சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதாகிய

கலித்தொகை

... தொடர்ச்சி - 12 ...

111

தீம் பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து, மனை நிறீஇ, யாய் தந்த
பூங் கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ, பாங்கரும்
முல்லையும் தாய பாட்டங்கால் தோழி! நம்
புல்லினத்து ஆயர் மகளிரோடு எல்லாம் 5
ஒருங்கு விளையாட, அவ் வழி வந்த
குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன், மற்று என்னை,
'முற்று இழை ஏஎர் மட நல்லாய்! நீ ஆடும்
சிற்றில் புனைகோ, சிறிது?' என்றான்; எல்லா! நீ,
"பெற்றேம் யாம்" என்று, பிறர் செய்த இல் இருப்பாய்; 10
கற்றது இலை மன்ற காண்' என்றேன். 'முற்றிழாய்!
தாது சூழ் கூந்தல் தகை பெறத் தைஇய
கோதை புனைகோ, நினக்கு?' என்றான்; 'எல்லா! நீ
ஏதிலார் தந்த பூக் கொள்வாய்; நனி மிகப்
பேதையை மன்ற பெரிது' என்றேன். 'மாதராய்! 15
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலைமேல்
தொய்யில் எழுதுகோ மற்று?' என்றான்; 'யாம் பிறர்
செய் புறம் நோக்கி இருத்துமோ? நீ பெரிது
மையலைமாதோ; விடுக!' என்றேன். தையலாய்!
சொல்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப்ப, 20
அல்லாந்தான் போலப் பெயர்ந்தான்; அவனை நீ
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து, எந்தையும்
யாயும் அறிய உரைத்தீயின், யான் உற்ற
நோயும் களைகுவைமன்.

112

யார் இவன், என்னை விலக்குவான்? நீர் உளர்
பூந் தாமரைப் போது தந்த விரவுத் தார்க்
கல்லாப் பொதுவனை; நீ மாறு; நின்னொடு
சொல்லல் ஓம்பு என்றார், எமர்;
எல்லா! 'கடாஅய கண்ணால், கலைஇய நோய் செய்யும் 5
நடாஅக் கரும்பு அமன்ற தோளாரைக் காணின்,
விடாஅல்; ஓம்பு' என்றார், எமர்;
கடாஅயார், நல்லாரைக் காணின், விலக்கி, நயந்து, அவர்
பல் இதழ் உண்கண்ணும் தோளும் புகழ் பாட,
நல்லது கற்பித்தார் மன்ற; நுமர் பெரிதும் 10
வல்லர், எமர்கண் செயல்
ஓஒ! வழங்காப் பொழுது, நீ கன்று மேய்ப்பாய் போல்,
வழங்கல் அறிவார் உரையாரேல், எம்மை
இகழ்ந்தாரே அன்றோ, எமர்;
ஒக்கும்; அறிவல் யான் எல்லா! விடு; 15
'விடேன், யான்; என், நீ குறித்தது? இருங் கூந்தால்!
நின்னை, "என் முன் நின்று,
சொல்லல் ஓம்பு" என்றமை அன்றி, "அவனை நீ
புல்லல் ஓம்பு" என்றது உடையரோ? மெல்ல
முயங்கு; நின் முள் எயிறு உண்கும் 'எவன்கொலோ? 20
மாயப் பொதுவன் உரைத்த உரை எல்லாம்
வாய் ஆவதுஆயின், தலைப்பட்டாம்; பொய்ஆயின்,
சாயல் இன் மார்பில் கமழ்தார் குழைத்த நின்
ஆய் இதழ் உண்கண் பசப்ப, தட மென் தோள்
சாயினும், ஏஎர் உடைத்து.' 25

113

நலம் மிக நந்திய நய வரு தட மென் தோள்,
அலமரல் அமர் உண்கண், அம் நல்லாய்! நீ உறீஇ,
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்துச் செல்
பேர் ஏமுற்றார் போல, முன் நின்று, விலக்குவாய்
யார் எல்லா! நின்னை அறிந்ததூஉம் இல்வழி; 5
தளிரியால்! என் அறிதல் வேண்டின், பகை அஞ்சாப்
புல்லினத்து ஆயர் மகனேன், மற்று யான்
ஒக்கும்மன்;
புல்லினத்து ஆயனை நீ ஆயின், குடம் சுட்டு
நல் இனத்து ஆயர், எமர் 10
'எல்லா!
நின்னொடு சொல்லின், ஏதமோ இல்லைமன்'
'ஏதம் அன்று; எல்லை வருவான் விடு'
விடேன்,
உடம்பட்டு நீப்பார் கிளவி, மடம் பட்டு, 15
மெல்லிய ஆதல் அறியினும், மெல்லியால்!
நின் மொழி கொண்டு, யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு
என் நெஞ்சம் ஏவல் செயின்;
'நெஞ்சு ஏவல் செய்யாது' என நின்றாய்க்கு, 'எஞ்சிய
காதல் கொள் காமம் கலக்குற' ஏதிலார் 20
பொய்ம் மொழி தேறுவது என்;
தெளிந்தேன், தெரியிழாய்! யான்;
பல்கால், யாம் கான்யாற்று அவிர் மணற் தண் பொழில்,
அல்கல் அகல் அறை, ஆயமொடு ஆடி,
முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து, எல்லை 25
இரவு உற்றது; இன்னும் கழிப்பி;
அரவு உற்று, உருமின் அதிரும் குரல் போல், பொரு முரண்
நல் ஏறு நாகுடன் நின்றன,
பல் ஆன் இன நிரை; நாம் உடன் செலற்கே.

114

வாரி, நெறிப்பட்டு, இரும் புறம் தாஅழ்ந்த
ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ
புதுவ மலர் தைஇ, எமர் என் பெயரால்,
வதுவை அயர்வாரைக் கண்டும் 'மதி அறியா
ஏழையை' என்று அகல நக்கு, வந்தீயாய், நீ 5
தோழி! அவனுழைச் சென்று;
சென்று யான் அறிவேன்; கூறுக, மற்று இனி;
'சொல் அறியாப் பேதை' மடவை! 'மற்று எல்லா!
நினக்கு ஒரூஉம்; மற்று என்று அகல் அகலும்; நீடு இன்று;
நினக்கு வருவதாக் காண்பாய்' அனைத்தாகச் 10
சொல்லிய சொல்லும் வியம் கொளக் கூறு;
தரு மணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,
எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும்
பெரும் மணம் எல்லாம் தனித்தே ஒழிய
வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த 15
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒரு மணம் தான் அறியும்; ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்,
அரு நெறி ஆயர் மகளிர்க்கு 20
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே.

115

'தோழி! நாம், காணாமை உண்ட கடுங் கள்ளை, மெய் கூர,
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு,
கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம்
புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்
முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்! 5
கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே,
அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண,
அன்னை முன் வீழ்ந்தன்று, அப் பூ;
அதனை வினவலும் செய்யாள், சினவலும் செய்யாள், 10
நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு,
நீங்கிப் புறங்கடைப் போயினாள்; யானும், என்
சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த
பூங் கரை நீலம் தழீஇ, தளர்பு ஒல்கி,
பாங்கு அருங் கானத்து ஒளித்தேன்.' 'அதற்கு, எல்லா! 15
ஈங்கு எவன் அஞ்சுவது;
அஞ்சல், அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின், நமரும்
அவன்கண் அடைசூழ்ந்தார், நின்னை; அகன் கண்
வரைப்பின் மணல் தாழப் பெய்து, திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம், 20
அல்கலும் சூழ்ந்த வினை.'

116

பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம்; எம்
தாம்பின் ஒரு தலை பற்றினை, ஈங்கு எம்மை
முன்னை நின்றாங்கே விலக்கிய எல்லா! நீ
என்னை ஏமுற்றாய் விடு;
விடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர் மண்டும் 5
கடு வய நாகு போல் நோக்கி, தொழுவாயில்
நீங்கி, சினவுவாய் மற்று;
நீ நீங்கு; கன்று சேர்ந்தார்கண் கத ஈற்றாச் சென்றாங்கு,
வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு;
யாய் வருக ஒன்றோ; பிறர் வருக; மற்று நின் 10
கோ வரினும் இங்கே வருக; தளரேன் யான்,
நீ அருளி நல்கப் பெறின்;
நின்னை யான் சொல்லினவும் பேணாய், நினைஇ'
கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து, எனையதூஉம்
மாறு எதிர் கூறி, மயக்குப்படுகுவாய்! 15
கலத்தொடு யாம் செல்வுழி நாடி, புலத்தும்
வருவையான் நாண்இலி! நீ

117

மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ,
பேணித் துடைத்தன்ன மேனியாய்! கோங்கின்
முதிரா இள முகை ஒப்ப, எதிரிய
தொய்யில் பொறித்த வன முலையாய்! மற்று, நின்
கையது எவன்? மற்று உரை; 5
'கையதை சேரிக் கிழவன் மகளேன் யான்; மற்று இஃது ஓர்
மாதர்ப் புலைத்தி விலையாகச் செய்தது ஓர்
போழின் புனைந்த வரிப் புட்டில்.' 'புட்டிலுள் என் உள?
காண் தக்காய்! எற் காட்டிக் காண்;'
காண், இனி: தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு 10
காட்டுச் சார்க் கொய்த சிறு முல்லை, மற்று இவை
முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய்!
எல்லிற்று, போழ்து ஆயின் ஈதோளிக் கண்டேனால்;
'செல்' என்று நின்னை விடுவேன், யான்; மற்று எனக்கு
மெல்லியது, ஓராது அறிவு. 15

நல்லந்துவனார் அருளிய
நெய்தற்கலி

118

வெல் புகழ் மன்னவன், விளங்கிய ஒழுக்கத்தால்,
நல் ஆற்றின் உயிர் காத்து, நடுக்கு அற, தான் செய்த
தொல் வினைப் பயன் துய்ப்ப, துறக்கம் வேட்டு எழுந்தாற்போல்
பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர,
ஆனாது கலுழ் கொண்ட உலகத்து, மற்று அவன் 5
ஏனையான் அளிப்பான் போல், இகல் இருள் மதி சீப்ப,
குடை நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும்
இடை நின்ற காலம் போல், இறுத்தந்த மருள் மாலை!
மாலை நீ தூ அறத் துறந்தாரை நினைத்தலின், கயம் பூத்த
போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய்; 10
ஆய் சிறை வண்டு ஆர்ப்ப, சினைப் பூப் போல் தளை விட்ட
காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்;
மாலை நீ தையெனக் கோவலர் தனிக் குழல் இசை கேட்டு
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய்;
செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும், 15
பொய் தீர்ந்த புணர்ச்சியுள் புது நலம் கடிகல்லாய்;
மாலை நீ தகை மிக்க தாழ் சினைப் பதி சேர்ந்து புள் ஆர்ப்ப,
பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய்;
தகை மிக்க புணர்ச்சியார், தாழ் கொடி நறு முல்லை
முகை முகம் திறந்தன்ன, முறுவலும் கடிகல்லாய்; 20
      என ஆங்கு
மாலையும் அலரும் நோனாது, எம்வயின்
நெஞ்சமும் எஞ்சும்மன் தில்ல எஞ்சி,
உள்ளாது அமைந்தோர், உள்ளும்,
உள் இல் உள்ளம், உள்உள் உவந்தே. 25

119

அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாயாகப்
பகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர,
இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர,
நிலவுக் காண்பது போல அணி மதி ஏர்தர,
கண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்ப, 5
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச,
முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த,
சிறு வெதிர்ங் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மென,
பறவை தம் பார்ப்பு உள்ள, கறவை தம் பதிவயின்
கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர, 10
மா வதி சேர, மாலை வாள் கொள,
அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து
செந் தீச் செவ்அழல் தொடங்க வந்ததை
வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார், 15
மாலை என்மனார், மயங்கியோரே.

120

'அருள் தீர்ந்த காட்சியான், அறன் நோக்கான், நயம் செய்யான்,
வெருவுற உய்த்தவன் நெஞ்சம் போல், பைபய
இருள் தூர்பு, புலம்பு ஊர, கனை சுடர் கல் சேர
உரவுத் தகை மழுங்கித் தன் இடும்பையால் ஒருவனை
இரப்பவன் நெஞ்சம் போல், புல்லென்று, புறம் மாறிக் 5
கரப்பவன் நெஞ்சம் போல், மரம் எல்லாம், இலை கூம்ப
தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறாக,
நால் திசையும் நடுக்குறூஉம் மடங்கல் காலை,
கூற்று நக்கது போலும், உட்குவரு கடு மாலை!
மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாராப் பொழுதின்கண், 10
வெள்ள மான் நிறம் நோக்கிக் கணை தொடுக்கும் கொடியான் போல்,
அல்லற்பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ;
மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி,
போர் தொலைந்து இருந்தாரைப் பாடு எள்ளி நகுவார் போல்,
ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ; 15
மாலை நீ கந்து ஆதல் சான்றவர் களைதாராப் பொழுதின்கண்,
வெந்தது ஓர் புண்ணின்கண் வேல் கொண்டு நுழைப்பான் போல்,
காய்ந்த நோய் உழப்பாரைக் கலக்கிய வந்தாயோ;
      என ஆங்கு,
இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை, 20
துனி கொள் துயர் தீரக் காதலர் துனைதர
மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை
ஒல்லென நீக்கி, ஒருவாது காத்து ஆற்றும்
நல் இறை தோன்ற, கெட்டாங்கு
இல்லாகின்றால், இருளகத்து ஒளித்தே. 25