சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதாகிய

கலித்தொகை

... தொடர்ச்சி - 4 ...

31

'கடும் புனல் கால் பட்டுக் கலுழ் தேறிக் கவின் பெற,
நெடுங் கயத்து அயல் அயல் அயிர் தோன்ற, அம் மணல்
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக,
பிரிந்தவர் நுதல் போலப் பீர் வீய, காதலர்ப்
புணர்ந்தவர் முகம் போலப் பொய்கை பூப் புதிது ஈன, 5
மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால்,
கையாறு கடைக்கூட்டக் கலக்குறூஉம் பொழுதுமன்
"பொய்யேம்" என்று, ஆயிழாய்! புணர்ந்தவர் உரைத்ததை;
மயங்கு அமர் மாறு அட்டு, மண் வௌவி வருபவர்,
தயங்கிய களிற்றின்மேல், தகை காண விடுவதோ 10
பயங் கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு,
வயங்கு இழை தண்ணென, வந்த இவ் அசை வாடை
தாள் வலம்பட வென்று, தகை நன் மா மேல்கொண்டு,
வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ
நீள் கழை நிவந்த பூ நிறம் வாடத் தூற்றுபு, 15
தோள் அதிர்பு அகம் சேர, துவற்றும் இச் சில் மழை;
பகை வென்று திறை கொண்ட பாய் திண் தேர் மிசையவர்
வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ
புகை எனப் புதல் சூழ்ந்து, பூ அம் கள் பொதி செய்யா
முகை வெண் பல் நுதி பொர, முற்றிய கடும் பனி;' 20
      என ஆங்கு,
வாளாதி, வயங்கிழாய்! 'வருந்துவள் இவள்' என,
நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி,
மீளி வேல் தானையர் புகுதந்தார்
நீள் உயர் கூடல் நெடுங் கொடி எழவே. 25

32

எஃகு இடை தொட்ட, கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல்
மை அற விளங்கிய, துவர் மணல் அது; அது
ஐதாக நெறித்தன்ன அறல் அவிர் நீள் ஐம்பால்
அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல்,
பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ நெறி கொள 5
துணி நீரால், தூ மதி நாளால், அணி பெற
ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும்,
ஆன்றவர் அடக்கம் போல் அலர்ச் செல்லாச் சினையொடும்,
வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும்,
நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும், 10
உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும்,
புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவுற்ற கொடியொடும்
நயந்தார்க்கோ நல்லைமன், இளவேனில் எம் போல;
பசந்தவர் பைதல் நோய் பகை எனத் தணித்து, நம்
இன் உயிர் செய்யும் மருந்தாகி, பின்னிய 15
காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லைப்
போது ஆரக் கொள்ளும் கமழ் குரற்கு என்னும்
தூது வந்தன்றே தோழி!
துயர் அறு கிளவியோடு அயர்ந்தீகம் விருந்தே.

33

'வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய
யாறு கண் விழித்த போல், கயம் நந்திக் கவின் பெற,
மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல,
பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக,
துணி கய நிழல் நோக்கித் துதைபு உடன் வண்டு ஆர்ப்ப, 5
மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய,
காதலர்ப் புணர்ந்தவர் கவவுக் கை நெகிழாது,
தாது அவிழ் வேனிலோ வந்தன்று; வாரார், நம்
போது எழில் உண்கண் புலம்ப நீத்தவர்!
எரி உரு உறழ இலவம் மலர, 10
பொரி உரு உறழப் புன்கு பூ உதிர,
புது மலர்க் கோங்கம் பொன் எனத் தாது ஊழ்ப்ப,
தமியார்ப் புறத்து எறிந்து எள்ளி, முனிய வந்து,
ஆர்ப்பது போலும் பொழுது; என் அணி நலம்
போர்ப்பது போலும் பசப்பு 15
நொந்து நகுவன போல் நந்தின, கொம்பு; நைந்து உள்ளி
உகுவது போலும், என் நெஞ்சு; எள்ளி,
தொகுபு உடன் ஆடுவ போலும், மயில்; கையில்
உகுவன போலும், வளை; என் கண் போல்
இகுபு அறல் வாரும் பருவத்தும் வாரார்; 20
மிகுவது போலும், இந் நோய்;
நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல்
இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊத
தூது அவர் விடுதரார் துறப்பார்கொல் நோதக,
இருங் குயில் ஆலும் அரோ;' 25
      என ஆங்கு,
புரிந்து நீ எள்ளும் குயிலையும், அவரையும், புலவாதி
நீல் இதழ் உண்கணாய்! நெறி கூந்தல் பிணி விட,
நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி,
மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் 30
கால் உறழ் கடுந் திண் தேர் கடவினர் விரைந்தே

34

'மன் உயிர் ஏமுற, மலர் ஞாலம் புரவு ஈன்று,
பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி, இறந்த பின்,
சில் நீரால் அறல் வார, அகல் யாறு கவின் பெற,
முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்கண்
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளர் போல், 5
பன் மலர் சினை உக, சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப,
இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான்
விரி காஞ்சித் தாது ஆடி இருங் குயில் விளிப்பவும்,
பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்,
கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி, 10
எரி பொத்தி, என் நெஞ்சம் சுடும்ஆயின், எவன் செய்கோ;
பொறை தளர் கொம்பின்மேல் சிதரினம் இறை கொள,
நிறை தளராதவர் தீமை மறைப்பென்மன் மறைப்பவும்,
முறை தளர்ந்த மன்னவன் கீழ்க் குடி போலக் கலங்குபு,
பொறை தளர்பு பனி வாரும் கண்ஆயின், எவன் செய்கோ; 15
தளை அவிழ் பூஞ் சினைச் சுரும்பு யாழ் போல இசைப்பவும்,
கொளை தளராதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்,
கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று,
வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள்ஆயின், எவன் செய்கோ;'
      என ஆங்கு, 20
நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல்; எல்லா! நாம்
எண்ணிய நாள்வரை இறவாது, காதலர்
பண்ணிய மாவினர் புகுதந்தார்
கண் உறு பூசல் கை களைந்தாங்கே

35

'மடியிலான் செல்வம் போல் மரன் நந்த, அச் செல்வம்
படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப;
மாயவள் மேனி போல் தளிர் ஈன், அம் மேனித்
தாய சுணங்கு போல் தளிர்மிசைத் தாது உக;
மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப, 5
அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார;
நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால்,
துறந்து உள்ளார் அவர்' எனத் துனி கொள்ளல் எல்லா! நீ
'வண்ண வண்டு இமிர்ந்து, ஆனா வையை வார் உயர் எக்கர்,
தண் அருவி நறு முல்லைத் தாது உண்ணும் பொழுதன்றோ 10
கண் நிலா நீர் மல்கக் கவவி, நாம் விடுத்தக்கால்,
ஒண்ணுதால்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை;
மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து, அவர்,
வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ
"வலன் ஆக, வினை!" என்று வணங்கி, நாம் விடுத்தக்கால், 15
ஒளியிழாய்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை;
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாடக் கூடலார்
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ
பல நாடு நெஞ்சினேம் பரிந்து, நாம் விடுத்தக்கால்,
சுடரிழாய்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை; 20
      என ஆங்கு,
உள்ளுதொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பாகி,
எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல்
காமர் கடுந் திண் தேர்ப் பொருப்பன்
வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே. 25

36

'கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல், மராத்து
நெடுமிசைச் சூழும் மயில் ஆலும் சீர,
வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப,
தொடி மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர,
இயன் எழீஇயவை போல, எவ் வாயும் இம்மென, 5
கயன் அணி பொதும்பருள் கடி மலர்த் தேன் ஊத,
மலர் ஆய்ந்து வயின் வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப,
இருங் குயில் ஆல, பெருந் துறை கவின் பெற,
குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும்
சீரார் செவ்வியும், வந்தன்று 10
வாரார், தோழி! நம் காதலோரே;
பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று, நுதல்
சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன, தோள்;
நனி அறல் வாரும் பொழுது என, வெய்ய
பனி அறல் வாரும், என் கண்; 15
மலையிடைப் போயினர் வரல் நசைஇ, நோயொடு
முலையிடைக் கனலும், என் நெஞ்சு;
காதலின் பிரிந்தார்கொல்லோ; வறிது, ஓர்
தூதொடு மறந்தார்கொல்லோ; நோதக,
காதலர் காதலும் காண்பாம்கொல்லோ? 20
துறந்தவர் ஆண்டு ஆண்டு உறைகுவர்கொல்லோ; யாவது;'
'நீள் இடைப் படுதலும் ஒல்லும்; யாழ நின்,
வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி!
நாள் அணி சிதைத்தலும் உண்டு' என நய வந்து,
கேள்வி அந்தணர் கடவும் 25
வேள்வி ஆவியின் உயிர்க்கும், என் நெஞ்சே.

கபிலர் பாடிய
குறிஞ்சிக்கலி

37

கய மலர் உண்கண்ணாய்! காணாய் ஒருவன்
வய மான் அடித் தேர்வான் போல, தொடை மாண்ட
கண்ணியன் வில்லன், வரும்; என்னை நோக்குபு,
முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்; 5
பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன்வயின்
சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்
கண் நின்று கூறுதல் ஆற்றான், அவனாயின்;
பெண் அன்று, உரைத்தல், நமக்காயின்; 'இன்னதூஉம்
காணான் கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என் 10
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்
நாண் இன்மை செய்தேன் நறுநுதால்! ஏனல்
இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்,
ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,
'ஐய! சிறிது என்னை ஊக்கி' எனக் கூற, 15
'தையால்! நன்று! என்று அவன் ஊக்க, கை நெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பின்; வாயாச் செத்து,
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்; மேல்
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை
மெய் அறிந்து ஏற்று எழுவேனாயின், மற்று ஒய்யென, 20
'ஒண்குழாய்! செல்க' எனக் கூறி விடும் பண்பின்
அங்கண் உடையன் அவன்

38

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல்செல்லாது உழப்பவன் போல 5
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்:
ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால், 10
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள், வைகறை,
கார் பெற்ற புலமே போல், கவின் பெறும்; அக் கவின்
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்;
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்,
பொருளில்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை, 15
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும்; அவ் அணி
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்;
மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால்,
அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை,
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்; அத் திருப் 20
புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல், உரைத்தைக்காண்;
      என ஆங்கு,
நின் உறு விழுமம் கூறக் கேட்டு,
வருமே, தோழி! நல் மலை நாடன்
வேங்கை விரிவு இடம் நோக்கி, 25
வீங்கு இறைப் பணைத் தோள் வரைந்தனன் கொளற்கே.

39

'காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்,
தாமரைக்கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான்,
நீள் நாக நறுந் தண் தார் தயங்கப் பாய்ந்து, அருளினால்,
பூண் ஆகம் உறத் தழீஇப் போத்தந்தான் அகன் அகலம்
வரு முலை புணர்ந்தன என்பதனால், என் தோழி 5
அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே;
அவனும்தான், ஏனல் இதணத்து அகிற் புகை உண்டு இயங்கும்
வான் ஊர் மதியம் வரை சேரின், அவ் வரை,
'தேனின் இறால்' என, ஏணி இழைத்திருக்கும்
கான் அகல் நாடன் மகன்; 10
சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
வள்ளி கீழ் வீழா; வரைமிசைத் தேன் தொடா;
கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான்;
காந்தள் கடி கமழும், கண் வாங்கு, இருஞ் சிலம்பின் 15
வாங்கு அமை மென் தோட் குறவர் மட மகளிர்
தாம் பிழையார், கேள்வர்த் தொழுது எழலால், தம் ஐயரும்
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்'
      என ஆங்கு,
அறத்தொடு நின்றேனைக் கண்டு, திறப்பட 20
என்னையர்க்கு உய்த்து உரைத்தாள், யாய்;
அவரும் தெரி கணை நோக்கி, சிலை நோக்கி, கண் சேந்து,
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து, ஆறி,
'இருவர்கண் குற்றமும் இல்லையால்' என்று,
தெருமந்து சாய்த்தார் தலை 25
தெரியிழாய்! நீயும் நின் கேளும் புணர,
வரை உறை தெய்வம் உவப்ப, உவந்து
குரவை தழீஇ யாம் ஆட, குரவையுள்
கொண்டுநிலை பாடிக்காண்;
      நல்லாய்! 30
நல் நாள் தலைவரும் எல்லை, நமர் மலைத்
தம் நாண் தாம் தாங்குவார், என் நோற்றனர்கொல்?
புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில்,
நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ;
நனவில் புணர்ச்சி நடக்கலும், ஆங்கே 35
கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ;
விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள்
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்மன் கொலோ;
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழங் கேண்மை
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்மன் கொலோ; 40
மை தவழ் வெற்பன் மண அணி காணாமல்
கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ;
என்னை மன் நின் கண்ணால் காண்பென்மன், யான்
நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக, என் கண் மன;
      என ஆங்கு, 45
நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇ,
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனமாக,
வேய் புரை மென் தோட் பசலையும், அம்பலும்,
மாயப் புணர்ச்சியும், எல்லாம் உடன் நீங்க,
சேய் உயர் வெற்பனும் வந்தனன் 50
பூ எழில் உண் கணும் பொலிகமா, இனியே!

40

'அகவினம் பாடுவாம், தோழி!' 'அமர் கண்
நகை மொழி, நல்லவர் நாணும் நிலை போல்,
தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ,
முகை வளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின்
வகை சால் உலக்கை வயின் வயின் ஓச்சி, 5
பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி,
அகவினம் பாடுவாம், நாம்;
ஆய் நுதல், அணி கூந்தல், அம் பணைத் தட மென் தோள்,
தேன் நாறு கதுப்பினாய்! யானும் ஒன்று ஏத்துகு
வேய் நரல் விடரகம் நீ ஒன்று பாடித்தை; 10
கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல்,
எடுத்த நறவின் குலை அலங்காந்தள்
தொடுத்த தேன் சோர, தயங்கும் தன் உற்றார்
இடுக்கண் தவிர்ப்பான் மலை;
கல்லாக் கடுவன் கணம் மலி சுற்றத்து, 15
மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே
தொல் எழில் தோய்ந்தார் தொலையின், அவரினும்
அல்லற்படுவான் மலை;
புரி விரி, புதை துதை, பூத் ததைந்த தாழ் சினைத்
தளிர் அன்ன எழில் மேனி தகை வாட, நோய் செய்தான் 20
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம்;
விண் தோய் வரை, பந்து எறிந்த அயா வீட,
தண் தாழ் அருவி, அரமகளிர், ஆடுபவே
பெண்டிர் நலம் வௌவி, தன் சாரல் தாது உண்ணும்
      வண்டின் துறப்பான் மலை; 25
ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற
கடுஞ்சூல் வயாவிற்கு அமர்ந்து, நெடுஞ் சினைத்
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் 'உற்றாரின்
நீங்கலம்' என்பான் மலை;
      என நாம், 30
தன் மலை பாட, நயவந்து கேட்டு, அருளி,
மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்து ஆரா
மென் முலை ஆகம் கவின் பெற,
செம்மலை ஆகிய மலைகிழவோனே.