8

     பயிர் கதிர் அடைத்து நெஞ்சை இதமாக வருடுகிறது. மழையில் செழித்து, ஒரே சீராக, நட்டபோது எப்படி அழகாக பாய் விரித்தாற் போன்று பத்தி நடவு என்று வயல் கொஞ்சியதோ, அப்படியே இப்போதும் முத்துச் சொரியக் கொஞ்சுகிறது.

     கதிர்கள் குஞ்சம் குஞ்சமாக... ஏதோ முத்துக்கள் பிரிவந்தாற் போல், இளங் காற்றிலும், இள வெயிலிலும் அசைந்து பயிரின் சிறப்புக்குக் கட்டியம் கூறுகின்றன.

     இதற்குள் ஒரு களை, இரண்டு களை என்று எடுத்திருப்பார்களே? அவ்வப்போது வந்து பார்த்து ஒன்றிரண்டு தலை நீட்டும் களை, புல்லைத் தவிர, ஆள் வைத்து எடுக்க மண்டவேயில்லை. சரியாகக் கணக்குப் பார்த்து, பதினைந்து, இருபத்தைந்து, முப்பத்தைந்து என்று மேலும் ஒரு முறையும் உரமிட்டிருக்கிறாள். பூக்கும் பருவம், முப்பத்தைந்துக்குள் சுவர்ண வாரிக்கு உரமிட்டு விட வேண்டும். சம்பாப் பயிரானதால், நாட்களை எட்டிப் போடலாம். கடைசி உரம் போட்டாயிற்று.

     விடிந்தால் தீபம்.

     இந்த வருசம், தை பிறப்பதற்கு முன்பே அறுப்பறுத்து விடலாம் என்று கணக்குப் போடுகிறாள். எப்போதும் தை பிறந்த பின்னரே, அறுப்பறுப்பார்கள். இந்தப் புதிய முறையில், பொங்கலுக்கு இரண்டு மூன்று நாட்கள் முன்பே அறுப்பறுத்து, புதிய கதிர் உதிர்த்து, அந்த மணிகளில் பொங்கல் வைக்கலாம். சாமி புண்ணியத்தில், இந்த விளைச்சல் நன்றாக வந்து விட்டால், இவள் தேறி விடுவாள். அகலக்கால் வைக்கலாம்.

     தீபத் திருநாள் சாமி கும்பிடும் நாள்தான். ஆனால், இந்த ஆண்டு போல் உற்சாகமாக இருந்ததில்லை. மழை பெய்யும்; பூச்சி அண்டியிருக்கும்; புகையான் பற்றி இருக்கும். இந்த ஆண்டு ஊக்கமாகச் சாமி கும்பிட, அதிகாலையிலேயே விழிப்பு வந்து விடுகிறது.

     பரபரவென்று அன்றாட வேலைகளை முடித்து, வீடு மெழுகி துடைக்கிறாள். தலை முழுகி, வேறு சீலை மாற்றிக் கொள்கிறாள். சுவரில், சாமி கும்பிடும் இடத்தில், மஞ்சட் குங்குமம் கொண்டு வட்டமும் சதுரமுமாகச் சாமி சின்னம் வைக்கிறாள்.

     அடுப்பில் இட்லிக்கு ஊற்றி வைத்துவிட்டு, அரியுமனையை எடுத்து வைத்துக் கொள்கிறாள். ரேடியோவில் உழவர்களுக்கு ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று நினைவு வருகிறது. சாந்திதான் இதை நினைவுபடுத்துவாள். ‘அக்கா, காலம சொல்லுவாங்க. இன்னிக்கு எப்படி வானிலை இருக்கு. இந்தப் பருவத்தில் என்ன போடலாம், எப்படிப் பயிர் பராமரிப்பு பண்ணலாம்னு சொல்லுவாங்க...ன்னு, கேளுங்க...’ என்பாள். ஆனால் செவந்திக்கு ஏனோ அந்த ரேடியோவே பிடிப்பதில்லை.

     “சரோ... ஏ. சரோ...? அந்த ரேடியோவை எடுத்திட்டு வாங்கே?”

     சரோ வரவில்லை. அம்மாதான் சாமான்களைத் துலக்கிக் குறட்டில் கொண்டு வந்து கவிழ்த்துகிறாள். முற்றம் நசநச வென்றிருக்கிறது.

     “எதுக்கு இப்ப ரேடியோ? உனுக்குத்தாம் புடிக்காத?” என்று முணுமுணுத்தவாறே சரோ ரேடியோவை எடுத்துக் கொண்டு கண்களையும் கசக்கிக் கொண்டு வருகிறாள்.

     “இந்தா...!”

     “நீ வையி. உழவர்களுக்கு ஒரு வார்த்தை...”

     அவள் திருப்புகிறாள். பாட்டு வருகிறது... அப்பள விளம்பரம் வருகிறது...

     “எத்தினி மணிக்கு அது வரும்?”

     “உனக்குத் தெரியாதா? சாந்தி சொல்லிச்சி, நிதம் கேளுங்கக்கா, அது நமக்கு உபயோகமாயிருக்கும்னு...”

     அவள் அதைப் பக்கத்தில் வைத்துவிட்டுப் போகிறாள்.

     காச நோயைக் கட்டுப்படுத்தச் சிகிச்சைப் பற்றி யாரோ பேசுகிறார். சாந்தியிடம்தான் கேட்க வேண்டும் என்று நினைக்கிறாள். ஒரு பக்கம் வெட்கமாகவும் இருக்கிறது.

     காலையில் ரங்கனும் குளித்துத் திருநீறு பூசிக் கொண்டு வருகிறான்.

     “இட்டிலி வேவுது... தட்டிட்டு காபி தாரேன்...”

     “இன்னிக்கித் தீபம் இல்லியா? நீ காபி குடு. நா மலைத்தீபத்துக்குப் போறன். இட்டிலிவானாம். விரதம்...”

     “அட செத்த இருங்க; நா இங்க சாமி கும்புட இருக்கிற... நீங்க மலைத் தீபத்துக்குப் போறங்கறீங்க?”

     அவளுக்கு உள்ளூரக் கோபம்.

     காபித்துளைப் போட்டு, கொதி நீரை ஊற்றி வைத்திருக்கிறாள். நாலைந்து தம்ளருக்குக் கலக்குகிறாள். ஒரு தம்ளரில் ஊற்றி அவனிடம் கொடுக்கிறாள்.

     “வூட்ட சாமி கும்பிடறப்ப, நீங்க போகனுமாங்க?”

     “தா, நா முன்னமே தீர்மானிச்சாச்சி. நாலஞ்சி பேரு போறம். நீ இப்ப வந்து மறிக்காத. நீ சாமி கும்புடப் போறன்னு எனக்கெப்படித் தெரியும்? புரட்டாசி சனி, சாமி கும்புட்டியா? தீபாளி ஆதும் ஓடிப்போச்சி. ஒரு துணி கூட எடுக்கல. புள்ளங்களுக்குத்துணி எடுத்து, ஸ்வீட்டும் காரமும் நாவங்கிட்டு வந்தே. அமாசக் கூட்டம், சாந்தி போடுறான்னு காலனிக்கு ஓடுற. அன்னக்கெல்லாம் கும்புடாத நோம்பு இன்னக்கா?”

     “ஏங்க கோச்சிக்கிறீங்க? நீங்க வந்து நூறு ரூபா நோட்டக் குடுத்து ந்தா செவுந்தி நாளக்கி நோம்பு கும்புடுன்னு சொன்னிங்களா? நானாக வயித்தக் கட்டி வாயக் கட்டி, வூட்ட எப்படியோ கவுரதியா நடத்திட்டுப் போற... நீங்க வந்து பாருங்க, கழனியில நல்லா கதிர் புடிச்சிருக்கு. சாமி கும்புடற...”

     “சரி கும்புடு, ராவிக்கே வந்தாலும் வந்திடுவ!”

     செவந்தி தனியாக வேலை செய்கிறாள். கன்னியப்பன் மாட்டை வண்டிக்கு அவிழ்த்துப் போகிறான். வண்டி இருக்கும்; மாடிருக்காது. இவன் பூட்டிக் கொண்டு செல்வான். மண்ணடிப்பான், எருவடிப்பான், மூட்டைகள் கொண்டு போவான். மாட்டுக்கு ஒரு நாளைக்கு இருபத்தைந்தேனும் கொடுப்பான். அது நேரத்தைப் பொறுத்தது.

     சரோ, பள்ளிக்கூடத்தில் ஸ்பெசல் கிளாஸ் என்று போய் விட்டாள். சரவணனும் இட்டிலி சாப்பிட்டுவிட்டுப் போய் விட்டான். பகலுக்கு வந்து விடுவேன் என்று சரோ சொல்லி இருக்கிறாள். பருப்புப் போட்டு சாம்பார் வைத்து, வாழைக்காய் வாங்கிக் காரம் தடவி எண்ணெய் ஊற்றிப் பொரியல் செய்கிறாள். பச்சரிசியும் பாசிப் பருப்பும் கடலைப் பருப்பும் வேக வைத்துப் பாயாசம் வைக்கிறாள். வடைக்கு ஊறப் போட்டு உரலில் இட்டு அரைத்துக் கொண்டிருக்கையில் சரவணன் ஓடி வருகிறான்.

     “அம்மா... அம்மா.. உன்னைத் தேடிக்கிட்டு ஜீப்புல மேடம் வந்திருக்காங்க. ஆபீசர் ரெண்டு மூணு பேரு... எல்லம் வந்திருக்காங்க!”

     சாந்தி கூறினாள், அவர்கள் இடையில் பயிர் எப்படி வைத்திருக்கிறாள் என்று பார்க்க வருவார்களென்று.

     அப்படியே உதறிவிட்டு எழுந்து வாசலில் ஒடுகிறாள்.

     “அம்மா! வாங்க... ஐயா வாங்க... எங்கன... வாங்கம்மா” ...உடலும் உள்ளமும் பரபரக்கிறது. அவர்கள் திண்ணையில் உட்காருகிறார்கள்.

     “அம்மா... அம்மா...” என்று கத்துகிறாள்.

     பின்புறம் இருக்கும் அவளிடம், “ஆபீசர் அம்மால்லாம் வந்திருக்காங்க. வடைக்குப் போட்டுட்டேன், ஆட்டித் தட்டி எடு...” என்று கூறுகிறாள். இதற்குள் அப்பன் சாவடிப் பக்கமிருந்து வருகிறார். கும்பிடுகிறார்.

     “வாங்கையா! வாங்கம்மா பயிர் வச்சிருக்கு...”

     செவந்தி வாசலுக்கு வருகிறாள். “உள்ளே வந்து உக்காராம, வெளியே உக்காந்துட்டீங்க! இன்னிக்கு தீபம். சாமி கும்புடுகிற நாள்...”

     “ஓ, நாங்க வந்து தொந்தரவு குடுக்கிறமோ?” என்று பெரிய மேடம் சிரிக்கிறார்.

     “அய்யோ அப்படி இல்ல. எனக்குச் சாமியே நேரில வந்தாப்பல இருக்கு. பயிரு நீங்க சொன்னபடி வச்சேங்க. நாத்து விடுறப்ப மண் பரிசோதனை, விதைத் தேர்வுதான் செய்யல. ஆனா, அஸோஸ்பைரில்லம் குழி போல தண்ணிய கரச்சி, நாத்து முடிய அரை மணி வச்சோம். நிலத்தில தொழு உரம், சாணி உரம் கலந்து போட்டோம். தழைச்சத்து, சாம்பல் சத்து, மணிச்சத்து, எல்லாம் நீங்க படிச்சிக் குடுத்தாப்புல நோட்ட வச்சிப் பாத்திட்டு வச்சோம். பூடாக்ளோர்... களைக் கொல்லி மணலில் கலந்து கையில் உரை போட்டுக்கிட்டு விசிறினேன். களையே இல்லம்மா. பதினஞ்சி, இருபத்தஞ்சு, முப்பத்தஞ்சு, அம்பதுன்னு உரம் போட்டோம். முதல்ல ரெண்டு வாட்டி வேப்பம் புண்ணாக்கு கலந்து வச்சே... நீங்க வந்து பாருங்க...” இதற்குள் சரவணன் சொல்லி வேணி வீட்டில் இருந்து செம்பில் காபியுடன் வருகிறாள்.

     “காபி குடியுங்கம்மா... ஸார், காபி குடியுங்க...”

     சிறு தம்ளர்களில் ஊற்றி வைக்கிறாள்.

     “இப்ப எதுக்கம்மா காபி எல்லாம்? எவ்வளவு வச்சிருக்கே...?” வளர்மதி அம்மா, பத்மாவதி அம்மா, பெரிய மேடம், விரிவாக்க ஆபீசர்...

     முதன் முதலில் இவர்கள் தாம் வீடுதேடி வந்தார்கள்.

     வந்தவர்களை வாருங்கள் என்று அழைக்கவில்லை. செவந்தி உள்ளே சென்று மறைந்தாள்.

     “நீங்கல்லாம் பயிர் வேலை செய்யிறவங்கதானே?” என்று பெரிய மேடம் என்று இப்போது அறியப்படும் அம்மாள் கேட்டார்.

     “அதெல்லாம் ஆம்பிளங்கதா செய்வாங்க” என்றாள்.

     “நீங்க, களையெடுப்பு, நடவு, அறுவடை எதற்கும் போக மாட்டீங்க? உங்களுக்குச் சொந்த நிலம் இருக்குன்னு தெரியாது?”

     செவந்தி எட்டிப் பார்த்து, “அதெல்லாம் கூலிக்குப் போறதில்ல. எங்களுக்குள்ள நான் செய்வே... எங்கம்மா செய்யாது” என்றாள்.

     “பின்னென்ன? ஏன் உள்ள போய் மற ஞ்சுக்கறீங்க? உங்க பேரென்ன? வயசு?... கலியாணமாயி எத்தன வருசம், வீட்டுக்காரரும் பயிர்த் தொழில் செய்கிறவரா... எல்லாம் சொல்லுங்க, வாங்க!”

     “அய்யய்யோ! அதெல்லாம் ஆம்புளகளைக் கேக்காம எப்படிச் சொல்றது? நீங்க யாருன்னு எனக்கென்ன தெரியும்?”

     “நாங்களா? நாங்கல்லாம், தமிழ்நாட்டுப் பண்ணை மகளிர் திட்டம்னு ஒரு திட்டத்தைச் செயல்படுத்துபவர்கள். இதை டென்மார்க் என்ற நாட்டின் உதவியுடன் நம் அரசே நடத்துகிறது. நீங்கள் நடவு நடுகிறீர்கள். களையெடுக்கிறீர்கள், ஏன் அண்டை வெட்டுவதில் இருந்து அறுவடை வரை செய்கிறீர்கள். ஆனால் மொத்தமாகப் பார்த்தால், பெண்கள் பாடுபடுவதன் பலன் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இப்போது, இந்த ஆபீசர் அம்மாக்கள், உங்களுக்குச் சிறு சிறு தொழில் நுணுக்கப் பயிற்சி வகுப்பு நடத்துவாங்க. பண்ணை வேலைசெய்யும் பெண்கள் சுயமாக நிற்க வேணும். வளமை கூடவேண்டும். நிறைய இடங்களில், தமிழ்நாடு முழுவதும், ஏன், இந்தியா முழுவதுமே மகளிருக்கு இந்தப் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு நீங்கள் காசு ஒன்றும் கொடுக்க வேண்டாம். ஐந்து நாள் பயிற்சிக்கு வந்து போக நாங்களே ஓர் ஊக்கத் தொகை தருகிறோம். அஞ்சு மூட்டை எடுத்த வயலில் எட்டு மூட்டை காணலாம்...”என்று விரிவாகச் சொல்லிக் காகிதங்களைத் தந்தாள். ஊர், பேர், விவரம் எல்லாம் எழுதிக் கொண்டார். இவள் புருசன் கேட்டதும்,

     “பயிற்சியும் வாணாம், ஒண்ணும் வாணாம். நீ வீட்ட விட்டு எங்க போவ?” என்று தீர்த்து விட்டான்.

     ஆனால் அடுத்த நாளும் விரிவாக்க ஆபீசருடன், திட்ட ஆபீசர் அம்மாக்கள் இருவரும் வந்தார்கள். ஜனாபாய் என்ற பயனடைந்த பெண்மணியும் வந்தாள்.

     “நீங்க சேருங்க செவந்தியம்மா... நான் பாருங்க, ஆடிப்பட்டம் முதலில் வெள்ளைக் கிச்சலி கால் காணி போட்டேன். எட்டு மூட்டை எடுத்தேன்” என்று ஜனா ஆசை காட்டினாள். ஜனாபாய், கிராமத்துப் பெண்மணிதான். ஆனால் பி.ஏ. படித்திருந்தாள். ஒப்புக் கொள்ள வேண்டி வந்தது.

     இதெல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறது. நன்றியுணர்வில் கசிகிறாள்.

     “செவந்திம்மா, வண்டில ஏறுங்க; உங்க வயலைப் பார்க்கிறோம்!”

     “நா இப்படி நடந்து வந்திடுவே. சரவணா, வண்டில ஏறிட்டுப் போயி நம்ம வயலைக்காட்டு! நா அஞ்சுநிமிசத்தில் வர...”

     சரவணனுக்குச் சந்தோசம்.

     செவந்தி உள்ளே சென்று அம்மா வடை சுடுவதைப் பார்க்கிறாள். அப்பா இன்னமும் குளிக்கவில்லை. தன் வீட்டைத் தேடி ஆபீசர்கள் வந்தது பெருமைதான்.

     “விருசா சாமி கும்பிட்டுட்டு வந்தவங்களுக்கு வடயும், பாவாசமும் குடும்மா...” என்று சொல்கிறாள்.

     “அதுதா... நா இப்ப போகலன்னா நல்லாருக்காது. அம்மா, வட சுட்டதும் எல்லாம் எடுத்து வச்சி, கப்பூரம் காட்டிக் கும்பிட்டுக்க. நான் வாரப்ப கூட்டியாரேன்...” என்று சொல்கிறாள்.

     விடுவிடென்று பின்பக்கம் வழியாக அவள் நடக்கிறாள். அப்பாவும் கிளம்புகிறார்.

     “நீங்க வீட்ல இருங்களேன் அப்பா? சாமி கும் புடுது அம்மா. நா அவங்களக் கூட்டிட்டு வார. தவலயில வெந்நி இருக்கு. முழுகிட்டு நல்லதா வேட்டி எடுத்து உடுத்திட்டு இருங்க!”

     இவள் செல்லும் போது அவர்கள் வரப்பில் நின்று இவள் கழனியைப் பார்க்கிறார்கள்.

     “செவந்திம்மா? உங்களுக்கு நூத்துக்குத் தொண்ணுத் தெட்டு மார்க்” என்று சொல்கிறார் பெரிய மேடம். “பத்தி நடவு எவ்வளவு வசதியாக இருக்கு பாத்தீங்களா? வடத்துக்கு எவ்வளவு குத்து வச்சீங்க?”

     “பத்தொம்பதுதா. ரெண்டு மூணுல இருபது இருக்கும்...”

     “பரவாயில்ல... இல்லாட்டி கொச கொசன்னு அதுங்களுக்குக் காத்துப் போக வசதி இருக்காது... இது சம்பாப் பயிர் இல்ல?”

     ஒரு சட்டியில் சுண்ணாம்படித்து கரும்புள்ளி வைத்துக் கவிழ்த்திருக்கிறாள். பக்கத்து மேல் வீதிப் பொன்னம்பலத்தாரின் வயல். அதில் கொச கொசவென்று அடர்ந்து இருக்கிறது. சிலவற்றில் பழுப்பாக இருக்கிறது. சொட்டை விழுந்த முடி போல் தெரிகிறது. சீராக இல்லை. களையும் இருக்கிறது. இன்னும் பூப்பிடிக்கவில்லை.

     “அந்த நிலத்துல பூச்சி விழுந்திச்சின்னா நமக்கும் வந்திடுமோன்னு பயமா இருக்குங்க...”

     “பயப்படாதீங்க. ஒரு தாம்பாளத்தில் தண்ணி ஊத்தி கிரசினும் ஊத்தி நடுவில ஒரு காடா விளக்கக் கொளுத்தி வச்சிடுங்க. நாலு பக்கமும் பூச்சி வந்தா செத்திடும்... அடுத்த முறை உங்களைப் பார்த்து எல்லாரும் இதே மாதிரி போடுறோம்பாங்க. நீங்க கத்துகிட்டத, பத்துப் பேருக்கு சொல்லிக் குடுக்கணும். அதுக்கு ஒரு புரோகிராம் இருக்கு...”

     “காபி கொண்டாந்தாளே நீலவேனி, எங்க ஒப்படியா சுந்தரி, எல்லாரும் கொஞ்ச கொஞ்ச நிலம் வச்சிருக்காங்க. அத்தயும் வாரத்துக்கு உட்டிருக்காங்க. பொம்புள எப்படி விவசாயம் செய்றதுன்னு பயப்படுறாங்கம்மா. எனக்கு இப்படித்தானே பயமாயிருந்திச்சி. இப்பதா தயிரியம் வந்திருக்கு.”

     “இனி வந்திடும்...” எல்லோரும் ஜீப்பில் ஏறிக் கொள்கிறார்கள். செவந்தியையும் உள்ளே அடைத்துக் கொள்கிறார்கள்.

     வீட்டு வாசலில் வண்டி நிற்கிறது. அப்போது சைக்கிளில் சரோ வந்து இறங்குகிறாள்.

     “அம்மா எல்லாம் உள்ள வாங்க! வாங்க சார்...!”

     “இல்லம்மா, நேரமில்ல. இன்னும் நிறைய இடத்துக்குப் போகணும்... எறங்கிக் காபி குடிச்சமே...?”

     “ஓ... அதெல்லாம் கூடாது. அம்மாசாமி கும்புட்டிருக்கு. எதாகிலும் எறங்கி வந்து சாப்புடனும்...”

     “அதெல்லாம் வாணாம்மா...”

     “இப்படி எறங்கி வந்து உக்காருங்க... நான் கொண்டாறேன்..” என்று பாயாசப் போணியை அப்பா எடுத்து வருகிறார். வலுக்கட்டாயமாகத் தம்ளரில் ஊற்றிக் கொடுக்கிறார். சரோசா இலையில் சுடச்சுட வடைகளைக் கொண்டு வருகிறாள். கன்னியப்பன் அப்போது ஓடி வருகிறான்.

     “வணக்கம் ஸார்! வணக்கம்மா! சொன்னாங்க, ஆபிசர்லாம் வந்திருக்காங்கன்னு, வந்தேன்...”

     “கன்னியப்பன்தான் எல்லா உதவியும். நல்ல உழைப்பாளி...”

     “உனக்கு சொந்த நிலம் இருக்காப்பா?”

     “இனி வாங்க வேணும். பாத்திட்டிருக்கேனுங்க...”

     “கலியாணம் ஆயிருக்கா?”

     “இல்லங்க...”

     “காணி இருக்கிற பெண்ணப் பாத்துக் கட்டிக்க... சரியாப் போயிடும்” என்று சொல்கிறார் ஆபீசர் அம்மா.

     மனசுக்கு மிக இதமாக இருக்கிறது.

     சாமி கும்பிட்டதின் பலனை உடனேயே கண்டுவிட்டாற் போல் நினைக்கிறாள் செவந்தி.

     ஜீப் போன பின்பும் தெருவில் இவளையும், வந்தவர்களையும் பற்றியே பேச்சு நடக்கும் என்று அவளுக்குத் தெரியும்.

     ரங்கன் மறுநாட் காலையில் தான் வருகிறான். வரும் போதே செய்தி எட்டியிருக்கும் என்று தோன்றுகிறது.

     இவள் உழவருக்கு ஒரு வார்த்தையைப் பற்றி விட்டாள்.

     ஆடிப்பட்டம் விதைத்தவர்கள், பயிர் நேர்த்திக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். பூச்சிக்கு விளக்குப் பொறிதான் அன்றைய பேச்சு.

     இனி நிதமும் கேட்க வேண்டும். ரேடியோவின் மீதிருந்த வெறுப்பு மாறி விட்டது. அது முடிந்து செய்திகள் வருகின்றன.

     செவந்தி அதைக்கேட்டுக் கொண்டே, முதல் நாள் வைத்த எண்ணெய்ச் சட்டியில் இருந்த எண்ணெயை வடித்துச் சுத்தம் செய்கிறாள். ரேடியோ சமையலறைக்கு வெளியே வாயிற்படியில் இருந்து சிறிது எட்டி வைத்திருக்கிறது.

     “காபி கூபி இருக்கா?” என்று கடுகடுப்பாக அவன் பார்க்கிறான்.

     “அட...? நீங்க எந்த பஸ்ஸுக்கு வந்தீங்க? ராவே வந்துட்டீங்களா?”

     “இப்பத்தா வாரேன். எனக்குத் தலை வலிக்கிது. காபி கொண்டா. மாத்திர சாப்பிடணும்...”

     அப்போது அங்கு சரவணன் ஒடி வந்து அவளிடம் ஒரு சீட்டைக் கொடுக்கிறான். “ஓராளு வந்திருக்காரு. இதை உங்ககிட்டக் கொடுக்க சொன்னாரு..”

     பாப்பாம்மாள் என்று எழுதி இருக்கிறது.

     அவள் வாசலுக்கு விரைகிறாள்.

     “பாப்பாம்மா சொல்லிச்சி. அமாவாசக் கூட்டம் காக்கனேரில. உங்களவரச் சொல்லிச்சி...”

     “சரி, போங்க, அமாசிக்கு எத்தினி நாளிருக்கு?” அவள் உள்ளே வரும்போது ரங்கன் அந்த ரேடியோவைத் தூக்கி ஏறிகிறான். அது முற்றத்தில் போய் சத்தத்துடன் விழுகிறது. உடைகிறது.

     அவள் விக்கித்து நிற்கிறாள்.

     “நா ஒராளு தலவலி மண்ட உடய்க்கிதுன்னு வந்து உக்காந்திருக்க. நீ இத்த அலறவுட்டுப் போட்டு எவனையோ பாக்க ஓடுற! நானும் பாத்திட்டுதாணிருக்க. உனக்கு வர வரத் திமுரு ரொம்பப் போவுது. புருசன், வீடுன்னு மதிப்பு இல்ல. நினைச்ச நேரத்துக்கு வார, நினைச்ச நேரத்துக்குப் போற! மானம் மரியாதியுள்ளவ அர நேரம் தங்கமாட்டா...!”

     எழுந்திருந்து முகம் கடுக்கப் போகிறான்.