சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதாகிய

கலித்தொகை

... தொடர்ச்சி - 7 ...

61

எல்லா! இஃது ஒத்தன் என் பெறான்? கேட்டைக் காண்:
செல்வம் கடைகொள, சாஅய், சான்றவர்
அல்லல் களை தக்க கேளிருழைச் சென்று,
சொல்லுதல் உற்று, உரைகல்லாதவர் போல
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும்; மற்று யான் நோக்கின், 5
மெல்ல இறைஞ்சும் தலை;
எல்லா! நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய்போல் காட்டினை;
நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய்!
என், நீ பெறாதது? ஈது என்?
சொல்லின், மறாதீவாள் மன்னோ, இவள்? 10
செறாஅது ஈதல், இரந்தார்க்கு ஒன்று, ஆற்றாது வாழ்தலின்,
சாதலும் கூடுமாம் மற்று
இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும், விழுப் பொருள்;
      யாது, நீ வேண்டியது?
பேதாய்! பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை; யாழ 15
மருளி மட நோக்கின் நின் தோழி என்னை
அருளீயல் வேண்டுவல், யான்
"அன்னையோ?" மண்டு அமர் அட்ட களிறு அன்னான்தன்னை ஒரு
பெண்டிர் அருளக் கிடந்தது எவன்கொலோ?'
ஒண்தொடீ! நாண் இலன் மன்ற இவன் 20
      ஆயின், ஏஎ!
'பல்லார் நக்கு எள்ளப்படு மடல்மா ஏறி,
மல்லல் ஊர் ஆங்கண் படுமே, நறும் நுதல்
நல்காள் கண்மாறிவிடின்' எனச் செல்வானாம்
எள்ளி நகினும் வரூஉம்; இடைஇடைக் 25
கள்வர் போல் நோக்கினும் நோக்கும்; குறித்தது
கொள்ளாது போகாக் குணன் உடையன், எந்தை தன்
உள்ளம் குறைபடாவாறு.

62

ஏஎ இஃது ஒத்தன், நாண் இலன் தன்னொடு
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்
'மேவினும், மேவாக்கடையும், அஃது எல்லாம்
நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற
மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான் 5
புல் இனிது ஆகலின், புல்லினென்' எல்லா!
தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆமோ மற்று?'
சுடர்த் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றிக் கேள்!
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று 10
உண்பவோ, நீர் உண்பவர்?
செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன்கொலோ
ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா?
'மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை
வௌவிக் கொளலும் அறன்' எனக் கண்டன்று; 15
'அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி,
கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு
மாறு உண்டோ , நெஞ்சே! நமக்கு.

63

நோக்குங்கால், நோக்கித் தொழூஉம், பிறர் காண்பார்
தூக்கு இலி; தூற்றும் பழி எனக் கை கவித்துப்
போக்குங்கால், போக்கு நினைந்து இருக்கும்; மற்று நாம்
காக்கும் இடம் அன்று, இனி
எல்லா! எவன் செய்வாம்? 5
பூக்குழாய்! செல்லல் அவனுழைக் கூஉய்க் கூஉய்
விரும்பி யான் விட்டேனும் போல்வல்; என் தோள்மேல்
கரும்பு எழுது தொய்யிற்குச் செல்வல்; 'ஈங்கு ஆக
இருந்தாயோ?' என்று ஆங்கு இற;
அவன் நின் திருந்துஅடிமேல் வீழ்ந்து இரக்கும், நோய் தீர்க்கும் 10
மருந்து நீ ஆகுதலான்;
இன்னும், கடம் பூண்டு, ஒருகால் நீ வந்தை; உடம்பட்டாள்
என்னாமை என் மெய் தொடு
இஃதோ? அடங்கக் கேள்:
நின்னொடு சூழுங்கால், நீயும் நிலம் கிளையா, 15
என்னொடு நிற்றல் எளிது அன்றோ? மற்று அவன்
தன்னொடு நின்று விடு.

64

அணி முகம் மதி ஏய்ப்ப, அம் மதியை நனி ஏய்க்கும்,
மணி முகம், மா மழை, நின் பின், ஒப்ப, பின்னின்கண்
விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி
அரவுக்கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப,
அரும் படர் கண்டாரைச் செய்து, ஆங்கு இயலும் 5
விரிந்து ஒலி கூந்தலாய்! கண்டை; எமக்குப்
பெரும் பொன் படுகுவை பண்டு
ஏஎ, எல்லா! மொழிவது கண்டை, இஃது ஒத்தன்; தொய்யில்
எழுதி இறுத்த பெரும் பொன் படுகம்;
உழுவது உடையமோ, யாம்; 10
      உழுதாய்
சுரும்பு இமிர் பூங் கோதை அம் நல்லாய்! யான் நின்
திருந்து இழை மென் தோள் இழைத்த, மற்று இஃதோ,
கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ? ஒருங்கே
துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த 15
குவளையும், நின் உழவு அன்றோ? இகலி
முகை மாறு கொள்ளும் எயிற்றாய்! இவை அல்ல,
என் உழுவாய் நீ, மற்று இனி
எல்லா! நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு;
முற்று எழில் நீல மலர் என உற்ற, 20
இரும்பு ஈர் வடி அன்ன, உண்கட்கும், எல்லாம்,
பெரும் பொன் உண்டு என்பாய்! இனி
நல்லாய்! இகுளை! கேள்:
ஈங்கே தலைப்படுவன், உண்டான் தலைப்பெயின்,
வேந்து கொண்டன்ன பல; 25
'ஆங்கு ஆக!' 'அத் திறம் அல்லாக்கால், வேங்கை வீ
முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம்
பொய்த்து ஒருகால் எம்மை முயங்கினை சென்றீமோ,
முத்து ஏர் முறுவலாய்! நீ படும் பொன் எல்லாம்
உத்தி எறிந்துவிடற்கு' 30

65

திருந்திழாய்! கேளாய், நம் ஊர்க்கு எல்லாம் சாலும்
பெரு நகை! அல்கல் நிகழ்ந்தது: ஒருநிலையே
மன்பதை எல்லாம் மடிந்த இருங் கங்குல்,
அம் துகில் போர்வை அணிபெறத் தைஇ, நம்
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக 5
தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும்,
காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து, நம்
சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை,
தோழி! நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே,
பாரா, குறழா, பணியா, 'பொழுது அன்றி, 10
யார், இவண் நின்றீர்?' எனக் கூறி, பையென,
வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது,
'தையால்! தம்பலம் தின்றியோ?' என்று, தன்
பக்கு அழித்து, 'கொண்டீ' எனத் தரலும் யாது ஒன்றும்
வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி, 15
'கைப்படுக்கப்பட்டாய், சிறுமி! நீ' 'மற்று யான்
ஏனைப் பிசாசு; அருள்; என்னை நலிதரின்,
இவ் ஊர்ப் பலி நீ பெறாஅமல் கொள்வேன்'
எனப் பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப
முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து, யான், எஞ்சாது, 20
ஒரு கை மணல் கொண்டு, மேல் தூவக் கண்டே,
கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன், ஆங்கே,
ஒடுங்கா வயத்தின், கொடுங் கேழ், கடுங்கண்,
இரும் புலி கொண்மார் நிறுத்த வலையுள் ஓர்
ஏதில் குறு நரி பட்டற்றால்! காதலன் 25
காட்சி அழுங்க, நம் ஊர்க்கு எலாஅம்
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன்
வாழ்க்கை அதுவாகக் கொண்ட முது பார்ப்பான்
வீழ்க்கைப் பெருங் கருங் கூத்து.

மருதன் இளநாகனார் அருளிய
மருதக்கலி

66

வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயற் கொண்ட
ஞாங்கர் மலர் சூழ்தந்து, ஊர் புகுந்த வரி வண்டு,
ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம்
ஆங்கு அவை விருந்து ஆற்ற, பகல் அல்கி, கங்குலான்,
வீங்கு இறை வடு கொள, வீழுநர்ப் புணர்ந்தவர் 5
தேம் கமழ் கதுப்பினுள் அரும்பு அவிழ் நறு முல்லை
பாய்ந்து ஊதி, படர் தீர்ந்து, பண்டு தாம் மரீஇய
பூம் பொய்கை மறந்து, உள்ளாப் புனல் அணி நல் ஊர!
அணை மென் தோள் யாம் வாட, அமர் துணைப் புணர்ந்து நீ,
'மண மனையாய்' என வந்த மல்லலின் மாண்பு அன்றோ 10
பொதுக் கொண்ட கவ்வையின் பூ அணிப் பொலிந்த நின்
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறைப் பெற்றதை;
கனலும் நோய்த் தலையும், 'நீ கனங் குழையவரொடு
புனல் உளாய்' என வந்த பூசலின் பெரிது அன்றோ
தார் கொண்டாள் தலைக் கோதை தடுமாறிப் பூண்ட நின் 15
ஈரணி சிதையாது, எம் இல் வந்து நின்றதை;
தணந்ததன் தலையும், 'நீ தளரியலவரொடு
துணங்கையாய்' என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ
ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணிப் பொலிந்த நின்
களி தட்ப வந்த இக் கவின் காண இயைந்ததை; 20
      என ஆங்கு,
அளி பெற்றேம்; எம்மை நீ அருளினை; விளியாது
வேட்டோ ர் திறத்து விரும்பிய நின் பாகனும்,
'நீட்டித்தாய்' என்று, கடாஅம், கடுந் திண் தேர்;
பூட்டு விடாஅ நிறுத்து. 25

67

கார் முற்றி, இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து,
சீர் முற்றி, புலவர் வாய்ச் சிறப்பு எய்தி, இரு நிலம்
தார் முற்றியது போல, தகை பூத்த வையை தன்
நீர் முற்றி, மதில் பொரூஉம் பகை அல்லால், நேராதார்
போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன்; 5
நலத்தகை, எழில் உண்கண் நல்லார் தம் கோதையால்
அலைத்த, புண், வடு, காட்டி, அன்பு இன்றி வரின் எல்லா!
புலப்பேன் யான் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின்,
கலப்பேன் என்னும், இக் கையறு நெஞ்சே;
கோடு எழில் அகல் அல்குற் கொடி அன்னார் முலை மூழ்கி, 10
பாடு அழி சாந்தினன், பண்பு இன்றி வரின் எல்லா!
ஊடுவென் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின்,
கூடுவென் என்னும், இக் கொள்கை இல் நெஞ்சே;
இனிப் புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின்,
நனிச் சிவந்த வடுக் காட்டி, நாண் இன்றி வரின் எல்லா! 15
துனிப்பென் யான் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின்,
தனித்தே தாழும், இத் தனி இல் நெஞ்சே;
      என ஆங்கு,
பிறை புரை ஏர் நுதால்! தாம் எண்ணியவை எல்லாம்
துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே 20
அறை போகும் நெஞ்சு உடையார்க்கு.

68

பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
மதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர்
செது மொழி சீத்த செவி செறு ஆக,
முது மொழி நீரா, புலன் நா உழவர்
புது மொழி கூட்டுண்ணும், புரிசை சூழ், புனல் ஊர! 5
'ஊரன் மன் உரன் அல்லன், நமக்கு' என்ன, உடன், வாளாது,
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேராகி,
களையா நின் குறி, வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை
வளையின்வாய் விடன் மாலை மகளிரை நோவேமோ
'கேள் அலன், நமக்கு அவன்; குறுகன்மின்' என, மற்று எம் 10
தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம்;
'ஊடியார் நலம் தேம்ப, ஒடியெறிந்து, அவர்வயின்
மால் தீர்க்கும் அவன் மார்பு' என்று எழுந்த சொல் நோவேமோ
முகை வாய்த்த முலை பாயக் குழைந்த நின் தார் எள்ள,
வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம்; 15
சேரியால் சென்று, நீ சேர்ந்த இல் வினாயினன்,
தேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ
ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து, எம் இல்,
'பொலிக' எனப் புகுந்த நின் புலையனைக் கண்ட யாம்;
      என ஆங்கு 20
நனவினான் வேறாகும் வேளா முயக்கம்
மனை வரின், பெற்று உவந்து, மற்று எம் தோள் வாட,
'இனையர்' என உணர்ந்தார் என்று ஏக்கற்று, ஆங்கு,
கனவினான் எய்திய செல்வத்து அனையதே
ஐய எமக்கு நின் மார்பு. 25

69

போது அவிழ் பனிப் பொய்கை, புதுவது தளைவிட்ட
தாது சூழ் தாமரைத் தனி மலர்ப் புறம் சேர்பு
காதல் கொள் வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணையாக,
ஓதுடை அந்தணன் எரி வலம் செய்வான் போல், 5
ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு
மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர;
தெள் அரிச் சிலம்பு ஆர்ப்ப, தெருவின்கண் தாக்கி, நின்
உள்ளம் கொண்டு, ஒழித்தாளைக் குறை கூறிக் கொள நின்றாய்
துணிந்தது பிறிதாக, 'துணிவிலள் இவள்' என, 10
பணிந்தாய் போல் வந்து, ஈண்டுப் பயனில மொழிவாயோ;
பட்டுழி அறியாது, பாகனைத் தேரொடும்
விட்டு, அவள் வரல் நோக்கி, விருந்து ஏற்றுக்கொள நின்றாய்
நெஞ்சத்த பிறவாக, 'நிறையிலள் இவள்' என,
வஞ்சத்தான் வந்து, ஈங்கு வலி அலைத்தீவாயோ; 15
இணர் ததை தண் காவின், இயன்ற நின் குறி வந்தாள்
புணர்வினில் புகன்று, ஆங்கே புனலாடப் பண்ணியாய்
தருக்கிய பிறவாக, 'தன் இலள் இவள்' என,
செருக்கினால் வந்து, ஈங்குச் சொல் உகுத்தீவாயோ;
      என ஆங்கு 20
தருக்கேம், பெரும! நின் நல்கல்; விருப்புற்றுத்
தாழ்ந்தாய் போல் வந்து, தகவில செய்யாது,
சூழ்ந்தவை செய்து, மற்று எம்மையும் உள்ளுவாய்
வீழ்ந்தார் விருப்பு அற்றக்கால்.

70

மணி நிற மலர்ப் பொய்கை, மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தென,
கதுமென, காணாது, கலங்கி, அம் மடப் பெடை
மதி நிழல் நீருள் கண்டு, அது என உவந்து ஓடி,
துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு, மிக நாணி, 5
பல் மலரிடைப் புகூஉம் பழனம் சேர் ஊர! கேள்:
நலம் நீப்பத் துறந்து எம்மை, நல்காய் நீ விடுதலின்,
பல நாளும் படாத கண், பாயல் கொண்டு, இயைபவால்;
துணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட,
மண மனைத் ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே 10
அகல நீ துறத்தலின், அழுது ஓவா உண்கண், எம்
புதல்வனை மெய் தீண்ட, பொருந்துதல் இயைபவால்;
நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே
வாராய் நீ துறத்தலின், வருந்திய எமக்கு, ஆங்கே 15
நீர் இதழ் புலராக் கண் இமை கூம்ப இயைபவால்;
நேர் இழை நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தேர் பூண்ட நெடு நல் மான் தௌ஢ மணி வந்து எடுப்புமே;
      என ஆங்கு
மெல்லியான் செவிமுதல் மேல்வந்தான் காலை போல், 20
எல்லாம் துயிலோ எடுப்புக நின் பெண்டிர்
இல்லின் எழீஇய யாழ் தழீஇ, கல்லா வாய்ப்
பாணன் புகுதராக் கால்!