சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதாகிய

கலித்தொகை

... தொடர்ச்சி - 9 ...

81

மை அற விளங்கிய மணி மருள் அவ் வாய் தன்
மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தர,
பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன்,
நலம் பெறு கமழ் சென்னி, நகையொடு துயல்வர,
உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில் 5
அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்ப,
பாலோடு அலர்ந்த முலை மறந்து, முற்றத்துக்
கால் வல் தேர் கையின் இயக்கி, நடை பயிற்றா,
ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல்
போல, வரும் என் உயிர்! 10
பெரும! விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய்,
பெருந் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற,
திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப,
மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்றற்றா,
பெருந்தகாய்! கூறு, சில; 15
எல்லிழாய்! சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து, ஆங்கே
வாய் ஓடி, 'ஏனாதிப்பாடியம்' என்றற்றா,
'நோய் நாம் தணிக்கும் மருந்து' எனப் பாராட்ட,
ஓவாது அடுத்து அடுத்து, 'அத்தத்தா!' என்பான் மாண
வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும், மற்று, இவன் 20
      வாயுள்ளின் போகான்அரோ;
உள்ளி உழையே ஒருங்கு படை விடக்
கள்ளர் படர்தந்தது போல, தாம் எம்மை
எள்ளுமார் வந்தாரே, ஈங்கு
ஏதப்பாடு எண்ணி, புரிசை வியல் உள்ளோர் 25
கள்வரைக் காணாது, 'கண்டேம்' என்பார் போல,
சேய் நின்று, செய்யாத சொல்லிச் சினவல்; நின்
ஆணை கடக்கிற்பார் யார்;
அதிர்வு இல் படிறு எருக்கி, வந்து என் மகன்மேல்,
முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி 30
உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப
எதிர் வளி நின்றாய்; நீ செல்
இனி, 'எல்லா! யாம் தீதிலேம்' என்று தெளிப்பவும், கைந்நீவி
யாதொன்றும் எம்கண் மறுத்தரவு இல்லாயின்,
மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம், 35
தாவா விருப்பொடு கன்று யாத்துழிச் செல்லும்
ஆ போல் படர் தக, நாம்.

82

ஞாலம் வறம் தீரப் பெய்ய, குணக்கு ஏர்பு,
காலத்தில் தோன்றிய கொண்மூப் போல், எம் முலை
பாலொடு வீங்கத் தவ நெடிதாயினை;
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
புக்க வழி எல்லாம் கூறு; 5
கூறுவேன்; மேயாயே போல வினவி, வழிமுறைக்
காயாமை வேண்டுவல், யான்!
      காயேம்.
மடக் குறு மாக்களோடு ஓரை அயரும்
அடக்கம் இல் போழ்தின்கண், தந்தை காமுற்ற 10
தொடக்கத்துத் தாயுழைப் புக்காற்கு, அவளும்
மருப்புப் பூண் கையுறையாக அணிந்து,
'பெருமான், நகைமுகம் காட்டு!' என்பாள் கண்ணீர்
சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன; மற்றும்,
வழிமுறைத் தாயுழைப் புக்காற்கு, அவளும் 15
மயங்கு நோய் தாங்கி, மகன் எதிர் வந்து,
முயங்கினள் முத்தினள் நோக்கி, நினைந்தே,
'நினக்கு யாம் யாரேம் ஆகுதும்?' என்று,
வனப்பு உறக் கொள்வன நாடி அணிந்தனள்,
ஆங்கே, 'அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும் 20
பெருமான் பரத்தைமை ஒவ்வாதி' என்றாள்;
அவட்கு இனிதாகி விடுத்தனன் போகித்
தலைக் கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்
புலத் தகைப் புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு
கோல் தா; நினக்கு அவள் யார் ஆகும்? எல்லா! 25
வருந்தி யாம் நோய் கூர, நுந்தையை என்றும்
பருந்து எறிந்தற்றாகக் கொள்ளும்; கொண்டாங்கே,
தொடியும் உகிரும் படையாக நுந்தை
கடியுடை மார்பின் சிறு கண்ணும் உட்காள்,
வடுவும் குறித்தாங்கே செய்யும். விடு, இனி; 30
அன்ன பிறவும், பெருமான் அவள்வயின்
துன்னுதல் ஓம்பி, திறவது இல் முன்னி, நீ
ஐயம் இல்லாதவர் இல் ஒழிய, எம் போலக்
கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல்;
அமைந்தது, இனி நின் தொழில். 35

83

பெருந் திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனை,
பொருந்து நோன் கதவு ஒற்றிப் புலம்பி யாம் உலமர,
இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின்
விளையாட்டிக்கொண்டு வரற்கு எனச் சென்றாய்,
உளைவு இலை; ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவெல்லாம் 5
நீட்டித்த காரணம் என்?
      கேட்டீ,
பெரு மடற் பெண்ணைப் பிணர்த் தோட்டுப் பைங் குரும்பைக்
குட வாய்க் கொடிப் பின்னல் வாங்கி, தளரும்
பெரு மணித் திண் தேர்க் குறுமக்கள் நாப்பண், 10
அகல் நகர் மீள்தருவானாக, புரி ஞெகிழ்பு
நீல நிரைப் போது உறு காற்கு உலைவன போல்,
சாலகத்து ஒல்கிய கண்ணர், 'உயர் சீர்த்தி
ஆல் அமர் செல்வன் அணி சால் மகன் விழாக்
கால்கோள்' என்று ஊக்கி, கதுமென நோக்கி, 15
திருந்துஅடி நூபுரம் ஆர்ப்ப இயலி, விருப்பினால்,
'கண்ணும், நுதலும், கவுளும், கவவியார்க்கு
ஒண்மை எதிரிய அம் கையும், தண் எனச்
செய்வன சிறப்பின் சிறப்புச் செய்து, இவ் இரா
எம்மொடு சேர்ந்து சென்றீவாயால்; செம்மால்! 20
நலம் புதிது உண்டு உள்ளா நாணிலி செய்த
புலம்பு எலாம் தீர்க்குவேம் மன்' என்று இரங்குபு,
வேற்று ஆனாத் தாயர் எதிர்கொள்ள, மாற்றாத
கள்வனால் தங்கியது அல்லால், கதியாதி,
ஒள்ளிழாய்! யான் தீது இலேன் 25
எள்ளலான், அம் மென் பணைத் தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு
எம் இல் வருதியோ? எல்லா! நீ தன் மெய்க்கண்
அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி,
முந்தை இருந்து மகன் செய்த நோய்த்தலை
வெந்த புண் வேல் எறிந்தற்றால், வடுவொடு 30
தந்தையும் வந்து நிலை.

84

உறு வளி தூக்கும் உயர் சினை மாவின்
நறு வடி ஆர் இற்றவை போல் அழிய,
கரந்து யான் அரக்கவும், கை நில்லா வீங்கிச்
சுரந்த என் மென் முலைப் பால் பழுதாக நீ
நல் வாயில் போத்தந்த பொழுதினான், 'எல்லா! 5
கடவுட் கடி நகர்தோறும் இவனை
வலம் கொளீஇ வா' என, சென்றாய் விலங்கினை
ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள்
யார் இல் தவிர்ந்தனை? கூறு;
நீருள் அடை மறை ஆய் இதழ்ப் போதுபோல் கொண்ட 10
குடைநிழல் தோன்றும் நின் செம்மலைக் காணூஉ,
'இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு, உள்ளா
மகன் அல்லான் பெற்ற மகன்' என்று அகல்நகர்
வாயில் வரை இறந்து போத்தந்து, தாயர்
தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன்; மற்று, அவர் 15
தம்தம் கலங்களுள், 'கையுறை' என்று இவற்கு,
ஒத்தவை ஆராய்ந்து, அணிந்தார் 'பிறன் பெண்டிர்
ஈத்தவை கொள்வானாம், இஃது ஒத்தன்; சீத்தை,
செறு தக்கான் மன்ற பெரிது;
சிறு பட்டி; ஏதிலார் கை, எம்மை எள்ளுபு நீ தொட்ட, 20
மோதிரம் யாவோ; யாம் காண்கு;
அவற்றுள், நறா இதழ் கண்டன்ன செவ் விரற்கு ஏற்பச்
சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள்
குறி அறிந்தேன்; 'காமன் கொடி எழுதி, என்றும்
செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில் 25
பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல்' என்பது தன்னை
அறீஇய செய்த வினை;
அன்னையோ? இஃது ஒன்று
முந்தைய கண்டும், எழுகல்லாத என் முன்னர்,
வெந்த புண் வேல் எறிந்தற்றா, இஃது ஒன்று 30
தந்தை இறைத் தொடி மற்று இவன் தன் கைக்கண்
தந்தார் யார், எல்லாஅ! இது;
'இஃது ஒன்று என் ஒத்துக் காண்க, பிறரும் இவற்கு' என்னும்
தன் நலம் பாடுவி, தந்தாளா நின்னை,
'இது தொடுக' என்றவர் யார்; 35
அஞ்சாதி; நீயும் தவறிலை; நின் கை இது தந்த
பூ எழில் உண்கண் அவளும் தவறிலள்;
வேனிற் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்?
மேல் நின்றும் எள்ளி, இது இவன் கைத் தந்தாள்
தான் யாரோ? என்று வினவிய நோய்ப்பாலேன் 40
யானே தவறுடையேன்!

85

காலவை, சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடு
பொடி அழற் புறம் தந்த செய்வுறு கிண்கிணி
உடுத்தவை, கைவினைப் பொலிந்த காசு அமை பொலங் காழ்; மேல்
மை இல் செந் துகிர்க் கோவை; அவற்றின் மேல்
தைஇய, பூந் துகில், ஐது கழல் ஒரு திரை; 5
கையதை, அலவன் கண் பெற அடங்கச் சுற்றிய
பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி;
பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும்
செறியக் கட்டி, ஈர்இடைத் தாழ்ந்த,
பெய் புல மூதாய்ப் புகர் நிறத் துகிரின் 10
மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண்;
சூடின, இருங் கடல் முத்தமும், பல் மணி, பிறவும், ஆங்கு
ஒருங்கு உடன் கோத்த உருள் அமை முக் காழ்; மேல்
சுரும்பு ஆர் கண்ணிக்குச் சூழ் நூலாக,
அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண, 15
சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை;
ஆங்க, அவ்வும் பிறவும் அணிக்கு அணியாக, நின்
செல்வு உறு திண் தேர்க் கொடுஞ் சினைக் கைப்பற்றிப்
பைபயத் தூங்கும் நின் மெல் விரற் சீறடி
நோதலும் உண்டு; ஈங்கு என் கை வந்தீ, 20
செம்மால்! நின் பால் உண்ணிய;
பொய் போர்த்துப் பாண் தலை இட்ட பல வல் புலையனைத்
தூண்டிலா விட்டுத் துடக்கி, தான் வேண்டியார்
நெஞ்சம் பிணித்தல் தொழிலாத் திரிதரும்
நுந்தைபால் உண்டி, சில; 25
நுந்தை வாய் மாயச் சூள் தேறி, மயங்கு நோய் கைமிக,
பூ எழில் உண்கண் பனி பரப்ப, கண் படா
ஞாயர்பால் உண்டி, சில;
அன்னையோ! யாம் எம் மகனைப் பாராட்ட, கதுமெனத்
தாம் வந்தார், தம் பாலவரோடு; தம்மை 30
வருக என்றார், யார்கொலோ, ஈங்கு;
என் பால் அல் பாராட்டு உவந்தோய்! குடி; உண்டீத்தை; என்
பாராட்டைப்பாலோ சில;
செருக் குறித்தாரை உவகைக் கூத்தாட்டும்
வரிசைப் பெரும் பாட்டொடு எல்லாம் பருகீத்தை 35
தண்டுவென் ஞாயர் மாட்டைப் பால்.

86

மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்,
கை புனை முக்காழ் கயந் தலைத் தாழ,
பொலம் செய் மழுவொடு வாள் அணி கொண்ட
நலம் கிளர் ஒண் பூண் நனைத்தரும் அவ் வாய்
கலந்து கண் நோக்கு ஆர, காண்பு இன் துகிர்மேல் 5
பொலம் புனை செம்பாகம் போர் கொண்டு இமைப்ப,
கடி அரணம் பாயா நின் கை புனை வேழம்,
தொடியோர் மணலின் உழக்கி, அடி ஆர்ந்த
தேரை வாய்க் கிண்கிணி ஆர்ப்ப, இயலும் என்
போர் யானை, வந்தீக, ஈங்கு! 10
செம்மால்! வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும், நுந்தை
நிலைப் பாலுள் ஒத்த குறி என் வாய்க் கேட்டு ஒத்தி;
கன்றிய தெவ்வர்க் கடந்து களம் கொள்ளும்
வென்றிமாட்டு ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி,
'ஒன்றினேம் யாம்' என்று உணர்ந்தாரை, நுந்தை போல், 15
மென் தோள் நெகிழ விடல்;
பால் கொளல் இன்றி, பகல் போல், முறைக்கு ஒல்காக்
கோல் செம்மை ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி,
கால் பொரு பூவின் கவின் வாட, நுந்தைபோல்,
சால்பு ஆய்ந்தார் சாய விடல்; 20
வீதல் அறியா விழுப் பொருள் நச்சியார்க்கு
ஈதல்மாட்டு ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி,
மாதர் மென் நோக்கின் மகளிரை, நுந்தைபோல்,
நோய் கூர நோக்காய் விடல்;
      ஆங்க, 25
திறன் அல்ல யாம் கழற, யாரை நகும், இம்
மகன் அல்லான் பெற்ற மகன்;
மறை நின்று, தாம் மன்ற வந்தீத்தனர்
'ஆயிழாய்! தாவாத எற்குத் தவறு உண்டோ ? காவாது ஈங்கு
ஈத்தை, இவனை யாம் கோடற்கு' சீத்தை; யாம் 30
கன்றி அதனைக் கடியவும், கை நீவி,
குன்ற இறு வரைக் கோண்மா இவர்ந்தாங்கு,
தந்தை வியன் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா
அன்பிலி பெற்ற மகன்.

87

ஒரூஉ நீ; எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை
வெரூஉதும், காணுங்கடை;
தெரியிழாய்! செய் தவறு இல்வழி, யாங்குச் சினவுவாய்,
மெய் பிரிந்து, அன்னவர்மாட்டு,
ஏடா! நினக்குத் தவறு உண்டோ ? நீ வீடு பெற்றாய்; 5
இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி;
நிலைப் பால் அறியினும், நின் நொந்து நின்னைப்
புலப்பார் உடையர், தவறு;
அணைத் தோளாய்! தீயாரைப் போல, திறன் இன்று உடற்றுதி;
காயும் தவறு இலேன் யான்; 10
மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது
நாணிலன்ஆயின், நலிதந்து அவன்வயின்
ஊடுதல் என்னோ, இனி;
'இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம்' என்னும்
தகையது காண்டைப்பாய், நெஞ்சே! பனி ஆனாப் 15
பாடு இல் கண் பாயல் கொள.

88

ஒரூஉ; கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற
முடி உதிர் பூந் தாது மொய்ம்பின ஆக,
தொடிய, எமக்கு நீ யாரை? பெரியார்க்கு
அடியரோ ஆற்றாதவர்;
கடியர் தமக்கு யார் சொல்லத் தக்கார் மாற்று; 5
வினைக்கெட்டு, வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின்
மாயம், மருள்வாரகத்து;
ஆயிழாய்! நின் கண் பெறின் அல்லால், இன் உயிர் வாழ்கல்லா
என்கண் எவனோ, தவறு;
இஃது ஒத்தன்! புள்ளிக் களவன் புனல் சேர் பொதுக்கம் போல், 10
வள் உகிர் போழ்ந்தனவும், வாள் எயிறு உற்றனவும்,
ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும், நல்லார்
சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பும்,
தவறாதல் சாலாவோ? கூறு;
'அது தக்கது; வேற்றுமை என்கண்ணோ ஓராதி; தீது இன்மை 15
தேற்றக் கண்டீயாய்; தெளிக்கு;
இனித் தேற்றேம் யாம்,
தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார்
தார் மயங்கி வந்த தவறு அஞ்சி, போர் மயங்கி,
நீ உறும் பொய்ச் சூள் அணங்கு ஆகின், மற்று இனி 20
யார் மேல்? விளியுமோ? கூறு.

89

யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர்
ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து; எம் மனை
வாரல்; நீ வந்தாங்கே மாறு;
என் இவை, ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று
போர் எதிர்ந்தற்றாப் புலவல்? நீ கூறின், என் 5
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது;
ஏஎ! தெளிந்தேம் யாம்; காயாதி எல்லாம் வல் எல்லா!
பெருங் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு,
வருந்தல் நின் வஞ்சம் உரைத்து;
மருந்து இன்று மன்னவன் சீறின், தவறு உண்டோ ? நீ நயந்த, 10
இன்னகை! தீதோ இலேன்;
மாண மறந்து உள்ளா நாணிலிக்கு இப் போர்
புறம் சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே! உறழ்ந்து இவனைப்
பொய்ப்ப விடேஎம் என நெருங்கின், தப்பினேன்
என்று அடி சேர்தலும் உண்டு! 15

90

கண்டேன், நின் மாயம் களவு ஆதல்; பொய்ந் நகா,
மண்டாத சொல்லித் தொடாஅல்; தொடீஇய நின்
பெண்டிர் உளர்மன்னோ, ஈங்கு;
ஒண்தொடி! நீ கண்டது எவனோ தவறு?
கண்டது நோயும் வடுவும் கரந்து, மகிழ் செருக்கி, 5
பாடு பெயல் நின்ற பானாள் இரவில்
தொடி பொலி தோளும், முலையும், கதுப்பும்,
வடிவு ஆர் குழையும், இறையும், பொறையா
ஒடிவது போலும் நுசுப்போடு, அடி தளரா,
ஆராக் கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன் 10
சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப, சிவந்து, நின்
போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ?
ஆயிழை ஆர்க்கும் ஒலி கேளா, அவ் எதிர்
தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ?
மாறாள் சினைஇ, அவள் ஆங்கே, நின் மார்பில் 15
நாறு இணர்ப் பைந் தார் பரிந்தது அமையுமோ?
'தேறு நீ; தீயேன் அலேன்' என்று மற்று அவள்
சீறடி தோயா இறுத்தது அமையுமோ?
கூறு இனி; காயேமோ, யாம்;
தேறின், பிறவும் தவறு இலேன் யான்; 20
அல்கல் கனவுகொல் நீ கண்டது;
'கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள்
கண்ட கனவு' என, 'காணாது, மாறு உற்று
பண்டைய அல்ல, நின் பொய்ச் சூள், நினக்கு; எல்லா!
நின்றாய்; நின் புக்கில் பல' 25
மென் தோளாய்! நல்கு, நின் நல் எழில்; உண்கு
ஏடா! குறை உற்று நீ எம் உரையல்! நின் தீமை
பொறை ஆற்றேம் என்றல் பெறுகுமோ,
யாழ நிறை ஆற்றா நெஞ்சு உடையேம்.