(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)

12

     செவந்தியாபுரம் தொழிலாளர் குடிகள், முப்பதாண்டுகளுக்கு முன்னர், 'பனஞ்சோலை அளம்' என்று இந்நாள் திக்கெட்டுமாக விரிந்து கரிப்பு மணிகளை விளைவிக்கும் சாம்ராஜ்யமாவதற்கு முன்பே உருவானவை. பெரிய முதலாளி வாலிபமாக இருந்த காலத்தில் சிறு அளக்காரராக அங்கு தொழில் செய்யப் புகுந்த போது, முதன் முதலில் குடிசை கட்டிக் கொண்டு அங்கு குடியேறிய சின்னானின் குடும்பமும், அவனை ஒட்டிக் கொண்டு அங்கு பிழைக்க வந்தவர்களும் தான் அந்தக் குடிசைகளுக்கு இன்றும் உரியவர்களாக இருக்கின்றனர். கிணற்றிலிருந்து மனிதன் நீரிறைத்த நாள் போய் இயந்திரம் இயங்கத் தொடங்கியதும் உப்பளங்கள் பெருக, மலைமலையாக வெண்ணிறக் குவைகள் கடற்கரைகளை அலங்கரிக்கலாயின. பெரிய முதலாளியின் கடைசி மகன், மருத்துவம் படிக்கையில் லில்லியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். பிறகு தான் துரை அளம் என்ற சிறு துண்டு தனியாகப் பிரிந்து, ஏஜெண்ட் காத்தமுத்துவின் ஆளுகைக்குள் வந்தது. டாக்டர் முதலாளிக்கு இந்த அளத்தைப் பற்றி லட்சியம் ஏதும் கிடையாது. நூறு ஏக்கர் பரப்பில் வேலை செய்யும் ஐம்பது தொழிலாளிகளுக்கும் மாசம் சம்பளம் என்று அறுபது ரூபாயும், நாளொன்றுக்கு அரை கிலோ அரிசியும் வழங்க அவர் ஏற்பாடு செய்திருந்தார். தட்டுமேட்டில் உப்புக்குவைகளுக்குப் போட்ட கீற்றுக்கள் இவர்களுடைய குடில்களுக்குச் செப்பனிடக் கிடைக்கும். சீக்கு, பிள்ளைப் பேறென்றால் துரையின் ஆஸ்பத்திரியில் இலவச சிகிச்சை கிடைக்கும். சொல்லப் போனால் டாக்டர் முதலாளி இந்தப் பக்கமே வந்ததில்லை. ஏஜண்ட் காத்தமுத்துவின் அதிகாரத்தில் தான் அங்கே நிர்வாகம் நடந்தது. துரையின் மாமியார் டெய்சி அம்மாள் அங்கு மாதம் ஓர் முறை சாமியாரைக் கூட்டிக் கொண்டு வருவாள். ஜபக்கூடம் ஒன்று மூலையில் உருவாக்குவதற்கான திட்டம் போட்டிருந்தார்கள்.

     ராமசாமி அந்தநாள் தந்தை அங்கே வேலை செய்ய வந்த காலத்திலிருந்து இருந்த குடிசையில்தான் தாயுடன் வசிக்கிறான். அன்னக்கிளி, மாரியம்மா, மாசாணம் ஆகியோரும் அளம் பிரிந்த பின் அங்கே வேலை செய்யப் போனாலும் இந்தக் குடிசைகளிலிருந்தே செல்கின்றனர். ராமசாமி தொழிலாளரிடையே புதிய விழிப்பைக் கொண்டு வர சங்கம் இயக்கம் என்று ஈடுபடுவதைக் காத்தமுத்து அறிந்தான். அவன் தந்தையின் வரலாறு எல்லோருக்கும் தெரியும்.

     அந்த ஞாயிற்றுக் கிழமை அவன் காலையில் கிளம்பு முன் ஏஜண்டின் நீலக்கார் உள்ளே வருவதைப் பார்க்கிறான். சற்றைக்கெல்லாம் முனியண்ணன் மகன் ஓடிவந்து, "அண்ணாச்சி, ஒங்களை ஏஜண்ட் ஐயா கூப்பிடுதாவ...!" என்று அறிவிக்கிறான். ஏஜண்ட் காத்தமுத்து ஒரு மாமிச பர்வதம் போல் உப்பியிருக்கிறான். பெரிய புஸ்தி மீசை கன்னங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. தங்கப் பட்டை கடியாரம்; விரல்களில் பெரிய பெரிய மோதிரங்கள்...

     "கூப்பிட்டீங்களா, சார்?"

     "ஆமாலே. ஒன்னப் பார்க்கவே முடியறதில்ல. வூட்டக் காலி பண்ணணும், அந்த எடம் வேண்டியிருக்கு. டாக்டரம்மா போன மாசமே சொன்னாவ..."

     ராமசாமி திகைத்துப் போகிறான்.

     "எல்லாரும் காலி பண்ணணுமா?"

     "ஜபக்கூடம் கட்டணுமின்னு பிளான் போட்டிருக்காவ. நீ இந்த அளத்துக்காரனில்ல. இந்த அளத்துக்காரவுக கொஞ்சந்தா, வேற எடம் ஒதுக்குவாக. ஏதோ அந்த நாள்ளேந்து இருந்திய, ஒண்ணும் சொல்லாம இருந்தம்... இப்ப எடம் தேவைப்படுது."

     "இப்ப திடீர்னு காலி பண்ணனுன்னா எங்கே போவ? எடம் பார்க்கணுமில்ல? கொஞ்சம் டயம் குடுங்க..."

     "ஒன்ன ஆளக்காணவே முடியல. சங்கம் அது இதுண்ணு போயிடற, மின்ன சொல்லலன்னா ஏந் தப்பா? ஒரு வாரம் டயம் தார. காலி பண்ணிப்போடு!"

     ஏஜண்ட் கூறி ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்டது. அவன் வேறு இடம் பார்க்க முனையவில்லை. தொழிற் சங்க ஈடுபாடு அதிகமாக, பல பிரச்னைகளிலும் தலைக் கொடுத்துக் கொண்டிருந்தான். பகல் நேரங்களில் பொன்னாச்சியையும் தம்பியையும் பார்க்கும் போது மனசு துடிக்கும். மாலையில் அவர்கள் வீடு திரும்புவதையும் அவனால் கண்காணிக்காமல் இருக்க முடியவில்லை. நாச்சப்பனைப் பார்க்குந்தோறும் அவன் உள்ளத்தில் வெறுப்பு குமைய மீசை துடிக்கும்.

     உப்பளத்து ஈரங்களை வற்றச் செய்யும் காற்று அந்த மக்களின் செவிகளிலும் சில பல சொற்களைப் பரப்புகின்றன.

     பனஞ்சோலை அளமும், துரை அளமும் ஒவ்வோர் வகையில் அந்தச் சொற்களை, செய்திகளை உள்ளே அநுமதிக்காத கற்கோட்டைகளாக இருக்கலாம். அந்தக் கற்கோட்டைகள், பஞ்சைத் தொழிலாளரின் அத்தியாவசியத் தேவைகளையும், இவர்களுடைய அட்வான்சு, சீலை போனசு, என்பன போன்ற வண்மைப் பூச்சையும் குழைத்துக் கட்டியவை. இந்தச் சாந்துதான் இங்கே பலமாக நிற்கிறது.

     ஏனைய அளங்களில் வறுமைத் தேவையுடன் கூலிக்காக என்ற வெறும் நீரைச் சேர்த்து எழுப்பும் மதில்கள் இடைவிடாத அரிப்புக்கு இடம் கொடுக்கின்றன. அவ்வப்போது வேலை நிறுத்தம், தடியடி பூசல் அங்கெல்லாம் நிகழ்ந்தாலும் இங்கு அவை எட்டிப் பார்ப்பதில்லை. நிர்ணயக்கூலி ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமில்லை என்றாலும் ஓரளவு அங்கெல்லாம் நிர்ணயக்கூலி நடைமுறைக்கு வந்திருக்கிறது. இங்கோ முதலாளி கணக்கில் நாள் கணக்கு நிர்ணயக்கூலி, மாசச் சம்பளம் என்று பெறுபவர் சொற்பமானவர். பெரும்பாலான தொழிலாளர், காண்ட்ராக்ட் என்ற முறையில் நிர்ணயக் கூலிக்கும் குறைவான கூலிக்கு அடிமைப்படுத்தப் பெற்றிருக்கின்றனர்.

     "பனஞ்சோலை அளத் தொழிலாளரே! ஒன்று சேருங்கள்! எட்டுமணி நேர வேலைக்கேற்ற ஊதியம்... பதிவு பெறும் உரிமை, வாராந்திர ஓய்வு நாளைய ஊதியம் - இவை அனைத்தும் உங்கள் உரிமை! தாய்மார்களே! உங்கள் சக்தியைச் சிதற விடாதீர்கள்! ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான கூலி..." என்பன போன்ற வாசகங்கள் அச்சிடப் பெற்ற துண்டுப் பிரசுரங்கள் எங்கிருந்து பிறந்தது எப்படி வந்ததென்று புலப்படாமல் தொழிலாளரின் உள்ளுணர்வைச் சீண்டி விடுகின்றன.

     ஒவ்வொரு அளத்திலும் துடிக்கும் இளம் ரத்தத்துக்குரியவர்களைக் கண்டு பிடித்துத் துணைவர்களாக்கிக் கொள்ள ராமசாமி முயன்று கொண்டிருக்கிறான். பனஞ்சோலை அளத்துக் கற்கோட்டையைத் தகர்த்துவிட அவர்கள் திடங்கொண்டு உழைக்கின்றனர்.

     அந்நாள், சனிக்கிழமை, ராமசாமி பதினெட்டாம் நம்பர் பாத்தியை 'டிகிரி' பார்த்துக் கொண்டிருக்கிறான். அப்போது விரைவாகக் கணக்கப்பிள்ளை தங்கராசு வருகிறான். அவன் வகையில்தான் ராமசாமிக்குச் சம்பளம். "ஏலே, ராமசாமி!... மொதலாளி ஒன்னக் கூப்பிடுறா..."

     ராமசாமி நிமிர்ந்து பார்க்கிறான். விழிகள் ஒரு கேள்விக் குறியாக நிலைக்கின்றன. முதலாளி அவனைக் கூப்பிடுகிறாரா? எதற்கு? முதலாளிகள் எப்போதும் தொழிலாளியை நேராகப் பார்த்து எதுவும் பேசமாட்டார்களே?

     அந்நாள் சண்முகக் கங்காணி ராமசாமியைச் சிறு பையனாக உப்புக் கொட்டடியில் வேலைக்குக் கொண்டு வந்து சேர்க்கையில் அளத்தில் இவ்வளவு சாலைகளும், கட்டிடங்களும் கிடையாது. அவன் வேலைக்குச் சேர்ந்து பல நாட்கள் சென்ற பின் ஒரு நாள் அறவைக் கொட்டடி வாயிலில் ஒரு பெரிய மனிதர் சந்தனப் பொட்டும் குங்குமமுமாக வந்து பலர் சூழ நின்றிருந்தார். அவனைக் கங்காணி கூட்டிச் சென்று அவர் முன் நிறுத்தினார்.

     "இவனா?..." என்று கேட்பது போல் அவர் கண்கள் அவன் மீது பதிந்தன.

     "என்ன கூலி குடுக்கிறிய?" என்று வினவினார்.

     "ஒண்ணே கா ரூவாதா..." என்று கங்காணி அறிவித்தார்.

     "தொழி வெட்டிக்குடுக்க காவாய் கசடு எடுக்கன்னு போட்டுக்க. ரெண்டு ரூபாய் குடு..." என்றார்.

     அப்போதுதான் அவர் பெரிய முதலாளி என்றறிந்தான். அந்நாளில் தனக்கு மட்டும் அந்தப் பெரியவரின் ஆதரவு கிடைத்திருக்கிறதென்று அவன் மகிழ்ச்சி கொண்டான். மற்றவர்களிடையே கர்வமாக நடந்தான். தொழியில் அவ்வப்போது நீர் பாய மடை திறந்து விடுவது அடைப்பது, அலுவலகத்தில் எப்போதேனும் யாரேனும் வந்தால் சைக்கிளை மிதித்துக் கொண்டு போய் சோடா வாங்கி வருவது போன்ற வேலைகளுக்கு அவன் உயர்ந்தான். 'ஐட்ரா' பிடிக்க அவன் உயர்ந்த போது கூட முதலாளியைப் பார்க்கவில்லை. முதலாளிக்கு வயதாகி விட்டது. அவர் படுக்கையில் விழுந்து விட்டார். அளத்துக்குள் அவர்கள் எழுப்பியிருக்கும் கோயிலில் எப்போதேனும் சிறப்பு நாள் வரும் போது அவர் வருவார். கைலாகு கொடுத்து அழைத்து வந்து அவரைச் சந்நிதியில் அமர்த்துவார்கள். பெரிய முதலாளியின் தொடர்பு அவ்வளவே.

     ஆனால் அவருடைய வாரிசான மக்களில் ஒருவன் தான் இந்த அளத்தை நிர்வாகம் செய்கிறான். அவன் தான் இங்கே அதிகமாக வந்து தங்கி மேற்பார்வை செய்கிறான். முதலாளியின் மற்ற மைந்தர்களுக்கும் இவனுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. இவன் மற்ற செல்வர் மக்களைப் போல் தோற்றத்தில் ஆடம்பரம் காட்டமாட்டான். கைகளில் மோதிரங்கள், தங்கச்சங்கிலி, உயர்ந்த உடை, செண்ட் மணம், நாகரிகப் பெண்கள் என்ற இசைவுகளை இவன் காரை ஓட்டிக் கொண்டு வரும்போதோ, ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வரும் போதோ காண இயலாது. சாதாரணமாக ஒரு சராயும் சட்டையும் அணிந்திருப்பான். தலைமுடி சீராக வெட்டி, அரும்பு மீசையுடன் காட்சியளிப்பான்.

     அவனுடைய வண்டி உள்ளே நுழையும் போதோ, அவனிடம் மற்றவர் பேசும் போதோதான் அவனை முதலாளி என்று கண்டு கொள்ள வேண்டும். அவன் தோற்றத்துக்கு எளியவனாக இருந்த போதிலும், அவனை எப்போதும் யாரும் அணுகிவிட இயலாது. கண்ட்ராக்ட், அல்லது கணக்குப் பிள்ளை மூலமாகத்தான் எதையும் கூற முடியும். அந்த முதலாளி தன்னை எதற்குக் கூப்பிடுகிறார் என்று அவன் ஐயுறுகிறான். காருக்கே மரியாதை காட்டுபவர்களும், அவர் வங்கி அதிகாரிகளை உப்புக் குவைகளின் பக்கம் அழைத்து வருகையில் கூனிக் குழைந்து குறுகுபவர்களும் நிறைந்த அந்தக் களத்தில் இவன் 'அவனும் மனிதன் தானே' என்று அலட்சியமாகச் சென்றிருக்கிறான். உப்புக் குவைகள் - அவர்கள் உழைப்பு. அவற்றை வங்கியில் அடமானம் வைத்து இவர்களுக்குக் கூலி கொடுக்கிறான். 'இவனுக்கா நஷ்டம்' என்று குமுறுவான்.

     அவனை இப்போது அந்த முதலாளி எதற்கு அழைக்கிறார்?

     விருந்துக் கொட்டகை முன்னறையில் அவர் உட்கார்ந்திருக்கிறார். அருகில் நாச்சப்பன் நிற்கிறான். முழுகாள் சோலையும் மூலையில் நிற்கிறான். அந்த நேரத்திலும் அவன் 'தண்ணீர்' போட்டிருக்கிறான். வாடை வீசுகிறது. தங்கராசு அங்கே வந்து ஒதுங்கி நிற்கிறான்.

     ராமசாமி அங்கே நின்று என்ன என்பதைப் போல நோக்குகிறான். கும்பிட்டு நிற்கவில்லை.

     "நீதான் ஹைட்ரா பாக்குறவனா?"

     ஆமாம் என்று அவன் தலையசைக்கிறான்.

     "பேரு?"

     இதுகூடத் தெரியாமலா கூப்பிட்டனுப்பினான்?

     "ராமசாமி..."

     "நீ எங்க வீடு வச்சிருக்கே?"

     இதற்கு அவன் பதில் கூறுமுன் தங்கராசு முந்திக் கொள்கிறான்.

     "அங்க, தொரை அளத்துலேந்து வாரான், சொன்னேனே?"

     "ஓ, மறந்து போனேன். உனக்கு மிசின் வேல தெரியின்னாங்க. பம்ப்செட்டு பாப்பியல்ல?"

     "பாக்கறது தான்..."

     "இங்கேயே கோயில் பக்கம் வீடு வச்சிட்டு இருந்திடு. காந்திநாதன் மிசின் பாக்கறான். அவனுக்கு ஒத்தாசையா நீயும் பம்ப்செட்டுகளைப் பார்த்து எண்ணெய் போடுவது போல வேலை செய்யிறே. இல்ல?"

     அவன் எதுவும் பேசாமல் தலையாட்டுகிறான்.

     "நீ இப்ப மாசச் சம்பளம் எவ்வளவு வாங்கறே?"

     "நூத்து முப்பத்தஞ்சு... இப்ப ஒரு மாசம் நூத்தம்பது குடுத்தா..."

     "சரி உனக்கு இருநூறாச் சம்பளம் உசத்தியிருக்கு. சம்மதம் தானே?"

     ராமசாமிக்குச் சில கணங்கள் பேச்சு வரவில்லை.

     இந்த முதலாளி சும்மாக் கிடப்பவனை வலிய அழைத்து, உனக்கு இங்கேயே வீடு வைத்துக் கொள், சம்பளம் ஐம்பது ரூபாய் போல் அதிகம் தருவதாக எதற்குச் சொல்கிறார்? தூண்டிலில் இருக்கும் புழுவை இழுக்க வரும் மீன் கூட அவ்வளவு எளிதில் பாய்ந்து விடாது. இது எதற்காக? இப்படி ஐம்பது ரூபாயை வீசி எறிந்து விட அவர்கள் முட்டாள்களில்லை. மனிதாபிமான ஈரமில்லாமல் அளத்துக்காரர்களிடம் வேலையை வாங்குகிறார்கள். பத்து பைசா அதிகம் கொடுத்து விட மாட்டார்கள். அதுவும் இந்த முதலாளி சீமைக்கெல்லாம் சென்று படித்தவர்.

     "ராத்திரியும் பொறுப்பாக வேலை பார்க்கணுமா?" என்று ராமசாமி ஒரு கேள்வியைப் போடுகிறான்.

     "அப்படியெல்லாமில்லை. ஏற்கெனவே சில பேருக்குக் கோயிலுக்குப் பக்கத்தில் வீடு வைத்துக் கொள்ளலாமின்னு சொல்லியிருக்கிறேன். நீயும் இங்கேயே இருந்தால் சவுகரியமா இருக்கலாம்னு சொன்னேன்..."

     "ரொம்ப சந்தோசம். எனக்கு மட்டும் இதெல்லாம் குடுக்கிறீங்க. சொல்லப் போனா எனக்கு ரொம்பக் கஷ்டமில்ல. என்னக் காட்டிலும் கஷ்டப்படுறவங்கதா அதிகம். கண்ட்ராக்ட் கூலிங்க அஞ்சாறு கல்லுக்கப்பால இருந்து வரா. இத, நாச்சியப்பன் கூலிக்காரங்க தூத்துக்குடி டவுனுக்குள்ளாறேலேந்து வராவ. அவியளவிட எனக்கு என்ன கஷ்டம்?"

     "கண்ட்ராக்ட்காரங்க சமாசாரம் வேற, அதப்பத்தி நீ ஏன் பேசறே? மாசச் சம்பளம் வாங்குறவங்களுக்குச் சில சலுகை கொடுக்கலான்னு தீர்மானிச்சிருக்கிறேன். அதில நீயும் வாரே, அதான் கூப்பிட்டுச் சொன்னேன்..."

     "இப்ப எங்களக்கூட அங்க காலி பண்ணிச் சொல்லியிருக்கா. ஏஜண்டு, ஜபக்கூடம் எடுக்கப் போறாங்க, அந்த எடத்தில, காலி பண்ணணும்னு சொல்லி மாசமாகப் போவுது. நா மட்டுமில்ல, இங்க அளத்துல புள்ள பெத்துதே ஒரு பொம்பிள, அவ கூடத்தா, நாலு புள்ளங்களியும் வச்சிட்டு எங்க போவா? எல்லாம் அங்கேந்து இவுக வந்துதா வேலை செய்யிறாவ, அவியளுக்கும் இங்கே குடிச போட எடம் தாரியளா?"

     முதலாளி தங்கராசுவைப் பார்க்கிறார்.

     "அந்தாளு கண்ட்ராட்டு கூலியில்ல...?"

     "கண்ட்ராட்டு... ஏனவிய கண்ட்ராட்டா இருக்கணும்? வருச வருசமா உதிரத்தைக் கொடுத்து உழய்க்கிறாங்க. கண்ட்ராட்டுனு வைக்கிறது சரியா?"

     "ஏலே, இது என்னன்னு நினைச்ச? மொதலாளியிட்டப் பேசுதே. மரியாதி தவற வேணாம்?" என்று நாச்சப்பன் எச்சரிக்கிறான்.

     ராமசாமி அவனை எரித்து விடுபவன் போல் பார்க்கிறான்.

     "நானும் முதலாளியும் பேசுகிறோம். எனக்குத் தெரியும். நீ ஏண்டா நடுவே வார, நாயே!"

     நாச்சப்பன் எதிரொலி காட்டிருந்தால் ராமசாமி ஒரு வேளை கோபம் தணிந்தவனாகி இருக்கலாம். அவன் வாய் திறக்கவில்லை. மௌனம் அங்கே திரை விரிக்கிறது. ஒவ்வொரு விநாடியும் கனத்தைச் சுமந்து கொண்டு நகர இயலாமல் தவிக்கிறது. ராமசாமியின் குமுறல் படாரென்று வெடிக்கிறது.

     "பாத்திக் காட்டுக்கு வர பொம்பிளயை மானம் குலைக்கும்... பன்னிப் பயல்...! ஒன் ஒடம்புல ரத்தமா ஓடுது? சாக்கடையில்ல ஓடுது? பொண்ணுவளத் தொட்டுக் குலைக்கும் ஒங்கையை ஒருநாள் நான் வெட்டிப் போடுவே!... முதலாளி! இவனை, இந்த நாய்ப்பயலை, இந்த அளத்தை விட்டு நீங்களே விரட்டலேன்னா ஒங்க பேரு கெட்டுப் போகும். இவனை நீங்க வெரட்டலே, இல்ல இங்க நடக்கிற அக்கிரமத்தைத் தடுக்கலேன்னா, நானே இந்தப் பயலை வெளியே தள்ளுவ ஒருநா."

     முதலாளி புன்னகை மாறாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நாச்சப்பன், தங்கராசு இருவருடைய முகங்களிலும் ஈயாடவில்லை. சோலையும் கூட எட்டி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறான்.

     பட்டாசு படபடவென்று வெடித்துவிட்டுத் தாற்காலிகமாகச் சிறிது ஓய்ந்தாற் போல் ஓர் அமைதி படிகிறது. சட்டென்று ராமசாமிக்குத் தான் அவமானத்துக்குள்ளாகி விட்டாற் போன்று ஓர் உணர்வு குறுக்குகிறது.

     முதலாளியானவன் ஒரு கைப்படுக்கையில் இன்னொரு கையை நிறுத்தி அதில் முகத்தை வைத்துக் கொண்டு அவனது கோபத்தை ரசிக்கும் பாவனையில் அமர்ந்திருக்கிறான்.

     "இவ்வளவுதானா, இன்னும் இருக்கிறதா?" என்ற பாவம் விழிகளில் விளங்குகிறது.

     "ஏம்ப்பா, இந்த அளத்தில் சோலை ஒருவன் தான் பட்டப் பகலில் குடிச்சிட்டு வருவான்னு நினைச்சிருந்தேன், இந்தாளும் சோலையைப் போல்னு தெரியிது. இவன இப்ப நீ கூட்டி வந்ததே சரியில்ல. சரி... நீ போப்பா... போ!"

     முதலாளி போகச் சொல்லி சாடை காட்டுகிறான்.

     அவன் இதழ்கள் துடிக்கின்றன.

     "ஸார், நான் நீங்க அவமானப்படுத்துவதற்குப் பொறுக்கிறேன். நான் குடிக்கிறவனில்லை. நான் ஒண்ணுக்கொண்ணு பேசல. என் புத்தி நல்லாகத்தானிருக்கு. நீங்க நாயமா, இங்க நடக்கிற அக்கிரமங்கள விசாரிக்கணும்னு நான் சொல்றேன். இங்கே பொண்டுவ, வாயில்லாப் பூச்சிகளாச் சீரளியிறா. இவனுக்கு எணங்கலேன்னா அவிய கூலியில மண்ணடிக்கிறா, நீங்க இங்க வேல செய்யிற பொம்பிளகளைக் கூட்டி விசாரிக்கணும்..." என்று அவன் உள்ளார்ந்து வரும் தாபத்துடன் கோருகிறான்.

     "சரிப்பா. நான் பேசுறேன். நீ இப்ப போ..." என்று முதலாளி மீண்டும் அந்தப் பழைய பாவம் மாறாமலே கையைக் காட்டுவது ராமசாமிக்குப் பொறுக்கக் கூடியதாகத் தானில்லை.

     "ஸார், இது ரொம்ப முட்டிப் போன வெவகாரம். நீங்கல்லாம் ரொம்பம் படிச்சவிய. நான் தொழிலாள் தா. ஆனாலும் எந்த அக்குரமும்..." அவனை மேல பேசவிடாமல் முதலாளி, "நான் கவனிக்கிறேன். போன்னு சொல்லிட்டேனில்ல போ. இப்ப உன் வேலையைப் பாரு?" என்று ஆணையிடுகிறார்.

     தோல்வி, அவமான உணர்வு நெஞ்சில் கடல் போல் பொங்கிச் சுருண்டு எழும்புகிறது. அவனால் விழுங்கிக் கொள்ள இயலவில்லை.

     "ஸார், தொழிலாளிகளை அவமானம் செய்யக் கூடாது ஸார். பொம்பிளயானாலும், ஆரானாலும்..."

     முதலாளியின் கோபம் அதிகமாகிவிட்டது. "ஏம்ப்பா, உன்னைப் போன்னு ஒருதரம் சொன்னேன், ரெண்டு தரம் சொன்னேன். சும்மா இங்கே வந்து வம்பு பண்ணாதே, குடிச்சிட்டு வந்து!"

     "ஸார், மரியாதையாப் பேசுங்க! குடிச்சிட்டு நான் வரல. அப்பேர்க்கொத்த ஆளு நானில்ல. நீங்க கூப்பிட்டனுப்பினீங்க. நான் வந்தேன். நீங்க மொதலாளியா யிருக்கலாம், நான் தொழில் செய்பவனாக இருக்கலாம். ஆனால் நானும் மனிசன்..."

     சோலை அவன் மீது பாய்ந்து அவனை வெளியே கொண்டு செல்லக் கைவைக்கிறான். ஆனால் ராமசாமியே அவன் கையை அநாயாசமாகத் தள்ளிவிட்டு வெளியேறுகிறான். உச்சி வெய்யில் ஏறும் நேரம். ஆனியானாலும் ஆடியானாலும் இங்கு மேக மூட்டமே வராது.

     அவன் முதலாளியுடன் மோதிக் கொள்ள வேண்டும் என்றோ, நாச்சப்பனுடன் மோதிக் கொள்ள வேண்டுமென்றோ கருதிச் செல்லவில்லை. ஆனால் பொன்னாச்சியின் வாயிலிருந்து அவன் அச்சொற்களைக் கேள்வியுற்ற நாளிலிருந்து குமுறிக் கொண்டிருந்த கொதிப்பு அச்சூழலில் வெடித்துவிட்டது.

     இனி... இனி...?