19

     “யக்கோ...”

     “என்ன கன்னிப்பா ஒரே சந்தோசமா இருக்கே! என்ன விசயம்?”

     “அக்காவக் கூப்பிடுங்க மாமா. அவங்ககிட்டத்தா மொதல்ல சொல்லணும்.”

     “செவந்தி, கன்னியப்பன் கூப்பிடுறான்...” கணவன் முற்றத்தில் நின்றபடி கூறுகிறான்.

     “என்னன்னு கேளுங்க! நா சோறு வடிச்சிட்டிருக்கே. சரோ காலேஜிக்குக் கிளம்பிட்டிருக்கு...!”

     உள்ளிருந்தபடியே அவள் குரல் கேட்கிறது. சரோ இப்போதெல்லாம் பாவாடை தாவணி சேலை அணிவதில்லை. இரண்டு செட் சல்வார் கமிஸ் வாங்கியிருக்கிறாள். காலை ஏழரை மணிக்குள் வீடு விட வேண்டும். அதிகாலையிலேயே எழுந்து சித்தமாகிறாள். எப்போதுமே சரோவுக்கு சுத்தமாக மடிப்பாக உடை அணிய வேண்டும். பள்ளியில் படித்த நாட்களிலும் சீருடையைத் துவைத்து உலரப் போட்டிருந்தால் விரித்து விட்டு அழகாக மடித்துக் கொள்வாள். இப்போது கூடுதலாக இந்த உணர்வு வந்திருக்கிறது. காலையிலேயே சோப்பு போட்டு அலசி உள் முற்றத்துக் கயிற்றில் உலர்த்தி விடுகிறாள்.

     “ஏம்மா நா நல்லா அலசி உலர்த்த மாட்டேனா உனக்கு நேரமாகுமில்ல?”

     “நீ பிரிக்கவே மாட்டே. நான் உலர்த்தி மடிச்சிப் பெட்டிக் கடியில் வச்சா, இஸ்திரி போட்ட மாதிரி இருக்கும்” என்று சொல்கிறாள்.

     கன்னியப்பன் முற்றத்தில் பார்த்துக் கொண்டே நிற்கிறான்.

     “என்ன சமாச்சாரம் எங்கிட்டச்சொல்லக் கூடாதா?”

     “உஹூம்... அம்மாகிட்ட மட்டும் தான் சொல்லுவ...” என்று வெள்ளைச் சிரிப்புடன் நெளிகிறான்.

     “சரி சரி அம்மா நீ போயிக் கேளு. நா சாப்பிட்டுக்கிறே...”

     “என்னவாம் அவனுக்கு அவுசரம் இப்ப?” சுடு சோற்றை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கிறாள். தட்டில் ஒரு ஈடு இட்டிலியைத் தட்டி சாம்பார் கிண்ணத்தை நகர்த்தி வைக்கிறாள்.

     சரோ தண்ணிர் குப்பியில் தண்ணிர் ஊற்றித் திருகிக் கோணிப்பை போல் பெரிதாக இருக்கும் பையில் வைத்துக் கொள்கிறாள். உள்ளே சாப்பிட உட்காருகிறாள்.

     “அம்மா, டிபன் டப்பியில் ஒரு ஸ்பூன் வேணும். நேத்து ஸ்பூன் எங்கோ விழுந்திருக்கு தெரியல...”

     “என்ன கன்னிப்பா? என்ன விசயம்? மீசைக்காரரு சொல்லி அனுப்பினாரா?”

     அவன் அவளை நடை வரை தள்ளிச் செல்கிறான்.

     “வந்து... இன்னிக்கி சாயங்காலம் நீங்களும் மொதலாளியும் வரீங்க. அதுக்கு மின்னாடி காலம காஞ்சிபுரம் வர்ரீங்க...”

     “எதுக்கு? என்ன சொல்லுற நீ?”

     “அதாங்க, உங்களுக்கு தெரியுமேக்கா...! மீசக்காரரு, இன்னிக்கி நிச்சிதார்த்தம் வச்சிக்கலான்னு...”

     செவந்தி சுதாகரித்துக் கொள்ளு முன், சரோ சாப்பிட்டுக் கை கழுவுவது தெரிகிறது.

     “அக்கா உங்களையும் முதலாளியையும் வுட்டா எனக்கு ஆரிருக்காங்க!” குரல் நெகிழ்கிறது.

     செவந்தி புரிந்து கொள்கிறாள்.

     “ஓ, அப்படியா? லட்சுமி மாமா சம்மதிச்சிட்டாரா? என்னங்க” உட்பக்கம் கணவரைக் கூவி அழைக்கிறாள். அம்மா இப்போது தான் பல்விளக்கிவிட்டுக் கொல்லையில் இருந்து வருகிறாள்.

     “அவங்கதா இன்னைக்கு நாளு நல்லாருக்கு, நிச்சயதார்த்தம் வச்சிக்கலான்னு சொன்னாங்க. நீங்களும் மொதலாளியும் காலம ஏங்கூட காஞ்சிபுரம் வரணம். அதுக்கு நல்லதா ஒரு சீல எடுக்கணுமுங்க...”

     “ட்டேயப்பா கன்னிப்பன் மொகத்தப் பாருங்க! இன்னிக்கு நிச்சியதார்த்தமாம். காஞ்சிபுரம் போயிச் சீல எடுக்கணுமாம்!”

     சரோ பையுடனும், வரிச்சட்டத்துடனும் வருகிறாள். வாசலில் நிற்கும் சைகிளில் பையை மாட்டுகிறாள்.

     “சரோ நெதக்கிம் காஞ்சிபுரம் போயிப் படிக்கிதில்ல? ஆமா கிறிஸ்தவங்கசாமி சிலுவ போல அதொன்னு கொண்டிட்டுப் போற? இப்பவும் சிலுவக் காலேஜியா? இத சொந்தமா வச்சிட்டுக் கும்பிடணுமா? வேதத்துல சேத்துடுவாங்களா?”

     “இது கும்புடறுதுக்கில்ல. இதுக்குப் பேரு ‘டிஸ்கொயர்’ இத்த டிராயிங் போர்டில் வச்சி வரையிவோம். பிளான் எல்லாம். நீங்க காஞ்சிபுரம் வாரீங்களா? எங்க இன்ஸ்டிட்யூட் தெரியும்...”

     “நீயெல்லாம் ரொம்பப் படிச்சி, பேப்பரிலல்லாம் பேரு வந்திடிச்சி. எனக்கு அதெல்லாம் புரியாது சரோ. நா அம்மாவையும் அப்பாவையும் கூட்டிட்டுப் போற. இன்னிக்குச் சாயங்காலம் பட்டாளக்காரர் வூட்டுக்கு நீயும் வரணும்...”

     “விருந்து உண்டா? லட்டு, பாயிசம், வடை அப்ப வாரேன்...”

     “நிச்சயம் உண்டு. சரோ வந்திடு.”

     அவள் சிரித்துக் கொண்டே சைகிளில் ஏறிச் செல்கிறாள்.

     பத்து மணியளவில் கன்னியப்பன் பளிச்சென்ற வேட்டியுடுத்தி கோடு போட்ட நீலச்சட்டை அணிந்து, துவாலைப் போட்டுக் கொண்டு வந்து நிற்கிறான். செவந்தியின் அப்பா வாசல் திண்ணையில் இருக்கிறார்.

     “கன்னியப்பனா? ஏய் மாப்பிள கணக்கா இருக்கிற. உக்காரப்பா” அவனைப் பற்றி பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்கிறார்.

     “உங்களக் கும்புடறே மாமா. எனக்கு நெனப்புத் தெரிஞ்சா நாள்ளேந்து இந்தூடுத்தா பெறந்த வூடு. ஆயியப்பந் தெரியாத எனக்கு...”

     “கன்னிப்பா, செவந்தி வெவரம் சொல்லிச்சி. நீ ரொம்ப ஒசந்து போயிட்டப்பா! எங்களெல்லாம் காட்டியும் ஒசந்தவ. பொண்ணும் பூமியும் ஒண்ணுதா. மேமயா பாவிக்கணும். பூமில அழுக்கும் கூளமும் போடுறோம். அத்தையே நமக்குப் பயிரா, தானியமாத் தருது. பொன்னா மாத்தித்தருது. பொம்புளயும் அப்படித்தா. நீ எத்தினி குத்தம் பண்ணினாலும் பொறுக்குறா. சகிக்கிறா. அத்த மனசுல வச்சிட்டு அதுக்கு அன்பா அனுசரணையா தாய்க்கு சமானமா மதிச்சி நடக்கணும். பூப்போல வச்சிக்கணும்...”

     “ஏதேது கன்னிப்ப மாட்டக் கூட அடிக்க மாட்டா. வாயால ட்ராய் ட்ரய்ன்னு வெறட்டுவா லட்சுமிதா இவன வெரட்டப் போற...” என்று கூறிக் கொண்டு செவந்தி வருகிறாள். ரங்கனும் வாயிலில் வந்து நிற்கிறான்.

     முன்பெல்லாம் சாமி கும்பிட, சாமான் வாங்க என்று ரங்கன் அடிக்கடி காஞ்சிபுரம் செல்வான். தான்வா பயிற்சி பெற்றபின், சாந்தியுடன் காஞ்சிபுரம் செல்ல வாய்ப்புக்கள் அதிகமாகி இருக்கிறது. விரிவாக்க அலுவலர் அலுவலகத்துக்கு விதைகள் பற்றி தீர்மானிக்க, வாங்க, இரண்டு மூன்று தரம் தான்வா மகளிர்கூட்டம் நடந்தது. பெரிய மேடம் வந்திருந்தார்.

     சரோவின் கல்லூரியை எட்ட இருந்து ரங்கன் பஸ்ஸில் போகும் போதுகாட்டுகிறான்.

     ஒரு புதிய பாதையில் அவர்கள் செல்கிறார்கள். இரண்டு தடவை பயிர் வைத்தாயிற்று. கொல்லை மேட்டில் போட்ட பயிரில் பட்டாளத்தாரின் கடனைக் கட்டி, மேல் பணமும் கையில் தங்கியிருக்கிறது. இனி மழைக்கு முன் வீட்டுக் கூரையைச் செப்பம் செய்ய வேண்டும். அடுத்த ஆண்டில் முன்பு அண்ணன் கலியாணத்தின் போது, வைத்த பூமியையும் மீட்க வேண்டும். அதில் தென்னை இருக்கிறது. கிணறு பம்ப் எல்லாம் இருக்கின்றது. அதில் சாகுபடி செய்தால், அண்ணனுக்கு ஏதேனும் அனுப்பி வைக்கலாம். மூன்று வருசம் சரோ படிக்க, பையன் படிக்க செலவுகள் அதிகம்தான். இடையில் சரோவுக்கு ஏதேனும் நகைகள், பண்ட பாத்திரங்கள் வாங்கிச் சேமிக்க வேண்டாமா?

     நிறுத்தத்தில் வந்து இறங்குகையில் ஊமை வெயில் எரிக்கிறது. நேராகக் கடைக்குப் போகிறார்கள். தாமரைப் பூக்கலரில், அரக்குக் கரையில் இரண்டிழை சரிகை போட்ட ஒரு சேலை எடுக்கிறார்கள். எண்ணுற்று ஐம்பது ரூபாய். அரக்கில் சரிகைக் கட்டம் போட்ட ரவிக்கை. அந்தக் குழந்தைக்கு ஒரு கவுன். நூற்றிருபது ரூபாய்...

     “ஓட்டலுக்குப் போய், சாப்பிடலாம் வாங்க...” என்று கன்னியப்பன் கூப்பிடுகிறான்.

     “ஏம்ப்பா, வூட்ட சாப்பிட்டதே செரிக்கல. எதுக்கு ஒட்டல் இப்ப? பணத்த ஏன் விரயம் பண்ணுற?” என்று ரங்கன் மறுக்கிறான்.

     “மொதலாளி, இன்னிக்கு நான் சொல்லுறத நீங்க தட்டக் கூடாது, நீங்க சாப்பிடணும்.”

     “அட வூட்ட சோறாக்கி வச்சிருக்க. வீணாகும். எதானும் டி.பன் சாப்பிடுவம் போதும்!”

     “சரி அப்ப டிபன் சாப்புடலாம் வாங்க!”

     ஓட்டலில் எந்த நேரத்திலும் கும்பல் இருக்கும் போலும்! கன்னியப்பனுக்கு இந்த மாதிரி வெளிப்பாடு என்றோ ஒரு நாள் தானே? மேசையில் உட்காருகிறார்கள்.

     “யப்பா, மூணு அல்வா, மூணு மசால்தோசை, கொண்டா!”

     “தோசைவேற என்னாத்துக்கு? ஸ்வீட் போதும்...”

     “அட நீங்க சும்மா இருங்கக்கா” மஞ்சளாக அல்வா ஒரு தட்டில் வருகிறது.

     கன்னியப்பன் கொஞ்சம் எடுத்து வாயில் வைத்துக் கொள்கிறான்.

     “நல்லாருக்கா... அன்னிக்கொருநா வேறொரு ஒட்டல்ல மைசூர் பாக் வாங்கின. ஒரே காரல் கசப்பு...” என்றுபேசிக் கொண்டே அநுபவிக்கிறான்...

     “கன்னியப்ப நெறையப் பணம் சேத்து வச்சிருக்காப்பல?”

     அரும்பு மீசையைப் பல்லால் கடித்துக் கொண்டு அவன் சிரிக்கிறான்.

     “எவ்வளவு வச்சிருக்கேப்பா சும்மா சொல்லு!”

     “என்ன மொதலாளி, நீங்க?”

     “எவ்வளவு? பத்துத் தேறுமா?”

     “அவ்வளவுக்கில்லீங்க. ஏழுக்கு ஒரு பத்திரம் வாங்கி வச்சிருக்கிறேன். ஆறு வருசத்துல ரெண்டு பங்காகும்னாங்க. அதிர்ஷ்டம் இருந்தா டி.வி. காரு எல்லாம் பிரைஸ் கூட வருமாம்...” சிரிப்பாய் வழிகிறது.

     “வந்திச்சின்னா, சொந்தத்துக்கு ஒரு அரக்காணி, கால்காணினாலும் வாங்கணுங்க...”

     “இப்பத்தான் உனக்குப் பொஞ்சாதி வழி வருதில்ல? ரெண்டேகராவுக்கு மேல இருக்குமே?”

     “நமக்குன்னு ஒரு அம்பது சென்ட்ன்னாலும் இருக்கணுங்க”

     “கிணறு இருக்கு. உன் உழைப்பு இருக்கு. ஜமாய்சிடுவ. உங்காயா சம்மதிச்சிச்சா?”

     அவன் பேசவில்லை.

     செவந்தி பேச்சை மாற்றுகிறாள்.

     “லட்சுமி நல்ல பொண்ணு. பட்டாளத்தாரு முதலிலேயே அவளுக்கு அவள வச்சிட்டு சந்தோசமா குடும்பம் நடத்தற ஒருத்தனுக்கு கட்டி வைக்கணும்னு நல்ல யோசனை, நல்ல முடிவு. அந்தப் பய அழிச்சது போக, பத்து சவரன் நகை இருக்கு. அவம்மா தாலிய பத்திரமா வச்சிருக்கிறேன்னெல்லாம் சொன்னாரு. கன்னியப்பனுக்கு நல்ல எடம். அவளுக்கும் கன்னியப்பனைப் போல ஒரு புருசன் கிடைக்க குடுத்து வச்சிருக்கணும்... நல்லாருப்பீங்க.”

     “இப்பக் கூட தாலிக் கூறை வாங்குறது நம்ம முறைன்னு தோணிச்சி. நா அதுக்குன்னே ஆயிரம் ரூபா தாரேன்னு சொன்ன. அதுக்கு அவரு, என் சம்சாரம் போட்டுட்டிருந்த தாலி. அவ நல்லா வாழ்ந்தா. அத்த அழிச்சி செஞ்சி வச்சிருக்கிறேன். நீ பணம் வச்சிக்கன்னாங்க. அதா சீல நல்லா வாங்கணும்னு வந்த மொதலாளி...”

     “சும்மா என்ன மொதலாளி மொதலாளின்னு கொழப்ப தாப்பா. மாமோன்னு கூப்டு போதும். கலியாணம் எங்க வச்சி நடக்க?”

     “நம்ம ரோட்டோரத்து அம்மங் கோயில்ல வச்சித் தாலி கட்டிட்டு ரிஜிஸ்திரார் ஆபீசில பதிவு பண்ணனும்னு பட்டாளத்தார் சொல்லிட்டாரு. சரின்னே... சரிதானேக்கா?”

     “ரொம்ப சரி...”

     “எம்பக்கம் நீங்கதாங்க மனுசா...”

     நெஞ்சு நிறைந்திருக்கிறது.

     அன்று சாயங்காலம் சைகிளில் புருசனும் பெண் சாதியுமாகப் போகிறார்கள். பட்டாளத்தாரின் தங்கை வீடு கூரை வீடுதான். ஆனால் பெரிய வசதியான வீடு. பளிச்சென்று துடைத்துக் கோலம் போட்டு மாவிலைத் தோரணம் கட்டி அலங்கரித்திருக்கிறார்கள். ஒயர் இழுத்து வாசல் கம்பத்தில் இரண்டு வாழைத்தண்டு விளக்குகள் போட்டிருக்கிறார்கள். லட்சுமியே வாசலில் வந்து “வாங்கக்கா!” என்று அழைக்கிறாள். பூப்போட்ட ஒரு பச்சை சில்க்குச் சேலை அணிந்திருக்கிறாள். பின்னல் பின்னித் தொங்கவிட்டு ரிப்பன் முடிந்து, நிறையப் பூச்சூடி இருக்கிறாள். காதில் தோடு, மாட்டல், இரண்டு மூக்கிலும் மூக்குத்தி அணிந்து, புதுமையாக காட்சித் தருகிறாள். பெண் குழந்தை, அவன் வாங்கி வந்திருக்கிற புதிய கவுனை அணிந்திருக்கிறது. ராமையா, பின்புறம் சமையல் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பவர், இவர்களைக் கண்டு விரைந்து வருகிறார்.

     “வாங்க, வாங்க சம்பந்தி அம்மா...எங்க நம்ம இன்ஜினிர் பொண்ணு வரல?”

     “வருவா. முன்ன பின்ன வூடு வர ஆறு மணி ஆகுது சில நாள்ள. வந்ததும் வந்திடுவா.”

     “சின்னப் பய்யன் வரல?”

     “அவ கூட வருவான். படிச்சிட்டிருக்கச் சொன்னேன்...”

     வெற்றிலைப் பாக்கு, பழம், கல்கண்டு, சர்க்கரை எல்லாவற்றையும் எடுத்துத் தட்டுக்களில் வைக்கிறார்கள்.

     “மாப்புளயக் காணல?”

     “இத வந்திடுவா. நீங்க காபி சாப்பிடுங்க!”

     லட்டு காராபூந்தி கொண்டு வைக்கிறாள் லட்சுமி. அவள் அம்மா காபி கொண்டு வருகிறாள்.

     சற்றைக்கெல்லாம் புது மாப்பிள்ளையாக, கன்னியப்பன் வருகிறான். நெற்றியில் சந்தனம், குங்குமம், மில்காரர் அங்கவஸ்திரம் விசிற வந்து உட்காருகிறார். அண்டை அயல்காரர்கள், வங்கிக்காரர் ராமலிங்கம், எல்லோரும் வர களை கட்டி விட்டது. ஆடியோ காசெட், நாதசுரம் ஒலிக்கிறது. ரங்கனும் செவந்தியும் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் ராமையாவும் அவர் சகோதரியும் நின்று பாக்கு வெற்றிலை மாற்றிக் கொள்கிறார்கள்.

     சரோசா சொன்னபடி சரவணனுடன் வந்து விடுகிறாள்.

     இரவு சிரிப்பும் கேலியுமாகச் சாப்பிட்டுவிட்டு அவர்கள் திரும்புகையில் மணி பத்திருக்கும். ஆவணி மாசம். நிலவு பாதியாகத் தெரிகிறது. சைகிளில் தொங்கும் பையில் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பழமும், லட்டும், வடையும், வெற்றிலைப் பாக்கும் கொண்டு வருகிறார்கள். அப்பா வாயில் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார்கள். லேசாக இழுப்பு இருக்கிறது.

     குடித்திருக்கிறார் என்று தோணுகிறது.

     “கலியாணம் ஆயிடிச்சா?”

     “கலியாணம் சொர்ணவாளிப்பட்டம் அறுவடையான பின் அப்பசிக்குப் போயிடும். அப்ப அவங்க மக பிள்ளைங்க வருவாங்க போல. இது நிச்சியம்தான? கன்னியப்பனுக்கு நல்ல அதிர்ஷ்டம்தா...” என்று செவந்தி சொல்லி பையில் இருந்து லட்டு வடை எல்லாம் எடுத்து அப்பாவிடம் கொடுக்கையில் அம்மாவும் அங்கே இருப்பது தெரிகிறது.

     “என்ன பெரிய அதிர்ஷ்டம். அறுத்தவளப் போயிக் கெட்டுறா! ஆயா வந்தாளா? எடுத்து வளர்த்தவளக் கால வாரிவுட்டுப் போட்டு ஆக்கம் கெட்டவளப் போயிக் கெட்டுவானா?”

     “சீ! வாயை மூடு” என்று அப்பா கத்துகிறார்.

     “என்ன பேச்சுப் பேசுற நீ! அந்த ஆயா ஒரு மூதேவி. மகள இதுவே சாதிக் கெட்டவன் பின்னே போனன்னு குத்தி சாகடிச்சிருக்கும். இங்க வந்து உக்காந்து திட்டுது. எனக்குக் கெட்ட கோவம் வந்திடிச்சி. இந்த வூட்டுப்படி இனி வராதேன்னு தெரத்தின.”

     “ஆமா உங்களுக்கு ஏ அறுத்தவள்னு சொன்னா கோபம் வருது? முதமுதல்ல இவம் போயி அவ வூட்ல விழலாமா? கன்னி கழியாத புள்ளகளா இல்ல? அவப்ப என்ன சாதியோங்கறது சரியாத்தா இருக்கு. அதும் மொதல்ல கட்னவனுக்கு ஒரு பொட்டப் புள்ள வேற...”

     “தா பேசக்கூடாதுன்னா பேசாத! உன்னிய வெட்டிக் கொன்னிருவ! அன்னிக்கே நம் மூட்டில் இப்படி ஒரு கலியாணம் நடந்திருக்க வேண்டியது. வூடு தேடி வந்து பொண்ணு கேட்டாரு. அவர ஏசி அனுப்பிச்சிட்டு, இந்தப் பாவி எவனையேனும் கட்டிட்டு சொத்தப் பிரிசிட்டுப் போயிடுவான்னு; அவ பங்குக்கு ஒண்ணுமில்லாம இவப்பனே எழுதிட்டா... அந்தப் பாவம் என்னிக்கின்னாலும் தலை மேலதா தொங்கிட்டிருக்குங்குறத மறந்திடாதே!”

     கொல்லென்று அமைதித் திரைபடிகிறது.