உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
2 வயல் வரப்பு, நீர் ததும்பிய கோலம், பசுமை... என்றுமில்லாத உற்சாகம் பொங்கி வழிகிறது. நீலவேணி, கன்னியப்பனின் ஆயா, அம்சு எல்லோரும் வந்திருக்கிறார்கள். ‘செவந்தியக்கோ!’ என்ற கூவல் ஒலி கேட்கிறது. வரப்பின் ஓரத்தில் சுமையை இறக்க நீலவேணி வருகிறாள். இவளும் ஒரு உறவு முறைக்காரி. ரங்கனுக்குச் சின்னம்மாள் மகளாக வேண்டும். இருந்த பூமியை விற்று, பட்டணத்துக்குக் கொண்டு போய் பிஸினஸ் பண்ணித் தொலைத்து விட்டான். இவள் கூலி வேலை செய்கிறாள். “யக்கோ...!” “ஓ... சாந்தி...! வாங்க வாங்க...! கன்னிப்பன் வந்து சொன்னாரா?” “இல்ல... உங்களத்தான் வங்கி முன்ன பார்த்தனே? எல்லாம் வாங்கிட்டுப் போனீங்க. இன்னைக்குப் புதன்கிழமை - பயிர் வைப்பீங்கன்னு, புள்ளங்கள ஸ்கூலுக்கு அனுப்பிச்சிட்டு ஓடு வந்தேன்.” கையில் மூங்கில் பிளாச்சில் பட்டையும் எழுத்துக்களுமாகத் தாங்கி நிற்கும் அறிவிப்பை சேற்றில் குத்தி வைக்கிறாள். “ஏய் என்ன இது?” “தான்வா மகளிர் பண்ணை...” ‘ஹோ’ என்ற சிரிப்பு! “காக்காணி பண்ணையாயிடிச்சா?” “காக்காணியோ அரைக்காணியோ, இது தான்வா மகளிர் பண்ணைதான்...” “அது என்னக்கா, தான்வா...” அம்சு அதைப் படித்துவிட்டுக் கேட்கிறாள். “இங்கிலீசில், தமிழ்நாடு விமன் இன் அக்ரிகல்ச்சர் என்று இந்தத் திட்டத்துக்குப் பெயர். இப்ப நாமளும் காலம் காலமா உழுவதும், நாத்துப் போடுவதும், நடவும், கள பறிக்கிறதும், அறுப்பறுக்கிறதும் பாத்திட்டு வாரோம். முன்னக் காலத்துல தொழு உரம், சாம்பல் இதுங்கதா தெரியும். அப்புறம் யூரியா பொட்டாஷ்னு போட்டாங்க. பூச்சி புகையான் மருந்தடிச்சாங்க... இப்ப, இதுங்களிலே சின்னச் சின்ன நுணுக்கங்கள் கையாண்டா, பயிர் நல்லா வருது, களை பூச்சியெல்லாம் கட்டுப்படுத்துதுன்னு கண்டிருக்காங்க” என்று சாந்தி விளக்குகிறாள். கன்னியப்பனின் பாட்டி வரப்பில் குந்தி வெற்றிலை போடுகிறாள். “நீங்க வேற நோட்டு எடுத்திட்டு வந்திருக்கிறீங்களா...?” “ஆமாம்...” “என்ன கன்னிப்பா...?” செவந்தியும் சாந்தியும் வந்து பார்க்கிறார்கள். குளம் போல் மண்ணை வெட்டி வரைகட்டி, அதில் நுண்ணுயிர் உரத்தைக் கலக்கியிருக்கிறான். பாக்கெட் வெற்று உரையாகக் கிடக்கிறது தடத்தில். நாற்று முடிகள், அதில் உரம் பெறுகின்றன. எட்டு முடிகள். “அக்கா நேத்து ரெண்டு கிலோ ஜிப்சம் மணலில் கலந்து நாத்தங்காலுக்குப் போட்டீங்க...” “பின்ன? விதை செய் நேர்த்தி செய்து நாற்றங்கால் போடலே. இது சும்மா அப்படியே போட்டது. ஆனா, மத்ததெல்லாம் கரெக்டா பாத்துட்டு வாரேன். நடவு வயலில் இரவு நீர் பாய்ந்திருக்கிறது. காலையில் உழவோட்டி இருக்கிறான்.” சாந்தி தொழு உரம், சாணி உரம், மணல், பொட்டாஷ், யூரியா, ஜிப்சம், அஸோஸ்பைரில்லம் எஞ்சிய பாக்கெட் எல்லாம் கலந்து சேலையைத் தூக்கிச் செருகிக் கொண்டு விசிறுகிறாள். செவந்தி பாதியும், இவள் பாதியுமாக இதை முடித்து விடுகிறார்கள். பிறகு, முளைகளை எட்டடிக்கு ஒன்றாக நடுகிறார்கள். அதில் கயிறைக் கட்டுகிறார்கள். கயிறோரமாகக் கோடு போட்டாற் போல் சாந்தியும் செவந்தியும் நாற்றுக்களை வைத்துக் காட்டுகிறார்கள். “அஞ்சாறு எடுத்துக் குத்துக் குத்தா வைக்க வேணாம் ஆயா? ரெண்டோ மூணோ போதும்...” இடையில் ஓரடி விட்டு மீண்டும் எட்டடிப் பாத்தி. முளை அடித்துக் கயிறு கட்டுவதில் கன்னியப்பனும் பங்கு கொள்கிறான். “இது எதுக்கு இப்படி? வருசா புடிச்சி குத்துக் குத்தா வச்சிட்டு வந்தா பத்தாதா?” என்று பாட்டி முணுமுணுக்கிறாள். “இல்ல ஆயா, இப்ப ஓரடி உடறதால, இடையில நிக்க, பாக்க எடம் இருக்கும். நாத்த, பயிர முதிக்க வேணாம்.” கிடுகிடென்று எட்டடிக்குள் நாற்றுக்களை விரைவாக அம்சு வைக்கிறாள். “இருங்க, இருங்க!” என்று செவந்தி சைகில் டயரைக் கொண்டு வந்து நட்ட பயிர்களிடையே போடுகிறாள். உள்ளே எண்ணுகிறாள். இருபது குத்துகள் இருக்கின்றன. “பரவாயில்லை. இப்படியே இருக்கட்டும்.” “இது எதுக்கு அக்கா?” “நெருக்கமாயிருந்தா, காத்துப் போக, நல்லா வளர இடம் இருக்காது. மனுஷங்களைப் போல பயிருக்குக் காத்து வேணுமில்ல?” விருவிரென்று வேலை நடக்கிறது. வெயில் விழுவது தெரியாமல் குளிர் சுமந்த சூழல். உற்சாகம்... சாந்தி... பத்துப் படித்த பெண். தோற்றம் பார்த்தால் கழனி வேலை செய்பவள் என்று சொல்ல மாட்டார்கள். புருசன் ஏதோ போட்டோக் கடையில் உதவியாளனாக இருக்கிறானாம். கொல்லை மேடு என்று சொல்லும் மானாவாரி பூமிதான் அரை ஏகரா இருக்கிறதாம். “தண்ணி இருந்திச்சின்னா, நாங் கூட உடனே செஞ்சி பாதுடுவ. எங்க நாத்துனாருக்கு அரைக் காணி இருக்கு. அது வேப்பேரில டீச்சரா, இருக்கு. அவ மச்சான் பாக்குறாரு, அவங்ககிட்டக் கேட்டு பயிரு வைக்கணுமின்னு ஆசை...” என்று சொல்கிறாள். “ஆயாதா முத நாத்த வச்சிருக்கு. அது வளரட்டும்... பாப்பம்... கன்னிப்பனில்லாம போனா இந்தப் பயிர் கூட வைக்கிறதுக்கில்ல...” “அவுரு உங்க சொந்தக்காரரா அக்கா?” “சொந்தத்துக்கு மேல. பாட்டிக்கு மக வயித்துப் பேரன். அம்மா அப்பா ரெண்டு பேரும் செத்துட்டாங்க. ஏழெட்டு வயசுப் பையனா, இங்க ஆயி வந்தாக. கூலி வேலை செஞ்சே காப்பாத்தியிருக்காங்க. எங்கூட்டுக்காரருக்குத் தா பயிரு வேலையில் நாட்டமில்ல. பன்னண்டு வயசிலேந்து உழவோட்டுவான், சேடை போடுவா, மாட்ட அவுத்திட்டுப் போயி, கட்டி, எல்லாம் அவந்தா.” “படிக்கலியா?” “படிச்சா, அஞ்சோ, ஆறோ... அப்பவே சம்பாதன வந்திட்டது. இப்ப உழவாளுங்க எம்பது ரூபால்ல வாங்கறாங்க? ஆளு கிடைக்கல?” “உழவு மட்டும்தான அவுங்க செய்யிறாங்க? அண்டை வெட்டுறதிலேந்து, நாத்து நடவு, களை பறிப்பு, அறுவடை வரை பொம்பிளங்க செய்யலியா?” ஒரு பத்தி முழுவதும் நட்டு விட்டார்கள். வரப்பில் இருந்து பார்க்க, அழகாகப் பாய் விரித்தாற் போல் இருக்கிறது. “இதுக்குள்ள காவாசி ஆயிருக்கும். இதென்னாடி! கோடு போட்டாப் போல நடுறதும்?” என்று ஆயா சலித்துக் கொள்கிறாள். “பயிறு என்ன கிச்சிலிச் சம்பாதான?” என்று கேட்கிறாள் சாந்தி. “ஆமா. வெள்ளக் கிச்சிலின்னு போட்டாங்க. நாத்து வேர் அறுகாக வந்திருக்கில்ல? நேத்து 2 கிலோ ஜிப்சம் மணலில் கலந்து தூவினேன். நாத்து நல்லா வந்திருக்கு...” சுந்தரி போசியில் காபியுடன் வருகிறாள். சுந்தரி... பாவம் அவள் தான் கைக்கு உதவி. இவளுக்குச் சின்ன அத்தானை அவள் கட்டினாள். செயலான இடம். இருபது சவரன் போட்டு, பண்ட பாத்திரங்கள் கொடுத்துக் கட்டினார்கள். அந்த அத்தானும் மண்ணில் வேலை செய்யவில்லை. லாரி ஓட்டப் போனான். அவ்வப் போது வரும் போதும், பூவும் பழமும் அல்வாவும், துணிகளும் அமர்க்களப்படும். அத்துடன் சகவாசம் கெட்டது தெரியவில்லை. குடித்தான். குடித்துவிட்டு லாரியை ஓட்டிப் படுவெட்டாகப் போய் சேர்ந்தான். ஐந்து வருசம் ஆகிறது. லாரி முதலாளிகள் நட்ட ஈடென்று ஒரு சல்லிக்காசு தரவில்லை. வீடு சொந்தம். இவர்கள் பிரிவினையில் வந்த ஒரு ஏக்கரா பூமி இருக்கிறது. அதையும் போக்கியத்துக்கு விட்டு, இரண்டு பிள்ளைகளுடன் வாழ்கிறாள். இவள் கணவனிடம் சரளமாகப் பேசுவாள். சொந்தம் கொண்டாடுவாள்... ஓர் ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள். ஒன்றுக்கு ஏழு வயசு. அவன் போகும் போது ஆறு மாசமாக இருந்தான். அதற்கு அப்பன் முகமே தெரியாது... “காப்பி வந்திடிச்சி. வாங்கடீ...!” சுந்தரி வந்து பார்க்கிறாள். “யா... அழவா இருக்கு, இது ஒரு சைசா...” என்று நடுவில் ஓரடி விட்ட ஓடையில் நின்று கொண்டு, சாந்தி டயர் போட்டு குத்துகளை எண்ணுவதைப் பார்க்கிறாள். “செவந்தி அக்கா, இந்தவாட்டி நல்லா வெளஞ்சா, நானும் பயிர் வைக்கிறேன். ஏன் போக்கியத்துக்கு வுடணும்?” “உன் அத்தான் சவால் வுட்டுருக்காரு. பார்ப்பம்... காபித் தூளு இல்லியே? வாங்கி வரச் சொன்னியா?” “இல்லக்கா, டீத்தூளுதா இருந்திச்சி, போட்டேன். சரோசா ஸ்கூல் போயிட்டது அப்பமே. சரவணன் செத்த மின்னாடி அத்தான் கூட சைக்கிள்ல உக்காந்திட்டுப் போனான்.” “மாமாவுக்குக் கஞ்சித் தண்ணில உப்புப் போட்டுக் குடுத்தே. வெந்நீர் வச்சித்துடச்சிட்டு, வேற துணி மாத்திட்டு உட்கார்ந்திருக்காரு...” எல்லாரும் கரையேறி, தேநீர் குடிக்கிறார்கள். ஆயா தனக்குத் தேநீர் வேண்டாம் என்று சொல்கிறாள். “எனக்கு வெத்திலக் காசு மட்டும் குடுத்திடு!” “வேணி, இன்னிக்கி டிபன் போடலியா?” “கொஞ்சம் அரை லிட்டர்தான் போட்டே நேத்து. அம்மா தட்டி வச்சிடும். கிரைண்டர் எதுனாலும் வாங்கினா சல்லிசா இருக்கும். முடியலம்மா!” என்று உட்காருகிறாள் நீலவேணி. பூமியைத் தோற்றுவிட்டு, டிபன் கடை வைத்துப் பிழைப்பு நடக்கிறது. “உங்கூட்டுக்காரர் என்னதா செய்யிறாரு?” “அதெல்லாம் கேட்காதீங்க; ரகசியம்...” என்று அம்சு கிண்டுகிறாள். “எல்லாருக்கும் பட்டணம் போனால் காசை வாரிக் கொட்டலாம்னு கனா. பட்டாலும் புத்தி வரல... இப்பவும் மைக்கு செட்டு வாங்கினா நல்ல கிராக்கின்னு அம்மாகிட்டச் சொல்லிட்டுருக்காரு. வூட்டுக்குக் கூரை மாத்தனும். இவுரு மண்ணத் தொட வாணாம். இதே டிபன் போடுற பிசினஸ்ல கூடக் கொஞ்சம் ஒத்தாசை செய்யலாம்...” “அதுல என்ன ஒத்தாசை செய்வாரு? மாவாட்டுவாரா?” “ஒரு கிரைண்டர் வாங்கிப் போடலாமில்ல? ஒரு கணக்கெழுதி வைக்கலாமில்ல? அட கடவீதிப் பக்கம் ஒரு எடம் புடிச்சி, கடை போடலாமில்ல? வங்கில லோன் வாங்கித் தரலாமில்ல? ஆம்புள இருந்திட்டு பொம்புளயே எல்லாம் செய்யிறதுன்னா?” “வேணி, நீ சும்மா இரு. பொம்புளங்க நிச்சியமா எதானும் பண்ணுவம். அப்ப புத்தி வரும்” என்று முடிக்கும் செவந்தி எழுந்திருக்கிறாள். சுந்தரி வீட்டுக்குப் போகிறாள். இவர்கள் களத்தில் இறங்குகிறார்கள். இந்த நடவு பழக்கமில்லாததால் கொஞ்சம் நேரம் தானாகிறது. “நட்ட மூணாம் நாள்... வெள்ளிக்கிழமை... களைக் கொல்லி போடணும். நினைப்பிருக்கா? பூடாக்ளோர் வாங்கி வச்சிருக்கீங்களா?” என்று சாந்தி நினைப்பூட்டுகிறாள். “எல்லாம் செட்டா வாங்கிட்டேன். கால் லிட்டர், மணலில் கலந்து, கையில் உரை போட்டுக் கிட்டுத் தெளிக்கணும். உரை கூட இருக்கு. மூணாம் நாளா, அஞ்சாம் நாளான்னு சந்தேகமாயிருக்கு.” “நீ என்ன எழுதியிருக்கிறே சாந்தி?” “பாத்துக்கலாம்...” செவந்திக்கு இப்போது ஒரு புதிய பிரச்னை தலை நீட்டுகிறது. இவர்கள் எல்லோருக்கும் சோறு போட்டு தலைக்குப் பதினைந்து ரூபாய் கொடுப்பாள். கன்னியப்பனுக்கு அறுபது ரூபாய். அவனிடத்தில் அவளுக்குத் தனியான பரிவு எப்போதுமே இருக்கிறது. மண் என்றால் துச்சமாகக் கருதும் ஆண்களைப் பார்த்த அவளுக்கு அவன் வித்தியாசமாக இருக்கிறான். அப்பன் பெயருக்கு உழவோட்டி, பயிர் வைத்தாலும் கன்னியப்பனைப் போல் பொறுப்பாக யார் பார்ப்பார்கள்? உழவு மாடுகள், ஏர் எல்லாம் அவன் உடமைகள் போல் கையாளப்படுகின்றன. அவன் பெரிய இங்கிலீஷ் படிப்புப் படிக்காவிட்டால் என்ன? இந்த வீட்டுக்கு, விவசாயக் குடும்பத்துக்கு ஒட்டுபவனாக ஒரு வாரிசு வேண்டும். இந்த சரோசாவின் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். கன்னியப்பனைக் கட்டி வைத்து விடலாம். வீட்டோடு உரிமையாகக் கைக்கு உதவும் பிள்ளையாக... இதுதான் பெரிய சொத்து... கன்னியப்பன் தான் போய்ச் சோறு கொண்டு வருகிறான். சுந்தரியும் வருகிறாள். பணப்பையும் வருகிறது. நடுவில் யாரும் சாப்பிட ஏறவில்லை. மூன்றரை மணியோடு முடித்து விடுகிறார்கள். பிறகு தான் கலந்து வந்த குழம்புச் சோற்றை உண்டு பசியாறுகிறார்கள். சாந்திக்குப் பதினைந்து ரூபாய் கூலியை எப்படிக் கொடுக்க? மற்றவர்கள் கூலிக்கு வேலை செய்பவர்கள். சாந்தி... ஆனால் எதுவும் கொடுக்காமல் இருக்க முடியுமா? ஒரு ஐந்து ரூபாயும் ஒரு பத்து ரூபாயும் வைத்து நீட்டுகிறாள். அவள் முகத்தில் உணர்வுகள் மின்னுகின்றன. கையால் தள்ளுகிறாள். “இருக்கட்டும் அக்கா... நான் இப்படித் தொடங்குறப்ப நீங்க முதல்ல வந்து ஒத்தாசை செய்யணும். இப்ப வச்சிக்குங்க! பணம்னு அத்தோட உறவு போகக் கூடாது. நம்ம சிநேகம் பெரிசா வளரணும்...” “ஐயோ... என்ன இது சாந்தி...?” “வையுங்க சொல்றேன்... பிள்ளைங்க ஸ்கூல்லேந்து வந்திடுவாங்க. நான் வாரேன்...” தான்வா மகளிர் பண்ணை அறிவிப்பை எடுத்துக் கொள்கிறாள். அவள் விடுவிடென்று வரப்பில் நடக்கிறாள். எட்டி முள் முருங்கை மரத்தின் பக்கம் வைத்திருக்கும் சைக்கிளை எடுத்துக் கொண்டு அவள் போவதையே பார்க்கிறாள் செவந்தி. “ஏ, செவந்தி? யாரு அந்தம்மா? கழனிக்குச் சைக்கிள்ல வார பொம்புளய இப்பதா பாக்கிறே!” என்று வியந்து பேசினாள் வேணி. “ரொம்பக் கெட்டிக்காரி. நல்ல குணம். நான் முந்தா நா வங்கில பார்த்துச் சொன்னே. வந்து ஒரு நாள் வேலை செஞ்சிட்டுப் போயிட்டது...” “நா இதுக்கு மின்ன பாத்த நினைப்பில்ல... எந்தப் பக்கம்?” “ஆவனியாபுரம் காலனின்னு சொல்லிச்சி...” என்று அலட்சியமாக ஆயா பாக்கைக் கடிக்கிறாள். “ஓ...?” குரல் ஓங்கித் துவண்டு விழுகிறது. “அதான பாத்தேன்! காலனிப் பொம்புள...! ஓ... அவளுவ நடை உடயப் பாரு. பேச்சப் பாரு! எங்கியோ ஆடுமாடக் கடிச்சிட்டுக் கிடந்து...” “ஆயா!” என்று செவந்தி சுள்ளென்று விழுகிறாள். “இப்படி எல்லாம் பேசாதீங்க! அவங்களும் நம்மப் போல மனுசங்க... இனிமே யார்ன்னாலும் இப்படிப் பேசுனா, எனக்குக் கெட்ட கோபம் வரும்.” “என்ன கோபம் வரும்? ஆயிரம் பேசுனாலும், அவ சாதி சாதிதானே?” “இல்ல, எல்லாம் மனிச சாதி!” “அவள உன் வீட்ல கூட்டிப்ப. நீ அவ வீட்ல போயிச் சோறு எடுப்ப?” “ஆமாம், எடுப்பே! இந்தச் சேத்தில் நின்னு பச்சையத் தொடுற நாமெல்லாந்தா ஒரே சாதி. ஒசந்த சாதி! இனிமே இப்படிப் பிரிச்சிப் பேசாதீங்க! நாங்க டிரெயினிங் எடுத்தம். யார் என்ன சாதின்னு தெரியாது. யாரு இந்து, யாரு கிறிஸ்ட்தியன், யாரு அல்லான்னு தெரியாது. எங்களுக்குச் சொல்லிக் குடுத்த மேடம் என்ன சாதின்னு தெரியாது. எல்லாரும் பொம்புளங்க. எல்லாரும் நோவும் நோம்பலமும் மாசந்தோறும் அனுபவிக்கிறவங்க... வாங்க போவலாம்.” இந்த ஓர் எழுச்சியில் பத்தி நடவுப் புதுமையைப் பார்த்து அறிவிக்கும் அழகுணர்வு சிதைந்து போகிறது. அலுமினியக் கூடை, சாமான்கள் டயர் எல்லாவற்றுடனும் செவந்தி வீடு திரும்புகையில் சூரியன் மலை வாயில் விழுந்தாயிற்று. |