சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதாகிய கலித்தொகை ... தொடர்ச்சி ... 3
அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும், வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும்- இறை நில்லா வளை ஓட, இதழ் சோர்பு பனி மல்க, பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள் விறல் நலன் இழப்பவும், வினை வேட்டாய்! கேஎள், இனி; 5 'உடை இவள் உயிர் வாழாள், நீ நீப்பின்' எனப், பல இடைகொண்டு யாம் இரப்பவும், எம கொள்ளாய்ஆயினை; கடைஇய ஆற்றிடை, நீர் நீத்த வறுஞ் சுனை, அடையொடு வாடிய அணி மலர்-தகைப்பன; 'வல்லை நீ துறப்பாயேல், வகை வாடும் இவள்' என, 10 ஒல் ஆங்கு யாம் இரப்பவும், உணர்ந்தீயாய் ஆயினை; செல்லு நீள் ஆற்றிடைச், சேர்ந்து எழுந்த மரம் வாட, புல்லு விட்டு இறைஞ்சிய பூங்கொடி தகைப்பன; 'பிணிபு நீ விடல் சூழின், பிறழ்தரும் இவள்' எனப், பணிபு வந்து இரப்பவும், பல சூழ்வாய்ஆயினை; 15 துணிபு நீ செலக் கண்ட ஆற்றிடை, அம் மரத்து அணி செல, வாடிய அம் தளிர்-தகைப்பன; எனவாங்கு யாம் நிற் கூறவும் எம கொள்ளாய்ஆயினை; ஆனாது இவள்போல் அருள் வந்தவை காட்டி, 20 மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ செல்லும் கானம் தகைப்ப, செலவு. 4
வலி முன்பின், வல்லென்ற யாக்கைப், புலி நோக்கின்- சுற்றமை வில்லர், சுரி வளர் பித்தையர், அற்றம் பார்த்து அல்கும்-கடுங்கண் மறவர் தாம் கொள்ளும் பொருள் இலர்ஆயினும், வம்பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து, உயிர் வௌவலின், 5 புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை, வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின், உள்ளினிர் என்பது அறிந்தனள், என் தோழி; 'காழ் விரி வகை ஆரம் மீ வரும் இள முலை போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார், என் 10 தாழ் கதுப்பு அணிகுவர், காதலர்; மற்று, அவர் சூழ்வதை எவன்கொல்? அறியேன்!' என்னும் 'முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரைக் கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார், என் ஒள் இழை திருத்துவர், காதலர்; மற்று, அவர் 15 உள்ளுவது எவன்கொல்? அறியேன்!" என்னும் 'நுண் எழில் மாமைச் சுணங்கு அணி ஆகம் தம் கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையார், என் ஒள் நுதல் நீவுவர், காதலர்; மற்று, அவர் எண்ணுவது எவன்கொல்? அறியேன்!' என்னும்; 20 எனவாங்கு, 'கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என!' என் தோழி அழிவொடு கலங்கிய எவ்வத்தள்; ஒரு நாள், நீர், பொழுது இடைப்பட நீப்பின், வாழ்வாளோ? ஒழிக இனி, பெரும! நின் பொருட் பிணிச் செலவே. 25 5
பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை மாஅல் யானையொடு மறவர் மயங்கித் தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அருஞ் சுரம் இறந்து, நீர் செய்யும் பொருளினும், யாம் உமக்குச் சிறந்தனம் ஆதல் அறிந்தனிர்ஆயின், 5 நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதைக், கேள் பெருந் தகையோடு எவன் பல மொழிகுவம்? நாளும் கோள் மீன் தகைத்தலும் தகைமே, கல்லெனக் கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின், 10 புல்லென்ற களம் போலப் புலம்பு கொண்டு, அமைவாளோ? ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடு போல், பாழ்பட்ட முகத்தோடு, பைதல் கொண்டு, அமைவாளோ? ஓர் இரா வைகலுள், தாமரைப் பொய்கையுள் நீர் நீத்த மலர் போல, நீ நீப்பின், வாழ்வாளோ? 15 எனவாங்கு, பொய்ந் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு, எந் நாளோ, நெடுந் தகாய்! நீ செல்வது, அந் நாள் கொண்டு இறக்கும், இவள் அரும் பெறல் உயிரே. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |