5

     “அக்கா, வேலையெல்லாம் ஆயிட்டது... சோறு ஒரு குண்டானில் வடிச்சது அப்படியே இருக்கு. அடுப்படி எல்லாம் சுத்தமாக்கிட்டே. நா வரட்டா! வூட்ல அரிசி உளுந்து கெடக்கு. ஆட்ட, பிள்ளங்க வூட்டத் திறந்து போட்டுட்டுத் தெருவில ஆடிட்டிருக்கும்!” என்று சுந்தரி இவளை நினைவுலகுக்கு இழுக்கிறாள்.

     “சுந்தரி...! போம்மா. காலமேந்து நீயே வேல செய்யிற! நீ சாப்புட்டியான்னு கூடக் கேக்கல... வித்தியாசமா நினைச்சிக்காத சுந்தரி...!” என்று வாஞ்சையுடன் அவள் கையைப் பற்றுகிறாள். நெஞ்சில் ஒரு குற்ற உணர்வு.

     ஏறக்குறைய இவளும் சின்னம்மாளைப் போல் புருசனைப் பறி கொடுத்துள்ளவள் தானே!

     சுந்தரி நகை நட்டைக் கழற்றவில்லை.

     பூப்போட்ட நைலக்ஸ் சீலையை, உள் பாவாடை கட்டிப் பாங்காக உடுத்தி இருக்கிறாள். முடியை இழையப் பின்னித் தூக்கிக் கட்டிக் கொண்டிருக்கிறாள். வளைவாகப் பூ வைத்தால் நன்றாகத்தான் இருக்கும் . ஆனால்? பூ வைக்க முடியாது.

     பொட்டும் குங்குமம் வைப்பதில்லை. இப்போதுதான் ஒட்டுப் பொட்டு வந்திருக்கிறதே? ஒரு கறுப்புப் பொட்டு, கடுகளவு ஒட்டியிருக்கிறாள்.

     சுந்தரியே நல்ல நிறம் இல்லை. பளிச்சென்று அது தெரியவே இல்லை.

     புருசன் வரும் போது பொட்டைக் கொண்டு வந்தானா? அதை ஏன் அழித்துத் தொலைக்கிறார்கள்? அவன் காலம் முடிந்து போனான். அது அவள் குற்றமா?

     சுந்தரி ரங்கனுடன் சாதாரணமாகப் பேசுவாள். பழகுவாள். சோறு வைப்பாள். அவனும் தம்பி மனைவியிடம் ஆதரவாகவே இருக்கிறான். கடையில் இருந்து வரும் போது, எது வாங்கி வந்தாலும் முதலில் அந்த வீட்டுக்குக் கொடுத்து விட்டே வருவான். சரோ, சரவணனுக்கும் வித்தியாசம் தெரியாது.

     செவந்திக்கு இதெல்லாம் சந்தோசமே. ஆனால் சின்னம்மா விசயத்தில் இப்படி நடந்ததா?

     இவள் அம்மா தங்கையை பரம விரோதியாக அல்லவோ பார்த்தாள். இங்கும் அரிசி உளுந்து ஊறுகிறது. செவந்தி கிணற்றில் நீரிறைத்து அரிசியைக் கழுவி உரலில் போடுகிறாள்.

     சரசரவென்று மழை விழுகிறது.

     கொட கொடவென்று செவந்தி உளுந்து ஆட்டுகிறாள்.

     “அம்மா! அம்மா! முத்தத்துக் கொடித் துணிய எடுத்து வையி! எரு மூட்டை நனையும். நான் பார்க்கலன்னா ஆரும் பார்க்கமாட்டாங்க...! அம்மா...! ஏ சரோ?”

     இந்தத் தாழ்வரையே அங்கங்கு ஒழுகுகிறது. ஓரத்தில் விறகு அடுக்கி இருக்கிறாள். அதுவே நனையும்.

     “சரோ! இந்த வெறகக் கொண்டு சமையல் ரூமுல வையி...”

     சரோ வரவில்லை. அவள் வீட்டிலேயே இல்லை. சுந்தரி வீட்டுக்குப் படிக்கப் போயிருப்பாள். சரவணன் படிக்க மாட்டான். தெருவிலோ, எங்கோ நாலு பிள்ளைகளுடன் எதானும் விளையாடிக் கொண்டிருப்பான். அம்மாதான் முணமுணத்துக் கொண்டு வருகிறாள்.

     பத்தி நடவுக்கு எடுத்துப் போன டயர் கிடக்கிறது. அதை எடுத்து வீசுகிறாள். எரு முட்டை எல்லாம் நனைந்து விட்டது.

     மாட்டுக் கொட்டிலும் கூடச் செப்பனிடவேண்டும். பசு சினையாக இருக்கிறது. மழை வந்தது பயிருக்கு நல்லது...

     மாவை வழித்துக் கரைத்துக் கொண்டு வந்து உள்ளே வைக்கிறாள். பட்டென்று மின் விளக்கு அணைந்து போகிறது.

     “என்ன எளவு, ரெண்டு தூத்தல் போட்டால் வெளக்கு அணையிது! சீமண்ண விளக்கைக் கொளுத்தி வையி... செவந்தி...”

     ரங்கன் குறட்டில் உட்கார்ந்து ஏதோ வரவு செலவுக் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

     செவந்தி இருட்டில் முதலில் சாமி விளக்கை ஏற்றி வைக்கிறாள். பிறகு முட்டைச் சிம்னியைத் தேடுகிறாள். அதில் எண்ணெய் கொஞ்சமாக இருக்கிறது. எண்ணெயே போன மாசம் போடவில்லை. இருக்கிற எண்ணெயை, டிஃபன் போடும் வேணி தனக்கு வேண்டும் என்று வாங்கிக் கொண்டு போனாள். கொடுக்க மாட்டேன் என்று சொல்ல முடியவில்லை. எல்லோருக்கும் எல்லாரும் வேண்டித்தானே இருக்கிறது?

     “செவந்தி..! ஒரு நூறு ரூபா இருந்தா குடேன்!”

     செவந்தி மஞ்சள் ஒளியில் அவன் முகத்தை உற்றுப் பார்க்கிறாள்.

     “என்ன வெள்ளாடுறீங்களா? இந்தச்சாமிக்கும் காருக்கும் நானா செலவழிக்கச் சொன்னேன்?”

     “அட ஒடனே கத்தாதே. நா நாளக்கி சாயங்காலம் குடுத்திடறேன்.”

     “எங்கிட்ட நூறு காசு கூட இல்ல. களயெடுக்கணும். அடுத்த வாட்டி உரம் போடணும். ஊரியாவும் பொட்டாஷும் வாங்கிட்டு வரணும். வண்டிக் கூலி கேப்பா. நானே முழிச்சிகிட்டிருக்கிறேன். வீட்ல மல்லி முளவா சாமானில்ல. மாடு வேற செனயா நிக்கிது. ஒண்ணும் கட்டி வரலப்பா!”

     “உங்கிட்டக் கேட்டா இப்படித்தா. ஈசக் கூட்டம் அப்புநாப்ல பொல பொலத்து மனுசன உண்டு இல்லைன்னு பண்ணிடுவ.”

     “செவுந்தி, சுந்தரி, அதுகிட்டக் கேட்டு வாங்கின. மனசுக்கு எப்பிடியோ இருக்கு...”

     “மாமியாள திருப்தி பண்ண, அவகிட்டக் கேட்டு வாங்கினீங்களா? உங்களுக்கு வெக்கமால்ல?”

     “இன்னிக்கிச் செலவுக்கு வாங்கல. செவலிங்கத்த ஒரு சாமான் வாங்கி வர டவுனுக்கு அனுப்பிச்சே, நூறு ரூபா குறைஞ்சிச்சி. ஒரு அவுசரம்தானே. இருக்கு ஆத்தான்னு குடுத்திச்சி. நா இன்னிக்கி எனக்கு வரவேண்டிய பணம் இருக்கு, குடுத்துடலாம்னு இருந்தே. அதுக்கு இப்படிச் செலவு வந்திட்டது. அது சீட்டுக் கட்டுன பணத்திலேந்து குடுத்திருக்கு...”

     “சரி, நா குடுத்துக்கறேன். நீங்க கவலைப்பட வாணாம்...”

     “இல்ல, நா வாங்கினத நானே குடுக்கிறதுதா முற...”

     “இப்ப இந்த நேரத்துல நா பணத்துக்கு எங்க போவ? காலயில, எத்தையானும் ஆண்டாளம்மா வூட்டில வச்சிட்டு வாங்கித் தாறன்...”

     “நீ தரவே வேணாம். நான் புரட்டிக் குடுக்கிற...”

     மழை விட்டிருக்கிறது.

     சரோ வருவது தெரிகிறது.

     “ஏய், எங்க போயிட்டு வார? இருட்டினப்புறம், வயிசு வந்த பொண்ணு...”

     “எங்கும் போகல. அந்த வூட்டுல செந்தில் கூடப் பேசிட்டிருந்தே...”

     “செந்தில் கூட இன்னா பேச்சு? காதோரம் கிருதாவும் மீசையும் சிகரெட்டும் விடலயாத்திரியிறா. பத்துப் படிச்சி முடிக்கல. அவங்கூட இன்னாடி பேச்சி? எதோ பொம்புளப் புள்ள படிக்கப் போற. பத்து படிக்கிற. படிச்சிட்டுப் போகட்டும்னு வுட்டா, சொன்ன பேச்சே கேக்குறதில்ல! இது சம்சாரிக் குடும்பம். அதுக்குத் தகுந்த மாதிரி இருந்துக்க!”

     “அட போம்மா! நீ ரொம்ப போராயிட்டே” என்றவள் புத்தகத்தைக் கொண்டு உள்ளே வைக்கிறாள். அடுத்த நிமிஷம், அவள் ரேடியோவில் இருந்து பாட்டு வருகிறது. பார்ட்டின்னா பார்ட்டிதா... ப்யூட்டின்னா ப்யூட்டிதா...

     சோடா குப்பி மூடியைத் திறந்தாற் போல் செவந்தி பொங்கிச் சீறுகிறாள். “அந்த எளவ மூடுடி! பாட்டா அது? கரண்ட் இல்லியே? இப்ப அதுக்கு மட்டும் கரண்ட் எப்படி வந்திச்சி?”

     “ம் வந்திச்சி.. பன்னண்டு ரூவிக்கி பாட்டரி வாங்கிப் போட்டிருக்கு!” என்று கணவன் தெரிவிக்கிறான்.

     “நீங்க குடுக்கிற எடந்தா இவள் துள்ளுறாள். இதுக்கெல்லாம் காசு குடுக்கறிங்க...”

     “அட இதெல்லாம் கேக்குற வயசு. இதுக்கெல்லாம் பிள்ளைங்களக் கசக்கப்பண்ணக் கூடாது. நீயும் கேளேன். சமையல் ரூமில கொண்டு வச்சிட்டு!”

     மனசைப் போட்டுப் பிராண்டிக் கொள்ளவேண்டும் போல் ஒரு நமைச்சல். செவந்தி மாட்டுக் கொட்டிலின் பக்கம் போகிறாள். இவள் ஓசை கேட்டதுமே பசு குரல் கொடுக்கிறது. முதல் ஈற்றுக் கன்று கிடாரி. பெரிதாக வளர்ந்தது. உழவு மாடுகள்...

     கொல்லைப்படலைத் தள்ளி வைக்கிறாள். மழை நின்று வானில் இரண்டொரு நட்சத்திரங்கள் கூடத் தெரிகின்றன.

     எங்கிருந்தோ காற்றில் ஓர் வாடை இழைந்து வருகிறது. புரியவில்லை. பின் பக்கம் வயல்களுக்கும் கொல்லைக்கும் இடையே குப்பை மேடுகள். முள் காத்தான் செடிகள் என்று ஒழுங்கற்ற இடம். இவர்கள் வீட்டை அடுத்து நாகு வீட்டுக்காரர் குடியிருந்த வீடு இடிந்து கிடக்கிறது. அவர்கள் ஊரைவிட்டுப் பெயர்ந்து பல வருடங்கள் ஆகின்றன. அந்த வீட்டைச் செப்பனிட்டுக் கொண்டு வாத்தியார் பரமசிவம் வந்தார். நாலே மாசத்தில் மஞ்சட் காமாலை வந்து செத்துப் போனார். அது இடிந்து குட்டிச் சுவராகக் கிடக்கிறது. பிறகு சிறிது தூரம் முட்செடிகள்... பொதுச் சாவடி. மேலத் தெரு அங்கிருந்து தொடங்கும்.

     குட்டிச் சுவருக்குப் பின் சாராய வாடை வந்ததாக நீலவேனி சொன்னாள். ஊர்ப் பஞ்சாயத்தில் தண்ணீர் பங்கு, கட்சி அரசியல் வம்புகள் தான் நடக்கும். சாராயக் கடை வெட்ட வெளிச்சமாக இல்லை. ஆனால்...

     திடீரென்று அப்பன் நினைவு வருகிறது.

     இருட்டில் அவர்தான் படலையைத் தள்ளிக் கொண்டு வருகிறார். உடம்பு தள்ளாடுகிறது.

     “அப்பா...? நீங்க செய்யிறது நல்லாருக்கா, உங்களுக்கு?”

     “...”

     வாயில் வசைகள் பொல பொலக்கின்றன.

     அம்மாவுக்குத்தான் அந்த வசைகள். “என் ராசாத்தியத் துரத்தி அடிச்சபாவி... வயிறெறியப் பண்ண பாவி. உன்னியக் கழுத்தப் புடிச்சி வெளிய தள்றனா இல்லியா பாரு! தள்ளிட்டு என் ராசாத்தியக் கொண்டாந்து வைப்ப. அவலட்சுமி. லச்சுமி டீ. நீ மூதேவி. மூதேவின்னா, மூதேவி! இன்னாமா வேல செய்வா! புழுதிச்சால் ஒட்டிட்டுப் போவ, ஒண்ணொண்ணாக் கடல... மல்லாக் கொட்ட விதச்சிட்டே வருவா. மூட்டயா வந்திச்சி. அவ போனப்பறம் ஒண்ணில்ல. ஒன்னக் கொன்னி போட்டு அவளக் கொண்டாருவ...”

     “சரோ உங்கப்பாவக் கூப்பிடு! என்னாங்க! ஏ... வேல்ச்சாமி, பழனியப்ப யாரானும் இருந்தாகூப்பிடு...”

     “அவங்க எங்கேந்து வருவாங்க! அவங்களுந்தா ஊத்திட்டிருப்பாங்க...” என்று ரங்கன்தான் வருகிறான்.

     “என்ன மாமா இது. வகதொக இல்லாம இப்படிப் பேரைக் கெடுத்துக்கிறீங்க” என்று அவரைப் பற்றி நிதானத்துக்குக் கொண்டு வருகிறான்.

     அவர் திமிறுகிறார். இந்த உடலில் இவ்வளவு எதிர்ப்புச் சக்தியா?

     “இவரு சாயந்திர நேரத்தில எந்திரிச்சிப் போக ஏவுடுறீங்க! எப்பப் போனாரு? இங்க பக்கத்துக் குட்டிச் சுவராண்டயே கொண்டாந்து கவுக்கிறானுவ. ஒரு நா பாத்து செமயா ஒதய்க்கனும்னு பாக்குற. என் கண்ணில தட்டுப்பட மாட்டேங்கிறாங்க. இந்தப் போலீசுக்காரக் கழுதங்களே வேபாரம் செய்யிறவனுக்கு உள் கையி. இந்த வியாபாரத்த நிறுத்திட்டேன்னு கை வண்டில ஏதோ சாமான் வச்சி வித்திட்டிருந்தவன, உள்ள தள்ளி, அடிச்சானுவளாம். செவலிங்கம் சொன்னான்... இந்த அக்கிரமத்தக் கேக்கிறவங்களே இல்ல...”

     ரங்கசாமிக்குக் குடி வாடையே ஆகாது. பக்கத்திலேயே வரமாட்டான். சுந்தரி புருசன் குடித்தான். அதற்கு இவன் சொல்லும் காரணம் இதுதான். “எங்கப்பா நா சனனம் ஆகிறப்ப குடிக்காதவரா யோக்கியமா இருந்தாரு செவுந்தி. என் தம்பி பொறக்கிறப்ப அவரு முழு குடியவா ஆயிட்டாரு...”

     “சரோ! உங்க பாட்டிய இன்னிக்கி வூட்டுக்கு வரவேண்டாம்னு சொல்லு! அம்சு வூட்டுத் திண்ணையில கெடக்கட்டும்!” என்று செவந்தி கத்துகிறாள்.