உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
1 புதன் கிழமை. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதாம். செவந்தி படுக்கையில் உட்கார்ந்த வண்ணம் உள்ளங்கைகளை ஒட்டிக் கண்களில் வைத்துக் கொண்டு எழுந்திருக்கிறாள். சாதாரணமாகவே காலையில் ஐந்து மணிக்கு அவள் விழித்து எழுந்து விடுவாள். இன்று இன்னமும் ஐந்தாயிருக்காது என்று தோன்றியது. அவள் படுத்திருந்த உள்வாயில் நடையில் ஒரு குட்டித் திண்ணை இருக்கிறது. வாசலில் ஒரு பக்கம் நீண்டும், ஒரு பக்கம் ஒருவர் மட்டுமே உட்காரும் அகலத்திலும் திண்ணைகள் இருக்கின்றன. நீண்ட திண்ணை உள்ள பக்கத்துக் கோடியில் ஒரு அறையும் உண்டு. அதில் அநேகமாக, நெல் மூட்டைகள் இருக்கும். மழைக்குப் பாதுகாக்க வேண்டிய கட்டாயமாக விறகு எரிமுட்டை கூடச் சேர்ந்திருக்கும்! வைக்கோல் தூசு எப்போதும் உண்டு. நடை கடந்தால் முற்றம், சார்புக் கூடம் தவிர இரு புறங்களிலும் தாழ்வரை. ஒரு பக்கத்தில் அம்மி கல்லுரல் சாமான்கள். பின்பக்க நடையை ஒட்டிப் பெரிய சார்புத் தாழ்வரை. அதில் குந்தாணி, உலக்கை, ஏர், உழவு சாதனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. கிணறு, துவைக்கல், மாட்டுக் கொட்டில்... உழவு மாடுகள்... ஒரு சின்னப் பசு, அதன் முதற் கன்று... மாட்டுக் கொட்டில் மண் சுவரும் கூரையும் புதுப்பிக்க வேண்டும் என்று சொல்லுகின்றன. வீட்டுக் கூடம் முன்புறம் எல்லாம் நாட்டு ஓடு வேய்ந்த கட்டிடங்கள். சமையலறை, பின் நடைச் சார்பு தென்னங் கீற்றுக் கூரை. புருசன் ரங்கசாமியும் பன்னிரண்டு வயசுச் சரவணனும் திண்ணையில் படுத்திருக்கிறார்கள். மூத்த பெண் சரோசா ‘பத்தி’ல் படிக்கிறாள். வெகு நேரம் கூடத்து அறையில் படித்து விட்டுத் தூங்குவாள். அப்பா, கயிற்றுக் கட்டிலில் கருணையாகிப் போன ஒரு மெத்தையில் கிடக்கிறார். ஒரு சிறு முட்டை பல்ப், பச்சையாகச் சுவரில் வீற்றிருந்து அப்பாவின் எழும்புக் கூட்டு மார்பு விம்மித் தணிவதைக் காட்டுகிறது. அண்ணன்... இந்த வீட்டு மகன் மண்ணைத் தட்டிக் கொண்டு மதுரைப் பட்டணம் போய்விட்டான். இந்தக் கரும்பாக்கத்துக் கிராம மண் அவனுக்கு ஒட்டவில்லை. மருமகனும் மகளும் வீட்டோடு இருக்க வேண்டிய நிலை. மண்... மண்ணில் ஒரு புதுமை காணப் போகிறோம் என்று சுறுசுறுப்பு செவந்தியின் கைகளில் ஏறுகிறது. கிணற்றில் இருந்து நீரிறைத்து விடுகிறாள். கொட்டிலில் இருந்து சாணம் வாரிக் கழுத்து உடைந்த சட்டி ஒன்றில் கரைக்கிறாள். வாசல் முற்றத்தில் சட சட சட் சட்டென்று ஏதோ சலங்கை ஜதியின் லயம் போல் சாண நீர் விழுகிறது. குட்டித் திண்ணை, வாயில் நடை, உள் நடை எல்லாம் மெழுகுகிறாள். வாயிலைப் பெருக்கி முடிப்பதற்குள் வெளிச்சம் மெல்லப் பரவி, இருள் கரைகிறது. ஆனி பிறந்தாயிற்று. பள்ளிக்கூடம் திறந்து, புதிய புத்தகங்கள் தேடிப் பிள்ளைகள் போகிறார்கள். இவளும் புதிய பாடம் - புதிய பாடம் தொடங்குகிறாள் மண்ணில்... முதலில் மண் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்றார்கள். அதைச் செய்வதற்கில்லை. இப்போது பரிசோதனைப் பட்டமாக விதைக்கப் போகிறாள். அவள்... அவளே. ஒரு ஏக்கருக்கு எட்டு சென்டு நாற்றங்கால். இவளோ கால் ஏக்கர் தான் புதிய பாடம் படிக்கப் போகிறாள். சமையலறையில் அடுப்புச் சாம்பலை வாரி, மெழுகுகிறாள். சாமான்கள் கிணற்றடி ஓரம் துலக்கச் சேருகின்றன. அம்மா நலிந்த குரலில் தன்னைக் காட்டுகிறாள். “இன்னும் பொழுது விடியல. அப்பா ராமுச்சூடும் தூங்கல கறட்டுக் கறட்டுன்னு இழுப்பு; இருமல். இப்பத்தா செத்தக் கண்ண மூடுனாரு. நீ அதுக்குள்ளாற எந்திரிச்சி லொடபுடங்கற...” செவந்திக்குக் குற்ற உணர்வு குத்துகிறது. “இன்னக்கி, நடவுன்னு நேத்தே சொன்னதுதான். அப்பாவுக்கு ஒண்ணில்ல. டாக்டர் குடுத்த மாத்திரய ஒழுங்கா சாப்புடறதில்லை. எத்த சாப்புடக் கூடாதோ, அத்த ஊத்திக்கிறாரு...” என்று முணுமுணுத்தவளாய் அப்பனுக்கு அருகில் வந்து நிற்கிறாள். அவர் கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருக்கிறார். முகம் தான் எப்படி வெளுத்துப் போயிற்று? கழுத்து, மார்புச் சதை பைபையாகத் தொங்குகிறது. முன் முடி வழுக்கையாகிப் பனங்காய் வாடினாற் போல் இருக்கிறது. கண்கள் செருகி, விழி பிதுங்க ஓர் இருமல் தொடர் உலுக்குகிறது. கட்டிலுக்கடியில் வட்டையில் சாம்பல் போட்டு வைத்திருக்கிறார்கள். செவந்தி அதை எடுத்து அவர் முன் நீட்டுகிறாள். கோழை என்று நிறைய வரவில்லை. அவஸ்தைதான் பெரிதாக இருக்கிறது. முதல் நாளைக்கு முதல் நாள் தான், பெரிய சாலையில் நிலவள வங்கியின் வாசலில் அப்பன் உற்சாகமாக உட்கார்ந்திருந்தார். நிலத்தின் உரிமையாளர் அவர். அவர் மண்ணில் தான் அவள் கால் காணியை, புதிய முறையில் பயிர் வைக்கப் போகிறாள். ஏறக்குறைய ஐந்து ஏக்கரா நிலமிருந்தும், அடமானத்திலும், கடனிலும் பயிர் வைக்க ஆள் கட்டில்லாமலும், சோர்ந்து போன விவசாயக் குடும்பமாகியிருக்கிறது. இதை நிமிர்த்த வேண்டும். “அப்பா, நேத்து சாயங்காலம் சாராயம் குடிச்சிட்டு வந்திருக்கிறீங்க. அத்த நிறுத்துங்க. உங்களுக்கு அதுக்கு மட்டும் காசு எப்படிக் கிடைக்குதோ? எருவடிக்கப் போவ, அது இதுன்னு வண்டியோட்டிட்டுக் காசு தேடிக்கிறீங்க...” “இல்....ல... இல்...ல செவுந்தி... கொஞ்சுண்டு சுடுதண்ணி வச்சிக் கொண்டா...” என்று இரைஞ்சுகிறார். செவந்தி உள்ளே சென்று அடுப்பை எரிய விடுகிறாள். அவருக்கு ஒரு வட்டையில் வெந்நீரை ஊற்றி ஆற்றிக் கொண்டு வருகிறாள். “அம்மா, நீ எந்திரிச்சிக் கொஞ்சம் வேலயப் பாரு. உக்காந்துட்டே இருக்காதே...” என்று எழுப்புகிறாள். வாசலில் கணவன் அதற்குள் எழுந்து போயிருக்கிறான். “த, சரவணா... எந்திரிச்சி முகம் கழுவிட்டுப் படி. எந்நேரமும் ஆட்டம் ஓட்டம். பத்தும் பத்தாம மார்க் வாங்கிப் பாஸ் பண்ணிருக்க. எந்திரு?” நடவாளுகள் ஐந்தாறு பேர், கன்னியப்பன் எல்லோருக்கும் சோறு பொங்க வேண்டும். தவலையை அடுப்பில் வைத்து உலை போடுகிறாள். அரிசியை முறத்தில் எடுத்து வைக்கிறாள். இன்னோர் அடுப்பில், ஒரு சட்டியில் பருப்பை வேக வைக்கிறாள். வெங்காயம், கத்திரி, உருளை என்று காயை அரிந்து ஒரு புறம் நகர்த்துகிறாள். புளியைக் கரைத்துக் குழம்பையும் கூட்டி வைக்கிறாள். “சரோ? எந்திரி, எந்திரியம்மா? இன்னைக்கி நடவு. கிளாசெடுத்த மாதிரி பயிர் வைக்கிறோம். எல்லாம் ஒம்பது மணிக்கு வந்திருவாங்க. நீயும் செத்த வந்திட்டு, அப்படியே ஸ்கூலுக்குப் போகலாம்?” என்று எழுப்புதலுடன் தன் ஆசையையும் வெளியிடுகிறாள். இத்தனை நேரமும் பேசாமல் இருந்த அம்மா சட்டென்று சீறுகிறாள். “ந்தா, அத்த ஏனிப்ப கழனிக்கு இழுக்கற? அது படிக்கிற பொண்ணு... ராவெல்லாம் படிச்சிட்டுத் தூங்கிருக்கு...” “ஆமா, உம்புள்ள படிச்சிட்டு இப்ப பவுன் பவுனா கொட்டுறா. இவ படிச்சிட்டுக் கொட்டப் போறா! இதப்பாரு! மண்ணுதா சோறு போடும், கடைசி வரை...!” இவளும் பதிலுக்குக் கொட்டி விட்டு மேற்கொண்டு காரியங்களைக் கவனிக்கப் போகிறாள். “தா கன்னீப்பா...” “ரா, தண்ணி பாச்சிருக்கில்ல? நாஞ் சொன்ன மாதிரி, ஒரு குளம் போல பண்ணிட்டு, அதில இந்த பாக்கெட் அஸோஸ்பைரில்லம்... இது தான் உயிர் எரு... இத்தக் கரைச்சிடு... நாத்தக் களைப்புடுங்கி அதில வைச்சிடு... நடவு வயல்ல ரெடி பண்ணிடு... நா வாரேன்...” அவன் கருப்பாக இருக்கும் அந்த உயிர் உரப் பாக்கெட்டை மாற்றி மாற்றிப் பார்க்கிறான்... “நான் வந்திடறே. நா வந்தப்புறம் எல்லாம் செய்யலாம். சாந்தி கூட வரேன்னிச்சி. நீலவேணி, அம்சு, உன் ஆயா வருதா?” “ஆறாளு வரும்கா, அஞ்சாளு போதும் காக்காணிக்கு. ஆனா நீங்க நடவுல புது மாதிரின்னீங்க... ஆறாளு வரும்” என்று சொல்லிவிட்டு அவன் மாட்டை அவிழ்த்துக் கொண்டு, எவள் எடுத்து வைத்த சாமான்களுடன் போகிறான். மணல், இரண்டு பெரிய முனைகள், நீளமான கயிறு... பிறகு சைக்கிள் டயர் ஒன்று... நோட்டுப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு செவந்தி சரி பார்க்கிறாள். பல் விளக்கிவிட்டு புருசன் வந்தாயிற்று. அம்மாதான் மாடு கறந்து வர வேண்டும். “சரோ... உலையில அரிசி போட்டிருக்கு. பாத்துச் சரிச்சி வையி. பாட்டி பால் கறந்ததும் டீ போட்டுக் குடியுங்க...” “நா ஒரெட்டுப் போயிட்டு பார்த்து ஓடியாரேன்!” என்று கிளம்புகிறாள். “என்னம்மா நீ! என்னால முடியாது! நீ சோறு வடிச்சிட்டுப் போ! பெரிய பாயைத் தூக்க முடியாது!” “என்னது? பொம்புளையாப் பிறந்துட்டுப் பாயைத் தூக்க முடியாதுங்கற? சம்சாரி வீட்டுப் பொண்ணு! இந்த சல்லியம் எல்லாம் இங்க நடக்காது. காலம எந்திரிச்சி அந்த ரேடியோவத் திருகிவுடறே. அது என்ன பாட்டுடீ! சட்புட்ன்னு வேலையைப் பாரு! இன்னக்கிப் புதுசா உங்கையில நடவு செய்யி, கத்துக்க! உம் போல படிச்ச பொண்ணுகதா வரணும். சாந்தி பத்துப் படிச்சிருக்கா. அவ ஒண்டியாளா, கொல்ல மேட்டுல பயிரு வைப்பேன்றா! படிச்சிப்புட்டா மண்ணு அந்நியமில்ல. வந்தாங்களே பெரிய மேடம். அவங்க பெரிய பெரிய படிப்புப் படிச்சவங்க! இதைச் சொல்லிக் கொடுத்தவங்க எல்லாரும் பெரிய... படிப்புப் படிச்ச பொம்புளங்க. நாப்பது வருஷமா ஆம்புளங்களுக்குப் புதுத் தொழில் நுணுக்கம் சொல்லிக் கொடுத்தோம். பொம்புளங்க கையில் பலமும் வரல, சக்தியும் வரல. இப்ப நேரடியா பொம்புளங்களுக்கே சொல்லித் தரோம்னு அரசே சொல்லி வந்திருக்கு... வாம்மா, கண்ணு, உங்கையாலே நாலு குத்து வச்சிட்டுப் போயிடு!” என்று மெல்ல ஊசி குத்தினாள். ரங்கனுக்கு இது மறைமுகத் தாக்குதல். அவன் மண்ணில் உழைப்பவனாக இருந்தால், கொல்லை மேட்டுப் பூமி தரிசாகக் கிடக்காது. ஏதோ ஒரு போகம் போடலாம். அண்ணன் படிப்பென்றும், வேலை என்றும் பந்தகம் வைத்த பூமி மீட்கப்படாமலே போக வேண்டாம். எஞ்சியிருக்கும் ஒரு ஏக்கரிலும் கூலிக்கு ஆள் பிடித்து மல்லுக்கட்ட வேண்டியதில்லை. சொந்த அத்தை மகன் தான். பத்து படித்ததும் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு மண் ஒட்டக் கூடாது என்று கௌரவம் பாராட்டினான். அத்தையும், மாமாவும் போன பிறகு, இரண்டு பெண்களைக் கல்யாணம் கட்டிக் கொடுத்து, இரண்டு பையன்களுக்கும் பிரிவினை என்று வந்தது. இவன் தன் பங்கை தன் தம்பிக்கு விட்டுக் கொடுத்து, பணம் வாங்கினான். பெரிய சாலையில் சைக்கிள் கடையாக, சைக்கிள் மராமத்துக் கடையாக இருக்கிறது. அவன் எப்போதேனும் அதில் இருந்து உபரி வரும்படி என்று இவள் கையில் நோட்டோ, பொன்னோ, துணியோ கொடுத்ததாக நினைவில்லை. உழைக்கும் ஒரே ஆள் அப்பன் தான். அம்மாவும் வீட்டுப் படி இறங்க மாட்டாள். கழனி வேலை என்று செல்பவள் அவள் மட்டுமே. ஆனால் பெண்சாதியின் ‘மேட்டிமைத்தனம்’ ரங்கனால் பொறுக்க முடியுமா? “என்னமோ ரெண்டு பொம்பளைங்க ஜீப்புல வந்து எறங்கி பயிரு வைக்கற பாடம் நடத்துனாங்களாம். இவங்களுக்குத் தலகால் புரியல! நாலு புஸ்தகத்த, அதுவும் இங்கிலீஷ் புஸ்தகத்தப் படிச்சிட்டுப் பயிர் வைக்கிறதாம். உர மருந்து பூச்சி மருந்து அது இதுன்னு கெடங்கில் வெலயில்லாம கிடந்திச்சின்னா, தலையில கட்ட இப்பிடி ஒரு சூட்சுமம் போல. இவளுவ புத்தகத்தில எழுதிட்டு வந்து, அது போல பயிரு வைக்கிறதாம். தொரசானி முருங்கக்கா சாப்புட்ட கத தா. அப்படியே முழுங்கணுமின்னு தொண்டக் குழில சக்கய எறக்கிட்டுத் தவிச்சாளாம். “அவவ, ஏரிப் பக்கத்துப் பூமியெல்லாம் பயிரு வச்சிக் கட்டுப்படி ஆவலன்னு பிளாட்டு போட வித்துட்டு டவுன் பக்கம் போயி எதானும் தொழில் பண்ணலான்னு போறா. “பாரு, நாகு பெரியம்மா மகனுக போடு போடுன்னா போடுறானுக. ஒருத்தன் பைனான்ஸ் கம்பனி வச்சிருக்கான். ஒருத்தன் ரியல் எஸ்டேட் பிஸினஸாம். காரிலதா வாரான். மோதிரம் என்ன, தங்கப்பட்டை வாட்ச் என்ன, அடயாளமே தெரியல... ஆளுங்கட்சில கூட பலான ஆளெல்லாம் தெரியும். அத்தினி செல்வாக்கு. இவ என்னமோ, ஏக்கருக்கு முப்பது மூட்டை எடுக்கப் போறாளாம்... அத்தே, காபியக் கொண்டாந்து குடுங்க. எனக்கு வேலை இருக்கு; போற...!” செவந்திக்கு உள்ளூர ஆத்திரம் பொங்குகிறது. “நான் இத்தச் சவாலா எடுத்துக்கறேன்... பண்ணிக் காட்டுறேன். அதுவரைக்கும் பேசாதீங்க!” இதற்குள் சுந்தரி வாசல் வழியே வருகிறாள். “ஏக்கா? நடவாமே? அம்சு சொல்லிச்சு...” “ஆமா, வா சுந்தரி, அடுப்புல அரிசி கொதிக்குது. குழம்பக் கூட்டி வச்சிருக்கே. பழஞ்சோறு இருக்கு. சரோ, சரவணன் சாப்பிட்டுட்டு ஸ்கூலுக்குப் போகட்டும். சைக்கிள்ள ரெண்டு பேரும் வந்து பகலுக்கு சாப்புடுவாங்க... நா வாரேன்...” நோட்டுப் புத்தகம் அலுமினியம் கூடையில் இடம் பெறுகிறது. நடவு வயலுக்கு கால் காணிக்கு... என்று மனசுக்குள் பாடம் படித்தவளாய், ஜிப்சம், யூரியா, பொட்டாஷ் என்று வைக்கிறாள். நாற்று நனைக்க அசோஸ்பைரில்லம். உயிர் உரம் கொடுத்தாயிற்று. பிறகு... அம்மாவுக்கும் மகள் சரோவுக்கும் இவள் கேலிக்குரியவளாகிறாள். முகம் கை கால் கழுவிக் கொண்டு உள்ளே வருகிறாள். பழைய சோற்றை உப்பைப் போட்டுக் கரைக்கிறாள். ஒரு வெங்காயத் துண்டைக் கடித்துக் கொண்டு குடிக்கிறாள். சுந்தரி அடுப்பைப் பார்த்து எல்லாம் செய்வாள். இந்த நிலம், வீட்டுக் கொல்லையில், கூப்பிடு தூரத்தில் தான் இருக்கிறது. தலையிலும், இடுப்பிலும் சுமை - டயர் வளையம் கையில்... நடக்கிறாள் செவந்தி. வெயில் சுள்ளென்று விழுகிறது. ஓரத்தில் ஊர்ப் பொதுவிடம். நடு ரூமில் பஞ்சாயத்து நூலகம். சுற்றி உள்ள இடத்தில் குந்தியிருப்பார்கள் ஆண்கள். தண்ணீர் முறைக்காரர்களும் இருப்பார்கள். ஆற்றிலே பாதி நாள் தண்ணீர் இருக்காது. மழை பெய்தால் மட்டுமே கால்வாயில் தண்ணீர் வரும். பக்கத்தில் வெற்றிலைக் கொடிக்காலின் கார மணம் வருகிறது. மடையில் நீர் பாய்ந்திருக்கிறது. இது கிணற்று நீர். அந்தப் பூமியும் இவர்களுடையது. இப்போது, சிங்கப்பூர்க்காரர் குடும்பத்துக்குப் போய் இருக்கிறது. அவர்கள் வெற்றிலைக் கொடிக்கால் வைத்திருக்கிறார்கள். பழனிச்சாமி வெற்றிலை கிள்ளுகிறான். “நடவா...” என்று கேட்கிறான். ஆமாம் பொல்லாத நடவு... கால் காணி... முழுசையும் போட ஆசைதான். நாற்று முழுசுக்குமாக விட்டிருக்கிறார்கள். ஆனால் அப்பன் கை எழுத்துப் போட்டுக் கடன் வாங்கி இவளுக்குத் தருகிறான். அகலக் கால் வைத்து நட்டமானால்...? ஆம், கால்காணி... ஆயிரம் ரூபாய்க்குள் செலவு செய்து போடப் போகிறாள்... எருவாகவும் நுண்ணூட்டச் சத்தாகவும், நோய்களைத் தாக்காத மருந்தாகவும், கூலியும் கூடத்தான் கட்டுப்படியாகும்படி கடன் கொடுத்திருக்கிறார்கள். ‘பொம்புள என்ன கிழிப்பா?’ என்ற அலட்சியத்துக்கு நேர் நின்று காட்டுவோம்! விடுவிடென்று வரப்பில் நடக்கிறாள். |