புகழேந்திப் புலவர்

இயற்றிய

நளவெண்பா

தெளிவுரை: புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி ...

மகத நாட்டான்

புண்டரிகம் தீயெரிவ போல்விரியப் பூம்புகைபோல்
வண்டிரியும் தெண்ணீர் மகதர்கோன் - எண்டிசையில்
போர்வேந்தர் கண்டறியாப் பொன்னாவம் பின்னுடைய
தேர்வேந்தன் கண்டாயிச் சேய். 151

     நெருப்பு எரிவதைப் போலச் செந்தாமரைகள் இதழ் விரித்திருக்கும்; அந்த நெருப்பிலிருந்தும் எழுகின்ற புகையினைப் போல, அவற்றின் மேலாக வண்டினம் மொய்த்துக் கொண்டிருக்கும்; அத்தகைய நீர்வளம் மிகுந்த மகத நாட்டின் கோமான் இவன். எட்டுத் திக்குகளிலுமுள்ள பேராற்றல் மிக்க வேந்தரெல்லாம் கண்டறியாத, அழகிய அம்பறாத் தூணியைத் தன் பின்புறமாக உடைய தேர் வேந்தனும் இவன்! இவனையும் காண்பாயாக!

அங்க நாடன் இவன்

கூன்சங்கின் பிள்ளை கொடிப்பவளக் கோடிடறித்
தேன்கழியில் வீழத் திரைக்கரத்தால் - வான்கடல்வந்
தந்தோ எனவெடுக்கும் அங்கநா டாளுடையான்
செந்தேன் மொழியாயிச் சேய். 152

     செவ்விய தேன் போன்ற இனிதான சொல்லினை உடையவளே! இந்த அரசகுமாரன், வளைவான சங்கினத்தின் குஞ்சுகள் கொடிப்பவளத்தின் கொம்பிலே இடறுதலுற்றுத் தேன் பாயும் கழிக்கரையிடத்திலே போய் வீழப், பெருங்கடலானது அதற்கு இரங்கி, ‘அந்தோ!’ என வந்து, தன் திரைக்கரத்தினாலே அவற்றைத் தழுவி எடுத்துப் போகின்ற அங்க நாட்டை ஆளுகின்ற உரிமையுடையவன் இவன்; இவனையும் காண்பாயாக!

கலிங்க நாடன் இவன்

தெள்வாளைக் காளைமீன் மேதிக் குலமெழுப்பக்
கள்வார்ந்த தாமரையின் காடுழக்கிப் - புள்ளோடு
வண்டிரியச் செல்லும் மணிநீர்க் கலிங்கர்கோன்
தண்டெரியல் தேர்வேந்தன் தான். 153

     தண்மை வாய்ந்த மலர் மாலையினை அணிந்த தேர் வேந்தனாகிய இவனையும் கண்டயோ! எருமைக் கூட்டங்கள் புகுந்து வெண்மையான வாளை என்னும் இளமீன்களைக் கலக்கி எழுப்ப, அவை தேன் ஒழுகும் தாமரை மலர்க் காட்டினைக் கலக்கி, அங்கு இருந்த பறவைகளும் வண்டுகளும் அஞ்சியோடுமாறு செய்து கொண்டிருக்கும் நீர்வளத்தினையுடைய, அழகான கலிங்கர்களின் கோமான் இவன்!

கேகய நாடன்

அங்கை வரிவளையாய் ஆழித் திரைகொணர்ந்த
செங்கண் மகரத்தைத் தீண்டிப்போய் - கங்கையிடைச்
சேல்குளிக்குங் கேகயர்கோன் தெவ்வாடற் கைவரைமேல்
வேல்குளிக்க நின்றானிவ் வேந்து. 154

     வரிகள் பொருந்திய வளைகள் விளங்கும் அழகிய கைகளை உடையவளே! கடலலைகள் கொணர்ந்த சிவந்த கண்களையுடைய மகர மீனைக் கெண்டை மீனானது தொட்டுப் போய்க் கங்கை நீரிடத்தே குளிக்கின்ற கேகய நாட்டு மன்னவன் இவன். பகையரசருடைய வளமிகுந்த யானைகளின் மீது தம் கைவேல் பாய்ந்து குளிக்கும்படியாகக் களத்திலே வீரம் விளைவித்து நின்ற வேந்தனும் இவனாவான்; இவனையும் காண்பாயாக!

காந்தார நாடன்

மாநீர் நெடுங்கயத்து வள்ளைக் கொடி மீது
தனேகும் அன்னம் தனிக்கயிற்றில்-போம்நீள்
கழைக்கோ தையரேய்க்கும் காந்தார நாடன்
மழைக்கோதை மானேயிம் மன். 155

     கார்மேகத்தைப் போன்ற கருமையான கூந்தலையுடைய மானே! இந்த மன்னவனையும் காணாய்! மிகுதியான நீரினையுடைய நெடிதான தடாகத்திலே படர்ந்துள்ள வள்ளைக் கொடிகளின் மீது நடந்து செல்லுகின்ற அன்னப் பறவைகள், ஒற்றையான கயிற்றிலே நடந்து போகின்ற கழைக்கூத்தியராகிய பெண்களை ஒப்பத் தோன்றும், காந்தார நாட்டு மன்னவன் இவனாவான்!

சிந்து நாட்டவன்

அங்கை நெடுவேற்கண் ஆயிழையாய் வாவியின்வாய்ச்
சங்கம் புடைபெயரத் தான்கலங்கிச்-செங்கமலப்
பூச்சிந்தும் நாட்டேறல் பொன்விளைக்குந் தண்பணைசூழ்
மாச்சிந்து நாட்டானிம் மன். 156

     வீரர்களின் அங்கையிடத்தே விளங்கும் நெடிதான வேற்படையினைப் போன்ற கண்களையுடைய சிறந்த ஆபரணங்களை அணிந்தவளே! தடாகத்தினிடத்தே சங்கினம் இடம்பெயரத் தான் அதனால் கலக்கமுற்ற செந்தாமரைப் பூவானது சிந்துகின்ற புதிய தேன், பொன் போன்ற நெல்மணிகளை விளைவிக்கும் தண்மை வாய்ந்த வயற்பகுதிகள் சூழ்ந்துள்ள பெரிய சிந்து நாட்டான் இந்த மன்னவன். இவனைக் காண்பாயாக! (நாட்டேறல் - அன்றலர்ந்த பூவிலிருந்து சிந்தும் புதிய தேன்.)

நளனுருவில் தேவர்கள்

காவலரைத் தன்சேடி காட்டக்கண் டீரிருவர்
தேவர் நளனுருவாச் சென்றிருந்தார்-பூவரைந்த
மாசிலாப் பூங்குழலாள் மற்றவரைக் காணநின்று
ஊசலா டுற்றாள் உளம். 157

     இவ்வாறு, அச்சுயம்வர மண்டபத்துள் இருந்த அரசரை எல்லாம் சேடியானவள் காட்டிவரப் பார்த்துக் கொண்டே வந்தாள் தமயந்தி. தேவர்கள் நால்வரும் அவ்விடத்தே நளனுருவத்துடனே உருமாறி வந்து அவன் அருகிலேயே வீற்றிருந்தனர். மலர் சூட்டப்பெற்ற குற்றமில்லாத அழகிய கூந்தலையுடைய தமயந்தி, அவர்களைக் கண்டதும் அப்படியே மயங்கி நின்றுவிட்டாள். அவருள் நளன் யாவனென அறியவியலாமல் தன் உள்ளம் ஊசலாடுகின்ற ஒரு நிலையினையும், அப்போது அவள் அடைந்தாள்.

வானவரும் வந்திருந்தார்

பூணுக் கழகளிக்கும் பொற்றொடியைக் கண்டக்கால்
நாணுக்கு நெஞ்சுடைய நல்வேந்தர்-நீணிலத்து
மற்றேவர் வாராதார் வானவரும் வந்திருந்தார்
பொற்றேர் நளனுருவாய்ப் போந்து. 158

     அணிந்துள்ள ஆபரணங்களுக்குத் தான் அழகினைத் தந்து கொண்டிருக்கும் பொன்னாலியன்ற தொடியணிந்துள்ளவளான தமயந்தியைப் பார்த்தவிடத்தே, அங்கிருந்த நல்ல அரசர்கள் அனைவரும் தம் நாணம் அகன்றுபோய்த், தம் நெஞ்சமும் உடைந்து போகத் தளர்வுடனே வீற்றிருந்தனர். இவ்வுலகத்து எந்த மன்னர் தாம் அந்தச் சுயம்வரத்திற்கு வராதிருந்தார்கள்! அனைவருமே வந்து குழுமியதுடன், வானவரும் பொற்றேரினையுடைய நளனின் உருவினைக் கொண்டவர்களாக, அங்கு வந்து கூடியிருந்தார்கள் அல்லரோ?

அருள் என்றாள்

மின்னுந்தார் வீமன்றன் மெய்ம்மரபிற் செம்மைசேர்
கன்னியான் ஆகிற் கடிமாலை - அன்னந்தான்
சொன்னவனைச் சூட்ட அருளென்றாள் சூழ்விதியின்
மன்னவனைத் தன்மனத்தே கொண்டு. 159

     தன்னை வந்து சூழ்ந்த ஊழ்வலியின் காரணமாகத், தான் காதல் கொண்ட நளமன்னவனைத் தன் உள்ளத்தே வரித்துக் கொண்டு, ‘ஒளியுடைய தாரணிந்த வீமராசனின் உண்மையான குலத்திலே பிறந்த சிறந்த இயல்புகளைக் கொண்ட கன்னி யான் ஆகில், அன்னமானது அன்று எனக்குச் சொன்னவனையே, இன்று யான் மணமாலை சூட்டுவதற்கு எனக்கு அருள் வாயாக’ என்று நளனையே தன் உள்ளத்துப் போற்றும் தெய்வமாகக் கொண்டு நினைந்து வேண்டினாள்.

அறிந்தாள் நளனை

கண்ணிமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால்
வண்ண மலர்மாலை வாடுதலால் - எண்ணி
நறுந்தா மரைவிரும்பும் நன்னுதலே அன்னாள்
அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு. 160

     நறுமணமுள்ள தாமரை மலரிலே விரும்பி உறைகின்ற திருமகளினைப் போன்றவளான அந்தத் தமயந்தி, நளனுருவிலே இருந்தவர்களினுள்ளே, கண் இமைத்ததாலும், காலடிகள் நிலத்தே தோய்தலாலும், பன்னிற வண்ணமுடைய மலர்மாலை வாடுதலாலும் ஆராய்ந்து, அவர்களுள் அவ்விடத்தே இருந்த உண்மையான நளனையும், யாவனெனக் கண்டறிந்து விட்டாள்.

பொன்மாலை சூட்டினாள்

விண்ணரசர் எல்லாரும் வெள்கி மனஞ்சுளிக்கக்
கண்ணகன் ஞாலம் களிகூர-மண்ணரசர்
வன்மாலைதம் மனத்தே சூட வயவேந்தைப்
பொன்மாலை சூட்டினாள் பொன். 161

     மேலுலகத்து வேந்தர்கள் எல்லாரும் நாணியவராகி மனம் களிக்கவும், இடம் விரிந்த உலகமெல்லாம் களிப்புக் கொள்ளவும், இவ்வுலகத்து அரசர் எல்லாரும் தம்மனத்தே கடிதான மயக்கத்தினைக் கொள்ளவுமாகத் திருமகள் போன்றவளான அத் தயமந்தியும், வெற்றி வேந்தனான நளனுக்குத் தன் கையிலிருந்த பொன்மாலையினைச் சென்று சூட்டினாள்.

முகம் வெளுத்தனர்

திண்டோ ள் வயவேந்தர் செந்தா மரைமுகம்போய்
வெண்டா மரையாய் வெளுத்தவே-ஒண்டாரைக்
கோமாலை வேலான் குலமாலை வேற்கண்ணாள்
பூமாலை பெற்றிருந்த போது. 162

     ஒளியுடனே சுடரிடும் தன்மையினைக் கொண்ட சிறந்த பொன்மாலையினை அணிந்தவனும், வேற்படையினை உடையவனுமாகிய நளமன்னன், சிறப்புடைய வேலினைப் போன்ற கண்கள் உடையவளான தமயந்தியின் அழகிய சுயம்வர மாலையினைப் பூண்டு களிப்புடனே வீற்றிருந்தான். அப்போது திண்மையான தோளினரான வெற்றி வேந்தர்களாக அங்குக் கூடியிருந்தோரின் செந்தாமரை மலர்போன்ற முகங்கள் எல்லாம், வெண் தாமரை மலர்போன்ற முகங்களாகி வெளிறித் தோன்றின. (ஏமாற்றத்தால் பிறர் முகங்கள் வாடிப் போயின தன்மையைக் கவி இப்படிக் கூறுகின்றார்.)

செம்மாந்து சென்றான்

மல்லல் மறுகின் மடநா குடனாகச்
செல்லும் மழவிடைபோல் செம்மாந்து-மெல்லியலாள்
பொன்மாலை பெற்றதோ ளோடும் புறப்பட்டான்
நன்மாலை வேலான் நளன். 163

     நல்ல மலர்மாலையினை அணிந்தோனும், வேற்படையினை உடையோனுமாகிய நளன், அதன்பின், வளம் பொருந்திய வீதியினிடத்தே, இளமையுடைய பசுவினுடனாகச் சொல்லுகின்ற, இளமை பொருந்திய ஓர் ஆனேற்றினைப் போலத், தன்னருகே தமயந்தியும் தன்னுடன் வந்து கொண்டிருக்க, விம்மிதத்துடனே ஊர்வலமாகப் போவானாயினான்.

கலியைக் கண்டார்

வேலை பெறாவமுதம் வீமன் திருமடந்தை
மாலை பெறாதகலும் வானாடர்-வேலை
பொருங்கலிநீர் ஞாலத்தைப் புன்னெறியில் ஆக்கும்
இருங்கலியைக் கண்டார் எதிர். 164

     கடலிடத்தே பிறவாத அமுதமாகிய வீமராசனின் திருமகளான தமயந்தியினது மணமாலையினைப் பெறாது வறிதே திரும்பிச் செல்லும் வானநாட்டவராகிய தேவேந்திரன் முதலாயினோர், அலைகள் மோதுகின்ற ஆரவாரத்தையுடைய கடலினாலே சூழப் பெற்ற உலகத்தினைக் கீழான பாதைக்கு உட்படுத்தும் தன்மை வாய்ந்த பெரிய கலி புருஷனைத், தம் எதிரே வேகமுடன் வரக் கண்டார்கள்.

ஈங்கு வருவது ஏன்?

ஈங்குவர வென்னென் றிமையவர்தங் கோன்வினவத்
தீங்கு தருகலியும் செப்பினான்-நீங்கள்
விருப்பான வீமன் திருமடந்தை யோடும்
இருப்பான் வருகின்றேன் யான். 165

     இமயவர்களின் கோமானாகிய தேவேந்திரன், ‘இவ்விடத்தே வருவதற்கு யாது காரணமோ?’ என்று அந்தக் கலியினைக் கேட்கத், தீங்கு விளைப்போனான அவனும், ‘நீங்கள் விருப்பங் கொண்ட வீமராசனின் திருமகளுஅனே யானும் மணம் பெற்றுக் கூடி இருப்பது கருதியே, இப்போது வந்து கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னான்.

ஆசையை விட்டுப் போவாய்

மன்னவரில் வைவேல் நளனே மதிவதனக்
கன்னி மணமாலை கைக்கொண்டான்-உன்னுடைய
உள்ளக் கருத்தை ஒழித்தே குதியென்றான்
வெள்ளைத் தனியானை வேந்து. 166

     கலிபுருஷனின் சொற்களைக் கேட்டதும், ஒப்பற்ற வெள்ளை யானையினையுடைய வேந்தனான இந்திரன், ‘வந்து கூடிய மன்னவரில், கூர்மையான வேலோனாகிய நளன் என்பவனே, நிலாவனைய முகத்தினளான அக்கன்னியின் மணமாலையினைக் கைக்கொண்டான். அதனால் நின் உள்ளக் கருத்தினைக் கைவிட்டு, மீண்டு நீயும் எம்முடன் வானகம் செல்வாயாக’ என்றான். (வெள்ளைத் தனியானை - அயிராவதம்.)

கெடுக்கின்றேன்! கெடுக்கின்றேன்!

விண்ணரசர் நிற்க வெறித்தேன் மணமாலை
மண்ணரசர்க் கீந்த மடமாதின்-எண்ணம்
கெடுக்கின்றேன் மற்றவள்தன் கேள்வற்கும் கீழ்மை
கொடுக்கின்றேன் என்றான் கொதித்து. 167

     இந்திரனின் வார்த்தைகளைக் கேட்டதும், கலிபுருஷன் மிக்க கொதிப்படைந்தான். ‘வானகத்து வேந்தராகிய நீங்கள் எல்லாரும் நிற்க, மணமுள்ள தேன் விளங்கும் தன் மணமாலையினைப் பூவுலகத்து அரசனுக்குச் சூட்டிய அறியாமையினை உடைய அந்தப் பெண்ணின் எண்ணத்தைக் கெடுக்கின்றேன். மேலும், அவள் கணவனுக்கும் யான் தாழ்வு உண்டாக்குகின்றேன்’ என்று வஞ்சினம் கூறினான்.

உரைத்துப் போனான்

வாய்மையும் செங்கோல் வளனும் மனத்தின்கண்
தூய்மையும் மற்றவன் தோள்வலியும்-பூமான்
நெடுங்கற்பும் மற்றவர்க்கு நின்றுரைத்துப் போனான்
அருங்கொற்ற வச்சிரத்தான் ஆங்கு. 168

     பகைவரைக் கொன்று வெற்றி கொள்ளும் வச்சிரப் படையுடையோனாகிய இந்திரன், கலியின் அந்தப் பேச்சைக் கேட்டான். அந்நளனின் வாய்மையினையும், செங்கோற் சிறப்பினையும், உள்ளகத்துத் தூய்மையினையும், தோள் வல்லமையினையும், அந்தப் பூமாது போன்றவளான தமயந்தியின் உயரிய கற்புச் செவ்வியினையும், அந்தக் கலிக்கு எடுத்துச் சொல்லிவிட்டுத், தன் நாடு நோக்கி அவனும் போய்விட்டான்.

விடநாகம் அன்னான்

செருக்கதிர்வேல் கண்ணியுடன் தேர்வேந்தன் கூட
இருக்கத் தரியேன் இவரைப்-பிரிக்க
உடனாக என்றான் உடனே பிறந்த
விடநாகம் அன்னான் வெகுண்டு. 169

     அவ்வாறு இந்திரன் சொன்னவுடனே, நஞ்சுடனே தோன்றிய நாகத்தைப் போன்றவனான அந்தக் கலியும் வெகுண்டான். ‘போரிடுவதற்கான ஒளிகொண்ட வேல் போன்ற கண்களை உடையாளான தமயந்தியுடன், தேர் வேந்தனான நளனும் ஒன்றாகக் கூடி வாழ்ந்திருக்க யான் சகிக்கவே மாட்டேன். அவர்களைப் பிரித்து விடுவதற்கு உடனேயே என் வேலையைச் செய்யத் தொடங்குவேன்’ என்றான் தனக்குள்.

8. மணமும் மகிழ்வும்

மங்கலநாள் காண வருபவன்

வெங்கதிரோன் தானும் விதர்ப்பன் திருமடந்தை
மங்கலநாள் காண வருவான்போல் - செங்குமுதம்
வாயடங்க மன்னற்கும் வஞ்சிக்கும் நன்னெஞ்சில்
தீயடங்க ஏறினான் தேர். 170

     வெம்மையான கதிர்களைப் பரப்புவோனாகிய ஞாயிறானவன், தானும் விதர்ப்பன் திருமகளின் திருமணச் சிறப்பினைக் கண்டு மகிழ்வதற்கு வருபவனைப் போலச், செவ்வல்லி மலர்கள் இதழ் மூடி உறக்கம் கொள்ளவும், நளமன்னனுக்கும் வஞ்சிக் கொடியான தமயந்திக்கும் நன்மை விளங்கும் உள்ளத்துள் எழுந்த காமவிருப்பாகிய ஆசைத் தீ அடங்கவுமாகத், தன் தேரின் மீது ஏறியவனாகப் புறப்பட்டான்.

சூட்டினார்! பூட்டினார்!!

இன்னுயிர்க்கு நேரே இளமுறுவல் என்கின்ற
பொன்னழகைத் தாமே புதைப்பார்போல் - மென்மலரும்
சூட்டினார் சூட்டித் துடிசேர் இடையாளைப்
பூட்டினார் மின்னிமைக்கும் பூண். 171

     சுயம்வரத்திற்கு வந்திருந்த மன்னர்களின் இனிதான உயிர்கட்கு எல்லாம், தமயந்தியின் இளமுறுவல் ஒன்றே பகையாகும். இவ்வாறு போற்றப்படுகின்ற அப் பொன்மேனி உடையாளின் அழகினை எல்லாம் தாமே புதைத்து மறைப்பவரைப் போலத், துடியின் இடைப் பகுதியினோடு பொருத்தமுடைய நுண்ணிடையாளான தமயந்திக்கு மென்மலர்களைச் சூட்டியும், மின்போல ஒளிரும் பற்பல அணி வகைகளைப் பூட்டியும், சேடியர்கள் மணக்கோலத்திற்கெனப் பலவாறாக ஒப்பனை செய்தார்கள்.

பொன் அறை புகுந்தார்

கணிமொழந்த நாளிற் கடிமணமும் செய்தார்
அணிமொழிக்கும் அண்ண லவர்க்கும்-பணிமொழியார்
குற்றேவல் செய்யக் கொழும்பொன் னறைபுக்கார்
மற்றேவரும் ஒவ்வார் மகிழ்ந்து. 172

     சோதிடவல்லான் கணக்கிட்டுக் கூறிய நல்ல நாளிலே, இனிதான பேச்சினை உடையாளான அத் தமயந்திக்கும், ஆடவருள் தலைமையாளனாகிய நளனுக்கும் திருமணம் செய்து வைத்தார்கள். தங்களுக்குத் தாங்களே அன்றிப் பிறரெவரும் ஒப்பாகாதவராக விளங்கும் நளதமயந்தியர், பணிந்த சொல்லுடையவரான சேடியர்கள் மகிழ்வுடனே குற்றேவல் செய்துவரச், சிறப்புடைய பொன்மயமான பள்ளியறைக்குள்ளேயும் சென்று புகுந்தார்கள். (கொழும் பொன் - சிறந்த பொன்; அறையழகினை வியந்தது.)

அஞ்சும் தொடுத்தான்

செந்திருவின் கொங்கையினும் தேர்வேந்த னாகத்தும்
வந்துருவ வார்சிலையைக் கால்வளைத்து-வெந்தீயும்
நஞ்சும் தொடுத்தனைய நாம மலர்வாளி
அஞ்சும் தொடுத்தான் அவன். 173

     சிவந்த திருமேனியினளான திருமகளைப் போன்ற தமயந்தியின் தனங்களிலும், தேர்வேந்தனாகிய நளனது மார்பகத்திலும் நுழைந்து ஊடுருவிச் செல்லும்படியாக, மன்மதனானவன், தன் நெடிதான வில்லினை ஊன்றி, அதன் இரு நுனியினையும் வளைத்து, வெப்பமான நெருப்பினையும் நஞ்சினையும் ஒன்றுகூட்டித் தொடுத்தாற் போல், அச்சந்தரும் மலரம்புகள் ஐந்தினையும் தொடுத்து எய்தான்.

இருவர் என்பது இல்லை!

ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி
இருவ ரெனும்தோற்ற மின்றிப்-பொருவெம்
கனற்கேயும் வேலானுங் காரிகையுஞ் சேர்ந்தார்
புனற்கே புனல்கலந்தாற் போன்று. 174

     போரிடுவதற்குரிய வெம்மையான நெருப்பினை ஒத்திருக்கின்ற வேலினை உடையவனாகிய நளனும் காரிகையாளான தமயந்தியும் ஒருவருடைய உடலிடத்தே மற்றொருவர் ஒன்றிக் கலந்தவராயினர். ‘இருவர்’ என்னும் தோற்றமே இல்லாதபடியாகப், புனலிடத்தே புனலானது இரண்டறக் கலந்ததனைப் போன்று ஒன்றிய சேர்க்கையிலேயும், ஒருவராகிக் கலந்து திளைத்தார்கள். (’புனற்கே புனல் கலந்தாற் போன்று’ என்றது உயர்ந்த உவமை!)

மடுத்துப் பொருதாள்

குழைமேலும் கோமா னுயிர்மேலும் கூந்தல்
மழைமேலும் வாளோடு மீள-விழைமேலே
அல்லோடும் வேலான் அகலத் தோடும்பொருதாள்
வல்லோடும் கொங்கை மடுத்து. 175

     தன்னிரு காதணிகளின் மேலும், மன்னவனாகிய நளனின் உயிரின் மேலும், தன் கூந்தலாகிய மழை மேகத்தின் மேலும், வாள் போன்ற தன் கண்களானவை ஓடிச்சென்று மீளுமாறு, ஆசைப் பெருக்கத்தினாலே, இருளும் அகன்றோடும் ஒளியுடைய வேலோனான நளனின் அகன்ற மார்பினிடத்தே, சொக்கட்டான் காய்கள் போன்றவாகிய தன் கொங்கைகளினாலே நெருக்கித், தமயந்தியும் கலவிப் போரிட்டனள்.

பாய்ந்த ஓராறு

வீரனக லச்செறுவின் மீதோடிக் குங்குமத்தின்
ஈர விளவண்ட லிட்டதே-நேர்பொருதக்
காராரும் மெல்லோதிக் கன்னியவள் காதலெனும்
ஓராறு பாய வுடைந்து. 176

     அங்ஙனமாக நேரிட்டுப் போரிட்ட கார்மேகத்தை ஒத்த மென்மையான கூந்தலையுடைய கன்னியாம் தமயந்தியானவளின், காதல் என்கின்ற ஒப்பற்ற ஆறானது பாய்ந்து பெருகி வர, மடையுடைந்து, வீரனாகிய நளனின் அகன்ற மார்பிடமாகிய கழனியிலே வெள்ளமாகப் புரண்டு ஓடிக், குங்குமச் சாந்தின் குளிர்ச்சியான இளவண்டலையும் இட்டது.

நளன் சேர்ந்தான்

கொங்கை முகங்குழையக் கூந்தல் மழைகுலையச்
செங்கயற்க ணோடிச் செவிதடவ - அங்கை
வளைபூச லாட மடந்தையுடன் சேர்ந்தான்
விளைபூசற் கொல்யானை வேந்து. 177

     வந்து வாய்க்கின்ற போரினிடத்தே, யானைப் படையினைக் கொன்றழிக்கும் வலிமையாளனாகிய நள மன்னனானவன், முலை முகங்கள் குழைவுற்றுப் போகவும், கார்மேகம் போன்ற கூந்தல் அவிழ்ந்து கலையவும், சிவந்த கெண்டை மீனைப் போன்ற கண்கள் ஓடிச்சென்று காதுகளை அளாவவும், அங்கை வளையல்கள் தம்முள் பூசலிட்டு ஒலிக்கவும், தமயந்தியுடனே தானும் மனம் ஒன்றுபட்டுக் கூடிக் கலந்தான்.

கலந்தார் நெடுங்காலம்

தையல் தளிர்க்கரங்கள் தன்தடக்கை யாற்பற்றி
வையம் முழுதும் மகிழ்தூங்கத் - துய்ய
மணந்தான் முடிந்ததற்பின் வாணுதலும் தானும்
புணர்ந்தான் நெடுங்காலம் புக்கு. 178

     தமயந்தியின் தளிர்போன்ற சுரத்தினைத் தன் விசாலமான கையினாலே பற்றிப், பூமியிலுள்ளோர் அனைவரும் மகிழ்ச்சியினாலே களிப்படையத் தூய திருமணத்தினை முடித்ததன் பின்னாக, ஒளியுடைய நெற்றியினளான அத் தமயந்தியும் தானுமாகக் கூடி, நளன், நெடுநாள் இன்புற்று வாழ்ந்திருந்தனன்.

சுயம்வர காண்டம் முற்றும்

2. கலிதொடர் காண்டம்

1. கண்கவர் காட்சிகள்

திருமால் திருப்பாதம்

முந்தை மறைநூல் முடியெனலாம் தண்குருகூர்ச்
செந்தமிழ் வேத சிரமெனலாம் - நந்தும்
புகைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும்
அழைக்கைக்கு முன்செல் அடி. 179

     துன்பமுற்ற யானைக்கும், அன்பினையுடைய ஆயர்குல மகளிர்க்கும், அழைப்பதற்கு முன்னாகவே சென்று உதவிய திருப்பாதம், திருமாலின் திருப்பாதமே! அதனை, மறைநூலின் திருமுடியே என்றும் கூறலாம்; தண்மையான திருக்குருகூரிடத்தே எழுந்த செந்தமிழ் வேதமாகிய திருவாய்மொழியின் சிரம் என்றும் கூறலாம். (திருக்குருகூர் - ஆழ்வார் திருநகரி. அங்கு எழுந்த செந்தமிழ் வேதம், நம்மாழ்வரின் திருவாய்மொழிப் பாசுரங்கள்.)

மெய்யன்பர் உள்ளத்தான்

செக்கர் நெடுவானிற் றிங்கள் நிலாத்துளும்பி
உக்க தெனச்சடைமே லும்பர்நீர் - மிக்கொழுகும்
வெள்ளத்தான் வெள்ளி நெடுங்கிரியான் மெய்யன்பர்
உள்ளத்தான் எங்கட் குளன். 180

     செந்நிறமான பரந்த வானத்திடத்தே திங்களின் நிலவொளியானது பெருகி வழிந்தது என்னும் படியாகத், தன் செஞ்சடையானது பெருகி வழிந்தது என்னும்படியாகத், தன் செஞ்சடையின் மேலாகக் கங்கைநீர் பெருகிப் பாய்கின்ற தண்மையை உடையவனும், உயரிய வெள்ளிமலைக்கு உரியவனும், மெய்யன்பர்களின் உள்ளத்தே நிலைத்திருப்பவனும் ஆகிய சிவபெருமானும், எங்கட்கு அருள் செய்பவனாக, எப்போதும் எம் உள்ளத்தினுள்ளேயே உள்ளனன்.

தேரில் சென்று ஏறினான்

தவளத் தனிக்குடையின் வெண்ணிழலும் தையல்
குவளைக் கருநிழலும் கொள்ளப் - பவளக்
கொழுந்தேறிச் செந்நெற் குலைசாய்க்கும் நாடன்
செழுந்தேரில் ஏறினான் சென்று. 181

     பவளக்கொடியின் கொழுந்துகள் படர்ந்தேறிச் செந்நெற்குலைகளைச் சாய்க்கின்ற வளமான நிடதநாட்டினை உடையவனான நளன், வெண்மையான ஒப்பற்ற கொற்றக்குடையின் வெண்மையான நிழலும், தமயந்தியின் கண்களாகிய குவளைமலர்களினுடைய கருநிழலும் தன்னைக் கவிந்து ஆட்கொள்ளுமாறு, செழுமையான வேலைப்பாடுகளுடன் கூடிய தன் தேரிலே சென்று ஏறினான். (தவளம் - முத்து; அதுபோன்ற வெண்மைக்கு ஆயிற்று. நளன் தன் காதலியுடன் பொழிலாடச் செல்கின்றது இது.)

வண்டு எதிர்கொள்வன

மங்கையர்கள் வாச மலர்கொய்வான் வந்தணையப்
பொங்கி எழுந்த பொறிவண்டு-கொங்கொடு
எதிர்கொண்டணைவனபோ லேங்குவன முத்தின்
கதிர்கொண்ட பூண்முலையாய் காண். 182

     முத்துமாலைகளின் ஒளியினைத் தம்மேற் கொண்டிருக்கும் பூண் அணிந்த முலைகளை உடையவளே! மங்கையர்கள் மணமான மலர்களைக் கொய்தவன் பொருட்டாகத் தம்மை நெருங்க, அதற்கு அஞ்சி மேலே எழுந்த புள்ளிகளையுடைய வண்டுகள், மகரந்தத் துகளோடு அந்தப் பெண்களை எதிர்கொண்டு வாழ்த்தி வரவேற்று அணைவன போன்று ஆரவாரிக்கின்றன; அதனைக் காண்பாயாக! (இதுமுதற் பதினான்கு செய்யுட்கள் நளன் தமயந்திக்குக் காட்டிக் கூறும் இயற்கைக் காட்சிகளாகக் கூவி கூறுவனவாம்.)

பணியும் மலர்க்கொம்பு

பாவையர்கை தீண்டப் பணியாதார் யாவரே
பூவையர்கை தீண்டலுமப் பூங்கொம்பு - மேவியவர்
பொன்னடியிற் றாழ்ந்தனவே பூங்குழலாய் காணென்றான்
மின்னெடுவேற் கையான் விரைந்து. 183

     மின்போல ஒளியெறிக்கும் நெடிய வேலினைக் கொண்டிருக்கும் கையினன் நளன். கோட்டுப்பூப் பறிக்கும் சில மங்கையரைத் தமயந்திக்கு அவன் சுட்டிக் காட்டியவனாக, “பெண்களின் கையினாலே தீண்டப்பெற்றால் அவர்க்குப் பணிந்து போகாதார் தாம் யாவரோ? பூங்குழலாய்! அதோ பூவையர்களின் கையினாலே தீண்டப்பெறுதலும், அந்தப் பூங்கொம்பானது தானும் தாழ்ந்து, அவர்களுடைய பொற்பாதங்களிலே மலர்களைச் சொரிந்து, அவர்கட்குப் பணிந்து நிற்பதனை நீயும் காண்பாயாக!” என்றான்.

வேர்த்தாளைக் காண்

மங்கை யொருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச்-செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காணென்றான் வேந்து. 184

     ‘மங்கை ஒருத்தி மலர் கொய்வாளாகின்றாள். அவளுடைய ஒளியுடைய முகத்தினைத் தாமரை மலர் என்று கருதி வண்டொன்று சென்று படிந்தது. தன் செங்கையினாலே அதனைப் படியவொட்டாமல் தடுத்துத் தன் முகத்தைக் காத்தாள் அவள்! அப்போது அக்கையாகிய மலரினைக் காந்தள் எனக் கருதி, வண்டு அதன் மேலே சென்று பாய்ந்தது. பாய்தலுமே, அச்சத்தினாலே அவள் வேர்த்தாள். அவளையும் காண்பாயாக!’

தளிர் கொய்வாளைக் காண்

புல்லும் வரிவண்டைக் கண்டு புனமயில்போல்
செல்லும் மடந்தை சிலம்பவித்து-மெல்லப்போய்
அம்மலரைக் கொய்யா தருந்தளிரைக் கொய்வாளைச்
செம்மலரில் தேனே தெளி. 185

     ‘செந்தாமரை மலரிலே விளங்கும் தேன் போன்றவளே! தமக்குள் தழுவியிருக்கும் வரிகளையுடைய வண்டுகளைக் கண்டாள் ஒரு பெண். காட்டு மயிலினைப் போல ஒய்யாரமாகச் செல்லும் அவள், தன் சிலம்புகளை ஒலி செய்யாதவாறு அடக்கிக் கொண்டு, மெல்ல மெல்லப் போகின்றாள். போய், வண்டுகள் புல்லிக் கிடக்கும் அந்த மலரினைக் கொய்யாமல், அரிதான தளிரினை மட்டுமே கொய்கின்றாள். அவள் செயலையும் பாராய்!’ (செம்மலர் - செம்மையான மலரும் ஆம். அம்மலர் - அந்த மலர்; இங்ஙனமின்றி அழகிய மலர் எனினும் பொருந்தும். ‘புல்லிக் கிடந்த வண்டுகளைக் கண்டவள் அழகிய மலரை விட்டவளாகத் தளிரினைக் கொய்வாளாயினாள்’ என்று, தமயந்திக்குக் காட்டுகிறான் நளன். செம்மலரில் தேன் - செந்தாமரை மலரில் இருக்கும் திருமகள்; தமயந்தியை விளித்தது.)

பாதார விந்தத்தே சூட்டினான்

கொய்த மலரைக் கொடுங்கையி னாலணைத்து
மொய்குழலிற் சூட்டுவான் முன்வந்து-தையலாள்
பாதார விந்தத்தே சூட்டினான் பாவையிடைக்
காதார மில்லா தறிந்து. 186

     ‘தான் கொய்ந்து கொண்ட மலரினைத் தன் கொடுங்கையினாலே அணைத்துக் கொண்டவனாக, அடர்ந்த தன் காதலியின் கூந்தலிலே சூட்டுவதற்கு முன்வந்தான் ஒருவன். வந்தவன், அந்தப் பாவையின் இடைக்கு ஓர் ஆதாரமும் இல்லாதிருப்பதை அறிந்தான். அறிந்ததும், அம் மலர்களைக் கூந்தலுக்குச் சூட்டாமல், அவளுடைய திருவடித் தாமரைகளிலே சூட்டினான். அதனையும் காண்பாயாக!'

புலவித் தோற்ற அமளி

ஏற்ற முலையார்க்கு இளைஞர் இடும்புலவித்
தோற்ற வமளியெனத் தோற்றுமால்-காற்றசைப்ப
உக்க மலரோ டுகுத்தவளை முத்தமே
எக்கர் மணன்மே லிசைந்து. 187

     ‘காற்று அசைத்தலினாலே வீழ்ந்திருந்த மலர்களோடு வளைகள் என்ற முத்துக்களும் மேலே பொருத்தியிருத்தலினாலே, எக்கராகிய மணற்பரப்பானது, ஏற்றம் பொருந்திய மார்பகங்களுயுடைய பெண்களுக்கு இளைஞர்கள் இடுகின்ற ஊடலினாலே தோற்றும் மலரமளி போலக் காணப்படுவதனையும் அதோ காண்பாயாக.’ (எக்கர் - வெள்ளம் ஏங்காலத்துப் படியும் மணல்மேடு. உக்க - உதிர்த்த. வளை - சங்கு. ஊடல் கொண்ட மனைவி, தன் பூவையும் முத்து வடத்தையும் சிதைத்து எறிந்து போட்ட அமளி போன்றிருந்த அதுவென்று கொள்க.)

அல்லென்ற சோலை அழகு

அலர்ந்த மலர்சிந்தி அம்மலர்மேற் கொம்பு
புலர்ந்தசைந்து பூவணைமேற் புல்லிக்-கலந்தொசிந்த
புல்லென்ற கோலத்துப் பூவையரைப் போன்றதே
அல்லென்ற சோலை அழகு. 188

     ‘மலர்ந்த பூக்கள் உதிர்ந்து கிடக்கின்றன. அந்த மலர்களின் மேலாகக் கிளையானது வாட்டமுடன் அசைந்து கொண்டிருக்கின்றது. இருளோ என்றிருக்கும் அத்தகைய சோலையின் அழகினைப் பார்! மலரணையிடத்தே தன் காதலனைத் தழுவிக் கூடியபின், தளர்ந்து சோர்ந்து கிடக்கும் தன்மையினையுடைய ஒரு பெண்ணைப் போல, அது விளங்குவதனையும் பார்ப்பாயாக!’

வாய் நெகிழ்ந்த ஆம்பற்பூ

கொங்கை முகத்தணையக் கூட்டிக் கொடுங்கையால்
அங்கணைக்க வாய்நெகிழ்ந்த ஆம்பற்பூ-கொங்கவிழ்தேன்
வார்க்கின்ற கூந்தன் முகத்தை மதியென்று
பார்க்கின்ற தென்னலாம் பார். 189

     ‘மலர் கொய்யும் மகளிர், தமது கொடுங்கையினாலே தம் முலை முகங்களிலே பொருந்துமாறு சேர்த்துக் கட்டிக் கொள்ள, அதனால் வாய் நெகிழ்ந்த ஆம்பற் பூவானது, மணம் பரவும் தேனைச் சொரிகின்ற கூந்தலையுடைய அப்பெண்களுடைய முகத்தினை நிலவென்று கருதிப் பார்க்கின்றது என்று சொல்லலாம்; அதனையும் பார்த்தனையோ!’

முக்கண்ணான் போன்றாள்

கொய்த குவளை கிழித்துக் குறுநுதன்மேல்
எய்தத் தனிவைத்த ஏந்திழையாள்-வையத்தார்
உண்ணாக் கடுவிடத்தை யுண்ட தொருமூன்று
கண்ணானைப் போன்றனளே காண். 190

     ‘தான் கொய்த செங்குவளை மலரினைக் கிழித்து, ஓர் இதழைத் தன்னுடைய குறுகலான நெற்றியின் மேலே சேரும்படியாகத் தனிப்பட வைத்தனள் ஓர் ஏந்திழையாள். அதனாலே, உலகத்தார் உண்ணாத கொடிய நஞ்சினை முன்னாளிலே உண்ட ஒப்பற்ற முக்கண்ணானைப் போன்றிருக்கின்றாள் அவள்! அவளையும் அதோ காண்பாயாக.’ (நெற்றியில் பொட்டாக வைத்த அந்தச் செங்குவளையின் மலரிதழ் நெற்றிக் கண்ணைப் போல விளங்கியது என்க.)

பூமகட்குச் சொல்லுவாள்

கொழுநன் கொழுந்தாரை நீர்வீசக் கூசிச்
செழுமுகத்தைத் தாமரைக்கே சேர்த்தாள் - கெழுமியவக்
கோமகற்குத் தானினைந்த குற்றங்கள் அத்தனையும்
பூமகட்குச் சொல்லுவாள் போல். 191

     ‘தன் நாயகனானவன் கொழுமையான ஒழுக்குள்ள அருவி நீரினைத் தன் மீது வீச, அதனால் நாணமடைந்து, தன்பாற் பொருந்திய அந்தச் சிறந்தோனுக்குத் தான் நினைத்த குற்றங்களை எல்லாம் திருமகளுக்கு எடுத்துச் சொல்லுபவளைப் போலப் பொலிவுள்ள தன் முகத்தினைத் தாமரை மலரினிடத்தே சேர்த்தனள் ஒருத்தி; அவளையும் காண்பாயாக!’ (‘தாமரை’ என்றது, உள்ளங்கைகளை; கைகளால் முகத்தைப் பொத்தினள் என்க.)

முகம் மூன்று பெற்றாள்

பொய்தற் கமலத்தின் போதிரண்டைக் காதிரண்டில்
பெய்து முகமூன்று பெற்றாள்போல்-எய்த
வருவாளைப் பாரென்றான் மாற்றாரை வென்று
செருவாளைப் பார்த்துவக்கும் சேய். 192

     வாளின் ஆற்றலினாலே பகைவரை வெற்றி கொண்டு, செருவிற்கு பயன்பட்ட தன் வாளினைப் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்பவன், முருகனைப் போன்ற ஆற்றல் உடையோனான நளன். “செந்தாமரை மலர்களினுள்ளே இரண்டினைக் கொய்து விளையாட்டாகத் தன் காதுகள் இரண்டிலும் செருகிக் கொண்டு, மூன்று முகங்களை உடையவளைப் போல் நம் பக்கமாக வந்து கொண்டிருப்பவளைப் பாராய்!” என்று, அங்ஙனமாக வந்து கொண்டிருந்த நங்கை ஒருத்தியைக் காட்டித் தமயந்தியிடம் கூறினான்.

அயர்வாளைக் காண்

பொன்னுடைய வாசப் பொகுட்டு மலரலையத்
தன்னுடனே மூழ்கித் தனித்தெழுந்த - மின்னுடைய
பூணாள் திருமுகத்தைப் புண்டரிகம் என்றயிர்த்துக்
காணா தயர்வானைக் காண். 193

     ‘பொன்னிறமான மகரந்தத்தினை உடைய மணமுள்ள பொகுட்டினைக் கொண்ட தாமரை மலர்கள் அலையும்படியாகத் தன்னுடனே அவற்றையும் அணைத்துக் கொண்டு நீரிலே மூழ்கி, மீண்டும் அம்மலர்களிடையே விளங்கும் ஒப்பற்ற மற்றொரு மலர்போல மேலெழுந்தாள் ஒருத்தி. ஒளியுடைய ஆபரணங்களைக் கொண்ட தன் நாயகியின் திருமுகத்தினைத் ‘தாமரைப்பூ’ என்றே கருதி மயங்கியவனாக, அவளைக் காணாத ஏக்கத்தோடும் தளர்கின்றான் அவள் காதலன்! அவனையும் அதோ காண்பாயாக!’

மதிகொண்ட பாம்பு

சிறுக்கின்ற வாண்முகமும் செங்காந்தட் கையால்
முறுக்குநெடு மூரிக் குழலும்-குறிக்கின்
கரும்பாம்பு வெண்மதியைக் கைக்கொண்ட காட்சி
அரும்பாம் பணைமுலையாய் ஆம். 194

     ‘அரும்பினைப் போன்ற பணைத்த தனங்களை உடையவளே! சிறுத்திருக்கின்ற ஒளியுடைய முகமும், செங்காந்தன் மலரினைப் போன்ற கையினாலே முறுக்கிப் பிழிகின்ற சிறப்புமிக்க கூந்தலும் ஆகியவற்றினைக் குறிப்பிடுவதனால், இராகு என்னும் கருமையான பாம்பு வெண்மதியினைக் கைக்கொண்ட தோற்றம் போன்று விளங்குவதனைக் காண்பாயாக. (இப்படி, நீராடிவிட்டுத் தன் கூந்தலைப் பிழிந்து கொண்டிருந்த ஒருத்தியைக் காட்டி நளன் கூறுகின்றான்.)

எழுந்த பிறை

சோர்புனலில் மூழ்கி எழுவாள் சுடர்நுதல்மேல்
வார்குழலை நீக்கி வருந்தோற்றம்-பாராய்
விரைகொண் டெழுந்தபிறை மேகத் திடையே
புரைகின்ற தென்னலாம் பொற்பு. 195

     ‘வழிகின்ற அருவி நீரிலே குளித்து எழுபவள், தன் ஒளியுடைய நெற்றியின் மேலே படிந்த நீண்ட கூந்தலை ஒதுக்கிக் கொண்டு வருகின்ற தோற்றமானது, மேகத்தின் ஊடே விரைவு கொண்டு எழுந்த பிறை நிலவின் அழகு போன்று உளது என்று சொல்லலாம்; அவளையும் காண்பாயாக!’

கோல்வளைக்குக் காட்டினான்

செழுநீலம் நோக்கெறிப்பச் செங்குவளை கொய்வாள்
முழுநீலம் என்றயிர்த்து முன்னர்க்-கழுநீரைக்
கொய்யாது போவாளைக் கோல்வளைக்குக் காட்டினான்
வையாரும் வேற்றடக்கை மன். 196

     கூர்மை பொருந்திய வேலினை ஏந்திய பெரிதான கைகளையுடைய நளனானவன், செங்கழுநீர் மலரினைக் கொய்பவள் ஒருத்தி, செழுமையான நீலமலர் போன்ற தன் கண்ணொளி அதன்மேற் படிய, அதனை முழுநீலமலர் என்றே ஐயுற்றுக் கொய்யாது செல்லுகின்றதனையும், கோற்றொழிலமைந்த வளையணிந்தவளான தமயந்திக்குக் காட்டினான்.

உவந்து உறைந்தார்

காவி பொருநெடுங்கண் காதலியும் காதலனும்
வாவியும் ஆறும் குடைந்தாடித் - தேவின்
கழியாத சிந்தையுடன் கங்கைநதி ஆடி
ஒழியா துறைந்தார் உவந்து. 197

     கருங்குவளை மலரையும் வெற்றி கொள்ளும் நெடுங் கண்களையுடைய நாயகியான தமயந்தியும், அவள் காதலனான நள மன்னனும், மேற்கண்டவாறு இனிய காட்சிகள் பலவற்றையும் கண்டவராகச் சென்று, குளத்தினும் ஆற்றினும் தாமும் புகுந்து நீர் விளையாட்டு ஆடி மகிழ்ந்தனர். அதன்பின், தெய்வத்தினின்றும் கழிந்து போகாத சிந்தையுடையவராகக், கங்கை நதியினும் நீராடினர். அப்புறமும் அவ்விடம் விட்டு நீங்காதே, பொழிலினிடத்தே ஒருபால் மகிழ்வுடன் சென்றும் தங்கியிருந்தனர்.

2. ஊடலும் கூடலும்

இளமரக்கா ஒக்கும்

நறையொழுக வண்டுறையும் நன்னகர்வாய் நாங்கள்
உறையும் இளமரக்கா ஒக்கும்-இறைவளைக்கைச்
சிற்றிடையாய் பேரல்குல் தேமொழியாய் மென்முறுவல்
பொற்றொடியாய் மற்றிப் பொழில். 198

     ‘முன்னங்கையிலே வளைகளுடன் விளங்கும் சிற்றிடையினை உடையவளே! பெரிதான அல்குல் தடத்தினையுடைய இனிதான மொழியாளே! மென்முறுவலினையும் பொற்றொடியினையும் கொண்டவளே! இந்தப் பொழிலானது, தேன் ஒழுக்கெடுத்துப் பாய வண்டுகள் தங்கியிருக்கும் நன்மை பொருந்திய மாவிந்த நகரத்திலே, நாங்கள் தங்கி மகிழ்கின்ற இளமரக்காவினுக்கு ஒப்பாகும்’ என்றான் நளன்.

‘ஒக்குமதோ?’ என்றாள்

கன்னியர்தம் வேட்கையே போலும் களிமழலை
தன்மணிவாய் உள்ளே தடுமாற-மன்னவனே!
இக்கடிகா நீங்கள் உறையும் இளமரக்கா
ஒக்குமதோ என்றாள் உயிர்த்து. 199

     இளங் கன்னியர்களின் உள்ளத்தே எழுந்த காதல் வேட்கையினைப் போன்றதாகக் களிப்பூட்டும் மழலைச் சொற்களானவை தன் அழகிய வாயினுள்ளே கிடந்து தடுமாற்றம் கொள்ள, ‘அரசே! மணஞ் சிறந்த இந்தச் சோலையானது நீங்கள் தங்கும் இளமரக்காவினைப் போன்றதோ?’ என்று பெருமூச்சுடனே கேட்டவளாகத், தமயந்தியும் வாட்டமுற்றாள். (‘நாங்கள்’ என்றதனை, நளனுடன் சென்றவர்கள் பெண்களோ என்று ஐயுற்று, அதனால் ஊடல்கொண்டு தமயந்தி வினவினாள் என்க.)

கடை சிவப்ப நின்றாள்

தொண்டைக் கனிவாய் துடிப்பச் சுடர்நுதல்மேல்
வெண்தரளம் என்ன வியர்வரும்பக்-கெண்டைக்
கடைசிவப்ப நின்றாள் கழன்மன்னர் வெள்ளைக்
குடைசிவப்ப நின்றான் கொடி. 200

     வீரக்கழல் அணிந்த பகை மன்னர்களின் வெண்கொற்றக் குடைகள் எல்லாம், களத்திலே வீழ்ந்து இரத்தத்திலே படிந்து செந்நிறமாகும் வண்ணம், வெற்றி கொண்டு நிலை பெற்றவனாகிய வீமராசனின் பூங்கொடியாகிய தமயந்தியானவள், கொவ்வைக் கனி போலும் தன் வாயிதழ்கள் துடிப்பவும், ஒளிபொருந்திய நெற்றியின் மேல் வெண்முத்துக்களைப் போன்ற குறுவியர்வு அரும்பவும், கெண்டை மீன்களைப் போன்ற தன் கண்களின் கடை சிவப்படையவுமாக நளனோடும் ஊடி நின்றாள். (தமயந்தி ஊடல் கொண்டு நின்றதனைக் கவி இப்படிக் கூறுகிறார். தொண்டை - கொவ்வை.)


நளவெண்பா : 1    2    3    4    5    6    7    8    9