புகழேந்திப் புலவர்

இயற்றிய

நளவெண்பா

தெளிவுரை: புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி ...

புருவக் கொடியின் நடனம்

தங்கள் புலவித் தலையில் தனித்திருந்த
மங்கை வதன மணியரங்கில் - அங்கண்
வடிவாள்மேற் கால்வளைத்து வார்புருவம் என்னும்
கொடியாடக் கண்டானோர் கூத்து. 201

     தங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஊடலின்கண், தனியாகப் போய் நின்றிருந்த மங்கையாம் தமயந்தியின் முகமாகிய அழகிய அரங்கத்திலே அழகிய கண்களாகிய கூர்மையுடைய வாளின் மேலாக, நீண்ட புருவம் என்னும் நடனமாது, தன் கால்களை வளைத்து ஒப்பற்ற விதமாக ஆடிக் கொண்டிருந்த ஒரு சிறந்த ஊழிக் கூத்தினையும் நளன் அப்போது கண்டான். (புருவங்கள் ஊடற்சினத்தால் துடிதுடிக்கக் கண்டான் நளன் என்பது இது.

அடி முடி சூட்டினான்

சில்லரிக் கிண்கிணிமென் தெய்வமலர்ச் சீறடியைத்
தொல்லை மணிமுடிமேற் சூட்டினான் - வல்லை
மழுநீலக் கோதை முகத்தே மலர்ந்த
செழுநீலம் மாறாச் சிவப்பு. 202

     சிலவாகிய பரல்களைக் கொண்ட சதங்கைகள் விளங்கும், தமயந்தியின் மென்மையான தெய்வமலர் போன்ற சிறிய பாதங்களைப் பழமைவாய்ந்த தன் மணிமுடியின் மேலாக நளன் அப்போது சூட்டிக் கொண்டான். முழுநீல மலர்களைக் கட்டிய மாலையினை அணிந்த கூந்தலினை உடைய தமயந்தியின் முகத்திலே விளங்கும் செழுமையான நீலமலர் போன்ற கண்களும், அதனால் தம் செந்நிறத்தினின்றும் மாறுபடுதலுற்றன. (அவன் அவள் பாதங்களைப் பற்றிக் கொண்டு, அவளைத் தெளிவிக்க, அவளும் தன் சினம் நீங்கியவள் ஆயினாள் என்க.)

காமப் பயிர் விளைத்தாள்

அங்கைவேல் மன்னன் அகலம் எனுஞ்செறுவில்
கொங்கையேர் பூட்டிக் குறுவியர்நீர் - அங்கடைத்துக்
காதல் வரம்பொழுக்கிக் காமப் பயிர்விளைத்தாள்
கோதையரின் மேலான கொம்பு. 203

     நங்கையர்களினுள்ளே மேலான குணநலன்கள் உடையவளாகிய தமயந்தியானவள், தன் ஊடல் தீர்ந்ததும், அழகிய கையிடத்தே வேலினையுடைய மன்னனாகிய நளனின் மார்பு என்னும் வயலினிடத்தே, தன் கொங்கைகள் என்னும் ஏரினைப் பூட்டி உழுது, குறு வியர்வு எனும் நீரினை அவ்வயலுக்கு அடைத்துக், காதல் எனும் வரப்புகளை ஒழுங்குப்படுத்திக், காம இன்பமாகிய பயிரினையும் அங்கே விளைவித்தாள்.

3. மாவிந்த வாழ்வு

வாளை கரையேறும்

வேரி மழைதுளிக்கும் மேகக் கருங்கூந்தல்
காரிகையும் தானும்போய்க் கண்ணுற்றான் - மூரித்
திரையேற மென்கிடங்கிற் சேலேற வாளை
கரையேறும் கங்கைக் கரை. 204

     அலைகள் பூரிப்புடனே எழுந்து கரையின் மேலேயும் வந்து மோதின. இதனால், கரையருகேயுள்ள பள்ளங்களிலே இருந்த வாளை மீன்கள், அவ் அலைகளுடனே கெண்டை மீன்களும் ஏறி வரக்கண்டு பொறாமல், தாமும் கரையேறத் தொடங்கின. அத்தகைய செழுமையுடையது கங்கைக் கரை! அதனைத் தேன்மழை துளிர்க்கும் கார் மேகம் போன்ற கருமையான கூந்தலையுடைய காரிகையான தமயந்தியுடன் தானும் சென்றடைந்து கண்ணுற்று மகிழ்ந்தான் நளன். (அலைகளோடு கெண்டைகள் மேலேறி வந்ததாகவும், வாளைகள் எதிரேறிச் சென்றதாகவும் கொள்க.)

நறவேற்கும் குப்பி

சூதக் கனியூறல் ஏற்ற சுருள்வாழை
கோதில் நறவேற்கும் குப்பியென - மாதரார்
ஐயுற்று நோக்கும் அகன்பொழில்சென் றெய்தினான்
வையுற்ற வேற்றானை மன். 205

     மாங்கனிகளினின்றும் வழிந்தொழுகிய இனிய சாற்றினைச் சுருண்டிருக்கும் வாழையின் குருத்துக்கள் ஏற்று விளங்கின. அவற்றைக் கண்டதும், தமயந்தியானவள் ‘தெளிவான தேனைக் கொண்டிருக்கும் குப்பிகளோ இவை?’ என ஐயுற்று நோக்கலானாள். கூர்மை பொருந்திய வேற்படையினைக் கொண்ட தானைக்குரிய மன்னவனாகிய நளன், அத்தகைய அகன்ற ஒரு பொழிலிலே அவளுடன் அப்போது சென்றடைந்தான். (மாதரார் - பெண்கள்; இங்கே தமயந்தியைக் குறித்தது. பொதுவாகப் பெண்களைக் குறித்ததெனவும் கருதலாம்.)

எங்கள் நகர்

வான்தோய நீண்டுயர்ந்த மாடக் கொடிநுடங்கத்
தான்தோன்றும் மாற்றின் தடம்பதிதான்-வான்தோன்றி
வில்விளக்கே பூக்கும் விதர்ப்பநா டாளுடையான்
நல்விளக்கே எங்கள் நகர். 206

     வானளாவிய உயரமுடனே தோன்றி, ஒளியுடைய விளக்கைப் போல் மலர்கள் பூக்கின்ற செழுமையான விதர்ப்ப நாட்டினை ஆளும் உரிமையுடையவன் வீமராசன். அவனுடைய நல்ல குலவிளக்காக விளங்குகின்றவளே! வானத்தைத் தொடுவது போன்ற மிகவும் உயரமான மாளிகைகள் தோறும் கொடிகள் அசைந்தாட விளங்கும் இந்தப் பெருநகரம் தான் மாவிந்த நகரமாகும். (நளன், தன் கோநகரை அடையும்போது, எல்லையில் அதனைச் சுட்டிக்காட்டித் தமயந்திக்கு இப்படிக் கூறுகிறான்.)

பன்னிரண்டு வருட வாழ்வு

பொய்கையும் வாசப் பொழிலும் எழிலருவச்
செய்குன்றும் ஆறும் திரிந்தாடித் -தையலுடன்
ஆறிரண்டாண் டெல்லை கழித்தான் அடையலரைக்
கூறிரண்டாக் கொல்யானைக் கோ. 207

     பகைவரை இரு கூறுகளாக்கிக் கொல்லும் யானைப் படைக்குக் கோமான் நளமன்னன். அவன், தன் மனைவியான தமயந்தியுடன் பொய்கைகளிலும், மணமுள்ள சோலைகளிலும், அழகிய அருவிகளிலும், செய்குன்றுகளிலும் சுற்றியலைந்து, இன்பமுடனே ஆடி மகிழ்ந்தவனாகப் பன்னிரண்டு ஆண்டுகளை மகிழ்வுடனே கழித்தான்.

இரு புதல்வர்களை ஈன்றாள்

கோல நிறம்விளர்ப்பக் கொங்கை முகங்கருக
நீல நிறமயிர்க்கால் நின்றெறிப்ப - நூலென்னத்
தோன்றாத நுண்மருங்குல் தோன்றச் சுரிகுழலாள்
ஈன்றாள் குழவி இரண்டு. 208

     அழகான தமயந்தியின் மேனி நிறம் வெளுத்தது; அவள் கொங்கைக் காம்புகள் கருமையுற்றன; மயிர்க் கால்களில் நீலநிறம் நிலைபெற்று ஒளி வீசின; நூலென்னுமாறு தோன்றுதல் அற்றிருந்த நுண்மையான இடையும் தோன்றிற்று; சுருண்ட தலைமயிரினை உடையவளான அவளும் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றனள். (மேனி விளர்த்தல் முதலியவை கருவுற்ற மாதரிடத்தே தோன்றும் மேனி வேறுபாடுகள். கருவுற்று, இரு குழந்தைகளையும் பெற்றாள் தமயந்தி என்பது இது.)

4. கலிமகன் சேர்தல்

திரிந்தும் காணான்

ஆண்டிரண்டா றெல்லை அளவும் திரிந்தேயும்
காண்டகைய வெங்கலியும் காண்கிலான் - நீண்டபுகழ்ச்
செந்நெறியாற் பார்காத்த செங்கோல் நிலவேந்தன்
தன்னெறியால் வேறோர் தவறு. 209

     கொடியவனாகிய கலிமகனும், அனைவரும் கண்டு போற்றும் சிறப்புடனே திகழ்ந்த அந்தப் பன்னிரண்டாண்டு எல்லை வரையும், நளனையே சுற்றிச் சுற்றி வந்தான். நெடிதான புகழோடுங் கூடிய செம்மையான முறையினாலே நாட்டைக் காத்து வந்த செங்கோலினன் நிடதநாட்டு மன்னன். அதனால், அங்ஙனம் கலிபுருஷன் அலைந்தும், அவனிடத்தே, நெறிமுறை வேறுபட்ட தவறு எதனையும் காணானாயினான். (அதனால், அவனைத் தான் சாராதும் ஒதுங்கி இருந்தான்.)

புந்தி மகிழப் புகுந்தான்

சந்திசெயத் தாள்விளக்கத் தாளின்மறுத் தான்கண்டு
புந்தி மகிழப் புகுந்துகலி - சிந்தையெலாம்
தன்வயமே ஆக்குந் தமைய னுடனிருந்தான்
பொன்னசல மார்பற் புகைந்து. 210

     ஒரு நாள் சந்தியா வந்தனஞ் செய்வதற்காகத் தன் பாதங்களை நளன் கழுவ, அப்போது ஒரு தாளிலே நீர் சிறிது இடத்துப் படாது போன மறுவினைக் கலிமகன் கண்டான். தன் மனம் மகிழ நளன்பாற் சென்று புகுந்தான். அவனுடைய சிந்தை முழுவதையும் தன் வசமாகவே ஆக்கிக் கொண்டான். பொன்மாலையினைப் போன்ற மார்பனாகிய நளனிடத்தே சினங்கொண்ட கலி, அங்ஙனம் அவன் சிந்தையைத் தன் வயப்படுத்திக் கொண்டபின், நளனுக்குத் தமையன் முறையினனான புட்கரன் என்பவனுடன் சென்று சேர்ந்து, அவனுக்கு உதவியாளனாகவும் இருந்தான்.

சேர்ந்தான் கலி

நாராய ணாய நமவென் றவனடியில்
சேராரை வெந்துயரம் சேர்ந்தாற்போல் - பாராளும்
கொற்றவனைப் பார்மடந்தை கோமானை வாய்மைநெறி
கற்றவனைச் சேர்ந்தான் கலி. 211

     “நாராயணாய நம” என்று துதித்து, அந்தப் பரந்தாமனின் திருவடியே தமக்குத் துணையாகச் சேராதிருக்கின்றவர்களைக் கொடுமையான துன்பங்கள் சென்று அடைவதனைப் போலவே, நிடதநாட்டினை ஆளுங் கொற்றவனான நளனை, நிலமகள் தலைவனை, மெய்ந்நெறியறிந்த சிறந்தோனைக் கலியும் சென்று சேர்ந்தான். (கவி, இவ்விடத்தே தமக்குரிய நாராயண பக்தியைக் காட்டுகின்றார். “நாராயணாய நமஹ” என்பது அஷ்டாட்சர மந்திரம்; நாராயணனுக்கு வணக்கம் என்பது பொருளாகும்.)

வாங்கித் தருகின்றேன்

நன்னெறியில் சூதால் நளனைக் களவியற்றித்
தன்னரசு வாங்கித் தருகின்றேன் - மன்னவனே!
போதுவாய் என்னுடனே என்றான் புலைநரகுக்
கேதுவாய் நின்றான் எடுத்து. 212

     இழிவு உடையதான நரகத்திற்குப் போவதற்கு ஒரு காரணமாக நிலை பெற்றவன் கலிபுருஷன். அவன், புட்கரனிடம் “மன்னவனே! நல்லொழுக்கம் ஆகாத சூதாட்டத்தினாலே நளனை வஞ்சித்து, அவனுடைய அரசாட்சியினை உனக்கு நான் வாங்கித் தருகிறேன்; என்னுடனே புறப்படுவாய்?” என்று, எடுத்துச் சொன்னான். (‘நன்னெறியில்’ என்பது கவி வாக்கு. புலைநரகு - கீழான நரகு, ஏது - காரணம். ‘எடுத்து’ என்றது, வற்புறுத்தி பன்முறை உரைத்து நம்பிக்கையூட்டியதனைக் காட்டும்.)

கவறாடப் போயினான்

புன்னை நறுமலரின் பூந்தா திடையுறங்கும்
கன்னி இளமேதிக் காற்குளம்பு - பொன்னுரைத்த
கல்லேய்க்கும் நாடன் கவறாடப் போயினான்
கொல்லேற்றின் மேலேறிக் கொண்டு. 213

     புன்னை மரத்து மணமலரின் பூந்தாதுகள் வீழ்ந்து கிடக்கும் இடத்திலே கிடந்து உறங்குகின்ற, கன்னித்தன்மை கழியாத இளைய எருமைகளின் காற்குழம்புகள், பொன்னை உரைத்துக் காணுகின்ற கட்டளைக் கல்லினைப் போலத் தோன்றும் நாட்டிற்கு உரியவனான புட்கரனும், கலியின் பேச்சுக்கு இசைந்தவனாகக் கொல்லேற்றின் மேல் ஏறிக் கொண்டு, நிடதத்தை நோக்கிச் செல்வானாயினான். (கொல்லேறு - கொல்லுந்தன்மை கொண்ட மூரிப்பான ஆனேறு. களிற்றின் மீதும் குதிரையின் மீதும் ஊர்ந்து செல்லுதலே போல, ஏற்றின் மீதும் ஏறிச் செல்லும் மரபு உண்டு என்பது இதனால் அறியப்படும்.)

புட்கரன் நிடதம் சேர்ந்தான்

வெங்கட் சினவிடையின் மேலேறிக் காலேறிக்
கங்கைத் திரைநீர் கரையேறிச்-செங்கதிர்ப்பைம்
பொன்னொழியப் போதும் புறம்பணைசூழ் நன்னாடு
பின்னொழியப் போந்தான் பெயர்ந்து. 214

     கொடுமை பளிச்சிடும் கண்களையுடைய சினம் பொருந்திய எருதின் மேல் ஏறிக் கொண்டு, காற்று எழுந்து வீசக் கங்கையாற்றின் அலை நீரானது கரையின் மேலே ஏறி வழிந்து சென்று பாய்ந்து, சிவந்த கதிர்களாகிய பொன்மணிகள் நீருள் மூழ்கி மறையுமாறு சென்று கொண்டிருக்கும் வயல்கள், நாற்புறமும் சூழ்ந்துள்ள, நன்மை பொருந்திய தன் நாடானது பிற்பட்டுப் போகப் புறப்பட்டு, நிடத நாட்டிற்குள் சென்றும் சேர்ந்தான்.

என்ன கொடி இது!

அடற்கதிர்வேல் மன்னன் அவனேற்றின் முன்போய்
எடுத்தகொடி என்னகொடி என்ன - மிடற்சூது
வெல்லும் கொடியென்றான் வெங்கலியால் அங்கவன்மேல்
செல்லும் கொடியோன் தெரிந்து. 215

     போர்க்களத்திலே பகைவரைக் கொன்று வெற்றி கொள்ளும் ஒளியுடைய வேலினனான நளன், அந்தப் புட்கரனின் முன்னே சென்று, “நீ உயர்த்துள்ள இந்தக் கொடி எதனைக் குறித்த கொடியோ?” என்று வினவினான். கொடிய கலியின் செயலினாலே, அவ்விடத்து நளனிடத்தே செல்லும் கொடியோனான புட்கரன், நளனின் அக் கேள்வியை உணர்ந்து, “பெருஞ் சூதாட்டத்திலே எதிர்த்தவர் எவரையும் வெற்றி கொள்ளும் வெற்றிக் கொடி இதுவாகும்” என்றான். (மிடல் சூது - ஆற்றல் மிகுந்த சூது. வெம் கலி - கொடிய கலி)

நளனே அழைத்தான்

ஏன்றோம் இதுவாயின் மெய்ம்மையே எம்மோடு
வான்றோய் மடல்தெங்கின் வான்தேறல் - தான்தேக்கி
மீதாடி வாளைவயல் வீழ்ந்துழக்கும் நன்னாடன்
சூதாட என்றான் துணிந்து. 216

     வாளை மீன்கள், வானுயர வளர்ந்த தென்னையின் மடலிலேயுள்ள சிறந்த கள்ளினைத் தாம் நிறைய உண்டு, களித்து, அவற்றின் மீது குதித்து விளையாடிக் கீழேயுள்ள வயல்களிலே வீழ்ந்து கலக்குகின்ற, நல்ல நாட்டிற்கு உரியவன் நளமன்னன். அவன், “நீ எடுத்த கொடி அதனைக் குறீப்பது உண்மையாயின், யாமே நின்னோடு சூதாடுவதற்கு ஏற்றுக் கொள்வோம்; எம்முடனே நீ சூதாடுக” என்றான். (வான்தெங்கின் மடல் தேறல் - உயர்ந்த தென்னையின் மடலினிடத்தேயிருந்து கிடைக்கும் தென்னங்கள். தேக்குதல் - மிகுதியாக உண்டு வெறிகொள்ளல்.)

5. சூதினால் தோற்றான்

அமைச்சர் தடுத்தல்

காதல் கவறாடல் கள்ளுண்டல் பொய்ம்மொழிதல்
ஈதல் மறுத்தல் இவைகண்டாய் - போதில்
சினையாமை வைகும் திருநாடா செம்மை
நினையாமை பூண்டார் நெறி. 217

     “தாமரை முதலிய மலர்களிடத்தே சூல் கொண்ட ஆமைகள் தங்கியிருக்கும் செல்வமிக்க வளநாட்டிற்கு உரியவனே! பிற மாதரிடத்தில் காதல் கொள்ளுதல், சூதாடுதல், கள்ளுண்டல், பொய் சொல்லுதல், பிறர் கொடுப்பதனைத் தடுத்தல் ஆகியைவை எல்லாம், செம்மை என்ற ஒன்றையே நினைக்கவும் செய்யாத கீழ்மக்கள் மேற்கொள்ளும் நெறியன்றோ? (ஆகவே, ‘சூதினை நீதான் ஆடுதலை மேற்கொள்ளல் முறையன்று’ என்றனர், நளனின் அமைச்சர்கள்.)

மிக்கோர்கள் தீண்டுவரோ?

அறத்தைவேர் கல்லும் அருநரகிற் சேர்க்கும்
திறத்தையே கொண்டருளைத் தேய்க்கும் -மறத்தையே
பூண்டுவிரோ தஞ்செய்யும் பொய்ச்சூதை மிக்கோர்கள்
தீண்டுவரோ வென்றார் தெரிந்து. 218

     உலகில் நிலவும் அறநெறியினை வேருடனே பெயர்த்து எறியும்; பொறுத்தற்கும் அரியதான நரகத்துயரிடத்தே கொண்டு சேர்க்கும்; பணயப் பொருளைப் பெறுதல் என்னும் வலிமை ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு, அருள் என்னும் பண்பையே அழித்துவிடும்; அறந்தவறிய செயல்களையே மேற்கொண்டு, எங்கும் விரோதங்களை உண்டாக்கும்; இத்தகைய பொய்யான சூதினை அறிவினாலே மிக்கோர்கள் தீண்டுதலும் செய்வார்களோ? (மிக்கோர் தீண்டார்; நீயும் தீண்டுதல் வேண்டா என்பது கருத்து.)

தக்கவர் சூதாடார்

உருவழிக்கும் உண்மை உயர்வழிக்கும் வண்மைத்
திருவழிக்கும் மானஞ் சிதைக்கும் - மருவும்
ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்ல சூது
பொருவரோ தக்கோர் புரிந்து. 219

     உருவ வளத்தை அழித்துவிடும்; உண்மையையும் உயர்வையும் அழித்துவிடும்; வள்ளன்மையோடு தேடிய செல்வத்தையும் அழிக்கும்; மான உணர்வையும் சிதைக்கும்; கலந்த நண்பர் ஒருவரோடு கொண்ட அன்பினையும் அழிக்கும்; சூதினால் வரும் கேடுகள் ஒன்றல்ல; இப்படி இவையும் இன்னும் பலவுமாம். அதனாலே, தகுதி உடையவர் எவரும் சூதாடலிலே விருப்பமுடன் ஈடுபடுவார்களோ? மாட்டார்களே! (அதனால், நீயும் ஈடுபடல் கூடாதென்பது கருத்து.)

வஞ்சகரே அவர்

ஆயம் பிடித்தாரும் அல்லற் பொதுமகளிர்
நேயம் பிடித்தாரும் நெஞ்சிடையே - மாயம்
பிடித்தாரின் வேறல்ல ரென்றுரைப்ப தன்றே
வடித்தாரின் றிலோர் வழக்கு. 220

     “சூதாடுவதற்கான காய்களைக் கைப்பிடித்தவர்களும் துன்பம் விளைவிக்கும் வேசியரின் தொடர்பினைக் கடைப்பிடித்தவரும், தம் நெஞ்சினிடத்திலே வஞ்சனையை மேற்கொண்ட வஞ்சகர்களினும் வேறாகமாட்டார்கள்” என்று அறநூல்கள் சொல்லுமல்லவோ! அதுவே, தீமைகளை அகற்றி நன்மைகளையே மேற்கொண்ட அறவோர்களின் சாத்திரங்களிற் பயின்றுவரும் வழக்கும் ஆகும்! (இதனை நீயும் அறிவாய் என்பது குறிப்பு.)

நளனின் முடிவு

தீது வருக நலம்வருக சிந்தையால்
சூது பொரவிசைந்து சொல்லினோம் - யாதும்
விலக்கலிர்நீ ரென்றான் வராலேற மேதி
கலக்கலைநீர் நாடன் கனன்று. 221

     மந்திரிகள் மேற்கண்டவாறு அறநெறிகளை உரைப்பவும், வரால் மீன்கள் ஏறும்படியாக எருமைகள் கலக்கும் அலைகின்ற நீர்வளத்தினை உடைய நிடத நாட்டிற்கு உரியோனாகிய நளன், அவர்களைப் பெரிதும் கோபித்துக் கொண்டான். ‘இதனாலே தீமைவரினும் வருக; நன்மை வரினும் வருக; எம் மனமாரச் சூதாடுவதற்கு இசைந்து இவனிடமும் அதனைச் சொன்னோம். எனவே, நீங்கள் என்னைத் தடை செய்யாதீர்கள்” என்றான்.

பணையம் யாது?

நிறையில் கவறாடல் நீநினைந்தா யாகில்
திறையிற் கதிர்முத்தஞ் சிந்தும்-துறையில்
கரும்பொடியா மள்ளர் கடாவடிக்கும் நாடா
பொரும்படியா தென்றானிப் போது. 222

     (இப்படி நளன், அறநெறிகாட்டித் தடுத்தான், தன் மந்திரிகள் பேச்சினையும் ஒதுக்கிச் சூதாடுவதற்குத் துணிந்துவிட்டான். அதனைக் கண்ட புட்கரன் என்பவன்) ‘விலை மதிப்பற்ற ஒளியுடைய முத்துக்கள் சிந்துகின்ற நீர்த்துறையிலே வளர்ந்துள்ள கரும்புகளை ஒடித்து, உழவர்கள் எருமைக் கடாக்களை அடித்து ஓட்டுகின்ற வள நாட்டினை உடையவனே! நிலையான தன்மையற்ற சூதாடுவதற்கு நீ எண்ணினையானால், நாம் சூதுப்போரில் ஈடுபடும்படியாக அதற்குரிய நினது பணையம் இப்போது என்னவோ? அதனைச் சொல்வாயாக’ என்றான்.

பூணாரம் வைத்தான்

விட்டொளிர்வில் வீசி விளங்குமணிப் பூணாரம்
ஒட்டினேன் உன்பணையம் ஏதென்ன - மட்டவிழ்தார்
மல்லேற்ற தோளானும் வான்பணைய மாகத்தன்
கொல்லேற்றை வைத்தான் குறித்து. 223

     ‘விட்டுவிட்டு ஒளிர்கின்ற பிரகாசத்தை எங்கும் பரப்பிக் கொண்டிருக்கும் சிறந்த இரத்தினங்களால் இழைக்கப் பெற்ற யான் பூண்டிருக்கும் இந்த மாலையினைப் பணையமாக வைத்தேன். நின் பணையம் எதுவோ?’ என்றான் நளன். மணம் கமழும் தாரினை அணிந்த, மற்போரினை ஏற்கத் தக்க தோளினை உடையவனான அப் புட்கரனும், தன் சிறந்த பணையமாகத் தான் ஏறி வந்த கொல்லும் குணமுடைய ஏற்றினையே அப்போது குறிப்பிட்டு வைத்தான்.

கலி கவறாய்ப் புரண்டான்

காரேயும் கூந்தலார் காரிகைமேற் காதலித்த
தாரேயும் தோளான் தனிமனம்போல் - நேரே
தவறாய்ப் புரண்ட தமையனொடுங் கூடிக்
கவறாய்ப் புரண்டான் கலி. 224

     மேகத்தினைப் போன்ற கருமையான கூந்தலை உடையவளான காரிகையாம் தமயந்தியின் மேல் காதல் கொண்ட, தாரினைப் பொருந்தின தோளினனான நளனது தனித்து நின்ற உள்ளத்தைப் போல, அவனுக்கு எதிராகத் தவறான முறையிலே முறை பிறழ்ந்து வந்து சூதுக்கு அழைத்த தமையனான புட்கரனோடும் கூடிக் கொண்டு, பாய்ச்சிகையாகத் தானே உருக்கொண்டு, கலிமகன் வஞ்சகமாகப் புரண்டான். (தமையன் என்பதற்கு, நளனுக்குத் தமையனாகிய புட்கரன் எனப் பொருள் கொள்வாரும் உள்ளனர். கலியே கவறாடற்குரிய பகடையாகிப் புட்கரனுக்கு ஆதரவாகப் புரண்டான் என்பது கருத்து.)

வைத்த நிதி தோற்றான்

வைத்த மணியாரம் வென்றேன் மறுபலகைக்
கொத்த பணையம் உரையென்ன - வைத்தநிதி
நூறா யிரத்திரட்டி நூறுநூ றாயிரமும்
வேறாகத் தோற்றானவ் வேந்து. 225

     (அந்தப் பந்தயத்திலே நளன் தோற்றுவிட்டான்.) அப்போது புட்கரன், “நீ பணையமாக வைத்த மணியாரத்தினை நான் வென்று விட்டேன். இனி, மற்றொரு பலகைக்குத் தகுதியான பணையம் யாதென்று சொல்லுவாயாக?” என்றான். அந்த வார்த்தையைக் கேட்ட நளமன்னன், அப்போது பணையமாக வைத்த நிதியாகிய நூறாயிரத்தையும், இரட்டித்த அநேக நூறு நூறாயிரங்களையும், வேறு வேறாக மீளவும் மீளவும் வைத்து, அனைத்தையும் ஒவ்வொன்றாகத் தோற்றுப் போனான்.

நால்வகைப் படையும் தோற்றான்

பல்லா யிரம்பரியும் பத்துநூ றாயிரத்து
சொல்லார் மணித்தேரும் தோற்றதற்பின் - வில்லாட்கள்
முன்றோற்று வானின் முகிறோற்கும் மால்யானை
பின்றோற்றுத் தோற்றான் பிடி. 226

     பலவாயிரம் குதிரைகளையும், புகழ் அமைந்த பத்து நூறாயிரம் மணித் தேர்களையும், நளன் அடுத்து வைத்துத் தோற்றான். அதன் பின், வானத்துக் கார்மேகங்களும் தோற்றுப் போகும்படியான பெரிதான களிற்றியானைகளை வைத்துத் தோற்றான். அதன்பின், தன்பாலிருந்த பிடியானைகளையும் வைத்துத் தோல்வியுற்றான்.

பாவையரை வைத்துத் தோற்றான்

சாதுரங்கம் வென்றேன் தரும்பணைய மேதென்ன
மாதுரங்கம் பூணும் மணித்தேரான் - சூதரங்கில்
பாவையரைச் செவ்வழியாழ்ப் பண்ணின்மொழிப் பின்னுகுழல்
பூவையரைத் தோற்றான் பொருது. 227

     “நால்வகைச் சேனைகளையும் வென்றேன்; இனி நீ தரும் பணையம் யாதோ?” என்று புட்கரன் கேட்டான். கேட்கவும், பெரிய குதிரைகள் பூண்டிருப்பதான மணியிழைத்த தேரினை உடையவனான நளன், சூதாடுகளத்திலே அந்தப் புட்கரனுடன் மேலும் பொருது, பாவை போன்றாரும், செவ்வழி என்னும் பண்ணிசைக்கும் யாழினது பண்ணினைப் போன்ற இனிய பேச்சினையும் பின்னலிட்ட கூந்தலையும் உடையவருமான அரண்மனைப் பணிப் பெண்கள் அனைவரையும் பணையமாக வைத்துத் தோற்றுப் போனான்.

சிறியானைத் ‘திரு’ சேர்ந்தாள்

கற்பின் மகளிர்பா னின்றும் தமைக்கவட்டின்
விற்கு மகளிர்பான் மீண்டாற்போல் - நிற்கும்
நெறியானை மெய்ம்மைவாய் நின்றானை நீங்கிச்
சிறியானைச் சேர்ந்தாள் திரு. 228

     கற்புச் செவ்வியினையுடைய மகளிரிடத்தினின்றும் நீங்கித் தம்மைக் கபடத்தினாலே விலைப்படுத்தும் வேசிமகளிர்பால் சென்றது போல, நிலைபெற்ற நல்லொழுக்கம் உடையவனும் சத்தியத்தின் நெறியிலேயே நிலைபெற்றவனுமான நளனைக் கைவிட்டுப் பிரிந்து, திருமகளும், சிறுமைக் குணமடையோனான அந்தப் புட்கரனைச் சென்று அடைந்தால். (‘கவட்டின் விற்கும்’ என்றது, தம்மை விற்பது போலக் காட்டி வஞ்சித்தலை இயல்பாக உடையவர் எனக் குறிப்பதாகும்.

இவளைப் பணையம் தா?

மனைக்குரியார் அன்றே வருந்துயரம் தீர்ப்பார்
சினைச்சங்கின் வெண்டலையைத் தேனால் - நனைக்கும்
குவளைப் பணைப்பைந்தாட் குண்டுநீர் நாடா
இவளைப் பணையந்தா வின்று. 229

     (இங்ஙனமாக, நலன் தன் உடைமைகளாவன அனைத்தையும் வைத்து இழந்து நின்றான். அப்போது புட்கரன்) ‘கருவுற்றிருக்கும் சங்கினது வெண்மையான தலையினைத் தேன்பெருக்கினாலே நனைத்துக் குவளை மலர்கள் களிப்பூட்டுகின்ற வயல்களிலே, நெற்பயிரின் பசுந்தாள்கள் விளங்கும் ஆழமான நீர்வளம் நிறைந்த நிடத நாட்டிற்கு உரியவனே! ஒருவருக்கு இன்னல் வந்த காலத்திலே, அவர்தம் இல்லறத்திற்கு உரியவரான மனைவிமாரல்லவோ அவருக்கு வருகின்ற துயர்களைப் போக்குபவர். அதனால், இப்போது தமயந்தியான நின்மனைவியைப் பணையமாகத் தருவாயாக” என்று கேட்டான்.

நாம் போதும்!

இனிச்சூ தொழிந்தோம் இனவண்டு கிண்டிக்
கனிச்சூத வார்பொழிலின் கண்ணே - பனிச்சூதப்
பூம்போ தவிழ்க்கும் புனனாடன் பொன்மகளே
நாம்போதும் என்றான் நளன். 230

     (அதனைக் கேட்டதும் நளன் தன் சூது மயக்கந் தெளிந்து, தானிருந்த அவல நிலையினை உணர்ந்தான்.) “வண்டினங்கள் குடைந்துள்ள பழங்களையுடைய மாமரங்களைக் கொண்ட உயர்ந்த மாஞ்சோலையினிடத்தே பெய்கின்ற பனியானது, மாம்பூக்களின் இதழ்களைப் பிணிப்பவிழ்த்து மலரச் செய்கின்ற, நீர்வளமுள்ள விதர்ப்ப நாட்டு அரசனின் திருமகளே! இனிச் சூதாடலையாம் கைவிட்டோம்; நகரைவிட்டு இப்போது வெளியேறிப் போவோம், வருக” என்று தமயந்தியை நோக்கிக் கூறினான்.

6. நாடகன்ற கோலம்

தேவியொடும் போயினான்

மென்காற் சிறையன்னம் வீற்றிருந்த மென்மலரைப்
புன்காகம் கொள்ளத்தான் போனாற்போல் - தன்கால்
பொடியாடத் தேவியொடும் போயினா னன்றே
கொடியானுக் கப்பார் கொடுத்து. 231

     மென்மையான பாதங்களையும் சிறகுகளையும் உடைய அன்னப் பறவையானது, தான் வீற்றிருந்த மென்மையான மலரினைப் புன்மையான காகமானது வந்து கைப்பற்றிக் கொள்ள, தான் அதனின்றும் நீங்கிப் போயினாற் போலத், தன் நாட்டினைக் கொடியவனாகிய புட்கரனுக்குக் கொடுத்துவிட்டுத் தன் தேவியோடுங் கூடியவனாகத் தன் பாதங்களிலே புழுதி படும்படியாக நடந்து, நளன், தன் அரண்மனையினின்றும் வெளியேறி, வீதி வழியே போவானாயினான்.

விதியின் வலி

கடப்பா ரெவரே கடுவினையை வீமன்
மடப்பாவை தன்னுடனே மன்னன் - நடப்பான்
வனத்தே செலப்பணித்து மாயத்தாற் சூழ்ந்த
தனைத்தே விதியின் வலி. 232

     கடுமையான வினைப்பயனின் விளைவினைக் கடந்து போகின்றவர் தாம் யாவர்? தீவினையின் வலிமையானது, வீமராசனின் மடப்பம் பொருந்திய திருமகளான தமயந்தியுடனே மன்னவனாம் நளனையும் நடப்பவராகக் காட்டிடத்தே செல்லுமாறும் ஏவிவிட்டது. வஞ்சனையினாலே கலிபுருடன் கருதிய அந்தத் தன்மையதே அவர்க்கு வந்து வாய்ந்த நிலையும் ஆகும். (இது கவிக்கூற்று. நளன் சூதாடும் இழிந்தோன் அல்லன் என்பார் கவி. இப்படி எல்லாம் வினைவலியினாலே வந்து எல்லாம் சம்பவித்தது என்று கூறுகின்றார்.)

நகரமாந்தரின் வேண்டுகோள்

ஆருயிரின் தாயே அறத்தின் பெருந்தவமே
பேரருளின் கண்ணே பெருமானே - பாரிடத்தை
யார்காக்கப் போவதுநீ யாங்கொன்றார் தங்கண்ணின்
நீர்வார்த்துக் கால்கழுவா நின்று. 233

     நளனும் தமயந்தியும் குழந்தைகளுடன் அரண்மனையை விட்டு வெளியேறிச் சென்று கொண்டிருந்த அந்தக் கொடுமையைக் கண்டதும், மாவிந்த நகரத்து மக்கள் கலங்கினார்கள். நளனிடம் வந்து, தம் கண்களிலே வழிந்தோடுகின்ற கண்ணீரினை வார்த்து அவன் கால்களைக் கழுவியவராக நின்று, சொல்லலானார்கள்: “இந் நகரத்து அரிய உயிர்த் தொகைகட்கெல்லாம் தாய்போல விளங்கியவனே! பேரருள் கொண்ட கண் போன்றவனே! பெருமானே! இந் நிலப் பகுதியினை யாரினைக் காவல் புரியுமாறு விட்டு விட்டு, நீ எவ்விடத்துக்குப் போகின்றாயோ?” என்று வருந்திப் புலம்பினார்கள்.

அழிவரோ செங்கோலவர்!

வேலை கரையிழந்தால் வேத நெறிபிறழ்ந்தால்
ஞாலம் முழுதும் நடுவிழந்தால் - சீலம்
ஒழிவரோ செம்மை உரைதிறம்பாச் செய்கை
அழிவரோ செங்கோ லவர். 234

     கடல்கள் தம் கரையினை இழந்து போயினவாகி மேலேறிக் கரை கடந்தாலும், வேதமானது தன் சத்திய நெறியினின்று பிறழ்ந்து போயினாலும், உலகம் முழுவதுமே நடுநிலைமை இழந்து போயினதானாலும், செவ்வையான ஆட்சி நடாத்துகின்றோரான நின் போன்றவர், தம் நல்லொழுக்கத்தினின்றும் நீங்குவார்களோ? அன்றிச் செம்மையான தம் பேச்சினின்றும் மாறாத தம் செய்கையினின்றும் அழிந்து போவார்களோ/ போகார்களே! (அங்ஙனமாகவும் இங்ஙனம் நிகழ்ந்ததுதான் என்னவோ? இவ்வாறு மனம் நொந்து கூறினர் மக்கள்.)

நாளை எழுந்தருள்க!

வாயேறு கூரிலைவேன் மன்னாவோ உன்றன்
அடியேங்கட் காதரவு தீரக்- கொடிநகரில்
இன்றிருந்து நாளை எழுந்தருள்க என்றுரைத்தார்
வென்றிருந்த தோளான்றாள் வீழ்ந்து. 235

     வெற்றி நிலைபெற்றிருந்த தோட்களையுடைய நளனின் பாதங்களிலே வீழ்ந்து, “வடித்த ஏறு போன்ற கூர்மையான இலைப் பகுதியினையுடைய வேலினைக் கைக்கொண்டிருக்கும் மன்னவனே! உன்னுடைய அடியவராகிய எங்கட்கு ஆதரவு தீருமாறு, கொடிகள் பறக்கும் இந்த நகரத்திலே இன்று மட்டுமாயினும் தங்கியிருந்து நாளைக்கு உம் விருப்பம் போலப் புறப்பட்டுப் போவீராக” என்று வேண்டினார்கள். (கொடி நகர் என்பதனை ‘கொடி இ நகர்’ எனப் பிரித்துக், ‘கொடுமையான இந்த நகரிலே’ எனவும் பொருள் கொள்வர்.)

இன்று இங்கு இருத்துமோ?

மன்றலிளங் கோதை முகநோக்கி மாநகர்வாய்
நின்றுருகு வார்கண்ணி னீர்நோக்கி- இன்றிங்
கிருத்துமோ வென்றா னிளங்குதலை வாயாள்
வருத்தமோ தன்மனத்தில் வைத்து. 236

     பெரியதான மாவிந்த நகரத்தின் வாயிலிலே நின்று அங்ஙனம் உருகிப் புலம்பியவர்களின் கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர்ப் பெருக்கினை நளன் பார்த்தான். மணம் கொண்ட இளைய கோதையாளான தமயந்தியின் முகத்தை நோக்கினான். இளையதான மழலை விளங்கும் வாயினளான அவளுடைய வருத்தத்தைத் தன் மனத்திலே வைத்தோ, யாதோ, ‘இன்று இவ்விடத்தே தங்கி இருப்போமா?’ என்றும் அவளைக் கேட்டான்.

கொண்டாடினாரைக் கொல்

வண்டாடும் தார்நளனை மாநகரில் யாரேனும்
கொண்டாடி னார்தம்மைக் கொல்லென்று - தண்டா
முரசறைவா யாங்கென்றான் முன்னே முனிந்தாங்
கரசறியா வேந்த னழன்று. 237

     (இவ்வாறு நளனின் நிலைமையிருக்கையில், அவ்விடத்தே, அரசநெறியின் பண்பினையே அறியாதவனாகிய புட்கரன் என்பவன், தன் ஏவலர் முன்பாகச் சினங்கொண்டவனாகிக் கொதித்தெழுந்து, “வண்டுகள் களித்தாடும் தாரினையுடைய நளனை மாநகரிலே யாரேனும் உபசரித்துப் போற்றினார்கள் என்றால், அவர்களைக் கொன்று விடுக” என்று, ஓயாத முரசினை எங்கும் அறைவாய்” என ஏவலரை ஏவினான். (‘முன்னே முனிந்து’ என்பதனை, முதலிலேயே நளன்பாற் பகை கொண்டு முனிந்து வந்த புட்கரன், இப்போது அழன்று ஆணையிட்டான் எனக் கூட்டியும் பொருள் கொள்வர்.)

என்னால் வந்தது!

அறையும் பறையரவங் கேட்டழிந்து நைந்து
பிறைநுதலாள் பேதைமையை நோக்கி - முறுவலியா
இந்நகர்க்கீ தென்பொருட்டா வந்ததென உரைத்தான்
மன்னகற்றும் கூரிலைவேன் மன். 238

     தன்னுடனே மாறுபாடு கொண்ட மன்னவரின் உயிரினைப் போக்கும் கூர்மையான இலையினையுடைய வேலினை ஏந்திய நளமன்னன், அங்ஙனமாக அறைந்த பறையொலியினைக் கேட்டான். தன் நெஞ்சம் அழிந்து சோர்ந்து பிறையனைய நெற்றியுடையாளான தமயந்தியின் பேதைமையினைக் கண்டு இளமுறுவல் செய்தவாறே. ‘இந்த நகரத்திற்கு இத்தகையதோர் கொடுமை என் காரணமாகவே வந்தடைய நேரிட்டது’ என்று வருத்தத்துடன் சொன்னான்.

வாயில் கடந்தான்

தன்வாயில் மென்மொழியே தாங்கினான் ஓங்குநகர்ப்
பொன்வாயில் பின்னாகப் போயினான் - முன்னாளில்
பூமகளைப் பாரினொடு புல்லினான் தன்மகனைக்
கோமகளைத் தேவியொடுங் கொண்டு. 239

     முற்காலத்திலே மலர்மகளை நிலமகளோடும் தழுவியிருந்தோனாகிய நளமன்னன், தன் குமாரனையும், தன் மகளான அரசகுமாரியையும், மனைவியான தமயந்தியினோடும் அழைத்துக் கொண்டவனாகத் தன்னுடைய வாக்கிலே அப்போதும் மென்மையான சொற்களையே தாங்கியவனாக, உயர்ந்த நகரத்தின் பொன்னாலிழைத்த கோட்டைவாயில் பிற்படுமாறு, அதனைக் கடந்தும் வெளியேறிப் போவானாயினான். (மக்களுக்கு இதமான வார்த்தைகளைச் சொல்லி அமைதிப்படுத்திவிட்டு, நளன், மனைவி மக்களுடன் நகரை விட்டு வெளியேறினான் என்பது கருத்து.)

இரவு படுமாபோல்

கொற்றவன்பாற் செல்வாரைக் கொல்வான் முரசறைந்து
வெற்றியொடு புட்கரனும் வீற்றிருப்ப - முற்றும்
இழவு படுமாபோல் இல்லங்க டோறும்
குழவிபா லுண்டிலவே கொண்டு. 240

     வெற்றி வேந்தனாகிய நளனிடத்தே செல்பவரைக் கொல்லும்படியாக முரசறையச் செய்து, அவனைக் கவறாடலில் வெற்றிக் கொண்ட அந்த வெற்றிச் செருக்குடனே புட்கரனும் வீற்றிருந்தான். ஆனால், அந்த நகரம் முழுவதுமோ, வீடெலாம் இழவுபட்ட விதத்தைப் போன்றதாகி ஒளியிழந்து கிடந்தது; வீடுகள் தோறும் குழந்தைகள் கூடத் தாயாரின் மார்பைப் பற்றிக் கொண்டும், பால் உண்ணாவாய்ச் சோர்ந்திருந்தன. (புட்கரனின் வெற்றிப் பெருமிதத்தை இகழ்ந்து உரைத்தது இது.)

கடந்தோமா எந்தாய்?

சந்தக் கழற்றா மரையுஞ் சதங்கையணி
பைந்தளிரு நோவப் பதைத்துருகி - எந்தாய்
வடந்தோய் களிற்றாய் வழியான தெல்லாம்
கடந்தோமோ வென்றார் கலுழ்ந்து. 241

     அழகான வீரக்கழல் அணிந்து தாமரைபோன்ற பாதங்களையுடைய நளனின் குமாரனும், பாதசரம் அணிந்த பசுமையான தளிரைப் போன்ற பாதத்தாளான நளனின் குமாரியும், தம் பாதங்கள் நோவுதலினாலே தவித்து மனத்தளர்ச்சி கொண்டனர். “எம் தந்தையே! வடம் தோய்ந்திருக்கும் களிற்றினை உடையவனே! நாம் போவதற்குரிய வழியானது அனைத்தையும் கடந்து விட்டோமோ?” என்று கலங்கியவராகக் கேட்டனர். ( ‘எந்தாய்’ எனத் தந்தையை விளித்ததாகவும் கொண்டு, பெற்றோர் இருவரையும் கேட்டதாகவும் உரைக்கலாம்.)

நளனின் துயரம்

தூயதன் மக்கள் துயர்நோக்கிச் சூழ்கின்ற
மாய விதியின் வலிநோக்கி - யாதும்
தெரியாது சித்திரம்போல் நின்றிட்டான் செம்மை
புரிவான் துயரால் புலர்ந்து. 242

     செம்மையானவைகளையே செய்கின்ற இயல்புடையோனாகிய நளமன்னன், அவ்வாறு கேட்ட தன்னுடைய மக்களின் துயரத்தைக் கண்டான். தன்னை வந்து சூழ்கின்ற வஞ்சம் பொருந்திய விதியின் வலிமையையும் நோக்கினான். துயரத்தினாலே வாட்டமுற்று, யாதும் சொல்லவோ செய்யவோ தோன்றாமல், செயலற்ற ஒரு சித்திரத்தைப் போலச், செய்வதறியாதே மயங்கி நின்றுவிட்டான்.

7. சிதறிய குடும்பம்

வீமன் நகருக்குச் செல்க

காதல் இருவரையும் கொண்டு கடுஞ்சுரம்போக்
கேத முடைத்திவரைக் கொண்டுநீ - மாதராய்
வீமன் திருநகர்க்கே மீளென்றான் விண்ணவர்முன்
தாமம் புனைந்தாளைத் தான். 243

     வானவராகிய இந்திரன் முதலியோரின் முன்னிலையிலே, அவர்களை விலக்கித் தனக்கு மணமாலை சூட்டித் தன்னை மணந்து கொண்ட தமயந்தியை நோக்கி, “அழகுடையாளே! நம் அன்பிற்கு உரியவராகிய நம் மக்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு, கடுமையான பாலை வழியிலே செல்வது மிகத் துன்பம் உடையதாகும். அதனால் நம் மக்களாகிய இவரை இட்டுக் கொண்டு, நீ வீமராசனின் சிறந்து நகருக்குச் செல்வாயாக” என்றான். (தான் : அசை மாதராய் - அழகுள்ளவளே; என்றது தமயந்தியை, தாமம் - மணமாலை)

காதலனைப் பெறலாமோ?

குற்றமில் காட்சிக் குதலைவாய் மைந்தரையும்
பெற்றுக் கொளலாம் பெறலாமோ - கொற்றவனே
கோக்கா தலனைக் குலமகளுக் கென்றுரைத்தாள்
நோக்கான் மழைபொழியா நொந்து. 244

     நளன் அங்ஙனமாகச் சொல்லவும், அதனைக் கேட்ட தமயந்தியானவள், கண்களாலே கண்ணீராகிய மழையினைப் பொழிபவளானாள். மனம் நொந்தவளாக, “கொற்றவனே! நற்குலத்திலே பிறந்த ஒரு பெண்ணுக்குப் பழுதில்லாத தோற்றமுள்ள மதலைவாயினரான மைந்தர்களையும் பெற்றுக் கொள்ளலாம்; ஆயின் சிறந்த காதலனைப் பெற்றுக் கொள்ளக் கூடுமோ?” என்று சொன்னாள். (தான் நளனை விட்டுப் பிரிய விரும்பவில்லை என்பதைத் தமயந்தி இங்ஙனம் கூறுகின்றாள். அவனோடேயே தான் வருவதாகவும், குழந்தைகளை அதற்காகப் பிரிவதற்குக் கூடத் தான் இசைவதாகவும் தமயந்தி கூறினதாகவும் கொள்க.)

மகப்பெறா மானிடர்கள்

கைதவந்தான் நீக்கிக் கருத்திற் கறையகற்றிச்
செய்தவந்தான் எத்தனையும் செய்தாலும் - மைதீர்
மகப்பெறா மானிடர்கள் வானவர் தம் மூர்க்குப்
புகப்பெறார் மாதராய் போந்து. 245

     “தமயந்தி! உள்ளத்திலே வஞ்சத்தை விட்டுக், கருமத்திலே படர்ந்துள்ள குற்றத்தை நீக்கி, எத்தனை செய்தற்கரிய தவத்தைச் செய்தாலும், பாவத்தைத் தீர்க்கும்படியான மக்களைப் பெறாத மானிடர்கள், தேவர்களுடைய ஊராகிய சுவர்க்கத்திலே சென்று புகவே மாட்டார்கள். (தமயந்தி, ‘குழந்தைகளையேனும் பெற்றுக் கொள்ளலாம்’ என்று சொல்ல, நளன் ‘குழந்தைகளைப் பெறாதவர்க்குச் சுவர்க்க போகம் கிடையா’தென்று கூறுகின்றான். அவர்களைப் பிரிவதற்கியலாது அவன் மனம் கொள்ளுகின்ற வேதனைமிகுதியும் இதனாற் புலப்படும்.)

என்னுடையரேனும் உளரோ?

பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனும் உடையரோ - இன்னடிசில்
புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய்
மக்களையிங் கில்லா தவர். 246

     “இனிதான உணவிலே கைவிட்டு அளைகின்ற தாமரைப் பூப்போன்ற கைகளையும், மணம்நாறும் சிவந்த வாயினையும் கொண்ட மக்களை இவ்விடத்தே அடையப் பெறாதவர், பிற செல்வங்களை உடையவர்களேயானாலும், கீர்த்தியை உடையவர்களேயானாலும், மற்றும் என்னென்ன வசதிகளையும் உடையவர்களேயானாலும் அவர்கள் ஏதேனும் உடையவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் ஆவார்களோ?” (இதுவும் நளன் சொல்வது. இவ்வுலகிலே மக்கட் செல்வம் ஒன்றே செல்வமாகக் கருதிப் பேணுவதற்கு உரியதென்று நளன் அதன் சிறப்பினை மேலும் வற்புறுத்திச் சொல்லுகின்றான்.)

என்ன பயன்?

சொன்ன கலையின் துறையனைத்தும் தோய்ந்தாலும்
என்ன பயனுடைத்தாம் இன்முகத்து - முன்னம்
குறுகுதலைக் கிண்கிணிக்காற் கோமக்கள் பால்வாய்ச்
சிறுகுதலை கேளாச் செவி. 247

     “இனிமையான முகத்து எதிரிலே குறுகின தலைப்பக்கங்களையுடையவரும், சதங்கை அணிந்த பாதங்களுள்ளவருமான சிறந்த மக்களின் பால்வடியும் வாயினிடத்துச் சிறுகச் சிறுகப் பிறக்கும் மழலை சொற்களைக் கேட்டு, அந்த இன்பத்தை அநுபவியாத காதுகள், ஆன்றோராற் சொல்லப்பட்ட கலைகளின் பகுதிகள் அனைத்திலும் படிந்தனவே யானாலும், அதனால் என்ன பயனை உடையதாம்? (எத்துணைக் கல்வி கற்றாலும், குழந்தைகளின் மழலைப் பேச்சைக் கேட்டின்புறாத செவிகளாற் பயனில்லை என்பதாம். ‘குழலினிது யாழினிது என்ப தம்மக்கள் மழலை சொற் கேளாதவர்’ என்னும் குறட்பாவும் இங்கே நினைத்தற்கு உரியதாம்.)

என் பதிலுக்குப் போந்தருள்க

போற்றரிய செல்வம் புனனாட் டொடும்போகத்
தோற்றமையும் யாவர்க்குந் தோற்றாதே - ஆற்றலாய்
எம்பதிக்கே போந்தருளு கென்றா ளெழிற்கமலச்
செம்பதிக்கே வீற்றிருந்த தேன். 248

     மக்கட் செல்வமே சிறந்த செல்வமென்று நளன் இவ்வாறு எடுத்துச் சொல்லவும், அதனைக் கேட்ட அழகான தாமரை மலராகிய செவ்விய இடத்திலே தங்கியிருக்கும் தேன்போன்ற சிறந்த சொல்லினிமையினை உடைய தமயந்தியானவள், “ஆற்றல் உடையவனே! போற்றுவதற்கும் அரியதான நம் செல்வம் எல்லாம் நீர் வளமுள்ள நம் நாட்டோடும் போய்விடும்படியாக நீ சூதிலே தோற்றமையும் எவர்க்கும் தோற்றாதேயே, எங்கள் நகருக்கே, எம்மோடு நீயும் எழுந்தருள்வாயாக” என்றாள். (காட்டிற்குப் போவதாக நளன் சொல்லவும், தமயந்தி, தன் தந்தையின் ஊருக்கே போகலாமென வேண்டுகின்றாள். ‘சூதில் தோற்றது தோன்றாமல்’ என்றது அதனால் வந்துற்ற இழிவுகள் எவையும் தோற்றாதபடியாக என்க.)

மானம் துடைக்கும் வாள்

சினக்கதிர்வேற் கண்மடவாய் செல்வர்பாற் சென்றீ
எனக்கென்னு மிம்மாற்றங் கண்டாய் - தனக்குரிய
தானந் துடைததுத் தருமத்தை வேர்பறித்து
மானந் துடைப்பதோர் வாள். 249

     “சினம் ஒளிறும் வேல்போன்ற கண்களை உடையவளே! செல்வம் உடையவர்களிடத்தே சென்று எதனையாவது தருவீராக என்று இரந்து நிற்பது போன்றது நீ சொல்லும் இந்தச் சொற்கள் என்று அறிவாயாக. தனக்குரியதான சிறந்த இடத்தையும் அழித்துத் தரும நெறியினையும் வேரோடு பிடுங்கி, மானத்தையும் அழிக்கவல்லதாகிய ஒரு வாளினைப் போன்ற கொடிய செயலுமாகும் அது. அதனால், அதனை யான் மேற்கொள்ளேன்” என்கிறான் நளன். (‘மனைவியுடன் அவள் வீட்டிற்கு சென்று இருப்பது, தன்னுடைய தகுதிக்கு இழுக்கானதாகும்’ என்று, இப்படி அவள் முடிவினை மறுத்து உரைக்கின்றான் நளன்.)

பேடிகள்! பித்தர்!

மன்னராய் மன்னர் தமையடைந்து வாழ்வெய்தி
இன்னமுதம் தேக்கி யிருப்பாரேல் - சொன்ன
பெரும்பே டிகளலரேற் பித்தரே யன்றோ
வரும்பேடை மானே யவர். 250

     “அருமையான பெண்மான் போன்றவளே! மன்னவராயிருந்தும், தாம் வேறொரு மன்னரைச் சார்ந்திருந்து, அதனால் நல்வாழ்வினை அடைந்து, இனிதான உணவினை உண்டு வாழ்ந்திருப்பாரானால், அத்தகைய மன்னவர்கள், பெரியோர் சொன்ன பெரும் பேடிகளேயாவர்; பேடிகள் அல்லாரேல், அவர்கள் பைத்தியக்காரர்கள் ஆவதும் உண்மையல்லவோ? (தேக்கி - நிறைய வயிற்றை நிரப்பி, பேடு - ஆண் பெண் அற்ற அலி நிலையினர். பிறரைச் சார்ந்து வாழ்பவர் பேடிகள் அல்லது பைத்தியக்காரர்கள் அல்லரோ? அங்ஙனமாகவும் யான் எப்படி இசைவேன்? என்கிறான் நளன்.)


நளவெண்பா : 1    2    3    4    5    6    7    8    9