உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்) 13 ராமசாமிக்கு மறுநாளே வேலை சீட்டுக் கிழிக்கப்பட்டது. தங்கராசு அவனிடம் வந்து, அத்தனை தேதி வரையிலுமான காசைக் கொடுத்துக் கணக்குத் தீர்த்துவிட்டான். கையெழுத்து ஒன்றைப் போட்டுவிட்டுச் சம்பளத்தை - ஐம்பத்தெட்டு ரூபாய் சொச்சத்தை எண்ணிப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. சைக்கிளைப் பிடித்துக் கொண்டு அவன் தோல்வி அவமான உணர்வுடன் வெளிவரவில்லை. ஒரு எரிமலை வெடிக்கப் போகிறதென்ற உணர்வுடன் அவன் பொன்னாச்சியைக் கூடப் பார்க்கக் காத்திராமல் வெளிவந்தான். நேராகத் தொழிற்சங்கத் தலைவர் தனபாண்டியனைக் காண வீட்டுக்கு விரைகிறான். ஒரு காலத்தில் தூத்துக்குடி நகர்ப்புறத்தில் உப்புத் தொழிலாளருக்கென்று பட்டா செய்து கொடுத்த மனைகள் கொண்ட தெரு அது. இந்நாள் அந்த மனையில் உப்பளத் தொழிலாளி ஒருவனும் கட்டிடம் எடுத்துக் கொண்டு வாழவில்லை. புதிய துறைமுகத்தில் அலுவலக வேலை செய்பவனும், கல்லூரியில் பணியாற்றுபவரும் வாடகைக்கு இருக்கும் வகையில் கண்ட்ராக்ட், வியாபாரம் என்று பொருளீட்டும் வர்க்கத்தார் அங்கே மனைகளை வாங்கி வீடுகள் கட்டியிருக்கின்றனர். பச்சையும் நீலமும் பாங்காப் பூசப்பெற்ற சிறு இல்லங்கள் அழகுற விளங்குகின்றன. 'கமான்' வளைவுகளில் வண்ணப் பூச்செடிகளும், பசுமையான குரோட்டன்சுகளும் வளர்க்கப்பெற்ற வீடுகளும் இருக்கின்றன. நல்ல வெய்யில் நேரம். இந்த நேரத்தில் அவன் சைக்கிள் சக்கரம் மணலில் புதைய அந்த வீட்டின் முன் வந்து சுற்றுக் கதவைத் திறக்கிறான். தனபாண்டியன் உப்பளத் தொழிற்சங்கத் தலைவராக வளர்ச்சி பெற்று வந்திருப்பதை அந்த வீடே அறிவிப்பதாக அவனுக்கு அப்போதுதான் சுருக்கென்று தைக்கிறது. அவன் இத்தனை நாட்களில் அவர் வீட்டுக்கு வந்திராமலில்லை. இருட்டில், மாலை நேரங்களில் அவசரமாக வந்து செல்வான். நான்கு வருடங்களுக்கு முன் இந்த வீடு எப்படி இருந்ததென்று அவன் அறிந்திருக்கிறான். ஓலைக்குச்சு ஒன்று உள்ளே தள்ளி இருந்தது. அப்போது அந்தத் தெருவும் இவ்வளவுக்கு வண்மை பெற்றிருக்கவில்லை. முன்புறம் தூண்கள் அலங்காரமாக விளங்கும் வராந்தா, மொசைக் தளம், வராந்தாவில் மேற்சுவரில் வரிசையாக அரசியல் தலைவர்களின் படங்கள் விளங்குகின்றன. காமராசர், காந்தியடிகள், நேரு, இந்திரா, அண்ணாதுரை ஆகிய எல்லாத் தலைவர்களின் படங்களும் விளங்குகின்றன. உட்புகும் வாயிலில் ஒரு வண்ணப் பூந்திரை தொங்குகிறது. வராந்தாவில் நான்கு கூடை நாற்காலிகள் இருக்கின்றன. அவன் சிறிது குழப்பத்துடன், "சார்...!" என்று கூப்பிடுகிறான். உள்ளிருந்து தொப்பி போல் முடிவிழும் தலையும், பெரிய பெரிய வில்லைகளாக, தங்க பிரேம், மூக்குக் கண்ணாடியும் கட்டம் போட்ட சட்டையுமாக ஒரு இளைஞன் வருகிறான். "அப்பா... அப்பா இருக்காரா? உப்பளத் தொழிலாளி ராமசாமி, பனஞ்சோலை அளம்..." என்று பரபரப்புடன் கூறும் அவனை அவன் அலட்சியமாக நோக்கிவிட்டு, "அப்பா இல்லையே?..." என்று மறுமொழி கொடுக்கிறான். "அப்பாவை இப்பல்லாம் வீட்டில் பார்க்க முடியாது. சாயங்காலம் எட்டு மணிக்கு வந்தீங்கன்னா இருப்பார்." "ஊரில தான இருக்காரு?" "தெரியாது, திருச்செந்தூர் போறதாகச் சொன்னாங்க. நீங்க சாயங்காலம் வாங்க!" ராமசாமி வெளியில் திரும்பப் போகிறான். சண்முகக் கங்காணியிடம் கூறலாமா என்று நினைக்கிறான். தனக்கு வேலை போனதை இழப்பாகக் கருதி எவரிடமும் புலம்பி முறையிட அவனுக்கு அப்போது பிடிக்கவில்லை. எனவே பொறுத்திருந்து மாலை ஏழு மணி சுமாருக்கு தனபாண்டியனைத் தேடி வருகிறான். அந்த நேரத்தில் வீட்டுச் சுற்றுக்குள் யார் யாரெல்லாமோ தலைவருக்காகக் காத்து நிற்கின்றனர். நீலச்சட்டை போட்ட இளைஞன் ஒருவன் ஒரு நரை முடிக்காரரிடம், "அஞ்சு மணிக்கி வாங்கன்னாரு. இந்நேரமாச்சு, காணம்" என்று கூறிக் கொண்டிருந்தான். ராமசாமி அருகில் சென்று, "நீங்க எந்த அளக்காரரு?" என்று விசாரிக்கிறான். இளைஞன் குனிந்து பிடரியைச் சொறிந்து கொள்கிறான். "பீங்கான் கம்பெனி..." "உப்பளக்காரரில்லையா?" "இல்...ல." "அதுக்கும் இவருதாந் தலைவரா?" "ஆமா..." "தொழிலாளர் தகராறா?" "தகராறுதா. அதில்லாம இங்க ஏன் வாரம்?..." என்று நரைத் தலை கேட்கிறான். சற்றைக்கெல்லாம் தலைவர் சைகிளில் வருகிறார். சைகிளைப் பாங்காக நிறுத்துமுன் ஒரு ஆள் வந்து வாங்கித் தள்ளிக் கொண்டு செல்கிறான். புதிய குஞ்சங்கள் கறுப்பும் சிவப்புமாக அலங்கரிக்கும் ஆசனமும் பளபளக்கும் மின் விளக்குமாக அந்தச் சைகிள் அலங்கரிக்கப் பெற்ற புதுமணப் பெண் போல் நிற்கிறது. அவன் தனது துருப்பிடித்த பழைய சைகிளைப் பார்த்துக் கொள்கிறான். சைகிள் வைத்துக் கொண்டு, படிப்பகத்தில் சென்று பத்திரிகை படிக்கும் வித்தியாசமான உப்பளத் தொழிலாளியாக இருந்த ராமசாமி... அவனுக்கு இப்போதும் ஒரு குறைவும் வந்து விடவில்லை என்று நினைத்துக் கொள்கிறான். தலைவர் நீலச் சட்டைக்கார இளைஞனிடம் பேசிவிட்டுத் திரும்புகையில் ராமசாமி வராந்தாவில் ஏறி நின்று வணக்கம் தெரிவிக்கிறான். "என்ன ராமசாமி? ஆளையே காணம்? அம்மா சொகமா...?" என்று கேட்டுக் கொண்டே பதிலுக்கு நிற்காமல் மேல் வேட்டி விசிற, திரையைத் தள்ளிக் கொண்டு அவர் உள்ளே நுழைந்து விட்டார். அவர் நுழைந்ததும் அந்த ஆட்களும் தொடர்ந்து செல்கின்றனர். ராமசாமி சற்றே பிரமித்தாற் போல் நிற்கிறான். வராந்தாவில் அழகிய இளஞ்சிவப்புக் கூடு போட்ட விளக்கு ஒளியைச் சிந்துகிறது. அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தும் போது அவன் உள்ளே செல்வது பண்பல்ல என்று நிற்கிறான். பணம் பிரித்துச் செலவு செய்து, துண்டுக் கடிதாசிகள் அச்சிட்டு அவன் பரப்பிய போது அந்தத் தலைவரிடம் கேட்க, காட்ட... வந்திருக்கிறான். அது படிப்பகச் சந்திப்புத்தான். வீட்டுக்கு வந்தாலும் முன்புற முற்றத்துக்கப்பால் வராந்தாவைக் கடந்து அவன் சென்றவனல்ல. தனது ஆவேசக் கொந்தளிப்பு ஏமாற்றமாகிய சிறு பாறையில் பட்டு உடைந்து சக்தி இழந்து போனாற் போல் தோன்றுகிறது. எச்சிலை விழுங்கிக் கொள்கிறான். தலைவருக்கு இந்தச் செய்தி தெரிய வேண்டியதுதான் தாமதம்; உடனே ஆயிரம் பதினாயிரம் உப்பளத் தொழிலாளரை அவர் ஒன்று சேர்த்து விடுவார். மிகப் பெரியதோர் பிரளயத்துக்குக் கருவானதோர் எழுச்சியை அந்த முதலாளிகளும் கணக்கப்பிள்ளைகளும் எதிர்நோக்கிச் சமாளிக்க வேண்டும் என்றதோர் உறுதி, கொடிக் கம்பமாய் அவனுள் எழும்பியிருந்தது. அந்தக் கொடிக் கம்பத்தில் தலைவர் போராட்டக் கொடியை ஏற்றி விடுவார் என்று அவன் வந்திருக்கிறான். ஆனால்... ஆனால்... என்ன ஆயிற்று? ஒரு நிமிடம் ஒரு யுகமாகப் போகிறது. அவர்கள் பேசிவிட்டு, பேசிக் கொண்டு வெளியே வருகின்றனர். தனபாண்டியனும் வருகிறார். அவர்கள் சென்ற பிறகு தான் ராமசாமியின் மீது அவர் பார்வை விழுகிறது. "ஏம்ப்பா, ராமசாமி, வெளியே நிக்கே?... ஆளவே காணம் ரொம்ப நாளா! நோடீசு கொண்டு போட்டுட்டுப் போன, சுப்பையா வீட்டில் பேசக் கூப்பிட்டா! நா வரதுக்கில்லாம போச்சி..." "சொல்றதுக் கொண்ணுமில்ல, அண்ணாச்சி. சீட்டக் கிழிச்சிட்டாங்க!" ராமசாமிக்குக் குரல் படீரென்று உடைந்தாற் போல் வருகிறது. கண்கள் நிலைக்க அவர் வியப்பை வெளியாக்குகிறார். "என்ன! சீட்டைக் கிழிச்சிட்டாங்களா? ஒனக்கா?" "ஆமாம். நாயம் கேட்டே. ஒண்ணில்ல அண்ணாச்சி, அந்தத் தடியன் நாச்சப்பன், கணக்கப்புள்ள, இவனுவ பண்ணுற அக்குரவம் ஒண்ணா, ரெண்டா? தாய்க் குலத்துக்கு துரோகம் செய்யிறானுவ. பாத்திட்டு எப்பிடி இருக்க முடியும்? நம்ம ஒடம்புல ரத்தம் ஓடல? அளத்தில் இரண்டு மாசமுன்ன ஒரு பொண்ணு புள்ள பெத்திட்டா. அவ உப்புச் சேத்து மண்ணுல விழுந்து கெடக்கா. இவனுவ ஏசுறானுவ. அவளுக்கு ஒரு ஒதவி, ஒத்தாசை செய்யணுமின்னு தொழிலாளிக்குத் தொழிலாளியே ஈரமில்லாம பயந்து சாவுறா. நான் அப்பவே ஒரு முடிவெடுக்கணுமின்னு வச்சிட்டே..." அவனுக்கு எதை முன்பு சொல்ல வேண்டும் எதை விட வேண்டும் என்று நிதானம் புரியவில்லை. மோதியடித்துக் கொண்டு சொற்கள் வருகின்றன. "நீ சொல்ல வந்த விசயத்தச் சொல்லு ராமசாமி, சீட்ட கிளிக்க இப்ப என்ன வந்தது? அதில்ல முக்கியம்? நீ மாசச் சம்பளக்காரனாச்சே?" "ஒண்ணில்ல அண்ணாச்சி, ரொம்ப நாளாவே அந்த நாச்சப்பனுக்கு எம்மேல காட்டம். அளத்துல ஒரு பொண்ண வளச்சிட்டுக் கேடு செய்யப் பாத்தா. அது கொஞ்சம் ஒசந்த பண்புள்ள பொண்ணு. இவெ அல்டாப்புக்கு மசியல. நாவேற கண்காணிச்சிட்டே இருந்தே. அவனுக்கு அது புடிக்கல. சங்கம், தொழிலாளர் ஒத்துமைன்னு பேசுறேன்னு துரை ஏஜண்டுக்கும் கோபம். வீட்டக் காலி பண்ணுன்னா. அது ஒரு மாசமாவுது, பெறகு, நேத்துக் காலம முதலாளி என்னைக் கூப்பிடுறான்னு கணக்கப்புள்ள வந்தா. நா மொதலாளி முகத்தயே பார்க்குறதில்ல..." "ராமசாமி, உனக்குச் சொல்ல வந்த விசயத்தைச் சொல்லத் தெரியல. ஒன்ன வேலய விட்டு ஏன் நிப்பாட்டினாங்கறதச் சுருக்கமாச் சொல்லு. நான் ஏழரை மணிக்கு ஆத்தூரில் ஒரு மீட்டிங்குக்குப் போவணும்" என்று தலைவர் கடியாரத்தைப் பார்க்கிறார். "சுருக்கந்தா. முதலாளி கூப்பிட்டனுப்பினா. நாச்சப்பன் இருந்தான். சோலைப் பயல் வேற குடிச்சுப் போட்டு நின்னான். திட்டமிட்டு எல்லாம் செய்தாப்பல என்ன அவமானம் செய்யவே, எனக்குக் கோவம் வந்திரிச்சி. பொண்டுவகிட்ட அவன் நடக்கிறதச் சொன்னே. ஒண்ணு உளுமாந்திரம் இல்லாம இவனுவ எனக்கு அம்பது ரூவா சம்பளத்த எதுக்கு ஒசத்தறாங்க." "சம்பளம் ஒசத்தினாங்களா?" "ஆமா அண்ணாச்சி. ஒனக்கு சம்பளம் அம்பது ரூபா ஒசத்தியிருக்கே, இந்த வளவில இருந்துக்கன்னா. இந்த எரையை வச்சு எதுக்கோ என்னை இழுக்கறாங்கன்னு தோணிச்சு. நா அப்ப நாயம் கேட்டே." அவர் முகத்தைச் சுளிக்கிறார். "ஏம்பா, சம்பளம் அதிகம் கொடுக்கிறோமின்னா தூண்டில் இரைன்னு சொல்லுற? குடுக்காட்ட எதுவுமில்லன்னுறிய, நீங்களும் ஒரு வழிக்கு வரணுமில்ல? சொல்லப் போனா, நியாயமா, ஒன்னைப் போல தொழிலாளிங்க வாய் திறக்க ஒண்ணில்லே. வார்முதல் பண்ணுறவ, பெட்டி சுமக்கிறவன், அன்னாடக் கூலியில் மாயிறான். அத்தையும் கங்காணி புடிச்சிட்டுக் கணக்கப்பிள்ளைக்கு லஞ்சம் குடுக்கான். அவனையும் சொல்லிக் குத்தமில்ல. அவன் முதலாளியிடம் ஈவுகாட்ட வேண்டியிருக்கு. நாம ஒட்டு மொத்தமா சேத்துப் பார்க்கணும். அம்பது ரூபா அதிகச் சம்பளம் போட்டுத் தாரேன்னா நீ ஒத்துக்க வேண்டியதுதானே?" ராமசாமி குழம்பிப் போகிறான். பதில் வரவில்லை. "எப்போதும் வருமம் வச்சிட்டே எதையும் கண்ணோட்டமிட்டுப் பயனில்லை தம்பி. சரி, பிறகு என்ன நடந்தது? உங்க வேலையும் வேண்டாம், எதுவும் வேண்டான்னு உதறி எறிஞ்சிட்டு வந்திட்டியா?" "அப்படி எதுவும் சொல்லல. இது சூழ்ச்சின்னு மனசுக்குப் பட்டிச்சி. நான் கண்ட்ராக்ட் அக்குரமம் பண்ணுறதச் சொன்னே. முதலாளி நான் குடிச்சிருக்கேன்னு ஏசுனா. சோலைப் பயல் என்னை வெளியே தள்ள வந்தான். உண்மையைச் சொன்னதுக்கு இந்தக் கூலி அண்ணாச்சி. அவமானம் பண்ணினா, கூப்பிட்டனுப்பி. நீங்க சொல்லுங்க நாயம்..." ராமசாமிக்குக் குரல் தழுதழுத்து விடுகிறது. "ஏன்ல பொம்பிள போல அழுவுற? உன்னைப் போல ரெண்டுங் கெட்டான் பயலுவதா காரியத்தைக் கெடுத்துக் குட்டையக் குழம்புறிய. தொழிலாளர் சங்கம்னு ஒரு அமைப்பு, அதுக்கு ஒரு தலைவன்னு இருக்கறப்ப, நீ விசயத்த அப்பவே ஏங்கிட்டல்ல வந்து சொல்லணும்? கூப்பிட்டனுப்பினா, வீட்டக் காலி பண்ணச் சொன்னா, இல்ல, இந்த வளவில் வந்திருன்னு சொன்னா, கூலி அதிகமாக குடுத்தா, இதெல்லாம் ஏங்கிட்ட வந்து சொல்லி யோசனை கேக்காம, முதலாளி மொகத்துக்கு நேர எதுத்துப் பேசுனா எப்படி? அவங்க காங்கரீட்டுக் கோட்டை. பத்து நூறு ஆனை பலம் கூட இடிக்க முடியாது. அப்படி இருக்க, பேசத் தெரியாதவன்லாம் போயி என்னேனும் சொல்லிடறிய. இப்பப்பாரு, ஒரு பயல், அமைச்சர் கலந்துக்கற கூட்டத்தில போயி ஏறுமாறாப் பேசிட்டா. ஊழல் மலிஞ்சிருக்கு, இவன் லஞ்சம் கேட்டான்; அவன் வாங்கிட்டான்னு எடுத்து விட்டிருக்கா. இந்தப் பயல்களுக்கு மரியாதையாப் பேசத் தெரியலன்னு அரசுச் சார்புப் பத்திரிக்கை பத்தி பத்தியா திட்டறா. நாம் போயி மன்னிப்புக் கேக்கணும். முதலாளிமாருங்ககிட்ட அவனுவ வாழப்பழத்தில ஊசிவய்க்கிறாப்பல நாமும் பேசணும், அது ஒரு கலை. சரி... இப்ப மணி ஏழாச்சி, நான் போவணும், நீ நாளக்கி வந்து என்னப் பாரு. நான் அவங்களை நல்லவிதமா காண்டாக்ட் சேஞ்சி, உனக்கு ஏதும் ஏற்பாடு செய்யிறேன். திரும்ப வேலைக்கு எடுத்துப்பாக..." தலைவர் முடித்து விடுகிறார். ராமசாமிக்கு உருப்புரியாத உணர்வுகள் வந்து குழம்பி அவனைப் பந்தாடுகின்றன. இவன் தலைவனாக வேண்டுமென்பதற்காக அவன் எத்தனை பேரிடம் பேசி ஒன்று கூட்டினான்? தலைவர்... தலைவர்... பெரிய வீடு கட்டி விட்டான். பளிங்குத் தரை, திரை, சோபா... அது இது என்று மேலேறிப் போகிறான். சே! மண்ணை வாரி எறிய வேண்டும் போலிருக்கிறது. அவன் மீண்டும் துப்பிய எச்சிலை விழுங்குவது போல அங்கு வேலை செய்ய அவர் எடுத்துச் சொல்வாராம்? சைகிளைத் தள்ளிக் கொண்டு அவன் தெருவில் திரும்பி வரும்போது தெரு இருட்டாக இருக்கிறது. ஆனால் அங்கே வீடுகளிலிருந்து வெளிச்சம் வழிகிறது. இந்த அநியாயத்தைக் காரணமாக்கி ஓர் போராட்டத்துக்கு வழி வகுக்க வேண்டுமென்றல்லவோ கொதித்து வந்தான்? என்ன மோசமான தலைவர்! ஒரு குறியில்லாமல் அவன் நடந்து செல்கிறான். விரிந்து கிடக்கும் முட்செடிப் புதரைத் தாண்டி மணல் தேரியில் தெருக்கள் கூரையும் சார்ப்புமாக இடிந்து, சுவரும் ஓட்டைப் பந்தலுமாக, வேலிப்படலும் மண் முற்றமுமாகத் தொழிலாளர் வீடுகள். நிலவு மஞ்சளாக வந்து குலுகுலுவென்று முற்றங்களில் விளையாடும் குழந்தைகளைப் பார்க்கிறது. தெருவோரம் கிழவர் ஒருவர் பனஓலை சுமந்து செல்கிறார். நடையிலிருந்தே அவனைக் கண்டு கொள்கிறார். கண்களைச் சரித்துக் கொண்டு கேட்கிறார். "ஐட்ரா தம்பியா?" "ஆமா தாத்தா. இங்கியா ஒங்க வீடு?" "ஆமா. அதா கடாசில. இப்பத்தா வார, ஓலை வாங்கிட்டு... எங்க ஓல கெடக்கிது? ரெண்டு ரூவாக்கி வாங்கின மூங்கில் பதினஞ்சி ரூபா விக்கிது. 'பெரணி நாரு'* (* பெரணிநார் - வெளிப்புறத்தில் பனமட்டையில் கிழித்த நார் - உறுதியானது), 'ஈரக்கிளி'* (* ஈரக்கிளி - பிரம்பு) எல்லாம் வெலகுடுத்து வாங்கி வைக்கிறாப்பலியா இருக்கு? காயித பாட்டரிக்காரன் அள்ளிட்டுப் போறா. ஒரு சுசய்ட்டின்னு வச்சா, அந்த மொதலாளிய நாலாள விட்டுப் பிரிச்சிவிட்டிடறா..." ராமசாமி எதுவும் பேசாமல் நிற்கிறான். எந்தத் திசையை நோக்கினாலும் இப்படி மனித சமுதாயமே ஆள் பவர், அழுந்தப் பெற்றோர் என்று இரண்டு பட்டுக் கிடக்குமோ? "சுசய்ட்டிய ஏன் தாத்தா பிரிக்கணும்." "ஏன் பிரிக்கணும்? நாம 'சேர்' கட்டி சங்கம் சேந்து சாமான் வாங்கிப் போட்டு பொட்டி முடஞ்சு வித்து லாவம் காணுவமின்னா, தனி முதலாளிய வியாபாரம் எப்படியாவும்? நாலாளுக்குக் காசு அதிகம் குடுத்துத் தன் வசம் இழுத்துக்கிட்டான். சங்கம் பிரிஞ்சு போச்சு தம்பி. நீ பெரியவங்க கிட்டல்லாம் பேசுறவ, தொடர்பிருக்கின்னு சொல்லிக்கிறா. இந்தத் தொழில் எங்க வயித்துக்கு அரைக்கஞ்சி வார்க்கும் தொழில். பனஓலை, நாரு, மூங்கில் எல்லாம் நியாய விலைக்கு எங்களுக்குக் கிடைக்கிறாப்பல பண்ணினீன்னா கையெடுத்துக் கும்பிடுவம். ஓட்டுக் கேக்க எப்பமோ கச்சி கச்சியா கொடி போட்டிட்டு வாராவ. ஓட்டப் போடுங்க. ஒங்கக்கு எல்லாஞ் சேஞ்சு தாரமின்னுதாவ. எதும் சரிவாரதில்லை. எங்க ஒழப்ப, அரை வெலய்க்கிப் போடுதோம் பசிக் கொடுமையில..." இங்கெல்லாம் ராமசாமி தொழிற்சங்கக் காசு பிரிக்க வந்ததுண்டு. அந்த தொழிற்சங்கக் காசு - கட்டிட வாடகை, இரண்டொரு பேப்பர் வாங்கும் செலவு இவற்றுக்குக் கட்டி வருவது கூட கஷ்டம். தொழிற்சங்கத்துச் செயலாளன் பேச்சிமுத்து இங்குதான் இருந்தான். அவன் இந்தத் தொழிலையே விட்டுச் சென்று எங்கோ வியாபாரம் செய்கிறானாம்... "என்ன தம்பி... பேசாம இருக்கியே? எங்க தொழில்ல பாஞ்சாலி கஷ்டப்படுது. அரைக்கஞ்சிக்கு முடியாம, பிள்ளியள உப்பு அறைவைக்கு அனுப்புறம். மாசி பங்குனிக் காலத்துல எங்க பொம்பிளக பண்பாட்டு வேலைக்குப் போயி ரெண்டு மூணு கொண்டாருவா, இப்ப அதுவுமில்ல..." ராமசாமியைக் கிழவர் எல்லாச் சக்திகளையும் உள்ளடக்கிக் கொண்ட தூணாகக் கருதி முறையிடுகிறார். அவனோ எரிச்சலை விழுங்கிக் கொள்கிறான். "தாத்தா, உங்களுக்குள் ஒத்துமை இல்லாம கூட்டுறவு சங்கத்தையே உடய்க்கிறீங்க. பொறவு வெளியாளைக் கூப்பிடுறிய. ஒரு தொழிலாளி சங்கம்னா அந்தத் தொழிலாளிதாந் தலையா நிக்கணும். வெளியே இருக்கறவனைக் கூப்பிட்டா, அவன் ஒங்க தலையை மிதிச்சிட்டு ஏணி ஏறுவா. பொறவு அவனும் மொதலாளிமாரும் ஒண்ணு." "அது சரித்தா? ஆனா இந்தக் கூறுகெட்ட தொழிலாளிகளுக்கு அதிகாரத்துல இருக்கிறவன்கிட்ட பேச என்ன வக்கிருக்கு? அவனுக்கு எழுத்தா படிப்பா, என்ன எளவு புரியிது? அதுக்கு ஒரு வெளியாளத்தானே நம்ப வேண்டியிருக்கு? அவன்னா போறா வாரா, எழுத்தெழுத பேச கொள்ள..." அதுவும் நியாயம். படிப்பு இருக்கிறதா? இருந்தாலும் அறிவுக் கண்களனைத்தும் உப்பு உறிஞ்சிப் பீளை படரச் செய்து விடுகிறது. அப்போது அவனை இனம்கண்டு கொண்டு ஏழெட்டு இளைஞர்கள் வந்து சூழ்கின்றனர். "வணக்கம் அண்ணாச்சி. பணம் பிரிக்க வந்திருக்கம். அம்மன் கொடை, தாராளமாப் போடணும்..." முகமே தெரியவில்லை. குரல்கள் தாம் இசக்கிமுத்து, பரிமளம், கிருட்டினன் என்று அறிவிக்கின்றன. "வயிறு கூழுக்கழுகிறது. அம்மனாவது, கொடையாவது?" என்று எரிச்சலுடன் ராமசாமி கேட்கையில் கிழவன் 'தப்பு தப்பு' என்று அபராதம் வேண்டுகிறான். "வெடலப் பிள்ளைய இப்படியெல்லாம் சொல்லப் போவதா. அரிசிப் படி அஞ்சு ரூவான்னு விக்கி. ஏதோ இன்னக்கி அரைக் கஞ்சினாலும் குடிக்கிறது, ஆத்தா கருணைதான?" ராமசாமிக்கு எரிச்சல் இன்னும் கிளர்ந்து மண்டுகிறது. அரைக்கஞ்சி அவள் கருணை; பட்டினி அவள் கருணை; அறியாமை, மௌட்டீகம் அவள் கருணை. அடுத்தவனை நம்பி, அவன் அமுக்கிட்டு மேலேறுறதும் நாம ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிட்டுச் சாவுறதும் கூட அவ கருணை தா. செய்...! அவன் சைக்கிளைத் தள்ளி ஏறி மிதித்துக் கொண்டு போகிறான். |