உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
புகழேந்திப் புலவர் இயற்றிய நளவெண்பா தெளிவுரை: புலியூர்க் கேசிகன் ... தொடர்ச்சி ... முகம் காண்கிலேனே! வென்றிச் சினவரவின் வெவ்வாய் இடைப்பட்டு வன்துயராற் போயாவி மாள்கின்றேன் - இன்றுன் திருமுகநான் காண்கிலேன் தேர்வேந்தே என்றாள் பொருமுகவேற் கண்ணாள் புலர்ந்து. 301 காதுகளுடன் மோதிப் பொருதுகின்ற வேல் போன்ற கண்களையுடைய தமயந்தியானவள் வாட்டங் கொண்டு, “தேர்வேந்தனே! அடங்காத சினத்தையுடைய பாம்பின் கொடிய வாயினிடத்தே அகப்பட்டுக் கொடிய துயரத்தினாலே உயிர்சோர்ந்து செத்துக் கொண்டிருக்கின்றேன். இன்று, தங்கள் திருமுகத்தைக் காணும் பேறு கூடப் பெற்றிலேனே!” என்று புலம்பினாள். காண்குதிரோ மக்காள் மற்றொடுத்த தோள்பிரிந்து மாயாத வல்வினையேன் பெற்றெடுத்த மக்காள் பிரிந்தேகும் - கொற்றவனை நீரேனுங் காண்குதிரே என்றழுதாள் நீள்குழற்குக் காரேனும் ஒவ்வாள் கலுழ்ந்து. 302 நீண்ட தன் கூந்தலுக்குக் கார்மேகமும் ஒவ்வாதபடியான தன்மையினைக் கொண்ட தமயந்தியானவள், “மற்போரிலே தொடர்பு கொண்ட தோள்களையுடைய என் நாயகனைப் பிரிந்தும் செத்தொழியாத தீவினையாட்டியேன் பெற்றெடுத்த மக்களே! அம் மன்னவனை நீங்களேனும் என்றேனும் காண்பீர்களோ?” என்று சொல்லியும் அழுது புலம்பினாள். கை கூப்பினாள் அடையும் கடுங்கானில் ஆடரவின் வாய்ப்பட் டுடையுமுயிர் நாயகனே ஓகோ - விடையெனக்குத் தந்தருள்வாய் என்னாத்தன் தாமரைக்கை கூப்பினாள் செந்துவர்வாய் மென்மொழியாள் தேர்ந்து. 303 சிவந்த பவளத்தினைப் போலும் வாயிதழ்களையும், மென்மையான சொற்களையும் உடைய தமயந்தியானவள், “நாயகனே! நாம் அடைந்திருக்கும் கடுமையான கானகத்திலே, ஆடுகின்ற மலைப் பாம்பின் வாயிற் சிக்கிக் கொண்டு, என் உயிரோ உடைகின்றது. ஓகோ! எனக்குச் சாவதற்கு விடையேனும் இந்நேரத்திலே வந்து தந்தருளாயோ?” என்று, தன் தாமரைக் கைகளைக் கூப்பி, நளனை நினைந்து கூவியபடியே வணங்கினாள். 12. வேடன் எரிந்தான்! வேடன் கண்டான் உண்டோர் அழுகுரல் என் றொற்றி வருகின்ற வெண்தோடன் செம்பங்கி வில்வேடன் - கண்டான் கழுகுவாழ் கானகத்துக் காரரவின் வாயில் முழுகுவாள் தெய்வ முகம். 304 “யாதோ ஓர் அழுகுரல் உண்டு” என்று தமயந்தியின் புலம்பலை உற்றுக் கேட்டு வருகின்ற, வெண்மையான குழையினை அணிந்தவனும், செம்பட்டை மயிரையும் வில்லையும் உடையவனுமான வேடன் ஒருவன், கழுகினங்கள் வாழுகின்ற காட்டினிடத்தே கருநிறமுடைய மலைப்பாம்பின் வாயிலிலே அகப்பட்டு மறைபவளாகிய தமயந்தியின் தெய்வத்தன்மை பொருந்திய முகத்தினைக் கண்டான். (ஒற்றுதல் - ஒன்றியிருந்து கூர்ந்து கேட்டல்.) அஞ்சி அரற்றினாள் வெய்ய அரவின் விடவாயின் உட்பட்டேன் ஐயன்மீர் உங்கட் கபயம்யான் - உய்ய அருளீரோ என்னா அரற்றினாள் அஞ்சி இருளீரும் பூணாள் எடுத்து. 305 வேடன் தன்னருகே வரவும், இருளினை ஓடச் செய்கின்ற ஒளியுடைய அணிகலன்களைப் பூண்டவளான தமயந்தி, “ஐயன்மீர்! கொடிய பாம்பினது நச்சுப் பொருந்திய வாயினிடத்தே அகப்பட்டுக் கொண்டேன்; உங்கட்கு நான் அடைக்கலம்; நான் உயிர் பிழைக்குமாறு அருள் செய்யமாட்டீர்களோ?” என்று அச்சத்துடன் குரலெடுத்து அரற்றினாள். (‘அச்சம்’ தான் பாம்பின் வாய்ப்பட்டு அழியும் நிலைமையிலிருந்ததனால் ஏற்பட்டது. அபயம், அடைக்கலம், விடவாய் - நச்சுத் தன்மையுடைய வாய், விடம் - நஞ்சு.) வேடன் மீட்டான் சங்க நிதிபோல் தருசந் திரன்சுவர்க்கி வெங்கலிவாய் நின்றுலகம் மீட்டாற்போல் - மங்கையைவெம் பாம்பின்வாய் நின்றும் பறித்தான் பகைகடிந்த காம்பின்வாய் வில்வேடன் கண்டு. 306 கொடிய விலங்குகளான தன் பகையினைக் கொன்று ஒழித்த, மூங்கிலினாற் செய்த வெற்றி வில்லினை ஏந்தி வந்த அந்த வேடன் நிகழ்ந்திருப்பதைக் கண்டான். சங்கநிதி என்னும் வற்றாப் பெருநிதி போல வாரிவழங்கும் சந்திரன் சுவர்கி என்பவன், உலக மக்களை வெம்மையான கலியின் வாயிடத்தே நின்றும் மீட்டுக் காத்தாற் போல, அவ் வேடனும், தமயந்தியை அந்தக் கொடிய பாம்பின் வாயினின்றும் இழுத்துவிட்டு அவள் உயிரினைக் காத்தான். (கலி வாயினின்று மீட்டலாவது, அவள் படும் துயரினின்றும் அவரைக் காப்பாற்றி மீட்டல்.) கைம்மாறு உளதோ? ஆருயிரும் நானும் அழியாமல் ஐயாவிப் பேரரவின் வாயிற் பிழைப்பித்தாய் - தேரில் இதற்குண்டோ கைம்மா றெனவுரைத்தாள் வென்றி விதர்ப்பன்றான் பெற்ற விளக்கு. 307 “ஐயா! என் அருமையான உயிரும், அதனைக் கொண்டிருக்கும் நானாகிய இவ்வுடலும் அழிந்து போய் விடாமல், இந்தப் பெரும்பாம்பின் வாயினின்றும் பிழைக்கச் செய்தாய், எண்ணிப் பார்த்தால், இத்தகைய சிறந்த உதவிக்கு ஒரு கைம்மாறும் செய்வதற்கு உளதாகுமோ?” என்று, வெற்றி மிக்க விதர்ப்பராசன் பெற்றெடுத்த குலவிளக்கான தமயந்தி அந்த வேடனிடம் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள். (கை-உபகாரம்; மாறு-மாறுவது; பதிலுக்குச் செய்யும் உபகாரம். ஆருயிரும் நானும் என்றது, உடல் உயிர் என்பவை இணைந்திருக்கின்ற தன்மைபற்றி.) என்னுடன் வருக இந்து நுதலி எழில்நோக்கி ஏதோதன் சிந்தை கருதிச் சிலைவேடன் - பைந்தொடிநீ போதுவாய் என்னுடனே என்றான் புலைநரகுக் கேதுவாய் நின்றான் எடுத்து. 308 நிலவினைப் போன்ற நெற்றியினை உடையவளான தமயந்தியின் அழகினை அந்த வேடன் தன் கண்களாலே பார்த்தான்; தன் உள்ளத்தில் ஏதோ கருதினான். வில்லேந்தியவனாகக் கீழான நரகத்திற்கு ஏதுவாக நின்றிருந்த அவன், “பசுமையான வளை அணிந்தவளே! நீ என்னுடனே புறப்படுவாயாக” என்றான். (“ஏதோ” என்றது அவன் கொண்ட காம மயக்கத்தை; “என்னுடன் போதுவாய்” என்றது, தன்னோடு கூடி வாந்திருப்பதனைக் குறிப்பிட்டு அவன் அழைத்ததாகும். அந்தத் தீய எண்ணம் எழுதலால் அவனைப் ‘புலைநரகுக் கேதுவாய் நின்றான்’ என்று குறிப்பிடுகிறார்.) அஞ்சி ஓடினாள் வேடன் அழைப்ப விழிபதைத்து வெய்துயிரா ஆடன் மயில்போல் அலமரா - ஓடினாள் தூறெலா மாகச் சுரிகுலல்வேற் கண்ணினீர் ஆறெலா மாக வழுது. 309 வேடன் அவ்வாறு தீய கருத்துடனே தன்னை அழைப்பதனைக் கண்டதும், தமயந்தியின் கண்கள் கலங்கின. கடுமூச்சும் எழுந்தது. ஆடுதலையுடைய மயில்போலத் துடிதுடித்தவளாயினாள். வேல் போன்ற தன் கண்களின்றும் வடியும் நீர், வழியெல்லாம் வழிந்து ஓட அழுதுகொண்டே, புதர்களில் எல்லாம் தன் சுருண்ட கூந்தல் மயிர்கள் சிக்கிச் சிதையுமாறு அவள் அங்கிருந்தும் ஓடினாள். (அவளிடமிருந்து தப்பிக்க முயல்கின்றாள் தமயந்தி, அலமரல் - வருந்துதல், தூறு - புதர், கூந்தல் மயிர்கள் புதர்களிலே சிக்கிக் கொள்ளவும், வழியெல்லாம் கண்ணீர் வழிந்தோடவும், பதைபதைத்து, அவள் ஓடினாள் என்க.) நீறாய் விழுந்தான் தீக்கட் புலிதொடரச் செல்லுஞ் சிறுமான்போல் ஆக்கை தளர வலமந்து - போக்கற்றுச் சீறா விழித்தாள் சிலைவேடன் அவ்வளவில் நீறாய் விழுந்தான் நிலத்து. 310 அழலுகின்ற கண்களுடைய புலி துரத்தி வர, அதனின்றும் உயிர் பிழைக்க ஓடிச்செல்லும் இளமானைப் போல, அவள் பதைபதைத்து விரைவாக ஓடினாள். முடிவில் உடல் தளர்ச்சியடைய வருத்தமுற்று, மீண்டும் போவதற்கும் வலிமையற்று நின்று, சீற்றத்துடனே அந்த வில்வேடனை நோக்கினாள். அந்த அளவிலே, அவன் எரிந்து சாம்பலாகி நிலத்திலே விழுந்தான். (தமயந்தியின் தெய்வீகக் கற்பின் சிறப்பு இதனாலே வெளிப்பட்டது. சிறுமான் - சிறுமை; பருவத்தின் இளமையைக் குறித்தது. தீக்கண் - அழலுகின்ற கொடிய கண்.) தமிழறிஞரைப் பிழைத்த குடிபோல் வண்டமிழ்வா ணர்ப்பிழைத்த வன்குடிபோல் தீத்தழன்மீ மண்டு கொடுஞ்சுரத்தோர் மாடிருந்து - பண்டையுள வாழ்வெல்லாந் தானினைந்து மற்றழுதாள் மன்னிழைத்த தாழ்வெல்லாம் தன்றலைமேற் றந்து. 311 வளமான தமிழிலே வல்லவர்களாகிய தமிழ்ச் சான்றோர்களைப் பிழைத்த கொடிதான குடியினர்கள் முற்றவும் கெட்டழிவது போல, நெருப்புக் கொழுந்துகள் மிகுதியாக எப்புறத்தும் மண்டியிருந்த அந்தக் கொடிய பாலைவனத்தின் ஒரு புறத்தே இருந்து கொண்டு, தன் நாயகன் செய்த தாழ்ச்சியான செயல்களைத் தன் தலைவிதியின் மேல் சுமத்தியவளாக, முன்பிருந்த தம் சிறந்த வாழ்வு நலங்களையெல்லாம் எண்ணி எண்ணித் தமயந்தியும் ஆற்றாமையினாலே அழுது கொண்டிருந்தாள். (சுரத்தின் வெப்பக் கொடுமையைக் குறித்தனர். நளனின் செயலுக்குத் தன் ஊழ்வினையே காரணம் எனக் கருதிய அவள் அவனையும் பழித்திலன்.) 13. சேதிநாடு சேர்ந்தாள் வணிகன் காணல் அவ்வளவி லாதிப் பெருவழியி லாய்வணிகன் இவ்வளவு தீவினையே என்பாள்தன் - மெய்வடிவைக் கண்டானை யுற்றான் கமலமயி லேயென்றான் உண்டாய தெல்லாம் உணர்ந்து. 312 அந்தச் சமயத்தில், அந்தப் பழமையான பெருவழியூடே போய்க் கொண்டிருந்த வணிகன் ஒருவன், ‘இத்தகைய தீய வினையின் பாரத்தை உடையவள் யான்’ என்று புலம்பிக் கொண்டிருந்த தமயந்தியின் சோர்ந்த உருவத்தைக் கண்டான். ‘அவள் யாவளோ?’ என ஐயுற்றான். அவ்விடத்து உண்டாகியிருந்த நிலைமையை எல்லாம் உணர்ந்தவனாகித், “தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் போன்றவளே இவள்” என தனக்குள் சொல்லியும் கொண்டான். (உண்டாயது - வாட்டமும் சோர்வும் கண்ணீரும் துக்கத் தோற்றமும் ஆகியன், மெய்வடிவு - உண்மையான உடல் நிலை.) வணிகன் வினவுதல் எக்குலத்தாய் யார்மடந்தை யாதுன்னூர் யாதுன்பேர் நெக்குருகி நீயழுதற் கென்னிமித்தம் - மைக்குழலாய் கட்டுரைத்துக் காணென்றான் கார்வண்டு காந்தாரம் விட்டுரைக்குந் தார்வணிகர் வேந்து. 313 கருமையான வண்டினங்கள் காந்தாரப் பண்ணினை வெளியிட்டு இசைக்கின்ற மாலையினை அணிந்திருந்தோனாகிய அந்த வணிகர் முதல்வன், “கருமையான கூந்தலினையுடையவளே! நீ எந்தக் குலத்தினளோ? யார் பெற்ற மகளோ? நின் ஊர் எதுவோ? நின் பெயர் என்னவோ? தளர்ந்து உளம் உருகி நீ அழுவதற்கு என்ன காரணமோ? இவற்றையெல்லாம் விளக்கமாகச் சொல்லுவாயாக” என்றான். (கட்டுரைத்தல் - திருத்தமுறத் தொடர்பாகச் சொல்லுதல், காண் - அசை.) காணாது அழுகின்றேன் முன்னை வினையின் வலியால் முடிமன்னன் என்னைப் பிரிய இருங்கானில் - அன்னவனைக் காணா தழுகின்றேன் என்றாள் கதிரிமைக்கும் பூணாரம் பூண்டாள் புலர்ந்து. 314 ஒளிக்கதிர்களைச் சொரியும் முத்துமாலையினைப் பூண்டிருந்தவளான அவள், வணிகன் அங்ஙனம் கேட்பவும், வாட்ட முற்றவளாக, முடியுடைய மன்னவனாகிய என் கணவன், என் முன் வினையின் வலிமையினாலே, என்னை, இந்தப் பெரிய காட்டிடத்தே விட்டுப் பிரிந்து செல்ல, அவனைத் தேடியும் காணாது, யான் இவ்வாறு அழுது கொண்டிருக்கிறேன் என்றாள். (பிரிவு, நளன் தவறன்று; தன் முன் வினைப் பயனே என்று மீண்டும் கூறும் தமயந்தியின் தன் முன்வினைப் பயனே என்று மீண்டும் கூறும் தமயந்தியின் உயர்வைக் கருதுக. கொண்டானை எந்நிலையினும் குறை கூறாமையே நற்குடிப் பெண்டிர்க்குரிய இயல்பாதலும் நினைக்க.) சேதி நகரிற் சேர்த்தான் சேதி நகர்க்கே திருவைச் செலவிட்டப் போதிற் கொடைவணிகன் போயினான் - நீதி கிடத்துவான் மன்னவர்தம் கீர்த்தியினைப் பார்மேல் நடத்துவான் வட்டை நடந்து. 315 திருமகள் போன்ற தமயந்தியினைத் தன்னுடனேயே அழைத்துச் சென்று, சேதி நகரத்தினுள்ளாக அவளைக் கொண்டுவிட்டு, உலகிலே நீதியை நிலைபெறுகின்ற சிறந்த மன்னவர்களது புகழினை உலகமெல்லாம் பரவச் செய்பவனாகிய அந்தக் கொடையாளனாகிய வணிகனும், அதன்பின், தன் தேரில் அமர்ந்தவனாகித் தன் வழிமேற் கொண்டு போய்விட்டான். (ஒரு நாட்டின் புகழ் பிற நாடுகளிலும் பரவ வேண்டுமாயின், அதற்குரிய சிறந்த சாதனம் வணிகத் தொடர்பே என்பதனைக் கவி எடுத்துக் கூறும் பண்பினை அறிக. “நாணயமான வணிகர்கள் தாம் பொருள் தேடுவது மட்டுமன்றித் தம் நாட்டுப் புகழையும் பிற நாடுகளில் சென்று பரவச் செய்கின்றனர் என்பது என்றும் உண்மையாகும்.) கண்டோம் ஒருத்தியை அற்ற துகிலும் அறாதொழுகு கண்ணீரும் உற்ற துயரும் உடையவளாய் - மற்றொருத்தி நின்றாளைக் கண்டோ ம் நிலவேந்தன் பொற்றேவி என்றார் மடவார் எடுத்து. 316 அரண்மனைச் சேடியர் சிலர், சேதி நகரத்தே யாருமற்றவளாக நின்றிருந்த தமயந்தியைக் கண்டனர். கண்டவர், தம் அரசியிடத்தே சென்று, “இந்நாட்டு வேந்தனின் பொன்னனைய தேவியே! பாதி அற்றுப் போயிருக்கும் ஆடையும், நீங்காத கண்ணீரும், அடைந்திருக்கும் துயரமும் உடையவளாக, வேற்று நாட்டுப் பெண்ணொருத்தி தெருவில் நின்றிருந்தாள். அவளைக் கண்டோம்” என்று எடுத்துச் சொன்னார்கள். (எடுத்துச் சொல்லல் - குறிப்பிட்டுச் சென்று சொல்லல், பொன் - திருமகள்.) ‘கொண்டு வா’ என்றாள்! போயகலா முன்னம் புனையிழையாய் பூங்குயிலை ஆய மயிலை யறியவே - நீயேகிக் கொண்டுவா வென்றாள்தன் கொவ்வைக் கனிதிறந்து வண்டுவாழ் கூந்தன் மயில். 317 வண்டுகள் நிலையாக வாழ்ந்திருக்கும் கூந்தலையும், மயில் போன்ற சாயலையும் உடைய அச் சேதிராசனி மனைவியும், அதனைக் கேட்டதும், கொவ்வைக் கனி போன்ற தன் வாயிதழ்களைத் திறந்து, “புனை இழையாய்! அந்தப் பூங்குயிலை, சிறந்த மயிலை, அவள் அங்கிருந்து அகன்று போய்விடா முன்னரே நீ சென்று, அவள் யாரென நாம் அறியுமாறு உடனே இவ்விடத்திற்குக் கொண்டு வருவாயாக” என்று ஏவினாள். (புனை இழை - புனைந்து கொண்டுள்ள அணிகலன்கள்; அதனைக் கொண்ட, வந்து சேதி சொன்ன பணிப் பெண்ணைக் குறித்தது. இப்படித் தன் சேடியருள் ஒருத்தியை அரசி ஏவினாள் என்க.) வினை வலி காண்! ஆங்கவளும் ஏக அரசன் பெருந்தேவி பூங்கழலின் மீதே புரண்டழுதாள் - தாங்கும் இனவளையாய் உற்றதுயர் எல்லாம் எனது வினைவலிகாண் என்றாள் மெலிந்து. 318 அந்த அரசியின் முன்பாகத் தமயந்தியும் சென்றாள். அரசமா தேவியான அவளுடைய மலரடிகளிலே வீழ்ந்து புரண்டு அழுதாள். “பலவகை வளையல்களை அணிந்துள்ளவளே! நான் அடைந்த துயரம் எல்லாம் என்னுடைய தீவினையின் வலியினால் வந்தது” என்றும், உளம் நைந்து கூறினாள். (தாங்கும் - தரித்திருக்கும், மெலிந்து - சோர்ந்து; உளம் மெலிவுற்று.) உள்ளவாறு உரைப்பாய்! அந்தா மரையி லவளேயென் றையுற்றுச் சிந்தா குலமெனக்குத் தீராதால் - பைந்தொடியே உள்ளவா றெல்லாம் உரையென்றா ளொண்மலரின் கள்ளவார் கூந்தலாள் கண்டு. 319 ஒள்ளிய மலரின் மதுவானது ஒழுகிக் கொண்டிருக்கும் மலரணிந்த கூந்தலுடையவளான சேதி நாட்டரசி, சேடி சென்று அழைத்து வந்த தமயந்தியைக் கண்டாள். ‘அழகிய தாமரையிலே இருக்கும் திருமகளே போலும் இவள்’ என்று ஐயுற்று, “பைந்தொடியே! உன் சிந்தைக் கலக்கம் எனக்குத் தீராதேயிருக்கின்றது. நின்னைப் பற்றிய உண்மைகளை எல்லாம் எனக்குச் சொல்லுவாயாக” என்றாள். (சிந்தைக் கலக்கம், தமயந்தியின் சோகமான நிலைமையைக் கண்டதனால் ஏற்பட்டதும், அவள் உருவம் தனக்கு அவள் உறவானவள் என்பதை உணர்த்தியதும், சிந்தாகுலம் - சிந்தையின் ஆகுலம் - உள்ளக் கலக்கம்.) இது என் வரவு என்னைத் தனிவனத்திட் டென்கோன் பிரிந்தேக அன்னவனைக் காணா தலமருவேன் - இந்நகர்க்கே வந்தே னிதுவென் வரவென்றாள் வாய்புலராச் செந்தேன் மொழிபதறாத் தேர்ந்து. 320 “என் நாயகனானவன் என்னைத் தனியாக வனத்திலே கைவிட்டுப் பிரிந்து போக, அவனைக் காணாதே வருந்துபளான நான், இந்நகருக்கு வந்து சேர்ந்தேன். இதுவே என் வரவின் உண்மை” என்று தமயந்தி, தன் வாய் ஈரம் புலரச் செவ்விய தேன் போன்ற சொற்கள் தடுமாறத் தன் நிலைமையை அரசிக்குக் கூறினால். (வாயீரம் புலர்தலும், சொற்கள் தடுமாறலும், தான் அடைந்த துயரையும், தான் நின்ற நிலையையும் கருதிய தளர்ச்சியினால் ஆகும்.) இங்கே இருக்க உன்றலைவன் தன்னை யொருவகையால் நாடியே தந்து விடுமளவுந் தாழ்குழலாய் - என்றனுடன் இங்கே யிருக்க இனிதென்றா ளேந்திழையைக் கொங்கேயுந் தாராள் குறித்து. 321 மணம் பொருந்திய மாலையணிந்தவளான அந்த அரசி தமயந்தியைக் குறிப்பிட்டு நோக்கியவாறு, “தாழ்கின்ற கூந்தலை உடையவளே! உன் தலைவனை ஒரு வகையினாலே தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்து, நின்னை யான் அவனுடன் அனுப்புகின்ற நாள் வரையிலும், என்னுடன் இவ் அரண்மனையிலேயே மகிழ்ச்சியுடன் நீயும் தங்கி இருப்பாயாக” என்றான். 14. தேடி வந்த அந்தணன்! சென்று அறிவாயாக! ஈங்கிவளிவ் வாறிருப்ப இன்னலுழந் தேயேகிப் பூங்குயிலும் போர்வேற் புரவலனும் - யாஙகுற்றார் சென்றுணர்தி என்று செலவிட்டான் வேதியனைக் குன்றுறழ்தோள் வீமன் குறித்து. 322 இவ்வாறு தமயந்தி சேதிநாட்டரசியின் இடத்திலே இருந்துவருங் காலத்து, மலையை நிகர்த்த தோள்களையுடைய வீமராசன், ‘அழகிய குயில் போன்ற தமயந்தியும், போர் செய்யும் வேற்படையுடைய புரவலனான நளனும், துன்புற்று வருந்திச் சென்று எவ்விடத்தினை அடைந்துள்ளனர் என்பதனைச் சென்று அறிந்து வருவாயாக’ என்று சொல்லி, ஒரு வேதியனைப் பல நாடுகளுக்கும் அனுப்பி வைத்தான். அந்தணன் வந்தான் ஓடும் புரவித்தேர் வெய்யோன் ஒளிசென்று நாடும் இடமெல்லாம் நாடிப்போய்க் - கூடினான் போதிற் றிருநாடும் பொய்கைத் திருநாடாம் சேதித் திருநாடு சென்று. 323 தமயந்தியும் சேதி நாட்டரசியின் விடுப்பப்படியே, அவ்விடத்தே இருக்க எண்ணி நின்றிருக்கையிலே, ஓடுதலிற் சிறந்த குதிரைகள் பூட்டிய தேரினை உடைய வெய்யோனாகிய கதிரவனின் ஒளி சென்று பரவுகின்ற இடமெங்கணும் அவளைத் தேடிப் போய்க் கொண்டிருந்த அந்தணன், தாமரையில் குடிகொண்டிருக்கும் திருமகள் விரும்பி அடையும் பொய்கைகளையுடைய செல்வமிக்க நாடான அச்சேதித் திருநாட்டினையும் சென்று சேர்ந்தான். அழுதான்! அழுதாள்! தாமஞ்சே ரோதித் தமயந்தி நின்றாளை ஆமென் றறியா அருமறையோன் - வீமன் கொடிமேல் விழுந்தழுதான் கொம்புமவன் செம்பொன் அடிமேல் விழுந்தாள் அழுது. 324 அப்படி வந்து சேர்ந்தோனாகிய அந்த அருமறையாளன், மாலை சோர்ந்த கூந்தலை உடையவளாக நின்றிருந்தவளைத் ‘தமயந்தியே’ என்று அறிந்து கொண்டு, அந்த வீமனின் திருமகள் மேல் விழுந்து வாய்விட்டுக் குரலெழுப்பி அழுவானானான். பூங்கொம்பு போன்ற அவளும், தன்னுடைய துயர்தாங்காதவளாய், அவனுடைய செம்பொன் போன்ற திருவடிகளிலே வீழ்ந்து தானும் கதறினாள். (அந்தணனின் பேரன்பு, அவளைக் கண்டதும் அவள் மேல் செயலற்று வீழ்ந்து அழுமாறு செய்கின்றது.) உடல்போலும் ஒத்தார் உயிர் மங்கை விழிநீர் மறையோன் கழல்கழுவ அங்கவன்றன் கண்ணீ ரவளுடன்மேற் - பொங்கக் கடல்போலுங் காதலார் கையற்றார் தங்கள் உடல்போலும் ஒத்தார் உயிர். 325 மங்கையாம் தமயந்தியின் விழிகளினின்றும் வழிந்தோடிய கண்ணீர், அந்த மறையோனின் திருவடிகளை அலம்பிற்று. அவ்விடத்து அவன் வடித்த கண்ணீரோ, அவள் உடல் மீது எங்கணும் பெருகி வழிந்தது. கடல் போலும் பரந்த அன்பை உடையவர்களாகிய அவர்கள், மிகவும் வருத்தமுற்றுத் தளர்ந்தனர். பற்றியிருந்த தங்கள் உடல்களைப் போலவே தங்கள் உயிர்களும் துயரத்தினாலே ஒன்றுபட்டவராயினர். (பரப்பும் ஆழமுமுடைய கடல் அன்பின் மிகுதிக்கு உவமையாகக் கூறப்பெற்றது. உயிர் கலத்தலாவது, அன்பினாலேயும் துயரத்தாலேயும் ஒன்றுபடல்.) கண்டாயோ மாதரசி? மாரி பொருகூந்தன் மாதராய் நீ பயந்த காரிகைதான் பட்டதுயர் கண்டாயோ - சோர்குழலும் வேணியாய் வெண்டுகிலும் பாதியாய் வெந்துயருக் காணியாய் நின்றா ளயர்ந்து. 326 அந்த அரசியை நோக்கி, அதன்பின் அந்த மறையோன், “மழை மேகத்தினைப் போல இருக்கின்ற கருமையான கூந்தலையுடைய மாதரசியே! நீ பெற்றெடுத்த இந்த அழகியாள் பட்ட துயரத்தினையும் கண்டாயோ? அவிழ்ந்து தொங்கும் கூந்தலும் சடையாய்ப் போனதே! வெள்ளையான துகிலும் பாதியாகப் போயிற்றே! கொடிதான துயரத்திற்கே அச்சாணிபோல அயர்ந்து நிற்கின்றாளே! இவளை நீயும் பார்த்தாயோ?” என்றான். (விதர்ப்பன் மனைவிக்கு வீமன் மனைவி தங்கை உறவுடையாளாதல் பற்றித் தமயந்தியை ‘அவள் மகள்’ என்றான். அந்த மறையோன், வெண் துகில் - சிறப்பற்ற ஆடையெனினும் பொருந்தும்.) தேவியும் அழுதாள் தன்மக ளாவ தறியாத் தடுமாறாப் பொன்வடிவின் மேலழுது போய்வீழ்ந்தாள் - மென்மலரைக் கோதிப்போய் மேதி குருகெழுப்பும் தண்பணைசூழ் சேதிக்கோன் தேவி திகைத்து. 327 மென்மையான நீர்ப்பூக்களைத் தம் கொம்புகளினாலே கோதிச் சென்ற எருமைகள், நீர்ப்பறவைகளை எழுந்தோடச் செய்கின்ற தண்மையான வயல்கள் சூழ்ந்துள்ள சேதி நாட்டின் அரசனுடைய தேவியானவள், மறையவன் அவ்வாறு கூறியதனைக் கேட்டுத் தானும் திகைப்படைந்தாள். அவள் தன் மகளாயிருப்பதை அறிந்ததும், மனம் தடுமாற்றம் கொண்டாள். அழுதுகொண்டே சென்று திருமகள் வடிவாயிருந்த அந்தத் தமயந்தியின் மேலே வீழ்ந்து, தானும் அழுது புலம்பினாள். கண்டு துயர் தீர கந்தனையும் கன்னியையும் கண்டாயி னுஞ்சிறிது தன்துயரம் தீர்ந்து தனியாறத் - தந்தை பதியிலே போக்கினான் சேதியர்கோன் பண்டை விதியிலே போந்தாளை மீண்டு. 328 சேதிநாட்டு அரசன், பண்டை ஊழ்வினை வசத்தினாலே தன் நாட்டிற்கு வந்தவளான தமயந்தியை, முருகனைப் போன்ற தன் மகனையும், குமரித் தெய்வம் போன்ற தன் மகளையும் கண்டாவது அவள் தன் துயரம் சிறிதளவேனும் தீர்ந்து ஆறுதல் கொள்ளும்படியாக, அந்த அந்தணனுடடன் அவளுடைய தந்தையாகிய வீமராசனின் நகருக்கு அனுப்பி வைத்தான். எல்லாம் மயங்கின! கோயிலும் அந்தப் புரமும் கொடிநுடங்கும் வாயிலும் நின்று மயங்கியதே - தீயகொடும் கானாள மக்களையுங் கைவிட்டுக் காதலன்பின் போனாள் புகுந்த பொழுது. 329 தான் பெற்றெடுத்த மக்களையும் கைவிட்டுத் தன் காதலனின் பின்னாக வெம்மை மிக்க கொடிய கானகத்தினை ஆள்வதற்குப் போனவளான தமயந்தியானவள், தன் தந்தையின் நகரிலே சென்று புகுந்த அந்தப் பொழுதிலே, அரண்மனையும், அந்தப்புரமும், கொடிகள் அசைந்தாடும் வாயிலும் எல்லாம் செயலற்று நின்று, அவள் நிலை கருதித் தாமும் மயக்கங் கொண்டனவாயின! (கோயில் - அரண்மனையைச் சார்ந்தவர்; அந்தப்புரம் - பெண்கள் பகுதியினர்; வாயில் - ஏவலாளர்களும் காவலாளர்களும்.) 15. பிறந்தகம் அடைந்தாள் அன்புக் கடல் அழுவார் விழுவார் அயிர்ப்பார் உயிர்ப்பார் தொழுவார் தமரெங்கும் சூழ்வார் - வழுவாக் காமநீ ரோதக் கடல்கிளர்ந்தால் ஒத்ததே நாமவேல் வீமன் நகர். 330 அழுவாரும், மயங்கி விழுவாரும், இஃது மாயமோ கனவோ என அயிர்ப்பாரும். உயிர்ப்பாரும், ‘இங்ஙனமேனும் வந்தனளே’ எனத் தெய்வத்தை வணங்குவாருமாகத் தமயந்தியின் சுற்றத்தார் எல்லாரும் அவளைச் சூழ்ந்து கொள்வாராயினர். பகைவர்க்கு அச்சம் விளைக்கும் வேலினை ஏந்தியவனாகிய வீமனது நகர் முழுவதும், அப்போது பழுதற்ற அன்புவெள்ளம் பொங்கி எழுகின்ற மக்கட்கடலானது மிக்கு எழுந்தது போல, தமயந்திபாற் கொண்ட அன்பு வெள்ளத்தின் ஆரவாரத்துடனே திகழ்ந்தது. தந்தையைக் கண்டாள்! தந்தையைமுன் காண்டலுமே தாமரைக்க ணீர்சொரியச் சிந்தை கலங்கித் திகைத்தலமந் - தெந்தாயான் பட்டதே என்னப்போய் வீழ்ந்தாள் படைநெடுங்கண் விட்டநீர் மேலே விழ. 331 தன் தந்தையை எதிரே கண்டதும், தாமரைபோன்ற தன் கண்கள் நீரினைச் சொரியச் சிந்தை கலங்கித் திகைப்புற்று வருந்தி, “எந்தாய்! யான் பட்ட துன்பம் என் சொல்லேன்” என்று கதறியவளாகச் சென்று, வேற்படை போன்ற தன் நெடுங்கண் சொரிந்த நீர் அவன் மீது விழ, அவன் தாள்கள் மீது சென்று விழுந்து கதறிப் புலம்பினாள். கண்ணீரில் நீந்தினார் செவ்வண்ண வாயாளும் தேர்வேந்த னுமகளை அவ்வண்ணங் கண்டக்கா லாற்றுவரோ - மெய்வண்ணம் ஓய்ந்துநா நீர்போய் உலர்கின்ற தொத்ததமர் நீந்தினார் கண்ணீரி னின்று. 332 செவ்வண்ணம் பொருந்திய வாயினளான வீமராசனின் மனைவியும், தேர்வேந்தனாகிய அவனும், தன் மகளை அத்தகைய நிலையிலே கண்டபோது ஆறுதலுடன் இருப்பார்களோ? அவர்களும் தம் உடல் எல்லாம் சோர்ந்து, நாவின் நீரும் போய், நாவும் வறட்சியுற்ற தன்மையராகச் செயலற்று மயங்கி நின்றனர். பொருந்திய சுற்றத்தார்களோ கண்ணீர் வெள்ளத்தே நிலைபெற்றுத் துயரக்கடலிலே கரை காண முடியாதாராய் நீந்திக் கொண்டிருந்தார்கள். பெற்றவள் புலம்பினாள் பனியிருளிற் பாழ்மண்டபத்திலே யுன்னை நினையாது நீத்தகன்ற போது - தனியேநின் றென்னினைந்து என்செய்தாய் என்னாப் புலம்பினாள் பொன்னினைத்தாய் நோக்கிப் புலர்ந்து. 333 “மிகுதியான இருளிலே, பாழான மண்டபத்திலே, உன்னைப் பற்றி எண்ணிப் பாராமல், உன் கணவன் உன்னைக் கைவிட்டுச் சென்றபோது, தன்னந்தனியே அவ்விடத்தே நின்று என்னென்ன நினைத்தாயோ? என்னென்ன செய்தாயோ?” என்று, தமயந்தியின் தாயானவள், தன் மகளை நோக்கி நோக்கி வாட்டமுற்றுப் புலம்பினாள். (வாட்டமுற்று வந்தடைந்த அருமை மகனைப் பெற்றவர்கள், சோகக்கடலும் பாசவெள்ளமும் மீதெழ, ஏற்று இன்பம் கொள்ளும் அரியதான பகுதி இது. பெற்றவர்களின் நெஞ்சக் கொதிப்பையும் அன்பின் கதிர்ப்பையும் பாடல்கள் ஓவியப்படுத்திக் காட்டுகின்றன.) கலிதொடர் காண்டம் முற்றும் 3. கலி நீங்கு காண்டம் 1. நாகம் அளித்த பரிசு அருளும் திருப்பாதம்! மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம் காலிக்குப் பின்னேயுங் காணலாம் - மால்யானை முந்தருளும் வேத முதலே யெனவழைப்ப வந்தருளும் செந்தா மறை. 334 பெரிதான கஜேந்திரன் என்னும் யானையானது, ‘அடியார் வேண்டுவதற்கு முன்பாகவே தோன்றி, அவர்க்கு அருளுகின்ற வேதமுதல்வனே!’ என்று அந்நாளிலே அழைக்க, அங்ஙனமே தோன்றி அதற்கு அருளுகின்ற திருமாலின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை, அனைத்துக்கும் மூலமான பழமறைக்கு முன்னாக நிலைபெற்று விளங்கவும் காணலாம்; பசுங்கூட்டங்கட்குப் பின்னாகச் சென்று கொண்டிருப்பவும் காணலாம். (பக்திக்கு எளியனாகும் பரம்பொருளின் செவ்வி உரைத்துப் போற்றுவது இச் செய்யுள்.) மனக்கோயில் கொண்டான்! போதுவார் நீறணிந்து பொய்யாத ஐந்தெழுத்தை ஓதுவார் உள்ளம் எனவுரைப்பார் - நீதியார் பெம்மான் அமரர் பெருமான் ஒருமான்கை அம்மானின் றாடும் அரங்கு. 335 “உரிய பொழுதுகளிலே நீண்ட திருநீற்றுச் சின்னங்களை அணிந்து, என்றும் பயன் தருவதிலே பொய்த்தலில்லாத பஞ்சாடார் மந்திரத்தை ஓதுகின்றவர்களின் உள்ளமானது - நீதிமான்களுக்கெல்லாம் தலைவனும், தேவர்களுக்கு எல்லாம் பெருமானாகிய மாதேவனும், ஒப்பற்ற மானைக் கையிலே தரித்தவனுமாகிய, அந்தப் பெருமானாகிய சிவபெருமான் நிலைபெற்று நின்று நடனஞ்செய்கின்ற அம்பலமே ஆகும்” என்று ஆன்றோர்கள் உரைப்பார்கள்! அவனும் காப்பானாக என்பது கருத்து.) அபயம் என்ற அரவரசன் மன்னா உனக்கபயம் என்னா வனத்தீயில் பன்னாக வேந்தன் பதைத்துருகிச் - சொன்ன மொழிவழியே சென்றான் முரட்கலியின் வஞ்சப் பழிவழியே செல்கின்றான் பார்த்து. 336 தன்னோடு மாறுபாடு கொண்ட கலிமகனின் வஞ்சகமான பழியொடு பட்ட வழியூடே சென்று கொண்டிருந்தான் நளன். அத்தகையவன், “மன்னவனே! உனக்கு அடைக்கலம் நான்” என்று சொல்லிக் காட்டுத் தீயிடையே சிக்கித் தவித்து உளம் பதைத்து உருகிய ஒரு நாகவேந்தன் சொல்லிய சொற்கள் வந்த வழியிலே, அவனை நோக்கிச் சென்றான். (பன்னாகம் - பல நாகங்கள். ‘பழிவழி’ என்றது பழியொடு பட்ட நெறி; அது தன் மனைவியைக் கைவிட்டுச் சென்றது. முரண் - மாறுபாடு.) எரிவானைக் கண்டான்! ஆரும் திரியா அரையிருளில் அங்கனமே சோர்குழலை நீத்த துயரோடும் - வீரன் திரிவானத் தீக்கானிற் செந்தீயின் வாய்ப்பட் டெரிவானைக் கண்டான் எதிர். 337 எவரும் திரிதலற்ற நள்ளிருளிலே தாழ்ந்த, கூந்தலையுண்டவளைக் கைவிட்டு வந்த துயரத்தோடும், அங்ஙனமாகத் திரிந்து கொண்டிருந்த வீரனாகிய நளமன்னவன், அத்தீப்பட்ட வனத்திலே, செந்தீயினிடையே பட்டு எரிந்து கொண்டிருந்த நாகவேந்தனைத் தன் முன்னர்க் கண்டான். (அரையிருள் - இரவின் நடுச் சாமவேலை. ‘சோர்குழல்’ என்றது, தமயந்தியை; தீக்கான் - வெம்மை மிக்க கானமும் ஆம்.) அரவு அரசை அடைந்தான் தீக்கடவுள் தந்த வரத்தைத் திருமனத்தில் ஆக்கி யருளால் அரவரசை - நோக்கி அடைந்தான் அடைதலுமே ஆரழலோன் அஞ்சி உடைந்தான் போய்ப்புக்கான் உவர்ந்து. 338 தீக்கடவுள் முன்னர்த் தனக்குத் தந்த வரத்தினைத் தன் சிறந்த மனத்திலே மேற்கொண்டவனாக, அருளினாலே, அந்த நாகவேந்தனை நோக்கி நடந்து சென்று அந்த இடத்தையும் நளன் அடைந்தான். அவ்வாறு நளன் சென்று சேர்தலும் மிகுதியான அழலுடையோனாகிய தீக்கடவுள், தன் வரத்தைப் பிழைத்தற்கு அஞ்சித் தன் வலியினைக் குறைத்துக் கொண்டவனாகி, மகிழ்வுடன், தான் அகன்று புறத்தே போய்விட்டான். (நளனுக்கு முன்னர்த் தீக்கடவுள் வரமளித்த செய்தினைச் சுயம்வர காண்டத்து, ‘அங்கிய முதம்’ என்னும் செய்யுளாற் காண்க.) காப்பாற்று என்றான் வேத முனியொருவன் சாபத்தால் வெங்கானில் ஆதபத்தின் வாய்ப்பட் டழிகின்றேன் - காதலால் வந்தெடுத்துக் காவென்றான் மாலை மணிவண்டு சந்தெடுத்த தோளானைத் தான். 339 தன் மாலையிலே கருமையான வண்டினம் மொய்த்து இசை எழுப்புகின்ற தோளாற்றல் உடைய அந்நளனை நோக்கி, “வேத முனிவன் ஒருவனுடைய சாபத்தின் பயனாலே, இந்தக் கொடிய கானகத்தில், நெருப்பினிடையே சிக்கி அழிகின்றேன்; அன்புடனே வந்து என்னை இதனின்றும் எடுத்துக் காப்பாயாக” என்றான். அந்த நாகரசன். (”மாதர் முலைக்குவட்டின் சந்தெடுத்த தோளானை” எனவும் பாடம் கொள்வர்.) கொண்டுபோய் பாரில் விடுக சீரியாய் நீயெடுப்பத் தீமை கெடுகின்றேன் கூருந் தழலவித்துக் கொண்டுபோய்ப் - பாரில் விடுகென்றான் மற்றந்த வெந்தழலால் வெம்மைப் படுகின்றான் வேல்வேந்தைப் பார்த்து. 340 அந்த வெம்மையான தழலினாலே எரிக்கப்படுகின்றவனாகிய நாகராசன், வேல்வேந்தனான நளனைப் பார்த்து, “சிறந்தோனே! நீ என்னை எடுத்துக் காப்பதனால் என் தீமை எல்லாம் நீங்கப் பெறுகின்றேன்; அதனால் மிகுதியான இந்த நெருப்பை அவித்து, என்னைக் கொண்டு போய்ப் பூமியிலே விடுவாயாக” என்று வேண்டினான். (’பார்’ என்றது, நெருப்பற்ற இடத்தை, கூரும் தழல் - மிக்க தழல். அரவரசைக் கொண்டு அகன்றான் என்றுரைத்த அவ்வளவி லேமுலகுஞ் சூழ்கடலும் குன்றுஞ் சுமந்த குலப்புயத்தான் - வென்றி அரவரசைக் கொண்டகன்றான் ஆரணியம் தன்னின் இரவரசை வென்றான் எடுத்து. 341 நாகராசன் அப்படிச் சொன்ன அளவிலேயே, ஏழு உலகங்களையும் அவற்றைச் சூழ்ந்த ஏழு குலகிரிகளையும் தாங்கின மேன்மையான தோள்களை உடையவனான, இரவுக்கு அரசனாகிய சந்திரனையும், தன் முக காந்தியினாலே வெற்றி கொண்டவனாகிய அந் நளனும், உன் வேண்டுதலிலே வெற்றி கொண்ட நாகராசனைத் தூக்கிக் கொண்டு, நெருப்பினின்றும் அகன்று, அக் காட்டிலே சிறிது தொலைவாகச் சென்றான். 'தச' என்று சொல்லி இடுக மண்ணின்மீ தென்றனைநின் வன்றாளால் ஒன்றுமுதல் எண்ணித் தசவென் றிடுகென்றான் - நண்ணிப்போர் மாவலான் செய்த வுதவிக்கு மாறாக ஏவலாற் றீங்கிழைப்பே னென்று. 342 பகைவரை நெருங்கிப் போரியற்றுதலிலே பெருவல்லமை உடையவனாகிய நளன், தனக்குச் செய்த உதவிக்குக் கைம்மாறாக அவன் ஏவலினாலேயே அவனுக்குத் தீங்கு செய்வேன் என்று அந்த நாகராசன் உளங்கொண்டான். “நின்னுடைய வலிமையான திருவடியினாலே ஒன்று முதல் அடிவைத்து எண்ணித் தசவென்று சொன்னதும் என்னை மண்ணின் மீது இடுவாயாக” என்று நளனிடத்தே கூறினான். (‘தச’ என்னும் சொல் பத்து எனவும், ‘கடி’ எனவும் பொருள் படும். ஆகவே, நாகராசன் தந்திரமாக அப்படிச் செய்யச் சொன்னான் என்க.) எயிறு வைத்தான் ஆங்கவன்றான் அவ்வா றுரைப்ப அதுகேட்டுத் தீங்கலியாற் செற்ற திருமனத்தான் - பூங்கழலை மண்ணின்மேல் வைத்துத் தசவென்று வாய்மையால் எண்ணினான் வைத்தான் எயிறு. 343 நாகராசனானவன் அந்தப் படியாகச் சொல்லவும், அதனைக் கேட்டுத் தீயவனாகிய கலியினாலே ஆட்கொள்ளப் பெற்ற சிறந்த உள்ளமுடையவனாகிய நளனும், தன் மலர் போன்ற பாதத்தைத் தரையின் மேலே வைத்து, ஒன்று முதலாக எண்ணி வந்து, உண்மையாகவே ‘தச’ வென்றும் பத்தாவது அடியினை எண்ணினான்! ‘தச’ என்று சொல்லவும், நாகராசன் தன் பற்களை அவன் மீது பதித்தான். (‘வாய்மை’ என்றது நாகராசனுக்கு அளித்த வாக்கு. எயிறு வைத்தல் - பற்பதித்தல்; அதாவது கடித்தல்.) காரணம் என்னவோ? ஆற்ற லரவரசே யாங்கென் னுருவத்தைச் சீற்றமொன் றின்றிச் சினவெயிற்றால் - மாற்றுதற்கின் றென்கா ரணமென்றான் ஏற்றமரிற் கூற்றழைக்கும் மின்கா லயின்முகவேல் வேந்து. 344 போரிடையே பகையரசரை எதிரேற்றுக் கூற்றுவனை விருந்திடுவதற்கு அழைக்கின்ற, மின்னொளி பரப்பும் கூர்மையான முனையையுடைய வேலோனாகிய நளமன்னன், “ஆற்றலுடைய அரவரசனே! என்பாற் சினம் எதுவுமில்லாமலே என் உருவத்தினை நின் உக்கிரமான பல்லினாலே கடித்து, இவ்வாறு மாற்றுவதற்கு என்ன காரணமோ?” என்றான். (உதவிய தனக்குக் கேடு செய்தது எதனாலோ என்று ஐயுறுகின்றான் நளன். அதனாலேயே, அரவரசனை நோக்கி, ‘என்மேற் சினம் எதுவும் இல்லாதபோது, இப்படிக் கடிந்து என் உருவை மாற்றியது எதனால்?’ என்று கேட்கின்றான்.) மேனி குறுகிற்று வீமன் மடந்தை விழிமுடியக் கண்டறியா வாம நெடுந்தோள் வறியோருக் - கேமம் கொடாதார் ஆகம்போற் குறுகிற்றே மெய்ம்மை விடாதான் திருமேனி வெந்து. 345 அரவரசன் அங்ஙனம் கடித்தான். அதனால், சத்திய நெறியினின்றும் தவறாத நளனின் அழகிய திருமேனியும் கருகிப் போயிற்று. வீமன் மகளான தமயந்தியின் விழிகளும் முற்றவும் கண்டறியாத அழகான நெடுந்தோள்கள், வறுமையாளருக்கு உதவிப் பாதுகாப்புக் கொடாதவர்களுடைய உள்ளத்தைப் போலக் குறுகியும் போயிற்று. (‘விழி முடிய’ என்பது, கண்ணின் ஆர்வம் முற்றவும் தீர என்பதாம். பார்க்கப் பார்க்க ஆர்வம் மீளவும் அவட்கு எழுமாதலின், ‘விழிமுடியக் கண்டறியா’ என்றனர்.) மறைந்துறைதல் காரணமாய் காயும் கடகளிற்றாய் கார்க்கோ டகனென்பேர் நீயிங்கு வந்தமை யானினைந்து - காயத்தை மாறாக்கிக் கொண்டு மறைந்துறைதல் காரணமா வேறாக்கிற் றென்றான் விரைந்து. 346 ‘சினங்கொள்ளும் மதயானை போன்றோனே! கார்க்கோடகன் என்பது என் பெயர். நீ இங்கு வந்ததனை யான் கருதினேன். நின் உருவத்தை மாறுபட்டதாக்கிக் கொண்டு மறைவாக நீ வாழ்வதன் காரணமாகவே, விரைந்து யான் நினைக்கக் கடித்து வேறுபடச் செய்தது’ என்றான், அந்த அரவரசன். (‘நின் நன்மையைக் கருதியே, நினக்கு உதவும் பொருட்டாக நின்னைக் கடித்தேன்’ என்கிறான் அரவரசன்.) ஆடை கொள்வாய்! கூனிறால் பாயக் குவளை தவளைவாய்த் தேனிறால் பாயும் திருநாடா - கானில் தணியாத வெங்கனலைத் தாங்கினாய் இந்த அணியாடை கொள்கென்றான் ஆங்கு. 347 “வளைவான இறால் மீன்கள் பாய்வதனாலே, குவளை மலர்களினின்றும் மிக்க தேனானது தேனிறால்போலத் தவளைகளின் வாயிடத்தே பாய்கின்ற வளநாட்டிற்கு உரியவனே! இந்தக் காட்டிலே, ஆறாத கொடிய நெருப்பினின்றும் என்னை எடுத்துக் காத்தாய், இந்த அழகிய ஆடைகளையும் நீ பெற்றுக் கொள்வாயாக” என்றான் அந்த அரவரசன். சாத்தினால் ஒளிக்கும் சாதி மணித்துகில் நீ சாத்தினால் தண்கழுநீர்ப் போதின்கீழ் மேயும் புதுவரால் - தாதின் துளிக்குநா நீட்டுந் துறைநாடர் கோவே ஒளிக்குநாள் நீங்கும் உரு. 348 “குளிர்ச்சியான செங்கழுநீர்ப் பூவின் கீழாக மேய்கின்ற புதியவரால் மீன்கள், அப்பூக்களினின்றும் வீழ்கின்ற தேன் துளிக்கு நாவை நீட்டுகின்ற வளமான நீர்த்துறைகளையுடைய நாட்டினரின் கோமானே! சாதிமாணிக்கம் போலச் சிறந்த இந்த ஆடைகளை நின்மேலே அணிந்து கொண்டனையானால், இந் நாளிலே மறைந்த நின் பழைய உருவம் மீண்டும் விளங்கப் பெறுவாய்” என்றான் நாகராசன். (ஒளிக்கும் - ஒளி செய்யும்.) தேர்த் தொழிலோன் ஆகுக வாகு குறைந்தமையால் வாகுவனென் றுன்னாமம் ஆக வயோத்தி நகரடைந்து - மாகனகத் தேர்த் தொழிற்கு மிக்கானீ யாகென்றான் செம்மனத்தால் பார்த்தொழிற்கு மிக்கானைப் பார்த்து. 349 செம்மையான தன் உள்ளத்தினாலே நிலம் ஆளுகின்ற ஆட்சித் தொழிலுக்குச் சிறந்தோனாகிய நளனை நோக்கி, “நின் கைகள் குறுகியமையால் ‘வாகுவன்’ என்று நின் பெயர் இனி ஆவதாக, அயோத்தி நகரத்தைச் சேர்ந்து, சிறந்த பொற்றேர் செலுத்தும் தொழிலுக்குச் சிறந்தவனாக நீ ஆவாயாக” என்று மீண்டும் கார்க்கோடகன் சொன்னான். (வாகு - கை; வாகுவன் குட்டைக் கையன், தோள் குறுகிற்று என்பதை 345ஆவது செய்யுளாற் காண்க.) 2. அயோத்தி வாசம் நளன் புறப்பட்டான் இணையாரும் இல்லான் இழைத்த உதவி புணையாகச் சூழ்கானிற் போனான் - பணையாகத் திண்ணாக மோரெட்டுந் தாங்குந் திசையனைத்தும் எண்ணாக வேந்த னெழுந்து. 350 பருத்த உடலுடையவான் திக்கு யானைகள் எட்டும் தயங்குகின்ற திசைகள் அனைத்தையும் சிந்திக்கும் உள்ளத்தினையுடைய வேந்தனான நளனும், கார்க்கோடகன் சொன்னவாறே அயோத்தி நகரினை நோக்கிப் புறப்பட்டான். தனக்கு ஒப்பவர் யாரும் இல்லாத சிறப்புடையோனாகிய அரவரசன், தனக்குச் செய்த உதவியே தனக்குத் துணையாகக் கொண்டு, எப்புறமும் சூழ்ந்துள்ள அக்காட்டின் வழியே, நளன் மேற்கொண்டு நடந்து செல்பவனும் ஆயினான். |