புகழேந்திப் புலவர் இயற்றிய நளவெண்பா தெளிவுரை: புலியூர்க் கேசிகன் ... தொடர்ச்சி ... விடாய் ஆறேனோ? கொங்கை இளநீரால் குளிர்ந்தஇளஞ் சொற்கரும்பால் பொங்குசுழி என்னும் பூந்தடத்தில் - மங்கைநறும் கொய்தாம வாசக் குழல்நிழற்கீழ் ஆறேனோ வெய்தாமக் காம விடாய். 51 “அவளுடைய கொங்கைகளாகிய இளநீர்களை அருந்தியும், குளிர்ச்சியான குதலைப் பேச்சுக்களாகிய சொற்கரும்புகளைச் சுவைத்தும், ஆர்வம் பொங்குகின்ற சுழியிடம் என்கின்ற அழகான மலர்ப் பொய்கையிலே திளைத்து ஆடியும், நறுமணமுள்ளதும் அப்பொழுதே கொய்து கட்டியதுமான மாலையணிந்துள்ள, இயல்பாகவே நறுமணமுள்ள கூந்தலின் நிழலின் கீழே தங்கியும், வெம்மை மிகுந்ததான இந்தக் காம விடாயினை யான் ஆற்றிக் கொள்ள மாட்டேனோ?” என்றும் அவன் ஏங்கிப் புலம்பலாயினான். எதனை நாடினாய்? மன்னன் விடுத்த வடிவில் திகழ்கின்ற அன்னம்போய்க் கன்னி அருகணைய - நன்னுதலும் தன்னாடல் விட்டுத் தனியிடஞ்சேர்ந் தாங்கதனை என்னாடல் சொல்லென்றாள் ஈங்கு. 52 மன்னவனாகிய நளன் தூதாக அனுப்பிய, அழகிய உருவ எழிலுடன் விளங்குகின்ற அந்த அன்னப் பறவையானது விதர்ப்பனது நாட்டிற்குச் சென்று, கன்னியாம் தமயந்தியின் அருகாமையிலும் போய்ச் சேர்ந்தது. நறிய நுதலையுடையாளான அவளும், தன்னுடைய விளையாடல்களைக் கைவிட்டுத் தனிமையான ஒரு பக்கத்தினைச் சேர்ந்தாள். அவ்விடத்தே, அந்த அன்னத்தை நோக்கி, “இவ்விடத்தே எதனை விரும்பி நீயும் வந்தனையோ? அதனை எனக்குச் சொல்வாயாகா” என்றாள். உனக்கேற்ற வேந்தன் செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர்கள் தம்மனத்தை வாங்கும் தடந்தோளான் - மெய்ம்மை நளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான் உளனென்பான் வேந்தன் உனக்கு. 53 “செம்மையான உள்ளத்தினை உடையவன்; தண்மையான இரக்கத்தினைக் கொண்டிருப்பவன்; செங்கோன்மையுடன் அரசியற்றி வருபவன்; இளமங்கையர்களுடைய உள்ளங்களைத் தன்பால் இழுக்கின்ற பரந்த தோள்களையுடையவன்; உண்மையாளனாகிய நளன் என்பவன். மேலுலகத்தும் சரி, இந்நானிலத்தும் சரி, ஆடவருள் உயர்ந்தோனாக விளங்குபவன் அவனே. ‘உனக்குரிய வேந்தனாகத் தான் ஒருவனே உளன்’ என்றும் அவன் விளங்குகிறான்.”
தேர் வேந்தர் ஒப்பரோ? அறங்கிடந்த நெஞ்சும் அருளொழுகு கண்ணும் மறங்கிடந்த திண்தோள் வலியும் - நிறங்கிடந்த செங்கண்மால் அல்லனேல் தேர்வேந்தர் ஒப்பரோ அங்கண்மா ஞாலத் தவற்கு. 54 “அறநெறிகள் தங்கியிருக்கும் நெஞ்சமும், அருள் ஒழுகிக் கொண்டிருக்கும் கண்களும், வீரம் தாங்கியிருக்கும் திண்மையான தோளாற்றலும் உடையவன் அந்த நளன். அழகிய இடத்தினை உடையதான இந்தப் பெரிய உலகத்திலே அந்த நளனுக்குச் செங்கண்ணனாகிய திருமாலே ஒப்புடையவன் ஆகமாட்டான் என்றால், பிற தேர்வேந்தர்கள் ஒப்புடையவர்கள் ஆவார்களோ?” (இவ்வாறு அன்னம் நளனைப் புகழ்ந்தது.) ஒளியிழந்த வெள்ளை மதி புள்ளின் மொழியினொடு பூவாளி தன்னுடைய உள்ளங் கவர ஒளியிழந்த - வெள்ளை மதியிருந்த தாமென்ன வாய்த்திருந்தாள் வண்டின் பொதியிருந்த மெல்லோதிப் பொன். 55 வண்டினத்தின் தொகுதிகள் மொய்த்திருந்த மென்மையான கூந்தலையுடையவளும், திருமகளைப் போன்ற அழகியுமான தமயந்தி, அந்த அன்னப் பறவையின் சொற்களோடு சேர்ந்து, மன்மதன் ஏவும் மலரம்புகளும் தன்னுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடத், தானும் அவனிடத்தே ஆர்வம் எழப் பெற்றவளாகி, ஒளி குறைந்த வெண் திங்கள் இருந்தது என்னும்படியாக வெளுத்துப் போய் அவ்விடத்தே வீற்றிருந்தாள். (நளன் மீது எழுந்த ஆசையால், அவளுடைய பொன்னுடலும் அவ்வேளையிலேயே வெளுத்தது என்கிறார்.) முலைமுகத்தைப் பார்த்து மயங்கினாள் மன்னன் மனத்தெழுந்த மையல்நோய் அத்தனையும் அன்னம் உரைக்க அகமுருகி - முன்னம் முயங்கினாள் போல்தன் முலைமுகத்தைப் பாரா மயங்கினாள் என்செய்வாள் மற்று. 56 நளமன்னவனின் உள்ளத்தே எழுந்த காமநோய் முழுவதையும் தமயந்திக்கு அன்னம் எடுத்துச் சொல்லியது. சொல்லவும், அவளும் உள்ளம் உருகியவன் ஆயினாள். முன்னமேயே அவனைத் தானும் தழுவி இன்புற்றவளே போல, தன் முலைமுகங்களைப் பார்த்துப் பார்த்து மயங்கினாள். அவள் வேறு என்னதான் செய்வாள்? (இது கவிக் கூற்று.) ஆவி உவந்து அளித்தாய்! வாவியுறையும் மடவனமே என்னுடைய ஆவி உவந்தளித்தாய் ஆதியால் - காவினிடைத் தேர்வேந்தற் கென்னிலைமை சென்றுரைத்தி என்றுரைத்தாள் பார்வேந்தன் பாவை பதைத்து. 57 நாடாளும் வேந்தனாகிய விதர்ப்பனின் மகளான தமயந்தி அன்னத்தாற் சொல்லப்பெற்ற நளனிடத்தே கொண்டுவிட்ட காதலால் துடிதுடித்தாள். ‘மலர்ப் பொய்கைகளிலே வாழுகின்ற இளம்பருவத்து அன்னப் பறவையே! பூஞ்சோலையினிடத்தே இருப்பதாக நீ கூறிய அந்தத் தேர்வேந்தனுக்கு, என்னுடைய இந்த நிலைமையினையும் போய்ச் சொல்லுவாயாக. அங்ஙனம் நீ சொல்வாயானால், என்னுடைய உயிரினை எனக்கு விருப்பத்துடன் அளித்தனையாவாய்’ என்றாள். (‘உரையாயேல் என் உயிர் என்னுடலிலே தெரியாது’ என்பதாம்.) புயம் கச்சு ஆகும் மன்னன் புயம்நின் வனமுலைக்குக் கச்சாகும் என்ன முயங்குவிப்பேன் என்றன்னம் - பின்னும் பொருந்தவன்பால் ஓதிமலர்ப் பூங்கணைகள் பாய இருந்தவன்பால் போன தெழுந்து. 58 ‘அந்த நளமன்னவனின் தோள்களே நின்னுடைய அழகிய முலைகட்குக் கச்சாக விளங்கும் என்னும்படியாகத் தழுவுமாறு செய்விப்பேன்’ என்று உறுதி கூறியதுடன், பின்னரும் அவள் மனம் பொருந்துமாறு அன்பான சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அன்னமானது வானத்தே எழுந்து, மலரம்புகள் பாய்ந்து வருந்த இருந்தவனாகிய நளனின் நாடு நோக்கிப் பறந்து போவதாயிற்று. 4. சுயம்வரச் செய்தி வேறுபாடு உண்டு கொற்றவன்தன் தேவிக்குக் கோமகள்தன் தோழியர்கள் உற்ற தறியா உளநடுங்கிப் - பொற்றொடிக்கு வேறுபா டுண்டென்றார் வேந்தனுக்கு மற்றதனைக் கூறினாள் பெற்ற கொடி. 59 அரசகுமாரியாகிய தமயந்தியின் தோழியர்கள், அவளுக்கு உற்ற காமநோயினை அறியாதவர்களாக, மனநடுக்கமுற்று, வீமராசனுடைய தேவியிடம், ‘பொற்றொடியான நின் மகளுக்கு இப்போது என்றுமில்லாபடி வேறுபாடுகள் மேனியிடத்துத் தோன்றியுள்ளன’ என்று போய்ச் சொன்னார்கள். அதனைக் கேட்டதும், அவளைப் பெற்ற தாயான அவள், தன் நாயகனாகிய வேந்தனுக்குச் சென்று அதனைச் சொன்னாள். பெற்றவன் வந்தான் கருங்குழலார் செங்கையினால் வெண்கவரிப் பைங்கால் மருங்குலவ வார்முரசம் ஆர்ப்ப - நெருங்கு புரிவளை நின்றேங்கப் போய்ப்புக்கான் பெற்ற வரிவளைக்கை நல்லாள் மனை. 60 அதனைக் கேட்டதும், கருமையான கூந்தலையுடையவரான பணிப்பெண்கள், தம் சிவந்த கைகளில் வெண்ணிறமுள்ள, சாமரைகளைக் கொண்டு குளிர்ச்சியான காற்று வருமாறு இருபுறமும் விசிறிக் கொண்டே வரவும், வாரால் கட்டப்பெற்ற முரசம் முழக்கமிடவும், நெருக்கமுற்றுச் சுழிந்துள்ள சங்குகள் நிலையாக ஒலி முழங்கவும், தான் பெற்ற வரிகளையுடைய வளைகள் விளங்கும் கைகளையுடைய நல்லாளான தமயந்தியின் மாளிகையுள், வீமராசனும் சென்று சேர்ந்தான். கோதை சுமந்த கொடி கோதை சுமந்த கொடிபோல் இடைநுடங்கத் தாதை திருவடிமேல் தான்வீழ்ந்தாள் - மீதெல்லாம் காந்தாரம் பாடிக் களிவண்டு நின்றரற்றும் பூந்தாரம் மெல்லோதிப் பொன். 61 தேனுண்டு களிப்பனவாகிய வண்டினங்கள், காந்தாரப் பண்ணினைப் பாடித் தன் மேலெல்லாம் மொய்த்துக் கொண்டு ஆரவாரிக்கும்படியான பூமாலையினை அணிந்தவளும், மென்மையான கூந்தலையுடையவளுமான தமயந்தியாகிய அத் திருமகள் போல்வாள், கூந்தலைச் சுமந்திருக்கும் ஒரு பூங்கொடி போலத் தன் இடை துவளுமாறு, தன் தந்தையின் திருவடிகளின் மீது விழுந்து வணங்கினாள். மணம் சிந்தித்தான் பேரழகு சோர்கின்ற தென்னப் பிறைநுதன்மேல் நீரரும்பத் தன்பேதை நின்றாளைப் - பாராக் குலவேந்தன் சிந்தித்தான் கோவேந்தர் தம்மை மலர்வேய்ந்து கொள்ளும் மணம். 62 ‘பேரழகு அனைத்தும் பொங்கி வழிகின்றதோ’ என்னும்படியாகப் பிறைபோன்ற நெற்றியின் மேலாக வியர்நீர் அரும்பி வழியத் தன்னை வணங்கி எழுந்து நின்ற பேதைமையுடைய தன் மகளைச் சூரிய குல வேந்தனாகிய வீமனும் பார்த்தான். பார்த்ததும், அரசாளும் வேந்தர்களுள் ஒருவனுக்கு மலர்மாலை சூட்டி நாயகனாக ஏற்றுக் கொள்கின்ற சுயம்வரம் என்னும் திருமண மரபினைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான். சுயம்வர நாள் மங்கைக்கு மங்கை சுயம்வரநாள் ஏழென்று வார்முரசம் எங்கும் அறைகென் றியம்பினான் - பைங்கமுகின் கூந்தல்மேற் கங்கைக் கொழுந்தோடும் நன்னாடன் வேந்தர்மேல் தூதோட விட்டு. 63 பசுமையான பாக்கு மரங்களின் கூந்தற் பாளைகளின் மேலாகக் கங்கையாற்றின் வெள்ளத்திரள்கள் ஓடிக் கொண்டிருக்கின்ற, நன்மை பொருந்திய நாட்டிற்கு உரியவனாகிய விதர்ப்பன், பிற நாட்டு மன்னர்கள்பால் தூதுவர்களை ஓடிச் செல்லுமாறு போகவிட்டான். ‘தமயந்தியின் சுயம்வரம் இன்றைக்கு ஏழாவது நாள்’ என்று, தன் நகரத்திலும், நாட்டிலும் எங்கும் முரசறையவும் ஆணையிட்டான். கோவேந்தர் கூடினர் மாமுத்த வெண்குடையான் மால்களிற்றான் வண்டிசைக்கும் தாமத் தரிச்சந் திரன்சுவர்க்கி - நாமத்தால் பாவேய்ந்த செந்தமிழாம் என்னப் பரந்ததே கோவேந்தர் செல்வக் குழாம். 64 சிறந்த முத்துப் போன்ற வெண்மைநிறம் பொருந்திய கொற்றக் குடையினை உடையவன்; பெரிய பட்டத்து யானையை உடையவன்; வண்டுகள் ஆரவாரிக்கின்ற மலர் மாலையை அணிந்தவன்; சிங்கலேறு போன்றவன்; சந்திரன் சுவர்க்கி என்பவன். அவனுடைய பெயரினால் பாக்களை யாத்தமைத்த செந்தமிழ் வெள்ளம் என்று சொல்லுமாறு, நாடாளும் மன்னவர்களின் கூட்டம் எல்லாம், விதர்ப்ப நாட்டிடத்தே வந்து பரவியது. (சந்திரன் சுவர்க்கி முரணை நகரச் சிற்றரசன்; ஆசிரியரைப் புரந்தவன்; இவனைப் பற்றிய பாடல்கள் மிகுதி என்பதும் இதனால் அறியப்படுகின்றது. பூவேந்தர் வந்தடைந்தார் செந்தடையும் வண்டுறைதார்ச் செய்யாள் வளர்மார்பன் கந்தடையும் வேழக் கடைத்தலைவாய் - வந்தடைந்த பூவேந்தர் தங்கள்கிளை பொன்னகரில் ஈண்டிற்றே கோவேந்தன் மாதைக் குறித்து. 65 பூந்தாதுகளிலே மொய்க்கின்ற இயல்புடைய வண்டுகள் மொய்த்திருக்கும் தாரினை அணிந்தவன்; திருமகள் வாழ்கின்ற மார்பினை உடையவன்; வீமராசன். கட்டுத் தறியினைச் சார்ந்திருக்கும் வேழங்களையுடைய அவனது அரண்மனைத் தலைவாயிலினிடத்தே, வேந்தர் வேந்தனான அவனுடைய மகளை மணங்கொள்வதைக் குறித்து வந்து சேர்ந்திருந்த பூவேந்தர்களின் சுற்றமெல்லாம், அழகிய அந்நகரின் எம்மருங்கும், அங்கங்கே விடுதிகளிலும், கூடாரங்களிலுமாகத் தங்கிப் பரந்திருந்தனர். எங்கும் இனிதிருந்தார் புள்ளுறையும் சோலைகளும் பூங்கமல வாவிகளும் உள்ளும் புறமும் இனிதுறைந்தார் - தெள்ளரிக்கண் பூமகளைப் பொன்னைப் பொருவேல் விதர்ப்பன்தன் கோமகளைத் தம்மனத்தே கொண்டு. 66 போர் வெற்றி கொண்ட வேலினையுடையவன் விதர்ப்பராசன். அவன் செல்ல மகளும், தெளிவாகச் செவ்வரிபரந்த கண்களை உடையவளும், திருமகளைப் போன்ற அழகினை உடையவளும், பொன்னைப் போன்ற திருமேனியினை உடையவளுமான தமயந்தியை மனத்தே கொண்டவராக, மன்னவர் பலரும் வந்து, பறவைகள் தங்கும் சோலைகளினுள்ளும், தாமரைத் தடாகங்களின் கரைகளிலுமாக, இனிதாகக் கூடாரமிட்டுத் தங்கியிருந்தார்கள். (உள்ளும் புறமும் என்பதனைச் சோலைகளினுள்ளும், வாவிகளின் புறத்தும் எனப் பொருத்திக் கொள்க.) மஞ்சோட வரும் வழிமேல் விழிவைத்து வாள்நுதலாள் நாம மொழிமேல் செவிவைத்து மோகச் - சுழிமேல்தன் நெஞ்சோட வைத்தயர்வான் கண்டான் நெடுவானில் மஞ்சோட அன்னம் வர. 67 அன்னப்பறவை தமயந்தியிடமிருந்து திரும்பி வருகின்ற வழியின் மீதே தன் பார்வையை நிலைநிறுத்தியிருந்தான் நளன். ஒளி பொருந்திய நெற்றியினையுடைய தமயந்தியின் பெயராகிய சொல்லின் மீதே தன் காதுகளைச் செலுத்தியுமிருந்தான். அவள் மீது கொண்ட மோகச் சுழலின் மேலாகவே தன் நெஞ்சத்தினை ஓடிக் கொண்டிருக்க வைத்து அயர்வும் கொண்டிருந்தான். அப்போது, நெடிய வானிலே மேகங்கள் கலைந்தோடுமாறு அன்னப்பறவையும் விரைவாகப் பறந்து வருதலைக் கண்டான். (மஞ்சு - வெண்மேகம். அவை கலைந்தோடுதல், அன்னம் பறந்து வந்த மிகுதியான வேகத்தால் என்க.) கேளா விருந்து முகம்பாத் தருள்நோக்கி முன்னிரந்து செல்வர் அகம்பார்க்கும் அற்றோரைப்போல - மிகுங்காதல் கேளா விருந்திட்டான் அன்னத்தைக் கேளாரை வாளால் விருந்திட்ட மன். 68 தன் ஆணையினைக் கேளாதவராகிய பகைவேந்தர்களை வாளினால் எமனுக்கு விருந்திட்ட மன்னவன் நளன். அவன், செல்வரின் முகக்குறிப்பினைப் பார்த்தும், அவர் முன்னிலையிலே இரந்து வேண்டுவோராய் நின்று, அவர்களுடைய உள்ளச் செவ்வியை எதிர்பார்க்கின்ற வறியவரைப் போலத், தன்னைப் போலவே தமயந்திக்கும் மிகுகின்ற காதலைப் பற்றிய செய்தியினை அன்னம் தனக்கு எடுத்துரைக்கத் தான் மிக எளியவனாக அதன் முன் இருந்து ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான். தேமொழிக்கு தீது இலவே? அன்னக் குலத்தின் அரசே அழிகின்ற என்னுயிரே மீள எனக்களித்தாய் - முன்னுரைத்த தேமொழிக்குத் தீதிலவே என்றான் திருந்தாரை ஏமொழிக்கும் வேலான் எடுத்து. 69 பகைவரது செருக்கினை அடக்குகின்ற வேலினைக் கைக்கொண்டிருப்பவன் நளன். அவன், அன்னம் சொல்வதைக் கேட்டதும், ‘அன்ன குலத்தின் அரசே! அழிந்து கொண்டே போகின்ற என்னுயிரினை மீளவும் எனக்கு மீட்டுத் தந்தாய். என் முன் நீ சொல்லிய அந்தத் தேன்மொழிக்கு எத்தகைய தீதும் இல்லையே?” என்றான். (காதலால் தான் உருகியழிந்த நளன், தமயந்தியும் தன்பாற் காதல் கொண்டாளென்று அன்னம் சொல்லவும், அவளுக்கும் ‘தன் போலத் தீது ஏதும் நேரவில்லையே?’ என, மிக்க கவலையுடன் விசாரிக்கின்றான்.) மொழிந்ததும் கழிந்ததும் கொற்றவன்தன் ஏவலினால் போய்க் குலக்கொடிபால் உற்றதுவும் ஆங்கவள்தான் உற்றதுவும் - முற்றும் மொழிந்ததே அன்னம் மொழிகேட் டரசற்கு அழிந்ததே உள்ள அறிவு. 70 வெற்றிச் சிறப்பையுடைய நளமன்னனின் ஏவுதலினாலே தமயந்தியாகிய குலக்கொடிபால் தான் சென்று அடைந்ததும், அவ்விடத்தே அவளும் நளன் மீது காதல் கொண்டதும் ஆகியன பற்றிய செய்திகள் முழுவதையும், அன்னம் அந்நளனுக்கு எடுத்துக் கூறியது. அன்னம் உரைத்த சொற்களைக் கேட்டு, நளராசனுக்கு, முன் மங்கியது போக எஞ்சியிருந்த அறிவும், அப்போது மயங்கிச் செயலழியலாயிற்று. படு கரிபோல் கிடந்தான் கேட்ட செவிவழியே கேளா துணர்வோட ஓட்டை மனத்தோ டுயிர்தாங்கி - மீட்டும் குழியிற் படுகரிபோல் கோமான் கிடந்தான் தழலிற் படுதளிர்போற் சாய்ந்து. 71 ’அவளும் காதல் நோயுற்றாள்’ எனக் கேட்ட தன் செவியின் வழியாகவே, தன்னைக் கேளாதேயே தன் உணர்வும் ஓடிப்போய் விட, உடைந்துபோன நெஞ்சத்துடனே, தன் உயிரையும் சுமந்து கொண்டிருந்தான் நளன். மீளவும், எரிதழலிலே பட்ட தளிரைப் போல வாட்டமுற்றான். கொப்பத்திலே வீழ்த்தப்பட்டு, மேலேறவியலாது தவித்துக் கிடக்கும் யானையைப் போல, தான் பட்டுக் கிடந்த ஆசைப் படுகுழியினின்றும் கரையேற இயலாதும் வாடியிருந்தான். ஏதமிலாக் காட்சியர் கோதை சுயம்வரநாள் கொற்றவனுக் குற்றுரைப்ப ஏதமிலாக் காட்சியர்வந் தெய்தினார் - போதில் பெடையோடு வண்டுறங்கும் பேரொலிநீர் நாடன் அடையாத வாயில் அகம். 72 நளமன்னவனை அடைந்து, தமயந்தியின் சுயம்வர நாளைப் பற்றிய செய்தியை அவனுக்கு அறிவிக்கப், பழுதற்ற காட்சியுடையவரான தூதர்கள், மலர்களிடத்தே வண்டினம் தன் பெடையோடும் உறங்கிக் கிடக்கும் பேராரவாரத்தையுடைய, நீர் வளமிக்க நாடனாகிய அந்நளனுடைய அடைத்தலில்லாத தலைவாயிலினிடத்தே வந்து, அப்போது சேர்ந்தனர். (ஏதமிலாக் காட்சி - உண்மையைத் தெளிவாகவே உணரும் பழுதற்ற அறிவு நலம்.) பொலிந்த தேர் பூட்டு காவலன் தன் தூதர் கடைக்கா வலர்க்கறிவித் தேவலிற்போய் ஈதென் றியம்புதலும் - மாவில் பொலிந்ததேர் பூட்டென்றான் பூவாளி பாய மெலிந்ததோள் வேந்தன் விரைந்து. 73 வீமராசனின் அந்தத் தூதர்கள், தாம் மன்னவனைக் காண விரும்பிய செய்தியைக் கடைக்காவலர்க்கு அறிவித்து, மன்னனின் ஆணைபெற்றுச் சென்று கண்டு, தாம் அறிவிக்க வந்த செய்தி இதுவாகும் எனவும் சொல்லினர். மாரனின் மலரம்புகள் பாய அதனால் மெலிந்த தோள்களை உடைய நளன், அதைக் கேட்டதும், குதிரைகளாற் சிறப்புற்ற தன் தேரினை ‘விரைந்து பூட்டுக’ என்று, தன் தேர்ப்பாகனை ஏவினான். குவளை தேனூறும் நாடன் கெட்ட சிறுமருங்குல் கீழ்மகளிர் நீள்வரம்பில் இட்ட பசுங்குவளை ஏரடித்த - கட்டி கரையத்தேன் ஊறும் கடல்நாடன் ஊர்க்கு விரையத்தேர் ஊரென்றான் வேந்து. 74 தேரும் பூட்டப்பெற்றுத் தயாராயிற்று. அதன் மேல் அமர்ந்த நளன், ‘ஒடுங்கிப் போயிருக்கும் சிறிதான இடையினையுடைய கடைசியர்கள் நீண்ட வரப்புகளிலே களையாகப் பறித்துப் போட்ட பசுமையான குவளை மலர்களினின்றும், ஏரடித்த கட்டிகள் கரையுமாறு தேனூறிக் கொண்டிருக்கும் கடல் நாடனாகிய வீமனின் ஊருக்குத் தேரினை விரைவாகச் செலுத்துவாயாக’ என்று, தன் பாகனை ஏவினான். (கீழ் மகளிர் - கடைசியர்; பயிர்த் தொழில் செய்பவர்.) நல்லுயிர் வாழும் நகர்! சடைச் செந்நெல் பொன்விளைக்கும் தன்நாடு பின்னாகக் கடல்தானை முன்னாகக் கண்டான் - அடற்கமைந்த வல்லியரும் பொன்தாம வீமன் திருமகளாம் நல்லுயிரும் வாழும் நகர். 75 செந்நெற்பயிர்கள், சடைபோன்ற அடர்த்தியான கதிர்களிலே பொன்போன்ற நெல்மணிகளை விளைவிக்கின்ற தன்னுடைய நிடத நாடு பிற்பட்டுப் போகவும் கடல், போன்ற தன் பெரும்படைகள் முற்படச் சென்று கொண்டிருக்கவும், வழி கடந்து, போரிடற்கு என அமைந்த வில் வீரர்களும், அழகிய மலர் மாலையணிந்த வீமராசனின் திருமகளாம் தன் நல்ல உயிரும் வாழ்ந்திருக்கும் நகரத்தினை, நளனும் சென்றடைந்து, அதன் அழகையும் கண்களிக்கக் கண்டான். 5. இந்திர தூதுவன் குல முனிவன் அடைந்தான் நெற்றித் தனிக்கண் நெருப்பைக் குளிர்விக்கும் கொற்றத் தனியாழிக் குலமுனிவன் - உற்றடைந்தான் தேனாடும் தெய்வத் தருவும் திருமணியும் வானாடும் காத்தான் மருங்கு. 76 (இங்கே இங்ஙனமாக) ஒப்பற்ற சிவபெருமானின் நெற்றிக் கண்ணாகிய அழலையும் குளிர்விக்கின்றதும், இசையிலே வெற்றிக் கொண்டு விளங்குவதுமான, ஒப்பில்லாத மகதி என்னும் யாழினைக் கைக்கொண்டு இசைத்தபடி வருபவன் சிறந்த தவமுனிவனாகிய நாரதன்; அம்முனிவன், வண்டினம் விரும்பிச் சேர்ந்திருக்கும் தெய்வத்தன்மையுடைய கற்பக தருவும், அழகிய சிந்தாமணியும், வானகத்து நாடும் என்பவற்றைக் காத்துவரும் இந்திரனிடத்தே, அப்போது சென்று சேர்ந்தான். (நாரத வீணைக்கு ‘மகதி யாழ்’ எனவும் பெயர். திருமணி - சிந்தாமணி, தெய்வத்தரு - கற்பக விருட்சம், குலமுனிவன் - முனிவர் குலத்துப் பிறந்த நாரத முனிவன்.) நாரதனார் முகம் நோக்கினான் வீரர் விறல்வேந்தர் விண்ணோடு சேர்கின்றார் ஆரும் இலரால் என்றையுற்று - நாரதனார் நன்முகமே நோக்கினான் நாகஞ் சிறகரிந்த மின்முகவேற் கையான் விரைந்து. 77 மலைகளின் சிறகுகளை அரிந்தவனும், மின்போலும் ஒளி வீசும் முனையினையுடைய வச்சிரப் படையினைக் கைக்கொண்டிருப்பவனுமாகிய தேவேந்திரன், ‘வீரராகவும் ஆண்மையுடைய வேந்தராகவும் இந்த விண்ணகத்துக்கு வந்து சேர்கின்றவராக யாரும் இன்று வரவில்லையே!’ என்று ஐயுற்று, அங்கிருந்த நாரதரின் நன்மை பொருந்திய முகத்தினை விரைந்து நோக்கினான். (நாகம் - மலைகள். இவை, முற்காலத்துச் சிறகுடன் இருந்தன; இந்திரன் இவற்றைச் சிறகரிந்து செருக்கடக்கினான்; இவனிடம் அகப்படாது, ‘மைநாக பர்வதம்’ மட்டும் கடலுள் புகுந்து ஒளிந்து கொண்டது என்பது புராணம்.) சுயம்வரத்துக்குப் போயினார் வீமன் மடந்தை மணத்தின் விரைதொடுத்த நாமம் புனைவான் சயம்வரத்து - மாமன்னர் போயினார் என்றான் புரந்தரற்குப் பொய்யாத வாயினான் மாதவத்தோர் மன். 78 பொய்யே உரையாத வாயினை உடையவரும், பெருந்தவ முனிவர்கட்கு எல்லாம் மன்னராகத் திகழ்பவருமாகிய அந்த நாரத முனிவர், இந்திரன் உரைத்ததைக் கேட்டு, “வீமராசனின் மகளான தமயந்தியின் திருமணத்துக்காக வகுத்த, மணச் செறிவுடன் கட்டிய மணமாலையினை அணிந்து கொள்ளக் கருதி, அந்தச் சுயம்வரத்திற்காகப் பெருமன்னர் எல்லோரும் குண்டினபுரத்துக்குப் போயுள்ளனர்” என்று சொன்னார். காமன் திருவுக்கு காப்பு அழகு சுமந்திளைத்த ஆகத்தாள் வண்டு பழகு கருங்கூந்தற் பாவை - மழகளிற்று வீமன் குலத்துக்கோர் மெய்த்தீபம் மற்றவளே காமன் திருவுக்கோர் காப்பு. 79 “அழகினைச் சுமந்து இளைத்துப் போயின உடலினை உடையவள்; வண்டினம் நெருங்கிப் பழகுகின்ற இயற்கை மணம் பொருந்திய கருமையான கூந்தலையுடைய பாவை போல்பவள்; இளங்களிறுகளையுடைய வீமராசனின் குலத்துக்கு ஓர் ஒப்பற்ற அணையா விளக்கு போன்றவள்; மேலும் மன்மதனுடைய செல்வத்திற்கே ஒரு பாதுகாப்பு எனவும் விளங்குபவள் அந்தத் தமயந்தி என்பவள்” எனவும் நாரதர் அவ்விடத்தே அத் தேவராசன் அவையிலே கூறினார். மாலை குறித்து எழுந்தார் மால்வரையை வச்சிரத்தால் ஈர்ந்தானும் வானவரும் கோல்வளைதன் மாலை குறித்தெழுந்தார் - சால்புடைய விண்ணாடு நீங்கி விதர்ப்பன் திருநகர்க்கு மண்ணாடு நோக்கி மகிழ்ந்து. 80 நாரதர் அப்படிச் சொல்லவும், செருக்கினால் மயக்கங் கொண்ட மலைகளைத் தன் வச்சிரப்படையிலே சிறகரிந்தோனாகிய தேவேந்திரனும், பிற தேவர்களும், கோற்றொழிலினையுடைய வளைகளையணிந்த தமயந்தியின் சுயம்வர மணமாலையைக் கருதியவராகப், பெருமை பொருந்திய வானகத்தை விட்டு நீங்கி, விதர்ப்பராசனின் திருநகரான குண்டினபுரத்துக்குச் செல்பவராக, மண்ணகத்தை நோக்கி மகிழ்ச்சியுடனே புறப்பட்டார்கள். கெடுத்ததனைத் தேடுவான் பைந்தெரியல் வேல்வேந்தன் பாவைபாற் போயினதன் சிந்தை கெடுத்ததனைத் தேடுவான் - முந்தி வருவான்போல் தேர்மேல் வருவானைக் கண்டார் பெருவானின் தேவர் பெரிது. 81 பசுமையான மாலையினை உடையவனும், வேற்படையினை ஏந்தியவனுமான வீமராசனின் மகளிடத்தே போயின தன் மனத்தைத் தன்பால் திரும்பக் காணாது தேடுபவனாக, அனைவருக்கும் முற்பட வருபவனைப் போலத், தேரின்மேல் விரைவுடன் வந்து கொண்டிருந்த நளனைப் பெரிதான வானகத்தின் தேவர்கள் அனைவரும், சிறப்பாகச் சென்று கண்டனர். ஏவல் தொழிலுக்கு இசை காவற் குடைவேந்தைக் கண்ணுற்ற விண்ணவர்கோன் ஏவல் தொழிலுக் கிசையென்றான் - ஏவற்கு மன்னவனும் நேர்ந்தான் மனத்தினான் மற்றதனை இன்னதென றோரா திசைந்து. 82 நாட்டினைச் செவ்வையாகக் காத்தருளும் வெண் கொற்றக் குடையினையுடைய வேந்தனான நளனைத், தேவேந்திரனும் கண்ணுற்றான். ‘நான் ஏவுகின்ற ஒரு காரியத்தைச் செய்வதற்கு இசைவாயாக’ என்று வேண்டினான். தன் உள்ளத்திலே அந்த ஏவல் இன்னதென உணராத நளனும், இந்திரன் கேட்டவாறே, அந்தக் காரியத்தைச் செய்வதற்கு மனமட் பொருந்தியவனாக, அவ் வேண்டுகோளுக்கு இசைந்தான். மங்கைபால் தூதாகு என்றான் செங்கண் மதயானைத் தேர்வேந்தே தேமாலை எங்களிலே சூட்ட இயல்வீமன் - மங்கைபால் தூதாக வென்றானத் தோகையைத் தன் ஆகத்தால் கோதாக வென்றானக் கோ. 83 “சிவந்த கண்களையுடைய மதயானைகளையும் தேர்களையும் உடைய வேந்தனே! இனிய மணமாலையினைத் தேவர்களாகிய எங்களிலே ஒருவருக்குச் சூட்டுமாறு, இயல்பிற் சிறந்த வீமராசனின் திருமகளிடத்தே, நீ எங்கட்குத் தூதாகச் செல்வாயாக” என்றான் தேவேந்திரன். அதனைக் கேட்டதும், நளன், அந்தத் தமயந்தியின் நினைவைத் தன்னுள்ளகத்து உறுதியினாலே சாரமற்றதொன்றாக ஒதுக்கித், தன் காதலையும் தன் மனத்தினின்றும் அகற்றி, வெற்றிக் கொண்டவனாயினான். (கோது - சக்கை, தோகை - தயமந்தி) குழல்போல உழலும் தேவர் பணிதலைமேற் செல்லும் திரிந்தொருகால் மேவுமிளம் கன்னிபால் மீண்டேகும் - பாவில் குழல்போல நின்றுழலும் கொள்கைத்தே பூவின் நிழல்போலும் தண்குடையான் நெஞ்சு. 84 இந்த உலகனைத்திற்கும் நிழல் போல விளங்கும் தன்மை வாய்ந்த வெண்கொற்றக் குடையினை உடையவன் நளன். அவர் மனமானது, தேவர்களின் பணியினையே முதன்மையாகக் கருதி அதன்பாற் செல்லும். ஒரு சமயம் அதனின்றும் திரிவுற்று இளங்கன்னியான தமயந்தியினிடத்தே மீளவும் காதலுடன் செல்லும். இப்படியாகப் பாவினிடத்தே அதை இயக்குகின்ற மூங்கிற்குழல் போய்ப் மீளுமாறு போல, நளனுடைய மனமும் கடமைக்கும் காதலுக்குமாகத் திரிந்து திரிந்து வருத்தமுறுவதாயிற்று. காவல் கடக்குமாறு என்? ஆவ துரைத்தாய் அதுவே தலைநின்றேன் தேவர்கோ னேயத் திருநகரில் - காவல் கடக்குமா றென்னென்றான் காமநீர் ஆழி அடக்குமா றுள்ளத் தவன். 85 காமம் என்னும் நீர்ப்பெருக்கினையுடைய கடலையும் அடக்கும் திண்மை கொண்ட உள்ளத்தவனான அந்த நளன், “தேவர்கோனே! நினக்கு ஆவதான ஒன்றினைச் சொன்னாய், அதனை முடிக்கவே யானும் முற்பட்டேன். ஆனால், அந்த அழகிய நகரிலேயுள்ள காவல்களைக் கடந்து போவதற்குரிய வழிதான் யாதோ? அதனை அறியாது மயங்குவேன்” என்றான். காணார் போய்க் காண் வார்வெஞ் சிலையொழிய வச்சிரத்தால் மால்வரையைப் போர்வெஞ் சிறகறுத்த பொற்றோளான் - யாருமுனைக் காணார்போய் மற்றவளைக் காணென்றான் கார்வண்டின் பாணாறும் தாரானைப் பார்த்து. 86 நெடிதான உயர்ந்த மைநாகம் என்னும் மலை ஒன்று மட்டும் நீங்கப் பிற மலைகள் எல்லாவற்றுடனும் போரிட்டுத் தன் வச்சிரப் படையினாலே அவற்றின் சிறகறுத்துச் செருக்கடக்கிய அழகிய தோள்களையுடையவன் இந்திரன். அவன், நளன் கூறியதைக் கேட்டதும், கருநிற வண்டுகளின் பண் முழங்கிக் கொண்டிருக்கும் தாரினை அணிந்திருந்தோனாகிய அந் நளனைப் பார்த்து, “யாரும் உன்னைக் காணமாட்டார்கள்; நீ கவலையின்றிப் போய் அவளைக் கண்டு வருக” என்றான். பொன்னாடு போன்றதே! இசைமுகந்த வாயும் இயல்தெரிந்த நாவும் திசைமுகந்தால் அன்ன தெருவும் - வசையிறந்த பொன்னாடு போந்திருந்தாற் போன்றதே போர்விதர்ப்ப நன்னாடற் கோமான்தன் நாடு. 87 போராற்றல் கொண்ட விதர்ப்பமாகிய நல்ல நாட்டிற்குரிய மன்னனாகிய வீமராசனின் நாடானது, புகழ்களை எல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிற வாயில்களையும், இயல்புகள் தெரிந்து அமைக்கப்பெற்ற வீடுகளையும், எட்டுத் திக்குகளையும் உடையதாகக் கொண்டிருப்பன போன்று விளங்கும் தெருக்களையும் உடையதாகக், குற்றமற்ற பொன்னாடே வானகத்திலிருந்து வந்திருப்பதைப் போன்று, சிறப்புடன் விளங்கிற்று. (இது, நளன் குண்டினபுரத்துட் செல்வான், தான் கண்டு இன்புற்றுக் கூறுவதாக அமைந்தது.) குவளையும் தாமரையும் தேங்குவளை தன்னிலே செந்தா மரைமலரப் பூங்குவளை தாமரைக்கே பூத்ததே - ஆங்கு மதுநோக்கும் தாரானும் வாள்நுதலும் தம்மில் பொதுநோக்கு எதிர்நோக்கும் போது. 88 எவருமறியாதபடி குண்டினபுரத்துட் சென்று, தமயந்தியின் அந்தப்புரமாகிய கன்னிமாடத்தையும் சென்று அடைந்தான் நளன். தமயந்தியின் முன்னர்ப் போய்ச் சென்றும் நின்றான். அவ்விடத்தே வண்டினம் வந்து மொய்க்கும் தாரினனான நளனும், ஒளியுடைய நெற்றியினளான தமயந்தியும், தமக்குள் பொது நோக்காக ஒருவரையொருவர் எதிரெதிரே நின்றபடி நோக்கிக் கண்டனர். அப்படிக் கண்ட அந்த வேளையிலேயே, தமயந்தியின் கண்களாகிய இனிதான குவளை மலர்களிடத்தே, நளனுடைய செந்தாமரை மலர் போன்ற கண்கள் மலர்ந்தன. அதேபோன்று அவன் கண்களாம் தாமரை மலர்களிடத்தே அவளுடைய கண்களாம் அழகிய குவளை மலர்களும் பூத்தன. (இருவர் கண்களும் காதல் நோக்கினாலே தம்முள் ஒன்றுபட்டவாய், ஒன்றிலொன்று சென்று கலந்தன என்பது குறிப்பு.) கற்பின் தாழ் வீழ்த்த கதவு நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று தீண்டும் அளவில் திறந்ததே - பூண்டதோர் அற்பின்தாழ் கூந்தலாள் வேட்கை அகத்தடக்கிக் கற்பின்தாழ் வீழ்ந்த கதவு. 89 நளனுடைய நெடிதான செந்தாமரைபோலும் கண்களை நீல மலர்கள் போன்றதான தமயந்தியின் கண்கள் சென்று தீண்டிய அந்த அளவிலே, நீண்டு தொங்கும் கூந்தலுடையவளான தமயந்தியும், தன் விருப்பத்தை உள்ளேயே அடக்கிக் கொண்டு, கற்பு என்னும் தாழிட்டுப் பூட்டியிருந்த தன் மனக் கதவானது, முன்பே கொண்டதோர் அன்பின் திறத்தினாலே திறந்து கொண்ட ஒரு புதிய நிலையினளும் ஆயினாள். (பூண்டதோர் அன்பு - உழுவலன்பு. அற்பு - அன்பு, மனத்தை அறையாகவும் கற்பைக் கதவாகவும் உவமித்தனர்.) நெஞ்சு தடவும் நெடுங்கண்கள்! உய்ஞ்சு கரையேற ஒட்டுங்கொல் ஒண்டொடியாள் நெஞ்சு தடவும் நெடுங்கண்கள் - விஞ்சவே நீண்டதோ அங்ஙனே இங்ஙனே நீள்மலராள் ஆண்டதோள் மன்னன் அழகு. 90 நளனுடைய நெஞ்சத்தைச் சென்று தடவுகின்ற ஒளிமிக்க தொடியுடையாளின் நீண்ட கண்கள், மிகவும் அளவு கடந்துதான் அங்ஙனமே நீண்டு விட்டனவோ? வெற்றித் திருமகள் ஆட்சி செலுத்தியிருக்கும் தோள்களையுடைய மன்னவனின் அழகு என்னும் கடல் தான், இனி அத் தமயந்தியையும் தன்னுள்ளே அகப்படுத்திக் கொள்ளாமல், அதனின்றும் உய்ந்து கரையேறுவதற்கு அவளையும் விட்டு விடுமோ? (அவள், அவன் மார்பழகையும் வைத்த கண் வாங்காதாளாகப் பார்த்தது பார்த்தபடியே, அவற்றின் வலிமையழகிலேயே மனம் மயங்கி நின்றாள் என்பது குறிப்பு) அன்பைத் தடுத்த நாண் மன்னாகத் துள்ளழுந்தி வாரணிந்த மென்முலையும் பொன்னாணும் புக்கொளிப்பப் புல்லுவனென் - றுன்னா எடுத்தபே ரன்பை இடையே புகுந்து தடுத்ததே நாணாம் தறி. 91 “கச்சணிந்த மென்மையான என் முலைகளும், பொற்சங்கிலியும், இம் மன்னவனின் மார்பிடத்தே உள்ளாக அழுந்திப் புகுந்து ஒளிந்து கொள்ளுமாறு இவனைத் தழுவுவேன்” என்று நினைத்துக் கொள்ளும்படியாக எழுந்த அவளுடைய பெரிதான காதலன்பை, நாணம் என்னும் கட்டுத் தறியானது இடையே புகுந்து, அப்போது கட்டித் தடை செய்துவிட்டது. (‘ஆசையால் தழுவத் துடித்தும், நாணத்தால் அங்ஙனம் செய்யாது நின்றாள் தமயந்தி’ என்பதாம்.) ‘உள்ளவா சொல்’ என்றாள் காவல் கடந்தெங்கள் கன்னிமா டம்புகுந்தாய் யாவனோ விஞ்சைக் கிறைவனோ - தேவனோ உள்ளவா சொல்லென்றாள் ஊசற் குழைமீது வெள்ளவாள் நீர்சோர விட்டு. 92 நாணம் தடைசெய்யவே, தமயந்தி, தன் கன்னிமாடத்தினுள்ளே புதியவனாகப் புகுந்த நளனைக் கடிந்து கொள்ளவும் தொடங்கினாள். அவள் கண்கள் அப்போது நீர் சொரிந்தன. அசைந்தாடுகின்ற காதணிகளின் மீது கண்களினின்றும் வெள்ளம் போற் பெருகிய ஒளியுடைய நீரினைச் சோரவிட்டுக் கொண்டவளாகக், “காவல்களை எல்லாம் கடந்து, எங்கள் கன்னிமாடத்தினுள்ளேயும் வந்து புகுந்தனையே! நீதான் யாவனோ? வித்தியாதர உலகின் தலைவனோ? தேவனோ? உள்ளபடியே நின் உண்மையைச் சொல்லுவாயாக” என்றாள். நன்னாடும் சொன்னான் திராத காமத் தழலைத்தன் செம்மையெனும் நீரால் அவித்துக் கொடுநின்று - வாராத பொன்னாடர் ஏவலுடன் போந்தவா சொல்லித்தன் நன்னாடுஞ் சொன்னான் நளன். 93 தீராத தன்னுடைய காமத்தீயினைத் தன்னுடைய செம்மையென்னும் உயரிய பண்பாகிய நீரினாலே அவித்துக் கொண்டு நின்றவனாக, அவ்விடத்தே வந்திராதே பொன்னாட்டினரான தேவர்களின் ஏவலுடனே தான் வந்த காரியத்தை அவளுக்குச் சொன்னான். அத்துடன், தன்னுடைய நல்ல நிடத நாட்டினையும் பற்றிச் சொல்லித், தான் யாவன் என்பதையும் அவளுக்குச் சொன்னான். புரவலனைச் சூட்டுவாய் என்னுரையை யாதென்றிகழா திமையவர்வாழ் பொன்னுலகங் காக்கும் புரவலனை - மென்மாலை சூட்டுவா யென்றான் தொடையில் தேன்தும்பிக்கே ஊட்டுவான் எல்லாம் உரைத்து. 94 தன்னுடைய மலர்மாலையின் மலர்களிடத்தேயுள்ள தேனை வண்டினத்துக்கு ஊட்டிக் கொண்டிருப்பவனான நளன், தமயந்திக்குத் தான் வந்த வகையெல்லாம் முற்றவும் எடுத்துச் சொன்னான். அதன்பின், “என் பேச்சினை யாதோவென்று இகழாதே; இமையவர் வாழும் பொன்னுலகத்தினைக் காக்கின்ற தேவர் கோமானையே சுயம்வரத்தனறு மென்மாலை சூட்டி நின் நாதனாக நீயும் ஏற்றுக் கொள்வாயாக” என்றும், அவளிடம் வேண்டினான். நின் பொருட்டால் சுயம்வரம் இயமரம்நின் றார்ப்ப இனவளைநின் றேங்க வயமருதோள் மன்னா வகுத்த - சுயம்வரந்தான் நின்பொருட்டால் என்று நினைகென்றாள் நீள்குடையான் தன்பொருட்டால் நைவாள் தளர்ந்து. 95 நீண்ட வெண்கொற்றக் குடையினை உடையவனான நளனின் பொருட்டாகவே மனநோய் மிகுந்து வருந்துவோளான தமயந்தி, அவன் உரைத்ததனைக் கேட்டதும் மிகவும் தளர்ச்சிக் கொண்டாள். “வெற்றி பொருந்திய தோள்களையுடைய மன்னவனே! இசைக் கருவிகள் பலவும் நிலையாக ஆரவாரிக்கவும், சங்கின் தொகுதிகள் நிலையாக முழக்கமிடவும் வகுத்த இந்தச் சுயம்வரமே நின் பொருட்டாகத்தான் என்பதனை, நீயும் நின் நினைவிற் கொள்வாயாக” என்றாள். அவையகத்தே எழுந்தருள்க! போதரிக்கண் மாதராள் பொன்மாலை சூட்டத்தான் ஆதரித்தார் தம்மோ டவையகத்தே - சோதிச் செழுந்தரள வெண்குடையாய் தேவர்களும் நீயும் எழுந்தருள்க என்றாள் எடுத்து. 96 செந்தாமரைப் போதினைப் போலச் செவ்வரி பரந்திருக்கும் கண்களையுடைய அழகியாளான தமயந்தியானவள், “ஒளியுள்ள செழுமையான முத்தினைப் போல விளங்கும் வெண்கொற்றக் குடையினை உடையவனே! அழகிய மலர்மாலையினைச் சுட்டுவதற்கு விரும்பியவரான பலரோடும், நின்னைத் தூதுவிடுத்த தேவர்களும், நீயும் நாளை அவையகத்தே வந்து எழுந்தருள்க” எனவும் எடுத்துரைத்தாள். (‘நீயும் வருக’ என்றது, தன் எண்ணத்து உறுதியையும், தன் ஆவலையும் காட்டி வற்புறுத்தியதுமாகும்.) இந்திரனைத் தொழுதான் வானவர்கோன் ஏவல் வழிச்சென்று வாணுதலைத் தானணுகி மீண்டபடி சாற்றவே - தேன்முரலும் வண்டார் நளன்போந்து வச்சிரா யுதற்றொழுதான் கண்டார் உவப்பக் கலந்து. 97 வண்டினம் மொய்த்து ஆரவாரித்துக் கொண்டிருக்கும் வளமையான தாரினை அணிந்தோனான நளன், தேவர் கோமானின் ஏவலின் வழியே தமயந்தியைச் சேர்ந்து, தான் மீண்டு வந்த தன்மையைச் சொல்லுவதற்காகத் தன்னைக் கண்டவர் யாவரும் தம்முட்கலந்து பேசி மகிழ்ச்சி கொள்ளுமாறு சென்று, அந்தத் தேவர் கோமானாகிய வச்சிராயுதத் தோனைத் தொழுதும் நின்றான். (கண்டார் கலந்து உவத்தல் - நளனைக் கண்ட தேவர்கள் உவப்புடன் தமக்குட் கலந்து பேசிக் கொண்டு அவன் மேதகைமையினைப் போற்றி ஆரவாரித்தல்.) வன்மொழியும் மென் மொழியும் விண்ணவர்தம் ஏவலுடன் வீமன் திருமகள்பால் நண்ணு புகழ்நளனும் நன்குரைத்த - பெண்ணணங்கின் வன்மொழியும் தேவர் மனமகிழத் தான்மொழிந்த மென்மொழியும் சென்றுரைத்தான் மீண்டு. 98 தேவர்களுடைய ஏவலுடனே வீமராசனின் திருமகளிடத்தே தூதுசென்ற புகழ்மிக்க நளனும், தேவர்கட்கு மாலையிடுமாறு தான் அவளிடத்தே எடுத்துக் கூறிய மென்மையான உரைகளையும், பெண்களிற் சிறந்த அவளுடைய உறுதிமொழியினையும், தேவர்களின் மனம் மகிழுமாறு, மீண்டும் அவர்களிடத்தே எடுத்துச் சொன்னான். வரம் ஈந்தார்கள் அங்கி அமுதம்நீர் அம்பூ அணியாடை எங்குநீ வேண்டினைமற் றவ்விடத்தே - சங்கையறப் பெற்றாய் எனவருணன் ஆகண்டலன் தருமன் மற்றோனும் ஈந்தார் வரம். 99 வருணனும் இந்திரனும் இயமனும் மற்றும் தீக்கடவுளுமாகிய அந்நால்வரும், “நெருப்பு, அமுதம், நீர், அழகிய பூமாலை, அணிகலம், ஆடை ஆகிய இவைகளை எல்லாம், எந்த இடத்தில் நீ எவ்வாறு வேண்டுமென விரும்புகின்றனையோ, அந்த இடத்திலேயே, சந்தேகமற, நினைத்தவுடனே நீயும் பெறுபவனாவாய்” என்று, நளனுக்கு வரம் அளித்தார்கள். மணக் காவலர் அங்கவர்கள் வேண்டும் வரங்கொடுக்கப் பெற்றவர்கள் தங்களொடும் தார்வேந்தன் சார்ந்தனன்மேல் - மங்கை வயமருவு கின்ற மணக்கா வலர்க்குச் சயமரந்தான் கண்டதோர் சார்பு. 100 அவ்விடத்தே, அத் தேவர்கள், தாம் தர விரும்பிய வரங்களை எல்லாம் கொடுத்தனர். அவற்றைப் பெற்றுக் கொண்டு, அவர்கள் தங்களோடும், தமயந்தி மேல் ஆர்வம் கொண்டிருக்கின்ற மணத்திற்கு வந்திருக்கும் மன்னர்களுக்கும் சுயம்வர மண்டபத்தை ஏற்படுத்திச் சார்ந்திருக்கும் இடமாக வைத்திருந்த இடத்தினை நோக்கிச் சென்று, அதனிடத்தே, நளனும் ஒருசார் சென்று அமைதியாக அமர்ந்திருந்தனன். |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |