை பழி பாவமென்று - பகையும் நிந்தனையும் பாவமும், அச்சத்தோடு இந்நால் பொருளும் - அச்சமும் ஆகிய இந்த நான்கு பொருளும், பிறன் தாரம் நச்சுவார் - பிறன் தாரத்தை விரும்புகிறவர்களை, சேரும் -, எ-று. அப்பெண்ணைச் சேர்ந்த பலரும் விரோதிகளாவார்களாதலால் கேண்மையில்லை; ஈனகாரியமாதலால் பெருமையும் கீர்த்தியுமில்லை. அற முதலிய நான்கும் செவ்வெண் ஆதலின், [இடை. சூ. 9]ன்படி தொகைபெற்றன. பகை முதலிய நான்கு மிப்படியே. என்று என்கிற எண்ணிடைச்சொல், [இடை. சூ. 10]ன்படி பிரிந்து பகை முதலியவற்றோடும் சேர்ந்தன. "இயல்பின் விகாரமும் விகாரத்தியல்பும்" என்கிற [உரு. சூ. 16] விதியால் 'நச்சுவார்ச்சேரா' என வலி மிகுந்தது. நான்கு போய் நான்கு வரும் என்று சொன்னதினால் இது 'பரிவர்த்தனை' என்னும் அலங்காரம்; "பொருள் பரிமாறுதல் பரிவர்த்தனையே" - தண்டியலங்காரம்.
83. புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம் துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம் எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ உட்கான் பிறன்இல் புகல். (இ-ள்.) புக்க இடத்து அச்சம் - (பிறன் தாரத்தினிடம்) போகும் பொழுது பயமுண்டாகின்றது; போதரும் போது அச்சம் - திரும்பி வரும் போதும் பயம்; துய்க்கும் இடத்து அச்சம் - அனுபவிக்கும் போதும் பயம்; தோன்றாமல் காப்பு அச்சம் - (பிறர்) அறியாமல் காப்பதில் பயம்; எக்காலும் அச்சம் தருமால் - எப்போதும் பயத்தைத் தருவதாகையால், பிறன் இல் புகல் - பிறனில்லாளிடம் போவதை, எவன் உட்கான் - எவன் பயப்படமாட்டான், எ-று. கொல், ஓ - இரண்டும் அசை. கருத்து வெளிப்படையா நின்றது. புக்க - புகு - பகுதி, அ - விகுதி, ககர மிகுதி இறந்த காலங்காட்டும் பெயரெச்சம். உட்கான் - உட்கு - பகுதி. அச்சப் பொருளுள்ள சொல் வந்தவிடத்து அஞ்சத்தக்கதின் மேல் இரண்டாம் வேற்றுமை வருவது தமிழ் வழக்கு. நான்காம் வேற்றுமையும் வரும்.
84. காணின் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையும்; ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; - நீள்நிரயத் துன்பம் பயக்குமால்; துச்சாரி, நீகண்ட இன்பம் எனக்கெனைத்தால் கூறு. (இ-ள்.) காணின் குடி பழி ஆம் - (பிறர்) கண்டால் தன் குலத்துக்கு நிந்தனையுண்டாம்ப்; கை உறில் - அகப்பட்டால், கால் குறையும் - (தண்டனையால்) கால் குறைவுபடும்; மாண் இன்மை செய்யுங்கால் - அந்தத் துஷ்ட காரியஞ் செய்யும்போது, அச்சம் ஆம் - பயமுண்டாம்; நீள் நிரயத் துன்பம் பயக்கும் - (அந்தக் கெட்ட காரியம்) நெடுங்கால மனுபவிக்கும்படியான நரக வேதனையை உண்டாக்கும்; (ஆகவே) துச்சாரி - விபசாரமாகிய துஷ்ட காரியஞ் செய்பவனே! நீ கண்ட இன்பம் எனைத்து - நீ அதில் கண்ட சுகம் எவ்வளவு, எனக்கு கூறு - எனக்குச் சொல், எ-று. கருத்து வெளிப்படை. கையுறில் கால் குறையும் என்றால் அகப்பட்ட போது அரசனால் காலை வெட்டுதல் நேரிடும் என்பதாம், துச்சாரி - வடமொழி திரிந்தது; துஷ்ட நடக்கை செய்பவன் என்பது பொருள். ஆல் - இரண்டும் அசை; முதலிலிருப்பதை ஏதுப் பொருள் குறிப்பதாகவுங் கூறலாம்.
85. செம்மையொன் றின்றிச் சிறியார் இனத்தராய்க் கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ - உம்மை வலியால் பிறர்மனைமேல் சென்றாரே இம்மை அலியாகி ஆடிஉண் பார். (இ-ள்.) செம்மை ஒன்று இன்றி - ஒரு நன்னடக்கையுமில்லாமல், சிறியார் இனத்தர் ஆய் - அயோக்கியரோடு சேர்ந்தவராய், கொம்மை வரி முலையாள் - திரட்சியான ரேகைகள் எழுதப் பெற்ற முலையை யுடையாளுடைய, தோள் மரீஇ - தோளைச் சேரவிரும்பி, உம்மை - முற்பிறப்பில், வலியால் - வலிமையால், பிறர் மனைமேல் சென்றாரே - பிறர் மனையாளிடஞ் சென்றவர்களே, இம்மை அலி ஆகி - இப்பிறப்பில் நபும்சகராய், ஆடி உண்பார் - கூத்தாடி (பிச்சை வாங்கி) உண்கிறார்கள், எ-று. முற்பிறப்பில் பிறர் மனையாளிடம் சென்றவர் தாம் இப்பிறப்பில் நபும்சகராகிக் கூத்தாடிப் பிழைக்கிறவர் என்பதாம். ஆதலால், பிறர்மனை நயக்க வேண்டாம் என்பது கருத்து. செம்மை ஒன்று இன்றி என்றால், கிஞ்சித்தும் பழி பாவங்களுக்கு அஞ்சி நடவாமல் என்றபடி, அவளைச் சுவாதீனஞ் செய்யப் பலவித சாகசங்களைச் செய்து என்பதை வலியால் என்றார். உம்மை - உகரச்சுட்டின் மேல் காலங்குறிக்க மை விகுதி வந்தது. இம்மையுமப்படியே.
86. பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக் கல்யாணம் செய்து கடிபுக்க - மெல்லியல் காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன் ஏதின் மனையாளை நோக்கு. (இ-ள்.) நாள் கேட்டு - (தக்க) நாளை விசாரித்து, பல்லார் அறிய - பலரும் அறியும்படி, பறை அறைந்து - வாத்தியம் கொட்டி, கல்யாணம் செய்து -, கடி புக்க - காவலைப் பொருந்தின, மெல் இயல் காதல் மனையாளும் - மென்மையான தன்மையுள்ள (தன்னிடம்) ஆசையுள்ள பெண்டாட்டியும், இல்லாள் ஆ - வீட்டிலிருப்பவளாயிருக்க, ஒருவன் -, ஏதில் மனையாளை - அயலான் மனைவியை, நோக்கு - பார்ப்பது, என் - என்ன காரணமுள்ளது, எ-று. தான் கிரமம்படி கலியாணஞ் செய்த மனையாட்டி வீட்டிலிருக்க அயல்மனையாளை விரும்புவது மிகவும் அயோக்கியம் என்றபடி. ஆனால் கலியாணஞ் செய்தவள் வீட்டிலிராவிடின் அயலான் மனையாளிடஞ் செல்லலாமோ என்று ஆக்ஷேபிக்க வேண்டாம். மனையாட்டி யிருக்க அயலில் செல்வது மிகவும் அயுக்தமென்றும், மகாபாதகமென்றும் அறிவித்தற்கு இப்படி சொல்லியதெனக் கொள்க. "வம்புலாங்கூந்தன் மனைவியைத் துறந்து பிறன் பொருடாரமே வெண்ணி; நம்பினாரிறந்தா னமன்றமர்பற்றி யெற்றிவைத்தெரியெழுகின்ற, செம்பினாலியன்ற பாவையைப் பாவி தபவென மொழிவதற்கஞ்சி, நம்பனே வந்துன் னடியிணை பணிந்தே னைமிசாரணியத்து ளெந்தாய்" என்று ஆழ்வார் அருளிச் செய்ததும் காண்க. மெல்லியலென்றும் காதலென்றுஞ் சொன்னது, பெண்ணுக்கு இருக்க வேண்டியகுணமுள்ளவள் என்பதை அறிவிக்க. கடி - உரியடியாகப் பிறந்த பெயரெனக் கொள்க, விகுதி குன்றியது. என் - எவன் என்கிற குறிப்புமுற்று இடைக்குறையா வந்தது. நோக்கு இதை முதனிலைத் தொழிற் பெயரென்றாகிலும் விகுதி கெட்ட தொழிற்பெயர் என்றாகிலும் வைத்துக் கொள்க.
87. அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று - நம்பும் நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு; பாம்பின் தலைநக்கி யன்னது உடைத்து. (இ-ள்.) அயல் அம்பல் எடுப்ப - அயலார் நிந்தனை செய்ய, தமர் அஞ்சி பரீஇ - உறவினர் பயந்து விசனப்பட, மைந்து உற்று - மயக்கங்கொண்டு, வம்பலன் பெண் மரீஇ - அயலான் பெண்டாட்டியைச் சேர்ந்து, நம்பும் நிலைமையில் நெஞ்சத் தான் - (பிறர்) நம்பத்தக்க நிலைமையில்லாத இதயமுடையவனது, துப்புரவு - அனுபவமானது, பாம்பின் தலை நக்கி அன்னது - பாம்பினுடைய தலையை நக்கினாற் போன்ற தன்மையை, உடைத்து - உடையது, எ-று. அயலான் மனையாளிடத்துச் செல்லும்போது பலர் தூஷித்தலும் பயமும் இவனாலே நமக்கெல்லாம் இழிவு வருகின்றதே யென்று பந்துக்கள் விசனப்படுவதும் நேரும். இதனையும் லக்ஷியஞ்செய்யாமல் அனுபவித்தல் எப்படிப்பட்டதென்றால், பளபளப்பாயிருக்கிற தென்று பாம்பின் தலையை நக்கினால் விஷம்பட்டு மரணமடைவது போலக் கேட்டை அடையும்படியிருக்கும் என்பது கருத்து. அயல் - ஆகுபெயர். பரீஇ - பரிந்து என்பது விகுதி உகரம் இகரமாகி அளபெடுத்துக் காலங்காட்டியது; மரீஇ என்பது மிப்படியே. இவை சொல்லிசையளபெடை. பரீஇ என்பது செயவெனெச்சத் திரிபு; "சொற்றிரியினும் பொருடிரியா வினைக்குறை" இது விதி. வம்பலன் - வம்பல் - திசை, அதாவது வேறிடம், அதிலுள்ளவன் வம்பலன்; தன்னோடு சேராமல் வேறிடத்திருப்பவன் என்பது திரண்ட பொருள். நக்கியன்னது - நக்கினாற் போலுந்தன்மை.
88. பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா; உரவோர்கண் காமநோய் ஓஓ!- கொடிதே! விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும் உரையாதுஉள் ஆறி விடும். (இ-ள்.) உரவோர்கண் காம நோய் - ஞானமுடையவரிடத்துள்ள காமவியாதியானது, ஓஓ கொடிது - மிகவும் கொடுமையானது, (ஏனெனில்) பரவா - வளராமலும், வெளிப்படா - வெளியாகாமலும், பல்லோர்கண் தங்கா - பலரிடத்துச் சென்று நிற்காமலும், விரவாருள் - வேறானவர்களிடத்து, நாணுப்படல் - வெட்கப்படுவதை, அஞ்சி - பயப்பட்டு, யாதும் உரையாது - ஒன்றுஞ் சொல்லாமல், உள் ஆறிவிடும் - உள்ளேயே தணிந்துவிடும், எ-று. ஞானவான்களுக்கும் கருமவசத்தாற் காமமுண்டாகலாம்; ஆனால் அது விர்த்தியாகாமலும் வெளிப்படாமலும் பலவிஷயங்களிற் செல்லாமலும் உள்ளேயே ஆறிப்போம்; ஏனெனில் பலருக்கும் நாண வேண்டியிருப்பதால், ஆனபடியால் அது மிகவும் கொடியது என்றதாம். இங்கே கொடிதென்றது காமத்தின் தீமையை நோக்கி அதைச் சகிக்கிறார்களே என்று வியப்பினால் வந்ததாம். பரவா முதலிய வினையெச்சங்கள் வினைச்செவ்வெண் [இடை. சூ. 11] ஓ - சிறப்பில் வந்தது; இது விசேஷ மிகுதி என்பதற்கு அடுக்கி வந்தது. ஏ - அசை, தேற்றமுமாம். விரவார் - விரவுதல் - கலத்தல். நாணு - உகரம் - சாரியை. இப்பாட்டை இவ்வதிகாரத்திற் சொன்னது காமமிகுதியிலும் உரவோர் பிறர்மனை நயவார் என்பதற்கு.
89. அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும் வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்; - வெம்பிக் கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம் அவற்றினும் அஞ்சப் படும். (இ-ள்.) அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும் - பாணமும் நெருப்பும் விரிந்த கிரணங்களையுடைய சூரியனும், வெம்பி சுடினும் - தீக்ஷணியமாகி சுட்டாலும், புறம் சுடும் - புறத்திலே சுடும்; காமம் - காமமானது, வெம்பி - உக்கிரமாகி, மனத்தைக் கவற்றி - இதயத்தைக் கவலைப்படுத்தி, சுடுதலால் - சுடுவதினால், அவற்றினும் - அம்பு முதலியவற்றைக் காட்டிலும், அஞ்சப்படும் - அஞ்சத்தக்கது, எ-று. அம்பு முதலானவை எவ்வளவு வெம்பினாலும் புறமேயன்றி அகஞ்சுடா; காமமோ உள்ளத்தை ஒன்றும் தோன்றாமலிருக்கும்படி கலக்கிச் சுடுமாதலால் அம்பு முதலியவற்றினும் கொடிதென்று பயப்பட வேண்டியதாம். சுடினும் - உம் - சிறப்பு, கவற்றி - பிறவினை வினையெச்சம், கவற்று - பகுதி, அஞ்சப்படும் - இது செயப்பாட்டு வினை; காமம் என்றதை இரண்டாம் வேற்றுமையாகக் கொண்டால் இது ஒருவகை வியங்கோள் வினைமுற்றாம்; காமத்தை அஞ்ச வேண்டும் என்று பொருளாகும். இவ் வினைமுற்றை நன்னூலுரைகாரர் தேற்றப்பொருள்பட்டு வந்த தொழிற்பெயரென்பர்; "வேறில்லை யுண்டைம் பான்மூ விடத்தன" என்கிற சூத்திர வுரையைக் காண்க.
90. ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு நீருள் குளித்தும் உயலாகும்; - நீருள் குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி ஒளிப்பினும் காமம் சுடும். (இ-ள்.) ஊருள் எழுந்த - ஊரில் (பள்ளிக்கொண்டு) ஓங்கிய, உருகெழு செம் தீக்கு - உருவம் சிறந்த நல்ல நெருப்புக்கு, நீருள் குளித்தும் - தண்ணீருள் மூழ்கியாயினும், உயல் ஆகும் - தப்பலாம்; காமம் -, நீருள் குளிப்பினும் சுடுமே - நீரில் மூழ்கினாலும் சுடுமே, காமம் - குன்று ஏறி ஒளிப்பினும் - மலைமேலேறி ஒளித்துக் கொண்டாலும், சுடும்-, எ-று. ஊரிற் பற்றிச் செக்கச் செவேலென்று எழும்பிச் சொலிக்கிற நெருப்பு நீரில் முழுகியிருந்தாரை ஒன்றுஞ் செய்யாது; காமமோ குளித்திருந்தாலும் மலைமேலேறிப் போய் ஒளிந்திருந்தாலும் சுடாமல் விடாதென்றபடி. குளித்தும் - உம்மை விகற்பத்தோடு கூடிய சிறப்புப் பொருளில் வந்ததாகக் கொள்க. உய்யல் என்பது தொகுத்தலால் உயல் என நின்றது. சுடுமே - ஏ நிச்சயத்தில் வந்தது. 10. ஈகை
[அதாவது தரித்திரத்தினால் வருந்தித் தம்மிடம் வருகிறவருக்குச் சோறு முதலியவை கொடுத்தலாம்.]
91. இல்லா இடத்தும் இயைந்த அளவினால் உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக் கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு அடையாவாம் ஆண்டைக் கதவு. (இ-ள்.) இல்லாவிடத்தும் - (தமக்குச் செல்வம்) இல்லாமற் போன காலத்திலும், இயைந்த அளவினால் - தமக்கு இசைந்தமட்டிலே, உள்ள இடம் போல - செல்வமிருக்குங் காலத்திற் போல், பெரிது உவந்து - (அவர் வந்ததற்கு) மிகவும் சந்தோஷப்பட்டு, மெல்ல சாந்தமாக, கொடையோடு பட்ட - கொடுத்தலோடு சேர்ந்த, குணன் உடை மாந்தர்க்கு - குணமுள்ள மனிதருக்கு, ஆண்டை கதவு - அவ்வுலகத்துக் கதவுகள், அடையாஆம் - அடைக்கப்படாதன ஆகும், எ-று. செல்வ மில்லாத போதும் சந்தோஷப்பட்டுச் சாந்தமாய்க் கொடுக்குங் குணமுள்ளவர்களது வரவை எதிர்நோக்கி மேலுலகத்தார் தமது உலகத்துக் கதவைத் திறந்து வைத்திருப்பார்கள் என்றபடி. இங்கே இடம் என்பது காலத்தை. பெரியது - இந்தக் குறிப்பு முற்று இங்கே வினையெச்சமாகி உவத்தலுக்கு உரியாய் நின்றது; இதை வடநூலார், "க்ரியா விசேஷணம்" என்பர். கொடை - கொடு - பகுதி, ஐ - தொழிற்பெயர் விகுதி. குணன் = மகரத்துக்கு னகரம் போலி. உடை - ஈறுதொக்க குறிப்புப் பெயரெச்சம். ஆம் - அசை என்றும் கொள்ளத்தகும். ஆண்டை - ஆண்டு என்னும் சுட்டு குற்றியலுகரமாதலின் "ஐயீற்றுடைக்குற்றுகரமு முளவே" என்கிற [உயிர். சூ. 35] விதியால் ஐகாரச்சாரியை பெற்றது.
92. முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள பின்னரும் பீடழிக்கும் நோயுள; - கொன்னே பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும் கரவன்மின் கைத்துண்டாம் போழ்து. (இ-ள்.) முன்னரே - பூர்வத்திலேயே, சாம் நாள் - சாகுங் காலமும், முனி தக்க மூப்பு - வெறுக்கத் தக்க கிழத்தனமும், உள - ஏற்பட்டிருக்கின்றன; பின்னரும் - பின்னும், பீடு அழிக்கும் - பெருமையைக் குலைக்கும்படியான, நோய் உள - வியாதிகளும் உண்டாயிருக்கின்றன; கைத்து உண்டாம் போழ்து - திரவியம் உண்டாயிருக்கிற காலத்தில், கொன்னே - வீணாய், பரவன்மின் - நாற்புறமும் ஓடாதேயுங்கள், பற்றன்மின் - பிடித்திராதேயுங்கள், பாத்து உண்மின் - (சோறு முதலியவற்றை யாசகர்க்கு) பகுத்துக் கொடுத்து உண்ணுங்கள், யாதும் கரவன்மின் - எதையும் ஒளியாதிருங்கள், எ-று. நாம் பிறக்கு முன்னமே சாநாள் மூப்பு நோய் இவை கடவுளால் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால் திரவியமிருக்கும் போது அதைக் கெட்டியாப் பிடித்து யாசகர்க்கு இல்லையென்று சொல்லாமல் பகுத்துக் கொடுத்து அனுபவியுங்கள் என்பது கருத்து. வைத்து உண்டாம் போழ்து என்பதை ஒவ்வொரு வாக்கியத்திலும் கூட்டிக் கொள்க. பின்னரும் என்பதற்கு இன்னமும் எனப்பொருள் கொள்க. முன் பின் என்பவை அர் சாரியை பெற்றன. சாம் நாள் - பெயரெச்சத் தொடர். முனிதக்க - முனிதற்குத்தக்க, முதனிலைத் தொழிற்பெயர், நான்காம் வேற்றுமைத்தொகை. உள - பலவின்பால் குறிப்பு முற்று. கொள் - இடைச்சொல். பரவன்மின் பற்றன்மின் முதலியவை எதிர்மறை யேவற்பன்மை வினைமுற்று. பாத்து - பா - பகுதி. கைத்து - கையிலுள்ளது. யாதும் கரவன்மின் என்றது எதையும் இல்லையென் றொளிக்க வேண்டாம் என்று முன் சொன்னதையே உறுதிப்படுத்தியது.
93. நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்; கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்; இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம் விடுக்கும் வினையுலந்தக் கால். (இ-ள்.) கொடுத்து தான் துய்ப்பினும் - பிறருக்குக் கொடுத்துத் தான் அனுபவித்தாலும், ஈண்டும் கால் ஈண்டும் - சேருங்காலத்திற் சேரும்; விடுக்கும் வினை உலந்தக்கால் - (நம்மிடத்தில் பொருளைச்) சேர்த்த நல்வினை அழிந்தால், செல்வம் - செல்வமானது, மிடுக்கு உற்றுப் பற்றினும் - வலி பொருந்திப் பிடித்தாலும், நில்லாது - நிலையாது; (இதை அறியாதவர்) நடுக்கு உற்று தன் சேர்ந்தார் துன்பம் - (தரித்திரத்தால்) நடுக்கலை அடைந்து தன்னைச் சேர்ந்தவர்களுடைய துக்கத்தை, துடையார் - போக்க மாட்டார்கள், எ-று. செல்வமானது நல்வினை சேர்ந்த காலத்திற் சேர்ந்து அது அழியுங் காலத்தில் எவ்வளவு உறுதியாய்ப் பிடித்தாலும் நிற்காதாகையால் செல்வமிருக்கும் போதே வறுமையால் வருந்தித் தன்னிடம் வருபவருடைய சங்கடத்தைத் தீர்க்க வேண்டுமென்பது கருத்து. இது ஏற்புழி யெடுத்துடன் கூட்டுறு மடியதாகிய அடிமறிமாற்றுப் பொருள்கோள். [பொது. சூ. 68.] கொடுத்துத் தான் துய்ப்பினும் என்றதனால், கொடுத்தல் செல்வ நிலைமைக்குக் காரணமானாலும் அது மறுபிறப்புக்கே யன்றி இப்பிறப்புக்கு அன்று என்று காட்டியதாயிற்று. இப்பிறப்பில் செல்வம் சேர்வதும் நீங்குவதும் போன பிறப்பின் கருமவசம் என அறிக. நடுக்கு - முதனிலைத் தொழிற்பெயர். தற்சேர்ந்தார் - இதில் [மெய். 15வது சூத்திரவிதியால்] தன் என்பதின் னகரம் திரிந்தது. துய்ப்பினும் - உம்மை உயர்வு சிறப்பு. விடுக்கும் - கு - சாரியை.
94. இம்மி யரிசித் துணையானும் வைகலும் நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக் கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து அடாஅ அடுப்பி னவர். (இ-ள்.) இம்மி அரிசி துணை ஆனும் - இம்மியளவான அரிசியை யாயினும், நும்மில் இளையவ - உங்களுக்கு இசைந்தவற்றை, வைகலும் - தினந்தோறும், கொடுத்து உண்மின் - யாசகருக்குக் கொடுத்து உண்ணுங்கள்; குண்டு நீர் வையத்து - ஆழமான கடல் சூழ்ந்த பூமியில், அடா அடுப்பினவர் - சமைக்காத அடுப்பையுடையவர் (சோற்றுப் பிச்சைக்கு வருகின்றவர்), உம்மை - முற்பிறப்பில், கொடாதவர் என்பர் - (யாசகருக்குக்) கொடுக்காத லோபிகள் என்று சொல்வார்கள், எ-று. கிஞ்சித்தாலும், இயைந்ததைக் கொடுக்க வேண்டும், முற்பிறப்பில் கொடாதவரே இப்பிறப்பில் சோற்றுப் பிச்சைக்கு வருகிறவர்கள் என்பதாம். அடா அடுப்பினவர் - துறவிகள், உம்மை கொடாதவர் - (இவர்) முற்பிறப்பில் கொடுத்து வையாதவர், என்பர் -, என உரைத்தல் நன்று. சன்னியாசிகள் அடுப்பு வைத்துச் சமைக்க லாகாதென்பது சாஸ்திரவிதி. இம்மி - ஒரு சிறிய அளவு, அது (960ல்) ஒரு பங்கு. ஏனும் என்பது போல ஆனும் என்பதும் இழிவு சிறப்போடு விகற்பத்தைக் காட்டுகிற ஓரிடைச் சொல். வைகலும் - முற்றும்மை. இயைவ - பலவின்பால் வினையாலணையும் பெயர். கொடா அதவர், அடாஅ - இசையளபெடை. அடாஅ அடுப்பினவர் என்பது வறுமைக்குக் குறிப்பு.
95. மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு உறுமா றியைவ கொடுத்தல் - வறுமையால் ஈதல் இசையா தெனினும் இரவாமை ஈதல் இரட்டி யுறும். (இ-ள்.) மறுமையும் இம்மையும் நோக்கி - மேலுலகப் பயனையும் இவ்வுலகப் பயனையும் பார்த்து, ஒருவற்கு -, உறும் ஆறு இயைவ - பொருந்தும் வழியில் இசைந்தவைகளை, கொடுத்தல் - கொடுக்கக் கடவன்; வறுமையால் - தரித்திரத்தினால், ஈதல் இசையாதெனினும் - கொடுத்தல் இசையாமற் போனாலும், இரவாமை - பிறரிடம் யாசியாமலிருப்பது, ஈதல் - கொடுப்பதினும், இரட்டி உறும் - இரட்டித்துப் பயன் தரும், எ-று. மறுமையில் சொர்க்கமும் இம்மையில் புகழும் வருவதைப் பார்த்து இயைந்தமட்டில் பிறருக்குக் கொடுக்க வேண்டும், அப்படிக் கொடுக்கக் கூடாமற் போனாலும் தான் பிறரை யாசியாமலிருப்பது மிகவும் நல்லதென்பதாம். கொடுத்தல் - வியங்கோள்வினைமுற்று [வினை. சூ. 69], இரட்டி - வினையெச்சம். இரட்டுவது இரட்டி எனக் கர்த்தாப் பொருள்விகுதி பெற்ற பெயரெனக் கொண்டு இரட்டித்த பயனானது பொருந்தும் எனவு முரைக்கலாம்.
96. நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்; குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள் இடுகாட்டுள் ஏற்றைப் பனை. (இ-ள்.) நடு ஊருள் - ஊர் நடுவிலே, வேதிகை - திண்ணையானது, சுற்றுக்கோள் புக்க - சுற்றிக் கொள்ளுதலை யடைந்த, படுபனை அன்னர் - பயன்படும்படியான பனை மரத்தை யொத்தவர் (யாரெனில்) பலர் நச்ச வாழ்வார் - பலரும் விரும்பும்படி வாழ்கிறவர்கள்; குடி கொழுத்தக்கண்ணும் - குடித்தனம் வளப்பமாயிருக்கும் போதும், கொடுத்து உண்ணாமாக்கள் - யாசகர்க்குக் கொடுத்து அனுபவியாத மனிதர், இடுகாட்டுள் ஏற்றுப்பனை - சுடுகாட்டிலுள்ள ஆண்பனைக்கு ஒப்பாவார்கள், எ-று. ஊரினடுவிலே பழந்தரும் படியான பனைமர மொன்றிருந்து அதைச் சுற்றிலும் திண்ணையுமிருந்தால் வேண்டியவர் வந்து பழம் பறித்துக் கொண்டு அத்திண்ணைமேலுட்கார்ந்து புசிப்பார்களே அது போல் செல்வமுள்ளவர் சோறு கூறை முதலியவற்றைத் தாராளமாய்க் கொடுப்பவரா யிருந்தால் யாவரும் விரும்பி அவரிடம் வந்து இன்பமடைவா ராதலின் கொடுப்பவர் அப்படிப்பட்ட பனைக்கு ஒப்பிடப்பட்டார்; செல்வமல்கிக் குடிவாந்திருக்கையிலும் ஒன்றுங் கொடாமல் வாழ்கிறவர்கள் சுடுகாட்டிலுள்ள ஆண்பனை போல் வீணாயும் வெறுக்கும் படியாயு மிருப்பவராம் என்பது கருத்து. சுடுகாடு நினைத்த போது போகக்கூடாத அசுத்தமான விடம். மரமும் பழந்தராதாயின் மிகவு நிந்தனைக்குப் பாத்திரமென்றபடி, நடுவூர் - இலக்கணப்போலி, சுற்றுக் கோளுக்கு வேதிகை கர்த்தா. புக்க - இப்பெயரெச்சம் பனையொடு சேரும். வேதிகையைச் சுற்றுக் கோட்புக்க பனையெனவுங் கூட்டலாம். அப்போது நடுவில் திண்ணையும் சுற்றிலும் பனைமரங்களுமெனக் கருத்துக் கொளல் வேண்டும். படு - வினைத்தொகை. கொழுத்தக்கண் - வினையெச்சம், கண் - விகுதி. உம்மை - சிறப்பு. இடு - இதுவும் வினைத்தொகை. இடுகாடு - இறந்தவரை வைக்கிற காடென்பதாம். ஏறு - ஆண்.
97. பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம் செயற்பால செய்யா விடினும் - கயற்புலால் புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப! என்னை உலகுய்யு மாறு. (இ-ள்.) கயல் புலால் - மீன்களின் மாமிச நாற்றத்தை, புன்னை கடியும் - புன்னை மலர்கள் நீக்கப் பெற்ற, பொரு கடல் - அலைமோதுகின்ற கடலினது, தண் சேர்ப்ப - குளிர்ச்சியான கரையுள்ள அரசனே!, பெயல் பால் - பெய்யும்படியான காலத்தில், மழை பெய்யாக் கண்ணும் - மழை பெய்யாவிடினும். உலகம் - உலகமானது, செயல்பால - செய்யத்தக்க உதவிகளை, செய்யவிடினும் - செய்யாமல் விட்டாலும், உலகு உய்யும் ஆறு - உலகம் பிழைக்கும் வகை, என்னை - ஏதாம், எ-று. காலத்தில் மழை பெய்யாமலும் மேலானவர் அன்ன முதலியவற்றை உதவாமலும் இருந்தால் உலகம் அப்படி பிழைக்கும் என்றதாம்; ஆதலால் உள்ளவர் இல்லாதவர்க்குக் கொடுக்க வேண்டு மென்பது கருத்து. பெயல்பால் - பெயலுக்கு உரிய பால் என விரிக்க; பால் - காலப்பகுதி, உலகம் என்பது இங்கே உயர்ந்தவர்கள். செயல்பால - செய்தற்குத்தக்க தன்மையை உடையன; அகரம் - பலவின்பால் விகுதி, செய்யா - எதிர்மறை வினையெச்சம், மல் - விகுதி குறைந்தது; செய்யாவிடின் என்று ஒரு சொல்லாக் கொள்வதும் தகும். என்னை - எவன் என்கிற குறிப்புமுற்று இடைகுறைந்து ஐகாரச் சாரியை பெற்றது; அகரச் சாரியை பெற்று என்ன என்றும் வரும்.
98. ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையார் ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன் - ஆற்றின் மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல் பொலிகடன் என்னும் பெயர்த்து. (இ-ள்.) மலி கடல் தண் சேர்ப்ப - வளப்பமிகுந்த க்டலின் குளிர்ச்சியான கரையையுடைய அரசனே!, ஏற்ற கை மாற்றாமை - யாசகன் ஏந்தின கையை மறுக்காமல், என்னானும் - எதையாகிலும், வரையாது - (இன்னான் இன்னானென்று) வரை ஏற்படுத்தாமல், ஆற்றாதார்க்கு - பிரதி செய்யமாட்டாத தரித்திரருக்கு, ஆற்றின் ஈவது - முறையால் கொடுப்பது, ஆண் கடன் ஆம் - ஆண் மக்களுடைய கடமையாம்; மாறு ஈவர்க்கு ஈதல் - எதிருபகாரஞ் செய்யவல்லவருக்குக் கொடுப்பது, பொலிகடன் என்னும் பெயர்த்து - விசேசமான கடன் என்கிற பெயரையுடையது, எ-று. யாசித்தால் இல்லையென்று மறுக்காமலும், இவன் உறவினன் இவன் சிநேகிதன் இவன் அப்படியல்லாதவன் என்று வரையறை செய்யாமலும் வறுமைப்பட்டவர்க்குத் தனக்கியைந்ததைக் கொடுக்க வேண்டும்; அதுதான் கொடையெனப் பெயர்பெறும். பதிலுபகாரஞ் செய்பவனுக்குக் கொடுப்பது கொடையாகாது; விசேஷமான கடனென்றே சொல்லப்படும். பிறரிடம் கடன் வாங்கினால் சக்தியில்லாத போது ஐயா எனக்கு நிர்வாகமில்லை அல்லது இவ்வளவு கொடுக்கிறேன் நீர் அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு சக்தியின்படி நடத்தலா மாதலால் பொலிகடன் என்றார். மாற்றாமை - எதிர்மறை வினையெச்சம், மை - விகுதி, ஆண் - கொடுக்கும் ஆண்மையுள்ளவன். பெயர்த்து - குறிப்பு வினைமுற்று.
99. இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும் அறப்பயன் யார்மாட்டும் செய்க - முறைப்புதவின் ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல் பைய நிறைத்து விடும். (இ-ள்.) இறப்ப சிறிது என்னாது - (நாம் கொடுப்பது) மிகவும் அற்பமானதென்று நினையாமலும், இல் என்னாது - இல்லை என்று சொல்லாமலும், என்றும் - எப்போதும், யார்மாட்டும் - எப்படிப்பட்டவர் விஷயத்திலும், அறம் பயன் செய்க - தருமமாகிய பிரயோஜனத்தைச் செய்யக்கடவன்; (அது) முறை - கிரமமாக, புதவின் - வாசல்களிலே, ஐயம் புகும் தவசி - பிச்சைக்குச் செல்கிற தவசியினது, கடிஞை போல - பிச்சைப் பாத்திரம் போல, பைய - மெல்ல, நிறைந்து விடும் - (அறப்பயனை) பூரணமாக்கும், எ-று. நாம் அற்பத்தைக் கொடுக்கலாமா என்று யோசியாமலும் இல்லையென்று சொல்லாமலும் இசைந்தமட்டில் கொடையாகிய அறத்தைச் செய்தால் அதனால் வீடுதோறுஞ் சென்று சிறிது சிறிதாய் இரக்க, சன்னியாசியின் பாத்திரம் நிறைந்து போவதுபோல அறப்பயனும் நிறைந்துபோம் என்பதாம். இல் - ஈறுகெட்ட வினைமுற்று. பைய - வினையெச்சம், பை - பகுதி, மெதுவாதல், அ - விகுதி, நிறைந்துவிடும் - விடு - அசை, இக்காலத்தார் துணை வினையென்பர்.
100. கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்; இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர் அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர் கொடுத்தார் எனப்படுஞ் சொல். (இ-ள்.) கடிப்பு இடு கண் முரசம் - வாத்தியம் அடிக்கும் கொம்பு இடப்பட்ட [அடிக்கப்பட்ட] இடத்தையுடைய பேரிகையோசையை, காதத்தோர் கேட்பர் - ஒரு காத தூரத்திலிருப்பவர் கேட்பார்கள்; இடித்து முழங்கியது - மேகம் இடித்துக் கர்ச்சித்ததை, ஓர் யோசனையோர் கேட்பர் - ஒரு யோசனை யளவிலுள்ளவர் கேட்பார்கள்; சான்றோர் கொடுத்தார் எனப்படும் சொல் - யோக்கியருக்குக் கொடுத்தார்கள் என்னுஞ் சொல், அடுக்கிய மூவுலகும் கேட்குமே - (ஒன்றின்மே லொன்றாய்) அடுக்கப்பட்டிருக்கிற மூன்று லோகங்களுக்கும் நிச்சயமாய்க் கேட்கும், எ-று. பேரியோசை காத தூரத்திலிருப்பவர்க்குச் செவிப்படும். மேகக் கர்ச்சனை அதினும் கிஞ்சித்து அதிகமாகிய யோசனை தூரத்திலிருப்பவர்க்குச் செவிப்படும். கொடுத்தார் என்கிற சொல்லோ எல்லாவுலகத்தார்க்கும் செவிப்படும் என்றால் யாவருக்கும் தெரிந்து கொண்டாடும்படி யிருக்கும் என்பது கருத்து. கண் என்பது வாத்தியங்களின் நடுவிடம். காதத்திற்கும் யோசனைக்கும் கிஞ்சித்துப் பேதமுண்டென்பது சிலருடைய கொள்கை. அடுக்கிய - செயப்படுபொருள் செய்தது போல் வந்தது. உலகம் பதினான்கா யிருக்க மூவுலகு என்றது என்னையெனின் மேல் கீழ் நடு என்கிற நோக்கத்தா லென்க. அல்லது, கிருதகம் அகிருதகம் கிருதகா கிருதகம் என மூவகைப் பட்ட வுலகமாம். கிருதகம் என்றால் செய்யப்பட்டது. பூமி பாதாள முதலானது; அகிருதகம் என்றால் செய்யப்படாதது, தபோலோக சத்தியலோகங்கள்; கிருதகா கிருதகம் என்றால் செய்யப்பட்டதும் செய்யப் படாததுமாயிருப்பது, சொர்க்கம் முதலியது. கேட்குமே - ஏகாரம் தேற்றம். |