உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முன்னுரை பயிர்த் தொழிலையும், பயிர்த் தொழில் செய்பவர்களின் வாழ்க்கைப் பிரச்னைகளையும் மையமாக்கி ஏற்கனவே, நான் “சேற்றில் மனிதர்கள்” என்ற நாவலை எழுதியுள்ளேன். அந்த நாவல் இலக்கிய உலகில் நல்ல வரவேற்பைப் பெற்றதுமன்றி, இரு பரிசுகளுக்கும் உரித்தாயிற்று. பாரதீய ஞானபீடம், இதை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இது மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. புரட்சிப் பெண்மணி மணலூர் மணியம்மா 1930களில் விவசாயத் தொழிலுக்காகக் கீழ்த் தஞ்சைப் பிரதேசத்தில் இயக்கத்தைத் தோற்றுவித்தவர். 1953 இல் காலமான அவருடைய வாழ்க்கை வரலாற்றை - கிராமத்து எளிய விவசாயக் கூலி மக்களின் வாய் மொழியாகவே கேட்டறிந்து ‘பாதையில் பதிந்த அடிகள்’ எழுதும் போதும் இதே பயிர்த் தொழிலாளரையே எழுத்து மையம் கொண்டது. இந்த நாவல் ‘கோடுகளும் கோலங்களும்’, பயிர்த் தொழிலையும் அதில் ஈடுபடும் பெண்களின் வாழ்வையும் மையமாக்கி எழுதப்பட்டதுதான். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் பார்வையைச் செலுத்தி எழுதப்பட்டது. எப்போதுமே, முரணான உண்மைகள் சிந்தையை நெருடும் போது அந்த நெருடலே அதை ஆராய வேண்டும் என்ற உந்துதலைத் தோற்றுவிக்கும். அதுவே படைப்புக்கும் ஆதாரமாகும். சுதந்தரம் பெற்ற பின்னர், மாறிய அரசியல் சூழலில், ஒரு கால் நூற்றாண்டுகாலம் கழிந்த பின் அந்த அரசியல் சுதந்திரம் உழுதுண்டு வாழும் கடைக் கோடி மனிதரின் வாழ்வில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன என்ற கோணத்தில் பார்த்து எழுதிய நாவல் ‘சேற்றில் மனிதர்கள்’. அவர்களுடைய சமூக, பொருளாதார மேம்பாடுகள், பல போராட்டங்களுக்குப் பின்னரும் கனவாகவே இருந்த நிலை கண்டேன். சுதந்தரம் பெற்ற பின் - நாற்பதாண்டுக் காலம் ஓடிய பிறகு விஞ்ஞான தொழில் நுட்பங்கள் எல்லாத் துறைகளிலும் வியக்கத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. பயிர்த் தொழிலில், பெருகி வரும் மக்கட் தொகைக்கு ஈடுகட்ட புதிய வீரிய வித்துக்கள், பயிரிடும் முறைகள், நீர் நிர்வாகம், புதிய ரசாயன உரங்கள் ஆகியவை, முன்னேற்றப் பாதையில் மக்களை வளமையை நோக்கிச் செல்ல வழி வகுத்திருக்கின்றன என்று சொல்லலாம். ஆனாலும், ஒரு சமுதாயத்தைச் சக்தி வாய்ந்ததாக இயக்கவல்ல பெண்களுக்கு இந்த வளமை பயன்பட்டிருக்கிறதா என்ற சிந்தனை குறிப்பாகத் தோன்றியிருக்கவில்லை எனலாம். கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்திப் பிடிக்கும் பயிர்த் தொழிலைப் புறக்கணித்து, நிலமற்ற விவசாயிகளும், நிலம் உள்ள பெருந்தனக்காரரும் நகரங்களுக்கும் பெயர்ந்து வந்து, சுற்றுச் சூழலை மாசுபடுத்தி ஒரு நச்சுக் கலாச்சாரத்தைப் பரவ விடுவதைத் தவிர்க்க முடியவில்லை. ‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது’ என்ற நிலையை எதிர் நோக்கத் தெம்பின்றி, பணமே பொருளாதாரச் செழிப்பு என்ற மாய மானை நோக்கிய மக்கள் நகர்ப்புறங்களில் நெருங்கினர். பெண்களின் சுயச்சார்பு, பொருளாதார சுதந்தரம் என்பதில் நகரங்களையும், நகர்ப்புறங்களையும் சார்ந்ததாகவே, அவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என்று கணிக்கப்பட்டது. உண்மை நிலை என்னவென்றால், கிராமப்புறங்களில் விவசாய பயிர் உற்பத்தியில், மிகப் பெரும்பான்மையினராகப் பெண்களே ஈடுபட்டிருக்கின்றன. இந்த உற்பத்தியில் மிக அதிகமான விழுக்காடு, பெண்களின் உழைப்பை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. நிலத்தில் உழுவது ஒன்று தவிர, எருச்சுமந்து கொட்டுதல், அண்டை வெட்டுதல், விதைத்தல், நாற்று நடுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல், தூற்றுதல், புழுக்குதல் என்று நெல்லை அரிசியாக்கிச் சோறாக்கிக் கலத்தில் இடுவது வரையிலும் அவர்களின் உழைப்பே பிரதானமாகிறது. இவ்வளவு பொறுப்பைச் சுமந்து கொண்டு உழைப்பை நல்கும் பெண்களுக்கு, நிலத்தின் மீது பட்டா உரிமையோ, முடிவெடுக்கும் உரிமையோ இருக்கிறதா என்பதும் கேள்விக் குறி. வீட்டோடு இருந்து, வீடு, கொட்டில் மாடு, பயிர் எல்லாவற்றையும் பேணுவதில் தன் வாழ்வையே ஈடாக்கும் பெண்ணுக்கு, விடுப்பு உண்டா? ஊதியம், ஊதிய உயர்வு, ஓய்வுக்கால ஆதரவு, போனஸ் என்ற சலுகைகள் பற்றியோ, பேறுகால, உடல் நோய் வரும்போதான மருத்துவ வசதிகளுக்குத் தேவையான உத்தரவாதம் பற்றியோ ஓர் அடிப்படை உணர்வேனும் உண்டோ? பெண் என்றால், பெண் தான். எல்லா வேலைகளையும் செய்வது அவள் இயல்பு. அவ்வளவுதான். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் என்று சொந்தமாக நிலம் வைத்துக் கொண்டு பயிரிடும் குடும்பங்களில், தங்கள் நிலங்களில் வேலை செய்வது தவிர, இது போன்ற வேறு சில விவசாயிகளின் நிலங்களில் கூலி வேலையும் செய்கிறார்கள் பெண்கள். உழவு செய்யும் ஆண், ஒரு நாளைக்கு ஆறு மணி உழவோட்டி, ரூபாய் எண்பதிலிருந்து நூறு வரையிலும் கூலி பெறுகிறான். ஆனால் பெண்ணோ, அவள் வேலைக்கு ஊதியமாக, பதினைந்தில் இருந்து இருபது வரையிலும் தான் பெறுகிறாள். சமவேலை - சமகூலி என்பது விவசாயத் தொழிலைப் பொறுத்து ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கிறது. அறுவடைக்காலத்தில் இருவரும் ஒரே வேலையைச் செய்தாலும், ஆணுக்குக் கூலி நெல்லுக்கு மேல் பணமும் கொடுக்கிறார்கள். ஆனால் பெண்ணோ, அதே அளவு நெல் மட்டுமே என்றும் கூலியாகப் பெறுகிறாள். பணம் கிடையாது. இது கொஞ்சமும் சரியில்லையே, ஏன் இப்படி? நீங்கள் ஏனம்மா ஊதிய உயர்வு கோரவில்லை. போராடவில்லை என்ற கேள்விக்கு வந்த பதில் சிந்தனைக்குரியதாகும். ஐந்து ஏக்கர் வரை வைத்துக் கொண்டு தங்கள் நிலங்களில் தாங்களே வேலை செய்யும் சிறு விவசாயக்காரர்கள் - பெண்கள் ஒருவருக்கொருவர் என்று உதவிக் கொள்கிறார்கள். நிலமற்ற விவசாயக் கூலிகள் - பெரும் பண்ணை என்ற அளவில் போராட்டங்கள் நிகழ்கின்றன; தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் சிறு விவசாயிகள் பெண்கள் அத்தகைய போராட்டத்தை விரும்பவில்லை. ஏனெனில், நடவு, களையெடுத்தல் வேலைகளுக்கு இருபது ரூபாய் என்று ஐந்து ரூபாய் கூலி உயர்வைக் கூட அவர்கள் ஏற்கவில்லை. கூலி வாங்குவதுடன் அதே கூலி கொடுக்க வேண்டும் என்றாகிவிடுமே? உழவோட்ட ஆட்கள் கிடைப்பதில்லை. சில இடங்களில் உபரியாகச் சாராயம் வாங்கவும் காசு கேட்பதாகச் சொல்லப்படுகிறது. பெண் ஏர்பிடித்து உழுவதில்லை. அது ஒரு தடையாகவே இருக்கிறது. எனவே ஆண், உழவுத் தொழிலில் எப்படி இருந்தாலும் கோலோச்சுபவனாகவே இருக்கிறான். பெண் இந்தத் தொழிலில் அதிகமாக வஞ்சிக்கப்படுகிறாள் எனலாம். இந்த நிலையை மாற்றி, பெண் தன் உழைப்பின் பலனையும் உரிமையுணர்வையும் பெற, வாய்ப்பாகத் துவக்கப்பட்டது தான் தமிழ்நாடு பண்ணை மகளிர் பயிற்சித் திட்டம் - அல்லது - ‘தான்வா’ என்ற அமைப்பு. ‘தமிழ்நாடு விமன் இன் அக்ரிகல்ச்சர்’ என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கமே ‘தான்வா’வாகும். இது டென்மார்க் அரசின் ‘டேனிடா’ உதவித் திட்டத்தின் ஆதாரத்தில் தோன்றியதாகும். தமிழ்நாடு முழுவதும், சுமார் இருநூறு விவசாயத் தொழில் பட்டதாரிப் பெண்களைத் தேர்ந்து, சிறப்புப் பயிற்சி அளித்து, அவர்களைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறு விவசாயிகளாகிய குடும்பப் பெண்களுக்கு மண் பரிசோதனை, விதைச் செய் நேர்த்தி, நுண்ணூட்ட உரங்கள், நடவு, நீர் பராமரிப்பு, உரமிடுதல் ஆகிய அம்சங்களின் சிறு சிறு நுணுக்கங்களைப் பயிற்றுவிக்கும் திட்டமாகும். இதற்கு முன்னர், உழவர் பயிற்சித் திட்டங்கள் பரவலாகச் செயலாக்கப்படாமல் இல்லை. ஆனால் இதுவோ குறிப்பாகக் கிராமப்புறத்து மகளிரைச் சக்தி மிகுந்தவர்களாக மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரப்படுத்தப்பட்ட திட்டம். இந்தப் பெண் பயிற்சியாளர், அந்தந்தக் கோட்டங்களில் உள்ள விவசாய அலுவலர்களின் ஒத்துழைப்புடன், மகளிரைப் பயிற்சிக்குத் தேர்ந்தனர். வாலிப, நடுத்தர வயதுப் பெண்கள் சொந்தக் குடும்ப நிலங்களில் வேலை செய்பவர்களே பயிற்சிக்கு உரியவராயினர். இருபத்தைந்து பேர் கொண்ட குழுவினருக்கு, ஐந்து நாட்கள் பயிற்சி; பயிற்சிக் காலத்தில் ஒரு சிறு ஊக்கத் தொகையும் அளிக்கப் பெற்றது. பிறகு இவர்களே ஒவ்வொருவரும் பத்துப் பத்துப் பெண்களைப் பயிற்றுவித்தார்கள். பயிற்சி பெற்ற உடன் இந்தப் பெண்கள், செயலில் இறங்க உடனே ஊக்கம் பெற்றதும், இவர்கள் அறிவு, விரிந்து புதிய அநுபவங்களாக, விளைச்சலில் பலன் பெற்றதும், அண்மைக்கால வரலாறு. பண்ணை மக்களின் வாழ்வில், புதிய மாற்றங்கள் இசைந்தன. புதிய மாற்றத்துக்கான ஆதாரம், தன்னம்பிக்கையும் பொருளாதாரச் சுயச்சார்புமாகும். காலம் காலமாகக் குருட்டுத் தடங்களில் ஒடுக்கப்பட்டு வந்த இந்திய விவசாயக் குடும்பப் பெண், விழிப்புணர்வு பெற்றிருக்கிறாள். சிந்திக்கும் திறன் இவளுக்கு வந்திருக்கிறது. இவர்களுடைய தன்னம்பிக்கையும் சுயச்சார்பும், உழைப்பின் பயனாகப் பெற்றவை என்றாலும், சிந்திக்கும் சக்தியே அவற்றைச் சாத்தியமாக்கி இருக்கிறது. பயிர்த் தொழிலின் முன் நிற்கும் பிரச்னைகளை, சமூக நோக்கில் எதிர்நோக்குமளவுக்கு, ஒன்றுமே தெரியாமல் உழைத்து உழைத்துத் தேய்ந்திருந்த இந்தப் பெண்கள் விழிப்புணர்வு பெற்றிருக்கின்றன. காலந்தோறும் பெண் என்ற கணிப்பு, பெண்களின் பின்னடைவுகளையே துல்லியமாகக் காட்டுவதான சோர்வையே தந்திருந்தது. ஏறக்குறைய ஒரு பத்தாண்டுக்கால முயற்சியில் தான்வா என்ற பண்ணை மகளிர் குழுவினர் தமிழ்நாடெங்கும் பல்கிப் பெருகி, ஒரு புதிய வரலாறு படைப்பதைக் காணும் போது நம்பிக்கை துளிர்க்கிறது. சமூகத்தின் முன்னேற்றத்துக்கும், வளமைக்கும் ஆதாரமான தொழிலில், பெண்கள் ஈடுபட்டு, விளைவு கண்டு ஆற்றல் பெறுவது சாதனையல்லவா! பெண்கள், பொதுத்துறைகளிலும், அரசுத் துறைகளிலும் முக்கிய இடங்களில் பொறுப்பேற்றிருப்பதும், அமைப்பு ரீதியிலான பெண்கள் இயக்கங்களின் இடைவிடாத செயல்பாடு சார்ந்த அனைத்து முடிவெடுக்கும் நிறுவனங்களுக்கும் பெண்களைக் குறிப்பாக்கியே வலியுறுத்தி இருக்கின்றன என்றால் மிகையில்லை. இந்தத் திட்டத்தினால் பயனடைந்து, புதிய சாதனை படைக்க ஊக்கம் பெற்று வரும் பல பெண்களைச் சந்திக்க, எனக்கு ஊக்கமும் உறுதுணையுமாக இருந்தவர், டேனிடா திட்டத்தின் ஆலோசகர் திருமதி மங்களம் பாலசுப்ரமணியன் ஆவார். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு வட்டங்களில் உள்ள கிராம விவசாய மகளிரையே என் ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டேன். எனக்குப் பலவகைகளிலும் பயிற்சியாளரான பெண் அலுவலர் பலர் உதவினார்கள். குறிப்பாக திருமதிகள், மங்களம், பத்மாவதி, வளர்மதி ஆகியோருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். பல கிராமங்களிலும் நான் சென்று சந்தித்த தான்வா பெண்கள் தங்கள் அநுபவங்களை ஆர்வத்துடன் எடுத்துரைத்தார்கள். வயல்களுக்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு அம்சத்தையும் காட்டியும், எத்தனை முறைகள் கேட்டாலும் சந்தேகம் தீர்த்து வைக்க விளக்கியும் எனக்கு உதவிய பெண்கள் பலர். அவர்களில் முசர வாக்கம் குப்பம்மாள், ‘வேண்டாம்மா’ லட்சுமி, அரண்வாயில் இந்திரா, பிரேமா, ஜகதீசுவரி, அவளூர் ஏகம்பம்மா, சுந்தரி, காக்களூர் குணாபாய் ஆகியோர் குறிப்பிடத் தகுந்த சில பெண்மணிகள். பயிற்சி வகுப்புகள், செயல் முறை விளக்கங்கள், பிறகு பெண்களில் அன்றாட ஈடுபாடுகள், அநுபவங்கள் எல்லாவற்றிலும் நான் பங்கு கொள்ளும் வகையில் எனக்கு உதவி புரிந்தார்கள் தான்வாக் குழுவின் இப் பெண்மணிகள். என்னைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு நாவலும் புதிய பரிசோதனை முயற்சியாகவே இருக்கிறது. அந்த வகையில் எனக்குப் பேருதவி புரிந்த திருமதி. மங்களம் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட அனைத்துப் பெண்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தொடரை ‘புதிய பார்வை’ இதழில் வெளியிட்ட இதழாசிரியர் ம.நடராசன், இணையாசிரியர் பாவை சந்திரன் அவர்களுக்கும் என் நன்றி. எனது எல்லா நூல்களையும் வெளியிட்டு என் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் தாகம் பதிப்பாளர் திரு.அகிலன் கண்ணன், மீனா அவர்களுக்கும் என் நன்றியை வெளியிட்டுக் கொண்டு இந்நூலை வாசகர்கள் முன் வைக்கிறேன். ராஜம் கிருஷ்ணன் |