(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)

4

     சேல் பட்டு அழிந்தது செந்தூர்
     வயல் பொழில் தேங்கடம்பின்
     மால் பட்டு அழிந்தது பூங்கொடி
     யார் மனம் மாமயிலோன்
     வேல் பட்டு அழிந்தது வேலையும்
     சூரனும் வெற்பும் அவன்
     கால் பட்டு அழிந்தது இங்கு என்
     தலை மேல் அயன் கையெழுத்தே...

     கையிரண்டையும் தலைமேல் உயர்த்திக் குவித்துச் செந்தூர் முருகன் சந்நிதியில் மனங்குழைய நிற்கிறார் அருணாசலம். திருநெல்வேலி சென்று வருவதென்றால் வரும் போது அலைவாயில் மூழ்கி, முருகனைத் தரிசித்து அவன் காலடியில் மனச்சுமையை இறக்கி ஆறுதல் தேடுவதென்றும் அவருக்குப் பொருள்.

     தூத்துக்குடி சென்று திருநெல்வேலிக்குச் செல்வதை விட, திருச்செந்தூர் முருகனைக் கண்டு செல்வதென்றால் ஓர் ஆறுதல். வயது வந்த பிள்ளை, கல்வி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தானும் முன்னுக்கு வந்து நாட்டின் பெருமையை உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோள் ஓர் ரேகையளவும் இல்லாமல் அற்ப காரணங்களுக்காக அடிதடியிலா இறங்குவான்? கல்லூரி விடுதியில் இரண்டு கோஷ்டிகள் ஒருவருக்கொருவர் சண்டை, அதுவும் சாதிச் சண்டை. விடுதி அறையில் சக்திவேல் ஒரு அரசியல் தலைவரின் பெயரை எழுதி வைத்தானாம். இன்னொரு மாணவன் அதை அழித்துவிட்டு வேறொரு அரசியல் தலைவரின் பெயரை சூட்டினானாம். இவர் ஒரு ஜாதி, அவர் ஒரு ஜாதி. ஆக நெருப்புப் பொறி பறந்து அடிதடியில் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

     "முருகா! நீ என்றைக்கு இவர்களுக்கெல்லாம் நல்ல புத்தியைக் கொடுக்கப் போகிறாய்!"

     குடும்பம் அவற்றின் நிமித்தமான எண்ணற்ற பிரச்னைகள் எல்லாவற்றையும் சுழற்றி அவன் காலடியில் வைத்து விட்டுச் சிறிது நேரம் மெய்மறந்து நின்று ஆறுதல் கொள்கிறார். பன்னீர் இலைப் பிரசாதமும் குங்குமமும் வாங்கிக் கொண்டு வெளியே வருகிறார்.

     மரத்தடியில் நின்று ஈரவேட்டியை உயர்த்திப் பிடிக்கிறார்.

     கிழக்கே தகத்தகாயமாகத் தங்கக் கதிரவன் அலை வாயில் பட்டாடை விரிக்கிறான். எத்தனை நாட்கள் பார்த்திருந்தாலும் அலுக்காத காட்சி. சில நாட்களில் மனம் குழம்பி ஆற்றாமையில் அல்லலுறும் போது, பஸ்ஸுக்குக் கொடுக்கக் காசில்லாமல் பொடி நடையாக நடந்தே அலைவாய் முருகனைக் காண வந்திருக்கிறார். அந்தக் கடலில் மேனியை நனைத்து, உள்ளத்தை அவன் கோலத்தில் நனைத்துக் கொண்டால் அந்தச் சுகமே தனி.

     எத்தனை ஆண்டுகளாகவோ அலைவாய் முருகனைக் காண வருகிறார். இப்போது, எத்தனை மண்டபங்கள், எத்தனை கூட்டங்கள்! பயணிகளை ஏற்றி வரும் 'டூரிஸ்ட்' பஸ்கள் கார்கள் என்று சந்நிதி முழுவதும் கும்பல். பயணியர் விடுதிகள் வேறு மாடி மாடியாக எழும்பியிருக்கின்றன. ஆனால்...

     முருகனைச் சுற்றி வேடக்காரர்கள் மலிந்து கிடக்கின்றனர். எங்கு பார்த்தாலும் எச்சில் துப்புபவனும், இயற்கைக் கடன் கழிப்பவனும், அங்கேயே இட்லி வாங்கித் தின்பவனும், படுத்துக் கிடந்து பிச்சை வாங்கும் கபடப் பண்டாரமும், தங்கள் செல்வ நிலையைத் தம்பட்ட மடித்துக் கொண்டு முருக பக்தியென்று கள்ளக் கண்ணீர் விடும் போலிகளும் அலைவாய் முருகனைச் சூழ்ந்திருக்கின்றனர். இதுதான் இன்றைய உலகின் ஓர் மாதிரித் துண்டு! வேட்டியை ஆட்டிக் காய வைத்து உடுத்திக் கொண்டு, சட்டையை அணிந்து கொள்கிறார் அருணாசலம். முதல் நாளிரவே எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. பசி வயிற்றைக் கிண்டுகிறது.

     நீண்ட சந்நிதித் தெருக் கொட்டகை வழியே நடந்து வருகையில் மண்டபத்தில் உள்ள ஐயர் கடையில் ஏறி அமர்ந்து கொள்கிறார். மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு காலைத் தினசரியைப் பார்க்கிறார். ஐந்து ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்து ஆச்சி அவரை மகனைப் பார்த்து வர விரட்டினாள். இன்னும் ஒரு ரூபாய் எழுபத்தைந்து பைசா மீதி இருக்கிறது. பஸ்ஸுக்குக் கொடுத்து, நான்கு இட்லியும் காப்பியும் சாப்பிட முடியும்.

     அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நயினார் பிள்ளை வருகிறான். "என்ன அண்ணாச்சி? எப்ப வந்திய?" என்று கேட்டுக் கொண்டு அமருகிறான்.

     நயினார் பிள்ளை அந்தக் காலத்தில் திருச்செந்தூர் வட்டக் காங்கிரஸ் இயக்கத் தொண்டர்களில் அரும்பாடுபட்டுப் பெயரும் புகழும் பெற்றவன். கள்ளுக்கடை மறியலுக்கு அவரும் அவனும் சேர்ந்து சென்றிருக்கிறார்கள். 'ஸால்ட் இன்ஸ்பெக்டர்' லோன் கொலைச் சதியில் சிறைக்குச் சென்று வந்தவன். இந்நாள் மண்டபத்தில் ஒருபுறம் தையற்கடை வைத்திருக்கிறான். பெண்கள் உடைகள் தைக்கிறான். அரசியலுக்கே வருவதில்லை. அவன் மட்டுமில்லை. அந்நாட்களில் ஆர்வமும் உண்மையுமாக நாட்டு விடுதலையையும் நல்வளர்ச்சியையும் நம்பிப் பாடுபட்ட தொண்டர்கள் எல்லோருமே இப்படித்தான் விலகி விட்டார்கள்.

     "எங்க இப்படி வந்திய? தொழில் நிலம் எப்படி இருக்கு?"

     "எப்படி இருக்கு? ஒண்ணும் சொல்றதுக்கில்ல. நேத்துக்கூட டி.ஆர்.ஓ.வைப் பார்க்கணுனும்தா தங்கி இருந்தேன். அமைச்சர் வந்திருக்கிறார்ன்னாவ. பெடிசன் எதுவும் தயார்ப் பண்ணிட்டுப் போகல. ஒண்ணும் வாவன்னா இல்ல நயினாரு. அந்தக் காலத்துல ஒரு முடிவெடுத்தா எப்படி எல்லாரும் ஒத்துக் கிளர்ச்சியோ, எதுவோ பண்ணினம்? அவனுக்கு அப்பவும் பெண்சாதி பிள்ளிய இல்லாமலா இருந்தாவ? இல்லாட்டா வெள்ளக்காரனை வெரட்டிருக்க முடியுமா? இப்ப ரொம்ப சுயநலமாப் போச்சு. அவனவன் தன் மட்டுக்கு நல்லா வந்திடணும், பணம் சம்பாதிக்கணும்னு எதுவும் செய்யிறான். 1947ல் இந்திய சர்க்கார் உப்பு வரி வாணான்னு சட்டம் போட்டது. அந்தக் காலத்தில் காங்கிரசில் இருந்தவன், இல்லாதவன் எல்லோருமா ஒத்துமையாக் கூடித்தான், தூத்துக்குடி சப்கலெக்டரிடம் மகஜர் கொடுத்தோம். எங்களுக்கு நிலம் பட்டா போட்டுத் தரணும்னு. அப்போதும் கூட்டுறவுச் சங்கமாவது இன்னொண்ணாவதுன்னு பணபலமுள்ளவன் எதிர்த்துத்தா மறிச்சான். அப்படியும் இருநூற்றைம்பது பேர் ஒத்துமையாக்கூடி இருந்ததால், இருநூறு ஏக்ராவுக்கு மேல் ஒதுக்கினாங்க, தன்பட்டாளம் செய்யுங்கள்னு. அப்போது புறம்போக்கு நிலம் குறிச்சுக் காட்டினோம், ஒதுக்கினாங்க. அப்போது இந்த ஓடை நடுவில் வந்து மறிக்கும், ஓடைக்கப்பால் ஆளையே விழுங்கும் தனி முதலாளியின் அளம் ஆயிரக்கணக்கான ஏக்கராகும்னு ஒரு நினைப்புமில்ல. கடோசில என்ன ஆச்சு? இருபது வருசமாகப் போவுது. ஓடை குறுக்கிடுவதால் பாதை இல்லை. லாரி வந்து உப்பெடுக்க முடியாது. அதனால, நாம அயனான உப்பு வாரினாலும் மூடை எட்டணாக்கும் முக்கா ரூபாய்க்கும் சீரழியிது. வண்டிக்காரன் ஓடையில் இறங்கி வந்து முக்கால் ரூபாய் மூடைன்னு இங்கே உப்பெடுத்து அந்தால மூணு ரூபாய்க்கு விக்கிறான். அதனால, இந்தத் தம்பாட்டளத்தில் ஒண்ணும் முன்னுக்கு வர முடியாதுன்னு அவனவன் நிலத்தைச் சும்மா போட்டு வச்சிருக்கான். முன்ன, இருபதம்ச திட்ட காலத்துல, இதுக்கு எப்படியானும் வழி பிறக்குமின்னு நம்பி, பாலத்துக்குத் திட்டமெல்லாம் போட்டு, பணம் செலவு பண்ணி எல்லாம் எழுதி எடுத்திட்டு நாங்க கலக்டரப் பார்த்தோம். அப்ப இதான் கேட்டாரு. இருநூறு ஏக்கராவில் பத்து ஏகரா கூட நீங்க அளம் போடலியே? இது என்ன கூட்டுறவுன்னாரு. நிலம் வச்சிருக்கிறவ அங்கங்க பிழைக்கப் போயிட்டான். அன்னிக்குக் காந்தி எதுக்கு உப்பு சத்தியாக்கிரகம் பண்ணப் போனாரு? ஒரு ஏழை, தன் கஞ்சிக்குப் போடும் உப்புக்கு வரி கொடுக்க வேண்டாம் என்பது மட்டுமல்ல, சொந்தமா பாடுபட்டு தன் நிலத்தில் விளைவெடுக்கணும். அவனுடைய தேவைக்கு அவன் சம்பாதிக்க முடியும்னு சொன்ன அந்த அடிப்படையில் தான் தன்பட்டாளம்னு லட்சியம் வச்சோம். இப்ப... ஆயிரக்கணக்கானத் தனிப்பட்ட முதலாளிகள் தன் பட்டாளம் பெருக்கியிருக்கா? குடும்பம் குடும்பமா அங்கே கொத்தடிமை செய்யப் போவுறாங்க. பொம்பிளப் பிள்ளைக, தாழக் குறுத்துப் போல, இம்மாட்டுப் பொடியலுவ, எல்லாரையும் கங்காணிய கண்ட்ராக்டுக, கூட்டிட்டுப் போறாவ. இதுக்கா சொதந்தரம் வாங்கினம்?..."

     அருணாசலத்துக்குப் பழைய நண்பர் கிடைத்து விட்டால் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்து விடுவார். வைத்த இட்டிலியை இன்னமும் தொடவில்லை.

     "இப்பக் காலம் அந்தக் காலம் இல்ல அண்ணாச்சி. எல்லாம் யாபாரம் தானிப்ப. தாய் மகன் தொடர்பு, புருசன் மனைவி பிரியம் எல்லாமே இது செஞ்சா இதுக்குப் பர்த்தியா என்ன கிடைக்கும்னு ஆயிப்போச்சு. அந்தக் காலத்துல கதர்ச்சட்டை போட்டவங்களைப் போலீசு மகன் தேடிட்டுப் போவான். அவனுடைய தாயார், தலைமறைவுக்காரங்களைத் தானே ஒளிச்சு வச்சுச் சாப்பாடு போடுவா. இப்ப நினைச்சிப் பார்க்க முடியுமா? அது வேற காலம்; இது வேற... அதைச் சொன்னாக் கூட இப்ப ஆருக்கும் புரியாது."

     நயினார் பிள்ளை சொல்வது உண்மைதான் என்று அவருக்குத் தோன்றுகிறது. அவருக்கு இரண்டு பெண்கள் தாம். படிக்கப் போட்டு ஒருத்தி டீச்சராக இருந்தாள். இரண்டு பேரையும் கட்டிக் கொடுத்து விட்டார். பெண் குழந்தைகள் தேவலை என்று தோன்றுகிறது.

     எக்ஸ்பிரஸ் பஸ்ஸுக்கு திருச்செந்தூரிலிருந்து இருபது நிமிடம் கூடப் பிடிக்கவில்லை. ஊர் வந்துவிட்டது. மாதா கோயிலின் முன் கொண்டு வந்து இறக்கிவிட்டான். வள்ளி பள்ளிக்கூடத்துக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஆண் பையன், படிப்பதைக் காட்டிலும் ஊர் திரிவதில்தான் குறிப்பாக இருக்கிறான். குமரனைக் காணோம்.

     "ஏட்டி, குமரன் பள்ளிக்கூடம் வரல?"

     "அவன் அம்மாளிடம் துட்டு வேணும்னு அழுது பெரண்டிட்டிருக்கா" என்று செய்தி தெரிவிக்கிறாள். அன்றாடம் ஐந்து பைசா வைத்தாலே பள்ளிக்கூடம் போவேன் என்று அடம் பிடிக்கிறான். பள்ளிக்கூடம் செல்வதற்காக ஊக்கக் காசாக ஆச்சி கொடுத்துப் பழக்கி, அது இல்லாமல் போகமாட்டேன் என்று விழுந்து புரளுகிறான்.

     வீட்டு வாசலில் மனைவி குந்தியிருந்து ஈருருவிக் கொண்டிருக்கிறாள். அவரைக் கண்டதுமே எழுந்து "வேலுவைக் கூட்டி வரல...?" என்று கேட்டுக் கொண்டு உள்ளே பின் தொடருகிறாள். அவர் பதில் ஏதும் கூறாமல் சட்டையை எடுத்து ஆணியில் மாட்டுகிறார். ஞானம் படுத்தபடியே எதற்கோ கோபித்துக் கொண்டிருக்கிறான்.

     "பையனுக்கு... ஒண்ணில்லையே?"

     "கல்லுக்குண்டாட்டம் இருக்கா? அவனுக்கென்ன, கொளுப்புதா அதிகமாயிருக்கு. எனக்கு இவம் படிச்சி உருப்படுவான்னு தோணல."

     "நீரு ஏம் எறிஞ்சு விழுறீம்? போலீசுச் சவங்க எதுக்காக நாம பெத்த புள்ளயப் போட்டு அடிக்கணும்? அவனுவ கொட்டடில அடிபடவா நாம பெத்து விட்டிருக்கம்?"

     "மூடு ஓ ஊத்தவாய. போலீசுக்காரன ஏன் சொல்லுற? திமிரெடுத்துப் போயி இவனுவ திரியிறானுவ. படிக்கப் போனவன் படிப்பில் இல்ல கவனம் செலுத்தணும்? ரூமுக்குப் பேர் வைக்கிறானாம்? மானக்கேடு... சரி, இப்ப என் கோவத்தை நீ கிளப்பாத. சடையன் வந்தானா? பொன்னாச்சி எங்க? பச்சைய இளந்தண்ணி குத்திவைக்கச் சொன்னே, எங்கே வாரப் போயிருக்கானா? தங்கபாண்டி வண்டி கொண்டாந்தாலும் வருவான்..."

     "அல்லாம் குத்திக்கெடக்கு. வண்டியும் மோட்டாரும் வந்து உம்ம உப்ப வாரிட்டுப் போப்போரா! ஏங்கெடந்து கனாக்காணுதீம்!" என்று நொடித்துவிட்டு ஆச்சி உள்ளே செல்கிறாள்.

     திடீரென்று நினைவுக்கு வந்தவராக அவர் கத்துகிறார்.

     "அந்தக் குமரன் பயல ரெண்டு உதை கொடுத்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பக் கூடாது? இந்தப் பய ஏன் இன்னும் எந்திரிக்காம படுத்திருக்கிறான்? லே, எந்திரிந்து காலம பல்விளக்கி, சாமி கும்பிடணும்னு உனக்கு எத்தினி தடவ சொல்லியிருக்கேன்? எந்திரிலே?"

     "அப்பா, பொன்னாச்சியும் பச்சையும் ஊருக்குப் போயிட்டாவ" என்று ஞானம் ஆர்வத்துடன் எழுந்து அறிவிக்கிறான் பதிலுக்கு.

     அவர் விழித்துப் பார்க்கிறார்.

     "என்னலே உளறுறே?"

     "நெசமாலும், அவிய வந்து அளச்சிட்டுப் போயிட்டா தூத்தூடிக்கு!" அவருக்கு எதுவும் புரியவில்லை. "என்ன சொல்றா இவ?"

     சிதம்பர வடிவு அவரை நிமிர்ந்து பார்க்காமலே சுளகில் எதையோ எடுத்துக் கொழிக்கிறாள்.

     அவர் வந்து பின்புறமாக அவள் முடியைப் பற்றுகிறார்.

     "பிள்ளையளை எங்கே அனுப்பிச்ச...?"

     "ஐயோ... முடிய வுடும்?" என்று அவள் கூந்தலைப் பற்றிக் கொள்கிறாள். "போறம் போறம்னு சொல்லுறவள நா புடிச்சா வச்சுக்க முடியும்? அவ சின்னாச்சியாமே, அந்த சக்களத்தி வந்தா. வந்து கொமஞ்சா, மாமா ஊரில் இல்ல, பொறவு என்ன வந்து ஏசுவாண்ணு சொன்னா அவ கேக்கா இல்ல. நீரு என்னைப் போட்டுக் காச்சுவீம்!" என்று முன்றானையை முகத்தில் தேய்த்துக் கொண்டு மூக்கை சிந்துகிறாள். "அவ... சின்னச்சியிட்ட என்ன சொன்னா தெரியுமா? சோறுண்டு ரெண்டு நாளாச்சுண்ணா. நா அப்படிப் பாவியா? ரெண்டு நாளா முக்காத் துட்டு கெடயாது. இவ போவேண்ணு குதிய்க்கா. கோயில்காரரு வீட்டேந்து மூணு ரூவா அவளே வாங்கிட்டு வந்து போயிட்டா, தம்பியயும் கூட்டிட்டு. நா பட்டினி கெடக்கே. எம்புள்ளய பட்டினி கெடக்கு; வராத விருந்துக்கு இருந்த அரிசிய வடிச்சிப் போட்ட. கடயில கடன் சொல்லி அவதா காப்பித்தூளும் கருப்பட்டியும் வாங்கியாந்தா!"

     அவருக்கு இதில் ஏதோ சூது இருக்கிறதென்று புலனாகிறது.

     "இத்தனை நாளா இல்லாத சின்னாத்தா ஒறவு எப்படி முளைச்சிருக்குன்னு ஒனக்கு அறிவு வேண்டாம்? அளத்தில பாத்திமெதிக்க ஆள் கேட்டிருப்பா. அந்தக் காலத்துல தேயிலைத் தோட்டத்திலே மலங்காட்டில சாவுறதுக்கு எப்படி ஆள் பிடிப்பாளாம் தெரியுமா? தேனும் பாலும் வழியிம்... காக்காய ஓட்டத்தா ஆளும்பானாம்?" என்று அவர் இரைகிறார்.

     "நானென்ன கண்டே! நீரு எங்கிட்டச் சலம்பாதீம்!" என்று கூறிய அவள் கூந்தலை அள்ளிச் செருகிக் கொண்டு சுளகில் கொழித்த அரிசிக் குருணையுடன் அடுப்படிக்குச் செல்கிறாள்.

     தூத்துக்குடிக்குச் செல்ல வேண்டுமானால் கையில் பணமில்லை. அன்று காலையில் தொழி திறந்து பாத்திக்கு நீர் பாய்ச்ச்யிருந்தார். உப்பு குருணைச் சோறாக இறங்கியதும் இளந்தண்ணீர் பாய்ச்சும்படி பச்சையிடம் கூறிச் சென்றிருந்தார். உப்பு வாருவதற்கு இறங்கியிருக்கும்.

     செந்தூர் முருகனை வாய்விட்டுக் கூவி அழைத்தவராக அவர் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு நடக்கிறார்.

     வெகுநாட்கள் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. தாயார் மருமகளைப் பார்க்காமலே போகிறேனே என்று கண்களை மூடினாள். சிதம்பரவடிவு உறவு பெண்தான். செவந்திக்குக் கட்டி வைத்த மறுவருடத்திலேயே இவளை மகனுக்குக் கட்டி வைத்தார் தந்தை.

     புருசன் சரியில்லாமல் செவந்தி அண்ணன் வீட்டுக்கு வந்தாலும் சோற்றுக்குப் பாரமாக இருக்கவில்லை. இட்லிக் கடை போட்டாள். பரவர் வீடுகள் எல்லாம் அவளுக்கு வாடிக்கை. பெட்டி முடைவாள், வலை கூடப் பின்னக் கற்றாள். சுறுசுறுப்பும் கருத்தும் உடைய அவள் கையில் எப்போதும் காசு இருக்கும். அட்டியலும் கை வளையலும் மகளுக்கென்று வைத்திருந்தாள். புருஷன் குடித்துவிட்டு வந்து நகையைக் கேட்டான் என்றுதானே அவள் புருசனையே வேண்டாம் என்று விலக்கி விட்டு வந்தாள்?

     உழைப்பின் காரணமோ, அவருடைய போதாத காலமோ, அவளுக்கு நீர் வியாதி வந்தது. இரண்டு மாதம் படுக்கையில் கிடந்து விட்டுக் கண்ணை மூடிவிட்டாள். தன் பாட்டளத்தில் முழுக்கஞ்சி கூடக் குடிக்க முடியவில்லை. 'கூட்டுறவு உப்புத் தொழிலாளர், உற்பத்தி விற்பனைச் சங்கம்' என்ற ஒன்றை உருவாக்கவே பங்குகள் சேர்க்க வேண்டியிருந்தது. இப்போதும் அவர் பேரில் முக்கால் ஏக்கர், செவந்தி பேரிலும் அவள் மகன் பச்சை பேரிலும் என்று மூன்று பங்கு... இரண்டே கால் ஏக்கரில் அவர் உப்பு விளைவிக்கிறார்; அவளுடைய நகைகளை எல்லாம் விற்றுவிட வேண்டியதாகி விட்டது. சக்திவேலுவுக்கு அரசு உபகாரச் சம்பளம் கிடைக்கிறதென்றாலும், அவன் செலவு அவர் கையை அதிகமாகவே கடிக்கிறது. தன்பட்டாளம் கூட்டுறவில் நல்வளர்ச்சி பெற்றுப் பொருளாதார அளவில் அவர்கள் முன்னுக்கு வருவதைப் பற்றி அவர் இன்னும் கனவு காண்கிறார். பொன்னாச்சியை நல்ல பையனாக, உழைப்பாளியாக குடிக்காத, பிறன் மனை நோக்காத ஒரு மாப்பிள்ளைக்குக் கட்டி, இந்த அளத்தில் பாடுபடுபவனாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தார். பெண்கள் நான்கு சுவர்களைத் தாண்டி, பாத்திக் காட்டில் இன்னொருவன் அடிமையாக வேலைக்குச் செல்வதனால் ஏற்படும் கேடுகளை அவர் அறிந்தவர். அதனால் தான் இந்தச் சமுதாய அமைப்பில், பெண்களைத் தங்கள் இல்லம் தாண்டிப் பாதுகாப்பில்லாத வேலைக்கு அனுப்புவதைக் காட்டிலும் கிடைக்கும் கால் வயிற்றுக் கஞ்சியே மேல் என்று நிச்சயமாக நம்பியிருந்தார்.

     ஓடையில் நீரேற்றம் தெரிகிறது. ஒதுக்கி விட்டிருக்கும் மீன்பிடி வள்ளங்கள் ஒன்றும் இல்லை. இறால் பிடிப்பதற்கென்று குத்தகை பேசி ஏழாயிரம், எட்டாயிரம் கடன் பெற்று தூத்துக்குடியில் இருந்து 'ரெடிமேட் வள்ளங்'களை நிறைய வாங்கி விட்டிருக்கின்றனர். தாமிரபரணித்தாய், கடலரசனைத் தழுவப் பல கைகளாகப் பிரிந்து கொண்டு ஆவலோடு வரும் இடம் அது. ஒவ்வொரு ஓடையும் ஒரு கையில் விரல்களைப் போல் தெரிகிறது. முட்புதர்களும் தாழைகளுமாக நிறைந்த, அந்த இடத்தில் சங்கமுகேசுவரர் கோயில் இருக்கிறது. ஆடி அமாவாசை, தை அமாவாசை என்றால் காட்டுப்பாதையில் நடந்து வந்து நீராடி ஈசுவரனைத் தரிசனம் செய்பவர்கள் உண்டு. கோயிலுக்கு மேற்கே மூங்கில் துறை ஊரில் இருந்து வந்து குருக்கள் பூசை செய்வார்.

     பாலத்தை மேற்கே ஓடை பிரியுமுன் போட்டு விட்டால், லாரி வரும் சாலை வந்து விட்டால், அந்த அளங்கள் வளமையை வாரிக் கொடுக்குமே?

     ஆனால் பாலம் கட்டும் யோசனை, திட்டம் எல்லாம் தயாராக்கிக் கொடுத்த பின் ஓடையின் பரதவர் வள்ளங்கள் நிறுத்துவதற்குத் தடங்கலாகுமென்றும், அவர்கள் பாயை விரித்துக் கொண்டு பாலத்தடியில் செல்ல முடியாதென்றும் பாலம் கட்டக் கூடாதென்றும் மனுக் கொடுத்திருக்கிறார்களாம்.

     அந்தச் செய்தியே கனவுப் பூங்காவில் வீழ்ந்த இடிபோல் தோன்றியது. இங்கு... பொன்னாச்சியையும் மகனையும் சின்னாத்தா கூட்டிப் போயிருக்கிறாள்!

     இத்தனை நாளாக இல்லாத கரிசனமா, வாஞ்சையா? எது?

     அளத்தில் உப்பு கண்ணாடி மணிகளாக, பரல்களாக இறங்கியிருக்கிறது. ஆயிரமாயிரமான ஏக்கர் நிலங்களில் ஆட்களை விரட்டி செய்நேர்த்தி செய்தவர்களுக்குக் கூட இவ்வளவு நேர்த்தியாக உப்பு இறங்கியிருக்காது. மூட்டை ஐந்து ரூபாய்க்குத் தாராளமாகப் போகும் இது... இதை தங்கபாண்டி, வண்டியை ஓடையில் இறக்கிக் கொண்டு போவான். அவருக்கு எப்போதும் முடை. அவன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொள்வது கட்டாயமாகி விடுகிறது. அவனிடம் உப்பு கண்டு முதலாகு முன்பே கடன் வாங்கி விடுகிறார். இப்போது அவன் வந்தால், உப்பை வாரிவிடலாம். பணம் இருபது ரூபாய் வாங்கிக் கொள்ளலாம்...

     சட்டையைக் கழற்றி வைத்து விட்டு அங்கு பன ஓலையினால் வேயப்பெற்றிருக்கும் சிறு அறைக் கதவைத் திறந்து வாருபலகை, வாளி ஆகியவற்றை எடுக்கிறார். பாத்தியின் கீழிறங்கி, சலசலவென்று கலகலத்துச் சிரிக்கும் மணிகளை வார் பலகையில் கூட்டி ஒதுக்குகிறார்.

     தொலைவில் தங்கபாண்டியின் வண்டிச் சத்தம் கட கடவென்று கேட்கிறது.