13 சாந்தி காலனி வீட்டின் பெரிய முற்றத்தில் நெல் புழுக்கி உலர்த்தியிருக்கிறாள். தாழ்ந்த கூரையின் குட்டித் திண்ணையில் பிள்ளைகள் பள்ளிக்குப் போகும் சீருடையில் இருக்கிறார்கள். கூரை வீடானாலும் நல்ல அகலம், வசதி, பெரிய சாணி மெழுகிய முற்றம். திண்ணையும் கூட வழுவழுவென்று மிக நன்றாக இருக்கிறது. எந்த வேலையிலும் ஒரு திருத்தமும், மெருகும் தனக்கு வரவில்லை என்பது சாந்தியின் வீட்டைப் பார்த்தால் புலனாகிறது. “வாங்கக்கா, வாங்க. வள்ளிக்கிழங்கு வெவிச்சேன், சாப்பிடுவீங்களா?” தட்டில் நான்கு கிழங்குகளுடன் உள்ளிருந்து வெளியே வருகிறாள். நெல் புழுக்கலில் அவித்ததா? பிள்ளைகளுக்கு டிபன் டப்பியில் வைத்து மூடுகிறாள். அவளுக்கும் ஆவி பறக்கும் இரண்டு கிழங்குகளைத் தட்டில் எடுத்துக் கொண்டு வருகிறாள். காலனியின் வளைவுக்கப்பால் சாலை வரை சென்று அவர்களை வழி அனுப்புகிறாள். “பத்திரம் சுஜாம்மா, தம்பி கையப் புடிச்சிட்டு கிராஸ் பண்ணணும்; பாத்து...” டாடா காட்டிவிட்டு வருகிறாள். “நெல்லு இன்னக்கி வெவிச்சியா சாந்தி?” “ஆமா விடிகாலம் எந்திரிச்சி ஒரு கால் மூட்ட வெவிச்சிப் போட்ட” செவந்தி கையிலெடுத்துப் பார்க்கிறாள். “பொன்னியா?” “இது ஏ.டி.டி 36ன்னாங்க. கொஞ்சம் தாட்டியா இருக்கு. சோறு நல்லாருக்கும். புது நெல்லு தா...” “சாந்தி, எனக்கு ஒண்ணுமே புடிக்கல. வெறுத்துப் போயி ஓடியாந்த. எங்கூட்ல தகராறு. இத்தினி வருசமா, உளுமையா, எல்லாரும் நல்லபடியா இருக்கணும்னு உழச்சி என்ன பலன்? ஒரு ஆதரவு, ஒரு பேச்சு இல்ல.” “அன்னைக்குக் கடன் கட்டினப்ப, வங்கிக்காரரு, ‘சந்தோசம்மா அடுத்த பயிர் வைக்கக் கடன் வாங்கலாம் நீங்க’ன்னாரு. மொத மொதல்ல நா வங்கில கேக்கலாம்னு போயி செவனேன்னு வாசல்ல நின்னுட்டிருந்தே. எல்லாரும் சொன்னாங்க. நீல்லாம் போயிக் கேட்டா கிடைக்காது. வரதராச மொதலியாரோ, நாச்சப்பனோ போல பெரி... கைங்க சிபாரிசு பண்ணனுன்னாங்க. பயமாயிருந்திச்சி. பன்னண்டு மணி வர நின்னிட்டிருந்தே. அவுரே கூப்பிட்டு, உனுக்கு என்னம்மா வோணும் காலமேந்து நிக்கிறீங்கன்னாரு. சொன்னே. அதெல்லாம் தேவயில்ல. உங்கப்பா பேருல நிலமிருக்குன்னு சொல்றீங்க. அவரு வந்து கையெழுத்துப் போட்டாப் போதும்ன்னாங்க. உனுக்கும் தா. நா வாங்கினது தெரியும். இப்ப... பாப்பாம்மா சொன்னதைக் கேட்டு, எனக்கும் கொல்ல மேட்டுல வேர்க்கடலை சாகுபடி பண்ணணும்னிருக்கு. எங்கூட்டுக்காரரு கடனுக்கு உதவி செய்ய மாட்டாங்க. ஏ அண்ண வேற வந்து, வித்துப் போடுங்க, வூட்டக் கட்டுங்கன்னுதூபம் போடுறா! எனக்குக் கோபமா வருது. என்ன செய்யிறதுன்னும் புரியல. நீ ஒருத்திதா சாந்தி புரிஞ்சுக்கிற என்ன. அக்கம் பக்கம் ஒட்டு உறவு யாரும் தைரியம் குடுக்க மாட்டாங்க. அதென்ன, புருசன் சொல்றத மீறிச் செய்யிறதும்பாங்க. பொம்புளகோடு தாண்டக் கூடாது. சீத தாண்டினா, ஆனானா கஸ்டமும் பட்டாம்பாங்க. ஆ - ஊன்னா இதொரு கத. இன்னாதா ஆவுதுன்னு கால எடுத்து வைக்கத் துணிச்ச வரல. ஒரே வெறுப்பாருக்கு. இல்லாட்டி இப்பிடிக் காலங்காத்தால வூட்டப் போட்டுட்டு வாலறுந்த பட்டம் போல வந்திருக்க மாட்டே...” “சீ, இதென்னக்கா, நீங்க சின்னப் புள்ள போல விசனப்படுறீங்க. இங்க நீங்க வந்ததே சந்தோசம்க்கா. சிநேகம்ங்கறது. இதுதா. இப்ப என்ன, நீங்க பயிரு வைக்கக் கூடாதுன்னு சொல்றாங்களா, இல்ல, கடன் வாங்க உதவி பண்ண மாட்டேன்னு சொல்றாங்களா?” “ரெண்டுந்தா சாந்தி. கடன் இல்லேன்னா, நா எப்படிப் பயிரு வைக்கிறது?” “நீங்க முதல்ல நிலத்தப் பாருங்க. மண் பரிசோதனைக்கு அனுப்புங்க. மணிலாக் கொட்டை போடறதப் பத்திக் கேளுங்க.. அதுக்குள்ள யோசனை செய்யலாம்...” “அப்படீன்னு சொல்லுறியா சாந்தி...?” “ஆமாம்... முதல்ல ஒரு அஞ்சு நூறு போல புரட்ட வேண்டி இருக்கும். நா ஒரு அம்பது ரூபாச்சீட்டுக் கட்டுறே... பாக்கலாம். முன் வச்சகாலப் பின் வைக்க வேண்டாம். பயிர் வச்சிட்டோம்னா புடுங்கி எறியச் சொல்வாங்களா?” சாந்தியின் கைகளை நேசமாகப் பற்றிக் கொள்கிறாள். “வள்ளிக் கிழங்கு சாப்பிடுங்கக்கா...” மனத் தெம்புடன் வள்ளிக் கிழங்கை பிட்டுப் போட்டுக் கொள்கிறாள். நல்ல இனிப்பு. அந்த மனதுடனே அவள் வீடு திரும்புகிறாள். நெல்லு மிசின் பக்கம் தானாகக் கால்கள் நகருகின்றன. ஆயா பெருக்கிக் கொண்டிருக்கிறாள். புழுங்கல் நீர் கீழே ஓடி ஓடிப் புளித்த கள் வாடையாக மூக்கைத் துளைக்கிறது. “ஆயா கன்னிப்பன் இல்லையா?” “எங்கியோ அறுப்புன்னு போனா. வந்தா வாரச் சொல்லுறன்...” வீட்டில் மச்சான் மாப்பிள்ளை இருவரும் இல்லை. நீலவேனி வீட்டிலிருந்து இட்டிலி தோசை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார்கள். சட்டினி சிறு கிண்ணத்தில் இருக்கிறது. வாங்கி வந்த பாத்திரம் கழுவியிருக்கவில்லை. இவள் புருசன் குளித்துவிட்டுக் கிணற்றடியில் லுங்கியும், பனியனும் போட்டிருக்கிறான். அவரைப் பந்தலடியில் சரோசா நின்று காய் பறிக்கும் சுவாரசியத்தில் இருக்கிறாள். “இட்டிலி வாங்கின. ஏனத்தைக் கழுவி வைக்கிறதில்ல? டீ போட்ட வடிக்கட்டி, ஆத்தின ஏனம் எல்லாம் அப்படியே இருக்கு” என்று சிடுசிடுத்துக் கொண்டு அடுப்பில் ஓலைக் குத்தை செருகி எரிய விடுகிறாள். உலையைப் போடுகிறாள். அரிசியைக் கழுவிப் போட்டு, குழம்புக்குப் புளியை எடுக்கையில் அம்மா வருகிறாள். “கால நேரத்துல கோவிச்சிக்கிட்டு எங்கயோ போயிட்ட இப்ப பருப்புக் குழும்புக்குக் கூட்டவேணாம். கறி வாங்கிட்டு வாரன்னு போயிருக்காப்பல... ஆசையாச் சொல்லிட்டுப் போச்சி...” “அப்படியா? மச்சானும், மாப்புளயும் கறிக் குழம்புக்கு ஆசைப்படுறரா? சரி, நடக்கட்டும். பண்ணி ஊத்து...” என்று மனசுக்குள் சொல்லிக் கொள்கிறாள். பழைய சோற்றைக் கரைத்துக் குடிக்கிறாள். “அடுப்பப் பாத்துக்க. நா வாரேன்” என்று வெளியே கிளம்புகிறாள். அப்பன் சாவடியில் இருக்கிறார். “அப்பா ஒரு நிமிசம் வாங்க...! முள்ளுக் காத்தான் செடி சேலையை உராய்கிறது. “ஏம்மா?” “நா அந்தச் சின்னம்மா பூமில கடலக்காப் பயிர் வைக்கப் போறேன். நான் கத்துக்கிட்டாப் போல, செய் நேர்த்தி செஞ்சி வைப்பேன். இப்ப மண் பரிசோதனைக்கு அனுப்பணும். அத்தோட சர்வே நம்பர் வேணும்... தாங்க...” “இப்ப வேணுமா?” “ஆமா...” “நா இங்க நிக்கிற, நீங்க பாத்துக் கொண்டுட்டு வாங்க... மண்ண பரிசோதனைக்கு அனுப்புமுன்ன, சர்வே நம்பர்... விவரமெல்லாம் எழுதி அனுப்பணும்...” “சரிம்மா, நீ மண்ணு கொண்டிட்டு வா... நானே கொண்டிட்டுப் போய்க் குடுக்கறேன் ஆபிசில...” “அவங்களுக்குத் தெரிஞ்சா எதும் பேசுவாங்கப்பா, வானாம்... நானே போற...” ஆட்டுக்குக் குழை தேடி ஒரு பயல் கம்பும் இரு ஆட்டுக் குட்டிகளுமாகப் பார்த்துக் கொண்டு போகிறான். நிலத்தின் நடுவே நடக்கிறாள். சிறு சிறு பாசி பூத்தாற் போல் ஒரு திட்டுப் பச்சை. வானம் எப்போதோ பொழிந்ததுண்டு என்று நம்பிக்கை கொடுக்கிறது. செவந்தி அப்போது தான் எல்லையில் கண் பதிக்கிறாள். எல்லைக் கல்லை அடுத்த பூமியில் ஒரு நரைத்த மீசைக்காரர் அரை டிராயர் போட்டுக் கொண்டு நிற்கிறார். அங்கு கிணறு வெட்டுகிறார்கள் என்று தெரிகிறது. அந்த மண் யாருக்குச் சொந்தம் என்று அவளுக்குத் தெரியாது. கிணறு வெட்டி, வெளியே மண்ணும் பாறைச் சில்லுமாகக் குவித்திருக்கிறார்கள். இப்போதும் வேலை நடக்கிறது. மேலே கயிறு கட்டி, உள்ளிருந்து வரும் மண்ணை அரை டிராயர்க்காரர் வாங்கிக் கொட்டுகிறார். அடுத்த நிலத்தில் வசதியுள்ள யாரோ கிணறு வெட்டுகிறார். அதனால் இவளுக்கு நீர் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. செவந்திக்கு மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. வானை நிமிர்ந்து நோக்கி தெய்வத்தை நினைக்கிறாள். மண் பரிசோதனைக்கு மண் எப்படி எடுக்க வேண்டும்? கூடை, சிறு மண் வெட்டி, பாலிதீன் பை, ஆகிய சாமான்களைக் கீழே வைக்கிறாள். கூடையில் அந்த நோட்டு இருக்கிறது. ஒரு தரம் பிரித்துப் படிக்கிறாள். நிலத்தில் ஓரிடத்தை, மேல் பரப்பை மண் வெட்டியால் வெட்டிக் கொள்கிறாள். கன்னியப்பனுக்கு இதைக் காட்ட வேண்டும் என்று ஆசை. ஆனால் அவனைக் காணவில்லை. இவளே நன்றாகப் பல இடங்களில் வெட்டி மண்ணைப் பொல பொலப்பாக்குகிறாள். அவற்றைச் சேர்த்து ஒரு கூட்டல் குறி போடுகிறாள். இடைப்பட்ட நான்கு பகுதிகளில் இருந்தும், எதிர் எதிர் பகுதிகளில் இருந்து மண்ணை எடுத்துக் கொள்கிறாள். மறுபடியும் அதில் ஒரு கூட்டல் குறி போடுகிறாள். அப்போது அந்த அரை நிஜார்க்கார நரைத்த மீசைக்காரர்.அவளிடம் வருகிறார். “என்னம்மா? நீயும் கிணறு வெட்டப் போறியா? நாந்தா தனியாக இங்க கிணறு வெட்டப் போற. நீயும்...” “வணக்கம் ஐயா. நான் கிணறு வெட்டல. இது மண் பரிசோதனைக்கு அனுப்பத் தேர்ந்து எடுக்கறேங்க...” “அடஅப்படியா? எப்படி? எனக்குத் தெரியலியே?” அவள் ‘V’ வடிவில் தோண்டி மண்ணை எடுத்ததைக் காட்டுகிறாள். “இதை நாம் உழவர் பயிற்சி ஆபிசில் கொண்டுக் கொடுத்தால் அவங்க நம்ம மண்ணுக்கு என்ன சத்து வேணும்னு சொல்லுவாங்க... பாலிதீன் பையில போட்டு. அரை கிலோ போதும்ங்க... கட்டி, நம்ம சர்வே நம்பர், பேரு, அட்ரசு எழுதிச் சீட்டுக் கட்டணும்...” என்று காட்டுகிறாள். “ஆமா, இதெல்லாம் உங்களுக்கு யாரு சொன்னாங்க?” “என்ன அப்படிக் கேட்டீங்க! ‘தமிழ்நாடு பண்ணை மகளிர் பயிற்சி திட்டம்’னு ஒண்ணிருக்கு. டேனிடா ஆபீசில ஒரு பெரிய ஆபீசர் அம்மா இருக்காங்க. அவங்களும், நம்ம விவசாய ஆபீசருங்களும் சேர்ந்து எங்களைப்போல நிறைய பெண்களுக்கு அஞ்சஞ்சு நாள் பயிற்சி நடத்தி இதெல்லாம் சொல்லிக் குடுக்கிறாங்க. நான் முதல்ல பயிற்சி எடுத்ததும் கால் காணில நெல்லு, வெள்ளக் கிச்சிலி ஆடிப்பட்டம் போட்டு, ஒம்பது மூட்டை எடுத்தேங்க...” “ஆ...? உங்கூட்டில, நீங்கதா விவசாயம் செய்யிறவங்களா வூட்டுக்காரர் அண்ணந்தம்பி இல்லையா?” “இருக்கிறாங்கையா, அப்பா செய்வாரு. அவருக்கு வயசாச்சி. ஏகாம்பரம்னு பேரு. இத, இதக்கூட எங்க சின்னம்மா இருந்தப்ப, ஏரித் தண்ணி வந்து வெள்ளாமை கடலை கேவுறு போடுவாங்க. அவங்க பட்டணத்தோடு போயிட்டாங்க. அப்பாக்கு வயிசாயிடுச்சி, உழைக்க சிரமம். நாந்தா இப்ப இதுல மணிலா போடணும்னு தீவிரமா வந்திருக்கிறேன்.” “அக்கா, கூப்டனுப்பினிங்களாமே...?” “ஆமா... நா இங்கே இருப்பேன்னு ஆயா சொல்லிச்சா? நீ அறுப்புக்குப் போயிருக்கேன்னாங்க...?” “இல்ல வைக்கோல் கொண்டாந்து போர் போட்ட. வேல முடிஞ்சிச்சி வாரேன். அக்கா இங்க பயிர் வைக்கப் போறிங்க? இதா, இவங்க கூட கேணி தோண்டுறாங்க. தண்ணி வந்திருக்கு போல...?” “ஆ...” என்று சிரித்துக் கொண்டு மீசையை முறுக்கிக் கொள்கிறார். அவள் அப்பனுக்கு மீசை கிடையாது. இவருக்கும் அப்பன் வயசு இருக்கலாம். ஆனால் தாட்டியாக, உயரமாக இருக்கிறார். காதோரம் மட்டுமே கம்பிகள் போல நரை இழைகள். கிருதாவும் வெளுப்பு. மற்ற இடங்கள் வழுக்கை. பார்த்தால் படித்து விவரம் அறிந்தவர் போல் இருக்கிறார். ஆனால் கூட நான்கு பேரை வைத்து வேலை வாங்காமல், இவரே வேலையாளுக்கு சமமாக மண் வாங்கிக் கொட்டுகிறார். “ஏம்மா, இவரு யாரு? தம்பியா?” “தம்பி போலதா. ரொம்ப வேண்டியவரு. இவுரு ஒத்தாச இல்லன்னா நா ஒண்டியா வெள்ளாம செய்யிறது சிரமம். ஏங்க நா தரிசாக் கெடக்குற இந்த பூமில வெள்ளாம பண்ணனும்னு வாரப்ப நீங்க கேணி வெட்டிட்டிருக்கீங்க, நல்ல சவுனம். எனக்கும் தண்ணி குடுப்பீங்களா? தண்ணி எப்படி வந்திருக்கா?” மீசைமுறுக்குவது இவர் வழக்கம் போல. ஏனோ சிரிப்பு வருகிறது. அவர் நகர்ந்து சென்று, “வா வந்து பாரு!” என்று கூப்பிடுகிறார். செவந்தி சென்று குனிந்து பார்க்கிறாள். உள்ளே கோவணம் மட்டும் உடுத்திய இரண்டு ஆட்கள் இருக்கிறார்கள். மேலே இதற்குள் இன்னோர் ஆள் வந்து கல் மண் தொட்டியை வாங்கிக் கொட்டுகிறான். உள்ளே சேரும் நீருமாக முழங்கால் அளவு இருக்கும் என்று தோன்றுகிறது. பதினைந்து இருபதடிக்குள் தான் தோண்டி இருக்கிறார்கள். தண்ணிர் வருகிறது... “ஏரிக்கால் இல்ல? இதா கூப்பிடு தூரத்துல ஏரி. முன்னெல்லா தண்ணி எப்பவும் கிடக்குமாம். இப்ப அந்தப் பக்கமெல்லாம் பாக்டரிக்காரங்க வூடு கட்டிட்டாங்க. பெரிய ஸ்கூல் ஒண்ணிருக்கு. போர்டிங் ஸ்கூல். அவங்க வேற முந்நூறு ஏக்கர் வளச்சிட்டிருக்காங்க...” “ஏம்மா, நீ சொன்ன பயிற்சி ஆம் புளங்களுக்கு இல்லியா?” செவந்தி நின்று யோசிக்கிறாள். “ஆம்புளங்களுக்கு ஏற்கனவே இருக்குங்க. எஃப்டிஸியோ என்னமோ சொல்றாங்க. ஆனா, தான்வா பொம்புளங்களுக்கு மட்டுந்தா. சிறு விவசாயிங்க, பொம்புள நிலத்தில வேல செய்யிறவங்களுக்கு இது சொல்லிக் குடுக்கிறாங்க...” “நா... பட்டாளத்துல இருந்தவ. வெட்டுவ கொத்துவ, எல்லா வேலயும் செய்வே. ஆனா வெள்ளாம சூட்சுமம் தெரியாது. இது என் தங்கச்சி நிலம். அவளுக்குப் புருசன் இல்ல. ஒரே ஒரு பொண்ணு இருக்கு. இந்த நாலு ஏக்கரா போல, ஏதோ ஆளவச்சி வெள்ளாம பண்ணேன்னா ஒண்ணுந் தேறல. இப்பதா நா ஓய்வு பெற்று வந்திட்டே. ஒரு கேணி எடுப்பம்னு வந்திருக்கே...” “அதுனால என்னங்க? நீங்க என் அப்பனப் போல இருக்கறீங்க. இதொண்ணும் பெரி... விசயம் இல்ல. எப்படிப்படி பண்ணணும்னு நாஞ் சொல்ற முதல்ல ஏக்கருக்கு எட்டு செண்டு நாத்தங்கால் வுடனும். நீங்களும் மண் பரிசோதனைக்கு நாஞ் சொல்றாப்பல மண்ணெடுத்து அனுப்புங்க. பூமி தங்கச்சி பேரில தான இருக்கு?” “இது சொல்லப் போனா, என் பூமிதா. எம் பய்யனதா தங்கச்சி மகளுக்குக் குடுத்துப் படுவெட்டாப் போய் சேந்தா... அதொரு சோகம். அதென்னத்துக்கு இப்ப...? இனி அத அந்தப்புள்ள பேரில எழுதி வச்சிடுவ. ஒரு புள்ள, மூணு வயசு போல இருக்கு... அதுவா ஆசப்பட்டு, கலியாணம் கட்டிக்கிறதுன்னாலும் அவங்க அனுபவிக்கணும்.” குரல் கரகரக்கிறது. “ஐயா, உங்களுக்கு எத்தினி பெரிய மனசு? பொம்புள பேருக்கு நிலம் யாருமே எழுதறதில்ல. உரிமையோடு இருக்க வேண்டிய நிலத்தக் கூட அவ பேருக்கு எழுதறதில்ல. இத, இந்தபூமி எங்க சின்னம்மாக்குச் சேர வேண்டியதுங்க. அவங்க புருசனும் செத்திட்டான். வாழவே இல்ல. ஒரு பொம்புள புள்ள அவங்கப்பா எங்க பாட்டனே அவ வேற கலியாணம் கட்டிக்கிட்டா, பூமி கைய வுட்டுப் போயிடும்னு எங்கப்பா பேருக்கு எழுதிட்டாரு. இப்ப இந்த பூமி எங்கூட்டுக்காரரு பேருல இருக்கு... எனக்கு லோன் வாங்கணுமின்னா, அவரு சம்மதிக்கணும், கையெழுத்துப் போடணும். பெரிய ரோட்ல, சைகிள் கடை வச்சிருக்காரு. வெள்ளாமையில் கொஞ்சம் கூட இஸ்டம் இல்ல. ஏங்க சோறு போடுற மண்ணவுட்டுப் போட்டு வேற என்ன தொழிலச் செய்ய?” “செவுந்திங்க?” அவருக்கு மண் பரிசோதனை செய்ய பத்து இடங்களில் இருந்து ‘V’ என்ற மாதிரியில் வெட்டி அந்த உட்புற மண்ணைச் சேர்க்கிறாள். பிறகு கூட்டல் குறிபோட்டு எதிரும் புதிருமான பகுதி மண்ணைச் சேர்த்து அதில் கூட்டல் குறியிட்டு கடைசியில் அரை கிலோ மண் வரும் வரையிலும் அதைக் குறைக்கிறாள். நேரம் போனதே தெரியவில்லை. கன்னியப்பனுக்கும் மண் பரிசோதனை காட்டியாயிற்று. வயிறு பசி எடுக்கிறது. ஆனால் மிக உற்சாகமாக இருக்கிறது. உள்ளூர அவள் செய்து கொண்ட உறுதி மேலும் வலிமை பெறுகிறது. நம்பிக்கை ஒளி தெரிகிறது. “கன்னிப்பா, இங்கமின்னப் போல, கொஞ்சம் காக்காணி, நெல்லும் போடுவம். தண்ணி பட்டாளத்துக்காரரு தருவாரு. அந்த மண்ணுல நவரைப்பட்டமா வேர்க்கடலை போடுறது. அதுக்கு அப்பா லோன் எடுத்துத் தருவாங்க. அன்னைக்கு அந்த மாநாட்டுல அஞ்சல அம்மான்னு ஒருத்தர் சொன்னாங்க. பயிரை மாறி மாறிப் போடணும்னு. நெல்லு விதச்சஇடத்துல கடலை போடுவோம்.” “சரிங்கக்கா....” இவள் கூடையில் பிளாஸ்டிக் பை மண்ணைப் பத்திரமாக வைத்துக் கொள்கிறாள். வீட்டுக்குச் சென்றதும் சர்வே நம்பர், விலாசம் எழுதிக் கட்டி ஆபிசில் கொண்டு கொடுக்க வேண்டும்... அவர்கள் கிளம்பு முன் பட்டாளக்காரர் கூப்பிடுகிறார். “செவந்தியம்மா! வாங்க!” “என்ன அப்படி சொல்லாம கொள்ளாம போறீங்க, செய்யிறத எல்லாம் செஞ்சி போட்டு?” “சடையா, பூசை சாமானெல்லாம் எடுத்து வையி” கிணற்றடியில் ஓர் இலைப் பரப்பி, அதில் பொரிகடலை, பழம் வெல்லம் வெற்றிலை பாக்கு வைக்கிறார்கள். கேணித் தண்ணிர் ஒரு செம்பில். உள்ளே இருந்த இரு ஆட்களும் வெளியே வந்திருக்கிறார்கள். சடையன் என்று பெயர் கொண்ட ஆள், அவற்றைப் பூமிக்கும் வானுக்கும் நீருக்கும் படைக்கிறான். “சாமி, தண்ணியும் பூமியும் மானமும் எங்களுக்கு என்னைக்கும் பக்க பலமா இருக்கணும்... பொங்கிப் பொழியணும். நல்லா வைக்கணும். ஊரு உலகம் சுபிச்சமாகணும்...” எல்லோரும் கும்பிட்டு நிற்கிறார்கள். வெல்லமும் பொரியும் கடலையும் நெஞ்சமெல்லாம் அன்பாய்ப் பரவுகின்றன. |