9

     மனசே சரியில்லை.

     அவன் கோபித்துக் கொண்டு சென்ற போது இவளுக்கும் வீறாப்பாக இருந்தது. ரேடியோவைப் போட்டு உடைக்க வேண்டுமென்றால்... அதுவும் அவன் ஆசையாக மகளுக்கு வாங்கிக் கொடுத்தது. அதை இவள் உபயோகிக்கக் கூடாதென்றா?

     இல்லை. பெண் பிள்ளை. சம்சாரம், தலை தூக்கக் கூடாது. அவளை மதித்து யாரும் வரக் கூடாது. இவனுக்குப் பிடிக்காதது, அவளுக்கும் பிடிக்கக்கூடாது. சரோவுக்குத்தான் இழப்பு.

     “என்னம்மாது? ஒரு ரேடியோ இருந்திச்சி, அதையும் உடைக்கப் பண்ணிட்ட? அப்பா சமாசாரம் தெரியும். அவரை ஏன் கோவிக்கும்படி வைக்கிற?”

     “என்னாடி அவரைக் கோபிக்கும்படி வச்சிட்டேன்? நான் என்ன பண்ணிட்டேன் சொல்லு? காபி கேட்டாங்க. இவன் சீட்டக் குடுத்தான். யாருன்னு பார்க்கப் போனேன். பொம்பிள்ளைனா அவ்வளவு கேவலமா? கோபிச்சிட்டுப் போனாப் போகட்டும்! நானும் மனுசிதா...” என்றாள். கண்ணிர் முத்துக்கள் சிதறின.

     “நீ சரவணங்கிட்ட அந்தாள இருக்கச் சொல்லிட்டு முதல்ல அவரக் கவனிச்சிருக்கணும். அவருதா பஸ்ஸுல லோலுப்பட்டுட்டு வந்திருப்பாரு. கோவம், தலவலி...”

     “அப்படி யாரு, நானா போகச் சொன்னே. நேத்து நாசாமி கும்புடனும் வூட்ல இருங்கன்னு சொன்ன. தீபத்துக்குப் போற, நீ தனியா கும்புட்டுக்கன்னாரு...”

     “நீங்க சண்டை போட்டுக் கோவிச்சிக்குங்க! எனக்கு ரேடியோ இல்ல. இப்படி உடஞ்சிருக்கு. இத்தயாரு ரிப்பேர் பாப்பாங்க! சீ... எனக்கு கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் இல்ல...” என்று முகத்தைத் தூக்கிக் கொள்கிறாள்.

     “அது என் ரூமில இருந்திச்சி. அத்த ஏன் சமையல் ரூமுக்குக் கொண்டாற? உழவருக்கு ஒரு வார்த்தையோ என்ன புரோகிராமோ, அங்க வந்து நின்னு கேக்க வேண்டியது தான?”

     “சரி. மன்னிப்பு. மாப்பு! அறுவடை ஆவட்டும். முதல்ல உனக்கு ரேடியோ வாங்கித் தாறேன். கோபிச்சுக்காதம்மா”

     “அதுவரைக்கும்? எனக்குப்பரிட்சைம்மா, படிக்கணும்”

     “சுந்தரி வூட்டுல ரேடியோ இருக்கு. சின்னம்மாதான, குடுப்பா, வச்சிக்க”

     “ஆகா! அவங்க வாலுங்க வுடுமா? ரேவதிக்குட்டி அவங்க வூட்டுப் பொருளத் தொட்டாலே பிடாரி போல அழும். அந்தப் பய வரதன் வாசப்படில குறுக்க நின்னு மறிப்பா!”

     அவன் பகல், இரவும் வரவில்லை. சரவணனை அனுப்பிக் கடையில் இருக்கிறானா, சாப்பாட்டுக்கு வரவில்லையா என்று அழைத்து வரச்சொன்னாள்.

     “அப்பா கடையில் இல்லமா; முதலாளி டவுனுக்குப் போயிருக்காருன்னு சிவலிங்கம் சொன்னாரு...”

     மாட்டுக்குப் புல்லறுத்து வருவோம் என்று கிளம்புகிறாள்.

     மனசில் அமைதியே இல்லை.

     வெற்றிலைக் கொடிக்காலில் இலை கிள்ளும் பழனியாண்டி, “திடீரென்று ஆயிசு முடிஞ்சிட்டவங்க போறாங்க...” என்று யாரிடமோ பேசுகிறான்.

     யார்?

     சின்னசாமி... அகத்திக்கீரைப் பறித்துக் கொண்டிருக்கிறான்.

     “யாருக்கு என்ன?”

     “பஸ் கவுந்து போச்சாம்!”

     ஐயோ? என்று நெஞ்சு குலுங்குகிறது.

     “எங்கே?”

     “திருவள்ளுர் பஸ்ஸாம். பிரேக் புடிக்காம மரத்தில மோதி, ரெண்டு பேர் செத்திட்டாங்களாம். நாகசாமி வாத்தியார் வந்து சொன்னாரு. அவரு அந்த பஸ்ல போக இருந்தாராம். மக திருவள்ளுருல குளிகுளிச்சிருக்காம். பஸ் தவறிப் போச்சாம்.”

     புல்லறுப்பை விட்டாள். குலுங்கக் குலுங்க வீடு வருகிறாள்.

     இவளே கடைவீதிக்கு ஒடுகிறாள்.

     எந்த பஸ்... எங்கே போனானோ? திருவள்ளூரில் அவனுக்கு ஒன்றுவிட்ட அக்கா இருக்கிறாள். அவள் மகள் படித்து விட்டு டீச்சராக வேலை செய்தாள். அவளைக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததுண்டு. ஆனால் அவர்கள் இவருக்குப் பெண் கொடுக்க இஷடப்படவில்லை.

     “ந்தா, எங்க போற?”

     எதிரே சைக்கிள் வருவதும், அவன் இருப்பதும் கூடக் கண்களில் தைக்காமல் அப்படி ஒரு பதட்டம்.

     “எதுக்கு இப்படி ஓடுற? வூட்டுக்கு வந்து சேதி சொன்னாங்களா?”

     “வயலுக்குப் போயிருந்தேன். பழனியாண்டியும் சின்னசாமியும் பேசிட்டாங்க. கப்புன்னுது. ஓடி வர்றேன். ஏங்க, எதோ வீட்ல ஏறத்தாழப் பேசுறதுதா, அதுக்காக நேத்துக் காலம போனவங்க. நமக்கும் ஒரு பொம்புளபுள்ள இருக்கு. நாளைக்கி அதுக்கும் கலியாணம் காட்சி செய்யணும். ஆனா, ஆம்புள, பொறுப்பில்லாம..” சட்டென்று அவள் நாவைக் கடித்துக் கொள்கிறாள்.

     “ந்தா? என்ன பேசுற நீ.. ? பின்னால் வந்து உக்காரு. வூட்டப் பாக்கப் போகலாம். பெரியம்மா பய்யன் கண்ணன்ல? அவம் பூட்டான். இப்பத்தாசேதி வந்திச்சி. அந்தப் பொண்ணு உசா. சுந்தரிக்குத் தங்கச்சி முறையாகணும். நாம கூடத்தா போகணும்.”

     செவந்தி வாயடைத்துப் போகிறாள்.

     இருவரும் வீட்டில் வந்து இறங்குகிறார்கள்.

     செய்தி தேன் கூட்டில் தீ வைத்தாற் போல் பரவுகிறது.

     “எப்படிச் செத்துப் போனா? கலியாணம் பண்ணி அஞ்சு வருசம் ஆகல. வரவேற்பு குடுத்தானே. நடிகரெல்லாம் வந்தாங்க, கட்சித் தலவரெல்லா வந்தாங்க. அவ்வளவு உசரமும் தாட்டியுமா இருப்பா... சாவுற வயசா?”

     “அவ்வளவு ஏத்தமா? வாரத உலவம் பொறுக்காத? எவ கொள்ளிக் கண்ணு வச்சாளோ? அந்தப் பொண்ணுக்கு ஒரு நெக்லசு போட்டிருக்கானாம். அதுவே அம்பதாயிரமா, அவெ மட்டும் என்ன, அஞ்சுவெரலும் மோதரம், சங்கிலி, அதுல புலி நகம் வயிரம் பதிச்சடாலர்...”

     அம்சுவின் அத்தை குரலை இறக்கி அடுத்த வரிசையை விரிக்கிறாள்.

     “அரைஞாண் ஒண்ணு மட்டும் முப்பது பவுனாம்!”

     செவந்திக்கு எரிச்சல் பீரிட்டுக் கொண்டு வருகிறது.

     “நீங்க பாத்தீங்களா?”

     “இவ எதையும் நம்ப மாட்டா! பாத்தவங்க சொன்னாங்க. சினிமாக்கார ரசிகர் மன்றச் செயலாளர். இது பெரிய பவுருள்ள பதிவியில்லியா? அதா... யார் கொள்ளிக் கண்ணோ, அடிச்சிப் போட்டது.”

     சுந்தரி குழந்தைகளைச் செவந்தியிடம் விட்டுவிட்டுச் சாவுக்குப் போவதாகத் தீர்மானமாகிறது. அம்மா கிளம்புகிறாள். சும்மாப் போக முடியுமா?

     மேலவீதி ஆண்டாளம்மா வீட்டில், சரோவுக்குப் பண்ணி வைத்த தோடு குடை சிமிக்கியை வைத்து இருநூற்றைம்பது வாங்கி வருகிறாள்.

     ஆண்டாளம்மாவுக்கு ஒரே பையன். பட்டணத்தில் முருகன் போல்தான் படித்தான். படிக்கும் போதே கலியாணமும் கட்டிக் கொண்டான். இரண்டு பேருமாக எங்கோ ஆப்பிரிக்க நாட்டில் டீச்சர் வேலை பண்ணுகிறார்கள். பத்துவயசுப் பேரனை வைத்துக் கொண்டு வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் - பொழுது போக்கில் ஈடுபட்டிருக்கிறாள். புருசன் ஒரு வேலையும் செய்ய மாட்டான். இரண்டு ஏக்ரா போல் காணி கரை உண்டு. அதில் பயிர் பண்ணிச் சம்பாதிப்பதை விட, இது சுவாரசியமாக இருக்கிறது. எத்தனை வங்கிகள் வந்தாலும் ஒரு முட்டுக்கு சேட் கடைக்குப் போவதைப் போல ஆண்டாளம்மா இவர்கள் தேவைகளுக்கு உதவுவாள். முழுகிப் போகும் பொட்டு பொடுக தங்க நகைகளை, வேண்டுமென்று சொல்லி வைத்திருந்தால், கிரயம் போட்டுத் தருவாள். கூலி, போன்ற தள்ளுபடியும் கிடைக்கும். மகன் மூலமாக, தங்கம் கொண்டு வந்து நகை விற்கிறாள் என்ற பேச்சும் கூட அடிபட்டதுண்டு.

     அம்மாவுக்கு அழுது மூக்கைச் சிந்தப் பிடிக்கும்; போகிறாள்.

     “யம்மா நா, ரீட்டா வீட்டில படிக்கப் போற. சோறு போடு...” என்று சரோ தட்டைப் போட்டுக் கொள்கிறாள், மாலை ஆறு மணிக்கே.

     பசுவுக்குச் செவந்தி பருத்திக் கொட்டை ஆட்டிக் கொண்டிருக்கிறாள்.

     “வெளக்கு வச்சிருக்கு. இப்பதா இங்கேந்து படிச்சாப் போதும்; விளக்கு வச்சு யார் வீட்டுக்கும் படிக்கப் போக வேணாம்.”

     “போம்மா! இங்க ஒரு ரேடியோ கூட இல்ல. நான் ரீட்டா கூடச் சேந்து படிப்பேன்! எங்க சயின்சு டீச்சரு தங்கச்சி. என் கிளாஸ்ல தான் படிக்கிறாள்.”

     “அதெல்லாம் எனக்குத் தெரியாது. உன் அப்பா ஊரில் இல்ல. மேசரான பொண், யாரு வீட்டிலியோ, கிறித்தவங்க வீட்டில பொழுது போயி அனுப்ப மாட்டேன்!”

     சரோ, கன்றுக்குட்டி திமிறுவது போல் குதிக்கிறாள்.

     “யாரோ இல்ல... எங்க டீச்சர் வீடு! யம்மா, நான் படிக்கணும். டென்த்ல நிறைய மார்க் எடுக்கணும். பிளஸ் டூ படிச்சி என்ஜினியரிங் படிக்கணும்...”

     “வெளக்கு மாத்துக்கட்ட. பொம்புளப் புள்ளக்கி இதுக்கு மேல ஒரு காசு செலவு பண்ணமாட்ட, தெரிஞ்சிக்க கழனிக் காரன் வீட்டில பெறந்தவ. சேத்துல எறங்கி நாத்து நடக் கத்துக்க. அதான் சோறு போடும்! பருத்திக் கொட்டயும் புண்ணாக்கும் கலக்கி மாட்டுக்கு வச்சிப் பராமரிக்கக் கத்துக்க! அதான் நமக்கு சோறு போடும். படிச்ச பய்யனே கிழிக்கல. நீ இன்னொருத்தன் வீட்டில போய் குப்ப கொட்டணும். ஒரு நா, அடுப்பாண்ட வாரதில்ல, ஒரு காபி வச்சிக் குடுக்கத் துப்பில்ல. என்னமோ ராசா வூட்டுப் புள்ள போல உக்காந்து, சோறெடுத்து வையின்னு அதிகாரம் பண்ணுற?”

     “யம்மா என்ன நீ? நான் இப்ப படிக்கக் கூடாதுன்னா, அப்ப ஏன் படிக்க வச்சே? நீ சோறெடுத்துப் போட வேணாம். நானே போட்டுக்கறேன்...” அவள் அடுப்படிக்குச் சென்று கொஞ்சம் சோறும் குழம்பும் வைத்துக் கொள்கிறாள். பிசைந்து நின்றபடியே சாப்பிடுகிறாள். தட்டைக் கழுவி வைத்துவிட்டு, உள்ளே சென்று புத்தகப் பையை எடுத்துக் கொள்கிறாள். சைக்கிள் இல்லை... நடந்தே விடுவிடென்று போகிறாள்.

     “ஏய் சரோ? அடி. சரோ?”

     பருத்திக் கொட்டைக் கையை நீரில் கழுவியவாறு கூப்பிடுகிறாள். அவள் திரும்பியே பார்க்கவில்லை.

     யார் மீதென்று சொல்ல முடியாமல் கோபம் வருகிறது.

     கருகருவென்ற மேனியும் முண்டாசுமாகக் கன்னியப்பன் வருகிறான்.

     “கன்னிப்பா, சரோவ பாத்தியா?”

     “ஆமாம்... போகுது. விடுசாப் போகுது. புத்தகப் பையோட...”

     “ஓடிப்போய், அம்மா உன்னக் கூப்பிடுதுன்னு கூட்டிவா, கையோட..”

     அவன் இவள் ஆணையை சிரமேற் கொண்டவனாக ஓடுகிறான். இவள் விடுவிடுடென்று உரலைக் கழுவுகிறாள். மாட்டுக்குக் கலக்கி வைக்கிறாள்.

     அவளை அழைத்து வந்து விடுவானா?

     இவள் கூப்பிட்ட போதே வராதவள், இப்போது வருவாளா?

     ரேடியோ இல்லை, வீட்டில் படிக்க முடியவில்லை என்று சாக்குச் சொல்கிறாள். இது நம்பும்படி இல்லை.

     ஆறாவது வருமுன்பே படிப்பை நிறுத்தி இருக்க வேண்டும்.

     இந்தத் தெருவில், எந்தப் பெண்ணும் பத்துக்கு வரவில்லை. ஆறு, ஏழு, எட்டு... வயசுக்கு வந்ததும் நிறுத்தி விடுவார்கள். மகாலட்சுமி, பூரணி, யாரும் படிக்கவில்லை. நடவு, களை எடுத்தல், அறுப்பு என்று போய்க் காசு சம்பாதிக்கிறார்கள். வருபவன் பத்து இருபது சவரன், வாட்ச், கட்டில், பீரோ, ரேடியோ, டி.வி. என்று கேட்கிறானே? சமர்த்தாக சீட்டுக் கட்டிப் பண்ட பாத்திரம் வாங்குகிறார்கள்.

     இவளை இப்படி வளர்த்ததே தப்பு. கிறித்தவ ஸ்கூல், டீச்சர்கள்... என்ன சொக்குப் பொடி போடுவாங்களோ? அப்பாவும் இல்லை, பாட்டியும் இல்லை. இவளை ஓரம் கட்டிவிட்டுப் போகிறாள். அந்த டீச்சர் வீடு எந்தத் தெருவோ? கிறிஸ்தவ டீச்சர் வீடென்றால் காலனிக் குப்பத்தில் மாதா கோயில். அங்கே வீடுகள் இருக்கின்றன. சைக்கிளில் போகவில்லை. அங்கிருந்து ராத்திரி எட்டு மணிக்கோ ஒன்பது மணிக்கோ தனியாக வருவாளா?

     இளங்கன்று பயமறியாது. இளம் பெண்... ஊர் கெட்டுக் கிடக்கையில் என்னதான் நேராது?

     கன்னியப்பன் வருகிறானா என்று வாசலில் போய் நின்று பார்க்கிறாள். வருகிறான். அவன் மட்டுமே...

     “ஏம்ப்பா? அவளக் கூட்டியான்னே, விட்டுப் போட்டு வந்திருக்க?”

     “அது சொல்லிச்சி, ரொம்பப் படிக்கணுமாம். அம்மாக்கு நீ புரிய வை கன்னிப்பா. கணக்கு நாத்து நடுறாப்பல இல்ல. எல்லாரும், மாசம் நூறு நூத்தம்பது குடுத்து டூசன் வச்சிக்கிறாங்க. நான் அதெல்லாம் இல்லாம, கேட்டுப் படிக்கிறேன். டீச்சர்தா வரச் சொன்னாங்க. நேரமாயிடிச்சின்னா. அவங்க தங்கச்சியோட தங்கிட்டுக் காலம வருவேன். விசயம் புரியாம அம்மா ஓன்னு கத்துது... சொல்லுன்னு சொல்லிச்சி. அதும் நியாயந்தான்.”

     “ஏ மடயா, என்ன நியாயத்தக் கண்ட? நீ கூப்புட்டு வருவேன்னு தானே உன்ன அனுப்பிச்சே? அன்னாட சம்சாரி வாழ்க்கைக்கு என்ன பெரிய படிப்பு வேண்டி இருக்கு? இவ படிச்சிட்டு உட்கார்ந்திருப்பா. இவளுக்கு மேல படிச்சவனுக்கு ரொக்கம் குடுக்க, கட்ட, எங்க போக?”

     அவன் தலை குனிந்து கொண்டு நிற்கிறான். அவன் எதற்கு வந்தான் என்று கேட்கக் கூடத் தோன்றவில்லை.

     “இத பாருங்க. நா இத்தச் சொல்லத்தா வந்தேன்க்கா. நா, நமக்கு முற, மடயத் துறந்து விட்டுப் போட்டு மேக்கால புல்லறுத்திட்டிருந்த. வேல்ச்சாமி அத்த அடச்சிப்பிட்டா. தண்ணி பாதிக் கூட பாயல. மூணு நாளா இப்படிச் செய்யிறா. தண்ணி காவாத்தண்ணி பொது. நம்ம முறையில, அரமணி கூட பாயலிங்க! நம்ம கதிர் நல்லா வருதுன்னு பொறாமை. நீங்க அவனக் கூப்பிட்டுக் கண்டிச்சி வையுங்க! நான் சொன்னா, உனக்கென்ன, அவ்வளவு அக்கறை? அவ வூட்டு மாப்பிள்ளையோன்னு கிண்டலா பேசுறா...” குழந்தை போல் அவன் பேசுவதைக் கேட்கக் கேட்க ஆற்றாமையாக இருக்கிறது.

     கையில் வந்திருக்கும் கதிர்க்கட்டைக் கை நழுவ விட்டுவிட்டு, எங்கோ கருப்பங்கொல்லை இருக்கிறதென்று எதிர்பார்க்கிறாளா? கருப்பங்கொல்லை பணம் தரும். ஆனால் சோறு போடுமோ?

     பாடுபட்டு மணிகள் கண்டு, உறவு கொண்டு மகிழும் கனவு அவளில் கனவாகவே நின்று விடுமோ?

     அப்பா வருகிறார். நெஞ்சுக் கனைப்பு வாயிலிலேயே கட்டியம் கூறுகிறது. உள்ளே வந்து உட்காருகிறார். நூறு இருநூறு சரக்கு உள்ளே போயிருக்குமோ?

     “செவந்தி, அந்தப்பய எப்படிச் செத்தானாம் தெரியுமா?” இவள் அவர் முகத்தையே பார்க்கிறாள்.

     அவர் குரலை இறக்குகிறார். “அதா ரசிகர் மன்றம்ன்னு சொன்னான்னில்ல... ஏதோ தவராறாம்... யாரோ ஏதோ பண்ணிட்டாங்கன்னு சொல்லிக்கிறாங்க..”

     “அப்படீன்னா...?”

     “ராத்திரி நிறையக் குடிச்சிட்டு வந்து பொண்டாட்டியப் புடிச்சி அடிச்சானாம். அது கோவிச்சிட்டு மச்சாங்காரன் வூட்டுல போய் அழுதிச்சாம். விடியக் காலம வந்து பாத்தா வாசப்படில கெடக்கிறானாம், ரத்த வாந்தி எடுத்து...”

     “இந்தக் கதையெல்லாம் நமக்கென்னத்துக்கப்பா! கேட்டுக்குங்க, அவங்க நமக்கு ஒட்டுமில்ல, ஒறவுமில்ல. சுந்தரிக்கும் ஏதோ உறவு. அவ புருசன் படு வெட்டியா செத்தப்ப, அவ வந்தாளா? இப்ப எதுக்கு இவங்க போவணும்? நா சொன்னா எடுபடாது. அவ பேச்சிலியே இவங்க மயங்கிட்டாங்க... உங்களுக்கும் நான் சொல்றேன். குடிக்கறத விட்டுப்போடுங்கன்னு...” என்று பேச்சோடு அவருக்கும் தைக்கும்படிச் சொல்லி வைக்கிறாள்.

     “நான் குடிக்கல செவந்தி இன்னைக்கு? ஒங்கிட்ட நா ஏன் பொய் சொல்றே?”

     சரவணன் சைக்கிளில் சுற்றி விட்டு வருகிறான். இருட்டி விட்டது. விளக்கைப் போட்டுக் கும்பிடுகிறாள்.

     “ஏண்டா, ரீட்டா டீச்சராமே? உங்கக்காவுக்கு... அவ வீடு எங்கிருக்கு?”

     “போஸ்ட் ஆபீசு பக்கத்துல இருக்கும் மா. தெரு திரும்பினதும் மேலத் தெருவுக்குப் போவமில்ல, நேராப் போனா, அண்ணா தெரு, மூணாம் வீடு...”

     “அக்கா படிக்கப் போயிருக்கு. ஒம்பது மணிக்கு தாத்தாவக் கூட்டிட்டுப் போய் வுடு. அவ தாத்தாவக் கூட்டிட்டுத் திரும்பி வருவா!”

     “நானே கூட்டிட்டு வாரம்மா”

     “ஒம்பது மணிக்கெல்லாம் வந்திடணும்! தாத்தா போணாத்தா அவ வருவா? முன்னப் பின்ன ஆனாலும்...”

     அவனுக்குச் சைக்கிளை விட்டு விட்டு வர விருப்பம் இல்லை.

     இரவு அங்கு தங்கினால் தங்கி விட்டுப் போகட்டுமே என்று இருக்கவும் மனம் கொள்ளவில்லை. இது எப்படியும் வெளியே தெரிந்து விடும். ஏற்கனவே இவள் சைக்கிளில் பள்ளிக்கூடம் செல்வதும் பையன்களுடன் பேசுவதும் ஏற்கும் படியாக இல்லை. பிறகு ஒன்றுமில்லாததற்குக் கண் வைத்து மூக்கு வைத்துப் பேசுவார்கள்.

     இரவு பத்து மணிக்குப் பாட்டனும் பேத்தியும் திரும்பி விடுகிறார்கள் என்றாலும் சரோ பற்றி கவலை தனியாக அழுத்துகிறது.