புகழேந்திப் புலவர்

இயற்றிய

நளவெண்பா

தெளிவுரை: புலியூர்க் கேசிகன்

     இந்நூலை இயற்றிய புகழேந்திப் புலவர் தொண்டை நாட்டுப் பொன்விளைந்த களத்தூரிலே தோன்றியவர். பாண்டியனாகிய வரகுணனுக்குப் பெரிதும் அன்புடையவராக அவன் அவையில் வீற்றிருந்தார். பாண்டியனின் மகளுக்கு ஆசிரியராகவும் விளங்கினார். அவள் சோழ மன்னான குலோத்துங்கனை மணக்கவும், அவள் வேண்டுகோளின்படி இவரும் சோழனின் அவைக்குச் சென்றார். அங்கே இவருக்கும் சோழனின் ஆசிரியர் ஒட்டக்கூத்தருக்கும் பகைமையும் மனமாறுபாடும் உண்டாகி நாளுக்கு நாள் பெருகி வரலாயிற்று. இவர்களுக்கிடையே நடைபெற்ற பலவாக்குவாதங்களுக்குச் சான்றாக பல பாடல்கள் உள்ளன. இதன் பொருட்டு இவர் பல கொடுமைகளுக்கும் உள்ளானார். முடிவில் புலவர்களிடையே சமாதானம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஒட்டக்கூத்தரிடம் மாறுபாடு நிலவிய காலத்தில், இவர் சில காலம் மள்ளுவநாட்டைச் சேர்ந்த சந்திரன் சுவர்க்கி என்னும் குறுநில மன்னனின் ஆதரவில் வாழ்ந்து வந்தார். அந்த நாளில் அவன் விருப்பப்படி இவர் இயற்றியதே இந்த நளவெண்பா என்னும் நூல் ஆகும்.

இந்தத் தெளிவுரை!

     உலகத்து மாந்தராகப் பிறந்தவர்களுக்கு வந்து அமைகின்ற வாழ்க்கைப் பெருநெறியானது, என்றும் ஒரே சீராகச் செம்மையுடன் சென்று கொண்டிருக்கின்ற இயல்பினது அன்று. ஏற்றத் தாழ்வுகள், விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இடையிடையே நேரவே செய்கின்றன.

     ‘வாழ்வு தாழ்வு என்பவை வாழ்க்கையின் நியதியே’ என்பதைத் தெளிவாக வகுத்துக்காட்டி, தாழ்வுற்ற போதும் கலங்காது, வாழ்வின் மலர்ச்சியையே எதிர்நோக்கிச் செல்லுகின்ற உரம்பெற்ற மனநிலை வளர்தல் வேண்டும். இந்த உண்மையை அறிவுறுத்தி, இந்த மனநிலை வளர்வதற்கான வழிவகைகளை அருமையாக எடுத்துச் சொல்வது, நளனின் கதையாகும்.

     சூதினாலே நாடும் நலவாழ்வும் தோற்று, காட்டு வாழ்வினராகி அல்லலுற்று, முடிவில் கண்ணனைத் தூதனுப்பியும் அமைதிக்கு வகை காணாது, வெம்போர் வேட்டலின்றி வேறு யாதும் வகையேயில்லை என்னும் துயரமிகுந்த நிலையில், வருத்தமுற்றிருக்கின்றனர் பாண்டவர்கள்.

     அவர்களுள், அருச்சுனன் பரமசிவனிடம் பாசுபதம் பெற்று வருவதற்குச் சென்றிருக்கின்றான். போரைப்பற்றிய கவலையுடன், தன்னுடைய பிற சோதரரும் அணுக்கரும் உடனிருக்க அமர்ந்திருக்கும் தருமரிடம், வேதவியாசர் வருகின்றார். தருமரைத் தேற்றுமுகத்தான், நளனது வரலாற்றையும் தருமருக்குக் கூறுகின்றார். இந்தக் கதையின் தோற்றம் இங்ஙனம் உரைக்கப்படும்.

     கலியாகிய சனியின் திசையோ, திசாபுத்தியோ நடைபெறுங்காலத்தில், இந்த நளசரிதையைப் படிப்பதனால், துயரங்கள் விலகி நன்மை ஏற்படும் என்பார்கள்.

     இந்தக் கதையின் சிறப்பினை உணர்ந்த ஹர்ஷ கவி, இதனைச் சுவைபட ‘நைஷதம்’ என, வடமொழியிற் காவியமாக்கினார்.

     வடமொழி நைஷதத்தைச் செழுந்தேறலாக விருத்த யாப்பிலே தமிழிற் செய்து உதவியவர், தென்காசிச் சீமையின் அரசரான அதிவீரராம பாண்டியர். அதன் செழுமைக்குச் சான்றாக, ‘நைஷதம் புலவர்க்கு ஔஷதம்’ என்ற சொல்லும் வழங்கி வருகின்றது.

     வடமொழிக் காவியமான ‘நைஷதத்’தை வெண்பா யாப்பினாலே செய்தமைத்துத் தமிழர் உவக்கத் தந்த அருளாளர் புகழேந்திப் புலவர். இவர், காலத்தில் அதிவீரருக்கு முற்பட்டவரும் ஆவர்.

     தொண்டை நாட்டின் பொன்விளைந்த களத்தூரிலே பிறந்தவர் புகழேந்தியார். புலமை நலத்திலேயும் பொன் விளையும் களமாகத் திகழ்ந்தவர். பாண்டியன் வரகுணன்பால் மிகவும் அன்புடையவராகி, அவன் அவையினைத் தம் பெரும் புலமையினாலே அழகுறச் செய்தவர். அவன் செல்வ மகளுக்கு ஆசிரியராகவும் திகழ்ந்தார். அவள் குலோத்துங்க சோழனை மணந்து கொள்ள, அவளுடன் சோணாடு போந்து, சோழனது அவைப் புலவர்களுள் தாமும் ஒரு பெரும் புலவராகச் சீருடன் வீற்றிருந்தார்.

     புகழேந்தியாரின் காலம், தமிழின் பொற்காலமெனும் ஓர் ஒப்பற்ற காலமாகும். கவிராட்சதரான ஒட்டக்கூத்தரும் கவியரசான கம்பரும், மற்றும் சயங்கொண்டார் போன்ற புலவர் பெருமக்களும் தமிழின் சீர்மையைப் பெருக்கி வந்த காலம் அது! அந்தப் பொற்காலத்தே எழுந்த நளவெண்பாவும் ஒப்பற்ற தமிழ்க் கருவூலமாகவே மிளிர்கின்றது.

     புகழேந்தியார், சிலகாலம் வள்ளுவ நாட்டைச் சார்ந்த சந்திரன் சுவர்க்கி என்பானின் ஆதரவில் இருந்தபோது, அவன் விரும்பிக் கேட்டுக்கொள்ளச் செய்ததே இந்நூல் என்பார்கள். அதற்குச் சான்றாக, தம்பால் அன்புடைய சந்திரன் சுவர்க்கியைத் தம் நூலின் தக்க இடங்களில் அமைத்து, இவர் பாடியிருப்பதனையும் காணலாம்.

     நளவெண்பாவின் நயத்தை நாட்டவர் அறிந்து இன்பமுற வேண்டும் என்ற கருத்தினால், பெருமுயற்சியுடன் தமிழ் ஆன்றோர்கள் பலர் அச்சிட்டுப் பரப்பி வந்தனர். அவர்களுள் திரு.டி.சீனிவாச ராக்வாச்சாரியார் அவர்கள் நல்ல பதவுரையுடனும், திரு.கெஸ்ட் என்பாரின் ஆங்கில ஆக்கத்துடனும் வெளியிட்டார்கள். அதன்பின், வித்துவான் ம.மாணிக்கவாசகம் பிள்ளையவர்களின் விருத்தியுரைப் பெரும்பதிப்பும் மிக அருமையாக வெளிவந்தது. மற்றும் பலரும் பல பதிப்புகளைக் கொணர்ந்தனர்.

     தமிழ் மாணவர்களாலும் அறிஞர்களாலும் போற்றிக் கற்கப்படுகின்ற நளவெண்பாவிற்கு ஒரு தெளிவுரை அமைப்பினைச் செய்து, அனைவரும் அதன் நயத்தையும், அது உணர்த்தும் அறத்தையும் அறிந்து இன்புறச் செய்ய வேண்டுமென்று விரும்பினேன்.

     அந்த விருப்பத்தால் இதன் முதற்பதிப்பு ஜூன் 1961இல் வெளிவந்தது. தொடர்ந்து பல பதிப்புக்களும் வந்து கொண்டிருக்கின்றன.

     நளவெண்பா, தமிழ் நயத்தோடு மனவமைதியையும் தருவது. தமிழ்ப் பயிற்சிக்கு ஒரு தெளிந்த ஊற்றுக்கால் போன்றது. கற்கக் கற்கத் தமிழ் நயத்திலே திளைத்து மகிழ்கின்ற ஓர் களிப்பை ஊட்டுவது. காலத்தை வென்று நிற்பது. கவிஞராக விரும்புவோர் இந்நூலை மனப்பாடம் செய்துவிட்டாலே போதும். கவிதை ஊற்றெடுத்துப் பொங்கிப் பெருகி வருவதைக் காண்பார்கள்.

     தமிழன்பர்கள் விரும்பி வரவேற்றுக் கற்றுப் பயன் பெறுவார்கள் என்று நம்புகின்றேன்; அவர்கட்கும் என் வணக்கங்கள்!

     வாழ்க தமிழ்! வளர்க தமிழார்வம்!

புலியூர்க் கேசிகன்

பாயிரம்

கடவுள் வணக்கம்

விநாயகர் வணக்கம்

நேசர் இதங்கூர நிலவலயம் தாங்கு நளன்
மா சரிதங்கூற வருந்துணையாம் - ஈசன்
கரியான னத்தான் கருதுபுகழ் பூண்ட
கரியான னத்தான் கழல். 1

     ஈசனாகிய சிவபெருமானும், கரியவனாகிய திருமாலும், அன்னவாகனனாகிய பிரமனும் நினைந்து போற்றுகின்ற பெரும் புகழினைக் கொண்டிருப்பவன், யானை முகத்தானாகிய விநாயகப் பெருமான். அவன்பால் அன்புடையவர்களுக்கு நன்மைகள் மிகுதியாக வேண்டும். அதனைக் கருதி, இந்த மண்ணுலகத்தினை ஒரு காலத்தே தாங்கி அரசியற்றிவனாகிய நளமகராசனின் பெருமைமிக்க வரலாற்றினைக் கூறிப் போகின்றோம். அதற்கு அந்த விநாயகப் பெருமானின் வீரக்கழல் விளங்கும் திருவடிகளே எமக்குத் துணையாயிருக்குமாக! (நிலவலயம் - நிலமண்டிலம், வலயம் - வட்டம். இதங்கூர்தல் - நன்மை மிகுதிப்படுதல், மாசரிதம் - பெரிய வரலாறு; பெரிதென்றது உணர்த்தும் உண்மைகளின் சிறப்பை நோக்கிக் கூறியதாகும்.)

நம்மாழ்வார் வணக்கம்

நேசர் இதங்கூர நிலவலயம் தாங்குநளன்
மாசரிதம் கூற வருந்துணையாம் - பேசரிய
மாமகிழ்மா றன்புகழாம் வண்தமிழ்வே தம்விரித்த
மாமகிழ்மா றன்தாள் மலர். 2

     எடுத்துச் சொல்வதற்கும் அருமையானது, திருமகள் மகிழ்ச்சி கொள்ளுகின்ற திருமாலினது புகழாகியது, வளவிய தமிழ் வேதமாம் திருவாய்மொழி. அதனைப் பாடியருளியவர், பெருமை பொருந்திய மகிழமலர் மாலையினை உடையவராகிய ‘மாறன்’ எனப்படும் நம்மாழ்வார். அன்பர்கள் இன்புறும் வண்ணம், நிலமண்டிலத்தினைத் தாங்கிய நளனின் பெருமைமிக்க சரித்திரத்தினை எடுத்துரைக்க, அந் நம்மாழ்வாரின் திருவடி மலர்களே எமக்குத் துணையாகுமாக.

     (மா - திருமகள்; பெருமை பொருந்திய. மூன்றாவது அடியில் வரும் ‘மாறன்’ என்பதை, மால்தன் எனப் பகுத்துப் பொருள் கொள்க. மாறன் - நம்மாழ்வாரின் திருப்பெயர்களுள் ஒன்று; தீய வினைகளுக்கு மாறுபட்டவர் என்பது பொருள். திருவாய்மொழிப் பாசுரங்கள் எளிமையும் இனிமையும் பொருள்வளமும் கொண்டவை. அவ்வாறே நளவெண்பாவும் அமைதலை ஆசிரியர் விரும்புகின்றனர். இவ்விரு வெண்பாக்களின் முற்பகுதி ஒன்றாயிருப்பது, ஒரு செய்யுள் பிற்காலத்தாரால் இணைக்கப்பட்டது என்று நினைப்பதற்கும் இடந்தருகின்றது.)

திருமால் வணக்கம்

ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்
முன்னின்றான் வேழம் முதலே என அழைப்ப
என்னென்றான் எங்கட் கிறை. 3

     ஆதிநாளிலே ஒப்பற்ற பன்றி வடிவினனாகி இவ்வுலகைக் காத்தான்; அடியவனாகிய பிரகலாதாழ்வானின் பொருட்டாக, ஒளிமிக்க அழகிய தூணிடத்தே நரசிங்கமாக முந்நாள் வெளிப்பட்டான்; வேதங்களின் முதன்மையான பிரணவப் பொருளாக அமைந்து நிலைபெற்றான்; களிறாகிய கஜேந்திரன் ‘ஆதி மூலமே’ என்று அழைக்கவும், ‘என்னவோ’ எனக் கேட்டு வந்து அதனை முதலைப் பிடியினின்றும் காத்தான், திருமால் - அத்தகைய கருணை கொண்டோனாகிய அவனே, எமக்கும் இறையாவான்! அவனை யாமும் வணங்குவோமாக!

     (கோலம் - பன்றி; வராகவதாரத்தைக் குறித்தது. வேதத்தின் முன் நின்றான் - வேதங்கட்கு முற்படத் தானே அவற்றின் ஆதியாய் மூலப் பொருளாய் நின்றான் எனவும் உரைக்கலாம்.)

சிவபெருமான் வணக்கம்

கலாப மயிலிருந்த பாகத்தார் கங்கை
உலாவு சடைமேல் உறையும் - நிலாவை
வழியவார்த் தாலன்ன மாநீற்றார் நாகம்
கழியவார்த் தார்நமக்கோர் காப்பு. 4

     தோகையுடைய மயிலைப் போன்ற நீலவண்ணச் சாயலினை உடையவள் உமையவள். அவள் வீற்றிருக்கின்ற ஒரு பாதியினை உடையவர் சிவபெருமான். கங்கையானது பாய்ந்தோடுகின்ற தம் சடாபாரத்தின் மேலாகத் தங்கியிருக்கின்ற நிலவின் ஒளி வெள்ளத்தினைத் தம் திருமேனியிலேயும் வழிய வார்த்துக் கொண்டாற் போல விளங்கும் திருவெண்ணீற்றினை அணிந்திருப்பவர் அவர். நாகப் பாம்புகளை மிகுதியாகத் தம் ஆபரணங்களாக அணிந்திருப்பவரும் அவர். அத்தகைய சிவபெருமானும், நமக்கு இணையற்ற காப்பாக விளங்குவாராக!

     (கலாபம் - தோகை. கலாப மயில் - பார்வதி தேவியைக் குறித்தது. கழிய - மிகுதியாக. பாகம் - மேனியின் இடப்பாதி. இவர் திருமாலடியவர் என்பர்; எனினும், சிவபிரானையும் விநாயகரையும் முருகப்பிரானையும் மனங்கனிந்து மணக்கும் தமிழால் போற்றுகின்றனர்.)

முருகப்பிரான் வணக்கம்

நீல நெடுங்கொண்மூ நெற்றி நிழல்நாறிக்
காலை இருள்சீக்கும் காய்கதிர்போல் - சோலை
மணித்தோகை மேல்தோன்றி மாக்கடல்சூர் வென்றோன்
அணிச்சே வடியெம் அரண். 5

     நீலவண்ணத்துடன் நெடுகப் படர்ந்திருக்கின்ற மேகங்களின் உச்சியிலே ஒளிபரப்பியவனாகக் காலைப் பொழுதிலே எழுகின்ற, இருளினைப் போக்குகின்ற வெம்மையினையுடையவன் கதிரவன். அவனைப் போலச் சோலையிடத்த தான நீலவண்ணத் தோகை மயிலின்மேல் எழுந்தருளிச் சென்று, பெருங்கடலிடத்தே மாமரமாகி நின்ற சூரனை அழித்து, வெற்றி கொண்டவன் முருகப்பிரான். அவனுடைய அழகிய சிவந்த திருவடிகள் எமக்குப் பாதுகாவலாகுமாக!

     (மணி - அழகும் ஆம்; நீலமும் ஆம். சூர் - சூரபன்மன்; அவன் முருகனுக்குத் தோற்றோடிச் சென்று கடலிடை மாமரமாக மறைந்து நின்றபோது, வடிவேல் எறிந்து, அம் மாமரத்தைப் பிளந்து, அவனை வென்றதனைக் குறித்தது இது. அரண் - பாதுகாவல்; இடையூறுகளினின்றும் பாதுகாப்பது என்பது கருத்து.)

அவையடக்கம்

வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தின்
தந்துவினால் கட்டச் சமைவதொக்கும் - பைந்தொடையில்
தேன்பாடும் தார் நளன்றன் தெய்வத் திருக்கதையை
யான்பாடல் உற்ற இது. 6

     பசுமையாகத் தொகுக்கப்பெற்ற மயிர்க் கண்ணிகளிடத்தே வண்டினம் மொய்த்துப் பாடிக் கொண்டிருக்கும் தாரினையுடையவன் நளன். அவனது தெய்வத்தன்மை பொருந்திய அழகிய கதையினை, யான் பாடுவதற்கு ஈடுபட்டேன். இது, வெம்மையான ஆற்றலுடைய ஒரு வேழத்தினை, மணமுள்ள தாமரையின் நூலினாலே கட்டுவதற்கு முயல்வது போன்றதொரு ஒரு பேதைமைச் செயலாகும்!

     (எனவே, ஆன்றோர் பிழை ஏதும் காணிற் பொறுப்பாராக என்பதாம்.)

நூலாசிரியர் பற்றி

பாரார் நிடத பதிநளன்சீர் வெண்பாவால்
பேரார் புகழேந்தி பேசினான் - தாரார்
செழியனையும் சென்னியையும் சேரத் திறைகொள்
மொழியின் சுவையே முதிர்ந்து. 7

     வேப்பந் தாரினை அணிந்தோனாகிய பாண்டியனையும், ஆத்தி மாலையினை அணிந்தோனாகிய சோழனையும், ஒரு சேரத் திறைகொள்ளும் தமிழ் மொழியின் சுவையினாலே முதிர்ச்சியுடையதாக, பூவுலகிற் சிறந்த நிடதநாட்டு மன்னனாகிய நளனின் சிறப்பினை, கீர்த்தி வாய்ந்தோராகிய புகழேந்திப் புலவர், வெண்பா யாப்பினாலே எடுத்துக் கூறினார்.

     (புகழேந்திப் புலவர் பாண்டியன் அவையிலும் சோழன் அவையிலும் தம் புலமையினாற் சிறப்புற்றவர். அது குறித்து, அவர் மொழியின் தகைமை சோழ பாண்டியரைத் திறைகொள்ளும் சிறப்புடையது என்கின்றார் கவி. இதனைப் பாடியவர் புகழேந்தியார் காலத்தவராகிய மற்றொரு புலவர் என்பதும், சிறப்புப்பாயிரமாகச் செய்தது இதுவென்பதும், இவ்வெண்பாவின் அமைப்பாலேயே விளங்கும்.)

1. சுயம்வர காண்டம்

1. கதை பிறந்த கதை

தருமனின் முகவாட்டம்

பாண்டவரின் முன்தோன்றல் பார்முழுதும் தோற்றொருநாள்
ஆண்டகையே தூதுவனாய்ச் சென்றவனி - வேண்ட
மறுத்தான் இருந்தானை மண்ணொடும் போய் மாளப்
பொறுத்தான் இருந்தான் புலர்ந்து. 8

     பாண்டவர்களுள் முதற்கண் தோன்றியவன் தரும புத்திரன். அவன், தன் நாடு முழுவதையும் சூதினாலே தோற்றுவிட்டான். ஆண்களுள் தலைசிறந்தோனாகிய கண்ணபிரானே அவன் தூதுவனாகத் துரியோதனனிடம் சென்றான். இழந்த பூமியை அவர்கட்குத் தருமாறும் வேண்டினான். அதற்கு மறுத்தவனாயினான் துரியோதனன். அதன்மேல், அவனுடைய பெரிய படைகளெல்லாம் அவனுடைய நாட்டினோடும் அவனை விட்டுப் போய், அவனும் மாண்டு போகுமாறு, போர் நிகழ்த்தும் பொறுப்பினையும் மேற்கொண்டான், தருமபுத்திரன். அவன், ஒரு நாள், மிகவும் வாட்டமுற்றவனாகக் காட்டிடத்தே ஓரிடத்தில் தங்கி இருந்தான்.

     (பொறுத்தான் - பொறுப்பினை மேற்கொண்டான், தருமபுத்திரன்; பொறுமையாளனும் அவன் ஆம்.)

வரும் தகையோர் வந்தனர்

நாட்டின்கண் வாழ்வைத் துறந்துபோய் நான்மறையோர்
ஈட்டங்கள் சூழ இருந்தானைக் - காட்டில்
பெருந்தகையைக் கண்டார்கள் பேரெழில்தோள் வேந்தர்
வருந்தகையர் எல்லோரும் வந்து. 9

     நாட்டிடத்தே வாழ்ந்த அரசவாழ்வினைக் கைவிட்டுச் சென்று, நான்கு வேதங்களையும் பயில்வோரான முனிவர் கூட்டங்கள் தன்னைச் சூழ்ந்திருக்கக், காட்டிலே அமர்ந்திருந்த பெருந் தகுதியுடையோனாகிய அந்தத் தரும புத்திரனை, பேரழகு பொருந்திய தோள்களையுடைய மன்னர்களுக்குள்ளே அவன்பால் வரத்தகும் தன்மையுடையோர் எல்லாரும், அக் காட்டினிடத்தே வந்து கண்டார்கள்.

     (வருந்தகையார் - பாண்டவர்க்கு வேண்டியவரான அரசர்கள், ஈட்டம் - கூட்டம்)

வேதவியாசர் வந்தார்

கொற்றவேல் தானைக் குருநாடன் பாலணைந்தான்
எற்றுநீர் ஞாலத் திருள்நீங்க - முற்றும்
வழிமுறையே வந்த மறையெல்லாம் தந்தான்
மொழிமுறையே கோத்த முனி. 10

     அலைமோதும் வெள்ளப் பெருக்கினையுடைய கடல்களாற் சூழப்பெற்றிருக்கும் இவ்வுலகத்தின் அறியாமையாகிய இருள் அனைத்தும் விலகுமாறு, முழுவதும் வழிமுறையே ஓதப்பட்டு வந்த வேதங்களை எல்லாம், சொல்லப்படும் இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் எனத் திரட்டிச் சேர்ந்த முனிவனாகிய வேதவியாசன், வெற்றி வேலினைக் கொண்ட படைஞரையுடைய குருநாதனிடத்தே, அப்பொழுது, தானும் வந்து சேர்ந்தான்.

     (‘மொழிமுறையே கோத்த’ என்பதற்கு, அவ் வேதப் பொருளாக அமைந்த புராணங்களை அதுகாறும் ஓதிவந்த அந்த மரபின்படியே முறைப்படுத்தி அமைத்தவன் எனவும் சொல்லுவர். கொற்றம் - வெற்றி, குருநாடு - குரு குலத்தார்க்கு உரிய நாடு.)

தருமன் போற்றினான்

மறைமுதல்வ நீயிங்கே வந்தருளப் பெற்றேன்
பிறவிப் பெருந்துயரம் எல்லாம் - அறவே
பிழைத்தேன்யான் என்றானப் பேராழி யானை
அழைத்தேவல் கொண்ட அரசு. 11

     பெருமையுள்ள சக்கரப்படையினனாகிய கண்ணபிரானையும், தன்பால் அழைத்துத் தனக்குத் தூதாகச் சென்று வருமாறு ஏவல் கொண்டவன் தருமராசன். அவன், “வேத முதல்வனே! நீ இவ்விடத்தே வந்து அருள் செய்யப் பெற்றேன்! அதனாலே, என் பிறவிப் பெருந்துயரமெல்லாம் முற்றவும் நீங்கிப் போயினவனாக உய்தியும் பெற்றேன்” என்று சொல்லியபடி, அந்த வேதவியாசனை வரவேற்றுப் போற்றினான்.

     (பிறவிப் பெருந்துயர் - வினைகட்கு ஏற்ப அவ்வயற்றின் பயனை நுகர்விக்குமாறு உயிர்கட்கு மீண்டும் மீண்டும் வந்து சேரும் பிறவிகளாகிய பெருந்துயரம்.)

வருந்தியது ஏனோ?

மெய்த்திருவந் துற்றாலும் வெய்ந்துயர் வந்துற்றாலும்
ஒத்திருக்கும் உள்ளத் துரவோனே - சித்தம்
வருந்தியவா என்னென்றான் மாமறையால் உள்ளம்
திருந்தியவா மெய்த்தவத்தோன் தேர்ந்து. 12

     பெருமைவாய்ந்த வேதஞானத்தினாலே தன் உள்ளத்திற் செம்மைபெற்ற, யாவரும் விரும்பும் உண்மைத் தவத்தோனாகிய அந்த வேதவியாசன், தருமபுத்திரன் முகக் குறிப்பினை ஆராய்ந்தான். “நிலையான செல்வங்கள் வந்தடைந்தாலும், வெம்மையான துயரங்கள் வந்தடைந்தாலும், விருப்பு வெறுப்பு ஆகியவையின்றி, ஒரே தன்மைத்தாகவே இருக்கின்ற உள்ளப் பண்பினையுடைய வலிமையாளனே! நின் உள்ளமும் இப்பொழுது கலக்கம் அடைந்திருப்பதற்குரிய காரணந்தான் என்னவோ?” என்று கேட்டான். (உரவு - வலிமை. திருந்துதல் - செம்மையாகுதல்; கோட்டம் நீங்கித் தெளிவடைதல்)

கயிலை போக்கினேன்

அம்பொற் கயிலைக்கே ஆகத் தரவணிவார்
தம்பொற் படைக்குத் தமியனா - எம்பியைமுன்
போக்கினேன் என்றுரைத்தான் பூதலத்தும் மீதலத்தும்
வாக்கினேர் இல்லாத மன். 13

     இந்த பூவுலகத்தினிடத்தும், மேலுலகத்தினிடத்தும், வாய்மை உரைப்பதிலே தனக்கு ஒப்பான மனவுறுதியுடையவர் எவருமே இல்லாதபடிக்குச் சிறந்தோன் தருமபுத்திரன். அவன், “மார்பிடத்தே பாம்புகளை அணிபவரான சிவபிரானுடைய பொன்னொளி சிறந்த பாசுபதாஸ்திரமாகிய படையினைப் பெற்றுவரும் பொருட்டாக, என் தம்பியாகிய அருச்சுனனை, அழகிய பொன்மயமான கயிலை மலைக்குத் தனியனாகப் போகச் செய்துள்ளேன்” என்று, தன் கவலைக்கான காரணத்தை வியாசருக்குச் சொல்லி வருந்தினான்.

தோள் இரண்டும் துணை

காண்டா வனந்தீக் கடவுளுணக் கைக்கணையால்
நீண்ட முகில்தடுத்து நின்றாற்கு - மீண்டமரர்
தாளிரண்டும் நோவத் தனித்தனியே ஓடியநாள்
தோளிரண்டும் அன்றோ துணை. 14

     “தீக்கடவுள் காண்டாவனத்தினை உண்ணுமாறு, தன் கைக்கணையின் வலிமையினாலே, நெடுகிப்படர்ந்த மேகத்தையும் முற்காலத்துத் தடுத்து நிறுத்திய வலிமையாளன் நின் தம்பி! அவனுடைய ஆற்றலுக்குப் புறமுதுகிட்டுத் தேவர்களும் தம் தாளிரண்டும் நோவும்படியாக, அந்நாள் தனித்தனியே சிதறுண்டு ஓடினரே! அந்நாளில், அவனுக்கு, அவனுடைய தோள்கள் இரண்டும் அல்லவோ துணையாயிருந்தன!”

     (‘ஆகவே, அவனை நினைத்து வருந்த வேண்டியதில்லை; அவன் தோள் வலிமை பெற்றவன்; சென்ற காரியத்தை வெற்றியுடன் முடித்துத் திரும்பி வருவான்’ என்கிறார் வியாசர்.)

காரணம் யாதோ?

பேரரசும் எங்கள் பெருந்திருவும் கைவிட்டுச்
சேர்வரிய வெங்கானம் சேர்தற்குக் - காரணம்தான்
யாதோவப் பாவென்றான் என்றுந்தன் வெண்குடைக்கீழ்த்
தீதோவப் பார்காத்த சேய். 15

     “எங்களுடைய பேரரசினையும் பெருஞ்செல்வத்தினையும் கைசோர விட்டு, சேர்ந்திருப்பதற்கும் அருமையுடையதான வெம்மையுடைய கானகத்தையும் யாங்கள் அடைந்தோமே; இதற்குக் காரணந்தான் யாதோ ஐயா?” என்று, தன் வெண்கொற்றக் குடைநிழலின் கீழாகத் தீமைகள் அனைத்தும் நீங்கிப் போகுமாறு உலகினைக் காத்தவனாகிய தருமபுத்திரன், அவ் வேதவியாசரிடம், மீண்டும் வருத்தத்துடன் கேட்டான்.

மன்னர்க்கு இயல்பே காண்

கேடில் விழுச்செல்வம் கேடெய்து சூதாடல்
ஏடவிழ்தார் மன்னர்க்கு இயல்பேகாண் - வாடிக்
கலங்கலைநீ என்றுரைத்தான் காமருவு நாடற்கு
இலங்கலைநூல் மார்பன் எடுத்து. 16

     “கெடுதலில்லாத மேலான செல்வமும் கேட்டினை அடையுமாறு சூதாடித் தோல்வியுறல் என்பது, இதழ்விரித்த தாரணியும் மன்னவர்க்கு என்றும் இயல்பே என்பதனை அறிவாயாக. அதனால், நீயும் வாட்டமுற்றுக் கலங்காதிருப்பாயாக” என்று, சோலைகள் செறிந்திருக்கும் குரு நாட்டை உடையவனாகிய அத் தருமனுக்கு விளக்கமுடன் அசைந்தாடும் பூணூலை உடைய மார்பினராகிய வேதவியாசர் எடுத்துக் கூறினார்.

எவரும் உள்ளாரோ?

கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூல்மார்பா மேதினியில் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர். 17

     “வானம் இழந்துபோகவிட்ட மின்னலைப் போன்றதான பூணூலினை அணிந்திருக்கும் மார்பினை உடையோனே! அறிவாகிய கண்ணினை இழந்துபோய் வஞ்சனையுடைய சூதினை ஆடுதலிலே ஈடுபட்டுத் தம் நாட்டையிழந்து காட்டினை அடைந்திருந்து துன்புற்றவராகிய அரசாதாம், என்னினும் வேறு எவரேனும் இதன் முன்பேயும் உள்ளனரோ?” என்று கேட்டுத், தருமன் மிகவும் மனம் நொந்து கொண்டான்.

கலியால் விளைந்த கதை

சேமவேல் மன்னனுக்குச் செப்புவான் செந்தனிக்கோன்
நாமவேல் காளை நளனென்பான் - யாமத்
தொலியாழி வையம் ஒருங்கிழப்பப் பண்டு
கலியான் விளைந்த கதை. 18

     ஒப்பற்ற செங்கோலினையும், அச்சமூட்டும் வேலினையும் உடைய ஏறுபோன்றோனாகிய ‘நளன்’ என்று கூறப்படுபவனுக்கு, யாமத்தினுங்கூட ஒலிக்கும் கடல்சூழ்ந்த தன் நாடெல்லாம் ஒருங்கே இழந்து போகுமாறு, முன்காலத்திலே கலிபகவானுடைய செயலினாலே வந்து நிகழ்ந்த கதையினை, குடிகட்கு நலம் செய்தற்குரிய வேலினை ஏந்தியுள்ள மன்னனாகிய தருமபுத்திரனுக்கு, அந்த வேதவியாச முனிவர் அப்போது எடுத்துச் சொல்வாரானார்.

     (‘வேறு உண்டோ?” எனக் கேட்டவனுக்கு, உண்டென்று கூறி, நளனின் கதையை வேதவியாசர் கூறுகிறார் என்க.)

2. காதல் பிறந்தது

நிடத நாட்டின் சிறப்பு

காமர் கயல்புரழக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் தளையவிழப் - பூமடந்தை
தன்னாட்டம் போலும் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு. 19

     கடலினாலே சூழப்பெற்றிருக்கும் இவ்வுலகத்துள் நல்ல நாடுகளினுள்ளே முதன்மையுடையதாக எடுத்துக் கூறப்படும் சிறப்புடையதாகத் திகழ்ந்தது நளனது நிடதநாடு. அழகிய கயல்மீன்கள் எப்புறமும் புரண்டு கொண்டிருக்கவும், குவளை மலர்களின் மொட்டுக்கள் தம் பிணிப்பவிழ்ந்து மலரவும், செவ்விய தேனையுடைய தாமரை முகைகள் தம் பிணிப்புக்கள் அவிழ்ந்து மலரவுமாக, அந் நிடதநாடு, நிலமகளின் அருட்பார்வையினைப் போன்று தோன்றும் தகைமையினையும் உடையதாயிருந்தது.

     (கயல் மீன்களின் பிறழ்ச்சியும் குவளைகளின் மலர்ச்சியும் கண்களுக்கும், தாமரையின் மலர்ச்சி முகமலர்ச்சிக்கும் உவமையாகக் கொள்க. நிலமகள் என்பதன்றிப், ‘பூமடந்தை’ என்பதற்குத் ‘திருமகள்’ எனலும் ஆம். ஆப்போது, ‘திருமகளின் அருள் நிரம்பியிருந்த நாடு’ அது என்று கொள்ளுக.)

மாவிந்த நகர்ச் சிறப்பு

கோதை மடவார்தம் கொங்கை மிசைத்திமிர்ந்த
சீதக் களபச் செழுஞ்சேற்றால் - வீதிவாய்
மானக் கரிவழுக்கும் மாவிந்தம் என்பதோர்
ஞானக் கலைவாழ் நகர். 20

     கோதையினைக் கூந்தலிற் சூடியவராக விளங்கும் இளம் பெண்களுடைய கொங்கைகளின் மேலாகப் பூசப் பெற்றிருந்த குளுமையான கலவைச் சாந்தாகிய செழுமையான சேற்றின் ஒழுக்கங் காரணமாகத், தெருக்கள் வழியே செல்லும் பெரிய யானைகளும் கால் வழுக்கி வீழுகின்றதும், மெய்ஞ்ஞானமாகிய கலை எங்கும் செழிக்கின்ற நகரமாயிருப்பதுமாக, மாவிந்தம் என்று சொல்லப்படுவதொரு நகரம் அந்த நாட்டிடத்தே உள்ளதாயிருந்தது.

     (’ஞானக் கலை வாழ் நகர்’ - ஞானங்கட்கு அதிதேவதையான கலைமகள் நிலையாகத் தங்கியிருக்கும் நகரமும் ஆம்.)

மாடங்களின் சிறப்பு

நின்று புயல் வானம் பொழிந்த நெடுந்தாரை
என்று மகிழ்கமழும் என்பரால் - தென்றல்
அலர்த்தும் கொடிமாடத் தாயிழையார் ஐம்பால்
புலர்த்தும் புகைவான் புகுந்து. 21

     “வீசும் தென்றற் காற்றானது அசைந்து கொண்டிருக்கும் கொடிகளையுடைய மாடங்களினிடத்தே, தெரிந்தெடுத்த பொருத்தமான ஆபரணங்களை அணிந்தோரான இளம்பெண்கள், தத்தம் கூந்தலுக்கு ஈரம் புலர்த்துதற்கு ஊட்டுகின்ற நறும்புகையானது வானத்தே புகுந்து நிலைபெற்றிருப்பதனால், வானத்து மேகங்கள் பொழியும் நீண்ட மழைத்தாரைகள் யாவும், எக்காலத்தும், அகிற் கட்டையின் நறுமணத்தைக் கமழ்தலாயிருக்கும்” என்று அறிந்தோர் சொல்வார்கள்.

மக்களின் சிறப்பு

வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்சம்
கலங்குவன மாளிகைமேல் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு. 22

     அந்த மாவிந்த நகரத்திலே, கோணுவன கொடிய வில்களேயல்லாமல், மக்கள் மனங்கோணினரென்பதே கிடையாது. தளர்ந்து சோர்வன மகளிர்களின் மென்மையான கூந்தல்களேயல்லாமல், மக்களுள் எவருமே அல்லர். வாய்விட்டு அரற்றுவன மகளிரின் அழகிய காற்சிலம்புகளே அல்லாமல், மக்களுள் எவரும் அரற்றித் துயருறுபவர் அல்லர். கலக்கம் அடைவன தண்ணீரேயன்றிக் குடிமக்களுள் எவருமே அல்லர். நேர்வழியை விட்டுக் குறுக்கிட்டுச் செல்வன மாளிகையின் மேல் விளங்கும் அழகியர்களின் கண்களேயல்லாமல், மக்களுள் வழிபிறழ்வாராக யாருமே இலர்.

     (அவ்வூர் மக்கள் மனங்கோணுதலின்றியும், தளர்வும் சோர்தலும் இன்றியும், வாய்விட்டுப் புலம்பலின்றியும், கலங்குதலின்றியும், வழி பிறழ்தலின்றியும், வளமுடனும் நெறியுடனும் விளங்கினர் என்பது கருத்து.)

கல்லாருமிலர்! இல்லாருமிலர்!

தெரிவனநூல் என்றும் தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே - ஒருபொழுதும்
இல்லா தனவும் இரவே இகழ்ந்தெவரும்
கல்லா தனவுங் கரவு. 23

     அந்நகரத்தே எங்கும் தெரிவன நல்ல நூற்களே; தெரியாதிருப்பன வரிகள் பொருந்திய வளையணிந்தோரான மாதர்களின் இடைகளே! ஒரு சமயத்தும் இல்லாதிருப்பது பிறர் பாற் சென்று இரத்தலாகிய ஒன்றே! இகழ்வுடன் ஒதுக்கி, எவரும் கல்லாமல் விட்டதும் வஞ்சனை என்பதேயாகும்.

முரணையும் மாவிந்தமும்

மாமனுநூல் வாழ வருசந் திரன் சுவர்க்கி
தாமரையாள் வைகும் தடந்தோளான் - காமருபூந்
தாரான் முரணைநகர் தானென்று சாற்றலாம்
பாராளும் வேந்தன் பதி. 24

     தாமரையாளான வெற்றித்திருமகள் நிலைபெற்றிருக்கும் பரந்த தோள்களை உடையவனும், அழகான பூமாலையினை அணிந்தோனும், பெரிதான மனுநூல் உலகிலே வாழ்ந்திருக்குமாறு வந்துதித்தோனுமாகிய, ‘சந்திரன் சுவர்க்கி’ என்பானது முரணையம் பதிதான் என்று உலகாளும் வேந்தனாகிய அந் நள மன்னனின் தலைநகரமான அந்த மாவிந்த நகரத்தையும் சொல்லலாம்.

     (புகழேந்தி, முரணைப்பதிச் சிற்றரசான சந்திரன் சுவர்க்கியின் வேண்டுகோளின்படியே இந்நூலை இயற்றினார். ஆகவே, தம்மை ஆதரித்த வள்ளலை இதன்கண் சிறப்பிக்கின்றார். காமர் - விருப்பந்தருகின்ற, ‘பார்’ - நிடத நாட்டைக் குறிப்பது.)

நளன் என்பான் ஒருவன்!

ஓடாத தானை நளனென் றுளன்ஒருவன்
பீடாரும் செல்வப் பெடைவண்டோ -டூடா
முருகுடைய மாதர் முலைநனைக்கும் தண்தார்
அருகுடையான் வெண்குடையான் ஆங்கு. 25

     சிறப்பு மிகுந்த மாவிந்த நகரமாகிய அவ்விடத்தே, களத்தே புறமுதுகிட்டு ஓடாத ஆண்மையாற் சிறந்த படையினைக் கொண்ட நளன் என்பான் ஒருவன் இருந்தான். பெருமைபொருந்திய காதல் மிகுந்த தன் பெடையினோடும் வண்டானது ஊடல் கொண்டதனாலே, தேன் அருந்துவாரற்று உடைந்து வழிந்தோட, அஃது அருகிலிருக்கும் மாதர்களின் முலையிடங்களை நனைக்கின்ற, குளிர்ந்த மாலையை அணிந்திருப்பவன் அவன்! அரிய வெண்கொற்றக் குடையினையும் உடையவன் அவன்!

     (பீடு - பெருமை. ‘தேன் மாதர் முலை நனைக்கும்’ என்றது, அவர் தம் அணிந்துள்ள மலர்களினின்றும் வழியும் தேனானது, அவர் மார்பிலேயும் ஒழுகலுற்று வழிந்து ஓடுதலால்.)

நளனின் செங்கோற் சிறப்பு

சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறம் கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக் காத்தான் - மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற் பருந்தும்
ஒருகூட்டில் வாழ உலகு. 26

     பூந்தாதுகள் சிந்திக் கொண்டிருக்கும் மாலையினை அணிந்தோனாகிய அந்த நளன், மாதர்கள் தம் அருகிலே வைத்து ஊட்டி வரும் பசுமையான கிளியும், அதனுடன் போராடும் இயல்புடைய பருந்தும் ஒரே கூட்டிலே ஒற்றுமையாகத் தம்முடைய பகையினை மறந்து கூடி வாழுமாறு, குளிர்நிலவு போன்ற தன் வெண்கொற்றக் குடை நிழலின் கீழாகச், சிறந்த அறங்கள் எல்லாம் நிலைபெற்றிருக்கத், தன் நாட்டினை ஒப்பற்ற முறையிலே பேணிக் காத்து வந்தான்.

வீதி வழியாகச் சென்றான்

வாங்குவளைக் கையார் வதன மதிபூத்த
பூங்குவளைக் காட்டிடையே போயினான் - தேங்குவளைத்
தேனாடி வண்டு சிறகுலர்த்தும் நீர்நாடன்
பூனாடிச் சோலை புக. 27

     இனிதான குவளை மலர்களிடத்தேயுள்ள தேனிலே அளைந்தபடி இன்புற்ற வண்டுகள், தம் சிறகுகளை உலர்த்திக் கொண்டிருக்கின்ற நீர் வளமிகுந்த நிடத நாட்டிற்கு உரியவன் அந்த நளமகராசன். அவன், பூக்களை கொய்து வருதலை விரும்பிச் சோலையிற் சென்று புகும்பொருட்டாக வளைவான வளையல்கள் விளங்கும் கையினராஜ பெண்களின் முகங்களாகிய நிலவினிடத்தே பூத்திருக்கும், அழகிய கண்களான நீலமலர் காட்டினிடையே புகுந்து, வீதிவழியாகச் சென்று கொண்டிருந்தான்.

     (வாங்குதல் - வளைதல், ‘அவன் அழகினை மகளிர் கண்டு களிக்கும்படியாக, அவன் அத்துணை எழிலுடன் வீதி உலாச் சென்றான்’ என்பது கருத்து.)

இளவேனில் எதிர் வந்தது

வென்றி மதவேடன் வில்லெடுப்ப வீதியெலாம்
தென்றல் மதுநீர் தெளித்துவர - நின்ற
தளவேனில் மீதலருந் தாழ்வரைசூழ் நாடற்கு
இளவேனில் வந்த தெதிர். 28

     வளர்ந்த முல்லைக் கொடிகள் தினைத்தட்டையின் மீது பற்றிப் படர்ந்து மலர்ந்திருக்கின்ற மலைச்சாரல்கள் சூழ்ந்திருக்கும் நாடனாகிய அந்நளனுக்கு எதிராக, வெற்றி கொள்வோனாகிய மதன் தன் கரும்பு வில்லினை எடுக்கவும், வீதியெல்லாம் தென்றல் மலர்த்தேனாகிய நீரினைத் தெளித்து வரவுமாக, இளவேனிற் காலமும் அவ்விடத்தே வந்து தோன்றியது.

     (‘மதவேடன்’ - மதவேள் + தன் எனப் பிரித்துப் பொருள் கொள்க. மதுநீர் - மலர்த் தேனாகிய நீர். தளவு - செம்முல்லை. ஏனல் - தினை. தாழ்வரை - மலைச்சாரல்; தாழ்ந்த மலைப்பாங்குகள்.)

புழுதி அவித்த பூந்தேன்

தேரின் துகளைத் திருந்திழையார் பூங்குழலின்
வேரின் புனல்நனைப்ப வேயடைந்தான் - கார்வண்டு
தொக்கிருந்தா லித்துழலும் தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப்
புக்கிருந்தால் அன்ன பொழில். 29

     மிகுதியான இருளானது, வெய்யோனாகிய கதிரவனின் எதிரே வருவதற்கு அஞ்சி ஒதுங்கியதாகப் புகுந்து கொண்டிருந்தது போன்ற மரச்செறிவு மிகுந்ததும், கரிய வண்டினம் தொகுதியாகக் கூடியிருந்து ஆரவாரித்துச் சுற்றித் திரிவதுமான பொழினிடத்தே, தான் செல்லும் தேர்ச்சக்கரங்களினிடையே எழுகின்ற புழுதியினைத் திருந்திய அணிகளையுடைய மகளிரின் அழகிய கூந்தல்களினின்றும் வழிகின்ற பூந்தேன் என்னும் நீரானது அவிக்குமாறு கடந்து சென்று, அவனும் அடைந்தனன்.

     (வேரிப் புனல் - பூந்தேன்.)

அன்னம் தோன்றிற்று

நீணிறத்தாற் சோலை நிறம்பெயர நீடியதன்
தாணிறத்தாற் பொய்கைத் தலம்சிவப்ப - மாணிறத்தான்
முன்னப்புள் தோன்றும் முளரித் தலைவைகும்
அன்னப்புள் தோன்றிற்றே ஆங்கு. 30

     அந்தச் சோலையினிடத்தே, மாட்சியமைந்த அழகு படைத்தவனாகிய அந் நளனின் முன்பாக, நீரிலே தோன்றும் தாமரையிடத்தே வாழ்வதான அன்னப்பறவை ஒன்று, தன் உடலின் வெண்மை நிறத்தினாலே சோலையின் நிறம் வெண்ணிறமாகவும், நெடிதான தன் கால்களின் செந்நிறத்தனாலே பொய்கையிடமெல்லாம் செந்நிறமாகவுமாக வந்திருந்து தோன்றிற்று.

     (அன்னத்தின் மேனி ஒளியை வியந்தது இது.)

பிடித்துத் தா என்றான்

பேதை மடவன்னந் தன்னைப் பிழையாமல்
மேதிக் குலவேறி மென்கரும்பைக் - கோதிக்
கடித்துத்தான் முத்துமிழுங் கங்கைநீர் நாடன்
பிடித்துத்தா என்றான் பெயர்ந்து. 31

     எருமை மந்தைகள் சென்று, மென்மையான கரும்புகளைக் கடித்துக் குதப்பி, அவற்றுள்ளிருக்கும் முத்துக்களை உமிழ்ந்து விடுகின்ற, கங்கை நீரால் வளமிகுந்த நிடத நாட்டினையுடையவன் நளன். அங்கிருந்த பணிப்பெண்களுள் ஒருத்தியை அவன் நோக்கி, ‘பேதாய்! நீ சென்று அந்த இளையதான அன்னத்தினைத் தப்பிப் போக விட்டு விடாதபடி மெல்லப் பிடித்துவந்து என்னிடத்தே தருவாயாக’ என்று ஏவினான்.

பிடித்து வந்தனர்

நாடிமட வன்னத்தை நல்ல மயிற்குழாம்
ஓடி வளைக்கின்ற தொப்பவே - நீடியநல்
பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றிக் கொடுபோந்து
தன்கோவின் முன்வைத்தார் தாழ்ந்து. 32

     நெடிதானதும், நன்கு செழித்ததுமான கூந்தலையுடைய சேடியர்கள், அந்த அன்னத்தினைப் பிடிக்கக் கருதி, மயிலின் கூட்டமொன்று ஓடிச்சென்று வளைத்துக் கொண்டதுபோல அதனை வளைத்துச் சூழ்ந்து கொண்டு, தம் கைகளாற் பற்றிக் கொணர்ந்து, தம் அரசனின் முன்பாகப் பணிவுடன் அதனை வைத்தார்கள்.

வருத்தமும் கலக்கமும்

அன்னந் தனைப்பிடித்தங் காயிழையார் கொண்டுபோய்
மன்னன் திருமுன்னர் வைத்தலுமே-அன்னம்
மலங்கிற்றே தன்னுடைய வான்கிளையைத் தேடிக்
கலங்கிற்றே மன்னவனைக் கண்டு. 33

     தெரிந்தெடுத்த வளையல்களை அணிந்தவரான அந்தச் சேடியர்கள் அன்னத்தினைப் பிடித்துக் கொண்டு போய்த் தம் மன்னவனான நளனின் முன்பாக வைத்ததுமே, அந்த அன்னம் தன்னுடைய சுற்றமாகிய மற்றைய அன்னங்களை நினைத்துத் தேடியதாய் வருத்தமுற்றது. எதிரேயிருந்த நளமன்னவனைக் கண்டு மிகக் கலக்கமும் கொண்டது.

அஞ்சாதே அன்னமே!

அஞ்சல் மடவனமே உன்றன் அணிநடையும்
வஞ்சி யனையார் மணிநடையும் - விஞ்சியது
காணப் பிடித்ததுகாண்என்றான் களிவண்டு
மாணப் பிடித்ததார் மன். 34

     மதுவுண்டு களிப்பனவாய வண்டுகள் மிகுதியாக மொய்த்துக் கொண்டிருக்கும் மாலையினை அணிந்திருந்தோனாகிய நளமன்னன், அன்னத்தின் அந்த அச்சத்தினைக் கண்டான். ‘இளமையுடைய அன்னமே! உன்னுடைய அழகான நடையினையும், வஞ்சிக் கொடியினைப் போன்றவரான இம் மாதர்களின் சிறந்த நடையினையும் ஒப்பிட்டுப் பார்த்து, சிறந்தது எதுவெனக் காண்பதன் பொருட்டாகவே நின்னைப் பிடித்தது; அதனால் நின் உயிருக்கு இன்னல் நேருமென்று நீ அஞ்சாதே’ என்று கூறினான்.

தடுமாற்றம் தீர்ந்தது

செய்ய கமலத் திருவை நிகரான
தையல் பிடித்த தனியன்னம் - வெய்ய
அடுமாற்றம் இல்லா அரசன்சொல் கேட்டுத்
தடுமாற்றம் தீர்ந்ததே தான். 35

     செந்தாமரை மலரிடத்தே வீற்றிருக்கும் திருமகளைப் போன்ற ஒரு சேடியானவள் பிடித்துக் கொண்டு வந்த அந்த ஒப்பற்ற அன்னமானது, கொலை செய்யும் கொடிதான கருத்தில்லாத அரசனின் அந்தச் சொற்களைக் கேட்டுத், தன் மனக்கலக்கம் முற்றவும் தீர்ந்ததாயிற்று.

பொருத்தம் தமயந்தியே!

திசைமுகந்த வெண்கவிதைத் தேர்வேந்தே! உன்றன்
இசைமுகந்த தோளுக்கு இசைவாள் - வசையில்
தமையந்தி என்றோதும் தையலாள் மென்றோள்
அமையந்தி என்றோர் அணங்கு. 36

     “எட்டுத் திக்குகளிலும் பரவிய வெண்கொற்றக் குடையினையுடைய தேர்வேந்தனே! உன்னுடைய புகழ்மிகுந்த தோள்களுக்குப் பொருத்தமானவள், ‘மென்மையான தோள்கள் மூங்கிலைப் போன்று அழகியன’ என்று சொல்லத்தக்கவளும், தேவமகள் போன்றவளுமான, குற்றமற்ற தமயந்தி என்று சொல்லப்படும் தையலாளே யாவாள்” என்று அந்த அன்னம், அப்போது அரசனிடம் உரைத்தது.

யாவர் மகளோ?

அன்னம் மொழிந்த மொழிபுகா முன்புக்குக்
கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச்-சொன்னமயில்
ஆர்மடந்தை என்றான் அனங்கன் சிலைவளைப்பப்
பார்மடந்தை கோமான் பதைத்து. 37

     அன்னமானது சொல்லிய அந்தச் சொற்கள், செவிவழியாகப் புகுந்து மனத்தை அடைவதற்கு முன்பாகவே, அந்தத் தமயந்தி என்னும் கன்னியானவள், அவன் மனக்கோயிலினுட் புகுந்து அவனைத் தன்வசமாக்கிக் கொள்ளவும், மன்மதன் தன் கரும்புச்சிலையினை வளைத்து அம்பினை ஏவவும், நிலமகளுக்குத் தலைவனான அந்த நளமன்னன் துடிதுடித்து, “நீ சொன்ன அந்த மயிலணையாள் யாராவது மடந்தையோ?” என்று, அன்னத்தைக் கேட்பானாயினான்.

விதர்ப்பன் பூங்கொடி!

எழுவடுதோள் மன்னா இலங்கிழையோர் தூண்டக்
கொழுநுதியிற் சாய்ந்த குவளை - உழுநர்
மடைமிதிப்பத் தேன்பாயும் மாடொலிநீர் நாடன்
கொடைவிதர்ப்பன் பெற்றதோர் கொம்பு. 38

     ‘எஃகுத் தூணினையும் வெற்றிகொள்ளும் திண்மையான தோள்களையுடைய மன்னவனே! ஒளிசிதறும் ஆபரணங்களை அணிந்த அந்நங்கையானவள், உழவர்கள் ஏரினைத் தூண்டிச் செலுத்த, அந்த ஏரின் கொழுமுனையிலே சாய்ந்து போன குவளைகள், அவர்கள் அவற்றை மடக்கிச் சேற்றிலே மிதப்பத் தேனைப் பெருக்குகின்ற, மிக்க ஆரவாரத்தையுடைய நீர்வளமிகுந்த விதர்ப்ப நாட்டிற்கு உரியவனும், கொடையாளனுமாகிய, விதர்ப்பராசன் பெற்றெடுத்த ஒப்பற்ற பூங்கொடியாவாள்!’

     (எழுவடுதோள் - வாள்வடுக் கொண்ட தோளும் ஆம்.)

பெண்மை அரசு

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சர்
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு. 39

     ‘நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு எனப்படும் நான்கு பெண்மைக் குணங்களுமே நால்வகைச் சேனைகளாகவும், மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்புலன்களுமே நல்ல அமைச்சர்களாகவும், ஒலி முழக்கம் காற்சிலம்பே அழகிய முரசமாகவும், கண்களே வேற்படையும் வாளுமாகவும் கொண்டு, தன் முகமாகிய நிலாவட்டக் குடையின் கீழாகப், பெண்மை அரசு வீற்றிருக்கின்ற தன்மையுடனே விளங்குபவள் அவள்.’

நூபுரங்கள் புலம்பும்

மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு - நாட்டேன்
அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு. 40

     ‘அவளின் நுண்ணிய இடையானது பருத்துயர்ந்த அவளது இளங்கொங்கைகளை முற்றவும் சுமந்து நிற்கும் வலிமையுடையது ஆகமாட்டாதென்று, அவளுடைய காலிலே விளங்கும் நூபுரங்கள், புதிய தேன் அலம்பிக் கொண்டிருக்கும் நீண்ட கூந்தலுடைய அவளின் இரு பாதங்களிலும் தாழ்ந்து கிடந்து, எந்நேரமும் வாய் விட்டுப் புலம்பிக் கொண்டேயிருக்கும்.’

இடை நுடங்கும்

என்றும் நுடங்கு இடையென்ப ஏழுலகும்
நின்ற கவிகை நிழல்வேந்தே - ஒன்றி
அறுகால் சிறுபறவை அஞ்சிறகால் வீசும்
சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து. 41

     ‘ஏழு உலகங்களிடத்தும் நிலைபெற்ற வெண்கொற்றக் குடையினையுடைய வேந்தனே! ‘ஆறு கால்களையுடைய சிறுபறவை’ எனும் வண்டானது, தன் அழகிய சிறகினாலே வீசும் மெல்லிய காற்றுக்கும் ஆற்றமாட்டாமல், அவளுடைய இடையானது மெலிவுற்றுத் துவண்டு கொண்டிருக்கும்!’

மலர்வாளி தீட்டும் இடம்

செந்தேன் மொழியாள் செறியளக பந்தியின்கீழ்
இந்து முறியென் றியம்புவார் - வந்தென்றும்
பூவாளி வேந்தன் பொருவெஞ் சிலைசார்த்தி
ஏவாளி தீட்டும் இடம். 42

     ‘மலர் அம்புகளையுடைய வேந்தனான மன்மதன், எக்காலத்தும் போர் செய்வதற்குரிய தன் கொடிய வில்லினைச் சார்த்தி வைத்து விட்டுத், தன் அம்பின் வரிசைகளைத் தீட்டிக் கூர்மை செய்து கொள்ளும் இடம், செவ்விய தேன்போன்று இனிக்கும் பேச்சினளான அவளின், செறிவான முற்புறக் கூந்தல் வரிசையின் கீழாக விளங்கும் பிறைத்துண்டமாகிய நெற்றியே ஆகும்!’

     (அன்னம், தமயந்தியை இப்படி எல்லாம் வருணித்தது.)

நினைக்கவே ஆவி சோரும்

அன்னமே நீயுரைத்த அன்னத்தை என்னாவி
உன்னவே சோரும் உனக்கவளோ - டென்ன
அடைவென்றான் மற்றந்த அன்னத்தை முன்னே
நடைவென்றாள் தன்பால் நயந்து. 43

     அந்த அன்னப்பறவையினை முன்னமேயே தன் நடையழகினாலே வெற்றி கொண்டவளான தமயந்தியின்பால் விருப்பங்கொண்டு, ‘அன்னமே! நீ சொல்லிய அந்த அன்னத்தை நினைக்கும்போதே என் உயிர் சோர்கின்றது. உனக்கு அவளுடன் எத்தகைய தொடர்போ? அதனை எனக்கும் விளக்கிக் கூறுக’ என்றான் நளன்.

நடை கற்கச் சென்றேன்

பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்கள் யாமவள்தன்
மாமனைவாய் வாழும் மயிற்குலங்கள் - காமன்
படைகற்பான் வந்தடைந்தான் பைந்தொடியாள் பாத
நடைகற்பான் வந்தடைந்தேம் யாம். 44

     ‘மன்மதன் அவளுடைய கண்பார்வையினைப் பார்த்துப் பார்த்துத் தானும் படைதொடுக்கும் தொழிலினைக் கற்கும் பொருட்டாக அவளிடத்தே வந்திருந்தான். யாங்கள், அந்தப் பசிய தொடியுடையாளின் பாதத்து நடையினைக் கற்பது கருதி, அவளிடத்தே சென்று சேர்ந்திருந்தோம். யாங்கள் மலர்களான வீடுகளிலே வாழ்கின்ற பறவையினங்களாயினும், அவளுடைய பெரிய அரண்மனையிலே வாழும் மயிற்குலங்கள் போன்றோரான சேடியரைப் போன்று, அவளுடன் பழகி நெருக்கமுங் கொண்டுள்ளோம்.’

     (இப்படித் தமயந்திக்கும் தனக்குமுள்ள நெருக்கத்தை அன்னம் நளனுக்கு உரைத்தது.)

வாயுடைத்து என் வாழ்வு

இற்றது நெஞ்சம் எழுந்த திருங்காதல்
அற்றது மானம் அழிந்ததுநாண் - மற்றினியுன்
வாயுடைய தென்னுடைய வாழ்வென்றான் வெங்காமத்
தீயுடைய நெஞ்சுடையான் தேர்ந்து. 45

     அன்னம் கூறியவைகளை நளன் கேட்டான். அவன் நெஞ்சம் தடுமாற்றம் அடைந்தது. மிகுதியான காதலும் அவனுள் எழுந்தது. மானவுணர்வும் நீங்கிப் போயிற்று. நாணமும் அழிந்தது. கொடிய காமமாகிய தீயினைக் கொண்டிருந்த நெஞ்சத்தை உடையனான அவன், சற்றே தெளிவுற்று, ‘இனி என்னுடைய வாழ்வு உன் வாய்ச்சொற்களின் இடமாகவே இருக்கின்றது’ என்று, அந்த அன்னத்தை நோக்கிக் கூறினான்.

     (அன்னத்தைத் தமயந்திபால் தன் பொருட்டாகத் தூது போக வேண்டுகின்றான் நளன்.)

3. அன்னம் விடு தூது

அன்னம் பறந்தது

வீமன் திருமடந்தை மென்முலையை உன்னுடைய
வாம நெடும்புயத்தே வைகுவிப்பேன் - சேம
நெடுங்குடையாய் என்றுரைத்து நீங்கியதே அன்னம்
ஒடுங்கிடையாள் தன்பால் உயர்ந்து. 46

     “உலக மக்கட்கு நன்மை விளைவிக்கும் நெடிதான வெண்கொற்றக் குடையினை உடையவனே! வீமராசனின் அழகிய திருமகளான தயமந்தியின் மென்மையான மார்பகங்கள் உன்னுடைய அழகான பெருத்த தோள்களிடத்தே பொருந்துமாறு யானே செய்விப்பேன்” என்று உரைத்து, ஒடுக்கமான இடையினளான அத் தமயந்தியினிடத்தே செல்லும் பொருட்டாக, அந்த அன்னமும், வானத்து உயரே எழுந்து பறந்து போயிற்று.

வேந்தன் விம்மினான்

இவ்வளவிற் செல்லுங்கொல் இவ்வளவிற் காணுங்கொல்
இவ்வளவிற் காதல் இயம்புங்கொல் - இவ்வளவில்
மீளுங்கொல் என்றுரையா விம்மினான் மும்மதம்நின்
றாளுங்கொல் யானை அரசு. 47

     மூவகை மதங்களும் நிலைபெற்று ஆட்சி செய்ய விளங்கும், கொலைத் தொழிலையுடைய களிற்றியானைப் படையினையுடையவன் அரசனான நளன். அவன், ‘இத்தனை பொழுதில் அன்னம் அவள்பாற் சென்றிருக்குமோ? இத்தனை நேரம் அவளைக் கண்டிருக்குமோ? இத்தனை நேரம் என் காதலை எடுத்துச் சொல்லியிருக்குமோ? இத்தனை நேரத்திற்குள் மீண்டும் என்னை நோக்கி வந்து கொண்டிருக்குமோ?’ என்று பலவாறாகச் சொல்லித் தமயந்தியை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தான்.

     (மும்மதம் - கன்ன, கபோல, பீஜ மதங்கள்)

ஆவி உருகினான்

சேவல் குயிற்பெடைக்குப் பேசும் சிறுகுரல்கேட்டு
ஆவி உருகி அழிந்திட்டான் - பூவின்
இடையன்னம் செங்கால் இளவன்னம் சொன்ன
நடையன்னம் தன்பால் நயந்து. 48

     தாமரை மலரிடையே வாழ்கின்றதும், சிவந்த கால்களை உடையதுமான அந்த இளைய அன்னப்பறவை சொல்லிய, நடையழகில் அன்னம் போன்றவளான தமயந்தியிடத்தே விருப்பங்கொண்ட நளனானவன், ஆண்குயில் தன் பேடையுடன் பேசும் சிறுகுரலினைக் கேட்டதும், தன் ஆவி உருகிப் போகச் செயலழிந்தவனும் ஆயினான்.

உள்ளம் கலங்கினான்

அன்ன முரைத்த குயிலுக் கலசுவான்
மென்மயில்தன் தோகை விரித்தாட - முன்னதனைக்
கண்டாற்றா துள்ளம் கலங்கினான் காமநோய்
கொண்டார்க்கி தன்றோ குணம். 49

     அன்னப் பறவை சொல்லிய குயில்போலுமினிய குரலுடையாளுக்காகத் தளர்வுற்று வாடிய நளன், மென்மைத் தன்மையினையுடைய மயிலானது தன் தோகையினை விரித்துத் தன் முன்பாக ஆடிக் கொண்டிருக்க, அதனைக் கண்டு பொறுக்க மாட்டாது, தன் உள்ளம் கலங்கியவனாயினான். காம நோய் கொண்டவர்களுக்கு இதுவல்லவோ இயல்பாக ஏற்படும் குணம்!

கொடியார் வாரீர்!

வாரணியும் கொங்கை மடவார் நுடங்கிடைக்குப்
பேருவமை யாகப் பிறந்துடையீர் - வாரீர்
கொடியார் எனச்செங்கை கூப்பினாம் நெஞ்சம்
துடியா நெடிதுயிராச் சோர்ந்து. 50

     தமயந்தியின் நினைவினாலே தன் நெஞ்சம் துடிதுடிக்க, நள மகராசன் பெரிதும் நெடுமூச்செறிந்து தளர்வுற்றான். ‘ஏ பூங்கொடிகளே! இளமை உடைய தமயந்தியின் துவள்கின்ற இடைக்குச் சிறந்ததோர் ஒப்புமைப் பொருளாகுமாறு பிறந்துள்ளவர்களே! என்னருகே வாரீர்’ என்று, பூங்கொடிகளைக் கண்டு மனம் சோர்ந்து, தன் செங்கை கூப்பி, அவற்றை அழைத்தவனாகவும் நின்றான்.


நளவெண்பா : 1    2    3    4    5    6    7    8    9